Saturday, June 28, 2008

வனமெல்லாம் சிம்மத்தின் வசம்

எங்களுக்கு நெருங்கிய குடும்ப நண்பர், ஒரு பெண்மணி. மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் விற்பனைத்துறையில் வைஸ் பிரசிடெண்ட். மாதத்தில் பெரும்பாலான நாட்கள் வேலை விஷயமாக வெளியூர் பயணம் தான். அண்டை வீடே ஆனாலும் சந்தித்துக் கொள்வது வாரத்தில் ஓரிருமுறைதான்.

ஒருநாள் காலையில் அலுவலகம் கிளம்பும்வேளை, அவர் வாசலில் அறிமுகம் இல்லாத சிலரோடு மிகவும் காராசாரமான விவாதம் செய்வது கேட்டது. அருகே சென்று விவரம் கேட்டபோது அவர்கள் வீடு தேடி வந்து வசூல் செய்ய முற்படும் கிரடிட் கார்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது புரிந்தது. வந்தவர்களின் நடத்தையும் பேச்சும் மிக தரக்குறைவாக இருந்தது.

பிரச்சனை என்னவென்றால் இரண்டு மாதங்களுக்கான தவணைக் கட்டப்படவில்லை என்பது தான்.

பாவம் அவர். தன்னுடைய அலுவலக உதவியாளரை நம்பி விட்டிருந்த வேலை, செய்யப்படாமல் விடுபட்டிருந்ததால் வந்த வினை.

இவர், 'முழு விவரமும் தெரிந்து கொண்டு பிறகு கட்டச் சொல்கிறேன்' என்றால் வந்தவர்கள் அதற்கு ஒப்புக் கொள்வதாக இல்லை.

“சீ ! ஏதோ ஒரு மாசம் விட்டுப் போச்சுனா இப்படிதான் ஆள அனுப்பிச்சு ஸீன் கிரியேட் பண்ணனுமா? கேக்குறதலையும் ஒரு டீஸென்ஸி வேண்டாம். கூண்டாவை வச்சு வசூல் பண்றாங்க. கார்டு வேண்டாம்னாலும் நூறு தடவை ஆபீசுக்கும் வீட்டுக்கும் வந்து கால்ல விழுந்து கெஞ்ச வேண்டியது. எப்பவோ ஒரு சின்ன தப்பு நடந்தா இப்படி அசிங்கப்படுத்தறது. முதல்ல இந்த கார்டை கேன்ஸல் பண்ணச் சொல்றேன்” என்று பொருமிக் கொண்டே சென்றார்.

இப்பொழுதெல்லாம் வங்கிகள் வெளியார் துணையோடு( out sourcing) தவணைகளை வசூலிக்கின்றனராம்.

அதனால் வந்த தரக்கேடு இது.

கடன் வாங்காத வரையில் ஒருவன் ராஜா. ஏதேனும் காரணத்தால் வண்டிக்காகவோ, வீட்டிற்காகவோ கடன் வாங்கி தவணை செலுத்துவதில் இடர் ஏற்பட்டால் கடன் கொடுத்தவரின் ஏச்சுகளை கேட்டு மனம் துன்பப்படுகிறது.

இந்த மாயையும் அப்படித்தான். முதலில் நம்மைச் சுற்றி ஒரு சுகமான உலகை சிருஷ்டிக்கிறது. மயக்கம் நீடிக்கிறது. தவறுகள் ஏற்படுகின்றது. பின்னர் திரை சிறிது சிறிதாக விலகி தன் கோர சொரூபத்தை காட்டுகிறது. ஏனிப்படி என்றால் ”எல்லாம் நீயே வரவழைத்துக் கொண்டது” என்று பதில் வருகிறது. என்ன விசித்திரம் இந்த உலகம்! எனவேதான் கவிஞனுக்கு கோபம் உண்டாகிறது. பாரதியின் சீற்றத்தைப் பாருங்கள்.

என்னைக் கெடுப்பதற்கு எண்ணமுற்றாய்
கெட்ட மாயையே!- நான்
உன்னைக் கெடுப்பது உறுதி என்றே
உணர் -மாயையே
................
நீ தரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ
மாயையே- சிங்கம்
நாய் தர கொள்ளுமோ
நல்லரசாட்சியை -மாயையே

ஞானிகளுக்கு இத்தகைய சஞ்சலங்கள் எதுவும் கிடையாது. அவர்கள் உலகை நாடக மேடையாகக் காண்பதால் சுகமும் துக்கமும் மாறி மாறி வந்து செல்லக் கூடிய காட்சிகள் என்பதை அறிவார்கள். அவர்களின் ஒரே குறிக்கோள் இறைவனின் சாட்சாத்காரம் ஒன்றுதான்.

ஒரு சிங்கத்தை தன்சொற்களால் பசப்பி புவனம் என்கிற பாழ் கிணற்றிலே தள்ளப் பார்க்கும் முயல் போல மாயையின் லீலையே மற்றவையெல்லாம் என்பதை அவர்கள் முற்றும் உணர்ந்தவர்கள். எனவே கபீர் நமக்கு பழக்கமான கதையை சொல்லியே இதை புரிய வைக்கப் பார்க்கிறார்.

अकिल बिहूना सिंह, ज्यौं गया ससा के संग ।
अपनी प्रतिमा देखि के, कियो तन के भंग ॥


அகில் பிஹூனா ஸிம்ஹ், ஜ்யோவ் கயா ஸஸா கே ஸங் |
அப்னீ ப்ரதிமா தேகி கே , கியோ தன் கே பங்க் ||


வனமெலாம் சிம்மத்தின் வசம், சென்றது செவியன் சொல்வசம்
மனம்மருளும் பிம்பத்தின் வசம், பின் இல்லை தேகம் அதன்வசம்

(செவியன்= முயல்)

எதற்கும் அஞ்சாத சிங்கத்திற்கும் மன மயக்கம் ஏற்பட்டு புத்தி தடுமாறுகிறது. அந்த தடுமாற்றத்திற்கு காரணம் பொய்யை உண்மையென நம்பியதே காரணம். உலகில் வாழ்க்கை நடத்தும் பொழுது நமக்கு பலவகையான தடுமாற்றங்கள். எது நல்லது, எது கெட்டது என்று புரியாத நிலை. இறைவனே யாவும் என்ற விவேகத்தை உறுதியாகப் பற்றி கொள்ளத் தெரியாத மடமை.

ஆகையால் சிங்கத்தை போல சுதந்திரமாக தலைநிமிர்ந்து நடைபோட வேண்டிய மனிதன் ஆடுகளைடையே வளர்ந்த சிங்கக்குட்டி போல மந்தையோடு நடை போடுகிறான். மே... மே என்று ஆடுகளைப் போலவே கையாலாகதவன் போல் கத்தித் திரிகிறான்.

அப்போது, சிங்கம் போன்று, தன்னை உணர்ந்த குரு வந்து “ நீ ஆடு அல்ல சிங்கம்” என்று நம்பிக்கை ஊட்டுகிறார். கர்ஜிக்க கற்றுக் கொடுக்கிறார். அப்படி ஒரு கர்ஜனையை இங்கே கேளுங்கள்.

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்
இன்பமே யெந்நாளும் துன்பமில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரன் நற்சங்க வெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச் சேவடி இணையே குறுகினோமே

(நடலை=பொய்மை; ஏமாப்பு = மகிழ்ந்திருத்தல்; மீளா ஆளாய்= எந்நாளும் அடிமையாய் ; கொய் மலர் = புதிதாக மலர்ந்த மலர்; குறுகினோமே=அடைந்தோமே)

சமணத்தைத் துறந்து சைவநெறியை தழுவிய நாவுக்கரசரை விசாரிக்கும் பொருட்டு அரசன் அழைப்பு அனுப்புகிறான். அழைப்பை ஏற்க மறுத்த அப்பர் பெருமான் கூறிய பாடல் இது.

அந்த தன்னம்பிகை எங்கிருந்து வந்தது? இறைவனே எல்லாம் என்ற மனத்தெளிவே காரணம். வேறொன்றையும் எதிர்பார்க்காத மனப்பக்குவம்.

அத்தகைய மனத்தெளிவு நமக்கும் வந்துவிட்டால் முயலிடம் அகப்பட்ட சிங்கம் போல் அவதிப்பட வேண்டியதில்லை. எதற்கும் அஞ்சாத சிங்கமாய் இவ்வுலகில் சுற்றி வரலாம்.

11 comments:

  1. என் தற்போதைய மனநிலைக்கு தேவையானதைச் சொல்லி எனக்கு உதவியிருக்கீங்க :) அழகாக பெரியோருடைய பாடல்களை ஒன்றுக்கொன்று இணைத்து. மிக்க நன்றி. மறுகி மறுகி மாயைத் தழுவும் மனம், மயக்கம் விலக்கி இறைவனடி பற்ற அவன்தான் அருளல் வேண்டும்.

    ReplyDelete
  2. //இந்த மாயையும் அப்படித்தான். முதலில் நம்மைச் சுற்றி ஒரு சுகமான உலகை சிருஷ்டிக்கிறது. //
    இதற்குத்தான், வள்ளுவப் பெருந்தகை,
    இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன்
    என்றாரோ!
    இந்த கடன் உவமை - நாமாக சிக்கிக்கொள்வது போன்றது. நாமாக சிக்கிக்கொள்ளவிட்டாலும், அந்த பரசிவத்திடமிருந்து பிரிந்து பிறந்த போதே, மாயவலையில் சிக்கிக்கொண்டோம் எனக்கொண்டால், விடுபடுவதெப்படி?
    விடையும் கீழே இருக்கிறது:
    //அப்போது, சிங்கம் போன்று, தன்னை உணர்ந்த குரு வந்து “ நீ ஆடு அல்ல சிங்கம்” என்று நம்பிக்கை ஊட்டுகிறார். கர்ஜிக்க கற்றுக் கொடுக்கிறார்.//

    ReplyDelete
  3. நன்றி கவிநயா

    //...இறைவனடி பற்ற அவன்தான் அருளல் வேண்டும் //

    அவனருளால் தானே ஆன்மீகப் பக்கங்களை தேடிப் படிக்கும் ஆர்வம் இருக்கிறது. அப்புறம் என்ன? அதுவே மேலே அழைத்துச் செல்லும் :))

    ReplyDelete
  4. வாங்க ஜீவா,

    இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள்
    துன்பம் உறுதல் இலன்


    மிகவும் பொருத்தமான மேற்கோள் எடுத்துச் சொல்லியுள்ளீர்கள். நன்றி.

    ReplyDelete
  5. // ஞானிகளுக்கு இத்தகைய சஞ்சலங்கள் எதுவும் கிடையாது. அவர்கள் உலகை நாடக மேடையாகக் காண்பதால் சுகமும் துக்கமும் மாறி மாறி வந்து செல்லக் கூடிய காட்சிகள் என்பதை அறிவார்கள். அவர்களின் ஒரே குறிக்கோள் இறைவனின் சாட்சாத்காரம் ஒன்றுதான்.//

    அழகாக எடுத்துரைத்தீர்கள். தான் ஞானி ஆனாலும் சம்ஸாரத்திற்கு (வ்யவஹாரிக‌
    லோகத்திற்குத் ) திரும்பி வருபவர்கள் ஞானிகள் ஆவார்களா என்ற ஒரு சம்சயம்
    இப்பொழுது தான் எனது பதிவினில் மேற்கோள்களுடன் காரசாரமாக விவாதிக்கப்பட்டது.
    http://vazhvuneri.blogspot.com
    என்னைப் பொருத்த வரையில், ஞானிகளுக்கு சஞ்சலம் என்பது ஒரு terminological inexactitude .
    கொல்லம்பட்டரையிலே ஈயா என்பர் அந்த காலத்திலே !

    நாயமாத்மா பலஹீனேன லப்யஹ (இந்த ஆத்மா பலமில்லாதவர்களால் பெறப்படுவதில்லை ) என்கிறது முண்டகோபனிஷதம். பலம் எது ? அவர்களிடத்தில் உள்ள நம்பிக்கைதான். ( Firm Faith ) ஞானிகளின் முதல் குண விசேஷம் முழு நம்பிக்கை. எதன்மேல் ? தான் அடைந்தது தான்
    தெளிவு, ஞானம் என்ற வகையில் தெளிவாக இருப்பவர். தாயுமானவர் சொன்னது போல " ஓடும் இரு நதியும் ஒன்றாகக்
    கண்டவர்கள் ஞானிகள். இவர்தமக்கு பார்த்த இடமெல்லாம் பரவெளியாய் தோன்றும் ". "நான் சிங்கமாகிவிட்டேன், எனக்கு நாய்கள் தரும் அரசு தேவையில்லை என்பர் .அவர் சொல்வது அவர்களது தெளிவில் உள்ள
    உறுதியைக்காண்பிக்கிறது.

    சொற்றுணை வேதியன் சோதிவானவன்
    நற்றுணை திருந்தடி திருத்தக்கை தொழக்
    கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்
    நற்றுணையாவது நமச்சிவாயமே .

    என்று இறுதி பயக்கினும் அஞ்சாது, ஓர் திடமான உறுதியுடன் சித்தத்துடன் இருப்பவர்களுக்கு
    சஞ்சலம் ஏனோ ?

    இருப்பினும், ஒரு சரீரத்துடன் இருப்பதால், சரீரத்துடன் தொடர்புடைய சில கர்மங்களையும்,
    அது தரும் சஞ்சலங்களையும் அனுபவித்துத் தான் தீர வேண்டும், எனவும் தோன்றுகிறது.

    மாணிக்கவாசகர் ( அவர்தான் என நினைக்கிறேன்) குதிரை வாங்கின கதை உதாரணம்.
    இறைவன் தனக்குக் கோவில் கட்டு எனச் சொன்னான். சரி. அதற்கு அவர் கையில் இருக்கும்
    பொருளை அது தனதா பிறருடையதா என யோசிக்கவும் இல்லாது, இறை பக்தி பரவசத்தால்
    தூண்டப்பட்டுப் பின் அவதிக்குள்ளானார். இறைவனும் அவரைக் காப்பாற்றி அவரைத்
    தண்டித்த அரசனைத் தண்டிக்கிறார். இருப்பினும் இன்னலுக்கு உள்ளானார் இல்லையா ?

    சஞ்சலம் அற்று எல்லாம் நீதான் என்று உணர்ந்தேன் என்
    அஞ்சலியும் கொள்ளாய் அரசே பராபரமே .. தாயுமானவர்.

    இந்த சஞ்சலமும் சென்ற பின் அதுவும் வினைப்பயன் என்று கருதித் தான் உணர்ந்தது
    அவனே என நிலைத்து நிற்பவரே ஞானிகள்.

    கபீரான் பதிவு எப்பொழுதும் எனக்குக்
    காலைக் கதிரவனின் முதற் சுடர் விளக்கு.

    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.
    வாருங்கள்:
    http://vazhvuneri.blogspot.com
    பின்னோட்டங்களையும் படித்து ஒரு ஞானியின் நிலையென்ன எனத்
    தாங்கள் சொல்லவேண்டும்.

    ReplyDelete
  6. அன்பரே,
    கபீர் தாசரின் சரிதம் ஸ்ரீ மஹா பக்த விஜயத்தில் இடம் பெறுகிறது.
    அவர் தம் பாக்கள் க்ரந்த சாகேப் ல் தொகுக்கப்பட்டுள்ளன.
    அவற்றில் ஹிந்துச் சிந்தனைக் கூறுகளையே மிகுதியாகக் காண முடிகிறது.
    இதன் காரணத்தால் அவர் மொஹமதியர்களால் ஒதுக்கப்பட்டார் என்றும் கூறுகின்றனர்.
    அவர் சுவாமி ராமானந்தரால் ஏற்கப்பட்ட போதிலும் ஹிந்து சமுதாயம் அவருக்கு முழு மரியாதையையும் ஏன் தரவில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது.
    ரஸ்கான் பெற்ற மதிப்பு அவருக்கு இல்லை. காரணம் கூற இயலுமா?
    தேவராஜன்

    ReplyDelete
  7. வருக தேவராஜன்,

    //...ஹிந்து சமுதாயம் அவருக்கு முழு மரியாதையையும் ஏன் தரவில்லை என்பது புரியாத புதிராகவே உள்ளது.//

    நான் ரஸ்கான் பற்றி அதிகம் அறியேன். அவர் கிருஷ்ணபக்தியில் ஆழ்ந்து விட்டிருந்தவர் என்று மட்டும் அறிகிறேன். பக்தி என்பது தனிப்பட்ட அளவில் இருக்கும் போது யாரும் அதிகம் பொருட்படுத்துவதில்லை. ஆகையால் இந்துகளுக்கு அவரை ஏற்றுக் கொள்வதில் சிரமம் இருந்திருக்காது.

    ஆனால் கபீரோ உண்மையை சொல்லும் ஒரு சீர்திருத்தவாதியாகவும் மாறிவிட்டார். இருமதங்களிலும் காணப்பட்ட குறைபாடுகளை வெளிப்படையாக இடித்துரைத்தார். எனவே அவரை இரு மதத்தாரும் நிராகரித்ததில் வியப்பில்லை. கபீர் வழியை பின்பற்றியவர்களை ”கபீர் பந்தி” என்று சொல்வர். அந்த வழியை குருநானக் பின்பற்றியதால்தான் கிரந்த் சாகேப்-ல் பெருமளவில் கபீரின் பாடல்களும் தோஹாக்களும் காணப்படுகின்றன. எனவே தான் காசியை விட அமிருத்ஸரில் கபீர் அதிக அளவில் பாடப் பெறுகிறார்.

    ReplyDelete
  8. நன்றி சுப்புரத்தினம் ஐயா,

    //...இருப்பினும் இன்னலுக்கு உள்ளானார் இல்லையா ?//

    அவரவர் வினை வழியவர் வந்தன;
    அவரவர் வினை வழியவர் வருபன; ...
    என்பது சிவபோக சாரம்.

    (அவரவர் வினை அவர் வழி வந்தன
    அவரவர் வினை அவர் வழி வருபன என்று பிரித்துப் படிக்கவும்.)

    ஆகையால் பக்தனுக்கு முன்வினைப் பயனாக வரக்கூடிய துன்பத்தை உலக நன்மைக்காக இறைவன் அவன் புகழை உயர்த்தும் வகையில் மாற்றியமைத்து யாவரும் உய்வதற்கு வழி செய்கிறான் என்று பொருள் கொண்டால் இதில் முரண்பாடு தோன்றாது என எண்ணுகிறேன்.

    நீங்கள் முன்பு கூறியதே முற்றிலும் உண்மை.

    ///..அது தரும் சஞ்சலங்களையும் அனுபவித்துத் தான் தீர வேண்டும், எனவும் தோன்றுகிறது ///

    ReplyDelete
  9. கர்மாவை தொலைப்பதென்னா அத்தனை இலகுவா... என்று கேள்வி எழுந்தாலும் யேசுதாஸ் தன் அருமையான குரலில் கூறுவார் அது எங்கணம் என்று..
    அழகர் மலையில் நல் மனமோடி விளையாடும் ... என்று தொடங்கும் பாடலில் வரும் இந்த வரிகள் பொன்னால் பொறிக்கப்படவேண்டியவை...
    "கை தொழுது கர்ம வினைகள் மன்றாடும் கைவிடாதே கண்ணா என்று சொல்லும்......" அவனின்று யாருண்டு இதற்கு...

    ReplyDelete
  10. வருக கிருத்திகா,

    //"கை தொழுது கர்ம வினைகள் மன்றாடும் கைவிடாதே கண்ணா என்று சொல்லும்......" அவனின்று யாருண்டு இதற்கு... //

    கர்மவினைகள் மன்றாடுகின்றனவா ?! ரொம்ப சுவாரசியமாக இருக்கிறதே. நான் இந்த பாடலை கேட்டதில்லை.

    முழுபாடலையும் உங்கள் பதிவாக போட்டுவிடுங்கள். எல்லோருக்கும் பயனளிக்கும்.
    நன்றி

    ReplyDelete
  11. அருமை... தவணை வசூல்....... உண்மையான நிலைமை.....

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி