Showing posts with label பஸவேசுவரர். Show all posts
Showing posts with label பஸவேசுவரர். Show all posts

Saturday, December 30, 2023

நாகமொன்றை மண்ணால் செய்தே ...

இயற்கையில் நமக்கு புரியாத புதிர்கள் ஏராளம். அவற்றிற்கெல்லாம்  விடைகாண இயலாது. ஆனால் மனிதர்களின் செயல்களுக்கு ஒரு அர்த்தம் இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதில் தவறொன்றுமில்லையே. அவைகளும் பல சமயங்களில் அர்த்தமின்றி செய்யப்படும் போது- குறிப்பாக சமய வழக்கங்களில் - மூட நம்பிக்கையாகிறது. 

நாக பஞ்சமியன்று  பாம்புப் புற்றினுக்கு பால் ஊற்றுவது நம் நாடெங்கும் பரவலாகக் காணப்படுவது. பால் குடிக்காத பாம்பிற்கு எதற்குப் பால்?  பல வருடங்களாக என்னைக் குடைந்து கொண்டிருந்த இந்த கேள்விக்கு விஞ்ஞான ரீதியான  விளக்கம் ஒன்று  கறையான் புற்றுகளை பற்றி எழுதும் போது  எனக்கு தோன்றியது.  அதை  கட்டுரையின் கடைசியில் காண்போம். 

இந்த நம்பிக்கை உள்ளவர்களின் நடத்தை அவர்களின் நிஜ வாழ்க்கைக்கு முரணாகப் போகும் போது சான்றோர்களின் நகைப்பிற்கு ஆளாகிறார்கள்.

கபீர்தாஸ்  இதை இப்படி கேலி செய்கிறார்'

माटी का एक नाग बनाके, पूजे लोग लुगाया ।

जिन्दा नाग जब घर में निकले, ले लाठी धमकाया ।।

நாகமொன்றை மண்ணால் செய்தே உலகோர் செய்வார் பூசை |

நாகமோ உயிருடன் அகம் புகுந்தால் தடியால் விழுமே பூசை ||

( அகம் = இல்லம் ; பூசை என்பதற்கு பலத்த அடி என்ற பொருளும் உண்டு

இங்கே நம்பிக்கை வேறு நடப்பு வேறு என்பது வெளிப்படை.  இந்த இடைவெளி பெரிதாகும் போது நம்பிக்கை என்பது மூட நம்பிக்கை ஆகிறது.

இதே கருத்தை கர்நாடகத்தில் பக்தி புரட்சி  செய்த பஸவேசுவரர்  "கல்ல நாகர கண்டரே"  என்னும் பாடலில் சொல்லியிருக்கிறார்.  இவர் 400 வருடங்கள் கபீர்தாஸருக்கும்  முந்தயவர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் (1134- 1196 )

ಕಲ್ಲ ನಾಗರ ಕಂಡರೆ ಹಾಲನೆರೆಯೆಂಬರು,
ದಿಟದ  ನಾಗರ ಕಂಡರೆ ಕೊಲ್ಲೆಂಬರಯ್ಯಾ 
ಉಂಬ ಜಂಗಮ ಬಂದಡೆ ನಡೆಯೆಂಬರು 
ಉಣ್ಣದ  ಲಿಂಗಕ್ಕೆ ಬೋನವ ಹಿಡಿಯೆoಬರಯ್ಯಾ
ನಮ್ಮ ಕೂಡಲಸಂಗನ ಶರಣರ ಕಂಡು 
            ಉದಾಸೀನವ ಮಾಡಿದಡೆ 
ಕಲ್ಲ  ತಾಗಿದ ಮಿಟ್ಟಿಯಂತಪ್ಪರಯ್ಯಾ     ।।

 நாகம் கல்லானால் பாலை அதன் மேல் சொரிவார் 

நாகம் உயிர்த்து வந்தால் உடனே அதைக் கொல்வார் 

உன்னத அடியார்களிடம்  பாராமுகம் கொள்வார்

உண்ணாத லிங்கத்திற்கு நிவேதனம் படைப்பார்.

கூடல சங்கம தேவா 

உன் பக்தரை உதாசீனம் செய்வோரெல்லாம் 

மண்கட்டி  பாறையில் மோதியது போலாவார் 

இந்த பாடல் சிவனடியார்களின் பெருமையை எடுத்துக் கூறுகிறது. 

அவர்கள்,மன உறுதியில்,  பாறையைப் போன்றவர்கள். வெளியுலக ஏற்றத் தாழ்வுகள் அவர்களை பாதிப்பதில்லை.  அவர்களின் பெருமை அறியாதவர்கள் மண்கட்டி போன்றவர்கள். அந்த சிறுமதியாளர்கள் தாம் செய்யும் உதாஸீனத்தால் பாதிப்பு தங்களுக்கே என்பதை அறியாதவர்கள். எப்படி மணற்கட்டியை  பாறை மேல் வீசினால் தூள்தூளாகிப் போகுமோ அது போன்றே அஞ்ஞானிகள் சான்றோர்களுக்கு செய்யும் அவமதிப்பால் தமக்குத் தாமே துன்பத்தை வரவழைத்துக் கொள்கின்றனர் என்பதே இதன் மையக்கருத்து.

 ஆன்மீகத்தின் முதற்தேவை மன அடக்கம் அடுத்த கட்டம் சாது சத்சங்கம். தற்பெருமையால் மன அடக்கம் குன்றும் போது தவறுகள் பெரிதாகும் வாய்ப்பு அதிகம். அப்போது நாம் அடுத்த கட்டத்திற்கு நகரவே முடியாது. இதனால் நஷ்டம் நமக்கே ஒழிய சாதுக்களுக்கு ஒன்றுமில்லை. அதைத்தான் மண் உருண்டை உதாரணத்தின் மூலம் மிகவும் நாசூக்காக பஸவேசுவரர் சொல்லியிருக்கிறார்.

------------------------------------------------------------------------------

என் சிற்றறிவுக்கு எட்டியபடி :

பாம்பின் (கறையான்) புற்றிற்கு பாலூற்றுவது ஏன்? 

மக்குத்திம்மன் பதிவு ஒன்றில் 'கறையான் புற்றில் பாம்பு' பற்றி டிவிஜி யின் பாடலை (#371) மொழி பெயர்த்திருந்தேன். அப்போது அந்த புற்றுகளை அவைகள் எப்படி அமைக்கின்றன என்பதைப் பற்றி பல கட்டுரைகளை படிக்க நேர்ந்தது.  முக்கியமாக மண்துகளை பிணைக்கும் அவற்றின் உமிழ்நீர் ஒரு சிறப்பான ரசாயனத்தன்மை கொண்டது. எப்படி சிலந்தியின் வலை அதன் உமிழ்நீரால் பின்னப்படுகிறதோ அதேபோல் கறையான் எறும்புகள் தம்முடைய உமிழ்நீரால் கூட்டை கட்டுகின்றன. அந்த ரசாயனத்தின் தன்மை என்னவெனில் மழைக் காற்று இவற்றை தாக்கு பிடிக்கும் அளவு உறுதியானது மட்டுமின்றி அந்த கூட்டைச் சுற்றி பிற வகை தாவிரங்கள்  பெரிய அளவில் எதுவும் தலையெடுக்காமல் தடுக்கும். ஏனெனில் அவற்றின் வேர் கூட்டை அடைந்தால் அவைகளின் பாடு பெரும்பாடு ஆகிவிடும். அதனால் புற்றுகள் மிகுந்த பகுதி வறண்டு கள்ளிச் செடிகளும் முட்புதர்களுமாக காணப்படுகின்றன.  நாளடைவில் இப்புற்றுகளில் அடியில் உள்ள குளிர்ச்சி காரணமாக பாம்புகள் குடி புகுகின்றன. அதனால் அவை பாம்பு புற்று ஆகிவிடுகின்றன.

இயற்கை விவசாயத்தை பரிந்துரைப்போரின் முக்கிய கவனமெல்லாம் மண்ணை வளப்படுத்தும் பாக்டீரியாக்களை மண்ணில் அதிகப்படுத்த வேண்டும் என்பது தான். அதற்கு பசுந்தாள் உரம் அதிகம் மண்ணில் சேர்த்து  யூரியா போன்ற ரசாயன உரங்களை தவிர்க்க வேண்டும். ஏனெனில் ரசாயன உரங்கள் நுண்ணுயிர்களின் பெருக்கத்திற்கு விஷம் போன்றவை.

இப்போது வீட்டுத் தோட்டத்திலோ விவசாய நிலத்திலோ ஒரு கறையான் புற்று காணப்படுகிறது என்று வைத்துக் கொள்வோம்.  அவைகளின் பெருக்கத்தை தடைசெய்ய அல்லது நுண்ணுயிர்களின் பெருக்கத்தை அதிகரிக்க பால் தயிர் போன்ற புரதம் கூடிய திரவங்களை மண்ணில் சேர்த்தால்  அவைகள் விரைவாக செயல்பட்டு நுண்ணுயிர்களின் செயல்பாட்டை துரிதப்படுத்தும்.  இதனால் தாவரங்களுக்கு வேண்டிய ஊட்டச் சத்து கிடைக்க வழி பிறக்கும். புற்றுக்கு பால்  ஊற்றுவதன் காரணம் இதுவாக இருக்கலாம் என்று தோன்றுகிறது. 

இதை ஒருவகை soil reclamation என்று கூட சொல்லலாமோ !

இது என்னுடைய மேலோட்டமான புரிதல். இதில் எவ்விதமான ஆன்மீக உள்ளுணர்வும் கிடையாது. 

ஆனால் சர்ப்ப வழிபாட்டில் கண்டிப்பாக ஆழமான பொருள் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இதோ சத்குருவின்  வார்த்தைகளில் கேளுங்கள்.