Thursday, August 21, 2008

தொண்டராம் தொண்டர்க்குத் ..... தொழும்பன்

நாக் மஹாஷயர்- மூன்றாம் பகுதி

பெரியது கேட்கின் வரிவடிலோய்
பெரிது பெரிது புவனம் பெரிது....
என்று தொடங்கும் ஔவையின் பாடலில் எல்லாவற்றிலும் பெரிதாகச் சொல்லி முடிப்பது “தொண்டர்தம் பெருமை சொல்லவும் பெரிதே !”

ஏனென்றால் அந்த பரம்பொருளே தொண்டர் உள்ளத்து ஒடுங்கியவன்.

ஆகையால் யாவரிலும் இறைவனைக் கண்ட நாக் மஹாஷயர் தொண்டர்களுக்கு செய்யும் சேவையையே இறைவனுக்கு செய்யும் சேவையாகக் கொண்டார். அவருடைய மனநிலையை கபீரின் வார்த்தைகளில் வடிக்க வேண்டுமானால்;

दास कहावन कठिन है , मैं दासन का दास ।
अब तो ऐसा होय रहूं, पांवतले की घास ॥


அடியவன் என்பது கடினமே, அடியவர்க்கும் யான் அடியனே |
அடிப்புல்லாய் அவரடி கிடப்பினும், தன்ய னாவேன் ஐயனே ||

(தன்யன் = பாக்கியசாலி ; ஐயன் = தலைவன், இறைவன்)


”பாவ்தலே கீ காஸ்” என்பது காலடியில் மிதிபடும் புல் என்று பொருளாகும்.
இறைவனுடைய உண்மையான அடியவன் என்று சொல்லிக் கொள்ளும் தகுதி எனக்கில்லையாதலால் அது ஒரு கடினமான காரியம் ஆகும். ஆனால் அவனுடைய உண்மையான அடியவர்களின் காலடியில் கிடக்கும் புல்லாக இருந்தாலும் அதை பாக்கியம் என்று உணர்வேன்.

கபீரின் கூற்றிற்கு ஏற்ப இருந்தது அவர் வாழ்க்கை. எந்த ஒரு இடத்திலும் அவர் தனக்கென ஒரு முக்கியத்துவம் எதிர்பார்த்ததில்லை.யாவரும் அமர்ந்திருக்க இவர் ஒரு மூலையில் நின்று கொண்டே காற்றாடியை பிறர்க்காக விசிறிக் கொண்டிருப்பார். தான் கடவுளுக்கு அடிமையென்பது உண்மையானால் எல்லோருள்ளும் இருக்கும் அந்த கடவுளுக்கு அதே அளவு மரியாதை காட்டவேண்டும் என்று உறுதியாக நம்பியதே அதற்கு காரணம்.

சாலையில் போய்கொண்டிருக்கும் பொழுது அவர் யாரையும் தாண்டிச் செல்ல மாட்டார். முன்னே செல்வோரது நிழலையும் மிதியாது நடப்பார். பிறர் அமர்ந்திருக்கையில் சரி சமமாக அமர மாட்டார். வேறொருவர் புகைப்பதற்கு புகையிலை தயாரித்துக் கொடுத்தால் அதை ஏற்க மாட்டார். ஆனால் தான் யாவருக்குமாக புகையிலையை தயார் செய்து கொடுப்பார். ”எனக்கு எந்த பெரிய காரியமும் தெரியாது. என்னால் முடிந்த சிறிய சேவை இது தான். அதை தயவு செய்து மறுக்காதீர்கள்” என்று பிறரிடம் வேண்டிக்கொள்வார்.

இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைக்கப்பட்டு பிரசாதமாகக் கொடுக்கப்பட்டாலன்றி எங்கும் உணவை ஏற்கமாட்டார். உணவிலே உப்பும் இனிப்பும் அறவே ஒதுக்கினார். உலக விஷயங்களில் அவை ஈடுபாட்டை உண்டு செய்யும் என்று நம்பியதே காரணம்.

ஒரு முறை தன் வீட்டில் குவிக்கப் பட்டிருந்த அரிசி தவிடு கண்டு “உயிரோடு உடல் ஒட்டியிருக்க இதை தின்றால் கூட போதுமே! எதற்காக வீண் ருசிக்கு அடிமையாக வேண்டும்” என்ற எண்ணம் அவருக்குத் தோன்றியது. அடுத்த இரண்டு நாட்களும் நீரை தவிட்டில் கலந்து தவிடையே உணவாகக் கொண்டார். இதைக் கண்ட வீட்டார் உடனே அத்தனை தவிடையும் விற்றுத் தீர்த்தார்கள்.

சுவாமி விவேகானந்தர் அவரை மடத்திலேயே தங்கி விடும்படி ஒரு முறை வேண்டிக்கொண்டார். ஆனால் குரு ராமகிருஷ்ணர் இல்லறத்திலே இருக்குமாறு பணித்திருப்பதால் மடத்தில் ஒரு சன்யாசியாக இருக்க முடியது என்ற தன் இயலாமையை நாக் மஹாஷயர் விளக்கினார்.

நாக் மஹாஷயர் உலகத்தாரின் பார்வைக்கு இல்லறத்தில் இருப்பினும் அவர் மனம் இல்லற சுகத்தை நாடியதில்லை. தந்தையின் வற்புறுத்தலுக்காக இல்லறத்தான் செய்ய வேண்டிய விருந்தோம்பல் போன்ற கடமைகளை நிறைவேற்ற மட்டுமே இரண்டாவது மணம் செய்து கொண்டார்.

அவருடைய ஒவ்வொரு செயலிலும் புலன்களையும் மனதையும் அவர் கட்டியாளுவதில் காண்பித்த தீவிரம் புலனாகிறது. நாக் மஹாஷயர் போன்ற மஹாத்மாக்கள் தாமரை இலை நீர் போல் உலகில் வாழ்பவர்கள். உலகத்தவர்கள் மத்தியில் சாமானியர் போல் இல்லறத்தில் இருந்த போதும் உடன் உறவாடுபவர் குற்றங் குறைகள் இவர்களுக்கு ஒட்டாது. கபீர் அதை, பாம்பு சந்தனமரத்தில் ஊர்வதற்கு ஒப்பிடுகிறார்.

चन्दन जैसा साधु है, सर्पहि सम संसार ।
वाके अंग लपटा रहे, मन मे नाहि विकार ॥


உரவோர் மனமொக்கும் ஈகம், உலகோர் போக்கொக்கும் நாகம் |
உறவாடினும் ஊடே யிருந்து, ஊறுமோ பிறன் தன் விகாரம் ||

( ஈகம்= சந்தனம்; பிறன் தன் விகாரம்= பிறருடைய குற்றம் குறைகள்)


சந்தன மரத்தின் கிளைகளில் விஷமுள்ள நாகம் ஊர்ந்து திரிந்தாலும் அதனுடைய விஷம் மரத்தினுள் ஊறாது. அதன் சேர்க்கையால் சந்தனத்தின் மேன்மை எவ்வகையிலும் குறைவு படுவதில்லை. அதைப்போல் சாதுகளின் மனம் பிறருடைய குறைகளை கண்டு சஞ்சலப்படுவதில்லை

கிரீஷ் சந்திர கோஷ் பலமுறை வேடிக்கையாகக் குறிப்பிடுவதுண்டு. இரண்டு பேர்களை தன் வலையில் வீழ்த்த முடியாமல் மகாமாயை தோற்றுப்போனாள்.

முதலில் நரேன். அவள் தன் வலையை பெரியதாக்கியதளவும் நரேன் அதை விட பெரியவராகி வலையில் சிக்காமல் மாயையின் முயற்சிகளைத் தோற்கடித்தார்.

இரண்டாவதாக நாக்மஹாஷய். இவரோ தன்னை குறுக்கிக் கொண்டே போய் (அஹங்காரமே இல்லாமல் போய்) வலையின் எந்த ஒரு சிறிய கண்ணிலிருந்தாவது தப்பித்து வெளியேறிவிடுவார். இப்படி இவரையும் மாயையால் பிடிக்க முடியவில்லை.

அவரைப் பற்றி விவேகானந்தர் கூறுகையில்: “நான் உலகின் பல பாகங்களிலும் பயணம் செய்து பலவாறான மக்களை கண்டிருக்கிறேன். ஆனால் நாக மஹாஷயரைப் போன்று ஒரு மஹாத்மாவை கண்டதில்லை.

सब बन तो चन्दन नहीं, शूरा के दल नाहिं ।
सब समुद्र की मोती नहीं, यो साधु जग माहिं ॥


அடவி யெலாம் சந்தனமல்ல, படையெல்லாம் சூரரும் அல்லர் |
கடலெல்லாம் முத்தும் அல்ல, மனிதரெலாம் ஞானியர் அல்லர் ||

காட்டிலுள்ள மரங்கள் எல்லாம் சந்தன மரங்கள் அல்ல, அரசனுடைய படையில் உள்ளவர்கள் எல்லாம் பெரும் சூரர்கள் அல்லர்; மிகப் பெரிய கடலில் முத்து மிக மிகக் குறைவே அது போல மானுட ஜென்மம் எடுத்தவர்களில் உண்மையான ஞானியர்கள் மிக மிகக் குறைவே

மஹான் நாக் மஹாஷய் வாழ்க்கை அப்படியே கபீரின் வரிகளுக்கு உயிர் கொடுப்பவையாக அமைந்து விட்டது. இன்றும் எத்தனை துர்காசரண் நாக் நம்மிடையே உலவுகின்றனரோ ? அவர்களை அறியாமலே காலம் போய்க்கொண்டிருக்கிறது.

கட்டுரையின் தலைப்பு, சிறுமணவூர் முனுசாமி முதலியார் இயற்றிய நடராஜர் பத்து என்ற பதிகத்தின் கடைசி பாடலை ஒட்டி வந்தது.
...........
....................யென்முன்
கனி போலவேபேசி, கெடுநினைவு நினைக்கின்ற
கசடர்களையுங் கசக்கி, கர்த்த நின் தொண்டராம்
தொண்டர்க்குத் தொண்டரின் தொண்டர்கள்
தொழும்பனாக்கி, இனியவள மருவு சிறுமணவை
முனுசாமி யெனை யாள்வதினி யுன்கடன்காண்,
ஈசனே சிவகாமி நேசனே யெனையீன்ற
தில்லை வாழ் நடராஜனே

(தொழும்பன் = அடியவன், இழிஞன்)

10 comments:

 1. அடவி யெலாம் சந்தனமல்ல, படையெல்லாம் சூரரும் அல்லர் |
  கடலெல்லாம் முத்தும் அல்ல, மனிதரெலாம் ஞானியர் அல்லர்


  நன்றாக இருக்கு.

  ReplyDelete
 2. ஆஹா. அருமை. ஒவ்வொரு மொழியும் நாக் மஹாஷயர் அவர்களுக்குத்தான் எப்படி பொருந்துகிறது!

  //உரவோர் மனமொக்கும் ஈகம், உலகோர் போக்கொக்கும் நாகம் |
  உறவாடினும் ஊடே யிருந்து, ஊறுமோ பிறன் தன் விகாரம் ||//

  எனக்கு மிகவும் பிடித்த வரிகள் இவை.

  நடராஜர் பத்து எனக்கு பிடிக்கும். நெடு நாட்களுக்கு பின் நேற்றுதான் படித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் அதனையே குறிப்பிட்டிருந்ததைக் கண்டதும் ஆச்சர்யம்+மகிழ்ச்சி :)

  ReplyDelete
 3. வருக குமார்.

  //மனிதரெலாம் ஞானியர் அல்லர் //

  யாவருமே ஞானியராகி இருந்தால் அவனுக்கே அவன் நாடகம் 'போர்' அடித்து விடும். :)
  நன்றி

  ReplyDelete
 4. நல்வரவு கவிநயா,

  // ஒவ்வொரு மொழியும் நாக் மஹாஷயர் அவர்களுக்குத்தான் எப்படி பொருந்துகிறது!//

  ஒவ்வொரு ஈரடிக்கும் பொருத்தமான நிகழ்வுகளை பல மகான்களின் வாழ்க்கையிலும் காணக்கூடும். அவற்றை ஒருவரை மையப்படுத்தி சொன்னால் கபீர் சொல்வதன் முழுபரிணாமும் நன்கு மனதில் பதியும் என்ற எண்ணத்திலேயே நாக் மஹாஷயரை பற்றி எழுதினேன்.

  நடராஜர் பத்து பற்றி முதலில் “மானாட மழுவாட “ என்று துவங்கும் பாடலை தேடத் துவங்கிய போது கண்டேன். மிகவும் கருத்து செறிவுள்ள
  பாடல்கள்.

  ரசித்து படித்து வருகிறீர்கள். நன்றி

  ReplyDelete
 5. நரஸிம்ம மேஹதா வைணவ இலக்கணங்களைக் கூறியுள்ளார்;
  அது காந்தீஜீ மிகவும் விரும்பிய பாடல்.
  துகாராம் மஹராஜின் ஸத்ஸங்கத்தில் அவர் குயவரான கோரா கும்பாரை நோக்கி வைணவர் அல்லாதோரை ஸத்ஸங்கத்திலிருந்து வெளியேற்றச் சொல்கிறார். ’கோரா’ பச்சை மண்பாண்டங்களைச் சீர் செய்யும் மரக்கட்டையை எடுத்து ஒவ்வொருவர் தலையிலும் தட்டுகிறார்.
  சினம் கொள்வோர் வெளியேற்றப் படுகின்றனர்.
  யுதிஷ்டிரரின் ராஜஸூய யாகத்தில் ஒவ்வொருவரும் கௌரவமான பணிகளைப் பொறுப்பேற்றுக்கொள்ள, கண்ணனோ
  எளிய அந்தணர்களின் பாதங்களைத் தூய்மை செய்யும் பணியை
  மேற்கொள்கிறான்.
  அஹங்காரத்தின் நாசமே ஆன்மிகத்தின் முதற்படி என்பதை நாக மஹாசயரின் சரிதம் நமக்கு விளக்குகிறது.

  தேவ்

  ReplyDelete
 6. நல்வரவு தேவராஜன்,

  //துகாராம் மஹராஜின் ஸத்ஸங்கத்தில் அவர் குயவரான கோரா கும்பாரை நோக்கி வைணவர் அல்லாதோரை ஸத்ஸங்கத்திலிருந்து வெளியேற்றச் சொல்கிறார் //

  துகாரமும் கோரகும்பாரரும் ஒரே காலத்தவர்களா ! நல்ல புது விஷயம்.

  அஹங்கார நாசத்திற்கு அழகான உதாரணங்களை எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள். மிக்க நன்றி.

  ReplyDelete
 7. தொடர்ந்து படித்து வருகிறேன்.
  சிறப்பாக இருக்கிறது.
  தொடருங்கள்..

  ReplyDelete
 8. நல்வரவு ஜீவி,

  // தொடர்ந்து படித்து வருகிறேன் //

  தேனீக்களின் வரவு பூக்களுக்கு சொல்லாமலே தெரியும் !

  [பூவன சொந்தக்காரர்க்கு சொல்லித் தெரிய வேண்டுமா :)) ]

  பின்னூட்டமெனும் மகரந்தத்திற்கு நன்றி.

  ReplyDelete
 9. பெரியோர் தம் பெருமை பேசவும் அரிதே. மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 10. வாங்க குமரன்,

  //பெரியோர் தம் பெருமை பேசவும் அரிதே //

  அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது
  மானிடராய் பிறந்தகாலை, கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தல் அரிது
  கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறந்தகாலையும் ஞானமும் கல்வியும் தான் நயத்தல் அரிது
  ஞானமும் கல்வியும் தான் நயந்த காலையும்
  தானமும் தவமும் தான் செய்தல் அரிது
  தானமும் தவமும் தான் செய்தகாலை
  வானவராய் மாற வழி பிறந்திடுமே


  தாங்கள் ’அரிது’ என்று குறிப்பிட்டவுடன் KBS குரலில் கேட்ட ஔவையின் இந்த பாடல் நினைவுக்கு வந்தது. பிழைகள் இருப்பின் பொறுத்தருள்க.

  நன்றி

  ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி