Showing posts with label நீதிவெண்பா. Show all posts
Showing posts with label நீதிவெண்பா. Show all posts

Wednesday, January 21, 2009

கல்லா மூடர் கருத்தறியார்

புனித தேவனின் திருமொழிகள் புத்தகத்தின் மேல் கையிட்டு சத்தியம் செய்து நான் சொல்கிறேன் - என் தவறை உணர்ந்ததாக உறுதி கூறுகிறேன். என் தவறு அர்த்தமற்ற என் குறிக்கோளினாலும் கர்வத்தாலும் ஏற்பட்டது. பூமியானது சூரியனை சுற்றி வரவில்லை என்பதை அறுதியிட்டு கூறுகிறேன்”

மனம் தளர்ந்து, வழக்கு விசாரணையிலிருந்து வெளியேறுகையில் கலீலியோ அருகில் இருப்பவரிடம் கூறியதாக சொல்லப்படுவது Eppur si muove (இன்னும் சுற்றிக் கொண்டிருக்கிறது).


கிபி 1633 ஜூன் 10 ஆம் தேதி இந்த ஒப்புதல் வாக்கு மூலத்திற்கு பிறகு அவருக்கு ஆயுள் முழுவதும் வீட்டுக் காவலில் இருக்கும்படி உத்தரவிடப்பட்டது. எந்த கட்டுரைகளையும் பிரசுரிக்கவோ, பொதுக் கூட்டங்களிலோ கருத்தரங்குகளில் பங்கு கொள்ளவோ அவருக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை.

அவர் செய்த தவறு கோப்பர்நிகஸ் என்ற விஞ்ஞானியின் கருத்தை ஏற்று பூமி சூரியனை சுற்றி வருகிறது என்ற பெரும் உண்மைக்காக வாதாடியதுதான். அது அன்றிருந்த மதக் கோட்பாடுகளுக்கு எதிராக அமைந்தமையால் அதிகாரம் படைத்திருந்த மதகுருமார்கள் தம் விருப்பம் போல் அவரை தண்டிக்க முடிந்தது.

கலீலியோ உரிமைகளுக்காக போராடும் போராளியல்ல. தன் உயிர் கொடுத்து உண்மையை நிலை நாட்டவேண்டிய அவசியமும் இருக்கவில்லை.

உண்மை என்றும் தன் காலிலே தான் நிற்க வல்லது. எனவே மூடர்களுடன் விவாதம் செய்து தன் நாட்களை வீணாக்க விரும்பால் அவர்களின் போக்கிலே சென்று அவர்கள் விரும்பியபடி உறுதி மொழி அளித்து விட்டார்.

அது ஒரு வகையில் நல்லதாகப் போயிற்று. வீட்டுக்காவலிலே வைக்கப்பட்டிருந்தாலும் மேற்கொண்டு தொலை நோக்குக் கருவி வடிவமைத்தல், கோள்களின் விண்வழி பாதைகள் பற்றி பல ஆராய்சிகளை எஞ்சிய நாட்களில் செய்து அவற்றை எழுதி வைக்கவும் செய்தார். அவர் மறைந்தது 1642 ஜனவரி 8 ஆம் தேதி

என்னே காலத்தின் கட்டாயம் !

அறிவியல் துறையில் அறியப்படும் உண்மைகளை வெளி உபகரணங்களின் மூலம் நிலைநாட்ட இயலுகிறது. ஆனால் ஆன்மீகம் கூறும் உண்மைகளை உணர தத்தம் அனுபவங்களாலேயே தான் முடியும். அந்த அனுபவங்கள் வாய்க்கும் வரை ஆசானின் வார்த்தைகளில் நம்பிக்கை வைத்து சாதனையை தொடரவேண்டும்.

அடிப்படைக் கோட்பாடுகள் எல்லாத் துறையிலும் உண்டு. அவற்றை ஏற்றுக் கொண்டால் மட்டுமே அத்துறையில் மேற்கொண்டு அறிவை வளர்த்துக் கொண்டு முன்னேற முடியும்.

திரிகோணவிதி கணித முறையை பலரும் அறிவோம். அதன் அறிமுக வகுப்பில் செங்கோண முக்கோணத்தில் sin x, cos x, tan x என்பனவெல்லாம் என்னவென்று விளக்க ஆரம்பிக்கிறார் பாட ஆசிரியர். ஒரு அதிகப் பிரசங்கியான மாணவன் எழுந்து செங்கோணமுக்கோணத்திற்கு மட்டும் ஏன்? பிற வகை முக்கோணக்களுக்கு ஏன் அப்படிப்பட்ட வரைமுறைகளை செய்யக் கூடாது என்று கேட்கிறான். பாவம் ஏனோ ஆசிரியர்க்கு உடனடியாக ஒரு சமாதானமான பதில் தரமுடியவில்லை. அது அப்படித்தான் என்று கூறி உட்காரச் சொல்கிறார். அந்த மாணவனோ விடுவதாயில்லை. அவன் தொடர்ந்து வாதாட ஆரம்பித்ததால் யாவருடைய நேரத்தையும் வீணாக்கினான்.

அங்கே குதர்க்க புத்தியை விட்டு பாடம் கேட்டால் பின்னர் வரும் வகுப்புகளில் பிற வகை முக்கோணங்களையும் முதலில் படித்த பாடத்தின் அடிப்படையிலேயே புரிந்து கொள்ள முடியும் என்ற உண்மை புரிந்திருக்கும்.

அது போலவே ஆன்மீகத்திலும் பலர் எவ்வித முயற்சியும் இல்லாமலே தம் சிற்றறிவைக் கொண்டு சான்றோர்களையும் ஞானிகளையும் ”புத்திசாலித்தனமான” கேள்விகள் கேட்க முற்படுகின்றனர். அத்தகையவர் தொடர்பு சற்றும் பயனில்லை என்கிறார் திருமூலர்.

கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர் சொல் கேட்கவும் கடன் அன்று
கல்லாத மூடர்க்கு கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத்தறியாரே


கல்லாத மூடர் என்று குறிப்பிடுவது உண்மையை ஏற்க விருப்பமில்லாதவர்களை பற்றியதாகும்.

அதை கடைசி வரியில் தீர்மானமாக கல்லாத மூடர் (எனப்படுபவர்), கருத்தறியாரே என்று சொல்வதன் மூலம் அறியலாம். அவர்கள் எழுத்தறிவுள்ளவர்கள் படித்தவர்கள். ஆனால் பொறுப்பற்ற முறையில் தர்க்கம் செய்பவர்கள்.

எனவே தான் கல்லாதார் (எழுத்தறிவு இல்லாதவ்ர்) நல்லராம் என்று படித்தவர்களைக் காட்டிலும் படிப்பறில்லாதவர்களை நல்லவர்கள் என்று போற்றுகிறார். அவர்கள் பிறரை தவறான வழியில் இட்டுச் செல்ல முடியாதல்லவா !

கபீர்தாஸரும் மூடரைப் பற்றி கூறுகிறார். அவர்களுடைய இலட்சணங்கள் என்னென்ன ?

मूरख शब्द न मानई, धर्म न सुनै विचार ।
सत्य शब्द नहीँ खोजई, जावै जम के द्वार ॥


கேளார் மூடர், மேலோர் உரை; தன்ம விசாரம் செய்யார்
தேடார், மெய்பொருள் அருமை; தன்மன் வாயில் சேர்வார்


(தன்மம்=தர்மம்; தன்ம விசாரம்= தர்ம அதர்மங்களை ஆராய்து அறிவது; தன்மன் =யமன்)

’தர்ம தேவதை என்றே யமன் குறிக்கப்படுகிறான். அதனால் தான் எமதர்மன் என்றும் அழைக்கப்படுகிறான். ஒவ்வொருவருடைய தர்ம அதர்ம கர்ம வினைகளை அனுசரித்து அவர்களுக்கேற்ற பிறவிகளையும், அடுத்தடுத்து அனுபவிக்க வேண்டிய சுக துக்கங்களையும் முடிவு செய்வதால் அவனுக்கு அந்த பெயர்.

ஒவ்வொருவருக்கும் அவரது கர்ம வினைகளை அனுசரித்து அவர்களுக்கேற்ற பிறவிகளும் வாழ்க்கை முறையும் அமைகிறது.

இது நமதுஆன்மீகத்தின் அடிப்படை கோட்பாடு. இதை ஏற்றுக் கொண்டால் மட்டுமே பிறவித்தளை அறுத்தலைப் பற்றி மேற்கொண்டு சிந்திக்கவோ உண்மை அறிந்த ஞானிகளின் கூற்றுகளை புரிந்து கொள்ளவோ முடியும்.

அவற்றை ஏற்க மறுத்து குதர்க்கம் பேசும் மக்களை ”...காணவும் ஆகாது”, “... கேட்கக் கடன் அன்று” என்றார் திருமூலர். ஏனெனில் அவர்கள் மீண்டும் மீண்டும் யமனுடைய பிடியிலே சிக்கித் தவிப்பவர்கள். அவர்களுக்கு விடுதலை வேட்கை யில்லை. அவர்களால் நம்முடைய மனது குழப்பம் அடையுமே தவிர தெளிவு ஏற்படாது.

அவர்கள் ஏன் அப்படி் நடந்து கொள்கிறார்கள் என்பதற்கான காரணத்தை சொல்கிறது நீதிவெண்பா.

கன்மமே பூரித்த காயத்தோர் தம் செவியில்
தன்ம நூல் புக்காலும் தங்காதே - சன்மம் எலும்
புண்டு ச்மிக்கும் நாய், ஊண் ஆவின் நெய் அதனை
உண்டு சமிக்குமோ ஓது.


கன்மமே பூரித்த காயத்தோர் செவியில்= பாவம் நிறைந்த உடம்பை உடையவர் காதில்;
தன்ம நூல் புக்காலும் தங்காதே = புண்ணிய நூற் பொருள் நுழைந்தாலும் தங்காது
சன்மம் எலும்புண்டு சமிக்கும் நாய்= சருமத்தையும் எலும்பையும் உண்டு களிக்கும் நாய்
ஊண் ஆவின் நெய் அதனை உண்டு சமிக்குமோ= பசு நெய் கலந்த உணவை ருசித்து உண்ணுமோ
ஓது = சொல்


ஒரு வகையில் மூடர்களின் போக்கை பிறவி குணம் என்றே சொல்கிறது நீதிவெண்பா. குறிப்பிட்ட நபர்களின் கர்ம வினைகளை ஒட்டியே அவர்களுக்கு ஆன்மீக நாட்டமும் ஞானம் கைகூடுவதும் கூட நடக்க வாய்ப்புண்டு.

இதனால் மூடர்கள் என்று யாரையும் வேற்றுமை பாராட்ட வேண்டிய அவசியமில்லை. அவர்களின் போக்கு அறிந்து முரண்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல் நம் வழியே நாம் போய்க் கொண்டிருக்க வேண்டியது தான். நெரிசலான போக்குவரத்து சாலையில் வண்டியோட்டுவது போல. ஏனெனில் சாதகன் போக வேண்டிய பாதை வெகுதூரம்.

பின் குறிப்பு:

मूरख शब्द न मानई, धर्म न सुनै विचार ।
सत्य शब्द नहीँ खोजई, जावै जम के द्वार ॥

மூரக் ஷப்த் ந மானய், தர்ம் ந ஸுநை விசார் |
ஸத்ய ஷப்த் நஹீ கோஜைய், ஜாவை ஜம் கே த்வார் ||

ஷப்த் என்ற வார்த்தைக்கு மேலோர் உரை என்ற வகையில் மேலே பொருள் கொள்ளப் பட்டிருக்கிறது. பல இடங்களில் ஷப்த் என்ற சொல்லை நாம செபத்திற்கான ‘மந்திரம்’ என்ற வகையிலும் கபீர் கையாண்டு இருக்கிறார். அவ்வகையில் மொழி பெயர்ப்பு செய்ய வேண்டுமாயின்

மூடர்கள் மந்திரம் ஒப்பார், கேளார் தன்மம், விசாரம்
தேடார் சத்தியப் பொருளும், போவார் மறலி வாயிலே


(விசாரம் =சத்விசாரம், நற்சிந்தனைகள் ;
மறலி= யமன்)

தர்ம் ந ஸுநை என்றும் ந ஸுநை விசார் என்றும் ”ந ஸுநை” (கேளார்) இடையில் நின்று இருபக்கமும் பொருள் தரும்.

Thursday, December 18, 2008

ஈரக் கம்பளம் சுமையதிகம்

உப்பு வியாபாரி ஒருவன் தன் கழுதை மேல் உப்பு மூட்டையை ஏற்றி ஊர் ஊராகச் சென்று உப்பு விற்று வருவது வழக்கம்.

ஒருநாள் வழியிலே ஒரு ஓடையை கடக்க வேண்டியிருந்தது. கடக்கும் போது அடி சறுக்கி கழுதை நீரில் விழுந்தது. உப்பெல்லாம் நீரில் கரைந்து முதுகில் இருந்த பாரமெல்லாம் காணாமல் போயிற்று. வியாபாரியோ தன் கெட்ட நேரத்தை நொந்து கொள்கையில் கழுதைக்கு பெரும் ஆச்சரியம், கொஞ்ச நேரத்திலேயே பெரும் சுமை மாயமானதைப் பற்றி. சில நாட்களுக்குப் பிறகு மீண்டும் அப்பாதையில் போகையில் அதே ஓடை. இம்முறை வேண்டுமென்றே கழுதை மீண்டும் விழுந்தது. வெற்றி ! வெற்றி!! இம்முறையும் சுமையெல்லாம் மாயம்.

அடுத்தடுத்து சில முறை இது தொடர்ந்து நிகழவே வியாபாரிக்கு கழுதையின் தந்திரம் புரிந்தது. அவன் கழுதையை ஒரு வண்ணானுக்கு விற்று விட்டு வேறு ஒரு கழுதையை வாங்கி வியாபரத்தை கவனிக்க ஆரம்பித்தான்.

கழுதை அறியுமோ சுமையின் தரம். வண்ணான் தன் துணி பொதியை ஏற்றிக்கொண்டு அதே ஓடைக்குச் சென்றான். துவைப்பதற்கு சரியான இடம் தேடி ஓடையில் நடத்திச் சென்றான். கழுதைக்கு மட்டில்லா மகிழ்ச்சி. புது எஜமானனிடத்தும் தன் புத்திசாலித்தனத்தை நம்பி கால் இடறியது போல் நீரில் விழுந்தது. நீர் பொதியில் புகுந்ததும் பொதியின் பாரம் கூடியது. எத்தனை முயற்சித்தும் அதனால் எழுந்திருக்க முடியவில்லை. வண்ணானும் விடுவதாயில்லை. அதை கோலினால் புடைக்க ஆரம்பித்தான்.நேரமாக ஆக பாரம் கூடிக்கொண்டே போனது. கழுதையோ அடி வாங்கி துவண்டு போனது.

கபீரின் ஒரு ஈரடி மேற்கண்ட கதையை நினைவு படுத்தியதால் கதையை முதலில் சொல்லிவிட்டேன். கதை என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். இப்போது ஈரடியை பார்ப்போம்.

अति हठ मत कर बावरे, हठ से बात न होय |
ज्यूं ज्यूं भीजे कामरी, त्यूं त्यूं भारी होय ||


அதிப் பிடிவாதம் வேண்டா,வாதத்தில் இல்லை சமாதானம்
நனைதல் கூடக் கூடவே, கம்பளம் தன் சுமையும் கூடும்

மாற்று :
வாதம் வளர்க்கும் பிடிவாதம்,வாதம் தராது சமாதானம்
வாதம் வேண்டாம் அன்பரே, ஈரக் கம்பளம் சுமையதிகம்

மிக எளிமையான உதாரணம். பிடிவாதத்தால் எதையும் சாதிக்க முடியாது. கழுதைக்கு வந்த மயக்கத்தை போல நமக்கும் அறிவு மயக்கம் வந்துவிட்டால் நம்முடைய புத்திசாலித்தனத்தை நாமே மெச்சிக் கொள்ள ஆரம்பிக்கிறோம். நாமும் அதைப் போலவே அஞ்ஞானிகளாகி விடுகிறோம். அப்போது கீழிருப்பவர்கள் வாயை அடக்குகிறோம். மேலிருப்பவரோடு விவாதம் செய்வதோ தட்டிக் கழிப்பதோ செய்கிறோம்.

ஏதோ ஒரு வகையில் வாதம் முடிவுக்கு வந்த பின்னரும் பலநாட்களுக்கு மனதிற்குள்ளே அதே வாத பிரதிவாதங்களை நடத்திக் கொண்டிருப்போம்.‘அப்படி பேசாது இப்படி சொல்லியிருந்தால் சரியாக இருந்திருக்குமோ’ என்று உள்ளுக்குள்ளே உரையாடல் தொடர்ந்து கொண்டிருக்கும். இதை கம்பளத்தில் ஈரம் ஊறியது போல மனம் இந்த வாதப் பிரதிவாதங்களில் ஊறுகிறது என்ற வகையில் ஒப்பிடுகிறார் கபீர்.

இப்படி மனம் சதா ..நானே சரி... நானே சரி ..என்ற எண்ணத்தில் ஊறும் போது உண்மை நிலையை உணர தவறி விடுகிறது.

ஈரமான கம்பளியை யாராவது போர்த்திக் கொள்ள முடியுமா? குளிர் நேரத்தில் கூட அதை யாரும் சீந்த மாட்டார்களே. அது போல பிறர் நம்மை தள்ளி வைத்து விடுகிறார்கள்.

வீண் விவாதங்களால் மனக்கசப்பு வளர்கிறது. அன்பு முறியும் அபாயம் ஏற்படுகிறது. பொதுவாக இது யாவருக்கும் பொருந்தும்.

நிறைகுடம் தளும்பாது, Empty wagons rattle the most என்றெல்லாம் படிக்கிறோம், கேட்கிறோம். மனமுதிர்ச்சி இல்லாதவர்களே விவாதங்களில் ஈடுபடுகின்றனர்.

உண்மையை உணர்வதற்கு விவாதங்கள் தேவையில்லை.அமைதி காத்தால் போதும்.
சிற்றுணர்வோர் என்றும் சிலுசிலுப்பர் ஆன்று அமைந்த
முற்றுணர்வோர் ஒன்று மொழியாரே- வெற்றி பெறும்
வெண்கலத்தின் ஓசை மிகுமே விரிபசும் பொன்
ஒண்கலத்தில் உண்டோ ஒலி. (நீதி வெண்பா-35)

(ஆன்று அமைந்த முற்று உணர்வோர்= கல்வி கேள்விகளில் சிறந்தவர்கள்)


அரைகுறை அறிவுள்ளவர்கள்தான் அதிகம் ஆர்பரிப்பவர்கள் வெண்கலத்தைப் போல. எப்படி உயர்ந்த பொன்னால் செய்தக் கலம் எந்த ஒலியும் எழுப்பாதோ அது போல உயர்ந்தவர்கள் எல்லா காலத்தும் அமைதியோடு இருப்பார்கள்.

ஆன்மீகத்தில் முன்னேற்றம் காண விரும்புவோர்க்கு விவாத குணம் இருப்பின் அது ஒரு பெரிய தடைக்கல். சதாசிவ பிரம்மேந்திரர்க்கு இருந்த அந்த பலவீனத்தை போக்குவதற்காகவே அவரை சற்றே மௌனம் காக்கச் சொன்னார் அவரது குரு. அவரோ அதை சிரமேற்க் கொண்டு வாழ்நாள் முழுதுமே மௌனியாகி விட்டார்.

தாயுமான சுவாமிகளின் குருவும் மௌன குருதான். மனதின் போக்கைக்குறித்து குருவிடம் இவ்விதம் பிரார்த்திக்கிறார்.
.......
......
ஈங்கு ஆர் எனக்கு நிகர் என்ன ப்ரதாபித்து
ராவண ஆகாரமாகி
இதயவெளி எங்கணும் தன்னரசு நாடு செய்து
இருக்கும் இதனொடு எந்நேரமும்
வாங்காநி லா அடிமை போராட முடியுமோ
மௌன உபதேச குருவே
மந்த்ர குருவே யோக தந்த்ர குருவே மூலன்
மரபில் வரு மௌன குருவே .


மௌனத்தின் அருமையை உணர்ந்தவர் அவர். ஆதலால் பலவிதமான தர்க்கங்களில் ஈடுபடும் பண்டிதர்களின் போக்கைக் கண்டு இன்னொரு பாடலில் பரிகாசம் செய்கிறார்.

பூதலயமாகின்ற மாயையை முதல் என்பர் சிலர்
பொறிபுலன் அடங்கும் இடமே பொருள் என்பர் சிலர்
கரண முடிவென்பர் சிலர், குணம்
போன இடமென்பர் சிலபேர்,
நாதவடிவென்பர்,சிலர் விந்துமயமென்பர் சிலர்
நட்ட நடுவே இருந்த
நாமென்பர் சிலர்; உருவமாம் என்பர் சிலர்
நாடில் அருவென்பர் சிலபேர்,
பேதமற உயிர் கெட்ட நிலையம் என்றிடுவர்
பேசில் அருளென்பர் சிலபேர்
பின்னும் முன்னும் கெட்ட சூனியம் அதென்பர் சில பேர்
பிறவுமே மொழிவர்;இவையால்
பாதரசமாய் மனது சஞ்சலப்படுமல்லால்
பரம சுக நிட்டை பெறுமோ
பார்க்கும் இடமெங்கும் நீக்கமற நிறைகின்ற
பரிபூரணானந்தமே.


உலகிலே நாம் வந்திருக்கும் காரியம் ”பரமசுக நிட்டை பெறுதல்”. அதை விட்டு விட்டு சிருஷ்டியின் குண விசேஷங்களை பல்வேறு விதமாக ஆராய்ந்து தர்க்கம் செய்வதால் மனதுக்கு சஞ்சலம் மட்டுமே எஞ்சுகிறது. பாதரசம் சிந்தினால் அதை பிடித்து எடுக்க முடியாது. தெர்மாமீட்டரை உடைத்தவர்களுக்கு அது தெரியும். நாலாப்பக்கமும் சிதறி ஓடும் அதை மீண்டும் பிடித்து சேர்ப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும். பல்வேறு விவாதங்களால் மனமும் அதைப் போலவே சிதறி ஓடுகிறது.

மன ஒருமையில்லாது போனால் எந்த காரியமும் கை கூடாது. மன ஒருமைக்கு மௌனம் சாதனம்.அதற்கு வாதங்களில் ஈடுபடாமல் இருப்பது ஆரம்பப் பாடம்.

ஆரம்பப்பாடம் சரியாக இருந்தால்தானே பின்னால் கற்கப் போவது நிற்கும். இல்லாவிட்டால் கதையில் வந்த கழுதையை போல அவஸ்தையை அனுபவிக்க வேண்டியிருக்கும்

Monday, May 05, 2008

விளைந்ததோ ஆமிலம், விழைவதோ ஆமிரம்

கோல்கொண்டா பிரதேசத்தின் சுல்தான் தானி ஷா இரவு உணவு முடித்து தாம்பூலம் தரித்து சயனிக்கும் வேளை. இரண்டு இளைஞர்கள் அவனை எழுப்பி, கோபண்ணா என்பவன் அரசாங்கத்திற்கு பட்டிருக்கும் கடனைத் தீர்க்க வந்திருப்பதாக கூறுகின்றனர். இவர்கள் யார், எப்படி உள்ளே வந்தனர் என்ற கேள்வியெல்லாம் எழுவதற்கு பதிலாக அவர்களின் அழகிலும் கம்பீரத்திலும் மயங்கி அவர்கள் சொன்னதற்கெல்லாம் மந்திரத்தில் கட்டுண்டவன் போல் செயலாற்றுகிறான் சுல்தான். தங்க நாணயங்களை எண்ணி கணக்கு ஒப்புவித்தபின் சுல்தானிடம் ரசீது வேண்டினர்.

எழுதும் மை வைக்கப்பட்டிருக்கும் இடமா அது, அதுவும் அந்த அகால வேளையில்! 'உங்கள் தாம்பூல எச்சில் சாயத்தில் கையெழுத்திட்டு கொடுங்கள் போதும்' என்று சொல்லி ரசீது பெற்று செல்கின்றனர்.

பன்னிரெண்டு வருடங்களுக்கு பிறகு கோபண்ணாவுக்கு திடீரென்று விடுதலை. அரசாங்கத்துக்கு சேர வேண்டிய வரிப்பணத்தை பத்ராசலத்து ராமன் கோவில் கட்டுவதற்காக செலவிட்டு விட்டார் என்று தண்டனை அனுபவித்து வந்தார். பணத்தை திருப்பிக்கட்டும் வரையில் சிறைவாசம் விதிக்கப் பட்டிருந்தது.
இவர் ஆந்திர மாநிலத்து மணிவாசகப் பெருமான்.

மறுநாள் காலை பத்ராசலராமன் கோவில் ராமன் காலடியில் அந்த ரசீது காணப்பட்டது. பக்தனுக்காக ஒரு மானுடனின் எச்சிலையும் சுமந்தான் இராமன். கோபண்ணாவின் பக்தியை உணர்ந்த தானி ஷா அந்த நிதியை மீண்டும் கோவில் செலவுக்கென கொடுத்து விடுகிறான்.

பத்ராசல ராமதாஸர் என்று பிற்காலத்தில் போற்றப்பட்ட கோபண்ணாவுக்கு மனதில் ஒரு சந்தேகம்.

தான் பன்னிரெண்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய காரணம் என்ன? அதே ராமனின் கருணை இன்னும் முன்பே வந்திருக்கலாமே. பின்னொரு நாளில் அவருக்கு கூறப்பட்ட காரணம், பிந்தைய சென்மம் ஒன்றில் அவர் ஒரு கிளியை பன்னிரெண்டு நாட்கள் கூண்டில் அடைத்து வைத்திருந்தாராம். அந்த கிளியின் மனத்துன்பம் இந்த சென்மத்தில் தொடர்ந்து வந்து பீடித்தது என்று அறிந்து கொண்டாராம்.

தானே புரி வினையால் சாரும் இரு பயனும்
தானே அனுபவித்தல் தப்பாது - தான் நூறு
கோடி கல்பம் சென்றாலும் கோதையே! செய்த வினை
நாடி நிற்கும் என்றார் நயந்து.

என்கிறது நீதி வெண்பா. நம் செய்கைகளின் நல்லதும் கெட்டதும் அதற்குரிய பலனை கொடுக்காமல் விடாது. நிழலைப் போலே பின் தொடர்ந்து கொண்டே இருக்கும். இதைப் பற்றி கபீர் சொல்ல வருவதும் அதைத்தான்.

करता था तो क्युँ रहा, अब काहे पछताये ।
बोये पेड बबूल का , आम कहा से खाये ॥


கர்தா தா தோ க்யூ ரஹா, அப் காஹே பச்தாயே |
போயே பேட் பபூல் கா, ஆம் காஹா ஸே காயே
||

செய்வினை விளையாட்டு வேடிக்கை, பின்னாலே வேதனையே வாடிக்கை
செய் அதிலே விளைந்ததோ ஆமிலம், பின் இவரும் விழைவரே ஆமிரம்.

(செய்வினை= செய்கின்ற செயல்கள், செய்= வயல்; ஆமிலம்= புளியமரம் ஆமிரம் =மா மரம்)
கபீர் சொல்லும் பபூல் என்பது கருவேல மரத்தை குறிப்பது. சொல் நயத்திற்காக ஆமிரம் ஆமிலம் என்று கையாளப்பட்டிருக்கிறது.

What you sow, so you reap. கருவேல மரத்தை (அல்லது புளிய மரத்தை) வளர்த்து விட்டு பின்னர் அதில் மாங்காய் வேண்டும் என்று ஆசைப்பட்டால் எப்படி முடியும் ?
நாம் அனுபவிக்கக் கூடிய சுகதுக்கங்களுக்கான முழு பொறுப்பும் நம்முடையதே. இப்போது வெறுக்க தக்க சூழ்நிலைகளில் இடர்படுகிறோம் என்றால் எப்பொழுதோ அது போன்ற வெறுக்கத்தக்க சூழ்நிலையை பிறர்க்கு நாம் உண்டாக்கியிருக்க வேண்டும், பத்ராசலர் கதையில் கண்டது போல.

மனித உடலை விளைநிலத்திற்கு ஒப்படும் வழக்கம் மிகப் பரவலாகக் காணப்படுகிறது. இது வினைநிலம்.

'ஐவருக்குமாம் ஒரு செய் விளைந்தது....' என்பார் திருமூலர்.

'நெஞ்சப்புனத்து வஞ்சக் கட்டையை வேரற அகழ்ந்து' ...என்பார் பட்டினத்து அடிகள்

பல்வேறு வினைகளால் வந்திருக்கும் உடல், மீண்டும் நல்ல வினைகளை ஆற்றி பிறவித் துன்பத்திலிருந்து கரை காண்பதற்கான ஒரு வாய்ப்பு. ஆகவே திருவள்ளுவரும் கூறுவார்.

துறப்பார்மன் துப்புர(வு) இல்லார், உறற்பால
ஊட்டா கழியும் எனின்.
அனுபவிக்க வேண்டிய துன்பங்களெல்லாம் அனுபவித்து, அனுபவிப்பதற்கு எதுவும் இல்லாதவன் நிலையான இன்பமாகிய வீடு பேறு அடைய வேண்டிய துறவியாவான்

மானுட உடலே வினைகளின் விளைநிலம். இதில் மனம் உழவன்.

நல்ல உழவன் பாடுபட்டு நிலத்தை சீர் திருத்தி நீர்பாய்ச்சி நல்ல விதைகளை ஊன்றி களை பறித்து தனக்கும் சமூகத்திற்கும் உபயோகமாகும் பொருட்களை உற்பத்தி செய்கிறான்.

மனிதன் செய்யக் கூடிய தர்ம காரியங்கள்தான் நல்ல விதைகள். அவன் மனதில் உருவெடுக்கும் தீய எண்ணங்களும் ஒரு வகை விதைகளே. அவைகள் அதிகம் வளர்ந்தால் முறையான பயிரை தலையெடுக்க விடாத களைகள் எனப்படும்.
களைகளை வளர விட்டு பின்னால் துன்பமுறும் பொறுப்பற்ற உழவன் போல் தீய வினைகளின் பலன் வரும் போது அறிவற்றவன் மனம் துன்பத்தை அனுபவிக்கிறது. கபீரின் இன்னொரு ஈரடி அந்த அறியாமையை கண்டு எள்ளுகிறது.

काया खेत किसान मन, पाप पुन्न दो बीब ।
बोया लूनै आपना, काया कसकै जीब ॥

காயா கேத் கிஸான் மன், பாப் புன் தோ பீப் |
போயா லூனை ஆப்னா, காயா கஸ்கை ஜீப் |
|

காயமே நிலம், மனமே உழுநன், பாவ புண்ணியமே வித்தாம்
முன்னதை விதைத்தவன் நீ, பின்னதை என்னோ நோவதாம்

(காயம்=உடல்; முன்னதை = முதன்மையாக குறிப்பிடப்பட்டுள்ள பாவத்தை ; பின்னதை = பின் +அதை = சில தினங்களுக்குப் பிறகு+ செய்த காரியத்தை ; நோவதாம் =வருந்துதல் )

நம் மனதில் ஏற்படும் மிகச்சிறிய எண்ண ஓட்டங்களும் மிக வலுவானவை. அவை அழியாது நின்று அதற்குண்டான வடிவத்தைப் பெறும் என்பதற்கு பாகவதத்தில் பூதனையின் செயலை உதாரணமாகச் சொல்வர்.

உருவில் பச்சிளம் பாலகன், அந்த அந்தண சிறுவன் மகாபலியை யாசகத்திற்காக அணுகிய போது அருகே இருந்த அவன் மகளுக்கு மனதில் தாய்பாசம் பொங்கியது. அவனை அள்ளியெடுத்து உச்சிமுகர வேண்டும் போலிருந்தது. விரைவிலேயே அச்சிறுவனால் தன் தந்தையின் பெருமை சிறுமைபட்ட பொழுது அவனை ஒரேயடியாக அழித்து விடத் துடித்தது அவள் மனது.

மிகச் சிறிய இடைவெளியில் ஏற்பட்ட அந்த மனவோட்டத்தில் எத்தனை வேறுபாடு. இரண்டும் நேரெதிர் துருவங்கள். யுகங்கள் கழிந்தன. இப்போது மகாபலியின் மகள் பூதனை என்ற அரக்கியாக சென்மம் எடுத்திருந்தாள். கம்சனால் ஏவப்பட்ட பூதனை பாலூட்டும் வகையில் குழந்தை கிருஷ்ணனை அழித்துவிடப் பார்க்கிறாள்.

முதலில் எந்த விஷ்ணு அவதார குழந்தையைக் கண்டு எண்ணங்கள் உருக்கொண்டனவோ பின்னர் அதே விஷ்ணுவின் அவதாரத்தில் அதே
எண்ணங்கள் செயல் வடிவம் பெறுகிறது. அவனாலேயே அந்த செயல் வடிவமும் முற்றுப் பெறுகிறது.

நம் மனதில் தோன்றும் எண்ணங்கள் அழிவதில்லை. நாமே மறந்து போயிருப்பினும் தக்க காலத்தில் உருப் பெற்று நமக்கு இன்பமோ துன்பமோ கொடுக்கின்றன. இக்கருத்தை சொல்லும் ஒரு நாலடியாரின் பாடலோடு நிறைவு செய்வோம்.

சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா
உறுகாலத் தூற்றாகா ஆமிடத்தே ஆகும்
சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால்
இறுகாலத்து என்னை பரிவு (110)

குறையாது கூடாது முறை மாறி போகாது. வர வேண்டிய காலத்தில் வந்தே தீரும் எவராலும் அதை தடுக்கவும் இயலாது. கருவில் உருவாகும் போதே உயிர்க்கு விதிக்கப்பட்டு விட்ட உண்மை . இது உணர்ந்து கொள்ளாமல் துன்பம் வரும்போது அதை எண்ணி வருந்தி என்ன பயன் ? (பரிவு- வருத்தம் )

Friday, February 22, 2008

கன்றைச் சுற்றும் பசு

பெரியவர்கள் பலரும் கூடியிருக்கும் வேளை. பேசுவதற்கு ஒன்றும் பெரிதான விஷயமும் இல்லை. சொல்லப் போனால் ரொம்ப 'டல்'அடிக்கிற பொழுது. அவ்வேளை ஒரு இளம் தம்பதியினர் இரண்டு வயது குழந்தையோடு வந்து சேர்கின்றனர். அதன் சூட்டிகையான பேச்சும், கேள்விகளுக்கு பதில் சொல்லும் போக்கும், வெட்கப்படாமல் செய்து காட்டிய ஆட்டமும் பாட்டமும் எல்லோரையும் கட்டிப்போட்டு விட்டது. அனைவரது முகத்திலும் உற்சாகம். இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை.அத்தம்பதியினர் கிளம்பும் போது மனமே இல்லாமல் யாவரும் கூடி வழி அனுப்புகின்றனர். அவர்கள் போனபின்னும் வெகு நேரம் வரையிலும் அதே பேச்சு.

இது பலமுறை நாமெல்லோரும் பார்க்கும் ஒரு காட்சி.

இந்த ஈர்ப்பு குழந்தைகளிடத்தில் எப்படி ஏற்படுகிறது ? யாவரும் சொல்வது அவர்களின் கள்ளம் கபடம் அற்ற மனதே காரணம் என்பதே. அவர்களோடு இருக்கும் பொழுது பெரியவர்களும் குழந்தைகளாகி விடுகிறோம். நம்மை மறக்கும் அந்த கணங்களிலே நம் இதயமும் தூய்மையாய் இருக்கிறது. குழந்தையும் தெய்வமும் குணத்தால் ஒன்று.

ஞானிகளையும் குழந்தைகளின் வகையிலேயே சேர்க்கின்றனர் பெரியோர்.அவர்களுக்கும் பேத பாவங்கள் கிடையாது. இறைவனின் கையில் தம்மை குழந்தையாய் பாவிப்பதால் செயலாற்றல் அவசியம் கிடையாது. அதனால் உண்டாகும் பாவபுண்ணியங்களும் கிடையாது. இந்த மனநிலையை நிர்மலம் என்று கூறுவர்.நிர்-மலம், மன அழுக்குகள் அற்ற நிலை.

அந்நிலையில் பெரியவர்கள் குழந்தையைச் சுற்றி வருவது போலே இறைவனும் தன் அடியவரை சுற்றி வருவானாம்.

நீதி வெண்பாவிலே வரும் ஒரு பாடலைப் பாருங்கள்.

சிவனே சிவனே சிவனே என்பார் பின்,
சிவன் உமையாளோடுந் திரிவன் -சிவன் அருளாற்
பெற்ற இளங்கன்றை பிரியாமற் பின்னோடிச்
சுற்று(ம்) பசு போல் தொடர்ந்து. (58)

(சிவனே என்பார் பின் = சிவனே என்பவர்கள் பின்னால்)

தாய் பசு எப்படி தன் கன்றை விட்டுப் பிரிய முடியாமல் அதன் பின்னே சுற்றுமோ அது போலவே இறைவனும் தன் பெயரை உள்ளன்போடு நினைப்பவர் பின்னே திரிவானாம். இதே நிலையை கபீரும் அனுபவிக்கிறார்.

कबीर मन निर्मल भया, जैसे गंगा नीर ।
पाछे पाछे हरि फिरे, कहत कबीर कबीर ॥


கபீர் மன் நிர்மல் பயா, ஜைஸே கங்கா நீர் |
பாசே பாசே ஹரி ஃபிரே, கஹத் கபீர் கபீர் ||


கபீர் மனது நிர்மலமானது, தூய கங்கை நீர் அன்னே
கபீர் கபீரென்றே அரி,குழைவான் இவன் பின்னே பின்னே

(அன்னே = போலே ; அரி =ஹரி ; குழைதல்= நெகிழ்தல்)

எப்போதும் இறைவன் தன்னுடனேயே இருக்கிறான் என்பதை தன் பின்னாலே அவன் சுற்றுகிறான் என்ற பொருளிலே சொல்கிறார். (பாசே பாசே என்பது பீசே பீசே என்று சொல்வதன் திரிபு.)

இரண்டாம் அடியில் ஹரி ஃபிரே என்பதற்கு பதிலாக ஹர் ஃபிரே என்றும் சில இடங்களில் காணப்படுகிறது. அப்படி வைத்துக்கொண்டால் “கபீர் கபீரென யெவரும், திரிவார் இவன் பின்னே பின்னே” என்று மொழி பெயர்க்க வேண்டி வரும்.

பொருள் கொள்வதில் சற்று வித்தியாசம் வரும். ஆரம்பத்தில் கண்ட படி நிர்மலமான மனதுக்கு யாவரையும் வசீகரிக்கும் சக்தி உண்டு என்பதால் நிர்மலமான கபீர் யாவரையும் கவர்ந்திழுக்கிறார் என்று கொள்ள வேண்டும்.

ஹரி என்பதே சரியானதாக இருக்கும் என்று கருதுகிறேன். ஏனெனில் கபீர் போன்ற மகான்கள் தம்மைச் சுற்றியிருப்பவர்களின் அங்கீகாரத்திற்காக கவலைப்பட்டவர்கள் அல்லர்.


மகாபாரதம் எழுதி முடித்த வியாசருக்கு மனதில் அமைதி குலைந்து விட்டது. மெகா சீரியல்கள் போல போட்டி பொறாமை, சூது வஞ்சம் என்று இவற்றைப் பற்றிய கதையை சொன்னதால் அதன் பாதிப்பு அந்த மகரிஷிக்கும் வந்துவிட்டது.அப்போது நாரதரின் அறிவுரைப்படி கிருஷ்ணரின் பால்ய லீலைகளைப் போற்றும் பாகவதத்தை எழுதினார். பாலகிருஷ்ணனின் குறும்புகளையும் லீலைகளையும் சொல்லச் சொல்ல அவர் மனம் மீண்டும் நிர்மலம் ஆகி அமைதி கொண்டார் என்று அறிகிறோம்.

“மன ஏவ மனுஷ்யானம்”. நாம் எதைப் பற்றி சிந்திக்கிறோமோ அதுவே ஆகிவிடுவோம் என்று அதனால் தான் சொல்லி வைத்திருக்கிறார்கள். நற்சிந்தனைகளிலேயே மனதை செலுத்தும் பொழுது நம்மைச் சுற்றிய நிகழ்வுகளும் நன்றாகவே அமைவதைக் காண்கிறோம்.