Showing posts with label பாரதியார். Show all posts
Showing posts with label பாரதியார். Show all posts

Thursday, August 20, 2009

நல்லோர் நாடும் மோனநிலை

கிராமத்திலே உறவினர் குடும்பத்தில் ஒரு விசேஷம். அழைப்பை ஏற்று பரிவார சமேதராகி யாவரும் போனோம். திறந்த மனதுடன் அங்குள்ளவர் சிலர் வீடுகளிலேயே தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.(அங்கே லாட்ஜ்-க்கு எங்கே போவது) இரண்டு நாட்களும் ஊரே திரண்டு தம் வீட்டு விழாவைப் போலவே எல்லா வேலைகளிலும் ஈடுபடுத்திக் கொண்டது மகிழ்ச்சியை தந்தது. இந்த கூட்டு முயற்சியில் மிகப் பெரும் பங்கு விருந்து தயாரிப்பதிலும், பரிமாறுதலு தான். கடைசியில் எல்லாமே வயிற்றைப் பற்றிய கவலைதானே !

ஊர் பெண்மணிகள் ஒன்றாய் திரண்டு கறிகாய் நறுக்குதல், தேங்காய் துருவுதல், அண்டை எதிர் வீடுகளில் இலை போட்டு, இலை எடுப்பது போன்ற காரியங்களை கவனித்துக் கொண்டனர். ஆண்கள் சமைப்பதற்கும் பரிமாறுதலுக்கும் பொறுப்பெடுத்துக் கொண்டனர். கறிகாய் நறுக்கும் காலத்தில் பல பக்தி பாடல்கள் பாடுவதும், பல சமையற்கலை நுணுக்கங்களை விவாதிப்பதும் கலகலப்பாயிருந்தது. ஆனால்உள்ளே சமயலறையில் ஓரிருவரே நின்று அடுப்பைக் கவனித்துக் கொள்வதும், தயாராகும் உணவின் பக்குவத்தைக் கண்காணிப்பதுமாக அமைதியாக வேலை நடந்து கொண்டிருந்தது.

விழா முடிந்து விடைபெறுகையில் ’சாப்பாடு ரொம்ப பிரமாதம்’ என்று யாவரும் தனித்தனி்யேப் பாராட்டினர்.

பிரமாதம் என்று பாராட்டும் பொழுது அது தனிமனிதன் அனுபவத்திலிருந்து வருகிறது. ஆனால் அதில்தான் எத்தனை பேர்களுடைய பங்களிப்பு இருக்கிறது ! இது நடைமுறையில் நமது அனுபவம்.

ஞானமார்க்கத்திற்கும் இது வெகுவாகவே பொருந்தும். சத்சங்கங்களில் பல வழிகளைப் பற்றிய தர்க்கமுண்டு, ஞானிகளின் அனுபவங்கள் பற்றி சர்ச்சை யுண்டு. இவை கறிகாய் நறுக்குதல், தேங்காய் துருவுதல் போன்ற ஆரம்ப நிலை முனைப்புகள். பின்னர் குருவை அடைந்து அவரிடம் பெறும் வழிகாட்டுதல் உபதேசம் சமையலறைப் போல ஓரிருவருக்கே உரிய இடம் ஆகும். சமைத்த பொருளின் கடைசியாக ருசித்த அனுபவம் தனி ஒருவனுடையதாகவே இருக்கிறது. அந்த அனுபவம் ஆழ்ந்த மோனத்தில் பெறுவது.

இந்த வெவ்வேறு நிலைகளை கபீர்தாஸரும் உறுதி செய்கிறார்.

चर्चा करु तब चौहटे, ज्ञान करो तब दोय ।
ध्यान धरो तब एकिला, और न दूजा कोय ॥


பலர்கூடின் தருக்கம் செய்மின், இருவரானால் ஞானத்தில் தேர்மின்
தனிமையில் தியானம் செய்மின், வேறெவரும் வேண்டா தெளிமின்

(சௌஹட் என்றால் நாற்சந்தி. பலரும் கூடும் இடம் என்று கொள்ளலாம்)

மாற்று :

தருக்கத்திற் குத்தேவை நால்வர், தேடுகின்ற ஞானத்திற் கிருவர்
பரமோ னத்திற்கு ஏகாந்தமே, தேவையு மில்லை இன்னொருவர்


சத்சங்கம் கூடி பலநல்வழிகளை விவாதித்து பரிசீலிப்பது ஆரம்ப முனைப்புகள்.
பிறகு குருவும் சீடனுமாகி இருவரே பகிர்ந்து கொள்ளும் ஞானத்தேடல். அதன் அடுத்த கட்டமாக ’பேசுவதால் பயனில்லை அனுபவத்தால் அறி’ என்பதைக் காட்டும் தியான மார்க்கம். இங்கே முன்னேற்றம் என்பது அவரவர் முயற்சியைப் பொறுத்தே அமையும். ஒருவருக்காக இன்னொருவர் எப்படி உண்ண இயலாதோ அப்படி குரு காட்டிய வழியில் தனியனாகவே பயணத்தை நடத்த வேண்டும் என்று கபீர் உணர்த்துகிறார்.

அறிந்ததை -அல்லது கற்றதை -உள்வாங்கி உண்மையை அறியும் அந்த பயிற்சி தனிமையிலே தியானத்திலே செய்ய வேண்டியது. பாரதியாரும் குள்ளச்சாமி தனக்கு தரும் உபதேசமாக அதைக் குறிப்பிடுகிறார்.

பக்கத்து வீடிடிந்து சுவர்கள் வீழ்ந்த
பாழ்மனையொன் றிருந்ததங்கே; பரமயோகி
ஒக்கத்தன் அருள்விழியால் என்னை நோக்கி
ஒரு குட்டிச் சுவர் காட்டிப் பரிதி காட்டி
அக்கணமே கிணற்றுள் தன் விம்பங்காட்டி,
”அறிகொலோ!” எனக்கேட்டான். அறிந்தேன் என்றேன்
மிக்கமகிழ் கொண்டவனும் சென்றான், யானும்
வேதாந்த மரத்திலொரு வேரைக் கண்டேன்.

தேசிகன் கை காட்டி எனக்குரைத்த செய்தி
செந்தமிழில் உலகத்தார்க் குணர்த்து கின்றேன்’
“வாசியை நீ கும்பகத்தால் வலியக் கட்டி,
மண்போலே சுவர் போலே வாழ்தல் வேண்டும்;
தேசுடைய பரிதியுருக் கிணற்றினுள்ளே
தெரிவது போல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்;
பேசுவதில் பயனில்லை.அனுபவத்தால்
பேரின்பம் எய்துவதே ஞானம்” என்றான்
.

பேசுவதில் பயனில்லை என்பதை தாயுமானசுவாமிகளும் உணர்த்துகிறார்.

நேராயம் மௌன நிலை நில்லாமல் வாய்பேசி
ஆராய் அலைந்தீர்நீர் ஆகெடுவீர் தேரீர்
திரையுந் திரையுநதிச் சென்னியனை நாவால்
கரையுங் கரையும் மனக்கல்


(நாவால் கரையும் = இறைவன் புகழை செபித்தல்; திரையுந் திரையுநதி சென்னியனை = அலைபொங்கும் கங்கையை தன்னுள் அடக்கியவன்)

கல்போன்ற மனதை கரைக்க வல்லது இறைவன் நாமம். அதற்குத் தேவை முழு சரணாகதி பக்குவம். அதனையே ”தேடுகின்ற ஞானத்திற் கிருவர்” என்று குருவின் அவசியத்தை கபீர் உரைக்கிறார். குரு கிருபை இருந்துமே பரமோனம் சுயமுயற்சி இல்லாமல் கைகூடாது என்பதையும் தாயுமானவர் பாடுகிறார்

எல்லாமே மோன நிறை எய்துதலால் எவ்விடத்தும்
நல்லோர்கள் மோன நிலை நாடினார் -பொல்லாத
’நான்’ என இங்கொன்றை முளைக்க விட்டு இங்கு
ஏன் அலைந்தேன் மோன குருவே.


‘நான் என ஏன் அலைந்தேன்’ என்னும் பிரச்சனைக்கு முடிவு ’மௌனமே’ ஆகும். பேசினால் தர்க்கம் வருகிறது. தர்க்கத்தில் ’நான்’ தலையெடுக்கிறது. அதன்பின்னும் அது மனதை விட்டு அகலாமல் களைச் செடி போல உறுத்திக் கொண்டே இருக்கிறது. களையெடுத்தல் தியான நிலையில் மட்டுமே சாத்தியம்.

ஆரம்பத்தில் தியான முயற்சிகள் சுய பரிசோதனைக் களமாக இருப்பினும் நாளாவட்டத்தில் களைகள் போன பரிசுத்த நிலையில் இறைவன் பால் அன்பு மிகுத்து ’காதலாகி கசிந்து கண்ணீர் மல்க’ வைக்கும்.

மோனத்திலேதான் உண்மையான பக்தியும் ஞானமும் மலர்கின்றன. அது கைகூடாதவரை சாதகனின் முயற்சிகள் எல்லாம் விசாரமாகத்தான் இருக்குமே ஒழிய் அனுபவமாக இருக்காது. அதை சுட்டிக்காட்டத்தான் பராபரக்கண்ணியிலும் தாயுமானவர் தன் விண்ணப்பத்தை முன் வைக்கிறார்

மோனந்தரு ஞானமூட்டி எனக்கு வட்டா
ஆனந்த வாழ்க்கை அருளாய் பராபரமே


தியானத்தை தனிமையில் செய் என்ற கபீரின் உபதேசத்தை கடைபிடித்த சிறுவனின் கதையைக் காண்போம்.

நன்றி : தினமலர் (28/12/2008) - வைரம் ராஜகோபால்

பகவானை வழிபட தபஸ் செய்வதற்காக காட்டுக்குச் சென்றான் துருவன். அவனை சந்தித்தார் நாரதர். "எங்கே போகிறாய்? எதற்காகப் போகிறாய்?' என்று கேட்டு விட்டு, "தபஸ் ரொம்ப சிரமமாயிற்றே! நீ சிறுவனாயிற்றே. இதெல்லாம் உன்னால் முடியாது; வீட்டுக்குப் போ...' என்று சொல்லிப் பார்த்தார். ஆனால், "தவம் செய்து பகவானை தரிசிக்கப் போகிறேன்!' என்று பிடிவாதமாகச் சொன்னான் துருவன்.

துருவன் தனிமையில் அமர்ந்து, புலன்களை அடக்கி, நாராயணனின் மூல மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருக்க வேண்டுமென்று சொல்லி, மூல மந்திரத்தையும் அவனுக்கு உபதேசம் செய்தார் நாரதர். "இனி, நீ தவம் செய்ய ஆரம்பிக்கலாமே...' என்றார் நாரதர்.

"அது, சரி... நான் ஆரம்பிக்கிறேன். அதற்கு முன் நீங்கள் இந்த இடத்தை விட்டுப் போங்கள்!' என்றான் துருவன்.

"ஏன், நான் இருந்தால் என்ன?' என்று கேட்டார் நாரதர்.

"தவத்தை தனிமையில் செய்ய வேண்டும். மனதை ஒருமுகப்படுத்தி செய்ய வேண்டும் என்று நீங்கள் தானே உபதேசித்தீர்கள். நீங்கள் இங்கு இருந்தால் எனக்குத் தனிமை எப்படி ஏற்படும். என் மனமும், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை கவனிப்பதில் தானே இருக்கும். ஆகவே, தயவு செய்து தாங்கள் இந்த இடத்தை விட்டு நகருங்கள்!' என்றான் துருவன்.

நாரதருக்கு ஆச்சர்யமாக இருந்தது. சிறுவனாக இருந்தாலும் விஷயத்தை நன்றாக புரிந்து கொண்டிருக்கிறான் என்று மகிழ்ந்து அவனை ஆசீர்வதித்து விட்டுச் சென்றார்.

Tuesday, May 12, 2009

இறைவன் வாழும் இல்லம்

விளம்பர உலகிலே பஞ்ச் லைன் என்று ஒரு யுக்தி உண்டு. அந்த வாசகம் அந்த விளம்பரத்தை மறக்க விடாமல் நினைவில் நிறுத்த உதவுகிறது. நமது குடியரசும் ஒரு பஞ்ச் வாசகத்தை தேர்ந்தெடுத்தது. பெரியவர்களெல்லாம் ஒன்று கூடி ஆலோசித்து நமது கலாசாரத்தை சரியாக பிரதிபலிக்கும் வண்ணம் முண்டகோபநிஷத்திலிருந்து ஆய்ந்தெடுத்த வரிதான் ”சத்யமேவ ஜயதே.”

அதை எந்த நேரத்தில் தேர்ந்தெடுத்தனரோ மக்களின் போக்கு சத்தியப் பாதையிலிருந்து விலகிக் கொண்டே போகிறது என்று பலரும் புலம்பும்படியாக இருக்கிறது. அந்த வாசகம் மக்கள் மனதிலே சத்தியத்திற்கான தாகத்தை உண்டு பண்ணாமல் ’அசத்யமேவ ஜயதே’ என்று கிண்டலுக்கும் உள்ளாகி விட்டது.

நாம் ’ஜயதே’ என்ற சொல்லுக்கு பொருள் கொள்ளும் விதத்தில் உண்மை மாறுபடுகிறது. சத்தியத்தை கடைபிடிப்பவன் காலத்தால் அழியாத புகழ் பெறுகிறான், அவனுடைய வாழ்நாளிலே அவன் சத்தியத்தை கடைபிடிப்பதால் வரும் இன்ப துன்பங்கள் ஒரு பொருட்டல்ல. அவன் இறைவனுக்கு அருகானவன். முக்தி நிலைக்கு தக்கவன். அதுவே உண்மையான வெற்றி.

சுவாமி ராமா தன் குருவுடன் புகைவண்டியில் பயணித்துக் கொண்டிருந்தார். வழியிலே ஒரு நிலையத்தில் அந்நிலைய அதிகாரியாக இருந்த ஒரு சிஷ்யர் குருவைக் கண்டதும் மகிழ்ந்து அவரை வணங்கி ஆசி கோரினார்.சிறிது நேரம் அளவளாவிக் கொண்டிருந்தார். பிரியும் வேளை வந்தது. குருவிடம் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்கும் படியான உபதேசம் ஒன்றை வேண்டினார்.“இனி எக்காரணம் கொண்டும் உண்மையைத் தவிர வேறெதுவும் பேசாதே” என்று உபதேசித்து அருளினார் குரு. பின் புகைவண்டியில் தம் பயணத்தை தொடர்ந்து ஊர் போய் சேர்ந்தனர்.

அன்று இரவு ஓய்வெடுக்கும் பொழுது குரு சத்தம் போட்டு சிரிப்பதைக் கண்ட சுவாமி ராமா அதற்கான காரணத்தை வினவினார்.”அவன் இப்போது ஜெயிலில் இருக்கிறான். எல்லாம் உபதேசம் கேட்டதால் வந்த வினை” என்று சிரித்தாராம்.

நடந்தது இது தான்.சற்றே சபல புத்தி இருந்த அந்த அதிகாரி பலமுறை நிர்வாகத்தின் பணத்தை சிறு சிறு அளவில் கையாடல் செய்ததுண்டு. அவற்றை சுலபமாக பொய் கணக்குகள் மூலம் சரிகட்டியதும் உண்டு. ஆனால் அன்று உண்மையைத் தவிர வேறு பேசக்கூடாது என்று குருவிற்கு உறுதி அளித்ததானால் அன்று மாலையில் நடந்த தணிக்கையில் உண்மையை ஒத்துக் கொண்டு சிறைவாசம் அனுபவித்துக் கொண்டிருந்தார்.

குரு எங்கோ அமர்ந்து கொண்டு அந்த நிகழ்வை சுவாமி ராமாவுக்கு சொல்லிக்கொண்டிருந்தார் என்றால் அவர் முக்காலத்தையும் உணர்ந்தவராகவே இருக்க வேண்டும். அவருடைய உபதேசத்தை கடைபிடித்ததால் சிறை வாசமென்றாலும் அதுவும் நல்லதற்கே. அந்த அதிகாரியின் வாழ்க்கையில் அன்று பொன்னாள். குரு அருள் முழுவதுமாக கிட்டி ஆன்மீகப் பாதையில் அவர் முதலடி எடுத்து வைத்து விட்டார். இனி எது வரினும் அவருக்கு குருவருள் துணை நிற்கும்.

(Life with Himalayan Masters, Swami Rama: )

பல மனத் துன்பங்களையும் சத்தியத்திற்காக தாங்கிக்கொள்வதும் ஒரு தவமே. அரிசந்திரன் கதை சொல்வதும் அதுவே.அதை கபீரின் வாயால் கேட்போம்.

सांच बराबर तप नहीं,झूठ बराबर पाप ।
जाके हिरदे सांच है, ताके हिरदे आप ॥

வாய்மையினும் உயர் தவம் இல்லை, பொய்யினும் பெரும் பாவம்
வாய்மை வழி நின்றார் உள்ளம், பரமா என்றும் நீ வாழும் இல்லம்

வாய்மை வழி நின்றார் உள்ளம் இறைவன் இல்லம் ஆகும் என்பதை திருமந்திரப் பாடல் ஒன்றிலும் காணலாம்.

மெய் கலந்தாரொடு மெய் கலந்தான் தன்னை
பொய் கலந்தார் முன் புகுதா ஒருவனை
உய்கலந்து ஊழித்தலைவனுமாய் நிற்கும்
மெய்கலந்து இன்பம் விளைத்திடும் மெய்யர்க்கே

இறைவன் பொய்கலந்தார் உள்ளத்தில் புகுவதில்லை என்று திருத்தமாக சொல்கிறார்.

[முதன் முறையாக படித்தபோது மெய்கலந்தார் என்பதை வாய்மை நிறைந்த சான்றோராகவும், பொய் கலந்தார் என்பது காரணகாரியங்களுக்காக உண்மையையும் பொய்யையும் கலந்து திரியும் சாதாரண மக்களை குறிப்பிடுவதாகவும் தோன்றியது.

மெய்கலந்தார் என்பதை மெய்யுணர்வு அடைந்தவர்கள் என்றும், பொய்கலந்தார் என்பதை பொய்யான உலகத்தின் மேல் நாட்டமுடைய மக்கள் என்றும் பொருள் விளக்கவுரை தரப்பட்டுள்ளது]

நாம் அன்றாடம் பல வகைகளிலும் பொய்யுரைக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறோம். வேலையெதுவும் இல்லாமல் வீட்டிலே தான் இருக்கிறோம். கைபேசியில் ஒரு அழைப்பு.

தவிர்க்க முடியாத முக்கிய நபர்.ஆனால் தவிர்க்க விழையும் விஷயம். வெகு நாட்களாக அவர் கேட்டுக்கொண்டி்ருந்த ஒரு காரியம் இன்னும் முடிக்கப் படவில்லை.

”ஹலோ வணக்கம் சார்.நான் இப்போ ட்ரைவ் பண்ணிக்கிட்டு இருக்கேன்.வீட்டுக்கு போனதும் கூப்பிடட்டுமா?”

உண்மையை சந்திக்க மனதில் திராணி இல்லை.ஒரு பொய்யை தொடர்ந்து ஒன்பது பொய்கள். அது தரும் துயரம் சொல்லி மாளாது.ஒவ்வொரு முறையும் புதிய புதிய காரணங்கள்,சப்பைக் கட்டுகள்,முன்பு சொன்ன பொய்களை மறந்து சிக்கிக்கொள்ளும் அவஸ்தைகள் இத்யாதி. பாரதியார் அதை பாஞ்சாலிக்கு துகிலின் நீளம் கண்ணன் அருளால் வளர்ந்ததற்கு ஒப்பிடுவார்.

ஐய, நின்பதமலரே -சரண்
ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி ஹரி- என்றாள்;

பொய்யர் தம் துயரினை போல்- நல்ல
புண்ணிய வாணர் தம் புகழ் போல்
......
......
....
வண்ணப் பொற் சேலைகளாம்-அவை
வளர்ந்தன வளர்ந்தன வளர்ந்தனவே

மிக சுலபமாக வளர்வது பொய்தான்; புகழ் வளர்ச்சி சற்று நிதானமே. அதனால்தான் பொய்யருக்கு முதல் இடம் கொடுத்தாரோ.

மனிதனை சார்ந்து சத்தியமில்லை,சத்தியத்தை சார்ந்து மனிதன் இருக்கிறான்.அதை புறக்கணிக்குமளவும் அவன் தன்னையே அழித்துக் கொள்கிறான்.சத்தியத்தை கடைப் பிடிக்குமளவும் அழியாத தன்மைக்கு தன்னை ஆயத்தப் படுத்திக் கொள்கிறான் என்கிறார் சுவாமி சித்பவானந்தர்.

பொய்யை விட பெரும் பாவம் இல்லை என்றும் சொல்கிறார் கபீர். ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் உண்மையை சற்றே திரித்ததற்காக தர்மபுத்திரனும் சில நாழிகைகள் நரகத்தின் கொடுமையை அனுபவிக்க வேண்டியிருந்தது என்பர்.

அஸ்வத்தாமன் என்ற யானையை கொன்ற வீமன் அஸ்வத்தாமனை கொன்று விட்டேன் என்று துரோணருக்கு கேட்கும்படியாக கர்ஜிக்கிறான். மகனை இழந்ததாக நினைத்த துரோணர் அது உண்மையா என்று,வாழ்நாளில் பொய்யே உரைக்காத,தர்மனிடம் கேட்கிறார்.

பொய் சொல்லி அறியாத தர்மனோ திக்கித் திணறி ”ஆம்.உண்மைதான். அஸ்வத்தாமன் என்கிற யானை” என்று உரைக்கிறார்.அதில் இரண்டாம் பகுதியை சொல்லும் போதே கபடக் கண்ணன் தன் சங்கை ஊதி இறந்தது யானை என்கிற உண்மையை அறியாதவாறு செய்து விடுகிறான். மகனை இழந்ததாக நினைத்த துரோணர் போரை விட்டு விலகி அமர்கிறார்.

பாண்டவர்கள் வென்றார்கள்.

பலகால ஆட்சிக்குப் பின் மனித உடலோடு சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார் தர்மபுத்திரர். அங்கே கண்ட காட்சி திடுக்கிட வைத்தது. துரியோதனனும் அவனுக்கு துணை போனவர்கள் சொர்கத்தில் இன்பமாக அமர்திருக்க தனக்கு பிரியமான பாண்டவர்களோ திரௌபதியோ எங்கும் காணப் படவில்லை. அவர்களிருக்கும் இடத்துக்கு அழைத்து செல்ல வேண்டிக் கொள்கிறார் தர்மர். அதன் காரணமாய் பிணக் குவியல்களுக்கிடையே துர்கந்தம் வீசும் இருட்டுப் பாதையிலே அழைத்துச் செல்லப்படுகிறார். அவற்றை சகிக்க முடியாமல் “இன்னும் எவ்வளவு தூரம் ?”என்று உடன் வந்தவனை கேட்கிறார். ”வேண்டுமானால் திரும்பி விடலாம்” என்கிறான் தூதன்.

தயக்கத்துடன் திரும்ப எத்தனித்த தர்மருக்கு “வேண்டாம், வேண்டாம் இப்போது தான் எங்களுக்கு சற்று ஒளி தெரிகிறது.குளிர்ந்த காற்று வீசுகிறது” என்று பல குரல்களில் வேண்டுகோள் கேட்கிறது. என்ன இது எல்லாம் பழக்கப்பட்ட அருச்சுனன், வீமன் நகுலன் பாஞ்சாலி அவர்களின் குரல் போலல்லவா இருக்கிறது ! அவர்கள் என்னுடன் தர்மத்தின்பால் நின்றதற்காக இது தான் பரிசு என்றால் நானும் இங்கேயே இருந்து விடுவேன். எனக்கு சுவர்க்கம் தேவையில்லை என்று கூறிவிட்டார்.

சிறிது நேரம் கழிந்தது. தர்மரின் உறுதி மாறாததைக் கண்ட இந்திரனும் எமதர்மனும் அவன் முன்னே தோன்றினர். நரகம் மறைந்து சுவர்கம் தோன்றியது. தர்மரின் பூதவுடல் நீங்கி தேவ உடல் வந்தது. தர்மருக்கு வைக்கப்பட்ட ஒரு சோதனைதான் அது என்று அவரை தேற்றினர்.

சூட்சுமம் அறிந்த பெரியவர்கள் அந்த சோதனைக்கான காரணத்தை சொல்லும் போது போரில் உண்மையை மறைக்க துணை போனதுதான் சில நாழிகைகள் பொய்யான காட்சியில் மனத்துன்பத்தை அனுபவிக்கும்படி செய்தது என்கின்றர்.

வாய்மையை காப்பாற்றுவதும் ஒரு தவமே. அந்த தவத்தில் மன அழுக்குகள் நீக்கப்பட்டு சொக்கத் தங்கமாக மாறும் பொழுது இறைவன் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்தை அடைகிறான் மனிதன்.

சுடச் சுடரும் பொன்போல ஒளிவிடும்,துன்பம்
சுடச்சுட நோக்கிற்பவர்க்கு (267)

அதற்காக வாய்மையை கடைபிடிப்பவர்கள் யாவரும் துன்பத்திலே உழன்று கொண்டிருப்பவர்கள் என்ற எண்ணம் கொள்ளத் தேவையில்லை. கஷ்ட காலத்திலும் சத்தியத்தை கைவிடாததால் அவர்கள் மேன்மை பொன்போல் ஒளிருகிறது.

அப்பேர்பட்டவர்களின் உள்ளம் எப்போதும் இறைவன் குடிகொண்டிருக்கும் இதயமாக திகழ்கிறது.

Sunday, February 22, 2009

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே

பல வருடங்களுக்கு முன் நண்பர் ஒருவருடன் மைசூர் அருகே உள்ள கிராமத்திற்கு போக வேண்டியிருந்தது. சந்திக்க வேண்டியிருந்த நபர் வீட்டில் இல்லாததால் அவருடைய பாக்குத் தோப்புக்கே அவரைத் தேடிச் சென்றோம். தோப்புக்குள்ளே நுழையும் முன்பு செருப்பைக் கழற்றி விட்டு வெறுங்காலில் தோப்புக்குள் சுற்றினோம்.

தஞ்சை,காரைக்குடி வாசத்தின் போது கடைகளில் செருப்பை வெளியே கழற்றி விட்டு உள்ளே சென்று வியாபாரம் செய்ததுண்டு. அது வீதியின் தூசியும் அழுக்கும் உள்ளே வராமல் தடுக்க செய்யும் ஒரு கட்டுப்பாடு. ஆனால் விளை நிலத்தில் ஏனிந்தக் கட்டுப்பாடு ?

நகரப் பக்கங்களிலேயே படித்து வளர்ந்த என் போன்றவர்களுக்கு இது புதியதாக இருக்கலாம்.உழைப்பு ஒன்றையே நம்பி நிலத்தையும் மழையையும் ஆதாரமாகக் கருதும் விவசாயிகள் பூமியை தெய்வமாக வணங்குகிறார்கள். இறைவனுடைய படைப்பான நமது கால்கள் நேரடியாக பூமியில் படிவதில் பாவமில்லை. ஆனால் மனிதன் படைத்த செருப்பை அவனுடைய படைப்பின் இடையே புகுத்துவதால் அதை ஆணவத்தின் சின்னமாகக் கருதினரோ என்னவோ!

இத்தகைய சிறு சிறு நம்பிக்கைகளிலும் நடத்தைகளிலும் நமது பண்பாட்டின் ஆழம் புரிகிறது. பணிவு என்பதை மனதில் வேரூன்றச் செய்கிறது.

இறைவன் படைப்பில் மனிதன் மட்டுமே பூமியின் மாசுபாடுகளுக்கு காரணமாகிறான். எத்தனைவிதமாக பூமியை துன்புறுத்துகிறோம் ! ஆனால் அவளோ எல்லாவற்றையும் பொறுமையுடன் தாங்கிக் கொண்டு பலவிதமான நன்மைகளை மனித குலத்துக்கும் பிற உயிர்களுக்கு தந்து கொண்டேயிருக்கிறாள் ! எனவே தான் பொறுமைக்கு பூமியை உதாரணமாகக் கொள்ளும் பழக்கம் நம் நாட்டில் ஏற்பட்டது.

அதனை ஒட்டியே வள்ளுவரும் பொறுமைக்கான அவசியத்தை பூமியை வைத்தே சொல்கிறார்.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை. (151)


தன்னைத் தோண்டுபவரைத் தாங்கும் நிலத்தைப்போல மற்றவர் அவமதிப்பைப் பொறுத்துக் கொள்ளுதல் முதன்மையான தருமம் ஆகும்.

கபீர்தாஸரும் வள்ளுவர் வழியிலே சொல்லும் கருத்தைப் பார்ப்போம்.

खोद खाद धरती सहे, काट कूट वनराय ।
कुटिल वचन साधु सहे, और से सहा न जाय ॥


வெட்டி அகழ்தல் பூமி சகித்தது, வெட்டி முறித்தல் காடும் சகிக்குதே,
வெட்டி ஏச்சை சகித்தனன் சாது, வேறெவரு மிவை சகித்த லரிதே


(வெட்டி ஏச்சு= பயனற்ற ஏச்சு)

க்ஷமா என்ற வார்த்தைக்கு சரியாக பொருள் கொள்ள வேண்டுமானால் மன்னித்து அருளுதல். வெறும் மன்னிப்பது மட்டுமல்ல துன்புறுத்தியவர்கள் நல்ல வழிக்கு திசைதிரும்ப அருளும் பெருங்குணம் அது. அது எப்படி சாத்தியமாகிறது ?
ஞானிகளுக்கு துன்பம் செய்தவனையும் தன்னிலே ஒரு பகுதியாகக் காணக்கூடிய அன்பு நிறைந்திருப்பதாலேயே அது முடிகிறது. தன்னில் ஒருவனாக காணும் பண்பை எளிமையாக விளக்குகிறது நீதி நூல் (341) செய்யுள் ஒன்று.

நாவையே கடித்ததென பல் தகர்க்கும்
பேர் உளரோ;நடக்கும் வேளை,
பூவையே,பொருவு கழல் சருக்கியது என்று
அதைக் களைவோர் புவியில் உண்டோ;
காவையார் உலகம் எனும் பேருடலி
நவையம் போல் கலந்த சீவர்
தாவையே செய்யினும் மிக்க அறிவுடையோர்
கமைசெய்தல் தகுதி யாமால்


(நவை =இகழ்ச்சி; தாவு= துன்பம்; கமை=க்ஷமை, பொறுமை)

உலகம் என்ற பேருடலில் மக்கள் உறுப்புகளைப் போன்றவராம். உறுப்புகள் தவறினால் வருகின்ற துன்பங்களுக்கு உறுப்புகளை யாரும் தண்டிப்பதில்லை. நாக்கைக் கடித்தது என்று பல்லை யாரும் உடைப்பதில்லை, கால் வழுக்கியது என்று காலை வெட்டி விடுவதில்லை. அப்படி அறியாமையால் செய்கிற தவறுகளை பொறுத்துக் கொள்ளக்கூடிய அரிய குணம் மகான்களுக்கு மட்டுமே உண்டு. அப்படிப்பட்ட ஒரு மகானைப் பற்றி சிறிது தெரிந்து கொள்வோம்.

உருவ வழிபாடு என்பது மனதை ஒருமை படுத்திக்கொள்ள ஒரு கருவியாகும். அதுவே மித மிஞ்சிப்போய் மூட பழக்க வழக்கங்கள் மண்டிய நிலையில் வேத வழிமுறையை அனுசரித்து ஆரிய ஸமாஜத்தை ஆரம்பித்தவர் மகரிஷி தயானந்த சரஸ்வதி. .அவர் உருவ வழிபாட்டு முறை வேதங்களில் சொல்லப்படவில்லை என்பதை பல சமஸ்தானங்களின் பண்டிதர்களையும் கண்டு விவாதித்து வெற்றி பெற்று வந்தார். அவற்றில் ஜெய்பூர் ஆஜ்மீர்,ஆக்ரா, குவாலியர், மீரட் கான்பூர் போன்றவை அடக்கம்.

காசியிலும் ஒரு பெரும் விவாத அரங்கு ஏற்பாடு ஆகியிருந்தது. அன்று அக்டோபர் 22, 1869, சுமார் அறுபதினாயிரம் பார்வையாளர்கள் முன்னிலையில் காசி மன்னன் நடுவராக வீற்றிருக்க இருபத்தியேழு பண்டிதர்களை எதிர்த்து விவாதம் செய்ய தனி மனிதனாக அமர்ந்திருந்தார் தயானந்தர்.அவர் தன் கருத்தை நிலைநாட்ட வேதங்களிலிருந்து எடுத்துக்காட்டிய மேற்கோள்களுக்கு பண்டிதர்கள் பதில் சொல்ல முடியாமல் திணறினர்.

அப்போது ஒரு பண்டிதர் எழுந்து வந்து அவரிடம் இரண்டு பக்கங்கள் அடங்கிய ஒரு கட்டுரையை கொடுத்து ஒரு கேள்வி கேட்டார். தயானந்தர் அதை படிக்க சில நிமிடங்கள் எடுத்துக்கொண்டார். அவரிடமிருந்து பதில் ஏதும் வராததால் அரசர் அவசரப்பட்டு காசி பண்டிதர்களே வெற்றி பெற்றதாகக் கூறி விட்டார். பண்டிதர்களுக்கு மிதமிஞ்சிய மகிழ்ச்சி. எங்கும் ஆரவாரம்.சில விஷமிகள் தயானந்தரை அவமதிக்கும் வகையில் செருப்புகள்,கல்,சாணம் முதலியவற்றை அவர் மேல் எறிந்தனர். அதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கசியத் தொடங்கியது.ஆனால் அவர் மட்டும் எதுவும் நடவாதது போல அமைதியாக அமர்ந்திருந்தார்.

அவருடைய அமைதியே எதிர் தரப்பு அறிஞர்களின் அமைதியை குலைத்தது. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கத்தானே செய்யும்.

தலைமை பண்டிதர் தாராசரண் தர்கரந்தா மற்றும் பாலா சாஸ்திரி இருவரும் எழுந்து தயானந்தரின் கூற்றுகளில் உள்ள உண்மையை முழுமனதாக ஏற்றுக்கொண்டனர். காலப்போக்கில் ஏற்பட்டுள்ள மாறுதல்களை கைவிடமுடியாமல் தாம் தான் வீண் தர்க்கம் செய்வதாகவும் ஒப்புக்கொண்டனர்.காசி மன்னனும் தன் தவறுக்காக வருந்தி அவரை அரண்மனை சிறப்பு விருந்தினராக கௌரவித்து தன் மரியாதையை செலுத்தினான்.

இன்னுமொரு முறை அவருடைய அருவ கொள்கையை எதிர்த்த ஒருவன் வெற்றிலையில் (பான்) விஷத்தை வைத்து கொடுத்து விட்டான். அதை உட்கொண்டதுமே அவருக்கு விஷத்தின் தன்மை புரிந்து விட்டது. தானறிந்து வைத்திருந்த யோக முறைகளின்படி உட்கொண்டதை முழுவதுமாக வாந்தியாக வெளியேற்றி தன்னைக் காப்பாற்றிக் கொண்டார். ஆனால் யாரிடமும் இதைப்பற்றி கூறவில்லை. அவரது மனதில் வருத்தம் மேலிட்டது. மக்கள் சொல்ல வந்த கருத்தின் உண்மையை உணராது இப்படிப்பட்ட தவறான வழிகளில் ஈடுபடுகின்றனரே என்பது தான் அதற்குக் காரணம். விஷயம் எப்படியோ வெளிவந்து காவல்துறையினர் அந்த விஷமியை பிடித்து வழக்கு தொடர முற்பட்டபோது தயானந்தர் அதை தடுத்து விட்டார். ”நான் தளைகளை அறுக்க முயல்பவன். நீரோ ஒருவனை தளைக்குள் (சிறைக்குள்) சிக்க வைப்பதிலேயே குறியாயிருக்கிறீர்களே” என்று கூறினார்.

சீர்திருத்தக்காரர்களுக்கு வாழ்நாளெல்லாம் போராட்டம் தான். 1883-ல் செப்டம்பரில் ஜோத்பூர் மஹாராஜாவின் விருந்தினராக தங்கியபோது சோதனை ஆரம்பித்தது. ஒருநாள் இரவு நேரத்தில் அருந்திய பாலில் விஷம் கலக்கப்பட்டிருந்தது. அதன் விளைவாக தீராத வயற்றுவலி உருவாகியது.அரண்மனை மருத்துவர் அலிமர்தன் கான் கொடுத்த மருந்துகள் எதுவும் பலன் தரவில்லை. தயானந்தரின் உடல் முழுவதும் கொப்புளங்கள் வெடித்து இரத்தம் வடியலாயிற்று. ஒருநாள் யாரும் அருகில் இல்லாதபோது சமையற்காரனான தவூல் மிஷ்ராவை அழைத்தார்.

அவருடைய உடலில் இருந்த புண்களின் தீவிரம் கண்டு அவனால் அழுகையை அடக்கமுடியவில்லை. தான் தீயவர்களின் சேர்க்கையால் பெரும் தவறு செய்து விட்டதாகவும் அவர் அருந்திய பாலில் பொடித்த கண்ணாடி துகள்களை சேர்த்து தந்தவனும் தானே என்ற உண்மையைக் கூறி பாவமன்னிப்புக் கோரி அழுதான்.

அந்த மகானோ ”என் விதிப்படி என்ன நடக்க வேண்டுமோ அது நடக்கிறது. நீ நொந்து கொள்வதில் என்ன பயன்?” என்று சொல்லி விட்டு பையிலிருந்து இருநூறு ரூபாய்களை எடுத்துக் கொடுத்தார். “இதோ பார் மஹாராஜாவுக்கு இந்த உண்மை தெரிந்தால் உனக்கு பெரும் கேடு விளையும். ஆகையால் இந்த பணத்தை வைத்து கண் காணாத நேபாளத்துக்கு போய்விடு.அங்கே ஒரு புது வாழ்க்கையை துவங்கு” என்று சொல்லி அவனை பத்திரமான இடத்திற்கு அனுப்பி வைத்தார்.

பகைவனுக்கருள்வாய் -நன்னெஞ்சே
பகைவனுகருள்வாய்.

உள்ள நிறைவிலொர் கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ-நன்னெஞ்சே!
தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும்
சேர்த்தபின் தேனாமோ? நன்னெஞ்சே

தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு
சிந்தையிற் போற்றிடுவாய்-நன்னெஞ்சே !
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்
அவளைக் கும்பிடுவாய் -நன்னெஞ்சே !


என்கிற பாரதியின் வாக்குபடி உள்ளத்தின் நிறைவில் சிறிதும் கள்ளமில்லாமல் வாழ்ந்ததால்தான் மன்னர்களும் போற்றி வழிபடும் அளவிற்கு தயானந்தரின் பெருமை உயர்ந்திருந்தது.

ஜோத்பூர் மன்னன் மவுண்ட் அபூவில் தயானந்தரின் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து, அவரது பல்லக்கை தானே சிறிது தூரம் சுமந்து சென்று வழியனுப்பி வத்தான். சிகிச்சை எதுவும் பலனளிக்கவில்லை. அக்டோபர் மாதம் தீபாவளி தினத்தன்று மாலை ஆறு மணியளவில் தன் சீடர்கள் அருகில் அமர்ந்திருக்க காயத்ரி மந்திரம் செபித்து ஓம் என்னும் பிரணவ மந்திரத்துடன் தேகத்தை விலக்கி முக்தி அடைந்தார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆரியசமாஜம் பல முன்னேற்றக் கருத்துகளையும் மாற்றங்களையும் நாட்டில் ஏற்படுத்தியது. இன்று வட நாடு முழுவதும் பரவி இருக்கும் DAV(Dayanand Arya Vidyashala) கல்வி நிலையங்கள் சுவாமி தயானந்தரின் சீடர்களால் துவக்கப்பட்டவையே ஆகும்.

வள்ளுவர், கபீர், பாரதி்யார், நீதிநூல் போல் எல்லோரும் வலியுறுத்துவதும் ஒரே கருத்தைதான்.

பொ்றையே சத்தியம், பொறையே தர்மம்
பொறையே யோகம், பொறையே யாகம்
பொறையே அஹிம்சை, பொறையே கருணை,
பொறையே நியதி, பொறையே யாவும்.

தயானந்தரைப் பற்றிய மேலும் விவரங்களுக்கு இங்கே

Saturday, June 28, 2008

வனமெல்லாம் சிம்மத்தின் வசம்

எங்களுக்கு நெருங்கிய குடும்ப நண்பர், ஒரு பெண்மணி. மிகப் பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் விற்பனைத்துறையில் வைஸ் பிரசிடெண்ட். மாதத்தில் பெரும்பாலான நாட்கள் வேலை விஷயமாக வெளியூர் பயணம் தான். அண்டை வீடே ஆனாலும் சந்தித்துக் கொள்வது வாரத்தில் ஓரிருமுறைதான்.

ஒருநாள் காலையில் அலுவலகம் கிளம்பும்வேளை, அவர் வாசலில் அறிமுகம் இல்லாத சிலரோடு மிகவும் காராசாரமான விவாதம் செய்வது கேட்டது. அருகே சென்று விவரம் கேட்டபோது அவர்கள் வீடு தேடி வந்து வசூல் செய்ய முற்படும் கிரடிட் கார்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் என்பது புரிந்தது. வந்தவர்களின் நடத்தையும் பேச்சும் மிக தரக்குறைவாக இருந்தது.

பிரச்சனை என்னவென்றால் இரண்டு மாதங்களுக்கான தவணைக் கட்டப்படவில்லை என்பது தான்.

பாவம் அவர். தன்னுடைய அலுவலக உதவியாளரை நம்பி விட்டிருந்த வேலை, செய்யப்படாமல் விடுபட்டிருந்ததால் வந்த வினை.

இவர், 'முழு விவரமும் தெரிந்து கொண்டு பிறகு கட்டச் சொல்கிறேன்' என்றால் வந்தவர்கள் அதற்கு ஒப்புக் கொள்வதாக இல்லை.

“சீ ! ஏதோ ஒரு மாசம் விட்டுப் போச்சுனா இப்படிதான் ஆள அனுப்பிச்சு ஸீன் கிரியேட் பண்ணனுமா? கேக்குறதலையும் ஒரு டீஸென்ஸி வேண்டாம். கூண்டாவை வச்சு வசூல் பண்றாங்க. கார்டு வேண்டாம்னாலும் நூறு தடவை ஆபீசுக்கும் வீட்டுக்கும் வந்து கால்ல விழுந்து கெஞ்ச வேண்டியது. எப்பவோ ஒரு சின்ன தப்பு நடந்தா இப்படி அசிங்கப்படுத்தறது. முதல்ல இந்த கார்டை கேன்ஸல் பண்ணச் சொல்றேன்” என்று பொருமிக் கொண்டே சென்றார்.

இப்பொழுதெல்லாம் வங்கிகள் வெளியார் துணையோடு( out sourcing) தவணைகளை வசூலிக்கின்றனராம்.

அதனால் வந்த தரக்கேடு இது.

கடன் வாங்காத வரையில் ஒருவன் ராஜா. ஏதேனும் காரணத்தால் வண்டிக்காகவோ, வீட்டிற்காகவோ கடன் வாங்கி தவணை செலுத்துவதில் இடர் ஏற்பட்டால் கடன் கொடுத்தவரின் ஏச்சுகளை கேட்டு மனம் துன்பப்படுகிறது.

இந்த மாயையும் அப்படித்தான். முதலில் நம்மைச் சுற்றி ஒரு சுகமான உலகை சிருஷ்டிக்கிறது. மயக்கம் நீடிக்கிறது. தவறுகள் ஏற்படுகின்றது. பின்னர் திரை சிறிது சிறிதாக விலகி தன் கோர சொரூபத்தை காட்டுகிறது. ஏனிப்படி என்றால் ”எல்லாம் நீயே வரவழைத்துக் கொண்டது” என்று பதில் வருகிறது. என்ன விசித்திரம் இந்த உலகம்! எனவேதான் கவிஞனுக்கு கோபம் உண்டாகிறது. பாரதியின் சீற்றத்தைப் பாருங்கள்.

என்னைக் கெடுப்பதற்கு எண்ணமுற்றாய்
கெட்ட மாயையே!- நான்
உன்னைக் கெடுப்பது உறுதி என்றே
உணர் -மாயையே
................
நீ தரும் இன்பத்தை நேரென்று கொள்வனோ
மாயையே- சிங்கம்
நாய் தர கொள்ளுமோ
நல்லரசாட்சியை -மாயையே

ஞானிகளுக்கு இத்தகைய சஞ்சலங்கள் எதுவும் கிடையாது. அவர்கள் உலகை நாடக மேடையாகக் காண்பதால் சுகமும் துக்கமும் மாறி மாறி வந்து செல்லக் கூடிய காட்சிகள் என்பதை அறிவார்கள். அவர்களின் ஒரே குறிக்கோள் இறைவனின் சாட்சாத்காரம் ஒன்றுதான்.

ஒரு சிங்கத்தை தன்சொற்களால் பசப்பி புவனம் என்கிற பாழ் கிணற்றிலே தள்ளப் பார்க்கும் முயல் போல மாயையின் லீலையே மற்றவையெல்லாம் என்பதை அவர்கள் முற்றும் உணர்ந்தவர்கள். எனவே கபீர் நமக்கு பழக்கமான கதையை சொல்லியே இதை புரிய வைக்கப் பார்க்கிறார்.

अकिल बिहूना सिंह, ज्यौं गया ससा के संग ।
अपनी प्रतिमा देखि के, कियो तन के भंग ॥


அகில் பிஹூனா ஸிம்ஹ், ஜ்யோவ் கயா ஸஸா கே ஸங் |
அப்னீ ப்ரதிமா தேகி கே , கியோ தன் கே பங்க் ||


வனமெலாம் சிம்மத்தின் வசம், சென்றது செவியன் சொல்வசம்
மனம்மருளும் பிம்பத்தின் வசம், பின் இல்லை தேகம் அதன்வசம்

(செவியன்= முயல்)

எதற்கும் அஞ்சாத சிங்கத்திற்கும் மன மயக்கம் ஏற்பட்டு புத்தி தடுமாறுகிறது. அந்த தடுமாற்றத்திற்கு காரணம் பொய்யை உண்மையென நம்பியதே காரணம். உலகில் வாழ்க்கை நடத்தும் பொழுது நமக்கு பலவகையான தடுமாற்றங்கள். எது நல்லது, எது கெட்டது என்று புரியாத நிலை. இறைவனே யாவும் என்ற விவேகத்தை உறுதியாகப் பற்றி கொள்ளத் தெரியாத மடமை.

ஆகையால் சிங்கத்தை போல சுதந்திரமாக தலைநிமிர்ந்து நடைபோட வேண்டிய மனிதன் ஆடுகளைடையே வளர்ந்த சிங்கக்குட்டி போல மந்தையோடு நடை போடுகிறான். மே... மே என்று ஆடுகளைப் போலவே கையாலாகதவன் போல் கத்தித் திரிகிறான்.

அப்போது, சிங்கம் போன்று, தன்னை உணர்ந்த குரு வந்து “ நீ ஆடு அல்ல சிங்கம்” என்று நம்பிக்கை ஊட்டுகிறார். கர்ஜிக்க கற்றுக் கொடுக்கிறார். அப்படி ஒரு கர்ஜனையை இங்கே கேளுங்கள்.

நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலை யில்லோம்
ஏமாப்போம் பிணியறியோம் பணிவோம் அல்லோம்
இன்பமே யெந்நாளும் துன்பமில்லை
தாமார்க்குங் குடியல்லாத் தன்மை யான
சங்கரன் நற்சங்க வெண் குழையோர் காதிற்
கோமாற்கே நாமென்றும் மீளா ஆளாய்க்
கொய்ம்மலர்ச் சேவடி இணையே குறுகினோமே

(நடலை=பொய்மை; ஏமாப்பு = மகிழ்ந்திருத்தல்; மீளா ஆளாய்= எந்நாளும் அடிமையாய் ; கொய் மலர் = புதிதாக மலர்ந்த மலர்; குறுகினோமே=அடைந்தோமே)

சமணத்தைத் துறந்து சைவநெறியை தழுவிய நாவுக்கரசரை விசாரிக்கும் பொருட்டு அரசன் அழைப்பு அனுப்புகிறான். அழைப்பை ஏற்க மறுத்த அப்பர் பெருமான் கூறிய பாடல் இது.

அந்த தன்னம்பிகை எங்கிருந்து வந்தது? இறைவனே எல்லாம் என்ற மனத்தெளிவே காரணம். வேறொன்றையும் எதிர்பார்க்காத மனப்பக்குவம்.

அத்தகைய மனத்தெளிவு நமக்கும் வந்துவிட்டால் முயலிடம் அகப்பட்ட சிங்கம் போல் அவதிப்பட வேண்டியதில்லை. எதற்கும் அஞ்சாத சிங்கமாய் இவ்வுலகில் சுற்றி வரலாம்.

Thursday, September 20, 2007

பாரதியும் கபீரும் -பாகம்-2

போன பதிவின் தொடர்ச்சியாக இப்பதிவிலும் கபீர் மற்றும் பாரதியின் கருத்தொற்றுமைகளை சிலவற்றைப் பார்ப்போம்.

துறந்தார் பெருமை பற்றி சொல்லுகையில் கபீர் இப்படிச் சொல்லுகிறார்.

अब कोई चाहत नहीं, तो चिन्ता नहीं ।
चिन्ता नही तो मन पर कोई भार नहीं ॥

அப் கோயி சாஹத் நஹீ, தோ சிந்தா நஹீ
சிந்தா நஹீ தோ, மன் பர் கோயீ பார் நஹீ

வேட்கைக ளில்லை இனிமேல், அதனால் கவலையும் இல்லை
கவலைகள் போனபின் மனதில், அழுத்தும் சுமைகளும் இல்லை

வியாதிகள் பலவுக்கும் காரணம் மன அழுத்தம் அல்லது கவலைகளின் பெருஞ்சுமை. எதையாவது சாதிக்க அல்லது சம்பாதிக்க வாழ்க்கையில் ஓய்விலா ஓட்டம். சில கூடிவரும். பல கூடாமல் போகும். கூடாதவற்றை நினைத்து காலம் முழுதும் மனம் அழுது புலம்பும். மனித வர்க்கத்துக்கே உரித்தான இம்மாயையில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க பலரும் பல காலமாக சொல்லி வருகின்றனர். பாரதியாரும் குள்ளச்சாமி புகழில் தாம் பெற்ற உபதேசத்தை இப்படி உரைக்கிறார்.

மற்றொரு நாள் பழங்கந்தை அழுக்கு மூட்டை
வளமுறவே கட்டியவன் முதுகின் மீது
கற்றவர்கள் பணிந்தேத்தும் கமல பாதக்
கருணைமுனி சுமந்து கொண்டு என்னெதிரே வந்தான்.

"தம்பிரானே; இந்த தகைமை என்னே ?
முற்றுமிது பித்தருடைய செய்கையன்றோ
மூட்டை சுமந்திடுவதென்னே ? மொழிவாய் " என்றேன்

புன்னகை பூத்த ஆரியனும் புகலுகின்றான்:
"புறத்தே நான் சுமக்கின்றேன்; அகத்தினுள்ளே
இன்னொதொரு பழங்குப்பை சுமக்கிறாய் நீ"
என்றுரைத்து விரைந்தவனும் ஏகிவிட்டான்.
...............................
எப்பொழுதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றொழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர் சென்றதனை குறித்தல் வேண்டா !
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நெஞ்சில்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடி இன்புற் றிருந்து வாழ்வீர் ;

கடந்தகாலத்தை எண்ணி மருகியே நிகழ்காலத்தின் சந்தோஷங்களை விட்டுவிடாதீர்கள் என்பதை எவ்வளவு ஆணித்தரமாக பாரதியார் உணர்த்துகிறார்.

Less Luggage More Comfort. ஆசைகளை விட்டு விட்டால் சுமைகள் குறைந்து விடும். அப்படி ஆசையைக் கடந்தவர்கள் நிலை என்ன ? அவர்களை ஷாஹ்-இன்-ஷாஹ் என்கிறார் கபீர்.

चाह गयी चिन्ता मिटी, मनवा वेपरवाह ।
जिन को कुछ ना चाहिये वो ही शहन्शाह ॥

சாஹ் கயீ, சிந்தா மிடீ, மனுவா வேபர்வாஹ்
ஜின் கோ குச் நா சாஹியே வோ ஹீ ஷாஹ்-ன்-ஷாஹ்

இச்சையும் போச்சு, கவலையும் போச்சு, லேசாச்சு மனமே
எச்சுமையும் இல்லாதவனே, பூவில் கோலோச்சும் கோனே

(பூவில் = பூமியில்; கோன்= சக்ரவர்த்தி)

ஷாஹ்-இன்-ஷாஹ் என்பது அரசர்களுக்கு அரசன் என்று பொருள் படும். எல்லாவித ஆசைகளையும் துறந்தவன் யாரிடமும் அடிமைத்தனம் மேற்கொள்ள வேண்டியதில்லை. அவனை விட சுதந்திரமானவன் கிடையாது. ஆனால் அரசர்களின் அரசனுக்கு அடிமைத்தனம் இல்லாவிட்டாலும் அரசாட்சியின் பொறுப்புகளோடு அவனுக்கு வரும் கவலைகளுக்கு முடிவு கிடையாது. ஆகையால் கவலையற்ற துறவி அரசனை விட மேம்பட்டவனாகிறான். இதே கருத்தை பாரதியின் வரிகளிலே காண்போம். அவரும் இரண்டே வரிகளில் இந்த கருத்தை அடக்கி விடுகிறார்.

ஒன்றுமே வேண்டாது உலகனைத்தும் ஆளுவர் காண்
என்றுமே இப்பொருளோடு ஏகாந்தத்து உள்ளவரே (பரசிவ வெள்ளம் -14)

’இப்பொருள்’ என்னும் இறைவனை அடைவதற்கு செய்ய வேண்டிய தவமென்ன? தவமா ! பாரதி ஏளனம் செய்கிறார்.

சாத்திரங்கள் வேண்டா சதுர்மறைகள் ஏதுமில்லை
தோத்திரங்கள் இல்லை உளம் தொட்டு நின்றாற் போதுமடா (21)

தவம் ஒன்றும் இல்லை, ஒரு சாதனையும் இல்லையடா
சிவம் ஒன்றே உள்ளதென சிந்தை செய்தாற் போதுமடா (22)

இறைவனைப் சாத்திரங்களில் அடைக்கவும், அடையவும் முயலும் மனிதர்களைப் பார்த்து கபீரும் சிரிக்கிறார்.

पोथी पढ़- पढ़ जग मुआ, पंडित भया न कोय ।
ढ़ाई आखर प्रेम का, पढै़ सो पंडि़त होय ॥

போதி பட்-பட் ஜக் முவ்வா, பண்டித் பயா ந கோய்
டாய் ஆகர் ப்ரேம் கா, படை ஸொ பண்டித் ஹோய்

(ஆகர்=அக்ஷர் அல்லது அட்சரம் என்பதன் திரிபு)

அளப்பிலா நூல்பலக் கற்றே, ஆன பண்டிதர் இலையே
அன்பின் அருமை தெளிந்தார் அன்றே பண்டிதர் ஆனாரே

ஹிந்தியில் டாய் (4ஆவது ட). -என்றால் இரண்டரை. ப்ரேம் என்ற வார்த்தைக்கு தேவையான எழுத்துக்கள் அல்லது மாத்திரை காலங்கள் இரண்டரையாகும். எவனொருவன் இந்த வார்த்தைக்கு உண்மையான பொருள் அறிந்தவனாகிறானோ அவனே உண்மையில் எல்லாமறிந்த பண்டிதன். இரண்டரை எழுத்துகளுக்குள் அடங்கிய இந்த ரகசியத்தை விட்டு மலை மலையாய் சாத்திரங்களை கரைத்துக் குடித்தும் உண்மையறியாமல் இவ்வுலக மக்கள் மடிகின்றனரே (ஜக் முவ்வா) என்று கபீர் வருந்துகிறார்.

அன்பே உலகின் இயக்கங்களுக்கெல்லாம் ஆதார சுருதி. சங்கீத கலைஞனுக்கு தம்புராவில் சுருதி கூட்டியதுமே எப்படி மனம் அதிலேயே லயித்து விடுமோ அது போல ஞானிகளின் இறையுணர்வு, அன்பிலேயே கரைந்து நிற்பதாகும். இராமகிருஷ்ணர் இதை பாவசமாதி என்பார். அந்நிலையில் வேண்டியவன் வேண்டாதவன் கிடையாது. நல்லதும் கெட்டதும் கிடையாது. எல்லாம் சக்தி மயம்.

செய்க தவம் ! செய்க தவம் ! நெஞ்சே தவம் செய்தால்
எய்த விரும்பியதை எய்தலாம்- வையகத்தில்
அன்பிற் சிறந்த தவமில்லை அன்புடையார்
இன்புற்று வாழ்தல் இயல்பு (விநாயகர் நான்மணி மாலை)

Sunday, September 09, 2007

பாரதி எதிரொலிக்கும் கபீர்

மகாகவி பாரதியார் சிலஆண்டுகள் காசி மகாநகரத்திலேயே வாழ்ந்து வடமொழியிலும் ஹிந்தியிலும் தேர்ச்சிப் பெற்றிருப்பினும் கபீர்தாஸ் பற்றிய குறிப்பு அவருடைய எழுத்துகளில் எங்கும் காணப்படவில்லை. இது என் தேடுதலில் உள்ள குறைபாடாகவும் இருக்கலாம். யாருக்காவது தெரிந்திருந்தால் தயவுகூர்ந்து தெரியப்படுத்தவும்.

சில ஒற்றுமைகள் : இருவருமே வாய்மையே உயிர் மூச்சாய் கொண்டிருந்தனர். அவர்களுக்கு வறுமையே சொத்து. ஆனால் அவர்களின் தன்னலமற்ற மனமோ மிக மிகப் பெரியது. அவர்கள் விட்டுசென்ற கவிதைகளோ அமரத்துவம் வாய்ந்தவை.

வேற்றுமை : படிப்பறிவு இல்லாவிட்டாலும் ஆன்மீகத்தின் எல்லையைக் கண்டவர் கபீர். அதனால் அவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவராக இருந்திருக்கிறார். அவரது வாழ்க்கை, ஆழமான கங்கை அமைதியாக சமவெளியில் பாய்ந்து செல்லும் போக்கை ஒத்தது. முறையாக கல்வி கற்றிருந்த பாரதிக்கோ ஆன்மீக நாட்டம் இருப்பினும் வாழ்க்கையில் இன்னும் பிடிப்பு இருந்தது. அவருடைய மனம் பற்றற்ற நிலைக்கும் உலக வாழ்க்கைக்கும் இடையே ஊசலாடுவது பல கவிதைகளில் நன்றாகவே தெரிகிறது. இதன் காரணமாக ஒரு மலையருவியின் ஓட்டத்தோடு விளங்கியது பாரதியாரின் வாழ்க்கை. அதில் வேகம் உண்டு, சீற்றம் உண்டு. காணக் காண சலியாத குதித்து சுழித்து ஓடும் அழகும் உண்டு.

இவ்விருவரின் கவிதை வரிகளுக்கிடையே கண்ட ஒருமித்த சில கருத்துகளைப் பார்ப்போம். காலத்தால் ஐநூறு வருடங்கள் இடைவெளி இருப்பினும் அழியாத உண்மைகள் அவரவர்களுக்குரிய தனித்தன்மையோடு வருகிறது.

गोता मारा सिंधु में, मॊती लाये पैठि ।
वह क्या मोती पायेंगे, रहे किनारे पैठि ॥

கோதா மாரா சிந்து மே, மோதி லாயே பைடி
வஹ் க்யா மோதி பாயேங்கே, ரஹே கினாரே பைடி
(சிந்து = கடல், மோதி =முத்து)

ஆழியுள் குதிப்பர் ஆழ மூழ்குவர், அள்ளி வருவரே முத்து
கூழையர் கூடுவர் கூசியே நிற்பர், எங்கனம் தருவரே முத்து
(கூழையர்= அற்ப மக்கள், அறிவற்றவர்; கூசுதல்= பயத்தல்)

கடலில் மூழ்கி முத்தெடுப்பது ஒரு கடினமான செயல். துணிச்சல் உள்ளவர்கள் மட்டுமே மேற்கொள்ளும் ஒரு காரியம் இது. உள்ளே சென்றவருக்கு மூச்சுக் கட்டும் திறமை அசாதாரணமாக இருக்க வேண்டும். கடல் வாழ் பிராணிகளால் எந்த கணமும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம். அதனால் பெரும்பாலானவர் தொழிலில் உள்ள அபாயத்தையும் சங்கடங்களையும் சொல்லி முத்துக்குளிக்க விரும்புவனை தடுக்க முயலுவர். மனத்திண்மையுடையவர் அவற்றைப் பொருட்படுத்தாது துணிந்து செயலில் இறங்குவர். அப்பேர்பட்டவர்கள் தான், கடலின் அரிய பொக்கிஷங்களை உலகு வெளிக்காட்டுகின்றனர்.

கபீர் இந்த உதாரணத்தை சொல்வதன் நோக்கம் ஆன்மீகத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு சாதனைகளை மேற்கொள்ளாமல் வெறும் பேச்சளவிலே நிற்பதால், பிறவி வந்ததன் பயனான, இறையின்பம் அடையப் படாதது என்பதாகும். சாதனைகளை மேற்கொள்ள பெரிய வைராக்கியமும் திடச்சித்தமும் தேவை என்பதை எல்லா ஞானிகளும் உரைக்கின்றனர். எனவே அதை முத்துக்குளிப்பதற்கு ஒப்பாக்கி காட்டுகிறார். ஆயின் நாம் இதை வெறும் ஆன்மீகத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் எந்த ஒரு உயர்லட்சியத்தை அடைவதற்கான தேவை எனக்கொள்ளலாம்.

கபீர் உணர்ச்சியைத் தூண்டும் விதமாக அமைக்கவில்லை ஆனால் சிந்திக்கும் வகையில் கருத்தை முன் வைக்கிறார். ஆனால்கரையோரம் அமர்ந்து கதைப்பேசும் மக்களை பார்க்கையில் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது பாரதிக்கு. இந்திய சுதந்திரப்போரில் பயந்தாங்கொள்ளிகளின் நிலைக்கண்டு பொறுமுகிறார். சுதந்திரம் என்னும் ஒரு உயர் லட்சியத்திற்காக செயல்படாமல் உதட்டளவிலே அனுதாபம் காட்டித் திரிவோரை வேறெப்படி கடிந்துகொள்ள இயலும்.

கூட்டத்தில் கூடிநின்று கூடிப்பிதற்றலன்றி
நாட்டத்தில் கொள்ளாரடி- கிளியே
நாளில் மறப்பாரடீ (நடிப்பு சுதேசிகள்)

கேட்போரையும் படிப்போரையும் உணர்ச்சி கொள்ளச் செய்யும் வாசகங்கள்.

நிலயாமைப் பற்றி இருவரும் என்ன சொல்கிறார்கள் பார்ப்போமா !

हाथों परबत फाड़ते, समुन्दर घूट भराय ।
ते मुनिवर धरती गले, का कोई गरब कराय ॥

கையால் மலையும் பெயர்ந்தது, குடிகையுள் கடலும் அடைந்தது
வையங் காணா சாதனை, யிவர்கர்வமும் அடங்கும் மண்ணிடை

वैध्य मुआ रोगी मुआ, मुआ सकल संसार ।
एक कबीरा ना मुआ, चेहि के राम आधार ॥

மரித்தான் உரோகியும், வைத்யனும் மரித்தான், மரிப்பரே யாவரும்
மரியான் என்றும் கபீரனும் இராமநாமத் துணைக்கொண்ட பின்னே

மாற்று; (பிற்சேர்க்கை -09/02/08)

பிணியாள் போனான், தீர்த்தவன் போனான், போவரே யாவரு மொருநாள்
தனையாள் இராமன் மந்திரம் சொல்லும், கபீரனுக் கில்லை இறுநாள்

(பிணியாள்= நோயுற்றவன்; தீர்த்தவன்= நோய்த் தீர்த்தவன், மருத்துவன்;
தனையாள்= தன்னை ஆளும்; இறு நாள்=முடிவுநாள்)


நிலையற்ற இவ்வுலகில் வியாதியுள்ளவரும் அவர்களைக் காப்பாற்ற முயலும் வைத்யனும் இறந்து போகின்றனர். அனைத்து உயிர்களுமே ஒருநாள் மறைய வேண்டியனதான். இதிலிருந்து விதிவிலக்கே கிடையாது. கைலாய மலையை கையால் தூக்கிய ராவணனோ அல்லது தன் கமண்டலத்துள் கடலையே அடக்கிய அகஸ்திய முனிவரோ இந்த முடிவிலிருந்து தப்ப இயலவில்லை. எனவே எத்தகைய கர்வம் ஆயினும் அதுவும் ஒரு நாள் மண்ணிலே முடிந்து போகும்.

ஆனால் அமரத்துவம் என்பது இறைவனின் நாமத்தை மீண்டும் மீண்டும் செபிக்கும் போது சித்த சுத்தி ஏற்பட்டு அதன் மூலம் அடையப் படுகிறது. அந்நிலையில் தூல உடலின் உணர்வு போய் பேருணர்வு ஒன்றுதான் எஞ்சியிருக்குமாம். கபீர் தமக்கு இராமநாமத் துணை யிருப்பதால் தனக்கு மரணமே இல்லை என்று அறிவிக்கிறார். இதே கருத்து பாரதியின் எழுத்தில் எப்படி வெளிப்படுகிறது பார்ப்போமா ?

முன்னோர்கள் உரைத்த பல சித்தரெல்லாம்
முடிந்திட்டார், மடிந்திட்டார், மண்ணாய்விட்டார்
.............
நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்;
அந்தணனாம் சங்கராசார்யன் மாண்டான்
அதற்கடுத்த இராமனுஜனும் போனான்.
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்;
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்;
பலர் புகழும் இராமனுமே ஆற்றில் வீழ்ந்தான்;
பார் மீது நான் சாகாதிருப்பேன், காண்பீர்.

மலிவு கண்டீர் இவ்வுண்மை பொய்கூறேன் யான்
மடிந்தாலும் பொய் கூறேன். மானுடர்க்கே
நலிவுமில்லை, சாவுமில்லை, கேளீர், கேளீர்
( சொற்களிலே என்ன ஒரு அழுத்தம், தன்னம்பிக்கை)
நாணத்தை, கவலையினத்தை, சினத்தை, பொய்யை
அச்சத்தை, வேட்கைதனை அழித்துவிட்டால்
அப்போது சாவுமங்கே அழிந்து போகும்.
மிச்சத்தைப் பின் சொல்வேன் சினத்தை முன்னே
வென்றிடுவீர் மேதினியில் மரணமில்லை.


இவ்வுலகில் இறக்காதவர்கள் யார்? இராமன், கண்ணன் புத்தன் ஏசுவிலிருந்து ராமானுஜன் வரை பட்டியல் போட்டுக்காட்டுகிறார். ஆனால் தனக்கு மட்டும் மரணமில்லை என்றுரைக்கிறார்.

நாணம், கவலை, சினம் பொய் அச்சம் வேட்கை போன்ற அழுக்குகள் எல்லாம் போய் விட்டால் எஞ்சியிருக்கப்போவது என்ன? சுத்தமான மனது ஒன்றுதானே. கபீர் நேரடியாக செய்ய வேண்டிய காரியத்தை சொல்லி விட்டார். ஆனால் பாரதி செய்வதற்கான காரணங்களை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைக்கிறார்.

மனித குலத்திற்கு பல்வேறு வழிகளிலும் நோய்க்கான காரணங்களையும், தீர்வுக்கான மருந்துகளையும் இம்மகான்கள் போலவே பலரும் சொல்லி வந்திருக்கின்றனர். நமக்குத்தேவை அவர்களின் வார்த்தைகளில் அசையாத நம்பிக்கை.

இதை எழுத ஆரம்பித்த நோக்கம் செப்டம்பர் 11, பாரதியின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலியாக ஒரு பதிவு இருக்கட்டுமே என்பதுதான். மேலும் பல ஒற்றுமைகளை அவ்வப்போது காண்போம்.