கபீரின் கனிமொழிகள் வலைப்பூவைப் பெருமைப்படுத்த இருக்கும் அம்மன் அருளை எண்ணிப் போற்றுகிறேன் என்று சொன்னாலே போதும், நம் வாசகர்களுக்கு, இப்பதிவின் ஆசிரியர் யாரென்று புரிந்து விடும்.
கவிதாயினி. அதனால் கவி அவர் பெயரில் உண்டு. அபிநயமும் வெகுவாகப் பிடித்திருப்பதால் அதையும் 'நய'மாகத் தன் பெயருடன் இணைத்துக் கொண்டு விட்டார்.
கவிநயா என்ற பெயரில் அழகிய கவிதைகளையும், சிறுகதைகளையும், எண்ண ஓட்டங்களையும் தனது நினைவின் விளிம்பில் என்கிற வலைப்பூவில் பகிர்ந்து வரும் இவரது வாசகர் வட்டம் பெரியது. ஒரு காற்றுக்குமிழ் பற்றிய அவருடைய வரிகள் அவருடைய கவி உள்ளத்தைப் படம் பிடிக்கிறது.
அதே சமயம் குழந்தைகளுக்கானக் கவிதைகள் கூட எழுத வல்லவர்தான் என்பதை அவருடைய ஆனைப்பாரு பட்டாம்பூச்சி போன்ற கவிதைகளைப் படித்தாலேத் தெரியும். இரண்டு பாடல்களிலிருந்தும் சில மாதிரி ’நம்பிக்கைத் தரும்’ வரிகள் இங்கே :
.....
ஆனை யோட பலத்தைப் பாரு
தும்பிக் கையில் இருக்கு பாரு!
நீயும் கொஞ்சம் உள்ளே பாரு
நம்பிக் கையில் தெரியும் பாரு!!
--------------
கூட்டுப் புழுவாய் பலநாள் இருந்தது
சிறகை விரித்து ஒருநாள் பறந்தது
நாமும் நினைத்தால் சிகரம் தொடலாம்
நாளை உலகை இன்றே தரலாம்!!
குழந்தை மனம் உடையவர்களால்தான் குழந்தைகளுக்காகப் பாடமுடியும் என்று எப்போதோ படித்த நினைவு. "குழந்தையும் தெய்வமும் கொண்டாடும் இடத்திலே"
இங்கே கவிநயா அவர்கள் நம் அழைப்பை ஏற்று கட்டுரை ஒன்றை வழங்கி இருப்பது பெருமகிழ்வு தருகிறது. அவருக்கு வணக்கங்கள்.
ஒரு சாது இருந்தாராம். பல வருடங்களாகச் சாதனை செய்ததில், அவருக்கு ஒரு அற்புதமான சித்தி கிடைத்ததாம். அதாவது, அவரால் தண்ணீரின் மேல் அநாயாசமாக நடக்க முடியுமாம். அதைப் பற்றி அவருக்கு ஏகப் பெருமையாம்.
ஒரு நாள் இவர் கங்கைக் கரையில் காத்துக் கொண்டிருந்த இன்னொரு சாதுவைப் பார்த்தாராம். “என்ன இங்கே நின்று கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டாராம்.
அவரும், “கரையைக் கடக்க வேண்டும். படகுக்கு காத்துக் கொண்டிருக்கிறேன்” என்றாராம்.
உடனே நம் சாது, “ப்பூ… இவ்வளவுதானா? நானாக இருந்தால் நடந்தே கடந்திருப்பேனே” என்றாராம், மகாப் பெருமையுடன்.
“அப்படியா!” என்று ஆச்சர்யப்பட்ட அந்த இன்னொரு சாது, “இந்த சித்தியைப் பெற உங்களுக்கு எத்தனை காலம் ஆயிற்று?” என்று கேட்டாராம்.
“சுமார் பன்னிரெண்டு வருடங்கள் ஆயிற்று” என்று பதிலிறுத்தாராம் அவர்.
“இதனால் என்ன பயன் ஏற்பட்டது? உங்களால் இறைவனை அறிய முடிந்ததா? காலணா மிச்சம் பண்ணுவதற்காக, பாதி வாழ்நாளை வீணடித்து விட்டீர்களே.” என்று சொல்லி விட்டுப் போனாராம் மற்றவர்.எல்லோருக்கும் தெரிந்த கதைதான். விவரங்கள் கொஞ்சம் முன்னே பின்னே இருக்கக் கூடும், இருந்தாலும் கதை சொல்ல வரும் கருத்தை மட்டுமே மனதில் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.
இறைவனை அறிவதே பிறவியின் குறிக்கோள். அந்தக் குறிக்கோளை அடைய உதவாத எதுவும் பயனற்றதே.
அனைத்து மகான்களுமே வலியுறுத்தும் கருத்து, இது.
ஸ்ரீராமகிருஷ்ணரும் அடிக்கடி இதைப் பற்றி பேசியிருக்கிறார். நாம் இந்த உலகத்திற்கு எதற்காக வந்தோமோ அந்த வேலையை மட்டும் பார்க்க வேண்டும். ஒரு மாந்தோப்பிற்கு மாம்பழம் சாப்பிடவெனப் போகிறோம். அங்கே போனதும் வந்த வேலையைக் கவனிக்காமல், அந்தத் தோப்பில் எத்தனை மரம், மரத்தில் எத்தனை கிளை, கிளையில் எத்தனை இலை, மரத்தில் எத்தனை பழம், இப்படி எண்ணிக் கொண்டிருந்தால் தோப்பின் சிறப்பு தெரியும்; ஆனால் அதனால் மாம்பழத்தின் ருசி எப்படித் தெரியும் என்பார்.
அதைப் போலத்தான் நாமும் பல விஷயங்களையும், இறைவனைப் பற்றியுமே கூட, அனுபவித்து அறிய முயலாமல், கற்று அறிவதில் மட்டுமே திருப்தி அடைந்து விடுகிறோம்.
நெய்யையே பார்த்திராத ஒருவருக்கு நெய்யின் ருசி எப்படி இருக்கும் என்று எப்படி விளக்க முடியும்? அதைப் பற்றி புத்தகங்களைப் படித்துத்தான் தெரிந்து கொள்ள முடியுமா? ஆனால் அதைக் கொஞ்சம் சாப்பிட்டுப் பார்த்து விட்டால் உடனே தெரிந்து விடுகிறது... இதுவும் குருதேவர் சொல்வதுதான்.
அதைப் போலத்தான் இறைவனும். அவன் படித்து அறியக் கூடியவன் அல்ல; உணர்ந்து அடைய வேண்டியவன் – இதுவும் அவனை அனுபவித்து அறிந்தவர்கள் கூறுவதுதான்.
வேதங்களையும் உபநிடதங்களையும் புராணங்களையும் இதிகாசங்களையும் இன்ன பிறவையும் கற்று அறிவதில் தவறில்லை. ஆனால் அவை எதற்காக ஏற்படுத்தப் பட்டனவோ, அதனை அடைய அந்த அறிவு பயன்படா விட்டால், அத்தனையும் கற்பதன் பயன்தான் என்ன?
வள்ளுவப் பெருந்தகையும் அதைத்தானே சொல்கிறார்:
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
அலுவலக வேலையாக நம்மை வெளியூர் அனுப்புகிறார்கள். வந்த வேலையை விட்டுவிட்டு ஜாலியாக ஊரைச் சுற்றிப் பார்த்துக் கொண்டிருந்தால் என்ன ஆகும்? வேலையை விட்டு தூக்கி விடுவார்கள் (நம்மூர் அரசாங்க உத்தியோகத்தைச் சொல்லவில்லை!). ஆனால்
நாம் பிறவி எடுத்ததன் காரணத்தை கவனிக்கா விட்டால் இந்த வேலையை விட்டு எங்கேயும் தப்பிச் செல்ல முடியாது! வந்த வேலையைக் கவனிக்கும் வரை திரும்பத் திரும்ப பிறந்து கொண்டே இருக்க வேண்டிதான் வரும்! ஜீரா ரொம்ப ருசி என்பதற்காக அதை மட்டும் சாப்பிட்டு விட்டு குலோப் ஜாமூனை சாப்பிடா விட்டால் எப்படி?!
அது சரி, குலோப் ஜாமூனை எப்படிச் சாப்பிடுவது என்று தெரியவில்லையே என்கிறீர்களா? அதற்கும் ஸ்ரீராமகிருஷ்ணர், கபீர், போன்ற அனைத்து மகான்களும் ஒரு சுலபமான வழியைச் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
அதுவே நாமஜபம்.
கலியுகத்திற்கு மிகவும் உகந்தது நாமஜபமே என்று ஸ்ரீராமகிருஷ்ணர் அடிக்கடி சொல்லுவார்.
இதைப் பற்றி கபீர் சொன்ன ஈரடிகள், கபீரன்பரின் தமிழாக்கத்தில், இதோ:
செபித்து செயங்கொள் மனமே, மெய்ஞான ரகசியமிதுவே
படித்தனை கிரந்தம் தினமே, அவை நூறு படிப்பதும் வீணே
அதனால், ஊரைச் சுற்றிக் கொண்டிருக்காமல், வந்த வேலையைக் கவனிப்போம்.
கவிநயான்னு பேர் வச்சுக்கிட்டு கவிதை சொல்லலைன்னா எப்படி, அப்படின்னு விருந்துக்கு அழைச்சவர் சொன்னதால…
இப்போ சொன்னதெல்லாம் சேர்த்து வச்சு…
இதோ ஒரு கவுஜ:
உன்னிப்பாய்க் கற்பார் பலநூல்;
மொழியெலாம் கற்று வந்து
மழையெனப் பொழிவார் அறிவை;
கலையெலாம் கற்று வந்து
உலகெலாம் பரப்புவார் புகழை.
சாதனை பலசெய் தாலும்
பழவினை அழிவ தில்லை;
எத்தனை கற்றறிந் தாலும்
இறைவனேட் டறிவினி லில்லை.
உள்ளுக்குள் உறையும் அவனை
உணர்வினில் அறிய வேண்டின்
கள்ளெனச் சுவைக்கும் நாமம்
உள்ளத்தில் ஊறிட வேண்டும்.
இப்பொருள் அப்பொரு ளெல்லாம்
பொய்மையின் வடிவே ஆகும்;
மெய்ப்பொருள் அறிவது ஒன்றே
மனிதர்க்கு மெய்யறி வாகும்!
(கபீர் இரண்டு அடிகளில் சொன்னதைச் சொல்ல, நமக்கு இத்தனை அடி வேண்டியிருக்கு!)
கபீரன்பர் அவர்கள் அளித்த வாய்ப்பிற்கு நன்றிகளுடன்…
அன்புடன்,
கவிநயா
----------------------------------------
மாம்பழத்தில் ஆரம்பித்து நெய், குலாப்ஜாமூன், ஜீரா வரை தித்திப்புச் சுவைகளை அள்ளித் தெளித்து விட்ட கவிநயா அவர்கள் கடைசியில் மனிதனுக்கு வேண்டிய 'கள்' ளையும் விட்டுவைக்கவில்லை :)))
இடுகை முழுவதும் தித்திக்கக் காரணம் இல்லாமல் இருக்க முடியாது.
இந்த வாரம் தீபாவளி !
அவருக்கும் வாசகர் அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.
அன்னை அருளில் திளைக்கும் கவிநயா அவர்களின் எழுத்து மேன்மேலும் அருட்சுவையை கவிதையாகவும் கட்டுரையாகவும் பரப்பட்டும் என்று வேண்டி வாழ்த்துவோம்.
டகடகடகடகன்னு ஒரே ஓட்டமா சொல்ல வந்ததைச் சொல்லிக்கிட்டே வந்துட்டார் அக்கா. :-)
ReplyDeleteகற்றதனால் ஆய பயன் என் கொல் குறளுக்கு மிக அருமையான விளக்கம். இந்த வகையில் எண்ணிப் பார்த்ததில்லை.
//டகடகடகடகன்னு ஒரே ஓட்டமா சொல்ல வந்ததைச் சொல்லிக்கிட்டே வந்துட்டார் அக்கா. :-)//
ReplyDeleteஅடடா... இன்னும் கொஞ்சம் நிதானமா சொல்லியிருக்கணுமோ :( அடுத்து இந்த மாதிரி ஏதாச்சும் எழுதினா, ஓடாம நடந்து வரப் பார்க்கிறேன்... :)
//கற்றதனால் ஆய பயன் என் கொல் குறளுக்கு மிக அருமையான விளக்கம். இந்த வகையில் எண்ணிப் பார்த்ததில்லை.//
நன்றி குமரா.
//அதுவே நாமஜபம்.
ReplyDeleteகலியுகத்திற்கு மிகவும் உகந்தது நாமஜபமே என்று ஸ்ரீராமகிருஷ்ணர் அடிக்கடி சொல்லுவார்.//
அருமையான குலாப்ஜாமூன் .
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் கவிநயா.
நல்ல விளக்கம் கவிநயா..
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள்..
//அருமையான குலாப்ஜாமூன் .//
ReplyDeleteமிக்க நன்றி கைலாஷி.
//இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் கவிநயா.//
நன்றி. தீபாவளி நல்வாழ்த்துகள் உங்களுக்கும் :)
//டகடகடகடகன்னு ஒரே ஓட்டமா சொல்ல வந்ததைச் சொல்லிக்கிட்டே வந்துட்டார் அக்கா. :-)//
ReplyDeleteஇதைத்தான் விறுவிறுப்பான எழுத்து நடை என்பார்களோ ? :)
//நல்ல விளக்கம் கவிநயா..//
ReplyDeleteநன்றி முத்துலெட்சுமி.
//தீபாவளி வாழ்த்துக்கள்..//
உங்களுக்கும் :)
//இதைத்தான் விறுவிறுப்பான எழுத்து நடை என்பார்களோ ? :)//
ReplyDeleteஅதான் நடையே இல்லை, ஓட்டம்னு சொல்லிட்டாரே :(:)
நீங்க வாசிச்சப்ப அப்படித் தெரியலையா? :)
தீபாவளிக்கு முன்னாலேயே தித்திப்பு தந்தாச்சு!
ReplyDeleteதீமையெல்லாம் போகவும் கற்றதைத் தந்தாச்சு!
கற்றதினால் ஆய பயன் இதுதானோ!
நன்றிகள்!
//தீபாவளிக்கு முன்னாலேயே தித்திப்பு தந்தாச்சு!
ReplyDeleteதீமையெல்லாம் போகவும் கற்றதைத் தந்தாச்சு!
கற்றதினால் ஆய பயன் இதுதானோ!
நன்றிகள்!//
வாங்க ஜீவா. கவிதையா இருக்கு, பின்னூட்டம் :) நன்றிகளும், இனிய தீபாவாளி வாழ்த்துகளும்.
iniya deepavaLi vaazthukkaL!
ReplyDeletekavi-kka kabir kavi!
//சாதனை பலசெய் தாலும்
பழவினை அழிவ தில்லை;
எத்தனை கற்றறிந் தாலும்
இறைவனேட் டறிவினி லில்லை.//
//iniya deepavaLi vaazthukkaL!
ReplyDeletekavi-kka kabir kavi!//
வாசித்தமைக்கு நன்றி கண்ணா :)
அருமையான பதிவு, கவிநயா. தீபாவளிக்குப் பல பலகாரங்கள் உண்டது போல் உணர்வு.
ReplyDeleteபல வருடங்களாகச் சாதனை செய்ததில், அவருக்கு ஒரு அற்புதமான சித்தி கிடைத்ததாம்.//
இந்த வரில வர்ர சித்தி ங்கற வார்த்தையைப் படிச்சுட்டு, கொஞ்சம் தலை சுத்தி போயிட்டேன்... :-))
மன்னிச்சுக்குங்க... :-)
-முகிலரசி
அனைவருக்கும் தீப ஒளித் திருநாள் நல்வாழ்த்துகள்! :-)
ReplyDelete//இந்த வரில வர்ர சித்தி ங்கற வார்த்தையைப் படிச்சுட்டு, கொஞ்சம் தலை சுத்தி போயிட்டேன்... :-))//
ReplyDeleteபின்னூட்டியதிலிருந்து திரும்ப எழுந்துட்டீங்கன்னு நிம்மதியாயிட்டேன் :)
"siddhi" அப்படின்னு அடைப்புக் குறிக்குள் போட்டிருந்திருக்கணும் போல. மன்னிச்சுக்கோங்க.
வாசித்தமைக்கு நன்றி முகிலரசி. தீபாவளி வாழ்த்துகள் உங்களுக்கும்.
அருமை, தித்திப்பான பதிவிற்கு நன்றி கவிநயா. வாழ்த்துக்கள் கபீரன்ப.
ReplyDelete//அருமை, தித்திப்பான பதிவிற்கு நன்றி கவிநயா.//
ReplyDeleteரசித்தமைக்கு நன்றிகள் தேனீ :)
அக்கா,
ReplyDeleteஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லிக்கறேன்.
Glory to Mr.Sarada Devi !! :-)
~
Radha
என்னடா இது, இன்னும் ராதாவைக் காணுமேன்னு நினைச்சிக்கிட்டிருந்தேன் :)
ReplyDelete//ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்லிக்கறேன்.
Glory to Mr.Sarada Devi !! :-)//
அதே...அதே. :)
வருகைக்கு நன்றி ராதா.
சிறப்பு விருந்தினர் கவிநயா அருமையான விருந்து படைத்துள்ளார்.
ReplyDelete//மெய்ப்பொருள் அறிவது ஒன்றே
மனிதர்க்கு மெய்யறிவாகும்!//
கவியாவின் எழுத்து வண்ணம் அருமை.
கவிநயாவின் எழுத்து மேன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
கபீரன்பனுக்கும் வாழ்த்துக்கள்.
//கவிநயாவின் எழுத்து மேன் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.//
ReplyDeleteஉங்களின் அன்பான ஆசிகளுக்கு மனமார்ந்த நன்றிகள், கோமதி அரசு.
இப்பொழுது தான் பார்க்கவும் படிக்கவும் முடிந்தது.
ReplyDeleteசொல்ல நினைப்பதை சொல்ல முடிந்த அளவு கவிதையில் சொல்ல முடிவதும் சிறப்பு தான்.
வாழ்த்துக்கள்.
/ உள்ளுக்குள் உறையும் அவனை
ReplyDeleteஉணர்வினில் அறிய வேண்டின்
கள்ளெனச் சுவைக்கும் நாமம்
உள்ளத்தில் ஊறிட வேண்டும்.//
கள்ளைச் சுவைத்ததில்ல
இருந்தாலும்
கவி நயாவின் கவிதைகளைக்
காணும்போதெல்லாம்
உள்ளம் உருகிடுதே !
உன்மத்தமாகி
உய்ய வழி தேடிடுதே !!
சுப்பு ரத்தினம்.
//இப்பொழுது தான் பார்க்கவும் படிக்கவும் முடிந்தது.
ReplyDeleteசொல்ல நினைப்பதை சொல்ல முடிந்த அளவு கவிதையில் சொல்ல முடிவதும் சிறப்பு தான்.
வாழ்த்துக்கள்.//
நீங்கள் வாசித்ததில் மிக்க மகிழ்ச்சி ஜீவி ஐயா. நன்றி.
//கவி நயாவின் கவிதைகளைக்
ReplyDeleteகாணும்போதெல்லாம்
உள்ளம் உருகிடுதே !
உன்மத்தமாகி
உய்ய வழி தேடிடுதே !!//
வாங்க தாத்தா. பெரிய வார்த்தையெல்லாம் சொல்றீங்களே :) எல்லாம் உங்களைப் போன்ற பெரியோர்களின் ஆசிதான். வாசித்தமைக்கு நன்றிகள் பல.