ஆசிரியர் அறிமுகம்
இந்த இடுகைக்காக அறிமுகம் செய்யப்படும் ஆசிரியரின் ஆன்மீக ஈடுபாட்டை அவருடன் தொலைபேசி மூலம் உரையாடித் தெரிந்து கொண்டிருக்கிறேனேத் தவிர எழுத்து மூலம் அல்ல. தன்னை ஒரு வாசகனாக அறிமுகப் படுத்திக் கொள்ளவே அவர் விழைவார், எழுத்தாளராக அல்ல.
பலவேறு வகையான ஆன்மீகப் பயிற்சிகளில் ஆர்வமுடன் அவர் ஈடுபடுகிறார். தியான முறைகள், கீதைப் பயிற்சி, சத்சங்கங்கள் என அவருடைய ஈடுபாடு தொடர்கிறது. குறிப்பாக நாமசெபத்தின் மகிமையில் அவருக்குள்ள ஈடுபாட்டை இந்த வலைப்பூவின் பின்னூட்டங்கள் வழியாகவே அறிந்து கொள்ளலாம்.
தன் பெயருடன் ஸ்ரீ யோகிராம் சூரத்குமாரை இணைத்துக் கொண்டுள்ள திரு பாலசந்தர் அவர்களே இந்த இடுகைக்கான குறிப்புகளையும் கட்டுரையையும் கொடுத்து உதவியுள்ளார்.
YRSK BALU என்றால்தான் பல பதிவர்களுக்கும் புரியும்.
அவருக்கு தம் குரு மீதுள்ள பக்தியை இக்கட்டுரையைப் படித்தாலே புரிந்து விடும். ஆம், இந்தக் கட்டுரை யோகிராம் சூரத்குமாரை மையமாகவே வைத்து பின்னப்பட்டுள்ளது.
கட்டுரைக்கான அழைப்பைத் தயங்காமல் முன் வந்து ஏற்று சமீபகாலம் வரையில் நம்மிடையே வாழ்ந்த ஒரு மகானைப் பற்றி அறிய தந்தமைக்கு அவருக்கு வாசகர்கள் சார்பாக நன்றி.
இனி பாலசந்திரன் அவர்களது கட்டுரை.
பலவேறு வகையான ஆன்மீகப் பயிற்சிகளில் ஆர்வமுடன் அவர் ஈடுபடுகிறார். தியான முறைகள், கீதைப் பயிற்சி, சத்சங்கங்கள் என அவருடைய ஈடுபாடு தொடர்கிறது. குறிப்பாக நாமசெபத்தின் மகிமையில் அவருக்குள்ள ஈடுபாட்டை இந்த வலைப்பூவின் பின்னூட்டங்கள் வழியாகவே அறிந்து கொள்ளலாம்.
தன் பெயருடன் ஸ்ரீ யோகிராம் சூரத்குமாரை இணைத்துக் கொண்டுள்ள திரு பாலசந்தர் அவர்களே இந்த இடுகைக்கான குறிப்புகளையும் கட்டுரையையும் கொடுத்து உதவியுள்ளார்.
YRSK BALU என்றால்தான் பல பதிவர்களுக்கும் புரியும்.
அவருக்கு தம் குரு மீதுள்ள பக்தியை இக்கட்டுரையைப் படித்தாலே புரிந்து விடும். ஆம், இந்தக் கட்டுரை யோகிராம் சூரத்குமாரை மையமாகவே வைத்து பின்னப்பட்டுள்ளது.
கட்டுரைக்கான அழைப்பைத் தயங்காமல் முன் வந்து ஏற்று சமீபகாலம் வரையில் நம்மிடையே வாழ்ந்த ஒரு மகானைப் பற்றி அறிய தந்தமைக்கு அவருக்கு வாசகர்கள் சார்பாக நன்றி.
இனி பாலசந்திரன் அவர்களது கட்டுரை.
அய்யன் விரும்பும் பிச்சைக்காரன்
திருவண்ணாமலையில் தேரடி மண்டபத்திலோ புன்னை மரத்தடியிலோ தனது அய்யனின் விருப்பப்படி யோகிராம் சூரத்குமார் காலம் கழித்த வருடங்கள் அவை. பெரும் தமிழ் அறிஞர்களான கி.வா.ஜகன்னாதன், மீனாட்சிசுந்தரம் பிள்ளை, பெரியசாமி தூரன் போன்றவர்கள் அடிக்கடி அவரை சந்தித்து சத்சங்கம் நடத்திய காலம். ஞானானந்த கிரி அவர்களின் தபோவனத்திலிருந்து சிவராமகிருஷ்ண ஐயர் என்பவரும் அவ்வப்போது பங்கு பெறுவதுண்டு.
ஆன்மீகத்தின் சிகரங்களான தபோவன ஞானானந்த கிரி சுவாமிகளிடமும் காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி மஹாசுவாமிகளுடனும் தனிப்பட்ட முறையில் யோகிராம் ஆழமான தொடர்பு வைத்திருந்தார். அவர்கள் இருவரிடமும் பெரும் அன்பும் மதிப்பும் கொண்டிருந்தார்.
சில அன்பர்கள் மயிலாடுதுறை அருகிலுள்ள வனகிரி என்ற ஊருக்கு மஹாப் பெரியவரின் சொற்பொழிவைக் கேட்பதற்காக புறப்பட்ட பொழுது யோகிராமும் அவர்களுடன் சேர்ந்து கொண்டார். மண்டபத்தில் பெரியவர் தரிசனம் நன்கு கிடைக்கும் வகையில் ஒரு தூண் அருகே அமர்ந்திருந்தார். அன்றைய சொற்பொழிவில் பெரியவர் அந்தர்முகம் (உள்முகம்) கொள்ள வேண்டியதன் அவசியத்தை விளக்கிக் கொண்டிருந்தார். இடையே யோகிராம் பக்கம் கையைக் காட்டி “ஒரு நல்ல உதாரணம், இதோ இங்கேயே ஒரு அந்தர் முகி” என்று குறிப்பிட்டார். உடனே கூட்டம் யோகிராம் சூரத்குமாரை சூழ்ந்து கொள்ளத் தொடங்கியது. அதை பெரியவரே அன்புடன் தடுத்து யோகியருக்கு சிரமம் இல்லாமல் பார்த்துக் கொண்டார்.
யோகிராம் சூரத்குமார் ஒரு சரித்திரப் பட்டதாரி. ஆங்கிலம் நன்கு அறிந்த ’பிச்சைக்காரர்’. அவர் வடநாட்டவர் என்றறிந்த சில ஹிந்தி எதிர்ப்பு விஷமிகள் அவருக்கு விடாமல் தொந்தரவு கொடுத்தனர். பைத்தியம் என்று அடித்து துன்புறுத்தினர். அவரது ஆடைகளை கிழித்து வேடிக்கை பார்த்தனர். பதிமூன்றுமுறை அவர் தங்கியிருந்த வீட்டுப்பூட்டு உடைக்கப்பட்டது. அவரை கொலை செய்யவும் முயற்சி நடந்தது. இவை எதுவுமே அவரை பாதிக்கவில்லை. யாரிடமும் கோபம் பாராட்டவில்லை.
ஒரு பக்கம் ஞானிகள் தமக்கு சமமாக அவரை மதித்துப் போற்றினர். மறுபக்கம் அஞ்ஞானிகள் அவருக்கு தீங்கிழைக்க அஞ்சவில்லை. கபீர்தாஸரின் ஈரடி ஒன்று அவருடைய நிலமையை பொருத்தமாக எடுத்துக் காட்டுகிறது.
ஞானியை ஞானி காணில் பெரும்ஞான ரசக்கொண் டாட்டம்
ஞானியோடு அஞ்ஞானியோ பாழும் சிரநோவுத் திண்டாட்டம்
சூரத்குமார் அவர்களுக்கு துன்பம் இழைக்கப்பட்ட காலத்தில் இருபெரும் தவசிகளும் தத்தம் வழியில் யோகியாருக்கு பக்கபலமாக இருந்ததாக அறிகிறோம்.
யோகி ராம்சூரத்குமார் சில வேளைகளில் திருக்கோவிலூர் தபோவனத்திற்கு விஜயம் செய்வதுண்டு. ஸ்ரீ ஞானானந்தகிரியும் யோகியாரும் அவ்வப்போது செய்த பல புதிரான நிகழ்வுகளை- ஞானரசக் கொண்டாட்டத்தை- அவர்களுடைய பழங்கால அடியார்கள் சந்தோஷமாக நினைவு கூர்வதுண்டு.
தென்னாங்கூர் ஸ்ரீ நாமானந்த கிரி சுவாமிஜி சொல்லிய ஒரு நிகழ்ச்சி. ஒருமுறை கூடியிருந்த பக்தர்களிடம் ”கபீரை தரிசிக்க விருப்பமா ?”என்று ஸ்ரீ ஞானானந்த கிரி சுவாமிகள் கேட்டாராம்
யாவரும் ஸ்ரீ ஞானனந்தகிரியையே ஆவலுடன் என்ன சொல்லப் போகிறாரோ என்று எதிர்பார்த்த வேளையில் யோகி ராம்சூரத்குமாரை சுட்டிக்காட்டி “ இவர்தாம் அப்போது கபீர் இப்போது யோகி ராம்சூரத்குமார்” என்று சொன்னார்.
ஞானானந்த கிரி சுவாமிகள் அவ்வாறு சொன்னதற்கு காரணம் இல்லாமல் இல்லை. கபீரைப் போலவே ராம்சூரத்குமாரும் கங்கை கரையில் பிறந்து வளர்ந்தவர். கபீரைப் போலவே இளமையிலேயே ஆன்மதாகத்தில் பல குருக்களிடம் ஞானத்தைத் தேடியவர்.
கபீருக்கு ராமானந்தர் குரு, யோகியரின் குருவோ ராமதாஸர். அவர் பெற்ற உபதேச மந்திரமும் ராம நாமம் இவருக்கு கிடைத்த மந்திரமும் ராமநாமம்.
கபீரைப் போலவே எந்த மதத்தினரும் தம்மவர் என்று யோகியர் மேல் உரிமை கொண்டாட இயலாது.
காவி உடை இல்லை நெற்றியில் மத சின்னங்கள் எதுவும் இல்லை. அழுக்கு உடையுடன் திரிந்த அருள் வேந்தன் அவர்.
தலையிலோர் பாகை உள்ளான்,
தாடி உளான், கையிலோர்
அலைவுறுமோர் விசிறிஉளான்
அங்கையிலோர் ஓடெடுப்பான்
நிலையுள்ள இன்பத்தை
நித்தம் அனுபவிக்கும்
கலையாளன் ராம்சுரத்
குமாரனை நீர்காண்மினரோ
(கி.வா.ஜகன்னாதன்)
தாடி உளான், கையிலோர்
அலைவுறுமோர் விசிறிஉளான்
அங்கையிலோர் ஓடெடுப்பான்
நிலையுள்ள இன்பத்தை
நித்தம் அனுபவிக்கும்
கலையாளன் ராம்சுரத்
குமாரனை நீர்காண்மினரோ
(கி.வா.ஜகன்னாதன்)
பேட்ரிக் என்ற பெயருடைய கராத்தே மாஸ்டர் யோகியரை சந்தித்தபோது அவருக்கு பேட்ரிக் என்ற பெயரில் வெளி நாட்டில் வாழ்ந்த ஞானியைப் பற்றிய விவரமெல்லாம் தெரிவித்தார். சந்திப்புக்குப் பின்னர் யோகியரின் அருள் நோக்கில் ஏசு பிரானையே கண்டதாகப் பேட்ரிக் கூறினார்.
இந்துக்கள்,கிருத்துவர்கள்,முகமதியர்கள் போன்ற எல்லா மதத்தினரும் வந்து அவரிடம் அருளாசி பெற்றுச் சென்றனர். இதிலிருந்து கபீரைப் போலவே கடவுள் மதங்களுக்கும் வழிபாட்டு முறைகளுக்கும் அப்பாற்பட்டவன் என்பதை உணர்த்த வாழ்ந்து காட்டியவர் என்பதும் புலனாகிறது.
( T பொன்.காமராஜன் அவர்கள் எழுதிய புத்தகத்திலிருந்து )
பக்தர் ஒருவர், பலருக்கு ஏற்படும் துன்பங்களைக் கண்டு மனம் வெதும்பி இப்பேற்பட்ட துன்பங்கள் எதற்காக என்று தனிமையில் பகவானிடம் வினவினார். அவரை ஆழ்ந்து நோக்கிய பகவான் வாசலில் மிதியடியாகப் போடப்பட்டிருந்த சாக்குப் பையை சுட்டிக்காட்டினார்.
”போ! அதில் உள்ளதைப் படித்துப்பார்”
தன் கேள்விக்கும் அவருடைய செய்கைக்கும் தொடர்பு புரியாது மிதியடி அருகே சென்று அதைப் படித்தார். படித்ததும் அவர் முகம் புரிந்துகொண்டது போல் நகை முகம் ஆனது. ”ஓ இது தானா! ஒருவர் படும் கஷ்டத்தால் மன அழுக்குகள் களையப்பட்டு தூய்மையானவர்களாகி மனதிடம் பெறுகிறார்கள்” என்று ஏற்றுக் கொண்டார்
அதில் இருந்த வாசகம்“ கல்,குருணை நீக்கிய நெ.1 திடம் அரிசி “
ஆன்மீகத்தில் பல படிகள் இருக்குமே என்ற எண்ணத்தில் ஒரு மேற்கத்தியர், அவதாரம், முனிவர் மற்றும் சாது இவர்களுக்கிடையே உள்ள வேறுபாடு என்னவென்று யோகியரிடம் கேட்டார். பகவான் தனக்கே உரிய எளிமையுடனும் அதே நேரம் முடிவுடனும் “ இந்தப் பிச்சைக்காரனுக்கு அதெல்லாம் தெரியாது. ஒன்று மட்டும் தெரியும், தன் உடலையே தான் என்று நினைத்திருக்கும் வரையில் அவன் இதில் எதுவாகவும் முடியாது. இந்த உடல் தானில்லை என்று உணர்ந்ததும் அவற்றில் வித்தியாசம் கிடையாது”
இதிலிருந்து அவர் தேக உணர்வை முற்றிலும் கடந்து விட்டிருந்த ஒரு முழு யோகி என்பதை அறிய முடிகிறது.
கிருத்துவமிஷினரிகளை சேர்ந்த சிலர் பகவானிடம் “ கிருத்துவர்களாகிய நாங்கள் மனிதகுலத்திற்கு சேவை செய்கிறோம். பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், அனாதை இல்லங்களை நிறுவி உதவுகிறோம். ஆனால் உங்களைப் போன்றோர் எதுவும் செய்யாமல் சும்மா இருக்கிறீர்களே (ஏன்) ? என்று வினவினர்.
பகவான் சொன்னது, ”சூரியன் மருத்துவமனைகளைக் கட்டுகிறானா ? பள்ளிகளை நடத்துகிறானா? அனாதை இல்லங்களை
நிர்மாணிக்கிறானா? ஆனால் சூரியன் இருப்பதனால்தானே இவையெல்லாம் நடைபறுகிறது? யோகி என்பவன் சூரியனைப் போன்றவன்”.
யார் மூலம் எவ்வகையான காரியங்கள் முடிக்கப்படவேண்டும் என்றுணர்ந்து அவர்களுக்கு அந்த ஆற்றலை அளிக்க வல்லவர்கள் யோகிகள். யோகி சூரத்குமார் “என் அய்யன் விரும்புவதால்” என்று அடிக்கடி சொன்னதன் மூலம் இறைவனின் கருவியாக தன்னை வைத்துக் கொண்டு செயலாற்றினார் என்பது புரிகிறது. ஞானானந்த கிரி சுவாமிகள் கபீர் என்று குறிப்பிட்டதற்கு ஏற்ப கபீரின் வரிகளை வாழ்ந்து காட்டியவர் யோகிராம் சூரத்குமார் அவர்கள்.
தான்செய்து நடப்பன இல்லை, கபீர்செய் யாமலே நடந்தன வன்றோ
தான்செய்து நடப்பது போலக் காண்பீர், செய்விப்ப வனவன் யாரோ
ஒரு யோகிக்கு ”அய்யனின் ஆணை”யை புரிந்து கொள்ளும் சக்தி இருக்கலாம். ஆனால் சாமானியர்கள் நிலையென்ன?
அதற்கு விடையாக பகவான் யோகி ராம்சூரத்குமார் ஒரு அருமையான கதை சொல்லுவார்.
சமுத்திரக் கரையோரத்தில் இரு தித்திபப் பறவைகள் இருந்தன. முட்டையிட்டு இரை தேடச் சென்ற போது கடல் அலைகள் முட்டைகளை இழுத்துச் சென்று விட்டன. திரும்பி வந்த தித்திபப் பட்சிகளுக்கு ஒரே வருத்தம். கடலின் மீது ஒரே கோபம். கடலைப் பார்த்து முட்டைகளைத் திருப்பித் தா என்று கேட்டால் கடல் அலட்சியப்படுத்தி விட்டது. ”இந்தக் கடலை வற்றச் செய்து முட்டைகளை திரும்பப் பெறுவோம்” என்று தீர்மானித்த பறவைகள் தம் அலகுகளினால் நீரை கரையில் வாரி இறைத்தன. பல மணி நேரங்கள் முயற்சி நீடித்தது. அந்தப்பக்கம் வந்தப் பெரியவர் ” இது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அவைகளின் குறிக்கோளைக் கேட்டவர் “இது நடக்கக் கூடிய காரியமா ?”என கேலி செய்தார். பறவைகளோ சற்றும் மனம் தளராமல் “உங்களுக்கு அதில் என்ன சந்தேகம்? கடல் நீரைக் கட்டாயம் வற்றச் செய்து முட்டைகளை மீட்போம்” என உறுதியுடன் கூறின. அவைகளின் உறுதியையும் விடாமுயற்சியையும் கண்டு அந்தப் பெரியவர் தன் தெய்வீகக் கரங்களை கடலில் விட்டு முட்டைகளை மீட்டுத் தந்தார்.
பகவான் இந்தக் கதையை மிகுந்த நெகிழ்வும் அன்பும் மிளிரக் கூறி “விடா முயற்சியும் தளரா மன உறுதியும் கொண்டு செய்யும் முயற்சிகள் இறையருளை ஈர்க்கும் சக்திஉடையவை என்று கூறுவார்.
விடாமுயற்சிக்குத் தேவை வைராக்கியம். அதனுடன் இலக்கை அடையவேண்டும் என்ற தணியாத தாகம், தீராப் பசி அல்லது வெறி அவசியம் இருக்க வேண்டும். நமது லட்சியத்தில் நேர்மை இருந்தால் அது இறையன்பை நம்பால் கொண்டுவர முடியும். இது இருந்தால் நம் சாதனை எளிதாகி விடும்.
இதை நினைவுறுத்தும் கபீரின் ஈரடி ( பாரதி எதிரொலிக்கும் கபீர் )
ஆழியுள் குதிப்பர் ஆழ மூழ்குவர், அள்ளி வருவரே முத்து
கூழையர் கூடுவர் கூசியே நிற்பர், எங்கனம் தருவரே முத்து?
(கூழையர்= அற்ப மக்கள், அறிவற்றவர்; கூசுதல்= பயப்படுதல்)
கடலில் மூழ்கி முத்தெடுப்பது ஒரு கடினமான செயல். துணிச்சல் உள்ளவர்கள் மட்டுமே மேற்கொள்ளும் ஒரு காரியம் இது. உள்ளே சென்றவருக்கு மூச்சுக் கட்டும் திறமை அசாதாரணமாக இருக்க வேண்டும். கடல் வாழ் பிராணிகளால் எந்த கணமும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம். அதனால் பெரும்பாலானவர் தொழிலில் உள்ள அபாயத்தையும் சங்கடங்களையும் சொல்லி முத்துக்குளிக்க விரும்புவனை தடுக்க முயலுவர். மனத்திண்மையுடையவர் அவற்றைப் பொருட்படுத்தாது துணிந்து செயலில் இறங்குவர். அப்பேர்பட்டவர்கள் தான், கடலின் அரிய பொக்கிஷங்களை உலகு வெளிக்காட்டுகின்றனர்.
கபீர் இந்த உதாரணத்தை சொல்வதன் நோக்கம் ஆன்மீகத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு சாதனைகளை மேற்கொள்ளாமல் வெறும் பேச்சளவிலே நிற்பதால், பிறவி வந்ததன் பயனான, இறையின்பம் அடையப் படாதது என்பதாகும். சாதனைகளை மேற்கொள்ள பெரிய வைராக்கியமும் திடச்சித்தமும் தேவை என்பதை எல்லா ஞானிகளும் உரைக்கின்றனர். எனவே அதை முத்துக்குளிப்பதற்கு ஒப்பாக்கி காட்டுகிறார். ஆயின் நாம் இதை வெறும் ஆன்மீகத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் எந்த ஒரு உயர்லட்சியத்தை அடைவதற்கான தேவை எனக்கொள்ளலாம்.
தளரா மனம் உள்ளவர்களின் முயற்சிக்கு இறைவன் கரங்களும் விரைந்து உதவிக்கு வரும் என்று நமக்கெல்லாம் நம்பிக்கை தரும் வகையில் தித்திப பறவைகளின் கதை மூலம் அவன் அருளை புரிய வைக்கிறார் இருபதாம் நூற்றாண்டு கபீரான ஸ்ரீ யோகிராம் சூரத்குமார்.
டிசம்பர் ஒன்றாம் தேதி யோகிராம் சூரத்குமார் அவர்களின் ஜன்ம ஜெயந்தி. அவருடைய அருள் வாசகர்கள் அனைவருக்கும் பூரணமாய் கிட்டட்டும்.
ஓம் ஸ்ரீராம் ஜெயராம், ஜெய ஜெய ராம்.
கலிமலம் தீர்க்குமே, சதா செபிப்பீர் ராம நாமமே
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
திண்மையும் பாவமும் சிதைந்துத் தேயுமே
சென்மமு மரணமு மின்றித் தீருமே
இம்மையே ராமா வென்றிரண் டெழுத்தினால்
(கம்பராமாயணம்)
---------------------------------------------------------
இருபதாம் நூற்றாண்டின் கபீரைப் பற்றி பல அரிய தகவல்களை மிகுந்த விருப்பத்துடன் வாசகர்கள் அனைவர்களுடனும் பகிர்ந்து கொண்ட திரு YRSK Balu அவர்களுக்கு மிக்க நன்றி.
அவருக்கு குருஅருள் நிறைந்து விளங்கட்டும் என்று வேண்டிக் கொள்வோம்.
நன்றி யோகியாரின் வாழ்வியல் நிகழ்வுகள் நமக்கு உணர்த்தவேண்டியதை உள்ளடக்கி இருந்ததை பகிர்ந்தமைக்கு
ReplyDeleteவாழ்த்துகள்
//அவருக்கு குருஅருள் நிறைந்து விளங்கட்டும் என்று வேண்டிக் கொள்வோம்.//
ReplyDeleteநிச்சயமாக! எல்லோரும் சேர்ந்தே!
அருமையான, நெகிழ வைத்த, பதிவு.
ReplyDelete//”ஓ இது தானா! ஒருவர் படும் கஷ்டத்தால் மன அழுக்குகள் களையப்பட்டு தூய்மையானவர்களாகி மனதிடம் பெறுகிறார்கள்”//
அடிப்பட்டு அனுபவத்தில் (இன்னும்) கற்றுக் கொண்டிருக்கும் உண்மை. அவர் அழகாகச் சொல்லி விட்டார்.
//”சூரியன் மருத்துவமனைகளைக் கட்டுகிறானா ? பள்ளிகளை நடத்துகிறானா? அனாதை இல்லங்களை
நிர்மாணிக்கிறானா? ஆனால் சூரியன் இருப்பதனால்தானே இவையெல்லாம் நடைபறுகிறது? யோகி என்பவன் சூரியனைப் போன்றவன்”.//
அருமை.
தித்திப பறவைகளின் கதையும் மிகுந்த நம்பிக்கை அளிக்கிறது.
//மனத்திண்மையுடையவர் அவற்றைப் பொருட்படுத்தாது துணிந்து செயலில் இறங்குவர். அப்பேர்பட்டவர்கள் தான், கடலின் அரிய பொக்கிஷங்களை உலகு வெளிக்காட்டுகின்றனர்.//
முத்தெடுக்க தேவையான வைராக்கியத்தை இறைவன் நமக்கு அருளட்டும்.
யோகியாரை வணங்கிக் கொள்கிறேன். திரு. பாலு அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளும் வணக்கங்களும்.
பறவைகளின் கதை மிக அருமை.
ReplyDelete//நமது லட்சியத்தில் நேர்மை இருந்தால் அது இறையன்பை நம்பால் கொண்டுவர முடியும். இது இருந்தால் நம் சாதனை எளிதாகி விடும்.//
ReplyDeleteநேர்மையான காரியங்களின் திரட்சியே உலக இயக்கத்தின் அச்சாணி. இறைவனின் விருப்பமும் அதுவேயாதலால் சீரான உலக இயக்கத்திற்கு நம்மையும் ஒரு கருவியாக-- 'டூலாக'-- உபயோகித்துக் கொள்கிறான் போலும்.
யோகியாரின் அருள் இருள் விலக வழிகாட்டட்டும். நல்லதொரு பதிவை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி.
எளிமையின் இமயம், வாழும் வள்ளல், படம் அருமை (copy எடுத்துக்கொண்டேன்)
ReplyDeleteகருத்தும் அருமை.. நன்றி ஐயா,
தேவன்
படித்த அனைவர்க்கும், கமெண்ட் எழுதியசிவா,கிருஷ்ணமூர்த்தி,கவிநயா,ராதா,ஜீவி, தேவன் அனைவர்க்கும் என் நன்றிகள்.
ReplyDeleteஅருமையாக வடிவமைத்த உமேஷ்ஜிக்கு என் நன்றிகள்.
தளரா முயற்சியின் தேவையும் யோகியரின் வரலாறும் நன்கு வெளிப்பட்டது, அருமையான பதிவு,
ReplyDeleteநன்றிகள்.
திருவண்ணாமலையில் மகான் யோகி ராம்சுரத்குமார் அவர்களை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.
ReplyDeleteசிறப்பு இடுகை விருந்தினர் அருமையாக யோகியாரைப் பற்றி பகிர்ந்து கொண்டார்.
//அவருக்கு குரு அருள் நிறைந்து விளங்கட்டும் என்று வேண்டிக் கொள்வோம்//
வேண்டிக் கொள்கிறோம் எல்லோரும் சேர்ந்து.
உங்களுக்கும் வாழ்த்துக்கள்.
எங்களுக்கு நல்ல பதிவர்களை அறிமுக படுத்துவதற்கு.