இன்னமும் உரக்கச் சொல் என்று தூண்டினார். இன்னம் இன்னம் என்று ஒவ்வொருமுறையும் உரக்க கூவச் சொன்னார்.அவனுடைய வெட்கம் கொஞ்சம் கொஞ்சமாக விலகியது. அவனையும் இறைப் போதம் பற்றிக் கொண்டது. அப்போது அவனுடைய மனைவி அவனுக்கு உணவு கொண்டு வந்தாள். அவளுக்கும் அது பிடித்துக்கொண்டது. அவளைத் தேடி வேறு சிலர் வந்தனர். அவர்களும் ஹரி ஹரி என்று ஆனந்த கூத்தாடினர். சிறிது நேரத்தில் அந்த கிராமமே ஹரி போதத்தில் திளைக்க ஆரம்பித்தது.
ஹரி நாமம் செய்த வேடிக்கையை சிரித்தவாறே சிறிது நேரம் பார்த்திருந்து சைதன்யர் அங்கிருந்து அகன்றார்.
कबीर हरिरस बरसिया, गिरि परवत सिखराय |
नीर निवानू ठाहरै , ना वह छापर डाय ||
ஹரி ரசம் பொழியுது கபீரா, மலைமுகடு மடுவெங்கும் பொழியுது
மடுவிலே மட்டும் தங்குது, மலையில் நில்லாது ஓடுது
சாமான்யர்களுக்கு மகாத்மாக்கள் இறையின்பதை சிறிது காலம் அனுபவிக்கச் செய்ய இயலும். ஆனால் அது நிரந்தரமாக தங்குவதில்லை. அதற்கு காரணம் அவர்களிடம் அதைத் தக்க வைத்துக் கொள்ளும் மனப் பணிவு இருப்பதில்லை.
புல்லா ஷாவின் கதைக்கு வருவோம். -முதல் பாகத்தைப் படிக்க இங்கே சுட்டவும்
அவரும் சில பக்தர்களுடன் இறைவன் புகழைப் பாடிக் கொண்டு ஆனந்தமாக இருந்தார். அவரது தந்தையாருக்கு விஷயம் தெரிந்து தன் மகனை அந்த தாழ்ந்தவர் கூட்டத்தினடமிருந்து பிரித்து அழைத்துச் செல்ல மிக்க கோபத்துடன் அங்கே சென்றார். அவரைக் கண்ட புல்லா பாடலானார்.
மலர் மாலை அணிவர் யாவரும்
எந்தை நீ அணிவாய் செபமாலை
உன்னால்
முடியொன்றை அசைக்க இயலாது
மூலி அரைத்து அவிழ்தம் காண்பாய்
மூலியரைத்து அவிழ்தம் காண்பாய்.
சைதன்யப்பிரபு கதையில் கண்டது போலவே புல்லாவின் ஆனந்த நிலை அவரது தந்தையையும் பற்றிக்கொண்டது. அவரும் தன்னை மறந்து பாட ஆரம்பித்தார். கண்டிக்கச் சென்றவர் கருணை வெள்ளத்தில் அமிழ்ந்து போனார்.
பேறு பெற்றவர் ஆயினர் அவர்
பேறு பெற்றவர் ஆயினர்
பிள்ளைத் தருவனே இறைபோதம்
பெற்றவருக்கும் முத்தியே அவனால்
மூலியரைத்து அவிழ்தம் கண்டேன்
மூலியரைத்து அவிழ்தம் கண்டேன்
(மூலி =மூலிகை; அவிழ்தம்= மருந்து)
தாவரங்கள்தான் மருந்துகளுக்கு ஆதாரம்.
ஓம் நமோ ப்ரம்ஹணே, நமோஸ்து அக்னயே, நமஹ ப்ருதிவ்யை, நமஹ ஔஷதேப்ய: என்பது தினசரி சொல்ல வேண்டிய நன்றி செலுத்தும் பிரார்த்தனை. பரம்பொருளுக்கு, அக்னிக்கு, பூமிக்கு, தாவரங்களுக்கு வந்தனம் என்ற பொருளில் சொல்லப்படுவது.
தாவரங்கள் ஆதாரமாக இருப்பதனாலேயே மருந்தை ஔஷதி என்றழைக்கின்றனர்.
அதை நேரே பெறுவது சுலபமல்ல. பக்குவம் அறிந்து பறித்து வந்து தகுந்த சேர்க்கைப் பொருட்களுடன் கலந்து இடித்து, கொதிக்க வைத்து, வடித்து, காலமறிந்து உட்கொள்ளப்படும்போது அது மருந்தாகிறது. அதை நிர்வகிப்பதற்கு வைத்தியன் துணை அவசியம்.
அது போல நமக்குக் கொடுக்கப்பட்ட உடலிலும் தெய்வநிலைக் காண தகுந்த குருவின் உதவித் தேவைப்படுகிறது. இங்கேயும் அரைப்பது இடிப்பது கொதிக்கவைப்பது என பல வழி முறைகளை சீடனின் பக்குவம் அறிந்து குரு வைத்தியம் செய்வார்.
குருவின் வைத்தியம் தொடங்கியது.
ஒருமுறை புல்லே ஷா தன் குரு இனாயத் ஷாவை குடும்பத் திருமணத்திற்கு அழைத்திருந்தார். குருவோ தான் போகாமல் தன் சீடன் ஒருவனை பிரதிநிதியாக அனுப்பி வைத்தார். அவரும் குருவைப் போலவே அர்யன் குலத்தை சார்ந்தவராதலால் சையது குலத்தைச் சேர்ந்த புல்லே ஷா குடும்பத்தினர் அவரை தகுந்த முறையில் வரவேற்காமல் அலட்சியப்படுத்தினர். எப்படியோ புல்லா ஷாவும் இந்த தவறுக்கு அறிந்தோ அறியாமலோ காரணமாகி விட்டார்.
சீடன் திரும்பியதும் திருமணம் பற்றி விசாரித்தார் குரு. நடந்ததை கூறினார் சீடன்.
“ ஓ ! அப்படியா ? அவனால் நமக்கு ஆக வேண்டியது ஒன்றுமில்லை. இனி நீரின் போக்கு அவனுடைய பாத்தியிலிருந்து உன்னுடைய பாத்திகளுக்கு பாயட்டும்.” என்று தமது அருளின் பாதையை மாற்றிவிட்டார் குரு.
அந்த நிமிடத்திலிருந்து புல்லா அனுபவித்து வந்த ஆனந்தம் மறைந்து விட்டது. இறைக்காட்சியும் மறைந்தது.
இனாயத் ஷா அவரது அருளை மட்டும் நிறுத்தவில்லை. தன்னைப் பார்க்க வரக்கூடாதென்றும் கட்டளையிட்டுவிட்டார்.
பெரும் பணக்காரன் ஒருவன் திடீரென்று ஏழ்மையைத் தழுவினால் அவன் நிலை எப்படியிருக்கும்?
நீரை விட்டு அகலிய மீனைப் போலத் துடிக்கலானார் புல்லா
குருவின் மனம் மட்டும் கல்லாகி விட்டது.
குருவின் பழைய ஆதரவுக்காக புல்லா ஏங்கலானார்.
துளைப்பனவே பிரேமையின் கணைகள்
துளைப்பனவே பிரேமையின் கணைகள்
வாழ்வும் இன்றி மரணமும் இன்றி
என் துன்பதிற்கு ஏது எல்லை
என் முறை கேளாயோ நாதா
பகலிரவு அமைதியிலை
பிரேமைக் கணமும் குறைகிலை
துளைப்பனவே என்னை கணைகள்
என் செய்கேன், என் செய்கேன்
துளைப்பனவே என்னை கணைகள்
[புல்லா ஷாவின் பாடல்களில் கவிதை நயம் மிக அதிகம் என்று சொல்லப்படுகிறது. அவரது தாய் மொழி பஞ்சாபியில் பாடப்பட்டிருக்கும் பாடல்களின் அழகை ஆங்கில வார்த்தைகள் மூலம் அறிந்து சொல்லப்படும் பொழுது கண்டிப்பாக அவரது கவிதைகளுக்கு ஒப்பாக முடியாது. ஆயினும் அவரது மன ஏக்கத்தைப் புரிந்து கொள்ள உதவும் என்பதனால் அவற்றின் சாரத்தை காண்போம்.]
என் தவறேது இதில் ?
என்னைத் தவிக்க விட்டுப் போனான்.
வாளினும் கூராய், வேலினும் பலமாய்
துளைக்குதே பிரேமையின் வலி
தீர்க்கும் வைத்தியன் இல்லை
கணப்பொழுது அமைதியும் இல்லை
ஓ புல்லா !
நாதன் விரும்பினால் மழைபொழியும்
நாளும் மகிழ்ச்சி நிரம்பிடும்.
தவிக்கவிட்டு போவானே
என் தவறேது இதில் ?
----------------- துன்பம் இழைத்து
முகத்தை மறைத்துக் கொண்டாய்
யாரிடம் கற்றாய் இதை ? அன்பே !
உன் பிரேமையில் என்னை இழந்தேன்
உன் கடைக்கண் கிட்டாது கலங்குகிறேன்.
பிரேமை எனும் விடம் குடித்த
மூடனாகி விட்டேன் அந்தோ !
துன்பம் இழைத்து
முகத்தை மறைத்துக் கொண்டாய்.
அவருடைய ஏக்கம் பல வருடங்கள் நீடித்தது. பல பாடல்களில் அவை வெளிப்பட்டது
ஒரு முறை வீதியில் பாட்டுப்பாடி பிழைக்கும் கூட்டத்தினரை அடைந்து அவர்களிடம் பெண் வேடம் பயின்று முகத்தை மறைத்துக் கொண்டு குருவுக்கான ஏக்கத்தை குரு முன்னிலையிலேயேப் பாட இனாயத் ஷா அவரை அடையாளம் தெரிந்து கொண்டார். அவர் மனம் இளகிற்று. சீடன் முற்றும் கனிந்துள்ளான் என்பதை அறிந்து அவனை ஆரத்தழுவி தன் அன்பை முழுவதுமாக வழங்கினார்.
வெளிப்பார்வைக்கு இனாயத் ஷாவின் போக்கு கடுமையாகக் காணப்பட்டாலும் கபீர் அதன் உட்பொருளை விளக்குகிறார்
गुरु कुम्भार सीस कुम्भ है, घडी घडी काडे खोट |
अन्दर हाथ सवर दे, बाहर मारे चोट ||
மாற்று :
குருவே குயவன், சீடனே களிமண், கலம் உருப்பெறும் போதிலே
ஒரு கை உள்ளே தாங்குதே , மறு கை வெளியில் அடிக்குதே
சீடனுக்கு நிலையான இறையனுபவம் தர பல வகைகளிலும் அவர்களை பண்படுத்த வேண்டிய அவசியம் உண்மையான குருவுக்கு வருகிறது. அதுவரையிலும் கடுமையானவர் போலே நடந்து கொள்ளவும் வேண்டியிருக்கிறது. அழுதழுது சீடனின் அகங்காரம் எல்லாம் கரைந்து போன நிலையில் மீண்டும் அவனருள் சீடருள்ளே பாய்கிறது.
குரு இனாயத் ஷா கபீரின் மொழிகளை பிரதிபலிக்கும் வகையில் புல்லாவுக்கு அருளினார். அதன் பின் புல்லாவின் ஆன்மீக வாழ்க்கையில் யாதொரு தடையும் இருக்கவில்லை. புல்லாவின் வாழ்க்கை காலம் 1680-1758.புல்லா ஷாவின் பாடல்களில் அத்வைத அனுபவமே சுட்டிக்காட்டப்படுகிறது. யாவுமே மண்ணிலே தோன்றி மண்ணிலே மறைவதால் காட்சிகள் மட்டும் வெவ்வேறு, அடிப்படையில் யாவும் ஒன்று என்பதை ஒரு பாடலில் சொல்கிறார்.
மண்மிசை, பன்மையில் ஒருமை
மண்ணால் ஆனதே யாவும்
ஓ புல்லா !
மண்ணே குதிரை, மண்ணே வீரன்
மண்ணே மண்ணைத் துரத்துது
மண்ணாலான ஆயுதம் கொண்டு
மண்ணே மண்ணைக் கொல்லுது
மண்ணைப் பிடித்த மண்ணை
மண்ணின் ஆணவம் ஆட்டுது
மண்ணே சோலை மண்ணே அழகு
மண்ணே மண்ணை வியக்குது
மண்மிசை சீவசக்கரம் சுழலுது
மண்ணில் மீண்டும் அது சேருது
புரியா புதிர் இதை அவிழ்த்திடு
ஓ புல்லா
சிரமிசை சுமையை நீக்கிடு
கருத்து நிறைந்த புல்லா ஷாவின் இன்னொரு பாடல்.
புல்லாவின் வரலாறு பற்றி முழுதும் அறிய இந்த வலைப்பக்கத்தை சொடுக்கவும்
புல்லா ஷா அறிமுகத்திற்கு நன்றி கபீரன்பன்.நன்றாக இருந்தது.ரசித்தேன்..:)
ReplyDeleteஅருமை! வேறே ஒண்ணும் சொல்லத் தெரியலை, புல்லா ஷா பற்றி அறியத் தந்ததுக்கும் நன்றி. சுட்டிக்கும் நன்றி. அதிலும் அந்தக் கடைசி மண்ணைப் பற்றிய பாடலின் மொழிபெயர்ப்பு, மனதைத் தொட்டது!
ReplyDeleteபி.கு. இந்தப் பாடல்கள் கேட்கும் சுட்டி, ஒளிப்படங்கள் பார்க்கும் சுட்டினு நிறைய இருக்கிறதாலேயோ என்னமோ திறக்கவும் முடியலை, திறந்தால் முழுதும் வர ரொம்பத் தாமதம் ஆகுது. பதிவின் கடைசியில் உள்ள காணொளிக்கு வந்தால் அப்படியே நின்னும் போயிடுது! :(((((( இந்தப் பிரச்னை எனக்கு மட்டும்தான்னு நினைக்கிறேன்.
@நன்றி ராதா ஸ்ரீராம்,
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.
@ கீதா மேடம்
//...இந்தப் பிரச்னை எனக்கு மட்டும்தான்னு நினைக்கிறேன் //
வேறொரு உலாவியில் திறந்து பாருங்கள். :)
//...புல்லா ஷா பற்றி அறியத் தந்ததுக்கும் நன்றி //
பஞ்சாபியானதால் ஹிந்தி பேசும் பெரும்பான்மையிருக்கும் அவரைப்பற்றி அதிகம் தெரியாது. பாகிஸ்தானில் அவரது பாடல்கள் மிகப்பிரபலம் என்பதை வலையுலகம் மூலம் தெரிந்து கொண்டேன். சந்தனத்தின் மணம் என்றும் குறையாது.
பாராட்டுகளுக்கு நன்றி
///மண்ணே மண்ணைக் கொல்லுது///
ReplyDeleteநிதர்சனமாக சில..... தொடருங்கள் ஐயா மிக அருமை பல விசயங்கள் பகிர்ந்திருக்கிறீர்கள்.
மிக்க நன்றி.!
"குருவே குயவன், சீடனே களிமண், கலம் உரு பெரும் போதிலே
ReplyDeleteஒரு கை உள்ளே தாங்குதே , மறு கை வெளியில் அடிக்குதே"
கடைசி வரியைப் படித்ததும் உடல் சிலிர்த்துவிட்டது நண்பரே! வெளியே அடிக்கப்படுவது மட்டுமே பிறர் கண்களுக்குத் தெரிகிறது; உள்ளே தாங்கிக்கொண்டிருப்பதும் அவனே எனும் உணர்வு வந்துவிட்டால், பின் எங்கும், எதிலும், என்றும் ஆனந்தம்தானே.
@ கேசவன்
ReplyDeleteரசித்து படித்தமைக்கும் பாராட்டுரைகளுக்கும் மிக்க நன்றி.
@ஜாபர் அலி
//உள்ளே தாங்கிக்கொண்டிருப்பதும் அவனே எனும் உணர்வு வந்துவிட்டால், பின் எங்கும், எதிலும், என்றும் ஆனந்தம்தானே //
நீங்கள் குறிப்பிடும் அந்த நம்பிக்கை மட்டும் ஒருவருக்கு வாய்த்து விட்டால் கண்டிப்பாக ஆனந்தம்தான். வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி
//அவருடைய ஏக்கம் பல வருடங்கள் நீடித்தது. பல பாடல்களில் அவை வெளிப்பட்டது.//
ReplyDeleteபுல்லா ஷாவின் கதை நிறைய படிப்பினைகளைக் கொண்டது. நான் இதுவரை அறியாதது; அறியத் தந்தமைக்கு மிக்க நன்றி, கபீரன்ப!
என்னதான் அந்த அற்புதமான குயவன்,களிமண்,கலயம் உவமை மனதுக்கு ஆறுதல் அளித்தாலும்
புல்லா ஷா அனுபவித்த அந்த சோகம் மனத்தைப் பிழிகிறது. அவருக்குக் 'கொடுத்து' அவர் 'பெற்ற' அந்த இறை ஆனந்தத்தைப் பறித்துக் கொண்டது தான் சோகம். உயிரே பறிபோனது மாதிரிதான் அது.
கவிச்சக்ரவர்த்தி கம்பர் சொல்வாரே, இராமன் காடேகும் போது தயரதன் பட்ட துன்பத்தை..'கண்ணிலான் பெற்று இழந்தாற்போல்' அந்த வரி தான் நினைவுக்கு வந்தது.
இறை இன்பத்தை அனுபவித்து இழக்க நேரிடின், அது சொல்லொண்ணா துன்பத்தை...எஸ்.. நீங்கள் பிரயோகித்திருக்கிறீர்களே,'ஏக்கம்' என்றொரு வார்த்தை, அது தான் மிகச் சரியான வார்த்தை.. அந்த ஏக்கம், மனதைச் சாம்பச் செய்து விடும்.
அந்த ஏக்கம் படுத்திய பாடு தான் அப்படி மனசைப் பிசையும் பாடல்களாக, உன்னத கீதங்களாக புல்லா ஷாவிடமிருந்து வெளிப்பட்டிருக்கிறது.
ஒரு பக்த மீராவைப் போல, ஒரு பக்த புல்லா ஷா!
தெரியப்படுத்தியமைக்கு மிக்க நன்றி, கபீரன்ப!
ji,
ReplyDeletethanks for intro of pulla shah
i wondering where you get like these stories?
நல்வரவு ஜீவி ஐயா,
ReplyDelete//'கண்ணிலான் பெற்று இழந்தாற்போல்' அந்த வரி தான் நினைவுக்கு வந்தது. //
மிகப்பொருத்தமான உவமையை நினைவு கூர்ந்திருக்கிறீர்கள். வாசிப்புக்கும் பாராட்டுக்கும் நன்றி
வருக பாலு சார்,
ReplyDelete//i wondering where you get like these stories? //
கடைசி வரியில் இணைப்பைக் கொடுத்திருக்கிறேனே ! இணையம் இப்போது நூலகத்தை விரல் சொடுக்கில் அடக்கி விட்டதே. அதன் முன்னே அமர நேரம்தான் அவசியம் :)
வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி