பழைய திரைப்பட ப் பாடல் ஒன்று :
சுதந்திர பூமியில் பலவகை மனிதர்கள்
தோட்டத்தில் மலர்ந்த மலர்கள்
தோட்டத்து மலர்களின் ஆயிரம் நிறங்களும்
ஜனங்களின் ஆயிரம் குணங்கள்
இப்படி ஆயிரம் ஆயிரம் குணங்கள் எழுவது ஏன் ?
எப்படி ஆயிரமாயிரம் வர்ணங்கள் மூன்று அடிப்படை வர்ணங்களான (Primary colours) சிவப்பு மஞ்சள் நீலம் என்பனவற்றின் பலவித கலவைகளாக உருவெடுத்தனவோ அப்படியே தாமசம், ரஜசம் சத்துவம் என்ற மூன்று அடிப்படை குணங்களின் கலவைகளாக மனிதர்களின் ஆயிரம் குணங்களை கொள்ளலாம்.
காடு ஒரு சுதந்திர பூமி. அது சிருஷ்டியில் உள்ள அனைத்து நிலவாசி மற்றும் அதனுள் இருக்கும் நீர் நிலைகளில் நீர் வாசி ஜீவன்களுக்கும் அடைக்கலம் தந்து போஷிக்கிறது. அங்கே பல்விதமான குணங்களை உடைய மிருகங்கள் பறவைகள் தத்தம் போக்கில் வாழ்கின்றன. இப்பிறவியில் நாம் பெற்றிருக்கும் உடலும் ஒரு வகையில் அந்த காட்டைப் போன்றதே என்கிறார் திருமூலர். இங்கே வாழுகின்ற மிருகங்களைப் பாருங்கள்.
பன்றியும் பாம்பும் பசு முசு வானரம்
தென்றிக் கிடந்த சிறுநரி கூட்டத்துள்
குன்றாமை கூடி தராசின் நிறுத்தபின்
குன்றி நிறையை குறைக்கின்றவாறே
( முசு வானரம் = கருங்குரங்கு ; தென்றி என்பது தெற்றி என்பதன் வழுவல் மேடு என்பதாக பொருள் கொள்ளலாம். நரிக்கூட்டம் மேட்டில் கிடந்து ஊளையிடும் தன்மையன )
சீவனுக்குள்ளே, பன்றி தாமச குணம், பாம்பு ரஜோ குணம், பசு சத்துவ குணம். இவைகளுடன் மனம் (வானரம்) கூட்டு சேர்ந்து எண்ணற்ற எண்ணங்கள் (சிறு நரி கூட்டம்) எப்போதும் திரிகின்றனவாம். சீவனை மாசுபடுத்தும் இக்கூட்டத்தால் சீவன் சிவனாகும் தகுதியை இழந்து நிற்கிறது.
#அடுத்து திருமூலர் இதனை பரிசுத்தமாக்கும் முறையைப் பற்றி பொற்கொல்லர் தங்கத்தை புடம் போடுவதற்கு ஒப்பிடுகிறார். குன்றாமை என்பது நிறுத்தலுக்கு நிர்ணயிக்கப்பட்ட சொக்கத் தங்கத்திற்கான நிறையை குறிப்பிடுவதாகும் (standard weight). குறிப்பிட்ட அச்சில் வார்க்கப்படும் உருக்கப்பட்ட சுத்த தங்கத்தின் எடை மாறுபடாதது. அதனை வைத்தே தங்கத்தின் தூய்மை அளவிடப்படுகிறது.
ஆர்கிமிடீஸ் இதனை நீர் ஒப்பு அடர்த்தியை வைத்து புரிந்து கொண்டார்.
சொக்க தங்கத்தின் அடர்த்தி (specific gravity) 19.3 அதனோடு மாசுகள் இருந்தால் அதன் அடர்த்தி குறைந்து 16 ஆகவோ 17 ஆகவோ இருக்கலாம். பொற்கொல்லர் ஒவ்வொரு முறையும் புடம் போட்டபின் அதை நிறுக்கும் போது சில குந்துமணிகளை எடை சமன் செய்வதற்காக சேர்த்து மாசுகளின் அளவை அறிந்து கொள்வார். பின்னர் மீண்டும் புடம் போட்டு எவ்வளவு குந்துமணிகளை குறைவாக சேர்க்க வேண்டி இருக்கிறது என்பதை கணிப்பார். இப்படி புடம் போட்டு போட்டு சொக்கத் தங்கத்தை உருவாக்குவார்.
அதே போல் குருவும் தன் சீடனை புடம் போட்டு அவனுடைய மனமாசுகளை நீக்கி அவனை சிவமாக்கி விடுகிறார். ”குன்றி (குந்துமணி) குறைக்கின்றவாறே “ என்பது குந்துமணியின் எடையை குறைக்கும் பாங்கில் சிறிது சிறிதாக சீடனது மனமாசுகளை நீக்கி பரிசுத்தமாகி விடுவதைக் குறிக்கும்.#
( # இது என்னுடைய புரிதல். எனக்கு திருப்தியான விளக்கம் எந்த உரையிலும் கிடைக்க வில்லை . மாறுப்பட்ட கருத்து இருப்பின் தயவுகூர்ந்து தெரிவிக்கவும் #)
கபீர்தாஸர் சொல்லும் வழி, குறைகளுக்கு காரணமாகும் அவ்விலங்குக் கூட்டை தவிர்ப்பது தான்.
सूता साधु जगाइये, करै ब्रह्म को जाप ।
ये तीनों न जगाइये, साकट सिंहरु सांप ॥
எழுப்பிடு துயிலும் துறவியை, துதிப்பான் அவனும் பரமனை
எழுப்பாதே அரி அரவம் மூடனை, மூன்றால் வருமே வெவ்வினை
( அரி : சிங்கம் ; அரவம் =பாம்பு ; வெவ்வினை = கொடிய துன்பம்)
ஆன்மீக வழக்கில், குருவின் பெருமையை அறியாதவர்கள் மூடர்கள்.
இதை மாணிக்கவாசகர் அச்சோ பதிகத்தில் சொல்கிறார்.
“ முத்தி நெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை
பத்தி நெறி அறிவித்து பழவினைகள் பாறும் வண்ணம்…”
முக்திநெறிக்கு குரு அவசியம். அந்த அவசியத்தை புரிந்து கொள்ளாதோர் மூர்க்கரே. அவர்களுடைய புலமையோ, அறிவுத்திறமையோ இங்கு கணக்கிற்கு வராது. ஏனெனில் ஆன்மீகத்திற்கு மிக அடிப்படையான சரணாகதி என்கிற மனப்பக்குவம் அவர்களிடம் இருப்பதில்லை. அவர்கள் குருவின் வெளித் தோற்றத்தை பேச்சு நடவடிக்கைகளை உலகரீதியாக எடைபோடுகின்றனரே அன்றி அவர்கள் எட்டி இருக்கக் கூடிய ஆன்மீக உயரம் என்ன என்பதை அறிய இயலாதவர்களாய் இருக்கின்றனர்.
எழுப்புதல் என்பதை அறியாமையை நீக்குதல் என்று பொருள் கொள்ள வேண்டும். எழுப்பாதே என்றால் அவர்களிடம் இருக்கும் அறியாமையை நீக்கும் முயற்சி எதுவும் துன்பத்தில் முடியக் கூடியது என்பதால் அதை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்துகிறார் கபீர்தாஸர்.
அவர்களைக் கண்டு இறைவனைப் பற்றி பேசினால் வீண்வாக்கு வாதம் தான் வளருமே தவிர அதனால் வேறு பயன் ஒன்றும் இருக்காது.
இது மூடர்களின் நிலை.
அரி மற்றும் அரவம் இரண்டும் சிங்கத்தையும் பாம்பையும் தான் குறிக்க வந்தனவா ? மேலோட்டமாக அப்படித்தான் விளக்கம் சொல்கிறார்கள். நமக்கு திருமூலரும் பல சித்தர் பாடல்களின் அறிமுகம் இருப்பதால் இதற்கு இன்னும் ஆழமான பொருள் இருக்கும் எனத் தோன்றுகிறது.
சிங்கம் மிக்க வலிமையுடையது, காட்டிற்கே ராஜாவானாலும் அதன் சிந்திக்கும் திறன் குறைபாடு உடையது. அதற்கு முக்கிய காரணம் ஆணவம் அதன் கண்களை மறைக்கிறது. இல்லாவிட்டால் ஒரு அற்ப முயலின் பேச்சைக் கேட்டு கிணற்றில் குதிக்குமா?
ஆணவத்தினால் அழிவை சந்தித்தவர்கள் இரண்யகசிபு, இராவணன், துரியோதனன் முதல் தற்காலத்தில் வரலாறு கண்ட பல சர்வாதிகாரிகளைச் சொல்லலாம். இந்த அகங்காரம் எப்போது தலையெடுக்கும் என்று சொல்ல முடியாது. எனவே சாதகன் இவ்விஷயத்தில் மிக மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அது நம்முள் உறங்கிக் கிடப்பதே மேல். அதை தவறியும் எழுப்பிவிடக் கூடாது.
அதே போல் பாம்பு இந்திரியங்களின் கவர்ச்சியை குறிக்க வந்தது. ஆதமும் ஏவாளும் கடவுளினால் படைக்கப்பட்டு அவருடைய தோட்டத்தில் உள்ள ஒரு
மரத்தின் பழத்தை உண்ணக்கூடாது என்று கட்டளை இட்டு இருந்தார். அது பிறப்பு இறப்பிற்கு வழிவகுக்கும் என்ற காரணத்தினால் சொல்லப்பட்ட அறிவுரை. அதையும் மீறி ஒரு பாம்பின் (சாத்தான்) பசப்பு வார்த்தைகளை நம்பி ஏவாள் அதனை உட்கொண்டு விடுவதால் இந்த உலகில் மனித சந்ததிகளும் பிறப்பு-இறப்பு சுழல் இப்பூமியில் உண்டாயிற்று என்பது விவிலியக் கதை.
பாம்பைப் போல இந்த புலனின்பக் கவர்ச்சிகள் ஒரு முறை சுற்றிக் கொண்டு விட்டால் லேசில் விடாது. இதைத்தான் மணிவாசகரும்
…..இந்திரியவயம் மயங்கி இறப்பதற்கே காரணமாய்
அந்தரமே திரிந்து போய் அரு நரகில் வீழ்வேற்கு….
என்று சுட்டிக்காட்டுகிறார்.
அப்படி சிக்கிக் கொண்டபின் இறைவன் திருவருள் இன்றி மீண்டு வருவது முடியாது.
அதனால் குருவின் பேச்சைக் கேட்டு நடப்பவன் இந்த அரவத்தின் விஷயத்திலும் மிக மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அவற்றை தூண்டிவிடக் கூடிய எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது.
ஆகையால் கபீர்தாஸரின் இந்த ஈரடிக்கு பொருள் கொள்ள வேண்டுமானால் அகங்காரமற்று, புலனடக்கம் கொண்டு, குருவின் பெருமையை புரிந்து கொள்ளக் கூடியவர்கள் ஆன்மீக விழிப்புணர்வுக்கு தகுதியானவர்கள். அவர்களைப் பற்றி அக்கறை கொள்ளுங்கள். இவர்கள் திருமூலரின் பாதையில் படிப்படியாக குற்றங்களை களைந்து முழுமை அடைவார்கள். அஞ்ஞானத்தில் உழலுபவர்களிடம் ஆன்மீகப் பேச்சு வேண்டாம். அவர்களை எழுப்பினாலும் பிரச்சனைகள் தான் வரும், அதனால் சும்மா இருப்பதே மேல்.
-------------------------------------------------------------------
2017 நிறைந்து 2018 -ல் காலடி வைக்கப் போகிறோம். மேலும் கபீரின் ஈரடிகளை புரிந்து கொள்ள குரு அருளை பிரார்த்தித்து அனைத்து வாசகர்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்க வளமுடன்.
பார்த்தேன். இன்னும் ஆர அமர படிக்கவில்லை.
ReplyDeleteவாசித்து விட்டு வருகிறேன்.
நல்வரவு ஜீவி ஐயா
ReplyDeleteதங்கள் மேலான கருத்துரைகளுக்கு காத்திருக்கிறேன். நன்றி