Thursday, December 13, 2007

இளைத்தவர் சீற்றம் இடும்பைத் தரும்

நானூறு ஆண்டுகளுக்கு முந்தய கதை.

விஜய நகர சாம்ராஜ்யத்தின் வலிவு குன்ற ஆரம்பித்த காலம். அவர்களுக்கு கப்பம் கட்டிய அரசர்களெல்லாம் சற்றே சுயேச்சையாக செயல்பட ஆரம்பித்தனர். அவற்றுள் ஒன்று மைசூர் சமஸ்தானம். மன்னன் ராஜ ஒடையார் அருகிலிருந்த ஸ்ரீரங்கப்பட்டணத்தின் மீது படையெடுத்து அங்கிருந்த விஜயநகரத்து பிரதிநிதியான ஸ்ரீரங்கராயனை விரட்டிவிட்டு அதைக் கைப்பற்றிக் கொண்டான். அவனும் தன் சுற்றத்துடன் வடக்கே முப்பது மைல் தூரத்திலுள்ள காவிரிக் கரையின் அருகே மாலிங்கி, தலக்காடு என்று பிரபலமாயிருந்த பகுதிக்கு குடி பெயர்ந்தான். சில நாட்களிலே இறந்தும் போனான்.

அவனது இரண்டாவது மனைவி அலமேலு தன்னுடன், தேவி ரங்கநாயகிக்கு சாற்றி வந்த விலையுயர்ந்த நகைகளையும் எடுத்துச் சென்று விட்டாள். அவை விஜயநகர சாம்ராஜ்யத்தின் சொத்து. அவர்கள் ஸ்ரீரங்கப்பட்டணத்தில் ஆட்சி செய்த வரை ஒவ்வொரு செவ்வாயும் வெள்ளியும் அவைகளை சாற்றி ரங்கநாயகிக்கு மிகவும் விமரிசையாக பூஜை செய்து வந்தனர். பிற நேரங்களில் அவை அலமேலம்மாவிடமே இருந்து வந்தது.

கோவில் தரப்பிலிருந்து இந்த விஷயம் ஒடையார் மன்னனுக்கு தெரிவிக்கப்பட்டது. தெரிவித்தவர்கள் அதை எப்படி செய்தனரோ தெரியாது. மன்னன் அவை கோவிலுக்கு சொந்தமானது என்று நினைத்துவிட்டான் போலும். அவைகளை திரும்பப் பெறுவதற்காக பலமுறை முயற்சி செய்தும் பயனளிக்கவில்லை. அலமேலம்மா ஒரே ஒரு பெரிய முத்தினால் ஆன மூக்குத்தியை மட்டும் கொடுத்து அனுப்பினாள். கடைசியாக தன் படையையே அனுப்பி அவற்றை பலாத்காரமாக கொண்டுவர ஆணையிட்டான். அலமேலு நிராதாரவாக நின்றாள். வெறும் தன்மானப் பிரச்சனை மட்டுமல்ல தன்னை சேர்ந்த சாம்ராஜ்யத்தின் மானமும் அதில் அடங்கியிருந்தது என்று நினைத்தாளோ என்னவோ.

ஒரு சமஸ்தானத்தின் அதிகார பலத்தின் முன்னே அவள் ஒரு துரும்பு. செய்வதறியாது வயிறெரிந்து சாபமிட்டாள்.

தலக்காடு மணற்காடு ஆகட்டும்; மாலங்கி மடுவாய் போகட்டும் ; மைசூர் அரசு வம்சமில்லாமல் போகட்டும்.

காவிரி கரையில் செழிப்பான விளைநிலமாக திகழ வேண்டிய இடத்தில் பத்து சதுர மைல்கள் விஸ்தீரணம் உள்ள ஒரு மணற்காடு உருவானதற்கு புவியியல் காரணங்களை விஞ்ஞானிகள் இன்றும் ஆராய்வதாகக் கேள்வி.
இந்த மணற்காட்டின் நடுவே தான் பஞ்ச லிங்க ஆராதனை பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை விசேஷமாக நடைபெறுகின்றது. அங்குள்ள அதிக காற்றோட்டத்தால் மணற் குவியில் விரைவிலேயே அந்த கோவில்களை மூடிவிடுகிறது. ஆகையால் தினசரி பூஜைகளை கைவிட்டு பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை மூடிக்கொண்டிருக்கும் மணற் குவியலை விலக்கி விசேஷ ஆராதனைகள் நடத்தி வருகின்றனர்.

மாலங்கி மடுவாகட்டும் என்று சாபத்தின் விளைவாக காவிரி ஆறும் தன்போக்கை மாற்றிக் கொண்டு மாலங்கியை நீரில் மூழ்கடித்து மிக ஆழமான சுழலாக மாறியது என்பர். அந்த சுழலில் குதித்து அலமேலம்மா தன்னை மாய்த்துக்கொண்டாள் என்பது செய்தி. அதற்கு காரணம் எதிரிகள் கையில் தன் இறந்த உடல் கூட கிடைக்கக் கூடாது என்பதுதான்.

அந்த இரண்டு சாபங்களையும் நம்ப மறுக்கின்றவர்களும் மறுக்க முடியாத ஒரு சாபம் அரசு வம்சமில்லாமல் போனது.

ராஜ ஒடையாரின் மூன்று மகன்களும் சிறு வயதிலேயே மரணமுற்றனர். அதன்பின் அவனுக்கு புத்திர பேறு இருக்கவில்லை. கடந்த நானூறு ஆண்டுகளாக மைசூரில் அரசனாக அரியணையில் வீற்றிருப்பவருக்கு ஆண் சந்ததியினர் கிடையாது. ஒவ்வொரு முறையும் தத்து எடுத்துக் கொண்டே அரசனை முடிவு செய்திருக்கின்றனர். ( தத்து வந்தவருக்கு மகன் இருப்பினும் அவன் அரியணை ஏறியபின் அவருக்கு சந்தானமில்லாமல் போய்விடும்). சிறிது காலம் ஹைதர், திப்புவின் கை ஓங்கி ஆட்சி நிலவியதும் இந்த குழப்பத்தினால்தான். ஹைதரும் திப்புவும் மைசூர் அரண்மனையை கைப்பற்றவில்லை

பின்னர் ஆங்கிலேயர் ஒடையார் குடும்பத்திற்கு ஆதரவு தந்து ஆட்சியை பலப்படுத்திய பின்னரும் சாபம் தொடர்கிறது. இதைப் போக்கிக்கொள்ள இன்றைய அரச பிரதிநிதி ஸ்ரீகண்ட தத்த ராஜ ஒடையார் பல ஆராதனைகளை நடத்திவருகிறார். அவரும் புத்திர பாக்கியம் இல்லாதவர்.

(புதைபொருள் ஆராய்சி கழகம் The curse of Talakkad என்ற குறும்படம் ஒன்றை தயாரித்து வெளியிட்டுள்ளது. அதைக்காண இங்கே சுட்டவும் )

என்னே அலமேலம்மாவின் சாபம்.

திருக்குறளும் இதைத்தானே சுட்டிக்காட்டுகிறது.

பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கு இன்னா பிற்பகல் தாமே வரும்.

கபீர்தாஸர் இதையே ஒரு சின்ன உதாரணத்தின் மூலம் புரிய வைக்கிறார்.

दुरबल को न सताइये, जाकी मोटी हाय ।
मुई खाल की सांस से, सार भसम होई जाय ॥


துர்பல் கோ ந சாதாயியே, ஜாகி மோடி ஹாய்
முயீ கால் கீ ஸாஸ் ஸே, ஸார் பஸ்ம் ஹோயி ஜாய்


இளைத்தவர்க்(கு) இன்னா செய்யின், இன்னாங்கு தருமவர் சீற்றம்
உளுத்த விறகின் தணலும் கொள்ளும் அனைத்தும் பற்பம்

( இளைத்தவர் = வலிமையற்றவர், இன்னாங்கு =துன்பம்,
உளுத்தது = புழுவால் அரிக்கப்பட்டது , பற்பம் =பஸ்மம், சாம்பல்)


உளுத்துப் போன மரமானாலும் அதில் கனன்று கொண்டிருக்கும் தீயின் வலிமையை யாரும் குறைத்து மதிக்கமாட்டார்கள். "அக்கினிக் குஞ்சொன்று...... பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு" என்பது பாரதியின் வரிகள்.

வாழ்க்கையில் ஏதோ காரணமாக கஷ்ட தசையில் இருக்கும் நல்லவர்களை ஏமாற்றியோ, பலாத்காரத்தாலோ அவர்களுக்கு சொந்தமான பொருளை அபகரிப்பது அவர்களுக்கு சொல்லொணா மனவேதனைத் தரும்.

நல்லவன் ஒருவன் மனம் நொந்து கொண்டால் அதற்கு காரணமாயிருப்பவரின் குடும்பத்துக்கு கேடு வரும் என்பது தொன்றுதொட்டு இந்த மண்ணில் இருந்து வரும் நம்பிக்கை. "தர்மோ ரக்ஷதி ரக்ஷிதஹ " எவனொருவன் தர்மத்தை காக்கிறானோ அவனை தர்மமே காக்கிறது. அதர்மத்தால் அவதிபடுபவர்களின் நியாமான சீற்றம் சாபமாக மாறி அதர்மத்தில் உழல்வோருக்கு பாடம் புகட்டும் சக்தியாக மாறிவிடுகிறது.

தர்மம் என்பது நம்முள் உறையும் இறைவனின் குரல். அதை மனசாட்சி என்றும் சொல்வதுண்டு. வழிகாட்டும் விளக்காகப் பயன்படும் அது வழி தவறும் போது சுட்டெரிக்கும். அதையே வள்ளுவரும்

தன்னெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்னெஞ்சே தன்னைச் சுடும்

என்று குறிப்பிடுகிறார்.

உள்ளிருந்தும், வெளியிருந்தும் சுடுகின்ற சக்தி தர்மத்திற்கு உண்டு.


பிற்சேர்க்கை " 13-12-2007
பல இடங்களில் எழுதி வைப்பதால் சில சமயங்களில் மறந்து விடுகிறது.
உளுத்த விறகு என்ற பொருளில் எந்த வார்த்தையையும் ஹிந்தியில் கபீர் பயன்படுத்தவில்லை. பின்னர் முறையான மொழிபெயர்பு என்று நான் நினைத்து எழுதி வைத்ததை இங்கே தருகிறேன்.


சீறுமவர் சாபம் பொல்லாது, ஒறுத்தல் கூடா இளைத்தவரை
நீறுகாண் தணலும் எரிக்கும், பற்றிய எதையும் இறுதிவரை

10 comments:

 1. நல்ல பதிவு மறுமுறை படித்துவுட்டு வருகிறேன்.

  ReplyDelete
 2. நன்றி தி,ரா.ச. மறக்காமல் அந்த குறும்படத்தையும் பாருங்கள். உங்கள் மோடம் இணைப்பின் வேகத்திற்கு தக்கபடி படத்தை தேர்வு செய்து கொள்ள முடியும். நான் கொடுத்திருப்பது 300 KB என்று நினைக்கிறேன்.

  ReplyDelete
 3. குறுபடம் கண்டேன். மிக நல்லதொரு அறிவுக்களஞ்சியம். கபீரையும் வள்ளுவரை ஒப்பு நோக்கி அளித்தது அருமையிலும் அருமை.நல்ல விஷய்ங்களை சொல்லுபவரும் அரிது அப்படிச் சொன்னாலும் அதைப் படிப்பவர்களும் அரிது.

  ReplyDelete
 4. இந்தப் பதிவை ஒப்பு நோக்கும் எண்ணத்துடன் எழுதவில்லை.ஆயினும் ஒப்பி மகிழத் தக்கதே பெரியோர் அறிவுரைகள்.நன்றி தி.ரா.ச

  ReplyDelete
 5. நான் அறியாத செய்தி இது கபீரன்பரே. இன்னும் குறும்படத்தைப் பார்க்கவில்லை. நேரம் கிடைக்கும் போது பார்க்கிறேன்.

  ReplyDelete
 6. //சீறுமவர் சாபம் பொல்லாது, ஒறுத்தல் கூடா இளைத்தவரை
  நீறுகாண் தணலும் எரிக்கும், பற்றிய எதையும் இறுதிவரை//
  அருமையான பதிவும்,படமும். தேர்ந்தெடுக்கும் விஷயங்களும் அருமை.
  உங்களின் மொழிபெயர்ப்புகளும் அங்கங்கே கச்சிதமாக அழகாக அமைந்து விடுகின்றன. எனக்கு இந்தி தெரியாது. உங்களின் ஈடுபாட்டுடன் கூடிய அழகான மொழிபெயர்ப்பின் மூலமே தெளிவாக பெருமான் கபீரைத் தரிசிக்கமுடிகிறது.
  முதலாவதை விட இங்குச் சுட்டியிருக்கும் இரண்டாமவதான மொழிபெயர்ப்பு பொருத்தமானதாகத் தோன்றி, மீண்டும் மீண்டும் படிக்கத் தூண்டியது.
  முதல் தடவை படித்த பொழுது, இரண்டாவது வரியை, "நீறுகாண் தணலும் எரிக்கும், எஞ்சிய எதையும் இறுதிவரை.." என்று என் போக்கில் படித்து விட்டேன்.'முதல் எரிப்பில் எஞ்சி, பாக்கியிருக்கும் அத்தனையையும் இறுதிவரை எரித்துவிடும்' என்கிற பொருளில். திருப்பிப் திருப்பிப் படித்துப் பார்க்கும் பொழுது 'எஞ்சிய' தை விட நீங்கள் போட்டிருக்கும் 'பற்றிய' இன்னும் பொருத்தமாகப் பட்டது. உங்கள் மொழிபெயர்ப்பின் மேன்மையைக் குறிப்பிடுவதற்காக இதைக் குறிப்பிட நேரிட்டது.
  தங்கள் முயற்சிளுக்குப் பாராட்டுகள்.

  ReplyDelete
 7. கபீரன்ப, நண்ப, தங்களுடைய பாரதியும் கபீரும், கம்பனும் கபீரும், வள்ளுவனும் கபீரும் எனப் பல பதிவுகளைப் படித்து - ஆழ்ந்து படித்து - பின் மறுமொழி இட ஆசை. செய்கிறேன். இங்கு ஒரு கற்புக்கரசியின் சாபம் 400 ஆண்டுகளுக்குப் பின்னும் பலிக்கிறட்து என்றால் ...... என்ன சொல்வது.

  எளியாரை வலியார் துன்புறுத்தினால் - வலியாரைத் தெய்வம் கவனிக்கும்.

  இருப்பினும் ஒரு ஐயப்பாடு. ஓடையார் மன்னன் அறியாமல் செய்த பிழை அல்லவா அது. கோவில் நிர்வாகம் அளித்த தவறான ( அல்லது உண்மையான) செய்தியினால் அல்லவா அம் மன்னன் அச்செயலைச் செய்தான். படையெடுப்பதும் பொருட்களைக் கையகப் படுத்துவதும் மன்னர்கள் செய்யும் செயல்கள் தானே. அதற்கு இவ்வளவு பெரிய தண்டனையா ??

  தெரியவில்லை. இன்னும் ஆராய வேண்டும்.

  ReplyDelete
 8. வருக குமரன், குறும்படம் பார்க்க வேண்டிய ஒன்று. பாரபட்சமில்லாமல் சொல்லப்பட்டிருந்தாலும் ஆராய்வு என்ற விதத்தில் பார்த்தால் இன்னும் சிறப்பாக செய்திருக்க முடியுமோ என்று தோன்றியது.

  ReplyDelete
 9. அன்புள்ள ஜீவி, நீங்கள் உன்னிப்பாகப் படித்து வருவது மகிழ்சி அளிக்கிறது. வரிக்கு வரி பொருள் எழுத ஆரம்பித்தால் ஹிந்தி வகுப்பு என்று சில வாசகர்கள் நினைக்கக் கூடும்.அதனால் அதை பெரும்பாலும் தவிர்க்கிறேன்.அப்படி செய்தால் பின்னர் நான் கைக்கொண்ட சில மாற்றங்களுக்கும் விளக்கம் கூற நேரிடும். அதிலும் கருத்து வேற்றுமைகள் வரலாம். இறுதியில் கபீர் சொல்ல வந்ததை கோட்டை விட்டு தர்க்கம் தான் மிஞ்சும் என்ற கவலையால் உணர்வு பூர்வமாக கருத்தை சொல்லும் முறையை பின்பற்றி வருகிறேன்.

  ReplyDelete
 10. // இருப்பினும் ஒரு ஐயப்பாடு. ஓடையார் மன்னன் அறியாமல் செய்த பிழை அல்லவா அது. கோவில் நிர்வாகம் அளித்த தவறான ( அல்லது உண்மையான) செய்தியினால் அல்லவா அம் மன்னன் அச்செயலைச் செய்தான் //
  சீனா இந்தக் கேள்வி என் மனதிலும் எழுந்தது. இதற்கு இன்னொரு உபகதையும் உண்டு. அலமேலம்மாவின் சீற்றத்திற்கு காரணம் அவளுடைய கற்பிற்கு வந்த சோதனைதான் என்றும் அது மன்னனுக்கு களங்கம் வரக்கூடாது என்பதால் மூடப்பட்ட விஷயம் என்றும் கூறுவோர் உளர். இன்னும் சிலர் அவ்வித நோக்கம் அரசனுக்கு இருக்கவில்லை ஆனால் படையுடன் சென்றவர்களுக்கு இருந்தது என்றும் கூறுவர். சாதாரணமாக பேசித் தீர்த்துக்கொள்ளக்கூடிய ஒரு சமாசாரத்திற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? தண்டனை என்பதும் காலப்போக்கிலேதான் புரிகிறது. அந்நேரத்தில அது கையாலாகாதவனின் வயிற்றெரிச்சலில் வந்த சொற்கள்தான்.

  ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி