Showing posts with label அதிவீரராம பாண்டியர். Show all posts
Showing posts with label அதிவீரராம பாண்டியர். Show all posts

Thursday, November 19, 2009

உடமையும் வறுமையும் ஒரு வழி நில்லா

சக்கிலியன் ஸைமன் குடிசையின் முன்னே பெரிய கோச் வண்டி வந்து நின்றது

மூன்று குதிரைகளால் இழுக்கப்பட்ட ஸ்லெட்ஜ்-கோச்சில் அந்த வட்டாரத்தின் மிகப் பெரும் சீமான் ஸைமனின் குடிசைக்கு முன்னே வந்து நின்ற போது ஸைமனுக்கு கையும் ஓடவில்லை காலும் ஓடவில்லை. குடிசையின் தாழ்வான கதவில் தலையை குனிந்து உள்ளே வந்த அவனைப் போன்ற ஒரு ஆகிருதி, தேககாந்தியை ஸைமைன் கண்டதில்லை. பின்னாலேயே அவன் வேலைக்காரனும் உடன் வந்து நின்றான்.

அவன் பேச்சும் போக்கும் ஆணையிடுவது போன்று இருந்தது. ஜெர்மனியிலிருந்து தருவிக்கப் பட்ட மிக விலையுயர்ந்த பதப்படுத்திய தோலைக் காட்டி ’இது போல் தோலைக் கண்டிருக்கிறாயா’ என்று கேட்டான். ஸைமன் இல்லையென்று தலையசைத்தான். ’இதன் விலை தெரியுமா உனக்கு?’ என்று மிரட்டுவது போலக் கேட்டான். ’இருபது ரூபிளாக்கும்’ என்றதும் ஸைமன் வாயடைத்து நின்றிருந்தான்.

நடக்கும் போது சுருக்கங்கள் விழாது, ஒரு வருடத்துக்கு உழைக்கக்கூடிய,
குதிகால் உயரம் உள்ள முழுக்காலணிகளை தயாரித்துக் கொடுக்க முடியுமா என்று சீமான் கேட்டான். ஸைமன் மைக்கேலைப் பார்த்தான். மைக்கேல் கனவானைப் பார்க்கவில்லை. அவன் பின்னாலிருந்த சுவர் மூலையை உற்று நோக்கி கொண்டிருந்தான். திடீரென்று அவன் முகத்தில் புன்முறுவல் பூத்தது. முகத்தில் ஒரு புதிய ஒளி தோன்றியது.

”என்ன தயார் செய்ய முடியுமா?” என்று சீமானின் குரல் அதிகாரத் தொனியில் வினவியது. ”கண்டிப்பாக செய்து தருகிறேன்” என்று மைக்கேலின் சம்மதம் இல்லாமலே சொன்னான் ஸைமன். “நினைவிருக்கட்டும், அதில் சுருக்கங்கள் வரக்கூடாது. சரியாகத் தைக்காமல் பின்னால் ஏதேனும் பிரச்சனை வந்தால் உங்களை போலீஸிடம் ஒப்படைத்து விடுவேன்” என்று சொல்லியவாறே தன் ஒரு காலை நீட்டினான். உடனே அவனது வேலைக்காரன் அவனது காலணியை விலக்கினான். சீமான் குளிருக்காக அணிந்த கால் உள்ளுறையும் மிக விலையுயர்ந்தது என்பது தெரிந்தது. ஸைமன் அவன் பாதங்களை ஒரு தாளில் வரைபடமாக பதிவெடுத்துக் கொண்டான்.

சீமானின் மிடுக்கான பேச்சும் தோற்றமும் ஸைமனுக்கும் அவன் மனைவிக்கும் மிரட்சியை உண்டு பண்ணியது. அவன் திரும்பி வெளியே செல்ல எத்தனித்த போது நிமிர்ந்த தலை குனிய மறந்ததால் வாயில் நிலையில் மோதிக் கொண்டது. தலையைத் தேய்த்தவாறு மீண்டும் போலீஸ் எச்சரிக்கை விடுத்துக் கொண்டே கோச் வண்டியில் ஏறி சென்றான் அந்த சீமான்.

மைக்கேல் ஸைமனிடம் வந்து சேர்ந்து சில வருடங்கள் ஓடி விட்டிருந்தன. அவன் வந்து சேர்ந்த விதமே விசித்திரம். மைக்கேல் அவசியமின்றி பேசுவதே இல்லை. எவ்வளவு தேவையோ அவ்வளவே பேசினான். அவன் முகத்தில் வருத்தமோ சந்தோஷமோ கண்டதில்லை. மூன்றே தினங்களில் பல வருட அனுபவமுள்ள ஒரு சக்கிலியன் ஒப்ப வேலையைக் கற்றுத் தேர்ந்தான். அவனுடைய திறமையில் முழு நம்பிக்கை உடையவனாய் இருந்தான் ஸைமன். சீமான் விட்டுச் சென்ற தோல் துண்டை எடுத்து மைக்கேல் வெட்ட ஆரம்பித்தான். ஆனால் மேற்கொண்டு அவன் அதை செருப்பாக தைத்துக் கொண்டிருந்தான். பாதங்களை மூடும் முழுக் காலணியாக வடிவமைக்கவில்லை.

ஒருபுறம் அவன் செயல் ஆச்சரியத்தைக் கொடுத்தாலும் ஸைமன் அவன் போக்கிற்கே விட்டு விட்டான். மைக்கேலின் எந்த முடிவும் தவறாக இருக்காது என்ற நம்பிக்கையே அதற்கு காரணம். அன்று மாலைக்குள்ளாகவே மீண்டும் அந்த குதிரை வண்டி வந்து நின்றது. அதிலிருந்து இறங்கி வந்த வேலைக்காரன் சீமான் கொடுத்த அந்த தோலை திருப்பி தரும்படி சீமாட்டி பணித்ததாகவும் அந்த தோலில் சீமானின் காலளவுக்கு ஒரு செருப்பு போதுமென்றும் கூறினான்.

ஸைமனின் ஆச்சரியம் எல்லை கடந்தது. ஏனிந்த மாற்றம் என்று வினவினான். போகும் வழியிலேயே சீமான் உயிர் துறந்ததாகவும் அவனுடைய பிணந்தான் வீடு சென்று இறங்கியதாகவும் சொல்லிய வேலைக்காரன் இப்போது தேவைப்படும் செருப்பு அவருடைய இறுதி யாத்திரைக்கு எனவும் தெரிவித்தான். தயாராக இருந்த செருப்பையும் மிச்சம் இருந்த தோல் பகுதிகளையும் சுருட்டிக் கொடுத்து அவனை அனுப்பி வைத்தான் ஸைமன்.


WHAT MEN LIVE BY ? [மனிதர் வாழ்வது எதனால் (நிர்ணயிக்கப்படுகிறது)? ] எனப்படும் லியோ டால்ஸ்டாயின் கதையிலிருந்து ஒரு பகுதியே மேலே படித்தது. இக்கதையில் மைக்கேல் ஒரு தேவதூதன். கடவுளின் ஆணை ஒன்றை மீறியதற்காக பூமியில் மூன்று கேள்விகளுக்கு விடையறிந்து வர அனுப்பப்பட்டவன். அந்த மூன்று கேள்விகள்:

1) What dwells in men ? -- மனிதருள் நிறைந்திருப்பது எது ?

2) What is not given to him ?- அவர்களுக்கு அளிக்கப்படாதது எது ?

3) What men Live by ? -மனி்தர் வாழ்வது எதனால் ?

இரண்டாவது கேள்விக்கான விடையை அந்த சீமானின் வருகை மூலம் அறிந்து கொண்டதாலே அவன் முறுவலித்தான்.

யாருக்கு எப்போது எது தேவை என்பதை கடவுள் மட்டுமே அறிவான். ”தன்னுடைய தேவைகள் எவையெவை என்பதை பூரணமாக அறியும் அறிவே மனிதனுக்கு அளிக்கப்படாதது”. அந்த சீமானின் வாழ்க்கை மூலம் மைக்கேல் தெரிந்து கொண்ட விடை இது.
{முதல் கேள்விக்கும் மூன்றாம் கேள்விக்கும் விடை ’அன்பு’ என்பது கதையோட்டத்தில் விளக்கப்படுகிறது.}
சில நிமிடங்களிலே உயிர் போகப் போகின்றத் தருணத்திலும் தனக்கு இன்னும் ஒரு வருடத்திற்கு உழைக்கக்கூடிய காலணிகளை கேட்க்கும் சீமானைப் போன்றவர்களே உலகத்தோர் என்பதை மிக அழகான கதை மூலம் விளக்கியுள்ளார் டால்ஸ்டாய் அவர்கள். இதுவே நிலையாமை.

’உலகத்திலேயே மிக ஆச்சரியம் தரும் விஷயம் யாது?’ என்கிற யக்ஷனுடைய கேள்விக்கு தருமபுத்திரர் கொடுத்த விடையும் நாம் யாவரும் அறிந்ததே. தினம் தினம் இறப்பவர்களை கண்முன்னே கண்டு கொண்டே இருப்பினும் நாம் மட்டும் சாஸ்வதம் என்கிற வகையில் செயல்படும் மனிதரை விட வேறு என்ன ஆச்சரியம் இருக்க முடியும்?

திருமூலர் இந்த நிலையாமையை நாடகப் பாணியில் கொண்டு செல்கிறார். ஒவ்வொரு வரியிலும் ஒரு காட்சியை கண்முன்னே நிறுத்துகிறார்.

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக் கொடியாரொடு மந்தணம் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந்தாரே


[அடப்பண்ணி= உணவை சமைத்து ; அடிசில் = சமைக்கப் பட்ட உணவு; மடக்கொடி =இளம் மனைவி ; இறை= சிறிது]

நாட்டுக்கு நாயகன் நம் ஊர் தலைவன்
காட்டுச் சிவிகை ஒன்று ஏறி கடைமுறை
நாட்டார்கள் பின்செல்ல முன்னே பறை கொட்ட
நாட்டுக்கு நம்பி நடக்கின்ற வாறே

[கடைமுறை =இறுதி முறையாக ; நம்பி= தலைவன்; நடக்கின்ற வாறே= நடந்து போகும் விதம்]

தில்லியில் ஒரு மிகப் பெரும் நிறுவனம், பத்து மாடி கட்டிடம் (Corporate Office) ஒன்றை, மூன்று வருட காலத்தில் கட்டியது. அதன் சேர்மனாக இருந்தவர் ஓய்வு பெறுவதாக அறிவித்து அவரது இளைய சகோதரர் புதிய கட்டிடத்தில் சேர்மனாகப் பதிவியேற்பார் என்ற அறிவிப்பு வெளியாகி தேதியும் குறிப்பிடப்பட்டு திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ்களும் அனுப்பப்பட்டுவிட்டன. சேர்மனுக்கான அலுவலகம் பலருடைய உழைப்பால் சிறப்பாக வடிவமைக்கப்பட்டது. ஆயின் இன்னும் ஒருவாரம் கூட இல்லாத நிலையில் பதவியேற்க வேண்டிய அந்த இளைய சகோதரர் மாரடைப்பால் திடீரென்று காலமானார். அப்போது நிறுவனத்தில் நிலவிய ஏமாற்றத்தை சொல்லி முடியாது.

அத்தகைய சோக நிகழ்ச்சிகளைக் காணும் போது கபீர் அவர்களின் கூற்றில் உள்ள உண்மை சுரீரென்று் உறைக்கிறது.

कबीरा गर्व न कीजीयॆ, ऊंचा दॆख आवास
काल परौ भुंई लॆटना, ऊपर जम्सी घास

செருக்கு வேண்டா கபீரா, வானளாவும் மாடம் என்று
எருக்கு விளையக் காண்பர் ஆ!, காலன் கிடத்தும் இடங் கண்டு


(புல் முளைக்கும் என பொருள்வரும் ’ஜம்ஸி காஸ்” என்று கபீர் சொல்லியிருப்பது எதுகை அமைப்புக்காக எருக்கு முளைப்பதாக மாறியுள்ளது )

காலம் தான் காலன். ஒவ்வொரு நொடியும் மரணத்தின் வாசலை நெருங்கிக் கொண்டிருக்கிறோம். இந்த உலகுக்கு வேண்டியவற்றை சேர்த்தாகி விட்டது. குடும்பத்தினருக்கும் இன்னொரு தலைமுறைக்கு வேண்டியது இருக்கிறது.

தேவைகளை சுருக்கிக் கொள்ளத் தெரிவதில்லை. ஒன்று தொட்டு ஒன்று, எதன் காரணமாகவோ அது வளர்ந்து கொண்டே போகிறது. எதையோ பற்றிக் கொண்டு எதையோ தேடி ஓடிக் கொண்டே இருக்கிறோம்.

கடைசியில் இவையெதும் உடன் வரப்போவதில்லை, தெரியும். உடன் வரக் கூடியதை சம்பாதிக்க மனம் ஈடுபடுவதில்லை. ’காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே’ என்பதன் பொருள் தெரிந்தும் மனதுள் இறங்குவதில்லை. அது தன் போக்கில் இழுத்துக் கொண்டே போகிறது. அப்போது அது சந்திக்கும் ஏற்றத் தாழ்வுகள்தான் எத்தனை எத்தனை! அதை அதிவீரராம பாண்டியர் வரிகளில் பார்ப்போம்.

உடமையும் வறுமையும் ஒரு வழிநில்லா

குடைநிழலிருந்து குஞ்சரமூர்ந்தோர்
நடைமலிந்து ஓரூர் நண்ணினும் நண்ணுவர்

சிறப்பும் செல்வமும் பெருமையும் உடையோர்
அறக்கூழ் சாலை அடையினும் அடைவர்

அறத்திடு பிச்சை கூவி இரப்போர்
அரசரோடு இருந்து அரசு ஆளினும் ஆளுவர்

குன்றத்தனைய இருநிதி படைத்தோர்
அன்றைப் பகலே அழியினும் அழிவர்

எழுநிலை மாடம் கால்சாய்ந்துக்குக்
கழுதை மேய் பாழாகினும் ஆகும்


[ நண்ணுதல் = சேர்தல்; அறக்கூழ் சாலை= தர்ம சத்திரம் ]

காலன் எவருக்கும் தனி மரியாதை கொடுப்பதில்லை. அரண்மனை வாசமிருக்கும் மன்னனும்,வெளியே திரியும் பிச்சைக்காரனும் அவன் புத்தகத்தில் ஒன்றே.

அதனால் இடையே ஏற்படும் பலவிதமான செருக்குகள் இறுதியில் அர்த்தமில்லாமல்போய்விடுகிறது . குலச் செருக்கு,செல்வச் செருக்கு, கல்விச் செருக்கு,அதிகாரச் செருக்கு இப்படி பலவாறாக நம்மை ஆட்டிப் படைக்கும் மாயை ஒரே கணத்தில் அவற்றை ஏதுமில்லாமலும் செய்து விடுகிறது.

இப்படி எத்தனைத் தினங்கள் (அல்லது பிறவிகள் )கழியப் போகின்றன. மனதிற்கு இவைகளிலுள்ள நிலையாமை ஏன் புரியாமல் போகிறது? இதை குறிப்பிடும் வகையிலும் கபீர் சொல்லும் இன்னொரு ஈரடி:

क्या करियॆ क्या जॊडिये, थॊडॆ जीवन काज
छाडि छाडि सब जात है, दॆह गॆह धन राज


அற்ப வாழ்வு அவனியிலே, அலைவ தென்ன அடைந்த தென்ன
சொற்ப தினமே போயின யாவும், தனம் திவரம் கிருகம் தேகம்

( திவரம்= தேசம், ராஜ்யம் )

இந்த மனம் இறைவன் பெயரில் இருக்கும் சுகத்தை அறியாததனால் தானே இப்படிக் கிடந்து உழலுகி்றது.

அவன் தான் இந்த சக்கரச் சுழலுக்கு அச்சு. வண்டிச் சக்கரத்தின் விளிம்பில் அமர்ந்திருக்கும் ஈ, பாதையின் மேடு பள்ளங்களுக்கு ஏற்ப குலுங்கிக் குலுங்கி பயணம் செய்யும். அது மெள்ள நகர்ந்து அச்சாணியை அணுகுமளவும் ஆட்டம் குறைந்து கொண்டே போகும். கடைசியில் அச்சாணியிலே அமர்ந்து விட்டால் பாதையின் மேடு பள்ளங்கள் அதை பாதிக்காது.

ஆகவே பரம சுகம் தரும் கடவுளின் நாமத்தைப் பிடித்துக்கொள். இறைவனுக்கு அருகே செல்வதற்கு அதுவே வழி. இல்லாவிட்டால் காலன் வாயிலில் மீண்டும் மீண்டும் புகுவதே வேலையாகிவிடும். இதற்கு விதிவிலக்கு என்பதே கிடையாது என்று எச்சரிக்கிறார் கபீர்.

कबीर सब सुख राम है, औरहि दुख की रासी ।
सुर नर मुनि अरु असुर सुर, पडे काल की फांसि ॥


இராம நாமமே பரமசுகம் கபீரா, மற்றன வெல்லாம் துன்பமயம்
தேவ முனிவரும் நராசுரரும், சேர்வரே கடையில் காலன்வயம்

( நராசுரர்= நரர்+அசுரர்)


புரந்தரதாஸருக்கும் அதே கருத்து. ராம ராமா என்னிரோ என்கிற அவருடைய பாடல் ஒன்றை சமீபத்தில் சிருங்கேரி சென்றிருந்த போது நண்பர் ஒருவருடைய மகள் இப்பாடலை பாடக் கேட்டு மனது உருகியது. 
பின்னர்  யுட்யூப்-ல் தேடியபோது அதே பாடல் கிடைத்தது . ஸ்ரீ புரந்ததாஸரின் அந்த பாடலின் சாராம்சம் இது தான். பாடலையும் கேட்டு மகிழுங்கள்.

கட்டிய மனைவியும் கூட வர மாட்டார் ;ராம ராமா என்று சொல்லுங்கள்.
தன்னவர் என்று வளர்க்கப்பட்ட மக்களும் தன்னவர் ஆவதில்லை; ராம ராமா என்று சொல்லுங்கள்.
நிலம், கால்நடை தான்யம் தனம் யாவும் விட்டு செல்வனவே; ராம ராமா என்று சொல்லுங்கள்.
கெட்ட சம்ஸாரம் இது, சுகம் என்பது கிஞ்சித்தும் இல்லை ராம ராமா என்று சொல்லுங்கள்.
சிருஷ்டியில் முதல்வனான புரந்தர விட்டலனை மறவாது
ராம ராமா என்று சொல்லுங்கள்.
நரஜென்மம் என்பது ஸ்திரமில்லை, அந்த கோமளாங்கன் நாமம் அந்த (கடைசி)வேளைக்கு வராது. ராம ராமா என்று சொல்லுங்கள்.



இப்போதிலிருந்தே இறைவன் நாமத்தை செபித்து பழகாவிட்டால் கடைசி நேரத்தில் அது துணைக்கு வராது என்பதையும் புரந்தரதாஸர் குறிப்பிட்டு சொல்கிறார்.

நம் கல்நெஞ்சைக் கரைக்க இன்னும் எத்தனை கபீர்களும் புரந்தரரும், திருமூலரும் வரவேண்டுமோ தெரியவில்லை.

Wednesday, July 09, 2008

கடுகுக்குள்ளே தெரியும் மலை

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் மிகச் சிறியது என்றால் கடுகும், ஊசியும். இவைகளை வைத்துதான் எத்தனை விதமான கதைகள், நிகழ்சிகள் வர்ணனைகள். 
 "கடுகைத் துளைத்தேழ் கடல் புகட்டி, குறுகத் தரித்தகுறள்" என்று திருக்குறளின் பெருமை பேசுவார் இடைக்காடர். 

 ”காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே” என்று மருதவாணன் சொல்லி மறைகிறான் திருவெண்காடருக்கு (பட்டினத்தார்).

  மரணம் நிகழாத வீட்டிலிருந்து கையளவு கடுகை கொண்டுவரச் சொல்கிறார் புத்தர், குழந்தையை இழந்த அபாக்யவதியின் துயர் தீர்க்க. 

 அரசன், சிகந்தர் லோடியின் அழைப்பிற்கு கபீர் வருவதில் தாமதம். ஏனென்று விசாரித்தபோது ”ஊசியின் காதளவு துவாரத்தில் ஒட்டகங்களின் அணிவகுப்புச் செல்லும் விந்தையைக் கண்டு இறைவனின் பெருமையை எண்ணி வியந்து கொண்டிருந்தேன்” என்றார். 

 ஊசியின் காதில் ஒட்டகங்கள் நுழையும் வரை நம்பிக்கையில்லாதவனுக்கு சுவனபதியில் இடம் கிடையாது என்பது இஸ்லாத்தில் கூறப்படும் கருத்து என்று அறிகிறோம். 

 நம்பிக்கையைப் பற்றிச் சொல்லும் போது ”கடுகளவாவது உங்களுக்கு நம்பிக்கை உண்டானால் அந்த மலையையும் நகர்த்தலாம்” என்றார் ஏசு பிரான் (மத்தேயு: 17-20). 

 இறைவனின் பெருமையில் நம்பிக்கை வைத்தாலே மலையை நகர்த்த முடியுமென்றால் அந்த இறைவனே மனது வைத்தால் ஆகாததும் உண்டோ. அதை மனதில் வைத்தே கபீர் சொல்கிறார். 

  साँई से सब होते है, बन्दे से कुछ नाहि ।
 राई से पर्वत करे, पर्वत राई माहिं ॥
ஸாயி ஸே ஸப் ஹோதே ஹை, பந்தே ஸே குச் நாஹி |
 ராயி ஸே பர்வத் கரே, பர்வத் ராயி மாஹி || 

பெருமாள் செய்வதே எல்லாம், இவனால் ஆவது இல்லை எதுவும் 
பெருமலையும் கடுகுள் அடங்கும், அவனால் கடுகே மலையும் ஆகும்

அடிமுடி காணாக் கிடைக்கா ஜோதியாக நின்ற அண்ணாமலையாராகட்டும் “ஸர்வதஹ பாணி பாதம் தத் ஸர்வோக்ஷி ஷிரோ முகம்“ என்று சொல்லும் பகவத்கீதையின் வர்ணனையாகட்டும், 'ஓங்கி உலகளந்த உத்தம' னாய் நின்ற வாமனனாகட்டும், மண்ணைத் தின்ற வாயில் அண்ட சராசரங்களை காட்டிய வண்ணமாகட்டும் எல்லாமே இறைவனின் எல்லையற்ற தன்மையை நமக்கு கோடிட்டு காட்டுகின்றன. 

 ஆனால் இப்படியெல்லாம் சொல்லும் போது சாதாரணமான மனிதனின் புத்திக்கு எட்டுமோ இல்லையோ என்பதனால் அவர்களுக்கும் எளிதாக புரியும்படி கடுகையும் மலையையும் உவமித்து கபீர்தாஸர் சொன்னார்.

 பெரிய மலை கடுகுக்குள் அடங்கியது எவ்வாறு? ஊசியின் காதில் ஒட்டகம் எவ்வாறு போயிற்றோ அப்படிதான். சிகந்தர் லோடிக்கு கபீர் கூறிய விளக்கம் : 

இந்த உலகத்தின் காணப்படும் காட்சிகள் யாவுமே ஊசியின் காதை விடச் சிறியதான கண்ணின் கருமணியின் வழியாகத்தானேப் பார்க்கப்படுகிறது. காணப்படும் பொருட்கள் அனைத்தையும் ஒளிவடிவில் மாற்றி அதை ஊசியளவு துளையில் செலுத்தும் மகிமை அவனன்றி யாரால் முடியும்? இது மலை கடுகான விதம். 

 கடுகு மலையாவது எப்படி? அதற்கு அதிவீரராம பாண்டியர் பதிலளிக்கிறார். கடுகைப் போலவே சிறியதான மீனின் சினையை உவமையாக்கி சொல்லும் பாடலை பாருங்கள். 

தெண்ணீர்க் கயத்துச் சிறுமீன் சினையினும் 
நுண்ணிதே ஆயினும் அண்ணல் யானை 
அணி தேர் புரவி ஆட்பெரும் படையோடு 
மன்னர்க்கு இருக்க நிழலாகுமே. (வெற்றி வேற்கை) 

 மீனின் முட்டையைக் காட்டிலும் அளவில் நுண்ணியதான விதை, சில காலத்திலேயே ஒரு மன்னன் தன் படையுடன் வந்து அதனடியில் தங்கி இளைப்பாறும் அளவிற்கு நிழல் தரும் மரமாக வளர்ந்து நிற்கிறதாம். அப்படையில் தேர்கள் யானைகள், குதிரைகளும் கூட உண்டாம் ! அப்படி ஒரு சிறிய விதையில் பெரிய மரத்தை அடைத்து வைத்த வல்லமை யாருடையது ?. 

இன்னும் சிறிது காலம் போனால் அம்மரத்தினின்று விழும் விதைகள் ஒரு பெரும் காட்டையே கூட உருவாக்க வல்லது. இப்படித்தான் கடுகளவில் உள்ள சக்தி பரந்து விரிந்து இறைவனின் பெருமையை விளங்கச் செய்கிறது. இந்த விளக்கங்களெல்லாம் அறிவு பூர்வமாக அணுக முயலும் போது எழுவன.

 உணர்வு பூர்வமாக பார்க்கப்போனாலும் எப்படியெல்லாம் சிந்தனை போகிறது. இணையத்தில் படித்தக் கட்டுரையிலிருந்து ஒரு சிறு பகுதி:

  ............................... ஆழ்வார்களைப் பரமாணு வாக்கியவர் பெரியாழ்வார். ஆழ்வார்கள் திருமாலைப் போற்றிப் பாடித் தமக்குப் பாதுகாப்பை யாசித்தார்கள். பெரியாழ்வாரோ தெய்வத்தின் மீதிருந்த அபரிமிதமான அன்பினால் அவனுக்கே பாதுகாப்பு கவசம் போடும் முகமாகப் 'பல்லாண்டு ' பாடி வைத்தார். இப்போது பிற ஆழ்வார்கள் கடுகு பெரியாழ்வார் மலை. பெரியாழ்வாரைக் கடுகாக்கி மன்னிக்கவும் பரமாணுவாக்கித் தான் மலையானாள் ஆண்டாள். பெரியாழ்வாரின் தெய்வத்தையே காதலித்து வலிந்து தொடர்ந்து மணம் புரிந்து வென்று காட்டியதில். ................................. 

 இப்படி பக்தர்கள் தம்மை, அத்யந்த பக்தியில் ”தான்” என்ற எண்ணத்தைச் சுருக்கிக் கொண்டு, கடுகு போல் ஆகுமளவும் அவன் அருளால் அவர்களின் பக்தியின் பெருமை மலையளவுக்கு உயர்ந்து விடுகிறது. அப்படிப்பட்ட பக்தியால் தான், பக்தர்களுக்கு வரும் மலை போன்ற துன்பம் கூட கடுகாகிப் போகிறது. 

 திரௌபதியின் அக்ஷயப் பாத்திரத்திலிருந்த ஒரே பருக்கை அன்னத்தை வாங்கிப் புசித்து கண்ணன், துர்வாசருக்கும் அவரது பெரும் சிஷ்ய கோடிகளுக்கும் விருந்துண்ட திருப்தியை ஏற்படுத்தி பாண்டவர்களுக்கு வரவிருந்த சாபத்திலிருந்து காப்பாற்றியது, மலை போன்ற துன்பத்தை கடுகாக்கியதற்கு ஒரு உதாரணம். 

 அந்த பரந்தாமனின் மாயை பல சமயங்களில் நம் அறிவை மங்கச் செய்து கடுகு போன்ற ஒன்றுமில்லாத விஷயத்தை மலை போல பெரிதாக்கி மன அமைதியை இழக்க வைக்கிறது. 

 உதாரணமாக லியோ டால்ஸ்டாயின் கதையொன்றில் சிறு குழந்தைகளின் விளையாட்டுச் சண்டை எப்படி பெரியவர்கள் அளவில் கலகமாக வளர்கிறது என்பதை படிக்கும் போது உணர்கிறோம். கலகத்தின் உச்சத்தில் ஒரு பெரியவர் வந்து சண்டைக்குக் காரணமான அக்குழந்தைகள் அதைப் பற்றிய நினைவே இன்றி தங்களை மறந்து மீண்டும் விளையாடிக் கொண்டிருப்பதைப் சுட்டிக் காட்டும் போது பெரியவர்கள் யாவரும் வெட்கிச் செல்கின்றனர்.

 இன்னொரு சிறியக் கதை. ஒரு முனிவர், காட்டில் போய்க் கொண்டிருந்த வேடனையும் வேடிச்சியையும் பார்த்து ’அப்பா பசிக்கு ஏதாவது கொடு’ என்று வேண்டினார். வேடிச்சி உடனே கீரை பறித்து வந்து சமைக்க ஆரம்பித்தாள். சமையல் தயாராவதற்கு முன்பே முனிவர் மோனத்தில் ஆழ்ந்து விட்டார். நேரம் கழிந்தது. முனிவரின் தவம் கலைவதாயில்லை. வேடனும் வேடிச்சியும் தம் வழியே சென்றனர். 

நாட்கள் மாதங்கள், வருடங்கள் என்று உருண்டோடின. காலப்போக்கில் அவரை மண் மூடியது. பின்னொரு நாளில் ஒரு அரசனும் அரசியும் போய்க் கொண்டிருந்தத் தேரின் குதிரைகள் அந்த மண் மேட்டைத் தாண்டிச் செல்ல மறுத்தன. கூடவே சென்ற ஆட்கள் மேட்டைக் கரைத்தனர். அடியிலிருந்த முனிவர் தவம் கலைந்து கண் திறந்தார். வணங்கி நின்ற அரசனையும் அரசியையும் பார்த்து “கீரை எங்கே?” என்று வினவினார். இருவரும் ஏதும் புரியாமல் விழித்தனர். 

 அவருடைய கணக்கிற்கு நிகழ்ச்சியின் தொடர்பு அப்படியே இருந்தது. அதே வேடனும் வேடிச்சியும் வேறொரு பிறவியில் முன்பு தடைபட்டுப்போன விருந்தோம்பலை பூர்த்தி செய்ய விதியால் வரவழைக்கப் பட்டிருந்தனர். மனிதரின் கணக்கில் பல ஆண்டுகள் என்பது அவருடைய மோனத்தில் சில கணங்களாக சிறுத்து விட்டிருந்தது. 

 ஆனால் மனிதர்களாகிய நாம் சில நிமிடங்களிலேயே பல வருட வாழ்க்கையை நம்முடைய கனவு அனுபவங்களில் வாழ்ந்து விடுகிறோம்!! இங்கே சில கணங்கள் என்பது பல வருடங்களாக நீடிக்கப்படுகிற விந்தையை காண்கிறோம். 

 இப்படி அறிவு பூர்வமாகவும் உணர்வு பூர்வமாகவும் எல்லாவற்றிலும் கடுகை மலையாக்கி, மலையை கடுகாக்கி அவன் விளையாடிக் கொண்டிருப்பதைக் காணும் போது கபீரின் கூற்றை யாரால் மறுக்க முடியும்?

 நம்கால கவிஞரையும் இந்த மலையும்- கடுகும் விட்டு வைக்கவில்லை. மனிதன் என்பவன் தெய்வமாகலாம் ..................
மனமிருந்தால் பறவைக் கூட்டில் மான்கள் வாழலாம் 
வழியிருந்தால் கடுகுக்குள்ளே மலையை காணலாம் 
துணிந்து விட்டால் எந்த சுமையும் தலையில் தாங்கலாம்
குணம்.... குணம்.. அது கோவிலாகலாம் 

கடுகு-மலையை வைத்து எனக்கு தோன்றியவற்றை சொல்லிவிட்டேன். உங்களுக்கு தோன்றுபவற்றையும் சொல்லுங்கள்.