Friday, August 07, 2009

அரியவனோ எளியவனோ இறைவன் ?

அந்த காவியுடை சாது காட்டிலே அமர்ந்து கடுந்தவத்தில் ஈடுபட்டிருந்தார். தினமும் காலையும் மாலையும் நிலை கொள்ளாமல் தவிப்பதும் ஏதோ ஒரு வகைத் தேடலிலும் ஈடுபட்டிருந்ததை கவனித்த வேடன் ஒருவனுக்கு அவர் மேல் இரக்கம் பிறந்தது.

அவரை நெருங்கி “ஐயா தாங்கள் தேடுவது என்னவென்று சொன்னால் என்னால் முடிந்த உதவி செய்கிறேன்” என்றான்.

அவருக்கோ சிரிப்பு வந்தது. மந்திர சித்தியைப் பற்றி அந்த வேடனுக்கு எப்படிச் சொல்லி புரிய வைப்பது?

”உன்னால் முடியாதப்பா” என்று சுருக்கமாக பதில் உரைத்தார்.

முடியாது என்று அவர் சொன்னதை அவன் மனம் ஏற்றுக் கொள்ளவில்லை.

“எனக்கு இந்த காட்டில் தெரியாத மரமோ செடியோ பிராணியோ கிடையாது. நீங்கள் தேடும் பொருளை அடையாளம் சொல்லுங்கள். மருந்துக்கான பூவா, இலையா அல்லது ஏதேனும் அரிய பொருளா சொல்லுங்கள். நான் எப்பாடுபட்டாவது உங்களுக்கு கொண்டுவந்து சேர்க்கிறேன்.” என்று விடாமல் சொன்னான். அவன் அன்புத் தொல்லை தாங்க முடியவில்லை.

”நான் தேடுவது ஒரு விசித்திரமான மிருகம். அதற்கு சிங்கத்தின் தலை, மனிதனின் உடல், கூரிய நகங்கள். அடர்ந்த பிடரி. முடிந்தால் தேடிப் பிடித்து வா” என்று அனுப்பினார்.

“அட இப்படி ஒரு மிருகத்தை நான் கண்டதே இல்லையே ! அப்படி ஒன்று இருந்தால் அது இல்லாமல் திரும்பமாட்டேன்” என்று சொல்லி விசித்திரமான அந்த மிருகத்தைத் தேட ஆரம்பித்தான். அன்றைய பொழுதும் சாய்ந்தது. அடுத்த நாள் விடியும் பொழுது அந்த மிருகம் இன்று கிடைக்காவிட்டால் உயிரை விட்டுவிடுவது என்ற முடிவோடு தேட ஆரம்பித்தான். நீரும் உணவும் இன்றி தேடி அலுத்து நிராசையின் விளிம்பில் இருந்தவனுக்கு திடீரென்று ஒரு சிங்கத்தின் கர்ஜனை கேட்டது.

அந்த திசையில் சென்றதுமே அந்த விசித்திர மிருகம் கண் முன்னே நின்று கொண்டிருந்தது. ”ஓ நீதானா அது” என்றபடியே சந்தோஷத்துடன் அருகேயிருந்த கொடிகளை அறுத்து அதைக் கட்டி தர தர வென்று இழுத்து வந்து முனிவர் முன் நிறுத்தினான். அந்த விசித்திர மிருகம் ஒரு நாயைப் போல இவன் இழுத்த இழுப்புக்கெல்லாம் வந்தது.

“ சாமி இதோ நீங்க தேடுற பிராணி” என்று மகிழ்ச்சியுடன் கூவினான்.

சாதுவுக்கோ ஒன்றும் புரியவில்லை. அவர் கண்களுக்கு எதுவும் தெரியவில்லை. அவருக்கு தெரியவில்லை என்பது வேடனுக்கு புரியவில்லை. “இதோ ..இதோ” என்று மீண்டும் மீண்டும் அது நிற்கும் இடத்தைக் காட்டினான்.

அவன் தன்னம்பிக்கையோடு காட்டும் போது குழம்பிய மனதினராய் அவ்வேடனை பரிதாபமாகப் பார்த்தார். தன் கண்களை நம்புவதா அல்லது அந்த வேடனை நம்புவதா என்று புரியாமல் திகைத்தார். அப்போது சிங்கத்தின் கர்ச்சனை மட்டும் மிக அருகிலிருந்து கேட்டது. அந்த தபஸ்விக்கு உண்மை பளிச்செனப் புரிந்தது.

“பிரபோ இந்த எளியவனுக்கு காட்சி தரும் தாங்கள் என்னை கை விட்டுவிட்டீரே !” என்று கதறினார்.

“அப்பனே காலம் கனியும் போது உன்னிலும் என்னைக் காண்பாய்” என்று அசரீரியாய் பதில் வந்தது.

(மீதிக் கதையைப் பின்னர் பார்ப்போம்)

நமக்கு ஒரு குழப்பம். அங்கே இறைத் தாகத்தில் தவிப்பவனுடைய கண்களுக்கு அரியவனாகி நிற்கிறான். ஏதுமறியா அப்பாவிக்கு வேடனுக்கு எளியவனாகி நிற்கிறான். என்ன ஒரு விந்தை ?

இவன் யார் பிடியில் அகப்படுவான் யார் பிடியில் சிக்கமாட்டான் என்பதைத் தீர்மானிக்க யாராலும் இயலாது. எனவே அவனுடைய நிலைப்பாடு இந்நேரத்தில் இப்படித்தான் இருக்கும் என்று எவரும் அறுதியிட்டு கூற முடிவதில்லை.

அதே குழப்பம் கபீருக்கும் ஏற்படுகிறது.

भारी कहौं तो बहु डरौं, हलका कहूं तौ झूठ ।
मैं का जाणौं राम कूं, नैनूं कबहूँ न दीठ ॥


அரியவன் என்னலும் தயக்கம்,எளியவன் என்பதும் பொய்யே
அறியேன் யானும் இராமனை, விழிகள் கண்டது மில்லையே


(’டரௌ’ என்று கபீர் பயன்படுத்தியுள்ள சொல் ‘பயத்தைக்’ குறிப்பதாகும். அது ’உண்மையற்றதாகி விடும்’ என்ற பயமே தவிர இறைவனைக் குறித்த பயம் அல்ல. தமிழாக்கத்திற்கு தயக்கம் என்ற சொல் பொருத்தமாகத் தோன்றுகிறது )

அலகிலா விளையாட்டு உடையான் அவனடி சரணாவதைத் தவிர இறைவன் போக்கை ஆராய்ச்சிக்கு உட்படுத்த முடியாது.

சாதுவிற்கு அவன் எளியவன் அல்லன். ஆனால் வேடனின் பார்வையில் அவன் அரியனும் அல்லன்.

ஆகையால்தான் ” அவனைப் பற்றி என்ன சொல்ல முடியும்? இராமனை நான் பார்த்ததும் இல்லை”என்று அவன் மகிமையை உணர்த்த இயலாதவராய் அடக்கத்தோடு உரைக்கிறார் கபீர்.

யாருக்கு எது நன்மை செய்யும் அதை எப்போது தரவேண்டும் என்னும் இறைவன் சித்தத்தை யாராலும் அறிய முடியாது என்பதை திருமூலரும் கூறுகிறார்.

அகன்றார் வழிமுதல் ஆதி பிரானும்
இவன்தான் என நின்ற எளியனும் அல்லன்
சிவன்தாள் பலப்பல சீவனும் ஆகும்
நயன்தான் வரும் வழி நாம் அறியோமே


( அகன்றார் = முனிவர்கள்; நயன்தான் வரும் வழி= நன்மைகள் வருகின்ற விதம்)


இப்போது ’காலம் கனியும் போது உன்னில் என்னை காண்பாய்’ என்று சொன்னக் கதைக்கு வருவோம்.

(பட உதவி madhumurali.org :நன்றி)

எங்கோ மோனத்தில் ஆழ்ந்திருந்த பத்மபாதரின் மனக்கண் முன்னே காபாலிகன் சங்கரரை பலி கொடுப்பதற்கு நெருங்கி வரும் காட்சி விரிந்தது. அவர் உபாசித்த நரசிம்ம மந்திரம் அவரை முழுவதுமாக ஆட்கொண்டது. தன் குருவை காப்பாற்ற வேண்டி பெரும் கர்ஜனையுடன் ஆகாயத்திலே எழும்பி புயல் போல் காபாலிகனின் குகையுள் புகுந்தார்.

முன்னொரு நாளில் இரண்ய கசிபுவை எப்படி கையால் தூக்கி அவன் குடலை நரசிம்மம் உருவியதோ அதே கதியை காபாலிகனுக்குக் கொடுத்தார்.

மற்றவர்கள் ஓடிவந்து சமாதியிலிருந்த சங்கரரை எழுப்பினர். இரத்தத்தில் தோய்ந்த சீடனின் உக்கிர வடிவில் நரசிம்மனை கண்ட சங்கரர் உடனே பிரஹ்லாதனைப் போல உக்கிரத்தை தணிக்க நரசிம்மத் தோத்திரம் இயற்றினார்.

சங்கரரை சிவனின் அவதாரமாகவே சொல்வதுண்டு.

சிவனிடமிருந்து வரம் பெறுவதற்காகவே காபாலிகன் சங்கரரை அணுகி அவரது முழு சம்மதத்தின் பேரிலேயே பலியிடுவதற்கு முற்பட்டான். அவருடைய சங்கல்பமில்லாமல் பத்மபாதருக்கு அந்த உத்வேகம் வந்திருக்காது. எல்லாம் அறிந்த சங்கரர் அவனுக்கு அப்படி ஒரு முடிவை கொடுத்தது ஏன் ?

அங்கே தந்திர மார்க்கத்தின் வழி வந்த காபாலிகனுக்கு முக்தியும் தரவேண்டியிருந்தது. இங்கே பத்மபாதருடைய மந்திரசித்திக்கும் ஒரு பூரணத்துவம் கொடுக்க வேண்டியிருந்தது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

’நன்மைகள் வரும் வழி நாம் அறியோமே’ என்று திருமந்திரம் சொல்வதும் ”அறியேன் யானும் இராமனை” என்று கபீர் கூறுவதிலும் உள்ள உண்மை ஒன்றுதான்.

Strange are the ways of God !

20 comments:

 1. "அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலையே" என்று திருவருட் பிரகாச வள்ளலார் சொல்வது இதைத்தான். காரண காரியமற்ற தூய அன்பு, அவரவர் வேண்டிய வகையிலேயே பலனையும் தருகிறது, தூய்மையும் செய்கிறது.

  இங்கே ஒரு வேடிக்கையையும் பார்க்க வேண்டும். சிவனை மட்டுமே பிரதான தெய்வமாக உபாசித்தவரைக் காப்பாற்றக் கூடக் காக்கும் கடவுளான நாராயணனையே அழைக்க வேண்டி வந்தது.

  பேதங்கள் உபாசனா முறைகளில் மட்டுமே என்பதை அறியாமல் போவோர்க்கு, இப்படி அன்பெனும் பிடிக்குள் அகப்படும் மலையைக் கண்டுகொள்வது சிரமம் தான்!

  ReplyDelete
 2. //Strange are the ways of God !//

  முற்றிலும் உண்மை! இது மட்டும் எல்லாருக்கும் புரிஞ்சால்?????????????

  ReplyDelete
 3. //அங்கே இறைத் தாகத்தில் தவிப்பவனுடைய கண்களுக்கு அரியவனாகி நிற்கிறான். ஏதுமறியா அப்பாவிக்கு வேடனுக்கு எளியவனாகி நிற்கிறான். என்ன ஒரு விந்தை ?//

  தான் 'துறவி' என்றும், அவன் 'வேடுவன்' என்றும் பிரித்துப் பார்க்கும் 'இருமை' நிலை அகலாதபோது, அங்கு ‘முழுமை' வருவதில்லை.

  அதே சமயம், காட்டில் அலைவதே வாழ்க்கை என்றாலும், துறவி சொல்வது பொய்யாய் இருக்காது என்று நம்பி, வேறொரு நினைவுமின்றி, நாளெல்லாம் அலைந்து, இறுதியில் சாவதற்கும் தயாரான, வேடனின் ‘ஒருமை' நிலைக்கு அந்த ‘செழுமை' வந்தே தீரும். அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள். வணக்கம்.

  அன்புடன்
  ஹரன்.

  ReplyDelete
 4. no one can jugde gods work.

  stories are helping to mankind- to keep faith on god.

  why?

  FAITH is important more than god.

  faith not easily coming to man unless he faced some failures , some misreables in lifes, etc.

  bad and worst situations coming to
  our life to increase our faith to god.

  ReplyDelete
 5. நல்வரவு கிருஷ்ணமூர்த்தி ஐயா

  //காரண காரியமற்ற தூய அன்பு, அவரவர் வேண்டிய வகையிலேயே பலனையும் தருகிறது, தூய்மையும் செய்கிறது //

  ஆமாம். இறை அடியார் மீது வைத்த தூய அன்பு அந்த வேடனுக்கு இறைவனையே கொண்டு வந்து விட்டது.

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 6. வாங்க கீதா மேடம்,
  ///....இது மட்டும் எல்லாருக்கும் புரிஞ்சால்????????????? ///

  புரிஞ்சிட்டா எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வந்துவிடும். எதிர்த்து போராடும் குணம் போய்விடும்.

  புரியாததாலே தான் வாழ்க்கை சுவாரஸியமா இருக்கு;இல்லையா :))

  மிக்க நன்றி

  ReplyDelete
 7. நல்வரவு ஹரன்,

  //தான் 'துறவி' என்றும், அவன் 'வேடுவன்' என்றும் பிரித்துப் பார்க்கும் 'இருமை' நிலை அகலாதபோது, அங்கு ‘முழுமை' வருவதில்லை//

  துறவியின் நிலையை மிகவும் பொருத்தமாகச் சுட்டிக் காட்டியிருக்கிருக்கிறீர்கள்.வேடனின் களங்கமற்ற மனப் பக்குவம் அவனுக்கு இறைக் காட்சியை விரைவாக தந்திருக்கிறது என்றே நம்ப வேண்டியிருக்கிறது.

  வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி.

  ReplyDelete
 8. வாருங்கள் பாலு சார்,

  //FAITH is important more than god.//

  உண்மை உண்மை. உண்மையைத் தவிர வேறில்லை.

  கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி

  ReplyDelete
 9. //அங்கே தந்திர மார்க்கத்தின் வழி வந்த காபாலிகனுக்கு முக்தியும் தரவேண்டியிருந்தது. இங்கே பத்மபாதருடைய மந்திரசித்திக்கும் ஒரு பூரணத்துவம் கொடுக்க வேண்டியிருந்தது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.//

  எந்த கணக்கும் ஏதோ காரணத்திற்காகத்தான்.. கணக்கை விரும்பி சந்தித்தல் நம் கையில் இல்லை.. விரும்பாமல் விலகுதலும் நம் கையில் இல்லை.. எந்த கணக்கும் எதிர்படுதலும் அவனால் தான்; கணக்கைப் போட்டவனுக்கு மட்டுமே கணக்கிற்கான விடையும் (செயல்பாடான வினைக்கான மீட்சியும்) தெரியும். மொத்தத்தில்..
  'அலகிலா விளையாட்டுடையார்
  தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே!'
  என்ன வேடிக்கை பாருங்கள்:
  விளையாட்டு அவனுடையது;
  விளையாடுபவனும் அவனே;
  விளையாட்டு மைதானமும் அவனுடையே;
  விளையாடியதின் களிப்போ,சோர்வோ எல்லாம் அவனுடையதே!
  இதில் எதுகுறித்தும் பெருமை கொள்ள, "இவன்" என்பவன் "எவனு"மில்லை!

  ReplyDelete
 10. *நயன்தான் வரும் வழி நாம் அறியோமே*

  உங்கள் வலைப்பூ வாயிலாக நன்மைகள்
  எம்மை நாடி வருகின்றன.

  தேவ்

  ReplyDelete
 11. நல்வரவு ஜீவி ஐயா

  //இதில் எதுகுறித்தும் பெருமை கொள்ள, "இவன்" என்பவன் "எவனு"மில்லை//

  கடலிலிருந்து தோன்றும் அலை திரும்பவும் கடலிலே அடங்கி விடுவது போல தனித்தன்மை என்பது அவனை அடையும் போது அழிந்து தான் போகிறது. எல்லாமே அவன் விளையாட்டினுள் அடக்கம்.

  அழகாக சுட்டிக் காட்டியிருக்கிறீர்கள். மிக்க நன்றி

  ReplyDelete
 12. தேவராஜன் ஐயா,

  வருகைக்கும் ஆசிகளுக்கும் நன்றி.

  ReplyDelete
 13. //’டரௌ’ என்று கபீர் பயன்படுத்தியுள்ள சொல் ‘பயத்தைக்’ குறிப்பதாகும். அது ’உண்மையற்றதாகி விடும்’ என்ற பயமே //

  முற்றிலும் சரியே.
  இருப்பினும் ஒரு
  இடைச்செருகல் என்னிடமிருந்து.


  அணோரணீயான் மஹதோ மஹீயாத் என்பது உபனிஷத் வாக்யம்.

  இன்னமும், பிறிதொரு சந்தர்ப்பத்திலே, ப்ரும்மனை , அனாதி, அதிப்ராசீன என்றும் அஜீர்ண எனவும்
  குறிப்பிடுவதுண்டு.

  எந்த தத்துவத்தை பெரியதிலும் பெரியதாகவும் சிறியதிலும் சிறியதாகவும் கருதுகின்றோமே,
  எதற்கு ஒரு துவக்கம் இல்லை, எல்லாவற்றையும் விட முன்னே இருந்ததெனவும், அழிவில்லாதது
  எனவும் கருதுகின்றோமே அதை மனித அனுபவத்திற்கு உட்பட்ட வார்த்தைகளினால் விவரிப்பது
  சுலபமில்லை. எளிதல்ல. அரியதே.

  அந்த அனுபவத்தைப் பெற்றவர் வாயடைத்துப் போனரோ ? இல்லை , சொல்ல ஒரு வார்த்தை
  இல்லை என சோர்ந்து நின்றாரோ ? அப்படி இருக்கையில் இவ்வனுபவத்தை பெறாதவர் எங்ஙனம்
  விவரிக்க இயலும் ?

  இந்த தத்துவத்தைத் தவறாக எடுத்துரைக்க அஞ்சுவதும், இதனுடைய நுட்பத்தை அறிவதில் ஏற்படும்
  ச்ரமத்தை எண்ணி அஞ்சுவதுமே இயல்பே.

  ஆகவே, டரெள என்ற சொல்லுக்கு முதற் பொருளான அஞ்சுகிறார்கள் என் சொல்வதே சரியாகும்.
  எனினும், அஞ்சுவதால் தயக்கம் ஏற்படுகிறது எனச்சொல்வதில் தவறு இல்லை.

  " ஐஸா அத்புத் ஜினி கதை, அத்புத் ஸகி லுகாஇ
  வேத் குரானீ கமி நஹீம், கஹ்யோவ் ந கோ பதியாஇ"

  என்னும் இன்னொரு தோஹாவும் இதே கருத்தினைச் சொல்லும்.


  //அதே குழப்பம் கபீருக்கும் ஏற்படுகிறது //

  பிரும்ம தத்துவத்தை விவரிக்க முற்பட்டால்தானே குழப்பம் ஏற்படும். அது கடினம் எளிதல்ல என்றுதானே
  சொல்கிறார் கபீர். மேலும் அதனை அவரவர் அனுபவத்திற்கு விட்டுவிடுகிறார் என்பதால், கபீருக்கு
  குழப்பம் ஏற்பட்டதாகக் கொள்தல் சரியல்ல எனவே நினைக்கிறேன்.
  விவரிக்க இயலாது எனச்சொல்வதில் தெளிவாகவே இருக்கிறார்.

  சுப்பு ரத்தினம்.

  ReplyDelete
 14. Strange are the ways of God !//
  கற்றுக்கொண்ட முதல் பாடம் இது!

  ReplyDelete
 15. நன்றி சுப்புரத்தினம் ஐயா,

  //குழப்பம் ஏற்பட்டதாகக் கொள்தல் சரியல்ல எனவே நினைக்கிறேன்.
  விவரிக்க இயலாது எனச்சொல்வதில் தெளிவாகவே இருக்கிறார்
  //

  தாங்கள் சுட்டிக்காட்டிருப்பது சரியே.
  'குழப்பம்'என்ற வார்த்தையை சற்று கவனத்துடன் கையாண்டிருக்கலாம் என்று நினைக்கிறேன்.

  ஆனால் தங்கள் அழகான விளக்கங்களை இழந்திருப்போம் :)

  ஒரு தவறு மூலம் இன்னொரு நல்லது நடந்திருக்கிறது. அதுதான் இறைவன் போக்கு :))

  வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 16. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திவா சார்

  ReplyDelete
 17. எப்போதும் போன்ற பின்னூட்டமே இவ்விடுகைக்கும் :-).

  இடுகைக்கான உழைப்பு நன்றாகத் தெரிகிறது.....மிக்க நன்றி கபீரன்பன் சார்.

  //அங்கே தந்திர மார்க்கத்தின் வழி வந்த காபாலிகனுக்கு முக்தியும் தரவேண்டியிருந்தது. இங்கே பத்மபாதருடைய மந்திரசித்திக்கும் ஒரு பூரணத்துவம் கொடுக்க வேண்டியிருந்தது. ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.//

  கபாலிகனது பக்தியும் ஏற்றுக் கொண்டதாகச் சொன்னது அருமை.

  //’நன்மைகள் வரும் வழி நாம் அறியோமே’ என்று திருமந்திரம் சொல்வதும் ”அறியேன் யானும் இராமனை” என்று கபீர் கூறுவதிலும் உள்ள உண்மை ஒன்றுதான்//

  மிகச் சரி.

  ReplyDelete
 18. மதுரையம்பதிக்கு நல்வரவு

  //கபாலிகனது பக்தியும் ஏற்றுக் கொண்டதாகச் சொன்னது அருமை//

  அது என்னுடைய கருத்து அல்ல. படித்து அறிந்திருந்த விஷயமே.

  ’வழக்கம் போல’ நன்றி :)))

  ReplyDelete
 19. dear subburathinam,

  thanks for your notification and

  explanation.

  it shows your deep reading .

  like you are there- our upanasids and vedas are never vanised.

  ReplyDelete
 20. //Strange are the ways of God !//

  அதனால்தான் மனிதனின் சிற்றறிவை கொண்டு இறைவனின் வழிகளை புரிந்து கொள்ள இயலாது என்பார் ஸ்ரீராமகிருஷ்ணரும்.

  //வேறொரு நினைவுமின்றி, நாளெல்லாம் அலைந்து, இறுதியில் சாவதற்கும் தயாரான, வேடனின் ‘ஒருமை' நிலைக்கு அந்த ‘செழுமை' வந்தே தீரும்.//

  ஹரன் அவர்களும் அழகாக சொன்னது போல, அசைக்க முடியாத நம்பிக்கைதான் வேண்டும்.

  ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி