Thursday, August 20, 2009

நல்லோர் நாடும் மோனநிலை

கிராமத்திலே உறவினர் குடும்பத்தில் ஒரு விசேஷம். அழைப்பை ஏற்று பரிவார சமேதராகி யாவரும் போனோம். திறந்த மனதுடன் அங்குள்ளவர் சிலர் வீடுகளிலேயே தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.(அங்கே லாட்ஜ்-க்கு எங்கே போவது) இரண்டு நாட்களும் ஊரே திரண்டு தம் வீட்டு விழாவைப் போலவே எல்லா வேலைகளிலும் ஈடுபடுத்திக் கொண்டது மகிழ்ச்சியை தந்தது. இந்த கூட்டு முயற்சியில் மிகப் பெரும் பங்கு விருந்து தயாரிப்பதிலும், பரிமாறுதலு தான். கடைசியில் எல்லாமே வயிற்றைப் பற்றிய கவலைதானே !

ஊர் பெண்மணிகள் ஒன்றாய் திரண்டு கறிகாய் நறுக்குதல், தேங்காய் துருவுதல், அண்டை எதிர் வீடுகளில் இலை போட்டு, இலை எடுப்பது போன்ற காரியங்களை கவனித்துக் கொண்டனர். ஆண்கள் சமைப்பதற்கும் பரிமாறுதலுக்கும் பொறுப்பெடுத்துக் கொண்டனர். கறிகாய் நறுக்கும் காலத்தில் பல பக்தி பாடல்கள் பாடுவதும், பல சமையற்கலை நுணுக்கங்களை விவாதிப்பதும் கலகலப்பாயிருந்தது. ஆனால்உள்ளே சமயலறையில் ஓரிருவரே நின்று அடுப்பைக் கவனித்துக் கொள்வதும், தயாராகும் உணவின் பக்குவத்தைக் கண்காணிப்பதுமாக அமைதியாக வேலை நடந்து கொண்டிருந்தது.

விழா முடிந்து விடைபெறுகையில் ’சாப்பாடு ரொம்ப பிரமாதம்’ என்று யாவரும் தனித்தனி்யேப் பாராட்டினர்.

பிரமாதம் என்று பாராட்டும் பொழுது அது தனிமனிதன் அனுபவத்திலிருந்து வருகிறது. ஆனால் அதில்தான் எத்தனை பேர்களுடைய பங்களிப்பு இருக்கிறது ! இது நடைமுறையில் நமது அனுபவம்.

ஞானமார்க்கத்திற்கும் இது வெகுவாகவே பொருந்தும். சத்சங்கங்களில் பல வழிகளைப் பற்றிய தர்க்கமுண்டு, ஞானிகளின் அனுபவங்கள் பற்றி சர்ச்சை யுண்டு. இவை கறிகாய் நறுக்குதல், தேங்காய் துருவுதல் போன்ற ஆரம்ப நிலை முனைப்புகள். பின்னர் குருவை அடைந்து அவரிடம் பெறும் வழிகாட்டுதல் உபதேசம் சமையலறைப் போல ஓரிருவருக்கே உரிய இடம் ஆகும். சமைத்த பொருளின் கடைசியாக ருசித்த அனுபவம் தனி ஒருவனுடையதாகவே இருக்கிறது. அந்த அனுபவம் ஆழ்ந்த மோனத்தில் பெறுவது.

இந்த வெவ்வேறு நிலைகளை கபீர்தாஸரும் உறுதி செய்கிறார்.

चर्चा करु तब चौहटे, ज्ञान करो तब दोय ।
ध्यान धरो तब एकिला, और न दूजा कोय ॥


பலர்கூடின் தருக்கம் செய்மின், இருவரானால் ஞானத்தில் தேர்மின்
தனிமையில் தியானம் செய்மின், வேறெவரும் வேண்டா தெளிமின்

(சௌஹட் என்றால் நாற்சந்தி. பலரும் கூடும் இடம் என்று கொள்ளலாம்)

மாற்று :

தருக்கத்திற் குத்தேவை நால்வர், தேடுகின்ற ஞானத்திற் கிருவர்
பரமோ னத்திற்கு ஏகாந்தமே, தேவையு மில்லை இன்னொருவர்


சத்சங்கம் கூடி பலநல்வழிகளை விவாதித்து பரிசீலிப்பது ஆரம்ப முனைப்புகள்.
பிறகு குருவும் சீடனுமாகி இருவரே பகிர்ந்து கொள்ளும் ஞானத்தேடல். அதன் அடுத்த கட்டமாக ’பேசுவதால் பயனில்லை அனுபவத்தால் அறி’ என்பதைக் காட்டும் தியான மார்க்கம். இங்கே முன்னேற்றம் என்பது அவரவர் முயற்சியைப் பொறுத்தே அமையும். ஒருவருக்காக இன்னொருவர் எப்படி உண்ண இயலாதோ அப்படி குரு காட்டிய வழியில் தனியனாகவே பயணத்தை நடத்த வேண்டும் என்று கபீர் உணர்த்துகிறார்.

அறிந்ததை -அல்லது கற்றதை -உள்வாங்கி உண்மையை அறியும் அந்த பயிற்சி தனிமையிலே தியானத்திலே செய்ய வேண்டியது. பாரதியாரும் குள்ளச்சாமி தனக்கு தரும் உபதேசமாக அதைக் குறிப்பிடுகிறார்.

பக்கத்து வீடிடிந்து சுவர்கள் வீழ்ந்த
பாழ்மனையொன் றிருந்ததங்கே; பரமயோகி
ஒக்கத்தன் அருள்விழியால் என்னை நோக்கி
ஒரு குட்டிச் சுவர் காட்டிப் பரிதி காட்டி
அக்கணமே கிணற்றுள் தன் விம்பங்காட்டி,
”அறிகொலோ!” எனக்கேட்டான். அறிந்தேன் என்றேன்
மிக்கமகிழ் கொண்டவனும் சென்றான், யானும்
வேதாந்த மரத்திலொரு வேரைக் கண்டேன்.

தேசிகன் கை காட்டி எனக்குரைத்த செய்தி
செந்தமிழில் உலகத்தார்க் குணர்த்து கின்றேன்’
“வாசியை நீ கும்பகத்தால் வலியக் கட்டி,
மண்போலே சுவர் போலே வாழ்தல் வேண்டும்;
தேசுடைய பரிதியுருக் கிணற்றினுள்ளே
தெரிவது போல் உனக்குள்ளே சிவனைக் காண்பாய்;
பேசுவதில் பயனில்லை.அனுபவத்தால்
பேரின்பம் எய்துவதே ஞானம்” என்றான்
.

பேசுவதில் பயனில்லை என்பதை தாயுமானசுவாமிகளும் உணர்த்துகிறார்.

நேராயம் மௌன நிலை நில்லாமல் வாய்பேசி
ஆராய் அலைந்தீர்நீர் ஆகெடுவீர் தேரீர்
திரையுந் திரையுநதிச் சென்னியனை நாவால்
கரையுங் கரையும் மனக்கல்


(நாவால் கரையும் = இறைவன் புகழை செபித்தல்; திரையுந் திரையுநதி சென்னியனை = அலைபொங்கும் கங்கையை தன்னுள் அடக்கியவன்)

கல்போன்ற மனதை கரைக்க வல்லது இறைவன் நாமம். அதற்குத் தேவை முழு சரணாகதி பக்குவம். அதனையே ”தேடுகின்ற ஞானத்திற் கிருவர்” என்று குருவின் அவசியத்தை கபீர் உரைக்கிறார். குரு கிருபை இருந்துமே பரமோனம் சுயமுயற்சி இல்லாமல் கைகூடாது என்பதையும் தாயுமானவர் பாடுகிறார்

எல்லாமே மோன நிறை எய்துதலால் எவ்விடத்தும்
நல்லோர்கள் மோன நிலை நாடினார் -பொல்லாத
’நான்’ என இங்கொன்றை முளைக்க விட்டு இங்கு
ஏன் அலைந்தேன் மோன குருவே.


‘நான் என ஏன் அலைந்தேன்’ என்னும் பிரச்சனைக்கு முடிவு ’மௌனமே’ ஆகும். பேசினால் தர்க்கம் வருகிறது. தர்க்கத்தில் ’நான்’ தலையெடுக்கிறது. அதன்பின்னும் அது மனதை விட்டு அகலாமல் களைச் செடி போல உறுத்திக் கொண்டே இருக்கிறது. களையெடுத்தல் தியான நிலையில் மட்டுமே சாத்தியம்.

ஆரம்பத்தில் தியான முயற்சிகள் சுய பரிசோதனைக் களமாக இருப்பினும் நாளாவட்டத்தில் களைகள் போன பரிசுத்த நிலையில் இறைவன் பால் அன்பு மிகுத்து ’காதலாகி கசிந்து கண்ணீர் மல்க’ வைக்கும்.

மோனத்திலேதான் உண்மையான பக்தியும் ஞானமும் மலர்கின்றன. அது கைகூடாதவரை சாதகனின் முயற்சிகள் எல்லாம் விசாரமாகத்தான் இருக்குமே ஒழிய் அனுபவமாக இருக்காது. அதை சுட்டிக்காட்டத்தான் பராபரக்கண்ணியிலும் தாயுமானவர் தன் விண்ணப்பத்தை முன் வைக்கிறார்

மோனந்தரு ஞானமூட்டி எனக்கு வட்டா
ஆனந்த வாழ்க்கை அருளாய் பராபரமே


தியானத்தை தனிமையில் செய் என்ற கபீரின் உபதேசத்தை கடைபிடித்த சிறுவனின் கதையைக் காண்போம்.

நன்றி : தினமலர் (28/12/2008) - வைரம் ராஜகோபால்

பகவானை வழிபட தபஸ் செய்வதற்காக காட்டுக்குச் சென்றான் துருவன். அவனை சந்தித்தார் நாரதர். "எங்கே போகிறாய்? எதற்காகப் போகிறாய்?' என்று கேட்டு விட்டு, "தபஸ் ரொம்ப சிரமமாயிற்றே! நீ சிறுவனாயிற்றே. இதெல்லாம் உன்னால் முடியாது; வீட்டுக்குப் போ...' என்று சொல்லிப் பார்த்தார். ஆனால், "தவம் செய்து பகவானை தரிசிக்கப் போகிறேன்!' என்று பிடிவாதமாகச் சொன்னான் துருவன்.

துருவன் தனிமையில் அமர்ந்து, புலன்களை அடக்கி, நாராயணனின் மூல மந்திரத்தை ஜெபித்துக் கொண்டே இருக்க வேண்டுமென்று சொல்லி, மூல மந்திரத்தையும் அவனுக்கு உபதேசம் செய்தார் நாரதர். "இனி, நீ தவம் செய்ய ஆரம்பிக்கலாமே...' என்றார் நாரதர்.

"அது, சரி... நான் ஆரம்பிக்கிறேன். அதற்கு முன் நீங்கள் இந்த இடத்தை விட்டுப் போங்கள்!' என்றான் துருவன்.

"ஏன், நான் இருந்தால் என்ன?' என்று கேட்டார் நாரதர்.

"தவத்தை தனிமையில் செய்ய வேண்டும். மனதை ஒருமுகப்படுத்தி செய்ய வேண்டும் என்று நீங்கள் தானே உபதேசித்தீர்கள். நீங்கள் இங்கு இருந்தால் எனக்குத் தனிமை எப்படி ஏற்படும். என் மனமும், நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை கவனிப்பதில் தானே இருக்கும். ஆகவே, தயவு செய்து தாங்கள் இந்த இடத்தை விட்டு நகருங்கள்!' என்றான் துருவன்.

நாரதருக்கு ஆச்சர்யமாக இருந்தது. சிறுவனாக இருந்தாலும் விஷயத்தை நன்றாக புரிந்து கொண்டிருக்கிறான் என்று மகிழ்ந்து அவனை ஆசீர்வதித்து விட்டுச் சென்றார்.

10 comments:

 1. //மோனத்திலேதான் உண்மையான பக்தியும் ஞானமும் மலர்கின்றன. //

  உண்மைதான். மௌனத்தைவிட சிறந்த மொழி ஒன்று உண்டா?

  வெளி ஓசைகள் அடங்குனதும் மனம்போடும் கூச்சல் உரக்கக்கேட்டு, பின்னே அப்படியே அடங்கிப்போகுது பார்த்தீங்களா?

  எப்படி ஆரம்பிச்சு கடைசியில் இப்படி முடிச்சுருக்கும் பதிவு ரொம்ப அருமையா இருக்கு.

  இடுகைன்னு சொல்லணுமாமே!!!!

  ReplyDelete
 2. //பலர்கூடின் தருக்கம் செய்மின், இருவரானால் ஞானத்தில் தேர்மின்
  தனிமையில் தியானம் செய்மின், வேறெவரும் வேண்டா தெளிமின்
  (சௌஹட் என்றால் நாற்சந்தி. பலரும் கூடும் இடம் என்று கொள்ளலாம்)

  மாற்று :

  தருக்கத்திற் குத்தேவை நால்வர், தேடுகின்ற ஞானத்திற் கிருவர்
  பரமோ னத்திற்கு ஏகாந்தமே, தேவையு மில்லை இன்னொருவர்//

  டாப்! ஒன்றிற்கொன்று வாங்கலில்லை.
  (குறைச்சலில்லை.)
  எவ்வளவு இயல்பாய், 'இந்தா!பிடிச்சுக்கோ' என்று தூக்கிப் போடுகிற மாதிரி இந்த மொழிபெயர்ப்பு கவிதை கலை உங்களுக்கு வாய்த்திருக்கிறது..
  பிரமிக்கிறேன்..

  ReplyDelete
 3. //’நான்’ என இங்கொன்றை முளைக்க விட்டு இங்கு
  ஏன் அலைந்தேன் மோன குருவே.//

  அருமை, ஐயா!

  ReplyDelete
 4. நல்வரவு துளசி மேடம்,

  // எப்படி ஆரம்பிச்சு கடைசியில் இப்படி முடிச்சுருக்கும் பதிவு...//

  ஊர் விழாவிலே ஆரம்பிச்சு காட்டிலே தவம்-ன்னுமுடிந்ததை சொல்றீங்களா ? :)) திட்டமிட்டு எதுவும் செய்யலே, தானா இழுத்துகிட்டு போறதுதான்.

  //இடுகைன்னு சொல்லணுமாமே!!!!//

  Blog :வலைப்பூ

  Post: இடுகை,பதிவு

  ரெண்டையும் வச்சுக்கலாம்னு தோணுது

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 5. வாருங்கள் ஜீவி ஐயா,

  மொழி பெயர்ப்பு முயற்சியை பாராட்டியதற்கு மிக்க நன்றி. வலைப்பூ என்ற ஒன்றை தொடங்காமல் இருந்திருந்தால் இந்த மொழி பெயர்ப்பை தொடர்ந்திருப்பேனா என்பது சந்தேகமே.
  தங்களைப் போன்ற பல அரிய வாசகர்களின் ஆதரவும் வழிகாட்டலும் கிடைத்திருக்காது.

  எங்கிருந்தோ அவன் ஆட்டுவிக்கிறான்.

  மிக்க நன்றி

  ReplyDelete
 6. மற்றொரு அருமையான பதிவு...நன்றி.

  ReplyDelete
 7. //சமைத்த பொருளின் கடைசியாக ருசித்த அனுபவம் தனி ஒருவனுடையதாகவே இருக்கிறது.//

  எப்படித்தான் இப்படியெல்லாம் அருமையாக கோர்க்கறீங்களோ! அருமையான பதிவிற்கு நன்றிகள் பல.

  ReplyDelete
 8. @ திவா சார்,

  @ கவிநயா

  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

  ஊரில் இருக்கவில்லை. அதனால் நன்றி தெரிவிப்பதில் தாமதம். :)

  ReplyDelete
 9. /மோனந்தரு ஞானமூட்டி எனக்கு வட்டா
  ஆனந்த வாழ்க்கை அருளாய் பராபரமே /

  அருமையான பதிவு நண்பரே. எடுத்துக்காட்டுகளும் அருமை.

  ReplyDelete
 10. நன்றி கேசவன்,

  வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி