Sunday, October 21, 2007

கேடி என்பவன் எங்கே

இன்று விஜயதசமி. அல்லவை தேய்ந்து அறம் பெருக என்று வேண்டி செயலாற்ற வேண்டிய நாள்.

இராமன் தசக்ரீவனை அழித்த நாள் என்றும் அருச்சுனன் அஞ்ஞாத வாசத்திற்கு முத்தாய்ப்பாக மீண்டும் ஆயுதம் ஏந்திய நாள் என்றும் தேவி மஹிஷாசுரனின் கொட்டத்தை முடிவு கட்டிய நாள் என்று பலவாறாக பல பகுதிகளில் போற்றிக் கொண்டாடப் படும் நாள்.

நல்லனவும் தீயனவும் புறத்தே இல்லை. நம் உள்ளே புகுந்து நம் எண்ணத்திற்கு ஏற்றவாறு உலகை நம்முன் நிறுத்துகிறது.

ஒருமுறை கண்ணன் துரியோதனனிடம் யாராவது ஒரு நல்லவனை தேடிப்பிடித்து வா என்று அனுப்புகிறான். அவன் திரும்ப வந்து ”அப்படி ஒருவனை எங்கேயும் காணமுடியவில்லை. எல்லோர் உள்ளும் ஏதாவது ஒரு கெட்ட எண்ணம், தீய சிந்தனை என்னும் போது நல்லவன் எங்கே இருக்க முடியும்” என்றானாம்.
தருமரிடம் இதையே மாற்றி ”நீ யாராவது ஒரு தீயவனை கண்டு வா” என்று கேட்டுக்கொண்டான். தருமன் நாடெல்லாம் சுற்றி வந்து "கண்ணா எனக்கு தீயவன் என்று யாரைப் பற்றியும் எண்ணத் தோன்றவில்லை. எல்லோருள்ளும் பலவிதமான நல்ல குணங்களே கண்டேன். அறியா குழந்தைகள் சிலசமயம் தவறிழைப்பதுண்டு. அதனாலேயே அவர்களை தீயவர்கள் என்று சொல்ல மனமொப்பவில்லை" என்று தன் பார்வையை முன் வைத்தான்.

காமாலைக் கண்ணனுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்ற பழமொழிக்கேற்ப இருவரின் பதிலும் அமைந்திருப்பதை காண்கிறோம்.

உலகை சரி செய்ய விழைவோர் முதலில் செய்ய வேண்டியது தம்மை சரி செய்து கொள்ளுதல். அந்த சுய சோதனையை ஆரம்பித்து விட்டால் பின்னர் வேறெதற்கும் நேரம் இருக்காது. அதன் முடிவில் பார்த்தால் ’சரி செய்ய வேண்டியது’ என்று ஒன்றுமில்லை என்பது புரிந்துவிடும் என்கின்றனர் மகான்கள். இதை கபீரின் வரிகளில் பார்ப்போம்.


बुरा जो देखण में चला, बुरा न मिलिया कोए ।
जो मन खोजा आपणा, तो मुझ्से बुरा न कोए ॥

புரா ஜோ தேக்கண் மேன் சலா, புரா ந மிலியா கோயி
ஜோ மன் கோஜா ஆப்ணா, தோ முஜ்ஸே புரா ந கோயி

தீயவன் ஒருவன் எங்கே, தேடிக் கண்டிலேன் இங்கே
தேடிக் கொண்டேன் என்னுளே என்னிலும் தீயவன் இலையே

மாற்று :

கேடன் ஒருவனைத் தேடினேன், இல்லை ஒரு கேடனே
தேடலும் என்னுளே கண்டேன், பெருங்கேடனும் யானே

(கேடன் =தீய எண்ணம் கொண்டவன்)

மாற்று :
கேடி ஒருவனைத் தேடினேன், கண்டி லேனொரு கேடியே
தேடிக் கொள்வேன் என்னுளே, என்னிலும் கேடி இலையே

(கேடி = பழந்திருடன். ஜன்ம ஜன்மங்களாக விரும்பத்தகாத குணங்களை சுமந்து வரும் நாமும் ஒருவகையில் பழந்திருடர்கள் தானே!)

சமூகத்தில் ஒருவன் எப்படி மதிக்கப் படுகிறான் ? அவன் வெளிச்செயல்களை வைத்தா அல்லது அவன் கடைபிடிக்கும் உண்மை நெறிகளை வைத்தா? எவ்வளவு தான் மூடி மறைத்து வெளிவேடம் போட்டாலும் ஒரு நாள் சாயம் வெளுத்து உண்மை வெளி வரும். பின் மிஞ்சுவது அவப் பெயர்தான்.

மானுடரின் அசுர இயல்புகள் எப்படி கட்டுக்குள் இல்லாமல் துன்பம் தருகின்றன என்பதை பட்டினத்தார் அருட்புலம்பலில் உரைக்கிறார்.

அச்சம் ஆங்காரம் அடங்கேனே என்குதே
கைச்சும் இன்னுமானங் கழலேனே என்குதே

காமக் குரோதம் கடக்கேனே என்குதே
நாமே அரசென்று நாடோறும் எண்ணுதே

”The more a person is ashamed of himself the more respectable he becomes'' - பெர்னார்ட் ஷா கூறியதாக நினைவு. தன் குற்றங்களை உணர்ந்து அவற்றை களைய முற்படும் பொழுது ஒருவரின் ஆன்ம பலம் உயர்ந்து கொண்டே போகிறது. அதுவே பல அரிய காரியங்களை சாதிக்கும் வல்லமை தருகிறது.

செயற்கரிய செயல்களை செய்வதற்கான ஆற்றல் நம்மிடமிருந்தும் அதை உணரவிடாது தடைசெய்யும் தீய எண்ணங்களை களைந்து விடுவதுதான் உண்மையான அசுர (குணங்களின்) ஒழிப்பு என்பதை கபீரின் விஜயதசமி அறிவுரையாகக் கொள்வோம்.

No comments:

Post a Comment

பின்னூட்டத்திற்கு நன்றி