Saturday, November 03, 2007

நீரோட்டமும் மனவோட்டமும்

பூங்காவின் ஒரு மூலையில் துப்பாக்கியால் குறி பார்த்து சுடும் பயிற்சியை ஒரு சில இளைஞர்கள் செய்து கொண்டிருந்தனர். இலக்கை விட்டுத் தள்ளியே எல்லோரது குண்டுகளும் துளைத்துக் கொண்டிருந்தன. எவ்வளவு விலகிச் சென்றதோ அதை வைத்தே ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து கொள்வதும், வேடிக்கைப் பேச்சுமாக நேரம் போய்க் கொண்டிருந்தது. 

 ஒரு சுவாமிஜி நமட்டுப் புன்னகையுடன் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர் முகத்தில் தெரிந்த ஏளனமே ஒருவனை உசுப்பேற்றியது. "நீங்களும் ஏன் முயன்று பார்க்கக் கூடாது" என்று வம்புக்கிழுத்தான்.

 வாழ்க்கையில் முன்பின் துப்பாக்கியைப் பிடித்திராத சுவாமிஜி சிரித்துக்கொண்டே தனக்கும் அந்த வேடிக்கை சம்மதமே என்பது போல் கையில் துப்பாக்கியை வாங்கிக் கொண்டார். 

 ஒன்று...இரண்டு... மூன்று. 

 குறிதவறாத குண்டுகள் அவருடைய கரங்களிலிருந்து இயக்கப்பட்ட அதே துப்பாக்கியிலிருந்து. வாயடைத்து நின்றனர் இளைஞர்கள். "நீங்கள் எங்கே பயிற்சி பெற்றீர்கள்?" "உங்களுடைய தேவை மனப் பயிற்சி. கைப் பயிற்சி அல்ல. மனதை ஒருமுக படுத்துங்கள். பின்னர் எல்லாம் ஒழுங்கு படும்"என்று சொல்லி விடை பெற்றார் சுவாமிஜி. 

 விவேகானந்தரின் அமெரிக்க விஜயத்தின் போது நடைப்பெற்ற இந்த சம்பவம் வெற்றிக்கு மனஒருமைப்பாடு எவ்வளவு அவசியம் என்பதை எடுத்துக்காட்டுகிறது. சரியான முறையில் மனப்பயிற்சி இல்லாவிட்டால் அது கட்டுபாடற்ற நீர் ஓட்டம் போல் பயனற்றதாகி விடும் என்கிறார் கபீர்தாஸரும்.

  पानी केरा बुदबुदा, अस मानस की जात ।
देखत ही छिप जायेगा, ज्यों सारा परभात ॥ 

  பானீ கேரா புத்புதா, அஸ் மானஸ் கீ ஜாத் 
தேகத் ஹீ சிப் ஜாயேகா ஜ்யோம் ஸாரா பர்பாத் 

நில்லாது நீரில் குமிழியும், நில்லாது மனதின் இச்சையுமே
நில்லாது, வைகறைப் புலர்விலே, தாரைகள் மின்மினி ஒளியுமே 
 
மாற்று : 
 நில்லாத நீரும் விரயமே, நில்லாத மனமும் வீழ்வதே
நில்லாது, வைகறைப் புலர்விலே, தாரைகள் மின்மினி ஒளியுமே 

  (வீழ்தல் - வீணாகக் கழித்தல். தாழ்வுறுதல், தாரை -நட்சத்திரம், ஒளியுமே -ஒளிர்தல் மற்றும் ஒளிதல் என்ற இரு பொருள்களிலும் கொள்ளலாம்) 

[ இரு வேறு  விளக்கங்களை அனுசரித்து 'மாற்று' தரப்பட்டுள்ளது ]

  ஓடும் நீரை அணையைக் கட்டி தேக்கினால் மின் உற்பத்திக்கும், உணவு உற்பத்திக்கும் முறையாகப் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதை கவனிக்காமல் விட்டுவிட்டால் நிலத்தில் சிதறி இங்குமங்காய் பாய்ந்து குறிப்பிட்ட எந்த பயனும் அடையமுடியாதபடி விரயமாகிவிடும். 

 அது போலவே மன ஓட்டத்தையும் கட்டுப்படுத்தாதவன் ஆற்றலை இழக்கிறான். எவ்வளவு வேகமாக இந்த விரயம் நிகழ்கிறது என்று கேட்டால் கதிரவன் தோன்றியதும் நட்சத்திரங்களின் ஒளி மறைந்துவிடும் வேகத்தில் நடக்கிறதாம் ! - இது ஹிந்தி மூலத்தில் கொடுக்கப்பட்டுள்ள விளக்கம்.

 சூரியனையும் நட்சத்திரங்களைக் கொண்டு வெறும் ஆற்றல் வீணாவதைப் பற்றி மட்டுமா கபீர் சொல்லுவார்? அவ்வளவு பொருத்தமாக இல்லை என்று தோன்றியது. இதற்கு மேலும் ஆழ்ந்த உள்நோக்கம் இருக்கும் எனவும் தோன்றியது. 

அந்நோக்கத்தைப் பற்றி பேசும் முன் இரு மகான்களின் வாழ்க்கையில் நடந்த நிகழ்சிகளைப் பார்ப்போம். 

       இரமணர் அண்ணாமலையாரைத் தேடிச் சென்றது அவருடைய பதினைந்தாவது வயதில். ஞான அனுபூதிக்கு முன்னும் பின்னும் அவர் திருவண்ணாமலையை விட்டு வெளியே சென்றதில்லை. வேறெந்த கல்வியும் யாரையும் தேடிச் சென்று பெற்றதில்லை. ஆனால் தமிழறிஞர்களும் வியக்கும் வண்ணம் உபதேச சாரம் என்ற நூலை அடியவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இயற்றினார். முப்பது பாக்கள் கொண்ட அத்வைத சாரமாக விளங்கும் அதை பின்னர் அவரே வடமொழியிலும் அதன் பின்னர் தெலுங்கிலும் படைத்தார். உயர்நிலைப் பள்ளிக்கூட மாணவனாய் வெளியே வந்தவருக்கு மூன்று மொழிகளில் உயரிய வேதாந்தத்தை செய்யுள் செய்யும் புலமை எங்கிருந்து வந்தது? 

    ஷிரடி ஸாயியின் கால்களைப் பிடித்து விட்டுக்கொண்டே நானாஸாஹேப் சாந்தோர்கர் கீதையின் சுலோகங்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தார். ஸாயிக்கு வடமொழி தெரியாது என்ற உண்மையும் தனக்கு வேதாந்தத்தில் உள்ள தேர்ச்சியையும் எண்ணி அவர் கர்வமடைந்திருந்தார்.
  பாபா : நானா என்ன முணுமுணுத்துக் கொண்டிருக்கிறாய்
நானா : கீதையின் ஒரு சுலோகம். 
பாபா : என்ன சுலோகம் . பலமாக கூறு

நானா நாலாவது அத்தியாயத்திலிருந்து 34 ஆவது சுலோகத்தை கூறினார்.

     அதன் பின்னர் அதன் பொருள் பற்றிய பாபாவின் பல நுணுக்கமான கேள்விகளுக்கு நானா விடைதெரியாமல் தவித்தார். பாபா நானாவுக்கு அதன் ஒவ்வொரு வார்த்தைக்கான விளக்கவுரையும் வியாசரின் (வியாசரால் சொல்லப்பட்டது தானே மஹாபாரதம்) கண்ணோட்டத்தையும் விவரமாகச் சொல்லச் சொல்ல நானாவுக்கு தன்னுடைய அறிவு எவ்வளவு குறைவானது என்று புரிந்தது. 

 பெரிய மனிதர் ஒருவர் வீட்டில் எடுபிடி வேலை செய்து வளர்ந்த சாயி சொல்லிக்கொள்ளும் வண்ணம் எந்த படிப்பும் பயின்றவர் இல்லை. ஆனால் ஒரு பெரிய பண்டிதருக்கே கீதைக்கு பொருள் சொல்லும் வல்லமை அவருக்கு எங்கிருந்து வந்தது ? 

 இந்த இரு நிகழ்சிகளிலும் புலப்படுவது ஒன்றுதான். பூரண ஞானமடைந்தவனுக்கு புறத்தாக ஒன்றும் கிடையாது. அவர்கள் மனதில் ஒன்றை நினத்தவுடனே (சங்கல்பித்த உடனேயே) அதற்கான ஆற்றல் அவர்களின் உள்ளிருந்து பெருகுகிறது. 

   இதையே கபீர், கதிரவன் (ஞான) உதயத்திற்கு ஒப்பிடுகிறார். அந்த ஞானத்திற்கு முன்னிலையில் மனிதர்களாகிய நம்முடைய தனிப்பட்ட திறமைகளும், ஆற்றல்களும் சாதனைகளும் பெருமைகளும் எல்லாம் மின்மினிகளின் ஒளிர்தலை போன்றதே.
 இவையெதுவுமே ஞானிகளுக்கு பெரிய விஷயமில்லை. ஏனெனில் அவர்கள், உலகின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் காரண காரியம் இருப்பதையும் ஒரு மிகப் பெரிய நியதியின்படி அது நடந்து வருவதையும் முற்றிலுமாக அறிந்தவர்கள் ஆவார்கள். ஆகையால் உலகாதாய வாழ்க்கையில் அவர்களுக்கு எவ்வித நாட்டமும் இருப்பதில்லை. 

    கபீரின் மேற்கண்ட ஈரடியில் அத்தகைய ஒரு ஞானத்தை பெறுவதற்கான மன ஆற்றலை வளர்த்து கொள்வதே வாழ்க்கையின் நோக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக முதல் அடியில் வீணாகும் ஆற்றலைப் பற்றியும் இரண்டாம் அடியில் அடைய வேண்டிய உண்மையான ஆற்றல் பற்றியும் கூறியிருக்கிறார் எனக் கொள்வோமானால் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

8 comments:

  1. அருமையான எடுத்துக்காட்டுகளைச் சொல்லியிருக்கிறீர்கள் .இரமணரின் எடுத்துக்காட்டும் சாய்பாபாவின் எடுத்துக்காட்டும் 'எதை அறிந்த பின் வேறெதுவும் அறிய வேண்டிய தேவை இல்லையோ எதை அறியாத போது வேறெதுவும் அறிந்திருந்தும் பயனில்லையோ' என்று வேதம் சொல்லும் ஒரு பொருளுக்கு விளக்கங்களாக அமைந்திருக்கின்றன.

    ReplyDelete
  2. கபீரின் கருத்துக்களை சுருக்கித்தரும் அன்பரே நீர் நீடூழி வாழ்க.
    ஸுனோ பாயி என்று அவர் சொன்னதைத் தரும் சகோதரனே அருமையாக இருக்கு பதிவு.

    ReplyDelete
  3. நன்றி குமரன். ஊரில் இல்லாததால் உடனடி பதிலுரை தர இயலவில்லை. இனிமேல் தான் பிற பதிவுகளை படிக்க ஆரம்பிக்க வேண்டும். :))

    ReplyDelete
  4. தி.ரா.ச அண்ணாவின் ஆசிகளுக்கு என்றென்றென்றும் கடமைப் பட்டுள்ளேன். தொடர்ந்து கருத்து சொல்லுங்கள்.

    ReplyDelete
  5. மன ஒட்டத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதை அருமையாகச் சொல்லி இருக்கிறீர்கள். கபீர் தாஸ், ரமண மகரிஷி, சாய்பாபா ஆகியவர்களின் துணையுடன்.

    பாராட்டுகள்.

    ReplyDelete
  6. அன்பின் சீனா, சொன்னதும் சொல்வதும் கபீர்தான். நான் இல்லை. உங்கள் தஞ்சை பற்றிய பதிவை படிக்க காத்திருக்கிறேன். குறைந்த காலமே வசிப்பினும் என்னை கவர்ந்த ஊர்களில் தஞ்சையும் ஒன்று.

    ReplyDelete
  7. "கபீரின் மேற்கண்ட ஈரடியில் அத்தகைய ஒரு ஞானத்தை பெறுவதற்கான மன ஆற்றலை வளர்த்து கொள்வதே வாழ்க்கையின் நோக்கமாக இருக்க வேண்டும் என்பதற்காக முதல் அடியில் வீணாகும் ஆற்றலைப் பற்றியும் இரண்டாம் அடியில் அடைய வேண்டிய உண்மையான ஆற்றல் பற்றியும் கூறியிருக்கிறார் எனக் கொள்வோமானால் பொருத்தமாக இருக்கும் என்று தோன்றுகிறது."

    ஹிந்தி படிக்கும்போது நெட்டுருப் போட்டுப் படிச்ச அர்த்தம் எல்லாம் வீண் என்று இப்போது நன்றாய்ப் புரிகிறது ஐயா, மிக்க நன்றி, தங்கள் அற்புதமான விளக்கங்களுக்கு.

    ReplyDelete
  8. நன்றி கீதா மேடம். எதுவுமே வீண் என்பது இல்லையாம்.:) அன்று நெட்டுரு போட்டு படித்ததனாலே வந்த ஆர்வம்தான் இன்று மீண்டும் உங்களைப் படிக்கத் தூண்டுகிறது அல்லவோ ! :))

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி