Sunday, August 10, 2008

தண் மதிக்கு ஏங்கும் குமுதம்

இராமகிருஷ்ணரின் நன்கு அறியப்பட்ட சீடர்களில் பெரும்பான்மையோர் துறவிகள். இல்லறத்தில் இருந்துகொண்டு ஆன்மீகத்திலும் பூரணமாய் முன்னேறியவர்களும் உண்டு. அதில் பலரால் அறியப்பட்டவர் M என்ற பெயரில் ராமகிருஷ்ணரைப் பற்றியும் அவரது அருளுரைகளைப் பற்றியும் தொகுத்து வந்த மகேந்திரநாத் குப்தா எனப்பட்ட கல்லூரி பேராசிரியர்.

இன்னும் ஒருவர் உண்டு அவரைப்பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. ஏனெனில் அவர் தொண்டர் அடிப்பொடியாக, எளியருக்கும் எளியவனாக வாழ்க்கையை கழித்தார். 'நாக் மஹாஷய்' என்று போற்றப்பட்ட துர்காசரண் நாக் ஒரு மருத்துவர்.

வழக்குரைஞர்கள், பொறிஞர்கள், மருத்துவர்கள் போன்றோர்களுக்கு தம் தொழில் சம்பந்தமான கர்வம் இருக்கும் என்று இராமகிருஷ்ணர் பொதுப்படையாகச் சொன்னதை ஆத்மார்த்தமாக எடுத்துக்கொண்டு, தனது ஆன்மீக முன்னேற்றத்திற்கு தடையாகும் எனக்கருதியதால் மருந்து புட்டிகளை கங்கையில் வீசி எறிந்து அத்துறையை கைவிட்டவர். அப்பேர்ப்பட்ட ஒரு குரு பக்தி.

தந்தையை மகிழ்விக்க இரண்டாம் மணம் செய்து கொண்டார். குரு ராமகிருஷ்ணரின் அறிவுரைப்படி இல்லறத்திலே இருந்தார். ஆனால் மனமோ காளி தேவியின் திருவடிகளையே நினத்திருந்தது. அவருக்கு பரமஹம்சரின் தொடர்பு கடைசி நான்கு வருடங்களே வாய்த்தது.

அவருக்கு இருந்த தீவிர இறை நாட்டத்தை விவேகானந்தருடைய வார்த்தைகளிலே காண்போம்.

”குரு ராமகிருஷ்ணரின் மறைவுக்கு பிறகு நாக் மஹாஷய் தீவிர உபவாசம் இருப்பதாகக் கேள்விப்பட்டு நானும் ஹரிபாயும் அவர் கல்கத்தாவில் தங்கியிருந்த சிறிய ஓட்டு வீட்டை தேடி அடைந்தோம். படுத்திருந்த அவர்
எழுந்தார். 'மஹாஷய் இன்று உங்கள் வீட்டில் தான் பிட்சை' என்றேன். நாங்களும் உணவு உண்டு அவரையும் உட்கொள்ள செய்ய வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். மிக்க சந்தோஷத்துடன் சாமான்களை தந்து நாங்கள் குளித்து தயாராவதற்குள் உணவு தயாரித்து வைத்திருந்தார். அவரையும் கூட அமர்ந்து உண்பதற்காக அழைத்தும் மறுத்து விட்டார். சரி, நாம் உண்ட பின்னால் அவரை உண்ண வைக்கமுடியும் என்றெண்ணி அவருக்காக சற்று எடுத்து வைத்துவிட்டு உணவை முடித்துக் கொண்டு அவரை உட்கொள்ள மீண்டும் வேண்டினோம்.

வற்புறத்தலில் அவருக்கு மனதின் ஆற்றாமை பெருகி, அன்னம் இருந்த சட்டியை போட்டு உடைத்து, தலையில் அடித்துக் கொண்டு 'கடவுளை அறிய இயலாத இந்த உடம்பிற்கு உணவும் ஒரு கேடா' என்று புலம்ப ஆரம்பித்து விட்டார். நாங்கள் திக்பிரமை பிடித்தவரானோம். மிகப் பெரிய பிரயாசத்திற்கு பிறகே கொஞ்சம் உணவு உட்கொண்டார். கடவுளுக்கான அப்படி ஒரு தீவிர பக்தியைக் காண்பது அரிது.”

அந்த நிலையை கபீரின் வார்த்தைகளில் காண்போம்.

साधू भूखा भाव का, धन का भूखा नाहीं ।
धन का भूखा जो फिरै, सो तो साधू नाहीं ॥


ஸாதூ பூகா பாவ் கா, ன் கா பூகா நாஹி
தன் கா பூகா ஜோ ஃபிரை, ஸோ தோ ஸாதூ நாஹி


அருளுக்கே பசித்திருப்பான் சாது, பொருளுக்கென யில்லை
பொருளின் பசிவந்தால் அவனுள், அவன் சாதுவும் இல்லை

மேற்கண்ட நிகழ்சியில் அருளின் பசியை பார்க்கிறோம். நாக் மஹாஷயருக்கு பொருள் திரட்டும் நோக்கம் அறவே இருக்கவில்லை என்பதை இன்னொரு சம்பவத்திலிருந்து தெரிய வருகிறது. உப்பளங்களுக்கு அதிபதிகளாக இருந்த
'பால்' கம்பெனியாரின் குடும்பத்தில் ஒருவருக்கு கடுமையான வைசூரி நோய் கண்டிருந்தது. வேறு எந்த சிகிச்சை முறையும் பலன் தராது போகவே அவர்கள் நாக் மஹாஷயரை மருந்து தரும்படி கேட்டுக்கொண்டனர். அவர் கொடுத்த ஹோமியோபதி மருந்துகள் உடனடியாக குணம் தந்தது. மகிழ்ந்து போய் அவர்கள் ஒரு பெரும் தொகையை சன்மானமாகத் தர முன்வந்தனர். ஆனால் இவரோ அதை மறுத்துவிட்டார். அதையும் மீறி அவர்கள் மிக வற்புறுத்திய போது ஒரு குழந்தையைப் போல தேம்பி அழ ஆரம்பித்து விட்டார். “கடவுளே எனக்கு ஏன் இந்த அறிவை கொடுத்தாய்? அது இல்லாமல் இருந்திருந்திருந்தால் இந்த துன்பம் எனக்கு வந்திருக்காதே”.

செல்வத்தைத் துன்பத்தின் நிழலாகக் கண்டார் அவர்.

வேறொரு சமயம் அதே கம்பெனியார், போஜேஸ்வரில் அவர் ஒரு ஏற்றுமதி மேற்பார்வை செய்தபின் கல்கத்தா திரும்பிச் செல்ல எட்டு ரூபாய் நீராவி படகு கட்டணமும் குளிருக்காக ஒரு கம்பள சால்வையும் கொடுத்து வழி
அனுப்பினர். போஜேஸ்வரிலிருந்து படகுத்துறை எட்டு மைல். செல்லும் வழியில் பசியால் நலிந்திருந்த ஐந்தாறு குழந்தைகளோடு பிச்சை வேண்டிய ஒரு பெண்மணியின் துயர நிலை அவர் மனதை உருக்கி விட்டது.

லோகமாதாவையே அவளுடைய கண்களில் கண்டார். கம்பெனியார் கொடுத்த எட்டு ரூபாயையும் கம்பள சால்வையும் அவளுக்கு கொடுத்து விட்டார். இப்போது நீராவி படகுக்காரனுக்கு கொடுக்க காசில்லை. நடைப் பயணமாகவே கல்கத்தாவிற்கு கிளம்பினார். கையிலிருந்ததோ ஏழு அணாவும் ஆறு பைசாக்களும் மட்டுமே. அகலமான ஆறுகள் வந்தபோது படகுகளின் துணையில் கடந்தார். குறுகிய கால்வாய்களை நீந்திக் கடந்தார். வழியில் ஏதேனும் ஆலயங்களில் கிடைத்த பிரசாதமே பல நாட்கள் உணவானது. ஒரு வழியாக அவர் கல்கத்தா அடைந்த போது இருபத்தியொன்பது நாட்கள் ஓடிவிட்டிருந்தன. ஆனால் மனமோ சதா அன்னையின் சரணத்திலேயே லயத்திருந்தது.

நாக் மஹாஷயர் இயல்பிலேயே தன்னை ஆன்மீகத்திற்கு அருகதையற்றவராக கருதி வந்தார். விவேகானந்தர், பாவி, sinner போன்ற வார்த்தைகளை அறவே வெறுத்தவர். பாவி என்று எவனும் கிடையாது. அனைவரும் அமிருத புத்திரர்கள் என்பதே அவர் கொள்கை.

விவேகானந்தரைப் போலல்லாது தன்னை ஒரு 'பாவக் குப்பை' 'புழுவினும் கடையன்' என்றெல்லாம் நாக் மஹாஷயர் சொல்லிக்கொள்வார். அப்படி ஒரு முறை கிரீஷ் பாபு வீட்டில் சுவாமி நிரஞ்சனானந்தாவுடன் உரையாடிக் கொண்டிருக்கையில் கிரீஷ் பாபு இதைப்பற்றி வினவினார்.

“குருதேவ் அடிக்கடி சொல்வதுண்டே நாம் எப்படி நினக்கிறோமோ அப்படி ஆகிவிடுவோம் என்று. தாங்கள் ஏன் தங்களைப் பற்றி அப்படி ஒரு தாழ்வான மனப்பான்மை கொள்ள வேண்டும்?”

“என்னைப் பற்றி சொல்லிக் கொள்ள என்ன இருக்கிறது? உண்மையை சொல்வதில் என்ன தயக்கம்? என்னை சிவனென்று (சிவோஹம்) சொல்லிக் கொள்ளும் அளவுக்கு என்னுள் பக்தியோ ஞானமோ பெருகவில்லை. எலும்புகளாலும் தசைகளாலும் ஆன இந்த கூட்டின் மீது உள்ள அபிமானம் நீங்காத வரையில் நான் எப்படி சிவனாக முடியும். உங்களுடைய உதவியோடும், தாகூரின் (பரமஹம்ஸர்) அருளும் இருந்தால் என் பிறவியும் கடைத்தேறும்”

அவருடைய குரலில் இருந்த உண்மையான பணிவு, மேற்கொண்டு அதைப்பற்றிய உரையாடலை தொடரமுடியாமல் செய்து விட்டது.

அவர் ஞானியாக பரிமளித்ததன் ரகசியம் இதுதான். அழுக்குக் குட்டையிலே இருந்தாலும் ஆம்பல் சந்திரன் வரவுக்காக மட்டுமே காத்திருக்கும். சதா இறை சிந்தனையிலே ஊறிப் போயிருப்பினும் தேக நினைவு வரும் பொழுது அது ஒரு
பாழ் குட்டமாக இருக்கும் உண்மை புரியும். அவர் அந்த உண்மையைப் பேசினார்

ஆனால் மனமோ இறைவனுடன் இருந்ததால் அவருடைய முன்னேற்றத்திற்கு எந்த தடையும் இருக்கவில்லை.

जल में बसै कमोदनी, चन्दा बसै आकास ।
जो है जाको भावता, सो ताही के पास ॥


ஜல் மே பஸை கமோதினி, சந்தா பஸை ஆகாஸ் |
ஜோ ஹை ஜாகோ பாவ்தா, ஸோ தாஹி கே பாஸ் ||


அம்பரத்தே உறை மதி கண்டே, ஆம்பல் மலரும் குட்டத்தே
உம்பர்தம் உறவும் உண்டே, உள்ளத்தே எழும் நாட்டத்தே

(அம்பரம்= ஆகாயம் ; உறை=உறைகின்ற; மதி =சந்திரன் ; உம்பர்= வானோர்; குட்டம்= குளம், நாட்டம்= விருப்பம்)


இதே கருத்தைச் சொல்லும் ஒரு நீதி வெண்பா பாடல்

செந்தாமரை இரவி சேர் உதயம் பார்க்குமே
சந்திரோதயம் பார்க்கும் தண்குமுதம்-கந்தமிகும்
பூ அலரப் பார்க்கும் பொறி வண்டு, அரன் அன்பர்
தேவரவைப் பார்ப்பர் தெளிந்து

(பொறிவண்டு= புள்ளிகளுடைய வண்டு)


நாக் மஹாஷயரின் அஹங்காரமே இல்லாத பரிசுத்த நிலையை கண்ட சுவாமி நிரஞ்சனானந்தர் “ஒரு மனிதனின் அஹங்காரம் முழுதும் அழிந்துவிட்ட நிலையில் மட்டுமே நாக் மஹாஷயரின் நிலையை அடைய முடியும்.
அத்தகையவர்களின் திருவடி பூமியில் பட்ட இடமெல்லாம் புனிதமாகிவிடும்”.

சுவாமி நிரஞ்சனானந்தரின் வாக்கை உண்மையாக்குவது போல் அவருடைய வாழ்க்கை அமைந்தது. வங்காளத்தில் ப்ளேக் பெரு நோய் பெருமளவில் தாக்கிய காலத்தில் தினந்தோறும் நூற்றுக் கணக்கானோர் மடிந்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிலர் ஒரு உண்மையை கவனித்தனர். நாக் மஹாஷயர் சுற்றி வந்த பகுதிகளெல்லாம் ப்ளேக் கட்டுக்குள் இருந்தது. அதனால் தேவ்போக், போஜேஷ்வர் பகுதி மக்களெல்லாம் தம்முடைய ஊரில் ஒரு முறையாவது அவர் திருவடி பட வேண்டும் என்று அவரை வேண்டி தத்தம் ஊரில் பூஜைகள் ஏற்பாடு செய்தனர்.

साधु दरशन महाफल, कोटि यज्ञ फल लेह ।
इक मन्दिर को का पडी नगर शुद्ध करि लेह ॥


ஸாது தர்ஷன் மஹாபல். கோடி யக்ஞ் பல் லேஹ் |
இக் மந்திர் கோ கா படீ, நகர் ஷுத் கரி லேஹ் ||

சாலச் சிறந்தது சாது தரிசனம், கோடி வேள்வி செய்பலனே
ஆலயம் அம்மட்டே, ஊரையும் செய்குவான் புனிதம் அவனே

(ஆலயம் அம்மட்டே= ஆலயம் மட்டும் தானா )


பாடல் பெற்ற தலங்கள் என்று நாம் போற்றுவது அப்பெரும் தவச்சீலர்கள் வரவினால் அவ்வாலயங்களில் செய்யும் வழிபாடு விசேஷமானதாகக் கருதுகிறோம். ஆனால் அப்பெருமக்கள் கால் வைத்த இடமெல்லாம் புனிதமாயிற்று என்பதை கபீர் மூலமாகவும் நாக் மஹாஷயரின் மூலமாகவும் அறிகிறோம்.

(Nagmahasaya : Ramakrishna Math, Mylapore Chennai ISBN 81-7120-238-1)

13 comments:

 1. நாக் மஹாஷய் பற்றிக் கேட்டதில்லை இன்று வரையிலும், அறியத் தந்தமைக்கு நன்றி. பொருத்தமான பாடல்கள் தமிழிலும் தேர்ந்தெடுத்துப் போடுவதைக் கண்டால் வியப்பாய் இருக்கிறது. ரொம்ப நாட்கள் கழிச்சு வந்து எல்லாத்தையும் படிச்சேன். நன்றி.

  ReplyDelete
 2. நாக் மஹாஷயர் - ஞாபகம் இல்லையா அல்லது படித்து வெகுநாட்கள் ஆனதால் மனதில் நிற்கவில்லையா என்று தெரியவில்லை.
  ஒரு நல்ல மனிதரைப் பற்றி சொன்னதற்கு மிக்க நன்றி.

  ReplyDelete
 3. ஆகா,
  சொல்ல வந்தது ஈற்றடிகளா, அல்லது அவற்றுக்கான மஹாஷயர் கதையா - இரண்டறவாய் அல்லவோ கலந்து விட்டன, அருமை.

  ReplyDelete
 4. ஜீவாவை வழிமொழிகிறேன். நாக் மஹாஷய் அவர்களைப் போல இறைபக்தியும் குருபக்தியும் வாய்க்க வேண்டும் என்ற ஏக்கம் பிறப்பதைத் தவிர்க்க முடியவில்லை.

  ReplyDelete
 5. நன்றி கீதா மேடம்,

  //ரொம்ப நாட்கள் கழிச்சு வந்து எல்லாத்தையும் படிச்சேன் //

  நீங்க ராமரோடும், நடராஜரோடும் ரொம்ப பிசி. எழுதுவதற்கே நேரம் இருக்காது. இவ்வளவாவது நேரம் கிடைத்ததே. ரொம்ப சந்தோஷம். நன்றி

  ReplyDelete
 6. நன்றி பிரபாகரன்.

  நன்றி குமார்.

  //வெகுநாட்கள் ஆனதால் மனதில் நிற்கவில்லைய//

  நானும் இவரைப் பற்றிய குறிப்புகளை சீடர்களின் உரையாடலில் படிக்கும் பொழுது அறிய ஆவலாயிருந்தேன். பின்னொரு நாளில் அந்த புத்தகத்தை கண்டவுடன் வாங்கிவிட்டேன்.

  ReplyDelete
 7. வருக ஜீவா
  //இரண்டறவாய் அல்லவோ கலந்து விட்டன//

  ஒரு ஞானியின் வார்த்தைகளுக்கு இன்னொரு ஞானியின் வாழ்க்கையில் விளக்கம் கிடைக்கிறது.:)
  நன்றி

  ReplyDelete
 8. நல்வரவு கவிநயா,
  இந்த நாக் மஹாஷயரைப் பற்றிய கட்டுரை இன்னும் முற்றுப் பெறவில்லை. அடுத்த பகுதியும் விரைவிலேயே பதிகிறேன்.

  நன்றி

  ReplyDelete
 9. நாக் மகாஷாயின் வரலாற்றுச் சம்பவங்களை அறியத் தந்ததற்கு மிக்க நன்றிகள். இதுவரை அவரைப் பற்றி அடியேன் படித்ததில்லை. இதுவே முதல் முறை.

  ReplyDelete
 10. // எலும்புகளாலும் தசைகளாலும் ஆன இந்த கூட்டின் மீது உள்ள அபிமானம் நீங்காத வரையில் நான் எப்படி சிவனாக முடியும்.? //

  கிரீஷ் பாபுவின் கேள்வி ஞான மார்க்கத்தில் பரம்பொருளைக்காண விழையும்
  ஒவ்வொருவனும் தன்னைத் தானே கேட்கும் கேள்வியாக இருக்கவேண்டும்.

  இறையை அறிவதற்கே இவ்வுடல் இறையால் ஈயப்பட்டுள்ளது. அப்பர் பெருமான்
  ஒரு இடத்தில் இக்காயத்தினைக் கோயிலாக உணருங்கள் என்பார்.

  காயமே கோயிலாகக்
  கடிமனம் அடிமையாக‌
  வாய்மையே தூய்மையாக‌
  மனமணி இலிங்கமாக‌
  நேயமே நெய்யும்பாலா
  நிறைய நீர் அமைய ஆட்டிப்
  பூசனை ஈசனார்க்குப்
  போற்றவிக் காட்டினோமே.

  இன்னொரு இடத்தில் மறுமுறையும் அப்பர் பெருமான் சொல்வார்:

  உடம்புஎனும் மனை அகத்துள்
  உள்ளமே தகளியாக‌
  மடம்படும் உணர் நெய் அட்டி
  உயிரெனுந் திரிமயக்கி
  இடர்படு ஞானத் தீயால்
  எரிகொள இருந்து நோக்கில்
  கடம்பமர் காளை தாதை
  கழல் அடி காண லாமே.

  இவை ஒரு புறம் இருக்க, இன்னுமோர் உரத்த சிந்தனை ( loud thinking )
  எனக்கு வருவதை என்னால் தவிர்க்க இயலவில்லை.

  சுவர் இருந்தால் தானே சித்திரம் எழுதமுடியும் ?

  சுவரை இடித்துவிட்டோ அல்லது காயப்படுத்திவிட்டோ அதில்
  சித்திரம் வரைவது சாத்தியமோ ?
  ஆகவே உடலை வருத்துவதில் பயனில்லை. வருத்துவதால்
  ஞானம் பிறக்குமா ! ஆதலால், உடலைப் பேணுவதின் மூலம்
  உள்ளத்தைப் பேணவேண்டும். அதே சமயம், எது எது இவ்வுடலின்
  அன்றாட வாழ்வுக்கு ( இதை continued and imperilled existence
  எனப் பொருள் கொள்க ) தேவையானவற்றிக்கும் மேலாக எதிலும்
  கொள்ள நேரும் பற்றினைத் தவிர்த்தால் மட்டுமே இறையின் பால்
  கருத்தும் கவனமும் ஏற்படும்.

  எனவே தான் கபீரும் ஒரு இடத்தில்,
  ஆண்டவனே ! எனக்கு இத்தனை மட்டும் தாருங்கள் !
  எதனால், நானும் பசித்து இருக்கமாட்டேன், என் வீட்டுக்கு வரும்
  சாதுக்களும் பசித்து இருக்கமாட்டார் என்றார்.

  உபவாசம், பசித்திருத்தல் எல்லாமே உடலை, உள்ளத்தைத் தூய்மைப்படுத்தும்
  சாதனங்கள். பசித்து உண் என்பார்கள். பசி எடுக்கும்போது தான் பசித்தும்
  புசிக்க ஒன்றும் இல்லா மக்களின் துன்பம் தெரிகின்றது. அவர்தம் இன்னலைப்
  போக்கும் வழிகளை நாட முடிகிறது.

  கபீரான் பதிவு ஒரு ஆன்மீகக் கருவூலம்.

  சுப்பு ரத்தினம்.
  தஞ்சை.

  ReplyDelete
 11. நன்றி குமரன்,

  புதிதாக ஒன்றைத் தெரிந்து கொள்ளும்போது ஏற்படும் சந்தோஷமே தனிதான். நாக் மஹாஷ்யரைப் பற்றிய இரண்டாம் பகுதியும் பதிந்தாகிவிட்டது.
  படித்து சொல்லுங்கள்

  ReplyDelete
 12. நன்றி சுப்புரத்தினம் சார்,

  //தேவையானவற்றிக்கும் மேலாக எதிலும் கொள்ள நேரும் பற்றினைத் தவிர்த்தால் மட்டுமே இறையின் பால்
  கருத்தும் கவனமும் ஏற்படும்


  அந்த வரைமுறை தெரியாததால் தான் பல குழப்பங்களும் சங்கடங்களும் வாழ்க்கையில். அருமையான கருத்துகளை பின்னூட்டமாக இட்டு அனைவருக்கும் உதவி புரிந்துள்ளீர்கள்.நன்றி

  ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி