Saturday, September 01, 2007

தண்மையில் பெருகும் கங்கை

இனிய பேச்சினால் உலகையே வெல்லலாம் என்பது உலக வழக்கு. ஆனால் அது அவ்வளவு சுலபமாக கைக்கூடுவதில்லை. எல்லா சந்தர்பங்களிலும் எல்லோரிடத்தும் இது சாத்தியப்படும் என்று சொல்ல முடியாது. குறைந்த பட்சம் கடுஞ்சொற்களை தவிர்க்க முயலவேண்டும். ஏனெனில் நல்ல பெயரை சம்பாதித்துக்கொள்வதற்கு பல காலம் பிடிக்கும். ஆனால் இடம் காலம் அறியாத கடுஞ்சொற்களால் ஆயுள் முழுவதுற்குமான கெட்ட பெயர் சுலபமாக வந்து ஒட்டிக்கொள்ளும்.

பலர் தம்மிடம் உள்ள எரிச்சல் மனப்பான்மையை நினைத்தே எரிச்சல் அடைவர். உணர்ச்சிகள் கட்டுக்குள் இல்லாதபோது வெளிவரும் வார்த்தைகளும் கட்டுக்குள் இருப்பதில்லை. பின்னர் அதை எண்ணி வருத்தப்படுவர்.

இந்த பலவீனத்தை எதிர்கொள்வது எப்படி?

எல்லோரையும் நேசி.

சுலபமான வழி ஆனால் மிகக் கடினமான பயிற்சி; போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலையில் வண்டி ஓட்டுதல் போல.

பச்சை விளக்கைக் காண்பதற்கும் முன்பே புற்றிலிருந்து கிளம்பும் ஈசல் போல் சீறிப் பாயும் வாகனங்கள். அவற்றின் இடையே வளைந்து நெளிந்து நுழையும்- பலரது பொறுமையையும் சோதிக்கும்- இருசக்கர முச்சக்கர வாகனங்கள். ஒரு சிறு தவறு,எங்கே யாரால் என்று தெரியவில்லை, நடந்து விடுகிறது. பின்னால் ஒரு பெரிய இடிச்சத்தம். நமது வண்டி ஒரு குலுக்கு குலுங்கி முன்னால் தள்ளப்படுகிறது. மிகுந்த அதிர்ச்சியுடன் கீழே இறங்கி பின்னாலிருந்து இடித்த ஓட்டுனரிடம் வாக்குவாதம் துவங்குகிறோம். அவன் சொல்லும் காரணங்கள் மேலும் கோபத்தைக் கிளறுகிறது. அதே சமயம் அவ்வண்டியின் பின்னிருக்கையில் இருந்து ஒருவன் இறங்கி ’டேய் சொங்கி’ என்று உரிமையுடன் கூவுகிறான். கோபம் அவன்பால் வெடிப்பதற்கு பதிலாக அந்த நொடியிலே ஒரு அன்யோன்யம் வந்துவிடுகிறது. ஒரு சிலர் மட்டுமே அறிந்திருந்த பெயரை, பால்ய சிநேகிதன் அடையாளம் காட்டிய உடனேயே சந்தோஷத்தில் ஈகோ, கோபமெல்லாம் மாயம். பழைய அன்பிற்கு அவ்வளவு சக்தி. ’சரி, காப்பீட்டில் வண்டியை சரி பார்த்துக்கொள்ளலாம்’ என்று சுலபமாக சமாதானமாகி விஷயத்தைப் ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறோம்.

வாழ்க்கைப் பாதையிலும் நிலைமை இதேதான். முன்னேறத் துடிக்கும் ஒரு சிலருடைய வேகத்திற்கு நம்மால் ஈடுகொடுக்க முடிவதில்லை. அல்லது வேறு சிலருக்கு நமது வேகம் ஒரு பிரச்சனை. வீட்டிலும் வெளியிலும் உரசல்களும் வாக்வாதங்களும் அன்றாட வாடிக்கை ஆகிவிடுகின்றன. அந்த நேரங்களில் நாம் ஒரு’சொங்கி’ யாக, அன்யோன்யத்தை அடையாளம் காட்டுபவராக இருந்தால் எவ்வளவு இனிமையாகி விடும் நம் உறவுகள். அதை வளர்த்துக் கொள்ளவே இனிமையான சொற்களை பயன்படுத்த பெரியவர் யாவரும் சொல்லி வைத்துள்ளனர். வாக்கிலே இனிமை கொண்டவர்களை உலகில் யாவருமே தம்மவராக பாவிப்பர். கபீர் தரும் உதாரணம் இதோ;

कागा काको धन हरै, कोयल काको देत ।
मीठा शब्द सुनाय के, जग अपनो करि लेत ॥


காகா காகோ தன் ஹரை, கோயல் காகோ தேத்
மீடா ஷப்த் ஸுனாய் கே, ஜக் அப்னோ கரி லேத்
.

காகம் கவர்ந்த நிதியமேது, இவர்க்கு தந்துதவிய குயிலுமேது
மோகம் கொள்வர் உலகோரும், குரலில் குயிலுக் கிணையேது

(அப்னோ கரி லேத் என்பது ’தம்முடையதாக பாவிப்பது’. அதாவது தங்கள் குரல் வளத்தை குயிலுக்கு இணையாக்கி பெருமை கொள்வர் என்று புரிந்து கொள்ளலாம்)

எவருடைய செல்வத்தையும் எந்த காக்கையும் தூக்கிக் கொண்டு போகவில்லை. எந்த குயிலும் வந்து ’இந்தா நீ வைத்துக்கொள் ’ என்று எவ்வித பணமுடிப்பும் உலகத்தவர்க்கு கொடுக்கவில்லை. ஆயினும் உலகத்தவர் குயிலையே போற்றுதலுக்கான ஒரு பொருளாக கொண்டுள்ளனர். அதற்கு காரணம் அதன் குரலினிமைதான். மனதை வருத்தாத அதன் இனிமை ’...அங்கு கத்தும் குயிலோசை -சற்றே வந்து காதிற் படவேணும்’ என்று கவிஞனையும் பாட வைக்கிறது. கேட்போரின் மனம் வருந்தாமல் பேசக் கற்றுக் கொண்டால் உலகோர் யாவரும் நம் சுற்றத்தாரே.

சிவபிரகாச சுவாமிகள் வேறொரு உதாரணத்தின் மூலம் இதே கருத்தை வலியுறுத்திகிறார்.

இன்சொலால் அன்றி இருநீர் வியன் உலகம்
வன்சொலால் என்றும் மகிழாதே - பொன்செய்
அதிர் வளையாய் பொங்காது அழல் கதிரால் தண்என்
கதிர் வரவால் பொங்கும் கடல ( நன்னெறி- 18)

பொன்னாலான வளையல்கள் அணிந்த பெண்ணே ! உப்பு நீரும் நல்லநீரும் அருகருகே காணப்படும் இந்த விந்தையான உலகம் இனிய சொற்களுக்கே மகிழுமேயல்லாது கடுஞ்சொற்களுக்கல்ல. கதிரவனின் அனல் கதிர்களுக்கு பொங்காத கடல் சந்திரனின் குளிர்ச்சியான கதிர்களுக்கு பொங்கி எழும்.

வெறும் கடலை பொங்கி எழச் செய்யும் வல்லமை மட்டுமல்ல மலையையும் உடைத்தெறியும் சக்தி குளிர்ச்சிக்கு உண்டு என்பதை கபீர் இன்னொரு தோஹாவில் விளக்குகிறார்.

कुटिल वचन नहीं बोलिये शीतल बैन ले चीन्हि ।
गंगा जल शीतल भया, परबत फो़डा तीन्हि ॥


குடில் வசன் நஹி போலியே ஷீதல் பைன் லே சீன்ஹி
கங்கா ஜல் ஷீதல் பயா, பர்பத் ஃபோடா தீன்ஹி


வலிதரும் வன்சொல் எதற்கு, வழிதரும் இன்சொல் உண்டு
கங்கையும் தண்மையின் பெருக்கு, பொடித்திடும் பர்வத மங்கு

(தண்மை = குளிர்ந்த, பெருக்கு = நீர் பெருக்கு, பர்வதம்= மலை)

கதிரவனின் வெப்பத்தால் ஆவியாகி இருக்கும் நீர், மலைகளிலே உள்ள குளிர்ச்சியால் மழையாகவோ உறைபனியாகவோ மாறி ஓர் உயர்நிலையை அடைகிறது. அந்த உயர்ச்சியே அதற்கு ஒரு அபரிமிதமான சக்தியைக் கொடுக்கிறது. கீழிறங்கி வருகையில் மலையில் உள்ள பாறைகளை தகர்த்துக்கொண்டு செல்லும் ஆற்றலை அது பெறுகிறது. அது போல் ஒருவர் சொல்லும் குளிர்ச்சியான உரைகள் கேட்பவர் மனதில் சஞ்சலத்தையும் கோபத்தையும் களைந்து, ம(ற)றைந்திருக்கும் விவேகத்தை ஒரு நிலைநிறுத்தி அதற்கு ஒரு சரியான செயலாற்றலைத் தருகிறது. களையப்பட்ட கோபமும் பொறுமையின்மையும் தான் துகளான பாறைகள்.

’கங்கையும் தண்மையின் பெருக்கு’ என்பது கங்கை நதி என்பதே இயற்கையில் குளிர்ச்சி யின் விளைவாக உருவானதுதான் என்பதை குறிக்க வந்துள்ளது.

கங்கைக் கரை வாசியாதலால் கபீர் மறவாமல் கங்கைக்கு தன் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறார். ஆனால் அவர் சொன்னதில் உள்ள உண்மை எல்லா நீர் பெருக்குகளுக்கும் பொருந்தும்.

5 comments:

  1. நற்சிந்தனையில் மலர்ந்த இரண்டு ஈற்றடிகளும், ஈடு இணையில்லா துணை, பற்றுவோருக்கு- ஐயமில்லாமல்.

    மிக்க நன்று, நன்றி!

    ReplyDelete
  2. நன்றாக இருக்கு,விளக்கம்.

    ReplyDelete
  3. நன்றி ஜீவா

    நன்றி குமார்

    இந்த வலைப்பூ ஆரம்பித்து ஒரு வருடம் நிறைவுறப் போகிறது. இவ்வளவு தூரம் எழுதமுடியும் என்று நினைத்ததில்லை.நீங்கள் யாவரும் தொடர்ந்து கொடுத்துவரும் உற்சாகம் தான் இவ்வளவு தூரம் கொண்டு வந்திருக்கிறது. கபீரின் இச்சைப்படி நடக்கட்டும். நன்றி

    ReplyDelete
  4. மிக மிக அருமை கபீரன்பன். அதிலும் அந்த 'சொங்கி' எடுத்துக்காட்டு உடனே என் மண்டைக்குள் இறங்கிவிட்டது. மறக்க நெடுநாட்கள் ஆகும் என்று நினைக்கிறேன். நல்லதை மறப்பதே இயல்பாகக் கொண்ட எனக்கு இது ஒரு வரபிரசாதம். மிக்க நன்றி.

    ReplyDelete
  5. நன்றி குமரன,
    காலத்திற்கேற்றாற் போல் உதாரணங்களும் மாற வேண்டியவை தானே :)

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி