Thursday, July 17, 2008

எழுதித் தீருமோ எம் குரு பெருமையும்

கல்லூரியில் மகனையோ மகளையோ சேர்க்கும் முன் பல மத்திய தர குடும்பங்களில் பல மாதங்களுக்கு பெரிய வாத பிரதி வாதங்கள் நடந்து கொண்டிருக்கும். பல்விதமான துறைகள், ஒவ்வொரு துறையிலும் பல உட்பிரிவுகள். பல தரப்பட்ட கல்லூரிகள். இப்பெரிய உலகில் அக்குழந்தைகள் அடியெடுத்து வைப்பதற்கு தைரியம் கொடுக்கும் வகையில் பேசுவோரே இல்லை. பலரும் பலவிதமான கருத்துகளைக் கூறி மனதைக் குழப்பியும் பயமுறுத்தியும் விடுவர்.

கடைசியில் ஒரு பெரியவர் ஒரு முத்தாய்ப்பு வைக்கிறார். “இதோ பாரு! நீ எந்த ஃபீல்டல போனாலும் பெரிய ஆளா வரலாம். உனக்கு வேண்டியது கஷ்டப்பட்டு படிக்கிற குணமும், கடவுள் மேல நம்பிக்கையுந்தான். அம்மா அப்பாவுக்கு பணக்கஷ்டம் மனக் கஷ்டம் இல்லாத மாதிரி எந்த சப்ஜெக்ட்டை எந்த காலேஜ்-ல வேணுமானாலும் எடுத்து படி. அவன் வழி காட்டுவான்

ஆன்மீகத்திற்கு வேண்டியதும் இந்த மனப்பக்குவமே, "அவன் வழி காட்டுவான்"

எல்லாத் துறைகளைப் போலவே ஆன்மீகத்திலும் ஏராளமான கருத்து வேறுபாடுகள் உண்டு. அவரவரும் கடந்து வந்த பாதையை வைத்து தத்தம் அனுபவங்களைக் கொண்டு கடவுளைப் பற்றி விவரிக்கின்றனர். எல்லோர் சொல்வதும் ஏதோ ஒரு விதத்தில் சரியே. ஆனால் அது எல்லாமே குருடர்கள் யானையைத் தொட்டுப் பார்த்து வர்ணித்தது போலவே ஆகும். இந்த நடைமுறை நிலையை கபீரும் ஏற்றுக் கொள்கிறார்.

गुरु गुरु में भेद है, गुरु गुरु में भाव ।
सोइ गुरु नित बन्दिये, शब्द बतावे दाव ॥


குரு குரு மே பேத ஹை, குரு குரு மே பாவ் |
ஸோயி,குரு நித் பந்தியே, ஷப்த் பதாவே தாவ் ||


குரு குருவிலும் பேதம் உண்டு, குரு குருவிலும் பாவனை வேறு
குரு அவனடி தினம் பணிந்திடு, நாதத்தில் கூட்டிடும் நாதன் பேறு

(நாதன் பேறு = இறைவன் என்ற செல்வம் )


[ இரண்டாவது அடியை உரைநடையில் “நாதத்தில் நாதன் பேறு கூட்டிடும் குரு, அவனடி தினம் பணிந்திடு” எனக் கொள்க.]

'ஷப்த் பதாவே தாவ்' என்று கபீர் சொல்வது ஔவையின் “சத்தத்தின் உள்ளே சதாசிவம் காட்டி, சித்தத்தின் உள்ளே சிவலிங்கம் காட்டி'' என்ற வரிகளை நினைவூட்டுகிறது.

சப்தம் அல்லது நாதம் சிருஷ்டியில் முதலில் தோன்றியதாக சொல்லப்படுகிறது. ஆன்மீகத்தின் கடைசி கட்டத்தில் சாதகன் உணரும் நிலையும் அதுவே எனப்படுகிறது. சிவமே எல்லாவற்றிலும் நாதமாய் விளங்குகிறது என்கிறது திருமந்திரம்.

சத்தமும் சத்தமனமும் மனக்கருத்து
ஒத்தறிகின்ற இடமும் அறிகிலர்
மெய்த்தறிகின்ற இடம் அறிவார்க்கு
அத்தன் இருப்பிடம் அவ்விடந் தானே (1973)

நாதமும் அதனை உணர்கின்ற மனமும் மனக்கருத்து ஒருமித்துச் சிவம் உள்ள இடத்தையும், யாரும், அறியார். அதை உள்ளபடி உணர்ந்தாரானால் சிவ பெருமான் இருக்குமிடம் அதுவே என்பதை அறிவர்.

அதை உணர்ந்தே பட்டினத்தாரின் சீடராகிய பத்திரகிரியாரும்

வேதாந்த வேதமெல்லாம் விட்டு ஏறியே கடந்து
நாதாந்த மூலம் நடு இருப்பது எக்காலம் ? -

என்று ஏங்குகிறார்.

தமக்கென்று வாய்த்த குருவின் உரையில் நம்பிக்கை வைத்து அவர் சொல்லியபடி பயிற்சிகளை செய்து கொண்டு போனால் தானே வழி பிறக்கும். குரு உபதேசித்த மந்திரம் கையில் கொடுக்கப்பட்ட விளக்கு போல. அதன் துணையுடன் பாதையை பிடித்துக் கொண்டு போனால் முன்னேறிச் செல்ல முடியும். அதைவிட்டு சுற்றிலும் இருக்கும் இருளைக் கண்டு பயந்து இருந்த இடத்திலே அழுது கொண்டிருப்பவனுக்கு முன்னேற்றம் ஏது? கபீர் அதனால் தான் நாமசெபத்தின் பயனை மேலும் வலியுறுத்துகிறார்.

नाम भजोमन बसि करो, यही बात है तंत ।
काहे को पढि पचि मरो, कोटिन ज्ञान गिरंथ ॥


நாம் பஜோமன் பஸி கரோ, யஹி பாத் ஹை தந்த் |
காஹே கோ படீ பசீ மரோ, கோடின் ஞான் கிரந்த் ||


செபித்து செயங்கொள் மனமே, மெய்ஞான ரகசியமிதுவே
படித்தனை கிரந்தம் தினமே, அவைநூறு படிப்பதும் வீணே

மாற்று

மனமே செபித்து வசிகொள், இதுவே நாதன் அருளின் இரகசியம்
தினமே செப்பிடும் சாத்திரம் நூறு, இன்னும் அதுவோ அவசியம்

ஆராய்ச்சியால் அறியப்படுபவன் அல்ல கடவுள். ஆராய்ச்சி செய்து நூற்றுக் கணக்கான புத்தகங்கள் எழுதலாம், படிக்கப்படலாம். ஆனால் அவையெல்லாம், வள்ளலாரின் மொழியில் “சாத்திரக் குப்பை” தாம்.

சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச்
சூத்திரத்தைக் கண்டு துயர் அறுப்பது எக்காலம் ?

என்று பத்திரகிரியார் குறிப்பிடும் (மெய்ஞான புலம்பல்: 155 ) சூத்திரமே குருவழி வரும் மந்திர உபதேசம். அதை முறையாக செபித்தால் அது இறைவனிடம் இட்டுச் செல்லும். அதை உறுதி செய்வது போல் இருக்கிறது திருமந்திரத்தின் இன்னொரு பாடல்.

நாத முடிவிலே நல்லாள் இருப்பது
நாத முடிவிலே நல்யோகம் இருப்பது
நாத முடிவிலே நாட்டம் இருப்பது;
நாத முடிவிலே நஞ்சுஉண்ட கண்டனே

இருட்டு நேரத்தில் தன் படகை அடைய வேண்டிய படகுகாரன் படகைக் கட்டி வைத்திருக்கும் சங்கிலியை பிடித்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீரில் முன்னேறிச் சென்று படகை அடைவது போல, ஒவ்வொரு முறை நாமத்தை உச்சரிக்கும் போதும் சங்கிலியின் ஒரு இணைப்பின் அளவு இறைவனை நெருங்குகிறோம் என்பாரம் அன்னை சாரதா தேவி.

இன்று வியாச பூர்ணிமை. குரு மேன்மையை நினைவு கூற சிறப்பான தினம். கபீர் தமது குரு மீது வைத்துள்ள அன்பையும் பெருமையும் ஒருங்கே அவரது கீழ்கண்ட ஈரடியில் காணலாம்.

सब धरती कागद करूं , लिखनी सब बनराय ।
सात समुद्र का मसि करूं, गुरु गुण लिखा न जाय ॥

ஸப் தர்தீ காகத் கரூன், லிகனீ ஸப் பன்ராய் |
ஸாத் ஸமுத்ர் கா மஸி கரூன், குரு குண் லிகா ந ஜாய் ||


அடவி மரங்கள் கோலாகும், இத்தரை யெலாமாகும் பத்திரம்
கடலேழும் மசியாகும், எழுதித் தீருமோ எம்குரு பெருமையும்

(அடவி= காடு ; கோல்= எழுது கோல்; இத்தரை = நிலம்; பத்திரம்= காகிதம்.; மசி =எழுதும் மை)

ஞானியர் அருளில் ஞாலம் ஒளிரும்.

12 comments:

  1. ஆஹா, அருமையான பதிவு. ஒவ்வொன்றும் நினைவில் பதித்துக் கொள்ள வேண்டிய முத்துக்கள்.

    //செபித்து செயங்கொள் மனமே, மெய்ஞான ரகசியமிதுவே
    படித்தனை கிரந்தம் தினமே, அவைநூறு படிப்பதும் வீணே//

    //குரு உபதேசித்த மந்திரம் கையில் கொடுக்கப்பட்ட விளக்கு போல. அதன் துணையுடன் பாதையை பிடித்துக் கொண்டு போனால் முன்னேறிச் செல்ல முடியும். அதைவிட்டு சுற்றிலும் இருக்கும் இருளைக் கண்டு பயந்து இருந்த இடத்திலே அழுது கொண்டிருப்பவனுக்கு முன்னேற்றம் ஏது? //

    ரொம்ப அழகா சொன்னீங்க.

    //சாத்திரத்தைச் சுட்டுச் சதுர்மறையைப் பொய்யாக்கிச்
    சூத்திரத்தைக் கண்டு துயர் அறுப்பது எக்காலம் ?//

    மெய்ஞானப் புலம்பல் படிச்சதில்லை. நல்லாருக்கு.

    //அடவி மரங்கள் கோலாகும், இத்தரை யெலாமாகும் பத்திரம்
    கடலேழும் மசியாகும், எழுதித் தீருமோ எம்குரு பெருமையும்//

    ஆஹா, அருமையான முத்தாய்ப்பு.

    நன்றிகள் பல!

    ReplyDelete
  2. நன்றி கவிநயா,

    // ஒவ்வொன்றும் நினைவில் பதித்துக் கொள்ள வேண்டிய முத்துக்கள் //

    மிகுந்த ஈடுபாட்டுடன் படிக்கிறீர்கள் என்பது தெரிகிறது.

    இப்பதிவுகளில் உங்களுக்கு வெளியே கிடைக்காத விஷயம் “மொழி பெயர்ப்பு” முயற்சி மட்டுமே. மற்றவை யெல்லாம் பெரியவர்கள் சொல்லி வைத்து சென்றவை தாம். நான் வெறும் மாலை தொடுக்கும் பூக்காரன் போல. :)

    'மாலை நன்றாக இருக்கிறது' என்னும் போது எடுத்த முயற்சி மன நிறைவைத் தருகிறது. தங்கள் பாராட்டுரைகளுக்கு நன்றி

    ReplyDelete
  3. புவியெங்கும் பலவிதமாய்ப் பூக்கள் கொட்டிக் கிடக்கையில், அழகான மாலை தொடுப்பது அவ்வளவு எளிதான காரியமில்லை. நீங்கள் அதனை எழிலாக செய்து வருகிறீர்கள். மிக்க நன்றி.

    ReplyDelete
  4. குரு பூர்ணிமைக்கென்றே தேர்ந்தெடுத்த
    அத்புத விஷயங்கள். பூர்ண போதத்தை
    அனைவரும் பெறுவோம் !!
    தேவ்

    ReplyDelete
  5. நன்றி கவிநயா,

    //நீங்கள் அதனை எழிலாக செய்து வருகிறீர்கள் ..//

    ஒவ்வொருவருக்கும் ஒரு திறமையை தந்திருக்கிறான் அவன், உங்களுக்கு இருக்கும் அழகாக கவிதைப் படைக்கும் திறமையை போல. பலருக்கும அதனால் மகிழ்ச்சி உண்டெனில் எழுதுவது பயனுள்ளதாகிறது. நன்றி.

    ReplyDelete
  6. நல்வரவு தேவராஜன் ஐயா,

    பூர்ண போதத்தை அனைவரும் பெறுவோம்

    பொருத்தமான ஆசிகளுக்கு நன்றி.

    ReplyDelete
  7. அருமையான் எளிமையான லௌகீகத்தோடு ஒட்டிய விளக்கங்கள்... குருவைப்பற்றி கூறும்போது, ஊத்துக்காடு வேங்கடசுப்பையரின் வரிகளும் எப்போதும் இணைந்தே வருவது வழக்கம்..
    "அழுந்தொறும் அணைக்கும் அன்னை, அறிவிலாது ஓடி விழும்தொறும் எடுக்கும் அப்பன், விளையாடும் போது தோழன், தொழுந்தொறும் காக்கும் தெய்வம், சொந்தமாய் எடுப்போர்க்கெல்லாம் குழந்தை, இப்படி உலவும் என்குருநாதர் வாழி...... என்ன புன்னியம் செய்தேனோ... சத்குருநாதா எத்தனை தவம் செய்தனோ நின்னருள் பெறவே..."

    ReplyDelete
  8. குரு பெளர்ணமி தினத்தன்று இப்பதிவு வெளிவருவது எத்துணை பொருத்தம்! இதுவும் குருவின் அருளே. சித்தமே.

    காலை முதல் மாலை வரை நாம் சந்திக்கும் பல்வேறு நபர்களில்
    பலர் ஆன்மீகத்தில் அக்கறை கொண்டவர்களாக இருப்பினும்
    அவர் அக்கறையும் ஆவலும் கொண்டு அக்கரை அடைவதில்லை.

    நதியில் இற‌ங்கி கழுத்துவரை ஆழம் சென்று தலைமுழுகிக் குளிப்பவன் ஒருவன்.
    நதியின் படிக்கரையில் அமர்ந்து கொண்டு வந்த சொம்பினால் நதியிலிருந்து நீரை எடுத்துத் தன் தலைமேல் ஊற்றிகொள்பவன் அடுத்தவன்.

    நதியில் கையை நனைத்து பத்து பதினைந்து தண்ணீர்த் துளிகளை எடுத்து
    தன்மேல் தெளித்துக் கொண்டு ( ப்ரோக்ஷணம் செய்துகொண்டு குளித்துவிட்டதாக வ்யாக்யானம்
    செய்பவனும்) திருப்தி அடைபவனும் இன்னொருவன்.
    தண்ணீரே தனக்கு ஒத்துக் கொள்ளாது எனத் திரும்பிச்செல்பவனும் ஒருவன்.


    நதியின் ஆழமும் ஆற்றலும் யாருக்குத் தெரியவரும் ?

    நீ காணும் ஆறு
    நீ காணவேண்டிய ஆசானாயின்
    நின் தேகம் புல்லரிக்கும்
    நீயும் குதித்திடுவாய். ஐயமில்லை. இதுவும் கபீரின் கருத்தே.

    சுப்பு ரத்தினம்.
    தஞ்சை.
    http://arthamullavalaipathivugal.blogspot.com

    ReplyDelete
  9. // எழுதித் தீருமோ எம் குரு பெருமையும் //
    முத்தாய்ப்பாய் அமைந்த வரிகள், அருமை, அருமை!

    ReplyDelete
  10. நன்றி கிருத்திகா,

    //சொந்தமாய் எடுப்போர்க்கெல்லாம் குழந்தை, இப்படி உலவும் என்குருநாதர் வாழி...... //

    எவ்வளவு அழகான உண்மை! மேலோர் என்றும் சமனோக்கினரே! குழந்தைகள் போலவே அவர்களும் நல்லது கெட்டது வித்தியாசம் பாராட்ட மாட்டார்களாம்.

    இதையும் இசை இன்பத்தில் எதிர்பார்க்கலாமா? :)

    ReplyDelete
  11. வருக சுப்புரத்தினம் சார்,

    //பலர் ஆன்மீகத்தில் அக்கறை கொண்டவர்களாக இருப்பினும்
    அவர் அக்கறையும் ஆவலும் கொண்டு அக்கரை அடைவதில்லை.
    //

    ஏனெனில் நீங்கள் குறிப்பிட்டபடி

    //நதியின் படிக்கரையில் அமர்ந்து கொண்டு வந்த சொம்பினால் நதியிலிருந்து நீரை எடுத்துத் தன் தலைமேல் ஊற்றிகொள்பவன் அடுத்தவன் //

    குளிச்சாச்சு, சுத்தமாயாச்சு அப்புறம் என்ன? நிர்மலமாவதற்கு அக்கரையை அடைய வேண்டும். சொம்பை தூக்கியெறிந்து நதியில் குதிக்க தைரியம் வரமாட்டேங்குதே :(

    ReplyDelete
  12. வருக ஜீவா!

    பாராட்டுக்கு நன்றி. :)

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி