Wednesday, July 09, 2008

கடுகுக்குள்ளே தெரியும் மலை

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் மிகச் சிறியது என்றால் கடுகும், ஊசியும். இவைகளை வைத்துதான் எத்தனை விதமான கதைகள், நிகழ்சிகள் வர்ணனைகள்.

"கடுகைத் துளைத்தேழ் கடல் புகட்டி, குறுகத் தறித்தகுறள்" என்று திருக்குறளின் பெருமை பேசுவார் இடைக்காடர்.

”காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்று மருதவாணன் சொல்லி மறைகிறான் திருவெண்காடருக்கு (பட்டினத்தார்)

மரணம் நிகழாத வீட்டிலிருந்து கையளவு கடுகை கொண்டுவரச் சொல்கிறார் புத்தர், குழந்தையை இழந்த அபாக்யவதியின் துயர் தீர்க்க.

அரசன், சிகந்தர் லோடியின் அழைப்பிற்கு கபீர் வருவதில் தாமதம். ஏனென்று விசாரித்தபோது ”ஊசியின் காதளவு துவாரத்தில் ஒட்டகங்களின் அணிவகுப்புச் செல்லும் விந்தையைக் கண்டு இறைவனின் பெருமையை எண்ணி வியந்து கொண்டிருந்தேன்” என்றார்.

ஊசியின் காதில் ஒட்டகங்கள் நுழையும் வரை நம்பிக்கையில்லாதவனுக்கு சுவனபதியில் இடம் கிடையாது என்பது இஸ்லாத்தில் கூறப்படும் கருத்து என்று அறிகிறோம்.

நம்பிக்கையைப் பற்றிச் சொல்லும் போது ”கடுகளவாவது உங்களுக்கு நம்பிக்கை உண்டானால் அந்த மலையையும் நகர்த்தலாம்” என்றார் ஏசு பிரான் (மத்தேயு: 17-20).

இறைவனின் பெருமையில் நம்பிக்கை வைத்தாலே மலையை நகர்த்த முடியுமென்றால் அந்த இறைவனே மனது வைத்தால் ஆகாததும் உண்டோ.

அதை மனதில் வைத்தே கபீர் சொல்கிறார்.

साँई से सब होते है, बन्दे से कुछ नाहि ।
राई से पर्वत करे, पर्वत राई माहिं ॥


ஸாயி ஸே ஸப் ஹோதே ஹை, பந்தே ஸே குச் நாஹி |
ராயி ஸே பர்வத் கரே, பர்வத் ராயி மாஹி
||

பெருமாள் செய்வதே எல்லாம், இவனால் ஆவது இல்லை எதுவும்
பெருமலையும் கடுகுள் அடங்கும், அவனால் கடுகே மலையும் ஆகும்

அடிமுடி காணாக் கிடைக்கா ஜோதியாக நின்ற அண்ணாமலையாராகட்டும் “ஸர்வதஹ பாணி பாதம் தத் ஸர்வோக்ஷி ஷிரோ முகம்“ என்று சொல்லும் பகவத்கீதையின் வர்ணனையாகட்டும்,

'ஓங்கி உலகளந்த உத்தம' னாய் நின்ற வாமனனாகட்டும், மண்ணைத் தின்ற வாயில் அண்ட சராசரங்களை காட்டிய வண்ணமாகட்டும் எல்லாமே இறைவனின் எல்லையற்ற தன்மையை நமக்கு கோடிட்டு காட்டுகின்றன.

ஆனால் இப்படியெல்லாம் சொல்லும் போது சாதாரணமான மனிதனின் புத்திக்கு எட்டுமோ இல்லையோ என்பதனால் அவர்களுக்கும் எளிதாக புரியும்படி கடுகையும் மலையையும் உவமித்து கபீர்தாஸர் சொன்னார்.

பெரிய மலை கடுகுக்குள் அடங்கியது எவ்வாறு? ஊசியின் காதில் ஒட்டகம் எவ்வாறு போயிற்றோ அப்படிதான். சிகந்தர் லோடிக்கு கபீர் கூறிய விளக்கம் : இந்த உலகத்தின் காணப்படும் காட்சிகள் யாவுமே ஊசியின் காதை விடச் சிறியதான கண்ணின் கருமணியின் வழியாகத்தானேப் பார்க்கப்படுகிறது. காணப்படும் பொருட்கள் அனைத்தையும் ஒளிவடிவில் மாற்றி அதை ஊசியளவு துளையில் செலுத்தும் மகிமை அவனன்றி யாரால் முடியும்? இது மலை கடுகான விதம்.

கடுகு மலையாவது எப்படி? அதற்கு அதிவீரராம பாண்டியர் பதிலளிக்கிறார். கடுகைப் போலவே சிறியதான மீனின் சினையை உவமையாக்கி சொல்லும் பாடலை பாருங்கள்.

தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும்
நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை
அணி தேர் புரவி ஆட்பெரும் படையோடு
மன்னர்க்கு இருக்க நிழலாகுமே. (வெற்றி வேற்கை)

மீனின் முட்டையைக் காட்டிலும் அளவில் நுண்ணியதான விதை, சில காலத்திலேயே ஒரு மன்னன் தன் படையுடன் வந்து அதனடியில் தங்கி இளைப்பாறும் அளவிற்கு நிழல் தரும் மரமாக வளர்ந்து நிற்கிறதாம். அப்படையில் தேர்கள் யானைகள், குதிரைகளும் கூட உண்டாம் !

அப்படி ஒரு சிறிய விதையில் பெரிய மரத்தை அடைத்து வைத்த வல்லமை யாருடையது ?. இன்னும் சிறிது காலம் போனால் அம்மரத்தினின்று விழும் விதைகள் ஒரு பெரும் காட்டையே கூட உருவாக்க வல்லது. இப்படித்தான் கடுகளவில் உள்ள சக்தி பரந்து விரிந்து இறைவனின் பெருமையை விளங்கச் செய்கிறது.

இந்த விளக்கங்களெல்லாம் அறிவு பூர்வமாக அணுக முயலும் போது எழுவன.

உணர்வு பூர்வமாக பார்க்கப்போனாலும் எப்படியெல்லாம் சிந்தனை போகிறது. இணையத்தில் படித்தக் கட்டுரையிலிருந்து ஒரு சிறு பகுதி:
...............................
ஆழ்வார்களைப் பரமாணு வாக்கியவர் பெரியாழ்வார். ஆழ்வார்கள் திருமாலைப் போற்றிப் பாடித் தமக்குப் பாதுகாப்பை யாசித்தார்கள். பெரியாழ்வாரோ தெய்வத்தின் மீதிருந்த அபரிமிதமான அன்பினால் அவனுக்கே பாதுகாப்பு கவசம் போடும் முகமாகப் 'பல்லாண்டு ' பாடி வைத்தார். இப்போது பிற ஆழ்வார்கள் கடுகு பெரியாழ்வார் மலை.

பெரியாழ்வாரைக் கடுகாக்கி மன்னிக்கவும் பரமாணுவாக்கித் தான் மலையானாள் ஆண்டாள். பெரியாழ்வாரின் தெய்வத்தையே காதலித்து வலிந்து தொடர்ந்து மணம் புரிந்து வென்று காட்டியதில்.
.................................

இப்படி பக்தர்கள் தம்மை, அத்யந்த பக்தியில் ”தான்” என்ற எண்ணத்தைச் சுருக்கிக் கொண்டு, கடுகு போல் ஆகுமளவும் அவன் அருளால் அவர்களின் பக்தியின் பெருமை மலையளவுக்கு உயர்ந்து விடுகிறது.

அப்படிப்பட்ட பக்தியால் தான், பக்தர்களுக்கு வரும் மலை போன்ற துன்பம் கூட கடுகாகிப் போகிறது. திரௌபதியின் அக்ஷயப் பாத்திரத்திலிருந்த ஒரே பருக்கை அன்னத்தை வாங்கிப் புசித்து கண்ணன், துர்வாசருக்கும் அவரது பெரும் சிஷ்ய கோடிகளுக்கும் விருந்துண்ட திருப்தியை ஏற்படுத்தி பாண்டவர்களுக்கு வரவிருந்த சாபத்திலிருந்து காப்பாற்றியது, மலை போன்ற துன்பத்தை கடுகாக்கியதற்கு ஒரு உதாரணம்.

அந்த பரந்தாமனின் மாயை பல சமயங்களில் நம் அறிவை மங்கச் செய்து கடுகு போன்ற ஒன்றுமில்லாத விஷயத்தை மலை போல பெரிதாக்கி மன அமைதியை இழக்க வைக்கிறது.

உதாரணமாக லியோ டால்ஸ்டாயின் கதையொன்றில் சிறு குழந்தைகளின் விளையாட்டுச் சண்டை எப்படி பெரியவர்கள் அளவில் கலகமாக வளர்கிறது என்பதை படிக்கும் போது உணர்கிறோம். கலகத்தின் உச்சத்தில் ஒரு பெரியவர் வந்து சண்டைக்குக் காரணமான அக்குழந்தைகள் அதைப் பற்றிய நினைவே இன்றி தங்களை மறந்து மீண்டும் விளையாடிக் கொண்டிருப்பதைப் சுட்டிக் காட்டும் போது பெரியவர்கள் யாவரும் வெட்கிச் செல்கின்றனர்.

இன்னொரு சிறியக் கதை.
ஒரு முனிவர், காட்டில் போய்க் கொண்டிருந்த வேடனையும் வேடிச்சியையும் பார்த்து ’அப்பா பசிக்கு ஏதாவது கொடு’ என்று வேண்டினார். வேடிச்சி உடனே கீரை பறித்து வந்து சமைக்க ஆரம்பித்தாள். சமையல் தயாராவதற்கு முன்பே முனிவர் மோனத்தில் ஆழ்ந்து விட்டார். நேரம் கழிந்தது. முனிவரின் தவம் கலைவதாயில்லை. வேடனும் வேடிச்சியும் தம் வழியே சென்றனர். நாட்கள் மாதங்கள், வருடங்கள் என்று உருண்டோடின. காலப்போக்கில் அவரை மண் மூடியது. பின்னொரு நாளில் ஒரு அரசனும் அரசியும் போய்க் கொண்டிருந்தத் தேரின் குதிரைகள் அந்த மண் மேட்டைத் தாண்டிச் செல்ல மறுத்தன. கூடவே சென்ற ஆட்கள் மேட்டைக் கரைத்தனர். அடியிலிருந்த முனிவர் தவம் கலைந்து கண் திறந்தார். வணங்கி நின்ற அரசனையும் அரசியையும் பார்த்து “கீரை எங்கே?” என்று வினவினார். இருவரும் ஏதும் புரியாமல் விழித்தனர்.

அவருடைய கணக்கிற்கு நிகழ்ச்சியின் தொடர்பு அப்படியே இருந்தது. அதே வேடனும் வேடிச்சியும் வேறொரு பிறவியில் முன்பு தடைபட்டுப்போன விருந்தோம்பலை பூர்த்தி செய்ய விதியால் வரவழைக்கப் பட்டிருந்தனர். மனிதரின் கணக்கில் பல ஆண்டுகள் என்பது அவருடைய மோனத்தில் சில கணங்களாக சிறுத்து விட்டிருந்தது.

ஆனால் மனிதர்களாகிய நாம் சில நிமிடங்களிலேயே பல வருட வாழ்க்கையை நம்முடைய கனவு அனுபவங்களில் வாழ்ந்து விடுகிறோம்!! இங்கே சில கணங்கள் என்பது பல வருடங்களாக நீடிக்கப்படுகிற விந்தையை காண்கிறோம்.

இப்படி அறிவு பூர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும் எல்லாவற்றிலும் கடுகை மலையாக்கி, மலையை கடுகாக்கி அவன் விளையாடிக் கொண்டிருப்பதைக் காணும் போது கபீரின் கூற்றை யாரால் மறுக்க முடியும்? நம்கால கவிஞரையும் இந்த மலையும்- கடுகும் விட்டு வைக்கவில்லை.

மனிதன் என்பவன் தெய்வமாகலாம்
..................
மனமிருந்தால் பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம்
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையை காணலாம்
துணிந்து விட்டால் எந்த சுமையும் தலையில் தாங்கலாம்
குணம்.... குணம்.. அது கோவிலாகலாம்

கடுகு-மலையை வைத்து எனக்கு தோன்றியவற்றை சொல்லிவிட்டேன். உங்களுக்கு தோன்றுபவற்றையும் சொல்லுங்கள்.

13 comments:

கவிநயா said...

கடுகு மலையாவதும், மலை கடுகாவதும், நமது பார்வையிலும், எண்ணத்திலும், பக்தியிலும், நம்பிக்கையிலும்தான் இருக்கிறது என்பதைப் பலவிதமாய்ச் சொல்லிப் பரவசப்படுத்தி விட்டீர்கள்! அருமை. மிக்க நன்றி!

ஜீவா (Jeeva Venkataraman) said...

இப்போதெல்லாம் தோன்றியதையும் சொல்லச் சொல்கிறீர்கள்!
கடுகு-மலை: ஏகன்-அநேகன் என்பது நினைவுக்கு வருகிறது. எனக்குள் இருப்பான் அறிவாரோ எனச்சொல்லும் போது, ஏகன். எங்கெங்கும் நிறைந்திருப்பவன் எனச்சொல்லும் போது, அநேகன்.
கடுகு என்று சொன்னாலே, ஏதோ சிறியது எனத்தானே தோன்றும் என்பதுமீறி, அது பரமாணு போல, அதுவே மலையாக மாறுவது, விஸ்வரூப தரிசனம் போலே எனப்புரிய வைத்துள்ளீர்கள், மிக்க நன்றி!

கபீரன்பன் said...

கவிநயா நல்வரவு,
//நமது பார்வையிலும், எண்ணத்திலும், பக்தியிலும், நம்பிக்கையிலும்தான் இருக்கிறது //

நானோ எனக்குத் தோன்றியதையெல்லாம் எழுதிவிட்டேன். நீங்கள் அதற்கு அழகான முடிவுரை கொடுத்துள்ளீர்கள். நன்றி

கபீரன்பன் said...

ஜீவா நன்றி,

//இப்போதெல்லாம் தோன்றியதையும் சொல்லச் சொல்கிறீர்கள்! //
???
நான் சொல்லித்தான் நீங்கள் சொல்ல வேண்டுமா என்ன? உங்கள் கருத்துகள் எப்போதும் வரவேற்கப் படுகின்றன.

வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

Vetrimagal said...

இது comment இல்லை.

பரவசப்படுத்தி விட்டீர்கள்.

நன்றி. வணக்கம்.

கபீரன்பன் said...

வெற்றிமகள் வருக.

//இது comment இல்லை //

comment என்பது பொருந்தாத வார்த்தையா என்ன, கர்ம வினை என்றாலே கெட்டது என்று நினைப்பது போல. கிருத்திகாவும் ஜீவாவும் நல்ல விளக்கம் கொடுத்துள்ளார்கள் இங்கே

நன்றி. மீண்டும் வருக

கீதா சாம்பசிவம் said...

// காணப்படும் பொருட்கள் அனைத்தையும் ஒளிவடிவில் மாற்றி அதை ஊசியளவு துளையில் செலுத்தும் மகிமை அவனன்றி யாரால் முடியும்? இது மலை கடுகான விதம்.//

அற்புதமான எழுத்து ஓட்டம், என்னத்தைச் சொல்றது? இப்படி எழுதவும் முடியறதும் அவனருளாலேயன்றி வேறே என்ன? அருமையான கருத்துக்கள். புரிஞ்சுக்கறது மட்டும் போதாது, புரியவும் வைக்கணும், வைக்கிறீங்க. வாழ்த்துகள். நன்றி.

கபீரன்பன் said...

நன்றி கீதா மேடம்,

// இப்படி எழுதவும் முடியறதும் அவனருளாலேயன்றி வேறே என்ன? //

ஆமாம். அவனருளே தங்களைப் போன்றோர் ஆசீர்வாதத்தில் தெரிகிறது. தலை வணங்குகிறேன்.நன்றி

கிருத்திகா said...

ஆம் கடுகை பார்க்கும் போதெல்லாம் எனக்கு மற்றொன்று கூடத்தோன்றும். பூஜ்யத்தின் மிகச்சிறிய வடிவம். (ஒன்றுமில்லாததின்).அந்த சிறு அணுவுக்குள் உற்று நோக்கின் மலை -இறை எனும் பிரம்மம் தோன்றும்.

sury said...

கபீரான் பதிவில் கடுகும் மலையும்

// கடுகு-மலையை வைத்து எனக்கு தோன்றியவற்றை சொல்லிவிட்டேன். உங்களுக்கு தோன்றுபவற்றையும் சொல்லுங்கள்.//


இதோ ! சொல்லுகிறேன்.


ஒன்றே அவன் என
நின்றார் நெஞ்சிலே
கடுகும் மலையும் ஒன்றே.
காண்பதும் காணாததும் அவனே.


நில்லாதார் நெஞ்சிலோ ?

கடுகு வெடித்தால் அச்சம்
கார் முகில் இடித்தால் அச்சம்.
பொடுகு பார்த்தால் அச்சம் = தம் தலையில்
பொய் நரை பார்த்தாலும் அச்சம்.


மலையின் மேல் சென்றாலும் அச்சம்
மலையிலிருந்து கீழ் பார்த்தாலும் அச்சம்.
உலையில் பால் பொங்கிவிடும் அச்சம் !
இலையில் இனிப்பதிகமென்றால் அச்சம்.!

சுற்றம் சூழ் இருக்கையிலும் அச்சம். ( fear of mounting expenses )
சுற்றம் விலகிச்செல்லிடினும் அச்சம். ( fear of loneliness )
கற்றது காசாகானால் அச்சம். ( fear of unemployment )
கற்றது காசானாலும் அச்சம். ( fear of wealth tax, income tax ! )

அச்சம் தவிர் என ஆயிரம் படித்திடினும்
எச்சமிருப்பது அச்சமே. நிச்சயம்
மிச்சமிருப்பது நான், நீ எதுவுமில்லை என்றால்
அச்சத்தின் அச்செங்கே சொல் !

இருண்டவன் மனதிற்குள்ளே
கயிரெல்லாம் பாம்பாகும்.
மிரண்டவன் கண்களுக்குள்ளே
கடுகும் மலையாகும்.


அண்ணாமலையானை
அண்டித் தானெனும் நிலையை,பே
ர‌லையைத் தாண்டியவர்க்கோ
மலையும் கடுகாகும். கொள்.


சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
http://menakasury.blogspot.com
http://ceebrospark.blogspot.com

sury said...

கபீரான் அவர்கட்கு வணக்கம்.

நான் சற்று நேரத்திற்கு முன் அனுப்பிய பின்னோட்டத்தில்
கடைசி வரியில் சொற்கள் சற்று மாறிவிட்டனவோ என ஐயம். ( நகலும்
வைத்துக்கொள்ளவில்லை )

சரியான கடைசி வரி இதுவே:

"மலையும் கடுகாகுமாம். கொள்." ( மாற்றி எழுதியிருப்பின் திருத்திக்கொள்ளவும் )

அண்ணாமலையானைப் போற்றித் தான் எனும் நிலையைக்
கடந்தோர்க்கு மலையும் கடுகாகவே தெரியும் எனும்
பொருளில் எழுதியுள்ளேன்.

சுப்பு ரத்தினம்.
தஞ்சை.

கபீரன்பன் said...

நல்வரவு கிருத்திகா,

//அந்த சிறு அணுவுக்குள் உற்று நோக்கின் மலை -இறை எனும் பிரம்மம் தோன்றும் //

உங்களுக்கு இப்படி. எனக்கோ கடுகளவே ஆன சிற்றெரும்புகள் சுறுசுறுப்பாக ஓடிக் கொண்டிருப்பதை பார்க்கும்போதெல்லாம் பரந்து விரிந்த சக்தியின் போக்கை எண்ணியெண்ணி ஆச்சரியப்படாமல் இருக்க முடிவதில்லை. யானைக்குள்ளும் எறும்புக்குள்ளும் உறைவது ஒரே சக்தியாமே !!
வருகைக்கு நன்றி

கபீரன்பன் said...

சுப்புரத்தினம் ஐயா,

//அச்சம் தவிர் என ஆயிரம் படித்திடினும்
எச்சமிருப்பது அச்சமே. நிச்சயம்
மிச்சமிருப்பது நான், நீ எதுவுமில்லை என்றால்
அச்சத்தின் அச்செங்கே சொல்


உலகத்தின் எல்லா பிரச்சனைகளுக்கும் மூல காரணம் sense of insecurity என்பதை படித்திருகிறேன். அதை அழகான கவிதையில் வடித்துவிட்டீர்கள்.
நன்றி