Monday, August 23, 2010

அழல் எரிக்கும் முளி புல்

பலரும் குருவை அணுகி பலவிதமான காணிக்கைகளை சமர்ப்பித்துக் கொண்டிருந்தனர். சுவாமி ராமாவிடம் மட்டும் கொடுப்பதற்கு ஏதும் இருக்கவில்லை. ” ஐயா இன்று பலரும் தங்களுக்கு காணிக்கைகள் செலுத்திவிட்டனர். என்னிடம் ஏதுமில்லையே ? நான் என்ன கொடுப்பது ?” என்று குருவிடம் கேட்டார்.

 “நீ போய் கொஞ்சம் உலர்ந்த சுள்ளிகளை பொறுக்கிக் கொண்டு வா” என்று அவரை அனுப்பி வைத்தார் அவர் குரு. 

அவர் அப்படியே ஒரு பெரிய கட்டு சுள்ளிகளைக் கொண்டு வந்து அவர் காலடியில் வைத்து நமஸ்கரித்தார். “உன்னுடைய பழைய வினைகளையெல்லாம் இந்த சுள்ளிகளைப் போல எரிந்து போகும். அவற்றால் எந்த துன்பம் வராது. நான் உன்னருகே இருந்து துன்பம் அணுகாமல் பாதுகாப்பேன்” என்று உறுதி மொழி கொடுத்தார் குரு. 

அது போலவே ராமா அவர்களின் ஜாதகத்தின்படி பல பண்டிதர்களால் ஒரு குறிப்பிட்ட சமயத்தில் மரணம் சம்பவிக்கும் என்று கணிக்கப்பட்டிருப்பினும் அவரது குரு அதை எப்படி மாற்றியமைத்தார் என்பதை அவர் வேறொரு அத்தியாயத்தில் குறிப்பிடுகிறார். 

 பச்சை மரத்தில் தீ பிடிக்காது. வெறும் புகைதான் மண்டும்.

 உலக விஷயங்களில் ஆர்வம் உள்ள வரையில் நாமும் பச்சை மரம் தான். 

நமக்குள் ஆன்மீகக் கனலை எவ்வளவுதான் வீசி வீசி பற்ற வைக்க முயன்றாலும் புகை போல வெறும் மனக் குழப்பம் மட்டும்தான் மிஞ்சும். 

 குரு அருள்கின்ற மந்திரமும் நாம செபத்தில் தீவிரப் பயிற்சியும் அந்த ஈரத்தை சிறிது சிறிதாக உலர வைக்கிறது. இந்திரியங்கள் கொஞ்சம் கொஞ்சமாக தம் சக்தியை இழக்கத் துவங்குகின்றன.

 உலர்ந்த சுள்ளியில் அதன் வடிவம் மட்டுமே எஞ்சி நிற்பது போல் சாதகனின் வினைகள் பெயரளவில் ஒட்டிக் கொண்டிருக்கும். அயராத நாம செபத்தில் உலர்ந்து நிற்கும் வினைகளை குரு அருள் முழுவதுமாக சுட்டெரித்து விடும். இதைக் கபீரும் உறுதி செய்கிறார். 

  जबही राम हिरदै धरा, भया पाप का नाश । 
मानो जिनगी आग की, परी पुराने घास ॥ 

  நெஞ்சில் மன்னுவன் இராமன்,பாவம் எல்லாம் ஒழிந்தது 
எஞ்சுமோ தீண்டிய அழலில், முளி புல் யாவும் எரிந்தது 

 மாற்று: 
  உருகிப் போனது தீவினை யாவும், உள்ளுள் இராமன் வந்ததுமே
 கருகிப் போயின முளிபுல் யாவும், கனல்பொறி தீண்டிய பின்னே 
  (மன்னுதல்- நிலைபெறுதல் ; முளிபுல் -உலர்ந்த புல் ) 

 இந்த கருத்தை காலம் காலமாக நமது ஆன்மீக வழிகாட்டிகள் சொல்லி வந்திருக்கின்றனர் என்பது ஸ்ரீமத் பாகவதத்தில் அஜாமிளன் கதை மூலமும் தெரிய வருகிறது. 

 விதிவசத்தால், நல்ல குடும்பத்தில் பிறந்திருந்தாலும், வழி தவறி இன்ன பாவம் என்றில்லாமல் எல்லா வகைப் பாவங்களையும் இழைத்து மரணப் படுக்கையில் கிடக்கிறான். அவன் உயிரைக் கொண்டு செல்ல எமதூதர்கள் அவன் முன்னே தோன்றுகிறார்கள். பயத்தினால் தன் கடைசி மகன் பெயரை " நாராயணா நாராயணா" என்று சொல்லிக் கொண்டே இறக்கிறான் அஜாமிளன். 
 
 உடனே விஷ்ணு தூதர்களும் அங்கு வந்து சேர்கிறார்கள். அப்போது எமதூதர்களுக்கும் விஷ்ணு தூதர்களும் வாக்குவாதம் நடக்கிறது. ஏன் அஜாமிளன் உயிரை எமதூதர்கள் கொண்டு செல்லக்கூடாது என்பதற்கு அவர்கள் சொன்ன உதாரணமும் கபீர் சொல்லும் அதே உதாரணமே.

अज्ञानादथवा ज्ञानादुत्तमश्लोकनाम यत् 
सङ्कीर्तितमघं पुंसो दहेदेधो यथानलः (6.2.18)

 அஞ்ஞானாத் அதவா ஞானாத் உத்தம ஷ்லோக நாம யத்
 சங்கீர்த்திதம் அக்ஹம் பும்ஸோ தஹேத் எத: யதா அனல: 

[ அஞ்ஞானாத்= தெரியாமலோ, அத்வா= அல்லது, ஞானாத் =தெரிந்தோ, உத்தமஷ்லோகா=உத்தமன் புகழ், நாமா=நாமத்தை, யத்= அந்த, சங்கீர்த்திதம் = சொல்லி, அக்ஹம்= பாவத்தை, பும்ஸ:= அவனுடைய, தஹேத் = எரித்துவிடும், எத:= உலர்ந்த புல், யதா= போல, அனல:= நெருப்பு ]

 தெரிந்தோ தெரியாமலோ  அந்த பரம்பொருளின் நாமத்தை சொல்லுபவன் பாவம் உலர்ந்த புல்லை நெருப்பு எரித்துவிடுவது போல் எரிந்து போகும். அவர்கள் மேலும் சொல்கிறார்கள். 

மருந்து எப்படி வேலை செய்கிறது என்பது நோயாளிக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை. உரிய முறையில் அதை உட்கொண்டால் அது குணப்படுத்தத்தான் செய்யும். அது போலவே இந்த அஜாமிளன் பாவங்கள் நிறைய செய்திருந்தாலும் அவன் நாராயணனின் பெயரை சொன்னதினால் அவனுக்கு மோட்சம் கொடுக்கப்பட வேண்டும் என்று சொல்லி எமதூதர்களிடமிருந்து அவனை மீட்கின்றனர். 

 இங்கு எவருக்கும் சற்று குழப்பம் ஏற்படும். அதெப்படி மகனை கூப்பிட்டதும் அதை நாராயணன் தன் பெயராக ஏற்றுக் கொண்டு அவன் கொடிய பாவங்களையும் அழித்துவிடுவானா? அவ்வளவு கூட விவரமில்லாதவனா அவன் ? அப்படியானால் நமது பாவங்களுக்கும் நாம் படும் துன்பங்களுக்கும் அர்த்தமே கிடையாதே !! 

 கதை சொல்லும் ஓட்டத்தில் நிகழ்வுகள் மட்டுமே பெரும்பாலும் சொல்லப்படுகின்றன. அஜாமிளனின் கடைசி காலம் எப்படி இருந்தது என்பதில் அவனுக்கு தெய்வ சிந்தனை இருக்கவில்லை என்று சொல்லப்பட்டாலும் விஷ்ணு தூதர்கள் விவாதத்தின் இடையே சொல்லும் ஒரு விளக்கம் (6.2.7) மூலம் அவன் ”உலர்ந்த புல்லின்” நிலையை அடைந்திருக்கக் கூடும் என்பதை அனுமானிக்க முடிகிறது. 

अयं हि कृतनिर्वेशो जन्मकोट्यंहसामपि |
यद्व्याजहार विवशो नाम स्वस्त्ययनं हरेः  ||

அயம் ஹி கிருத நிர்வேஷோ ஜன்ம கோடி அம்ஹஸாம் அபி |
யத் வ்யாஜஹார விவாஷோ நாம ஸ்வஸ்தி அயனம் ஹரே:  ||

[அயம்= இவன்(அஜாமிளன்); ஹி =உண்மையாக ; ஜன்மக் கோடி=பல கோடி ஜென்ம; அம்ஹஸாமபி = பாவங்களுக்காக ; கிருத நிவேஷ: = தன்னிரக்கத்தால் வருந்தியவன்; விவாஷ:= கை விடப்பட்ட நிலையில்; நாம ஸ்வஸ்தி அயனம் ஹரே:= முக்திக்காக உயர்ந்த ஹரியின் பெயரை வ்யாஜஹார=உச்சரித்திருக்கிறான். ]

 பல கோடி ஜென்மங்களில் செய்த பாவத்தை எண்ணி அவன்(அஜாமிளன்) தன் கடைசி காலத்தில் வருந்தியிருக்கிறான் என்னும் காரணமே அவன் உலர்ந்த புல் என்கிற நிலைக்கு தயார் செய்திருக்கிறது என்று கொள்ளலாம். அந்நிலையில் தேவையானது தீப்பொறி மட்டுமே.அவன் அறிந்தோ அறியாமலோ அதுவும், இறைவனின் நாமம், மரண நேரத்தில் சேர்ந்து கொள்கிறது. அதனால் முன்வினைகள் யாவும் எரிக்கப்பட்டது. 

 இப்போது இன்னொன்று புரிகிறது. நாமசெபம் இல்லாமலே உலர்ந்த 'கட்டை' அஜாமிளன். ஆனால் நாமசெபம் இல்லாமல் முக்தி கிடையாது போலும். விஷ்ணு தூதர்கள் எமதூதர்களை விரட்டி விட்டு போய்விடுகிறார்கள். 

அஜாமிளன் உயிர்பெற்று எழுகிறான். நாராயணின் பெரும் கருணையை நினைந்து அவன் மனம் போற்றத் தொடங்கியது. அவன் கங்கை கரையை அடைந்து நாமசெபத்திலும் சத்சங்கத்திலும் காலத்தைக் கழித்து இறுதியில் இறைவனின் திருப்பாதங்களை அடைகிறான் என்று கதை முடிகிறது. 

 ஒரு சுற்றறிக்கையோ அல்லது கடிதமோ அரசாங்கத்தாலோ நிறுவனங்களிலிருந்தோ வெளியிடப்பட்டால் அதை செயல்படுத்துவதற்கு தக்க அதிகாரமுள்ள அதிகாரியின் கையொப்பம் இருந்தால்தான் அது ஏற்றுக்கொள்ளப்படும். பல நேரங்களில் மிகப் பழைய அறிக்கைகளை காலாவதியாகி விட்டது என்று கூட சிலர் தள்ளிவிடத் துணியலாம்.

 துவாபரயுக பாகவதத்தில் சொல்லியுள்ள கருத்து கலியுகத்திலும் செல்லுபடியாகும் என்று கபீர்தாஸர் இந்த ஈரடி மூலம் தம்முடைய ஒப்பத்தை இட்டு உறுதிசெய்துள்ளார்.

9 comments:

  1. //துவாபரயுக பாகவதத்தில் சொல்லியுள்ள கருத்து கலியுகத்திலும் செல்லுபடியாகும் என்று கபீர்தாஸர் இந்த ஈரடி மூலம் தம்முடைய ஒப்பத்தை இட்டு உறுதிசெய்துள்ளார்//

    சூப்பர்! எம்பெருமான் "காலாவதி" ஆகி விடாமல், மக்களிடம் சென்று சேர்ப்பதில், அடியவர்களின் பணி தான் எத்தனை மகத்தானது! மருந்தின் மூலப் பொருள் என்னவோ ஒன்று தான்! ஆனால் அது காலாவதி ஆகி விடாமல், ஆசார்யர்கள் தோன்றித் தோன்றி, மருந்தை அரைத்துக் கொடுக்கிறார்கள்!

    //மருந்து எப்படி வேலை செய்கிறது என்பது நோயாளிக்கு தெரிய வேண்டிய அவசியம் இல்லை//

    இப்பல்லாம் அதையும் தெரிஞ்சிக்க வேண்டி இருக்கு! போலி மருத்துவர்கள் பெருக்கத்தால் :)
    குறைஞ்ச பட்சம் Expiry Date ஆச்சும் பார்க்கணும் நோயாளி! :)

    //அதெப்படி மகனை கூப்பிட்டதும் அதை நாராயணன் தன் பெயராக ஏற்றுக் கொண்டு அவன் கொடிய பாவங்களையும் அழித்துவிடுவானா? அவ்வளவு கூட விவரமில்லாதவனா அவன் ? அப்படியானால் நமது பாவங்களுக்கும் நாம் படும் துன்பங்களுக்கும் அர்த்தமே கிடையாதே !!//

    உண்மை தான் கபீரன்பன் ஐயா!
    அஜாமிளன் கதையை அதனால் கிண்டல் செய்பவர்களும் உண்டு!
    அது எப்படி புண்ணிய/பாவக் கணக்கு, ஒரே சொல்லில், அதுவும் அறியாமல் சொன்ன சொல்லில், தவறுக்கு வருந்தாது சொன்ன சொல்லில், நேராகி விடும்?-ன்னு! :)

    நீங்கள் சொன்னது போல், முழுக் கதையும் வாசிக்காது, நடுவிலேயே நம் மனம் உறைந்து விடுவதால், நோய் முதல் நாடிச் சென்று பார்ப்பதில்லை!

    அஜாமிளன் = காய்ந்த புல்லே! அவனுக்குத் தேவைப்பட்டது ஒரு சிறு பொறி! அது அவன் மகன் பேரால் வெளிப்பட்டது! மகனைப் பார்த்து "நாராயணா"-ன்னு கூப்பிடாது, "ஃபேனைப் போடுறா நாசமாப் போறவனே"-ன்னு கூப்பிட்டு இருந்தா? :))

    அந்த நேரத்தில், எதை நினைப்போம், எப்படி நினைப்போம்-ன்னு யாராச்சும் உறுதியாச் சொல்லீறத் தான் முடியுமா? "வலிக்குதே"-ன்னும் சொல்லலாம், எப்பவோ கோர்ட்டில் போய் நின்னது ஞாபகம் வரலாம், யாரையாச்சும் திட்டலாம், "தண்ணி"-ன்னு கேட்கலாம்...
    யாருக்கு உறுதியாத் தெரியும், எப்போ நாராயணா-ன்னு சொல்லணும்-ன்னு? :)

    அதனால்...ரொம்ப இன்டலிஜென்ட்டா கணக்கு போட்டு,
    மனத்தில் அன்பு இல்லாமல்...
    வெறும் பாவ புண்ணியக் கணக்கில் தப்பிக்கப் போடும் திட்டங்கள், உதவிடாது அல்லவா!

    எய்ப்பு என்னை வந்து நலியும் போதும்,
    அங்கு ஏதும், நான் உன்னை நினைக்கமாட்டேன்!
    அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்,
    அரங்கத்து அரவணைப் பள்ளியானே!!

    ReplyDelete
  2. நல்வரவு கே.ஆர்.எஸ்,

    //....அப்போதைக்கு இப்போதே சொல்லி வைத்தேன்,
    அரங்கத்து அரவணைப் பள்ளியானே!!..//

    சாதாரண ஜனங்களைப் போல இல்லாமல் அவனுடைய அடியார்கள் ரொம்ப இன்டெலெஜிண்ட் தான். ஜன்னல் வழியா துண்டு வீசி இடம் பிடிக்கிறார் பாருங்க.:)))

    அது ”அன்பு”ங்கிற துண்டு. ஆனதுனால அவரு கண்டிப்பா இடம் பிடிச்சுருவார்.

    ரசித்து பின்னூட்டமிட்டதிற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  3. ஆமாம், அஜாமிளன் கதை அற்புதமாக நெய்யப்பட்ட கதை தான்.
    நல்ல கதைகளின் மூலம் நல்ல கருத்துக்களை விதைக்கும் நம் முன்னோர்களின் அணுகுமுறை நினைத்து பெருமைப்படத் தக்கது.

    இவன் உண்மையாக பலகோடி ஜன்ம பாவங்களுக்காக வருந்தியவன்.
    கைவிடப்பட்ட நிலை.
    -- இது 'உலர்ந்த புல்' நிலை.

    செய்த பாவங்களுக்காக வருந்துதல், கைவிடப்பட்ட நிலை, இந்த தருணத்தில் 'ஹரி'யின் பெயர் உச்சரிப்பு-- இது போதுமே இறைவனின் கருணைக்கு!

    அஜாமிளனுக்கு 'நாராயணா' என்று உச்சரித்ததே முன்வினைகளைப் பொசுக்கும் உலர்ந்த புல்லில் பற்றிய தீப்பொறி ஆயிற்று!

    --இப்பொழுது முன்வினைகள் போய்விட்டன. இருந்தும் முக்தி கிடைக்குமா என்பது தான் கேள்வியாகப் போகிறது. அவரவர் வினைகளுக்கேற்ப அவரவர்க்குத் தீர்ப்பு!

    இந்நிலையில் முக்தி அவனுக்குக் கிடைக்காதென்றும், முக்தி அவனுக்கு வாய்க்கவே மரித்தவன் எழுப்பப் படுகிறான்.

    முக்தி கிடைக்க வழி?.. தெரிந்தோ தெரியாமலோ செய்யக் கூடிய நாமஜெபத்துடன், தெரிந்து செய்யக் கூடிய சத்காரியங்களே என்றுத் தெரிகிறது.

    அவன் கங்கைக்கரை வந்து, ஈடுபாடு கொண்ட 'உணர்ந்த' நாம ஜெபத்தாலும், சத்சங்க செயல்பாடுகளாலும் (பிறவி என்னும் பெயர் கொடுத்த உடலால் தானே செய்யக் கூடிய நல்ல காரியங்களினா லும்) செய்த பாவக்களங்கங்களை கழுவிக் கொண்டு இறுதியில் இறைவன் திருப்பாதங்களை அடைகிறான்.

    நாமஜெபம் என்பது முக்திக்கான தகுதிநிலையே தவிர, அது தீர்க்கமாகக் கிடைப்பதற்கு செய்யும் நற்செயல்களே காரணமாகிப்போகிறது என்பதைச் சொல்ல வந்த கதை இது.

    ஆமாம், அஜாமிளன் கதை அற்புதமாக நெய்யப்பட்டக் கதை தான்!

    நல்ல கதையை எடுத்துச் சொன்னமைக்கு மிக்க நன்றி, கபீரன்ப!

    ReplyDelete
  4. வருக ஜீவி ஐயா,

    ///முக்தி கிடைக்க வழி?.. தெரிந்தோ தெரியாமலோ செய்யக் கூடிய நாமஜெபத்துடன், தெரிந்து செய்யக் கூடிய சத்காரியங்களே என்றுத் தெரிகிறது. ///

    ஆமாம். உயர் அதிகாரி ஒருவருக்கு கடனைத் தள்ளுபடி செய்வார். நெகடிவ் பாலன்ஸ் இல்லாமல் ஜீரோ பாலன்ஸ் ஆகும். திரும்பவும் உழைத்து பாஸிடிவ் ஆக்காமல் போனால் அவருக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வேலைக்கு அர்த்தமில்லாமல் போய்விடுமே :)

    தவறை உணர்ந்து மீண்டும் நன்றாக வேலை செய்வார் என்ற நம்பிக்கை வந்தால் மட்டுமே கடனும் தள்ளுபடி செய்யப்படும்.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  5. பல்வேறு விளக்கங்களாலும் தெளிவு ஏற்படுகிறது. நன்றி.

    ReplyDelete
  6. வருக கீதா மேடம்,

    இதை சொல்றதுக்கும் ரொம்ப லேட்டாயிடுச்சு. மன்னிக்கவும்.(தமிழ் தட்டச்சு சிரமப்படுத்துது).

    வந்ததற்கும் பாராட்டியதற்கும் மிக மிக நன்றி.

    ReplyDelete
  7. அந்த காலத்தில் முன்னோர்கள் குழந்தைகளுக்கு இறைவனின் பெயரை வைத்தார்கள்.

    இறைவன் நாமம் ஒன்று தான் கடைதேறவழி.

    ReplyDelete
  8. வாருங்கள் கோமதி மேடம்,

    //அந்த காலத்தில் முன்னோர்கள் குழந்தைகளுக்கு இறைவனின் பெயரை வைத்தார்கள்.//

    ரொம்ப சரி :))

    கவிதா,ஸ்வப்னா, ராகுல், கிரண், கீர்த்தி என்கிற மாதிரி பொதுப்படையாகப் பெயரை வைத்து கடவுளுடைய பெயரை நினைக்க விடாமல் செய்து வருகிறது இன்றைய புது பெயர் மோகம்.

    வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  9. ஒரு முதியவர், நாஸ்திகர் மரணப் படுக்கையில் இருக்கிறார். அவர் நண்பர் அவரை உய்விக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் உன் கடைசி பையன் பேர் என்ன என்று கேட்டார். அவர் தலைவிதி, நடயணன் என்று சொல்லாமல் சின்னவன் என்று சொல்லி உயிரை விட்டார். புல் உலரவில்லை

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி