ஞான ஸ்நானத்திற்குப் பின்பு ஏசு பிரான் பரிசுத்த ஆவியால் யாருமற்ற ஒரு பிரதேசத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அடுத்த நாற்பது நாட்கள் உணவும் நீருமின்றி இறைவனை இடைவிடாது தியானம் செய்து நோன்பு காத்தார். அப்போழுது அவரால் இறைவனின் சாந்நித்தியத்தை முழுவதுமாக உணர முடிந்தது. அவரின் ஆத்ம சுத்தி்யை உலகிற்கு எடுத்துக்காட்டும் வண்ணம் ஒரு சோதனை நடத்தப்பட்டது.
உடல் தளர்ந்து போயிருந்த ஏசுபிரானை சாத்தான் அணுகியது. பசியுற்றிருப்பவனுக்கு முதல் தேவை உணவு தானே. "நீ கடவுளின் குழந்தை என்பது உண்மையானால் இதோ இங்கிருக்கும் கற்களை ரொட்டித் துண்டுகளாக மாற்று" என்றது சாத்தான். அவருக்கு அப்படி மாற்றும் சக்தி இருந்தது என்பதையும் அது அறிந்திருந்தது.
யோக மார்க்கத்திலே சித்தி பெற்றவன் அவைகளை தன் சுயநலத்திற்கு பயன்படுத்தும் போது நிலைதவறி சக்தியை இழப்பான் என்பது தொன்றுதொட்டு நம் ரிஷி முனிகள் சொல்வதை அப்படியே பரிசோதிப்பது போல் இருக்கிறது இந்நிகழ்சி.
அத்தகைய ஒரு தூண்டுதலுக்கு ஆளாகாமல் "ரொட்டி ஒன்றினால் மட்டுமே மனிதன் உயிர்வாழ்வதில்லை. கடவுளின் சித்தப்படிதான் (every word of God) உயிர் வாழ்கிறான்" என்று பதில் கூறினார். அதாவது தனக்குள்ள சித்தி ஆற்றலை தனக்காக பயன்படுத்திக்கொள்ள மறுத்துவிட்டார்.
இதிலிருந்து தன்னை முழுவதுமாக கடவுளிடம் ஒப்படைத்துக் கொண்ட சரணாகதித் தன்மை தெரிகிறது.
அடுத்து அவரை மிக உயரத்திலிருக்கும் ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று "சாஸ்திரங்களில் கூறியிருப்பதை நீ அறிவாய். தன் தேவதைகளை அனுப்பி காக்க வல்லவன் இறைவன். என்வே நீ கடவுளின் குழந்தை என்பதானால் தேவதைகள் உன்னைக் காப்பாற்றும். இங்கிருந்து கீழே குதி" என்று சாத்தான் உரைத்தது. (satan quoting scriptures ).
" சாஸ்திரங்களிலே உன் கடவுளை நீ பரிசோதிக்கக் கூடாது என்பதையும் கூட சொல்லியிருக்கிறது" என்று பதிலுரைத்தார் சாஸ்திரத்தை முற்றும் அறிந்த ஏசு. இதிலிருந்து அவருக்கு பூரண ஞானம் இருந்தது என்பது உறுதி செய்யப்பட்டது.
கடைசி முயற்சியாக ஒரு மலை சிகரத்திற்கு அழைத்து சென்று "இதோ பார். கீழே கண்ணுக்கெட்டும் தொலைவில் இருக்கும் எல்லா செல்வங்களுக்கும் ராஜ்ஜியத்திற்கும் நீதான் அதிபதி. ஒருமுறை என்காலில் விழுந்து என்னை தலைவனாக ஏற்றுக்கொள்" என்று ஆசை காட்டியது சாத்தான்.
(But Jesus loved His Father. He loved the people of this world, then and now. If Jesus fell down and worshipped Satan He would be turning His back on God.... Now was the time to preach the gospel and give His life in sacrifice before returning to God the Father.
Matt. 24:3, 36; Rev. 11:15; Rev. 20: 2-6.)
"இங்கிருந்து தொலைந்து போ சைத்தானே. கடவுள் மட்டுமே என் தலைவன். அவனது பணிவிடையே என் கடமை" என்று விரட்டிவிட்டார். வேறு வழியில்லாமல் சாத்தானும் அவரை விட்டு விலகியது.
இந்நிகழ்சியிலிருந்து அவருக்கு உலக சுக போகங்களில் பற்று சற்றேனும் இருக்கவில்லை என்பது புலனாகிறது. கடவுளின் மகத்துவத்தை உணர்ந்தவர்க்கு அதன் பின் உலகத்தின் பிற விஷயங்களில் உள்ள நாட்டம் போய்விடும். தன் இஷ்ட தெய்வமான திருமாலைப் போற்றிப் பாடும் தொண்டரடி பொடியாழ்வாரும்.
.......இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகம் ஆளும்
அச்சுவை பெறினும் வேண்டேன் அரங்கமா நகருளானே
என்று பாடுகிறார்.
இதையே மாற்றி சொல்வதானால் அவன் படைப்பில் உள்ள பிறவிஷயங்களில்- இந்திர லோகமே ஆயினும்- மனம் நாட்டம் கொள்ளும் வரை இறைவன்பால் நாம் சொல்லிக்கொள்ளும் பக்தி பூரணமானதல்ல. ஒருவிதத்தில் அவை ஒரு நிபந்தனைக்குட்பட்டது (conditional) என்றே சொல்லலாம். பூரண சரணாகதி வரும் பொழுது மட்டுமே அஞ்ஞானம் ஒழிந்து ஞானம் பிறக்கிறது. இதையே mutually exclusive என்கிறோம். இருளும் ஒளியும் போல.
இந்த உண்மையை ஒரு எறும்பின் செயலை வைத்துச் சொல்லுகிறார் கபீர்.
चिउंटी चावल ले चली, बिच में मिल गई दाल ।
कहैं कबीर दो न मिलै, इकले दूजी डाल ॥
சிவுன்டி சாவல் லே சலி, பிச் மே மில் கயி தால்
கஹை கபீர் தோ ந மிலை, இக்லே தூஜி டால்
தினைதனை ஈர்த்த உழுவம், வழியில் கண்டது முரியும்
உரைப்பன் ஈங்கு கபீரும், இரண்டில் ஒன்றே முடியும்
( உழுவம் =எறும்பு, ஈர்த்தல்= இழுத்தல், முரி =அரிசி நொய் )
அரிசி தூக்கிச் செல்லும் எறும்பு வழியில் காணும் பருப்புக்கு ஆசைப்பட்டால் இரண்டும் இல்லாமல் போகும் அபாயம் உண்டு( தோ ந மிலை) என்று கபீர் எச்சரிக்கிறார். அதாவது அந்த எறும்பு மாற்றி மாற்றி சிறிது சிறிதாக இரண்டையும் இழுத்துச் செல்ல பார்க்குமாம். அப்படி செய்யும் போது் இரண்டிற்கும் இடைப்பட்ட நிலையில் வந்து கொண்டிருக்கும் பொழுது வேறு எறும்புகள் இரண்டையும் தூக்கிச் சென்றுவிடுமாம்.
எறும்பின் சக்திக்கு தினை அல்லது அரிசி இரண்டில் ஒன்றை மட்டுமே எடுத்து செல்ல முடியும். அதுபோல நாம் பிறவி எடுத்ததன் பலன் இறைவன் பால் திரும்ப வேண்டுமானால் இயற்கையின் ஈர்ப்புகளுக்கு மனதில் இடம் கொடுக்கக்கூடாது என்பதே மகான்களின் அறிவுரை. அதனால் தான்
"ஆசைக்கோர் அளவில்லை; அகிலமெல்லாம் கட்டி ஆளினும் அலைகடல் மீதே ஆணை செலவே நினைவர் ; அளகேசன் நிகராக அம்பொன் மிக வைத்த பேரும் நேசித்து ரசவாத வித்தைக்கு அலைந்திடுவர் ; நெடு நாள் இருந்த பேரும் நிலையாகவே இன்னுங் காயகற்பம் தேடி நெஞ்சு புண்ணாவர்; ............ ஒன்று விட்டு ஒன்று பற்றி பாசக் கடற்குளே வீழாமல் மனதற்ற பரிசுத்த நிலை அருள்வாய்"
என்று பரிபூரணானந்தத்தில் தாயுமானவர் வேண்டுகிறார்
பரலோகம் வேண்டின் ஏசு பிரான் போல இகலோகத்தை கைவிட வேண்டும்.
அனைவருக்கும் கிருஸ்மஸ் நல்வாழ்த்துகள்.
மிக்க நன்று கபீரன்பன்.
ReplyDeleteமேலும், வேதாத்ரி மகரிஷி அவர்கள், 'ஆசை சீரமைத்தல்' என்ற சொல்லை பயன் படுத்துவர் - அதாவது ஆசையை ஆராய்ந்து முறைப்படுத்த வேண்டும் என்று. இந்த அரிசிக்கான ஆசை மட்டுமே இப்போது சரியான ஆசை என்ற் அந்த எறும்பு நினைப்பதாக.
அக்னி சிறகில் மேலும்.
நன்றி ஜீவா,
ReplyDeleteஆசையை சீரமைக்கவும் ஒரு குரு அவசியம் வேண்டும். குறிப்பிட்டிருந்த பதிவையும் படித்து மகிழ்ந்தேன். இணைப்பை தந்தமைக்கு நன்றி.
//கடவுளின் மகத்துவத்தை உணர்ந்தவர்க்கு அதன் பின் உலகத்தின் பிற விஷயங்களில் உள்ள நாட்டம் போய்விடும//்
ReplyDelete//அதுபோல நாம் பிறவி எடுத்ததன் பலன் இறைவன் பால் திரும்ப வேண்டுமானால் இயற்கையின் ஈர்ப்புகளுக்கு மனதில் இடம் கொடுக்கக்கூடாது என்பதே மகான்களின் அறிவுரை//
கபீரின் பொன்மொழிகளைப் பற்றி இன்றைய வலையுலகில் ஓர் வலைப்பதிவா?
கானகத்தில் கண்ட கதிரொளி போல்
வரண்ட பாலைவனத்தில் ஓர் வற்றாத நீரோட்டம் போல்
நான் பிரமித்துப் போனேன். இதுவரை இங்கு வராது சென்றேனே !
கபீரும் வள்ளூவரும் என்று ஒரு பொருளில் ஒரு தீஸிஸ் எழுதத் துவங்கி பல்வேறு காரணங்களால் நடுவிலேயே நின்று போன எனது 1961 வருட முயற்சியும் ஞாபகம் வந்தது.
நிற்க. அரிசி பருப்பு உதாரணம் மட்டுமல்ல. கபீர் தெள்ளத்தெளிவாக ஆத்ம விசாரத்தை மேற்கொண்டவன்
மற்ற சிந்தனைகளை விட்டொழிக்கவேண்டும் . அப்பொழுதுதான் இதயத்தில் ஆண்டவனின் தர்சனம் சாத்தியம்
என்கிறார். For Kabir , mundane and metaphysics were mutually exclusive.
ऎक् म्यान् मॆ खड्ग देखा सुना न कान्
பிறிதொரு இடத்தில் கபீர் திட்டவட்டமாக சொல்லுதல் நம் கவனத்துக்குரியதாம்.
ஒருவன் மனதிலே இறைவனை நிறுத்த இயலும். அல்லது இகலோக ஆசைகளைகளினால் மனதை நிரப்ப இயலும். இரண்டுமே ஒரே நேரத்தில் இயலாது. கபீர் சொல்வார்:
ஏக் ம்யான் மேம் தோ கட்க தேகா ஸுனா ந கான்.
போருக்குச் செல்லும் சிப்பாயின் இடுப்பில் கட்டப்பட்டிருக்கும் தோல் pouch
அதில் ஒரு வாள் தான் இருக்கமுடியும். இரண்டு வாட்களை அதில் எப்படி பொருத்த இயலும்?
என்னைப் பொறுத்த வரையில் அத்வைத சித்தாந்தங்களின் கடைசி வரிகளை பாமரனுக்கும் புரியும்படி சொன்னவர் கபீர்.
Thera sayeen thuj mein, jho phuhupan mein bhas
kasthuri kaa mirg jyon phir phir doondai ghas.
तेरा साई तुझ्मे जो पुहुपन् मे भास
कस्तूरि मिर्ग् का ज्यो फिर् फिर् दून्दै घास.
உனது கடவுள் உன்னிடத்திலேயே ஒரு குகைவாசி போல் உள்ளான்.
எவ்வாறு கஸ்தூரி மான் தன்னிடமே கஸ்தூரி வாசனை இருக்கிறது என்பது தெரியாமல்,
அருகாமையில் உள்ள புற்களையெல்லாம் தேடுகிறதோ அது போல , நீயும் உன்னை விடுத்து
அடுத்து அப்பால் இருப்பவைகளில் ஆண்டவனைத் தேடுகிறாய்.
ஏதோ பொங்கிவந்த உணர்ச்சியின் காரணமாய் அதிகம் எழுதிவிட்டேன்.
தொடர்ந்து எழுதுக. ஆன்மீக உலகில் ஒளி தருக
ஆசிகள்.
சிவ.சூரிய நாராயணன்.
சென்னை.
நேரம் கிடைப்பின் வருக:
http://vazhvuneri.blogspot.com
http://pureaanmeekam.blogspot.com
///...அத்வைத சித்தாந்தங்களின் கடைசி வரிகளை பாமரனுக்கும் புரியும்படி சொன்னவர் கபீர் ////
ReplyDeleteமிகச் சரியாக சொல்லியிருக்கிறீர்கள் சூரி அவர்களே. 1961 லேயே கபீர் பற்றி ஆராய்ச்சி செய்த ஒரு பெரியவரின் ஆசிகள் கபீர்தாஸரே செய்தது போல் இருக்கிறது. தொடர்ந்து படித்து வழிகாட்டும் படி கேட்டுக் கொள்கிறேன்.