Saturday, September 06, 2008

பெருநெறி பற்றும் பேராளர்

வால்-பையன் ஒருவன். துறுதுறுவென்று அலைபாயும் கண்கள். ஒரு நிமிடம் கூட கை கால்களை வைத்துக் கொண்டு சும்மா இருக்க இயலாது. எதை வேண்டாம் என்று தடுப்பரோ அதை செய்து பார்த்துவிடும் துடிப்பு. அவன் கை வைத்தால் அந்த பொருள் அதோகதிதான். ஆனால் அவன் செல்லப்பிள்ளை.

ஓரொரு சமயம் ”அம்மா, இனிமே செய்யமாட்டேன், நல்ல பையனா இருக்கேம்மா ” என்று அடிபட்டு அழும்போது கோபமெல்லாம் கரைந்து அவனை உச்சிமுகந்து குளிர்ந்து போகிறாள் தாய்.

அந்த இன்பம் சிறிது நேரத்திற்குத்தான். அது அவளுக்கும் தெரியும்.

பின்னர் மீண்டும் தொடர்கிறது அர்ச்சனை, “சனியன், குரங்கு! கைய வச்சதெல்லாம் நாசம். ஊர்ல எல்லோருக்கும்தான் பொறக்கலையா? அது என்ன! எனக்குன்னு இப்படி ஒரு பிசாசு வந்து வாய்ச்சிருக்கு'' . ஆற்றாமையால் புலம்புகிறாள் அவன் தாய்.

பிறத்தியாருக்கு சிரிப்பு, வேடிக்கை. அந்த தாயின் நிலையை புரிந்து கொண்டவர் அவளுடைய மாமியார் மட்டும் தான். “ஹும் அப்பனைப் போல பிள்ளை. போகப் போக சரியாயிடும் பாரேன். இன்னிக்கு எவ்ளோ சாதுவா இருக்கான். அவன் குழந்தையா இருந்த போது படுத்தின பாடு இருக்கே...........” கதை தொடர்கிறது.

நம்முடைய மனதுடன் நமது போராட்டம் இப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது. அது செல்லப்பிள்ளை. இழுத்த இழுப்பெக்கெல்லாம் ”முடியாது” என்று சொல்ல முடியாமல் அதன் வழியே ஓடுகிறது சித்தம்.

நல்லதற்கு அல்ல என்று புரிந்தாலும் ஒரு இயலாமை. வாழ்க்கையில் துன்பம் வருத்தும் போது ஞானிகளின் பேச்சை கேட்பது போலவும் புரிந்து கொண்டது போலவும் ஒரு பாவனை. ஆனால் வேதாளம் மீண்டும் மரம் ஏறிக்கொள்கிறது.

பில்வமங்கள் என்பவன் இப்படித்தான், தன் மனதின் போராட்டத்தை வழிக்குக் கொண்டுவர பல வருடங்கள் காட்டிலே சென்று தவம் செய்தான். சற்றே சித்தம் தெளிந்தது. இப்போது ஊருக்குள் செல்வதால் மக்களுடன் பழகுவதால் ஏதும் கேடு வராது என்றெண்ணி பிட்சைக்காக ஊருக்குள் போய் வர ஆரம்பித்தான். ஒருநாள் வீதியிலே மிக அழகான பெண்மணி நடந்து செல்வதைக் கண்டதும் வேதாளம் மரமேறியது. அவளையே பின் தொடர்ந்தான். அவள் தன் வீட்டுக்குள் சென்றதும் இவன் வாயிலருகே நின்றிருந்தான்.

வெளியே ஒரு சாது பிட்சைக்காக நிற்கிறார் என்றெண்ணி அப்பெண்மனியின் கணவர் அவரை மரியாதையுடன் வரவேற்கிறார். வெளியே நின்றபடியே ”வீட்டின் எஜமானியை நான் காணலாமா?” என்று வினவுகிறான் பில்வமங்கள். அவளும் வந்து பாதநமஸ்காரம் செய்கிறாள். “ அம்மணி தங்கள் தலையில் உள்ள கொண்டை ஊசியை தரமுடியுமா” என்று யாரும் கேட்காத யாசகம் கேட்கிறான். ஏதும் புரியாதவளாய் கொண்டையின் ஊசியை கழற்றிக் கொடுத்தாள் அப்பெண்மணி. அடுத்து அவருடைய செய்கை யாவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

“கிருஷ்ணனைத் தவிர வேறெதுவும் நீ காணக் கூடாது” என்று கூறியபடியே தன் இருகண்களையும் அந்த ஊசியினால் அங்கேயே குருடாக்கிக் கொண்டான்.

மனம் சில கணங்களே தடம் புரண்டாலும், அவ்வளவு நாட்கள் செய்த தவத்தின் பயனாய், (பின்னாலே தரப் போகும் கிருஷ்ண தரிசனத்திற்காக) தன்னைத்தானே தண்டித்துக் கொள்ளும் மனவலிமையை அந்நேரத்தில் இறைவனே கொடுத்தான் போலும்.

பிற்காலத்தில் ஸ்ரீ கிருஷ்ண கர்ணாம்மிர்தம் பாடிய லீலா ஷுகர் அவர்களின் ஆன்மீக முன்னேற்றத்திற்கான மனப் போராட்டம் அத்தகையது.

இந்த நிலையைக் கண்டு கபீரும் பரிதாபம் கொள்கிறார்.

मन के मारे बन गये, मन तजि बस्ति मांहि ।
कहैं कबीर क्या कीजिए, यह मन ठहरै नांहि ॥


மனமொ ழியவனம் புகுவாய், மாய்வ தில்லை மனமே
மனம்நிற்க வழியு மேது, கபீரது நிலையின்றி திரியுமே

புலன்களால் அலைக்கழிக்கப்படும் வரை மனம் ஒரு நிலைகொள்ளாது. அந்த அவத்தையை திருநாவுக்கரசர் இப்படிச் சொல்கிறார்.

ஒரு முழம் உள்ள குட்டம் ஒன்பது துறையுடைத்தாய்
அரைமுழம் அதன் அகலம் அதனில் வாழ் முதலை ஐந்து

பெருமழை வாழ்தல் பற்றி கிடந்து நான் பிதற்றுகின்றேன்

கருமுகில் தவழும் மாடக் கச்சியேகம்ப னீரே


( குட்டம்= குட்டை, நீர்நிலை; பெருமழை= பெரு நெறி, முக்திக்கான ஞானம்; முதலை ஐந்து= ஐம்புலன்கள்)

ஐம்புலன்களின் ஆட்டம் அடங்காத வரையில் நமது ஆன்மீக நாட்டம் வெறும் 'பிதற்றலாக'த்தான் இருக்கும் என்று இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது.

கட்டுபாடுள்ள மனம் தான் ஞானத்திற்கு வழி காட்டமுடியும். ஆனால் பொறி வழித் திரியும் அதனை பிசாசு, குரங்கு, சனியன் என்று பலவாறாக பலர் வைதாலும் அது செல்லக் குழந்தைதான். அதைவிட்டால் நம் பிறவிக்கு அர்த்தம் கிடையாது. எப்படி? கபீர் தரும் இந்த உதாரணத்தை பார்ப்போம்.

कुंभै बांधा जल रहै, जल बिन कुंभ न होय ।
ज्ञानै बांधा मन रहै, मन बिनु ज्ञान न होय ॥


கலசத் துள்ளே நீரடக்கம், நீரின்றி யதுகலச முமாகுமோ
ஞானியுள் மனமொ டுங்கும், மனமின்றி ஞானமும் வருமோ


ஒரு சிறிய செம்பினுள் நீரைப்பிடித்து மாவிலையும் தேங்காயும் அதன் மேல் வைத்து “கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி.... என்று பிரார்த்திக்கும் போது அது கலசம் என்ற ஒரு மேலான அந்தஸ்து பெறுகிறது. சிவோஹம் சிவோஹம் என்றோ, ஸோஹம் ஸோஹம் என்றோ மனதை நிறுத்த முடிந்தால் நம் பிறவியும் சிவனடியைப் பற்றிக்கொள்ள தகுதியுடையதாகிறது.

ஆனால் மனம் என்று ஒன்று இல்லாமலே போனால் இதை எப்படி செய்ய முடியும்? அல்ஜெமிர் (Alzhemier disease) வியாதியால் பீடிக்கப் பட்டவர்களுக்கு மனம் வேலை செய்யாது (செய்தாலும் அதை வெளிப்படுத்த இயலாது) அப்படி மனமற்றவர்களை ஞானிகள் என்று ஏற்றுக் கொள்ளுமா உலகம் ?

ஞானிகளிடம் மனம் முழு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும். உடல் வலிமையுடன் கூடிய ஆற்றல் உடையவனை வீரன் என்று சொல்வர். மன வலிமை மிக்கவர்கள் தீரன் எனப்படுவர்.

யாழ்பாணத்து யோகசுவாமி ரமணாசிரமத்திற்கு விஜயம் செய்த போது இரு ஞானிகளுக்கும் இடையில் பேச்சு பரிவர்த்தனை எதுவும் இருக்கவில்லை. திரும்பி செல்லும் வழியில், வெகு நேரத்திற்குப் பின் “தீரனடா அவன்” என்று மட்டும் குறிப்பிட்டாராம்.

இந்த அடங்காத மனதை வழிபடுத்துவது எப்படி?

ரமணகீதை ”தீரம் சேர் புத்தியினால்” என்று வழி சொல்கிறது.

தீரஞ்சேர் புத்தியினாற் சித்தத்தை மெல்ல மெல்ல
நேரச் செயவேண்டு நிச்சலன - மாரதனே

சித்தத்தை யான்மாவிற் சேர்த்திடுக மற்றெதுவு

மித்தனையு மெண்ணிடாதே மந்தி- யொத்தே (26)


எதுவுந் திரமின்றி யென்றுமலை சித்த
மெதெதனைப் பற்றியே யேகு-மததினின்

றீந்த்தந்தச் சித்தத்தை யெப்போது மான்மாவிற்
சேர்த்தித் திரமுறவே செய்யிங்ஙன் - சேர்த்தே (27)

இரண்டாவது பாடலை பிரித்து படித்தால் :
.
..................................... மந்தி ஒத்தே
எதுவும் (ஸ்)திரம் இன்றி என்றும் அலை சித்த(ம்)
எதெதனைப் பற்றியே ஏகு(ம்)- அததனின்(று)
ஈந்து அந்தச் சித்தத்தை எப்போதும் ஆன்மாவில்
சேர்த்து (ஸ்)திரமுறவே செய் இங்ஙன் - சேர்த்தே


ஆன்மாவை உணர்ந்த ஞானியால் மட்டுமே ஆன்மாவை உணர்விக்க முடியும்.
அப்படி வழிகாட்ட ஒரு குரு கிருபை கிடைக்காத வரையில் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

லீலாசுகரின் பிரபலமான 'கஸ்தூரி திலகம் 'என்று தொடங்கும் பாடலை இந்த சுட்டியில் கேட்கலாம். வலையேற்றியிருக்கும் அன்பருக்கு நன்றி.

அதையே பண்டிட் ஜஸ்ராஜ் அவர்கள் குரலில் கேட்க

12 comments:

 1. //கலசத் துள்ளே நீரடக்கம், நீரின்றி யதுகலச முமாகுமோ
  ஞானியுள் மனமொ டுங்கும், மனமின்றி ஞானமும் வருமோ//

  மனசை செல்லப் பிள்ளைன்னு ஆரம்பிச்சு அழகா சொன்னீங்க. இருந்தாலும் தொல்லை, இல்லாட்டியும் கஷ்டம். என்ன செய்யறது :(

  ReplyDelete
 2. //கலசத் துள்ளே நீரடக்கம், நீரின்றி யதுகலச முமாகுமோ
  ஞானியுள் மனமொ டுங்கும், மனமின்றி ஞானமும் வருமோ

  ஒரு சிறிய செம்பினுள் நீரைப்பிடித்து மாவிலையும் தேங்காயும் அதன் மேல் வைத்து “கங்கே ச யமுனே சைவ கோதாவரி சரஸ்வதி.... என்று பிரார்த்திக்கும் போது அது கலசம் என்ற ஒரு மேலான அந்தஸ்து பெறுகிறது. சிவோஹம் சிவோஹம் என்றோ, ஸோஹம் ஸோஹம் என்றோ மனதை நிறுத்த முடிந்தால் நம் பிறவியும் சிவனடியைப் பற்றிக்கொள்ள தகுதியுடையதாகிறது.//

  கபீரன்ப! அருமை! அருமை!
  விவரணையாக விவரித்து, முத்தாய்ப்பாக முடித்த விதம் அருமை!

  ReplyDelete
 3. வருக கவிநயா,

  //....இருந்தாலும் தொல்லை, இல்லாட்டியும் கஷ்டம் //

  ’தாரே ஜமீன் பர்’ திரைப் படத்தில் போர்டிங் பள்ளியில் கணவனின் நிர்பந்தத்திற்காக தம் மகனை சேர்த்து தாய் படும் துன்பம் உண்மையிலே பல குடும்பங்களில் நிகழ்வது தான்.

  ReplyDelete
 4. நல்வரவு ஜீவி,

  //விவரணையாக விவரித்து, முத்தாய்ப்பாக முடித்த விதம் அருமை//

  யோசித்து எழுதியது அல்ல அது. அந்நேரத்தில் அவன்கொடுத்த வார்த்தைகள் அவை. தங்களுக்கு பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி. தங்கள் ஆசிகள் தொடரட்டும்.
  நன்றி

  ReplyDelete
 5. கபீரன்பன் said...
  //அந்நேரத்தில் அவன்கொடுத்த வார்த்தைகள் அவை. //

  அன்பரே,
  'எழுதிச் செல்லும் விதியின் கை'.. என்பார்கள்.. எனக்கென்னவோ,
  எழுதிச் செல்லும் 'அவன்' கை என்று தான் தோன்றுகிறது.

  அந்த அனுபவம் மகத்தானது.. அனுபவிததவர்கள் அடையும் அளபரிய இன்பம் அது...'அவன்' அருளும் அதுவே.
  வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 6. ‘பாலஸ்தாவத் க்ரீடாஸக்த:
  தருணஸ்தாவத் தருணீஸக்த:’-
  ”பிள்ளைப் பருவத்தில் மனம் விளையாட்டைப் பற்றுகிறது; வாலிப வயதில் அது மங்கையரைப் பற்றுகிறது.” என்பார் ஆதி சங்கரர்.

  ஆன்மிக ஸாதனைகளின் போதும் அதன் ஆட்டம் அடங்குவதில்லை; அர்ஜுனனும் அது குறித்தே வினா எழுப்புகிறான் கீதையில்.
  ‘மந ஏவ ஹி மனுஷ்யாணாம் காரணம் பந்த மோக்ஷயோ:’ என அச்சுதனும் விடை பகர்கிறான்.

  காமம் உலகியற்கை என்பான் லோகாயதன்; மனத்தை அடக்கிவிட்டால் காமம் தோன்ற வழி ஏது என்பான் ஆன்மிகவாதி.

  இது அன்றிலிருந்து இன்று வரை அனைவருமே எதிர்கொள்ளும் ஒரு
  ‘ Universal ‘ ப்ரச்னை.

  ஸ்வாமி ராம் ஸுக தாஸ் பொறி-புலன்களின் சார்பு நீங்கிய (கரண நிரபேக்ஷ சைலி )ஒரு வழியைத் தமது ‘ஸாதக ஸஞ்ஜீவநி’ நூலில் கூறுகிறார்.
  இது உலகியல் ரீதியாகப் பற்று நீங்கிய செயல் பாட்டுக்கும் உதவுதாக உள்ளது;ஸாதனைகளின் போது செருக்கு ஏற்படுவதையும் தடை செய்கிறது.
  ஸஹஜ நிலைக்கும் ஒரு ஸாதகனை விரைவில் அழைத்துச் செல்கிறது.

  முதலில் கடினம் போல் தோன்றினாலும் இது ஓர் எளிய மார்கம் என்பார் அப்பெருந்தகை.

  தேவ்

  ReplyDelete
 7. //ஒரு முழம் உள்ள குட்டம் ஒன்பது துறையுடைத்தாய்
  அரைமுழம் அதன் அகலம் அதனில் வாழ் முதலை ஐந்து
  பெருமழை வாழ்தல் பற்றி கிடந்து நான் பிதற்றுகின்றேன் //

  ரொம்ப சரியாத் தான் சொல்லி இருக்கார், அப்பர் சுவாமிகள், அதைவிட அதைத் தேடி எடுத்து கபீரின் கனிமொழிகளோடு இணைப்பது இருக்கிறதே, அது தான் வியப்பாய் இருக்கு. நல்லாத் தொகுத்துக் கொடுக்கிறீங்க. முடிந்தால் ஒரு பிடிஎப் டாகுமெண்டாகவோ மின் நூலாகவோ தரலாம். இது ஒரு வேண்டுகோள் தான்.

  ReplyDelete
 8. நன்றி தேவராஜன்,

  //ஸ்வாமி ராம் ஸுக தாஸ் பொறி-புலன்களின் சார்பு நீங்கிய (கரண நிரபேக்ஷ சைலி )ஒரு வழியைத் தமது ‘ஸாதக ஸஞ்ஜீவநி’ நூலில் கூறுகிறார்//

  அடுத்தமுறை கீதா பிரஸ் புத்தகக்கடை பார்க்கும் போது இந்த புத்தகத்தை வாங்கிவிடுகிறேன். நன்றி

  ReplyDelete
 9. வருக வருக கீதாமேடம்,

  //முடிந்தால் ஒரு பிடிஎப் டாகுமெண்டாகவோ மின் நூலாகவோ தரலாம் //

  அதற்கான காரியங்கள் நடந்து கொண்டிருக்கிறது. தங்களின் ஆசிகளால் விரைவில் நிறைவேறட்டும். நன்றி.

  ReplyDelete
 10. சொல்லால் மனத்தால் தொடராச்சம் பூரணத்தில்
  நில்லா நிலையாய் நிலை நிற்பதென்னாளோ ?

  என்ற தாயுமானவர் பாடல் நினைவுக்கு வருகிறது.

  சுப்பு ரத்தினம்.
  தஞ்சை.
  http://vazhvuneri.blogspot.com

  ReplyDelete
 11. சுப்புரத்தினம் ஐயா வணக்கம் நல்வரவு.

  தங்கள் சுட்டி காட்டியிருக்கும் பாடல் இன்னொரு தாயுமானவர் பாடலை நினைவூட்டுகிறது

  சொல்லிற்பதர் களைந்து சொல் முடிவு காணாதார்
  நெல்லிற்பதர் போல் நிற்பார் பராபரமே.


  ஆசிகளுக்கு நன்றி

  ReplyDelete
 12. "ஐம்புலன்களின் ஆட்டம் அடங்காத வரையில் நமது ஆன்மீக நாட்டம் வெறும் 'பிதற்றலாக'த்தான் இருக்கும் என்று இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது."

  ம்ம்ம் திரும்பப்த்திரும்ப மனதுள் இருத்திக்கொள்லா வேண்டிய வரிகள்.

  ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி