Sunday, September 09, 2007

பாரதி எதிரொலிக்கும் கபீர்

மகாகவி பாரதியார் சிலஆண்டுகள் காசி மகாநகரத்திலேயே வாழ்ந்து வடமொழியிலும் ஹிந்தியிலும் தேர்ச்சிப் பெற்றிருப்பினும் கபீர்தாஸ் பற்றிய குறிப்பு அவருடைய எழுத்துகளில் எங்கும் காணப்படவில்லை. இது என் தேடுதலில் உள்ள குறைபாடாகவும் இருக்கலாம். யாருக்காவது தெரிந்திருந்தால் தயவுகூர்ந்து தெரியப்படுத்தவும்.

சில ஒற்றுமைகள் : இருவருமே வாய்மையே உயிர் மூச்சாய் கொண்டிருந்தனர். அவர்களுக்கு வறுமையே சொத்து. ஆனால் அவர்களின் தன்னலமற்ற மனமோ மிக மிகப் பெரியது. அவர்கள் விட்டுசென்ற கவிதைகளோ அமரத்துவம் வாய்ந்தவை.

வேற்றுமை : படிப்பறிவு இல்லாவிட்டாலும் ஆன்மீகத்தின் எல்லையைக் கண்டவர் கபீர். அதனால் அவர் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவராக இருந்திருக்கிறார். அவரது வாழ்க்கை, ஆழமான கங்கை அமைதியாக சமவெளியில் பாய்ந்து செல்லும் போக்கை ஒத்தது. முறையாக கல்வி கற்றிருந்த பாரதிக்கோ ஆன்மீக நாட்டம் இருப்பினும் வாழ்க்கையில் இன்னும் பிடிப்பு இருந்தது. அவருடைய மனம் பற்றற்ற நிலைக்கும் உலக வாழ்க்கைக்கும் இடையே ஊசலாடுவது பல கவிதைகளில் நன்றாகவே தெரிகிறது. இதன் காரணமாக ஒரு மலையருவியின் ஓட்டத்தோடு விளங்கியது பாரதியாரின் வாழ்க்கை. அதில் வேகம் உண்டு, சீற்றம் உண்டு. காணக் காண சலியாத குதித்து சுழித்து ஓடும் அழகும் உண்டு.

இவ்விருவரின் கவிதை வரிகளுக்கிடையே கண்ட ஒருமித்த சில கருத்துகளைப் பார்ப்போம். காலத்தால் ஐநூறு வருடங்கள் இடைவெளி இருப்பினும் அழியாத உண்மைகள் அவரவர்களுக்குரிய தனித்தன்மையோடு வருகிறது.

गोता मारा सिंधु में, मॊती लाये पैठि ।
वह क्या मोती पायेंगे, रहे किनारे पैठि ॥

கோதா மாரா சிந்து மே, மோதி லாயே பைடி
வஹ் க்யா மோதி பாயேங்கே, ரஹே கினாரே பைடி
(சிந்து = கடல், மோதி =முத்து)

ஆழியுள் குதிப்பர் ஆழ மூழ்குவர், அள்ளி வருவரே முத்து
கூழையர் கூடுவர் கூசியே நிற்பர், எங்கனம் தருவரே முத்து
(கூழையர்= அற்ப மக்கள், அறிவற்றவர்; கூசுதல்= பயத்தல்)

கடலில் மூழ்கி முத்தெடுப்பது ஒரு கடினமான செயல். துணிச்சல் உள்ளவர்கள் மட்டுமே மேற்கொள்ளும் ஒரு காரியம் இது. உள்ளே சென்றவருக்கு மூச்சுக் கட்டும் திறமை அசாதாரணமாக இருக்க வேண்டும். கடல் வாழ் பிராணிகளால் எந்த கணமும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகளும் அதிகம். அதனால் பெரும்பாலானவர் தொழிலில் உள்ள அபாயத்தையும் சங்கடங்களையும் சொல்லி முத்துக்குளிக்க விரும்புவனை தடுக்க முயலுவர். மனத்திண்மையுடையவர் அவற்றைப் பொருட்படுத்தாது துணிந்து செயலில் இறங்குவர். அப்பேர்பட்டவர்கள் தான், கடலின் அரிய பொக்கிஷங்களை உலகு வெளிக்காட்டுகின்றனர்.

கபீர் இந்த உதாரணத்தை சொல்வதன் நோக்கம் ஆன்மீகத்திலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டு சாதனைகளை மேற்கொள்ளாமல் வெறும் பேச்சளவிலே நிற்பதால், பிறவி வந்ததன் பயனான, இறையின்பம் அடையப் படாதது என்பதாகும். சாதனைகளை மேற்கொள்ள பெரிய வைராக்கியமும் திடச்சித்தமும் தேவை என்பதை எல்லா ஞானிகளும் உரைக்கின்றனர். எனவே அதை முத்துக்குளிப்பதற்கு ஒப்பாக்கி காட்டுகிறார். ஆயின் நாம் இதை வெறும் ஆன்மீகத்துடன் நிறுத்திக்கொள்ளாமல் எந்த ஒரு உயர்லட்சியத்தை அடைவதற்கான தேவை எனக்கொள்ளலாம்.

கபீர் உணர்ச்சியைத் தூண்டும் விதமாக அமைக்கவில்லை ஆனால் சிந்திக்கும் வகையில் கருத்தை முன் வைக்கிறார். ஆனால்கரையோரம் அமர்ந்து கதைப்பேசும் மக்களை பார்க்கையில் கோபம் பொத்துக்கொண்டு வருகிறது பாரதிக்கு. இந்திய சுதந்திரப்போரில் பயந்தாங்கொள்ளிகளின் நிலைக்கண்டு பொறுமுகிறார். சுதந்திரம் என்னும் ஒரு உயர் லட்சியத்திற்காக செயல்படாமல் உதட்டளவிலே அனுதாபம் காட்டித் திரிவோரை வேறெப்படி கடிந்துகொள்ள இயலும்.

கூட்டத்தில் கூடிநின்று கூடிப்பிதற்றலன்றி
நாட்டத்தில் கொள்ளாரடி- கிளியே
நாளில் மறப்பாரடீ (நடிப்பு சுதேசிகள்)

கேட்போரையும் படிப்போரையும் உணர்ச்சி கொள்ளச் செய்யும் வாசகங்கள்.

நிலயாமைப் பற்றி இருவரும் என்ன சொல்கிறார்கள் பார்ப்போமா !

हाथों परबत फाड़ते, समुन्दर घूट भराय ।
ते मुनिवर धरती गले, का कोई गरब कराय ॥

கையால் மலையும் பெயர்ந்தது, குடிகையுள் கடலும் அடைந்தது
வையங் காணா சாதனை, யிவர்கர்வமும் அடங்கும் மண்ணிடை

वैध्य मुआ रोगी मुआ, मुआ सकल संसार ।
एक कबीरा ना मुआ, चेहि के राम आधार ॥

மரித்தான் உரோகியும், வைத்யனும் மரித்தான், மரிப்பரே யாவரும்
மரியான் என்றும் கபீரனும் இராமநாமத் துணைக்கொண்ட பின்னே

மாற்று; (பிற்சேர்க்கை -09/02/08)

பிணியாள் போனான், தீர்த்தவன் போனான், போவரே யாவரு மொருநாள்
தனையாள் இராமன் மந்திரம் சொல்லும், கபீரனுக் கில்லை இறுநாள்

(பிணியாள்= நோயுற்றவன்; தீர்த்தவன்= நோய்த் தீர்த்தவன், மருத்துவன்;
தனையாள்= தன்னை ஆளும்; இறு நாள்=முடிவுநாள்)


நிலையற்ற இவ்வுலகில் வியாதியுள்ளவரும் அவர்களைக் காப்பாற்ற முயலும் வைத்யனும் இறந்து போகின்றனர். அனைத்து உயிர்களுமே ஒருநாள் மறைய வேண்டியனதான். இதிலிருந்து விதிவிலக்கே கிடையாது. கைலாய மலையை கையால் தூக்கிய ராவணனோ அல்லது தன் கமண்டலத்துள் கடலையே அடக்கிய அகஸ்திய முனிவரோ இந்த முடிவிலிருந்து தப்ப இயலவில்லை. எனவே எத்தகைய கர்வம் ஆயினும் அதுவும் ஒரு நாள் மண்ணிலே முடிந்து போகும்.

ஆனால் அமரத்துவம் என்பது இறைவனின் நாமத்தை மீண்டும் மீண்டும் செபிக்கும் போது சித்த சுத்தி ஏற்பட்டு அதன் மூலம் அடையப் படுகிறது. அந்நிலையில் தூல உடலின் உணர்வு போய் பேருணர்வு ஒன்றுதான் எஞ்சியிருக்குமாம். கபீர் தமக்கு இராமநாமத் துணை யிருப்பதால் தனக்கு மரணமே இல்லை என்று அறிவிக்கிறார். இதே கருத்து பாரதியின் எழுத்தில் எப்படி வெளிப்படுகிறது பார்ப்போமா ?

முன்னோர்கள் உரைத்த பல சித்தரெல்லாம்
முடிந்திட்டார், மடிந்திட்டார், மண்ணாய்விட்டார்
.............
நோவாலே மடிந்திட்டான் புத்தன் கண்டீர்;
அந்தணனாம் சங்கராசார்யன் மாண்டான்
அதற்கடுத்த இராமனுஜனும் போனான்.
சிலுவையிலே அடியுண்டு யேசு செத்தான்;
தீயதொரு கணையாலே கண்ணன் மாண்டான்;
பலர் புகழும் இராமனுமே ஆற்றில் வீழ்ந்தான்;
பார் மீது நான் சாகாதிருப்பேன், காண்பீர்.

மலிவு கண்டீர் இவ்வுண்மை பொய்கூறேன் யான்
மடிந்தாலும் பொய் கூறேன். மானுடர்க்கே
நலிவுமில்லை, சாவுமில்லை, கேளீர், கேளீர்
( சொற்களிலே என்ன ஒரு அழுத்தம், தன்னம்பிக்கை)
நாணத்தை, கவலையினத்தை, சினத்தை, பொய்யை
அச்சத்தை, வேட்கைதனை அழித்துவிட்டால்
அப்போது சாவுமங்கே அழிந்து போகும்.
மிச்சத்தைப் பின் சொல்வேன் சினத்தை முன்னே
வென்றிடுவீர் மேதினியில் மரணமில்லை.


இவ்வுலகில் இறக்காதவர்கள் யார்? இராமன், கண்ணன் புத்தன் ஏசுவிலிருந்து ராமானுஜன் வரை பட்டியல் போட்டுக்காட்டுகிறார். ஆனால் தனக்கு மட்டும் மரணமில்லை என்றுரைக்கிறார்.

நாணம், கவலை, சினம் பொய் அச்சம் வேட்கை போன்ற அழுக்குகள் எல்லாம் போய் விட்டால் எஞ்சியிருக்கப்போவது என்ன? சுத்தமான மனது ஒன்றுதானே. கபீர் நேரடியாக செய்ய வேண்டிய காரியத்தை சொல்லி விட்டார். ஆனால் பாரதி செய்வதற்கான காரணங்களை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைக்கிறார்.

மனித குலத்திற்கு பல்வேறு வழிகளிலும் நோய்க்கான காரணங்களையும், தீர்வுக்கான மருந்துகளையும் இம்மகான்கள் போலவே பலரும் சொல்லி வந்திருக்கின்றனர். நமக்குத்தேவை அவர்களின் வார்த்தைகளில் அசையாத நம்பிக்கை.

இதை எழுத ஆரம்பித்த நோக்கம் செப்டம்பர் 11, பாரதியின் நினைவு நாளில் அவருக்கு அஞ்சலியாக ஒரு பதிவு இருக்கட்டுமே என்பதுதான். மேலும் பல ஒற்றுமைகளை அவ்வப்போது காண்போம்.

7 comments:

 1. ரொம்பவே அருமையான, ஆழமான, அர்த்தம் பொதிந்த ஒப்பு நோக்கல்.

  ReplyDelete
 2. miga arumaiyaana pathivu...paaratukkal.

  ReplyDelete
 3. நன்றி கணேஷ்

  நன்றி கீதா மேடம், அவரது நினைவு நாளில் 'மரணம் தனக்கில்லை' என்ற அவர் வரிகளை நினைவு கூர்வது சிறப்பாக இருக்கும் என்று தோன்றியது.அவர் கவிதைகளில் இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

  ReplyDelete
 4. //கபீர் உணர்ச்சியைத் தூண்டும் விதமாக அமைக்கவில்லை ஆனால் சிந்திக்கும் வகையில் கருத்தை முன் வைக்கிறார்//
  முற்றிலும் உண்மை. அதோடு கபீரின் பாடல்கள் அனைத்தும் பக்தி மற்றும் சூ:பிஸம் மார்க்கம் பற்றியே இருக்கும். மேலும் கபீர் அவர்கள் எப்போதும் குரு பக்தியே சிறந்த்தது என்று கூறுகிறார். ஆனால் பாரதியார் அந்த மாதிரி குரு பக்தி பற்றி எங்கும் கூறியதாக நான் அறியவில்லை. அவருக்கு ஒரு சிறந்த குரு அமையாததும் காரணமோ? அதற்கு பதிலாக அவர் தன்னுள் ஆழ்ந்த தன்ன்ம்பிக்கை கொண்டுடிருந்தார் என்று நினைக்கின்றேன்.

  "Guru Govind dovu khade kake lagu paay?
  Balihari guru aapne Govind diyo bataye."

  இந்த பாடல் குரு, கடவுள் இருவரும் முன்னே நின்றால் இருவரில் ,யாருக்கு தனது வணக்க்ததை தெரிவிப்பது என்று தயங்குகிறார். ஆனால் தான் தனது குருவுக்கே மிகவும் கடமை பட்டுருப்பதாகவும் எனெனில் குருவே தனக்கு சரியான பாதையை காட்டியதாக கூறுகிறார் கபீர்.

  ReplyDelete
 5. நல்வரவு லோகநாதன்,
  உணர்ச்சிகளுக்கு அடிமைப் படாதவன் ஞானி, கவிஞனோ உணர்ச்சிகளின் கலவை. பாரதியாருக்கும் பல ஞானிகளுடன் அத்யந்த தொடர்பு இருந்தது. அதில் முக்கியமானவர் யோகி அரவிந்தர். அவர் குரு பெருமையை உணராதிருந்திருக்க முடியாது. கீழே உள்ள சுட்டியில் நீங்கள் குறிப்பிட்ட தோஹா குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

  http://kabeeran.blogspot.com/2006/12/blog-post.html

  ReplyDelete
 6. மஹாகவி பாரதியையும் ஷெல்லியையும் ஒப்பிட்டுப் படித்திருக்கிறேன். இங்கு பாரதியையும், கபீரையும் ஒப்பு
  நோக்கிய பாங்கு, அதுவும் அவரது
  நினைவு தினத்திற்கு ஒப்ப இருந்தது
  தகுந்த அஞ்சலியாக இருந்தது.

  ReplyDelete
 7. நன்றி ஜீவி
  இன்னும் பல நல்ல கருத்து ஒற்றுமைகள் உள்ளன. கட்டுரையின் நீளம் கருதி அவற்றை சற்றே பின் தள்ளி வைத்திருக்கிறேன்.

  ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி