Wednesday, September 26, 2007

இருளில்லா ஒரு புவி

கவிஞர்கள் தாம் படித்த பல விஷயங்களை பல விதமாக பயன்படுத்திக் கொள்ளுகின்றனர். கண்ணதாசன் அவர்கள், ஷேக்ஸ்பியரின் வரிகள் தந்த உந்துதலால் தோன்றிய பாடல் தான் "தூக்கம் உன் கண்களைத் தழுவட்டுமே .." என்று ஒரு தேன்கிண்ணம் நிகழ்சியில் சொன்னதாக நினைவு. 

 இன்னொரு பழைய திரைப்படப் பாடல். எங்க பாப்பா படத்தில் சுசீலா அவர்களின் இனிய குரலில் மனதில் தங்கிய இசை.

ஒரு மரத்தில் குடியிருக்கும் பறவை இரண்டு
ஒரு அன்னை தந்தது
ஒன்று காவல் கொண்டது
ஒன்று கண் வளர்ந்தது ...

கண் வளர்தல் என்பது துயிலுதலை குறிப்பதாகும். ஒரு பறவை துயிலும்போது மற்றொன்று காவல் புரிகிறது ! ஜீவாத்மா இறையுணர்வு இல்லாத போதும் அதைக் காப்பது எப்போதும் விழித்திருக்கும் பரமாத்மா என்னும் பறவை. திரைப்படத்தில் இந்த வகையில் பொருள் படுத்தாவிட்டாலும் இந்த பதிவுக்கு பொருத்தமான வரிகள் இவை. மேற்கண்ட உதாரணம் முண்டக உபநிஷத்தில் வருகிறது. அதைப் பின்னர் பார்ப்போம்.

கபீர் இன்னொரு வகையான பறவை உதாரணத்தை எடுத்துக் கொள்கிறார்.

साई पडे दिन बीतबै, चक्वी दीन्ही रोय ।
चल चक्वा वा देश को, जहाँ रैन न होय ॥

ஸாயி படே தின் பீத்பை சக்வி தீன்ஹி ரோய்
சல் சக்வா வா தேஷ் கோ, ரைன் ந ஹோய்

இறையே! இன்னொரு அந்தியும் சாயுதே, புலம்பும் ஒரு சக்வி
பொறையே துக்கு சக்வா, போவோம் இருளில்லா தொருபுவி

(பொறை ஏதுக்கு= பொறுமை எதற்காக)


சக்வா ஆண்பறவை, சக்வி பெண்பறவை. வடநாட்டில் இக்காதல் பறவைகளை வைத்து இப்போதும் கவிதைகள் எழுதுவோர் உண்டு. ஒரு சாபத்தினால் மண்ணுலகில் பிறந்த தேவலோகத்தை சேர்ந்த இருவரைப் பற்றிய கதை. சாபத்தின்படி பறவைகளாகப் பிறந்த இருவரும் பகல் முழுவதும் சேர்ந்திருக்கலாம். அந்தி சாய்ந்ததும் அவைத் தனித்தனியே இரவை கழிக்க வேண்டும். (சேர்ந்திருந்தால்.....ஒரு வேளை சாபவிமோசனம் தள்ளிக் கொண்டே போயிருக்குமோ என்னவோ). அந்த தனிமை பெரிதும் வாட்டுகிறது சக்வியை. இருளே இல்லாத ஒரு உலகம் இருந்து விட்டால் பின்னர் பிரிவு ஏது? ஆகையால் அத்தகைய உலகத்திற்கு அழைத்துச் செல்லும்படி சக்வா-வை வேண்டிக்கொள்கிறது சக்வி.

கபீரின் ஆன்மா (நமக்காகவும் சேர்த்து) இறைவனை நோக்கி சொல்லும் வேண்டுதலாக இதைக் கொள்ளலாம்.


விநாயகர் அகவலில் ஒளவையாரும் அதையே தான் வேண்டுகிறார்.   

" வாக்கும் மனமும் இல்லா மனோலயம் தன்னில் 
  தேக்கியே எந்தன் சிந்தை தெளிவித்து 
 இருள் வெளி இரண்டும் ஒன்றிடம் என்ன 
அருள் தரும் ஆனந்தத்தை அழுத்தி என் செவியில் 
எல்லையில்லா ஆனந்தம் அளித்து 
அல்லல் களைந்தே  அருள் வழி காட்டி  
சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி 
சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி 
அணுவினுக்கணுவாய் அப்பாலுக்கு அப்பாலாய்
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி .....

அந்த பரஞானம் சித்தித்த பின்னர் அங்கே பேச்சில்லை மனமும் இல்லை.
பகலில்லை  இருளில்லை . ஓங்காரத்தின் சத்தம் தரும் ஆனந்தம் எல்லா அல்லலையும்  போக்கவல்லது. அதுவே சிவம். அணுவைக்காட்டிலும் நுட்பமானது அது என்றெல்லாம்  அவன் அருள் தரும் ஞானத்தை   போற்றுகிறார்.

    உலகில், அஞ்ஞான இருளில் நாம் உள்ளளவும் இறைவன் நம்மை விட்டு விலகியே இருக்கிறான். அந்த அஞ்ஞானத்தை விலக்கி நம்மை ஞானத்திற்கு இட்டுச் செல்வதும் அவன் கையிலே உள்ளது. ஆனால் அதற்கான மனப்பக்குவம், ஏக்கம் நம் உள்ளத்தில் இல்லாதபோது அவனும் சும்மா இருந்து விடுகிறான். கபீரைப் போல ஞானிகள் சக்வியின் மன நிலையை அடைந்து பரிதவிக்கின்றனர். ஞானமெனும் விடியலை எதிர் நோக்கி நேரத்தை கழிக்கின்றனர். வாழ்க்கையில் வேறெதுவும் ருசிப்பதில்லை அவர்களுக்கு. உலக விஷயங்கள் என்னும் இருளை வெறுத்து எப்பொழுதும் ஞான ஒளியான இறையின்பத்திலே திளைத்து இருக்க வேண்டுகின்றனர்.

இராமகிருஷ்ண பரமஹம்ஸர் ஒவ்வொரு இரவும் படுக்கும் முன் காளியிடம்’ உன் காட்சி கிடைக்காமல் இன்னொரு தினமும் வீணானதே’ என்று புலம்புவதுண்டாம்.

ஆனால் நமது நிலையோ முண்டக உபநிஷத்தில் குறிப்பிடப்பெறும் பறவையை ஒத்து உள்ளது.

அதில் பரமாத்மா மற்றும் ஜீவாத்மா தொடர்பை விவரிக்கையில் ஒரு மரத்தில் வசிக்கும் இரு பறவைகளுக்கு ஒப்பிடப் பட்டுள்ளது. இதில் ஒன்று அமைதியாக இருந்து இன்னொன்றை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும்.இன்னொன்று அமைதியற்று கிளைகளுக்கு இடையே இங்குமங்குமாய் மாறி மாறி பறப்பதும், பழுத்த பழங்களையும் பழுக்காத காய்களையும் கொத்துவதும் துப்புவதுமாய் நேரத்தைப் போக்கிக் கொண்டிருக்கும். இதுவே அல்லவோ நமது நிலை.

இந்த இயலாமையை அழகாக நம் கண்முன் தாயுமானசுவாமிகள் நிறுத்துகிறார்

.............தமியனேற்கு அருள் தாகமோ
சற்றுமிலை என்பதுவும் வெளியாச்சு......
.....................................................யோகமார்க்க
சித்தியோ வரவில்லை சகச நிட்டைக்கும்
என்சிந்தைக்கும் வெகுதூரம், நான்
ஏகமாய் நின்னோடு இருக்கும் நாளெந்தநாள்
இந்நாளில் முற்றுறாதோ
இகபரம் இரண்டிலும் உயிரினுக்கு உயிராகி
எங்குநிறை கின்ற பொருளே (6)

________________________________________

இந்த பதிவுடன் இவ்வலைப்பூ தனது இரண்டாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறது. மிகப்பொறுமையுடன் வாசித்து வரும் அன்பர்கள் யாவர்க்கும் கபீரின் அருள் மழைப் பொழியட்டும். அவனிச்சை இருக்கும் வரையில் இது தொடரும். மேலும் மாற்றங்கள் விரும்பினால் தனி அஞ்சலிலோ பின்னூட்தத்திலோ தயவுசெய்து தெரிவிக்கவும்.

11 comments:

  1. கபீரன்பரே!
    ஓராண்டு தொடர்ந்து எழுதியமை சாதனை தான்;'எந்த எதிர்பாப்பும் இல்லாமல்,கடமையைச்செய்'
    என்னும் பகவத்கீதையின் உபதேசம்,
    மனதில் ஆழப் பதிந்திருந்தால் தான்
    இதெல்லாம் செய்ய முடியும் என்பது
    உங்கள் செயலின் மூலம் எனக்குப்
    புரிந்தது. புரியவைத்தமைக்கு நன்றி.
    "ஜீவாத்மா-பரமாத்மா" தொடர்புகளைப்
    பற்றி அருளாளர் கபீர் என்ன சொல்லியிருக்கிறார்- என்று தெரிந்து கொள்ள ஆவல்.
    இரண்டாம் ஆண்டு தொடக்கத்திற்கு
    வாழ்த்துக்கள்
    அன்புடன்,
    ஜீவி

    ReplyDelete
  2. இரண்டாம் ஆண்டுக்கு வாழ்த்துகள் & பதிவுகளுக்கு பாராட்டுகள்+நன்றி :)

    ReplyDelete
  3. இதுக்கும் மேலே என்ன சொல்றது? ரொம்ப அழகாக அற்புதமாய் எழுதறீங்க, புரிந்து கொள்ளல் மட்டும் போதாது, புரிய வைக்கவும் தெரியணும். அருமையாப் புரிய வைக்கிறீங்க, நன்றி. தொடர்ந்து படிச்சுட்டு வந்தாலும் எப்போவாவது தான் பின்னூட்டம் கொடுக்க முடியுது! :(

    ReplyDelete
  4. அன்பரே,
    ஏக்கத்தின் தாக்கம் பெருமூச்சிடச் செய்கிறது. அதே சமயம், கண் கெட்டாற்பின் சூரிய நமஸ்காரம் செய்துப் பயனென்ன?

    விரைவாய் அருள்வாய் வேலவா என்று வேண்டி நிற்போம், வேறொன்று கொள்ளோம் திடமாய்.

    கபீரின் கனிமொழிகள் வெகுவாய் துணை நிற்கின்றன,

    நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  5. நன்றி ஜீவி.
    /////"ஜீவாத்மா-பரமாத்மா" தொடர்புகளைப்
    பற்றி அருளாளர் கபீர் என்ன சொல்லியிருக்கிறார்- என்று தெரிந்து கொள்ள ஆவல்.///////

    கபீர்தாஸர் பல இடங்களில் துவைதம் போனது மாயை விலகியது என்பதாக கூறியுள்ளார். ஆகவே அவர் அத்வைத நிலையை முழுவதுமாக உணர்ந்திருந்த மகானாகவே கொள்ள வேண்டியிருக்கிறது. பக்தி பழுத்திருக்கும் நிலையிலும் வித்யா மாயை சற்றே ஒட்டிக்கொண்டிருக்குமாம். அதனால் தான் ஜீவாத்மா பரமாத்வாவிடமிருந்து தன்னை பிரித்து உணர்கிறது என்று ராமகிருஷ்ணரின் உபதேசங்களில் படித்து இருக்கிறேன்.

    ReplyDelete
  6. நன்றி பாலா.
    நன்றி கீதாமேடம்.

    என் கவலை எல்லாம் கட்டுரையின் ஓட்டத்தில் மொழி பெயர்ப்புக்கான முக்கியத்துவம் நீர்த்து விட்டதோ என்பது தான். இவ்விஷயத்தில் கீதா மேடம் போல ஹிந்தி அறிந்தவர்கள், முன்வந்து குறைகளை (கண்டிப்பாக இல்லாமல் இருக்காது)சரி செய்ய உதவ வேண்டும்.

    ReplyDelete
  7. வருக ஜீவா,

    ///கண் கெட்டாற்பின் சூரிய நமஸ்காரம் செய்துப் பயனென்ன? //////

    ஞானக் கண்ணுக்கு ஊனம் இல்லை. அது எப்பொழுது வேண்டுமானாலும் திறக்கலாம். மேகம் விலகினால் ஒளிரும் சூரியன் போல.

    ///விரைவாய் அருள்வாய் வேலவா என்று வேண்டி நிற்போம்..///

    சரியாக சொன்னீர்கள்

    ReplyDelete
  8. கபீரன்பன்,

    நானும் தொடர்ந்து இந்த இடுகைகளைப் படித்து வருகிறேன். கபீர்தாசரைப் பற்றி கொஞ்சமே தெரியும். அவரது அருள் மொழிகளை உங்கள் பதிவு மூலம் படித்தறிந்து இன்புற்று வருகிறேன். மிக்க நன்றி. முதல் ஆண்டு நிறைவிற்கு வாழ்த்துகள்.

    பரமாத்மா, ஜீவாத்மா என்ற இந்த இரு பறவைகளைப் பற்றிய குறிப்பு எனக்கு மிகவும் பிடித்தது. மனத்திற்கு மிகவும் உகப்பானது. மனத்தில் பல முறை தோன்றி மறையும் ஒரு தோற்றம். அழகாக எடுத்துரைத்தீர்கள்

    ReplyDelete
  9. வருக குமரன். உங்களைப் போன்றோர் தொடர்ந்து கொடுத்து வரும் உற்சாகம் தான் இவ்வலைப் பூவை நடத்திச் செல்கிறது. காலங்களை கடந்து நிற்கும் மகாத்மாக்களின் சொற்கள் என்றும் மனித குலத்திற்கு அருமருந்தே.

    ReplyDelete
  10. 'சக்வா' என்பது சகோர பக்ஷியைக் குறிப்பதாகும். அது முழுமதியின் தண்ணொளியைப்
    பருகி வாழும் என்று கவி மரபு கூறும்.
    'முண்டக' உபநிஷத் என இருக்க வேண்டும்.'முண்டுக' தவறு.
    உங்கள் பதிவுகள் முழு ஆவணமாக வைத்துப் போற்றத் தக்கவை.
    குறை காண்பதற்கு மன்னிக்கவும். தாங்கள் 'மின்தமிழ்' குழும உறுப்பினரா?
    தேவராஜன்

    ReplyDelete
  11. நன்றி தேவராஜன்,
    சக்விக்கு இணையான இதிகாசப் பறவை தெரியவில்லை. சகோரம் நிலவு ஒளியையும் சக்வி சூரிய ஒளியையும் விரும்பி வாழ்வன என்பது கிரந்த சாகேப்-ன் கீழ்கண்ட பாடலிலிருந்து தெரிய வருகிறது.

    man preeth chandh chakor ||
    My mind loves You, as the Chakori loves the moon,
    jio meen jal sio haeth ||
    as the fish loves the water,
    al kamal bhinn n bhaeth ||
    as the bee and the lotus cannot be separated.
    jio chakavee sooraj as ||
    As the chakvi bird longs for the sun,
    naanak charan pias ||
    so does Nanak thirst for the Lord's feet
    (Guru Arjan Dev : shabad 1903)

    தவறுகளைச் சுட்டிக்காட்டுவதில் எனக்குக் குறையேதுமில்லை. திருத்தக் கூடியவற்றை திருத்தி விடலாம், முண்டக உபநிஷதத்தைப் போலே :))
    திருத்தி விட்டேன்.
    தங்கள் பாராட்டுரைகளுக்கு நன்றி

    மின்தமிழ் குழுமத்தில் நான் உறுப்பினர் இல்லை

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி