வட நாட்டில் வசிக்கும் பெரும்பாலான தென்னிந்தியர்களுக்கு ஹோலி பண்டிகை வந்தாலே பயம். அவர்கள் பயன்படுத்தும்
வர்ணங்கள் யாவும் உடலுக்கு கேடு விளைவிப்பவை என்ற கவலை வேறு.
அலுவலகத்தில் உலர் பொடி வர்ணங்கள் மட்டுமே பயன்படுத்த வேன்டும் என்ற கட்டாயம் இருந்தது. அதை சுத்தம் செய்து கொள்வதில் சிரமம் அதிகம் இல்லை.
ஆனால் தண்ணீரில் கலந்து ஒருவர் மீது ஒருவர் இறைத்துக் கொள்ளும் வர்ணங்களுண்டே அது அழியாத கோலங்களே ! உச்சக்கட்டத்தில் வர்ணங்களும் நீரும் தீர்ந்து விட்டாலும் கீழே உள்ள சேற்றை அள்ளிப் பூசி விளையாட்டுத் தொடரும். அன்றணிந்திருந்த உடுப்புகளை அத்தோடு மறக்க வேண்டியது தான். போறாத குறைக்கு நம் தோலின் மீதுள்ள வர்ணங்கள் மறைய இரண்டு மூன்று நாட்களாவது ஆகும்.
ஒரு வகையில் நம்முடைய உலக வாழ்க்கையும் சேறு பூசிக்கொள்ளும் விளையாட்டுதான். அதனால்தானோ என்னவோ, மனம் பக்குவப்பட்ட சான்றோர்களுக்கும் ஞானிகளுக்கும் இந்த சேற்றைப் பூசிக் கொள்ளும் விளையாட்டு போதுமென்ற எண்ணம் வந்து ஒதுங்குகிறார்கள். பெரும்பாலோர் இதுவே மகிழ்ச்சிக்குரிய ஆட்டம் என்று மேன்மேலும் அதில் ஈடுபாடு கொள்கிறார்கள்.
விவிலியத்தில் கடைசி கட்டம். Last supper எனப்படும் அந்த இறுதி விருந்தின் நடுவே ஏசு எழுந்தார். தன் மேலங்கியைக் கழற்றி இடுப்பிலே ஒரு துண்டை சுற்றிக் கொண்டார். ஏனமொன்றில் நீர் ஏந்தி ஒவ்வொரு சீடரின் கால்களை கழுவி துண்டினால் துடைத்து விட்டார்.
பீட்டரின் அருகே கால்களைக் கழுவ வந்த பொழுது ”என்னுடைய கால்களை தாங்கள் கழுவுவது முறையன்று. நான் அதை ஏற்க முடியாது” என்று மறுத்தான்.
“அப்படியானால் நீ என்னில் ஒருவன் அல்ல” என்று ஏசுபிரான் சொன்னதும் ”தேவரே!அப்படியானால், கால் மட்டுமல்ல என்னுடைய கைகள் தலை எல்லாவற்றையும் தர சித்தமாயிருக்கிறேன்” என்று அவரை பணிந்து அவருடைய சேவையை பெற்றுக் கொள்ள முன்வந்தான்.
”குளித்திருக்கும் ஒருவனுக்கு கால்களை மட்டும் சுத்தம் செய்தால் போதும். நீ சுத்தமானவன். ஆனால் உங்களில் ஒவ்வொருவரும் (சுத்தமானவர்) அல்ல” என்று சொன்னார். அது தன்னைக் காட்டிக் கொடுக்கப்போகும் ஜூடாஸை பற்றி மறைமுகமான குறிப்பு.
”உங்களுக்கு நான் செய்ததன் பொருள் புரிந்ததா? என்னை ஆசான் என்றும் தேவன் என்றும் அழைக்கிறீர்கள். அது சரியே. என்னை முன்னுதாரணமாகக் கொண்டு நீங்களும் ஒருவரின் கால்களை மற்றொருவர் கழுவி விட வேண்டும். உங்களுக்கு ஒரு உண்மை சொல்கிறேன். எந்த ஊழியனும் அவன் தலைவனை விட பெரியவனாக முடியாது. அப்படியே இறைதூதனும் இறைவனைவிட பெரியவனாக முடியாது.” என்று சொல்லிக்கொண்டே தம் இருக்கைக்கு சென்று அமர்ந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சிக்கு இருவிதமான விளக்கங்கள் உண்டு. முதலாவது சீடர்கள் ஒவ்வொருவரிலும் இறைவனையேக் காண வேண்டும். அடியவர்கள் கால்களை கழுவுதன் மூலம் கடவுளின் சேவை செய்வதாகவே பாவிக்க வேண்டும். இதனால் மனிதரை ஆட்டுவிக்கும் அகந்தை அழியும். அதையே ஏசு 'என்னை முன்னுதாரணமாகக் கொள்ளுங்கள்' என்று குறிப்பிடுகிறார்.
இன்னுமொரு விளக்கம்: மனிதர்கள் இறைவனின் கால்கள். எப்படி வீதியிலே திரியும் போது கால்களே அதிக அளவில் அசுத்தமடையுமோ அப்படி உலக விஷயங்களில் ஈடுபடுவதால் மனம் அசுத்தமடைகிறது. பிற எல்லா உறுப்புகள் சுத்தமாக இருப்பினும் கால்கள் சுத்தமில்லாவிட்டால் வீட்டிற்குள் நுழைய எப்படி அனுமதி இல்லையோ அப்படி மனம் சுத்த மில்லாதவனுக்கு இறைவனுடைய வீட்டிலும் அனுமதி கிடையாது. இறைவன் பெயரே அதை கழுவுகின்ற தண்ணீர். பிற சீடர்களின் கால்களை மற்றொருவர் கழுவுவதன் மூலம் இறைவன் பெயரால் சீடர்கள் ஒருவருக்கொருவர் உதவி புரிந்து மனம் சுத்தமடைந்து அவனைச் சேரவேண்டும் என்பதாக கூறப்படுகிறது.
குற்றங் குறைய, குணம் மேலிட அருளை
உற்றவரே ஆவிக்கு உறவாம் பராபரமே (தாயுமானவர்)
’அருளை உற்றவர்’ குரு ஆவார். மனிதரை உய்விப்பதற்காக உலகில் மனித வடிவில் வலம் வரும் தேவ தூதர்கள். அவர்களின் அருள் நம்முடைய பாவங்களை நொடியில் கழுவி விடும். அதுவும் பல சென்மங்களாக சேர்ந்திருக்கும் வினை மலங்களையும் அடித்து செல்லும் பிரவாகமாக வரும்.
இப்படி ஒரு கருத்தை தமது ஈரடியில் கபீர்தாஸர் வலியுறுத்துகிறார்.
कुमति कीच चेला भरा, गुरु ग्यान जल होय ।
जनम जनम का मोरचा, फल में डारे धोय ॥
அஞ்ஞான சகதியில் சீடன், ஞான மூர்த்தி குருவேநீர் |
சென்ம சென்மாந்திர சேர்க்கை, கணத்தில் கழுவுது காணீர் ||
மாற்று
புரண்டு வந்தான் சீடன் சேற்றில், குருவின் ஞானம் ஆகுது நீர் |
திரண்ட சென்மாந்திர அழுக்கு, கணத்தில் போகுது பாரீர் ||
நமது தேசத்தில் சாதாரண மக்களின் பேச்சு வழக்கில் "...விட்டுத் தலைமுழுகியாச்சு" என்ற சொல்லாடலைக் காண்கிறோம். இந்த தலை முழுகலைத் தான் கிருஸ்துவ மதமும் Babtize என்கிறது.
பாவங்களுக்காக வருந்தி மன்னிப்புக்கோரி பழைய வாழ்க்கையைத் தலைமுழுகித் தொலைத்து இறைவன் மீது முழு நம்பிக்கையுள்ளவராக மாறுவதை குறிக்க வந்த சொல் அது. "BAPTIDZO" என்கிற கிரேக்க மொழி சொல்லுக்கு முழுகி எழுதல் என்ற பொருளாம்.
பிற்காலத்தில் 'முழுகும்' வழக்கம் மறைந்து புனித நீரை மேலே தெளித்துக் கொள்வது மூலமாக ,ஞானஸ்நானம் என்பதாக மாறி யிருக்கிறது.
ஞானஸ்நானத்தின் முக்கியத்துவத்தை ஏசு பிரானே நிகோடெமஸ் என்கிற பண்டிதனுக்கு உரைக்கிறார். "ஒரு உண்மையை சொல்வேன். மீண்டும் பிறக்காமல் இறைவன் சாம்ராஜ்ஜியத்தினுள் யாரும் பிரவேசிக்க முடியாது"
"வயதான மனிதன் மீண்டும் எப்படிப் பிறக்க முடியும்? தாயின் கர்ப்பத்தில் புகுந்து வருவது கண்டிப்பாக இயலாத காரியம்" என்று பதிலளித்தான் நிகோடெமஸ்.
”இது உண்மை. நீரினாலும் ஆவியினாலும் (spirit) பிறப்பிக்கப்படாத ஒருவன் கடவுளின் சாம்ராஜ்ஜியத்தை சேர முடியாது. ஊன், ஊனுக்கு பிறப்பளிக்கிறது. ஆவி, ஆவிக்கு பிறப்பளிக்கிறது. ஆகையால் 'நீவிர் மீண்டும் பிறக்க வேண்டும்' என்று நான் சொல்வதைக் கேட்டு ஆச்சரியமடைய வேண்டாம். தன் போக்கில் காற்று வீசுகிறது. அதன் சத்தம் மட்டுமே கேட்கிறது. அது எங்கிருந்து வருகிறது எங்கே போகிறது என்பதை உம்மால் கூற இயலாது. அது போல (ஒவ்வொருவருள்ளும் உறையும்) ஆவியும் ஆவியிலிருந்து வருவதே (John 3:3)
[புனித நீர் நிலைகளில் மூழ்கி எழும்போது பூமித்தாயின் வயிற்றிலிருந்து வெளி வருகின்ற பாவனையுடன் புதிய பிறப்பாகக் கருதப்படுகிறது. இது தேகத்தை ஒட்டிய பாவங்களைக் கழுவுதலாகும். அதன் பின்னர் குருவின் உபதேசம் ஆன்மா ஆன்மாவிற்கு அளிக்கின்ற புது பிறப்பாகும்.]
நம் தேசத்தில் குருகுலம் செல்லும் முன் மாணவன் இரண்டாவது பிறப்பாக கருதப்படும் உபநயன சம்ஸ்காரத்தால் ஆன்மீக நெறியில் பயணம் செய்ய தகுதியுடையவனாகப்பட்டு அனுப்பி வைக்கப்படுகிறான்.
இருப்பினும் இல்லற தர்மத்தில் ஈடுபட்டு தம் கடமைகளை ஆற்றும் போது பலவிதமான மாசுகளால் மீண்டும் மீண்டும் அவன் மனம் பாதிக்கப்படுகிறது. இது வீதியில் திரியும் கால்கள் அசுத்தமடைவதைப் போன்றது.
அகங்காரம் என்னும் ஆணவ மலம் முக்கியமாக அழிய வேண்டும். அதைப் போக்கிக் கொள்ள சான்றோர்களின் உறவை நாடி இருக்க வேண்டும். அப்போது மனம் சுத்தம் அடைந்து- ஏசு குறிப்பிடுவது போல் கால்களை கழுவிக் கொண்டு- இறைவனை அணுகும் வாய்ப்பாகும்.
கிழக்கோ மேற்கோ அடிப்படை நெறி ஒன்றுதான் என்பது இதிலிருந்து புலனாகிறது.
உலகமெனும் சேற்றில் அமிழ்ந்து போகாமல் தன்னை காப்பாற்றியதற்காக நன்றி தெரிவிக்கும் அருணகிரியார் தன் குருவான முருகனைக் கொண்டாடுவதும் அதனால்தானே.
பேற்றைத் தவம் சற்றும் இல்லாத என்னை பிரபஞ்சம் என்னும்
சேற்றைக் கழிய வழி விட்டவா, செஞ்சடா (அ)டவிமேல்
ஆற்றை, பணியை இதழியை அம்புலியின்
கீற்றைப் புனைந்த பெருமான் குமரன் கிருபாகரனே (கந்தர் அலங்காரம்)
(பணி= பாம்பு : இதழி= கொன்றை மலர்)
மனம் நொந்து பரம்பொருளின் கருணை வேண்டி நின்றால் நொடிப் பொழுதில் துயரைத் துடைக்க வல்லவன் அவன் என்பதற்கு அருணகிரியாரின் வாழ்க்கையே சான்று.
ஞானமுதல்வனாம் விநாயகனின் பெருமை பேசும் நாள் இன்று. அவனருள் யாவருக்கும் பொங்கி பெருகட்டும் என வேண்டிக்கொள்கிறேன்.
Let us draw near to God with a sincere heart in full assurance of faith, having our hearts sprinkled to cleanse us from a guilty conscience and having our bodies washed with pure water (Heb:16-22)
//கிழக்கோ மேற்கோ அடிப்படை நெறி ஒன்று தான் என்று இதிலிருந்து புலனாகிறது.//
ReplyDeleteஅடிக்கடி உணர்கிற இதை வெகு எளிமையாக எடுத்துச் சொல்லி உணர்த்தியிருக்கிறீர்கள்.
கட்டுரையின் ஆரம்பமும், ஹோலிப் பண்டிகை கொண்டாடுகின்ற அந்தக் குழந்தைகளின் உற்சாகப் படமும் அழகாக இருந்தன.
பகிர்ந்து கொண்ட செய்திகளுக்கு மிக்க நன்றி, கபீரன்ப!
நல்வரவு ஜீவி சார்,
ReplyDelete//...அந்தக் குழந்தைகளின் உற்சாகப் படமும் அழகாக இருந்தன //
கட்டுரை எழுதியபின் ஹோலி பற்றிய ஒரு புகைப்படம் இருந்தால் நன்றாக இருக்குமே என்ற எண்ணத்தில் தேடிய போது கிடைத்தப் படம் அது. The Hindu பத்திரிக்கைக்கு நன்றி உரித்தாகிறது.
விரும்பிப் படித்து, சொல்லியிருக்கும் பாராட்டுகளுக்கு மிக்க நன்றி.
//கால்கள் சுத்தமில்லாவிட்டால் வீட்டிற்குள் நுழைய எப்படி அனுமதி இல்லையோ அப்படி மனம் சுத்தமில்லாதவனுக்கு இறைவனுடைய வீட்டில் அனுமதி கிடையாது.//
ReplyDeleteஅருமையான வரிகள்.
மனமது செம்மையானால் மந்திரம் தேவையில்லை என்பார்கள் ஞானிகள்.
நல்ல பதிவு.
வருக கோமதி மேடம்,
ReplyDeleteரசித்துப் ப்டித்ததற்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி