திருவொற்றியூர் கோவில் மண்டபத்தில் ஒரு பண்டாரம். மக்கள் அவரை நெல்லிக்கா பண்டாரம் என்றனர். பலரும் அவரை சித்த சுவாதீனம் இல்லாதவர் என்றே கருதினர். காரணம் அவரிடமிருந்த ஒரு வேடிக்கையான பழக்கம். கோவிலுக்கு வருவோர் போவோரைப் பார்த்து கழுதை போகுது கழுதை என்றோ பன்னி கூட்டம் போகுது, பன்னி... பன்னி என்றோ காக்கா... காக்கா என்றோ பலவாறாக யாவரும் கேட்கும் படி உரக்க கூவுவாராம்.
சிறுவரை சிரிக்க வைத்தது, பெரியவர்களுக்கு அதன் உட்பொருள் புரியவில்லை.
ஆனால் பைத்தியத்தின் வாயை மூடுவது எப்படி ? இப்படி இருக்கையில் ஒரு நாள் திடீரென்று 'மனுசன் வர்றான், மனுசன் வர்றான்' என்று சத்தம் போட்டாராம்.
அப்பொழுது அங்கே வந்து கொண்டிருந்தது அன்பின் உருவமெனக் கருதப்படும் இராமலிங்க சுவாமிகள்.
வாரியார் சுவாமிகள் சொல்லிய கதை இது.
வள்ளலாரையே 'மனுசன்' என்றால் பண்டாரத்தின் நிலை இன்னும் எவ்வளவு உயர்வாக இருந்திருக்க வேண்டும் !!
பண்டாரத்திற்கு ஒரு கேலிசித்திரக்காரரின் மனோபாவம் இருந்தது. ஆகையால் அவர் காட்டிய கேலிச்சித்திரம் சிரிப்பை வரவழைத்தது.
கேலி சித்திரம் வரைபவர்கள் மனிதர்களின் முகங்களை பல அடிப்படையில் பிரித்துக் கொள்வார்கள். அவற்றில் பறவை ரகம், பிராணி ரகம், பூச்சி ரகம்,கறிகாய் ரகம் என்று பலவிதம்.
அது போல் ஞானிகள் மக்களை பார்த்தவுடனே அவர்களின் உள்ளத்தை பிராணிகளின் குணத்தின் அடிப்படையில் அறிந்து கொள்வார்களாம்.
ஆனால் மனிதர்களுக்கு இது முடிவதில்லை. ஏனெனில் நேரத்திற்கு தகுந்தபடி நடந்து கொள்ளும் விசித்திரமான குணம் உடையவர்கள் மனிதர்கள். அதனால் சாதாரண மனிதர்களுக்கு அதைத் தாண்டிப் பார்க்கும் திறமை கிடையாது. அந்த போலி குணத்தைக் கண்டிக்கும் வகையில் உள்ள கபீர் தோஹா ஒன்றின் உட்பொருள் வெகுநாட்களுக்கு பிடிபடாமலே இருந்தது.
ஹிந்தி மொழி நன்கறிந்த நண்பர்களுக்கும் அதன் வரிகளுக்கான பொருளை கூற முடிந்ததே அன்றி கபீர்தாஸர் எதை அல்லது யாரைப் பற்றி குறிப்பாக உணர்த்துகிறார் என்று சொல்லத் தெரியவில்லை. முதலில் அந்த ஈரடி.
बाना पाहिरे सिंह का, चलै भेड़ की चाल ।
बोली बोले सियार की,कुत्ता खावै खाल ॥
பானா பாஹிரே சிம்ஹ் கா, சலை பேட் கீ சால்
போலீ போலே ஸியார் கீ, குத்தா காவை கால் ||
சிங்கம் போல் வேடமிட்டு,ஓநாய் போல் நடை போட்டு, நரி போல் பேசுவோர் சருமத்தை, நாய்கள் தின்றிடும். இது நேரடி பொருள்.அதாவது சமூகத்தில் பிறரை, நேரத்திற்கு தக்கபடி வேடமிட்டு ஏமாற்றுபவரை சமூகம் ஒதுக்கி வைக்கும். அவன் இறந்த பின் உடலை கூட அடக்கம் செய்ய யாரும் முன் வரமாட்டார்கள். நாய்களுக்கு உணவாகும் அவனது உடல்.
மிகவும் பொதுப்படையான ஒரு கருத்து. அழுத்தம் திருத்தமாக மனதில் பதிய வேண்டுமானல் இது யாரைக் குறித்து என்பது தெரிய வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஓடியது. பின்னர் வெகு நாட்களுக்கு இதைப் பற்றி சிந்திக்கவும் இல்லை,மொழி பெயர்க்கவும் முயலவில்லை.
ஒருநாள் தொலைக்காட்சியில் காண நேர்ந்த ஒரு திரைப்பட நகைச்சுவை துணுக்கு இந்த ஈரடிக்கு எதிர்பாராமல் விடையளித்தது. கேலிசித்திரங்கள் போலவே திரைப்படங்களில் சில நிஜங்களை மிகைப்படுத்தும் பொழுது நகைச்சுவை ஆகிறது என்பதற்கு அந்த துணுக்கு ஒரு உதாரணம். யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்ற அடிப்படையில் யூ-ட்யூப் மூலம் அதே காட்சியை உங்களுக்கும் தருகிறேன்.
அதை வலையேற்றிருக்கும் அன்பருக்கு நன்றி.
மேலே உள்ளப் படம் ஒரு காவல் அதிகாரியை பற்றிய துணுக்கு. அதில் நிமிடத்திற்கு நிமிடம் அவரது குணம் மாறுகிறது.
முதலில் ஓநாயின் குணத்தை காண்கிறோம்.எப்பொழுதும் பசித்திருக்குமாம் ஓநாய்.அது போல ஒரு பொருட்பசி. (1:10 min)
அடுத்து சிங்கத்தை போல(அதிகாரத்தை காட்டும் விதமாக)ஏமாற்றியவர்கள் இருப்பிடத்தை அடைந்து பேசுவது. (2:22 min)
சில நொடிகளிலே தான் சிக்கிக் கொண்டோம் என்பதை புரிந்து கொண்டதும் அவர்கள் காலில் விழாக்குறையாக குழைவது நரியின் குணத்தை சித்தரிக்கிறது.(3:10-4:20 min)
தனியார் நிறுவனங்களில் அதிகாரியாக இருந்து அரசாங்க அதிகாரிகளின் உருட்டல், மிரட்டல்,பணப்பசி இவற்றைக் கண்டு பல முறை மனம் வெதும்பியிருக்கிறேன்.
அந்த அனுபவம் இருந்தும் மேலே கண்ட தோஹாவிற்கு பொருள் புரியாமல் இருந்தவனுக்கு இந்த படத்தின் மிகைப்படுத்தப்பட்ட நிஜம் ஒரு மின்னல் போல கபீர் சொன்ன உண்மையை புரிய வைத்தது. நகைச்சுவை எழுத்தார்களுக்குள்ளும் ஞானிகள் ஒளிந்திருப்பரோ ? :))
இப்போது மொழிபெயர்ப்பை பார்ப்போம் :
கோளரி கோலம் பூணுவர்,கோநாய் போலும் திரிவர்
ஊளன் போலும் மொழிவர்,கூரன் தின்னும் சருமமிவர்
(கோளரி= சிங்கம், கோநாய் =ஓநாய், ஊளன்=நரி, கூரன்= நாய்
'கூரன் தின்னும் இவர் சருமம்' என்பது இயைபு மோனைக்காக ' சருமம் இவர்' அன்று மாறி வந்தது)
சிங்கம் என்ற வார்த்தை வந்துள்ளதால் இது அரசாங்கத்தின் அதிகாரம் பெற்றவர்களை குறிக்கிறது என்று அனுமானிக்கலாம். எல்லாக் காலங்களிலும் பெரும்பாலான அரசாங்க அதிகாரிகளின் போக்கு மக்களுக்கு சங்கடம் விளைவிப்பதாகவே இருந்து வந்திருக்கிறது என்பதையும் அவர்களைக் கண்டால் எவ்வளவு வெறுப்பு இருந்திருக்கிறது என்பதையும் இந்த ஈரடி மூலம் அறிகிறோம்.
http://blogintamil.blogspot.com/2008/04/blog-post_22.html
ReplyDeleteகபீர் காலத்திலும் அரசு அதிகாரிகள் இப்படித் தானோ? :(((((( நல்ல ஆராய்ச்சி தான். மேலே கொடுத்திருக்கும் லிங்கில் போய்ப் பார்க்கவும்! :P
வாங்க கீதா மேடம்.
ReplyDelete//கபீர் காலத்திலும் அரசு அதிகாரிகள் இப்படித் தானோ? //
அந்த காலத்தில கபீர் பயமுறுத்தின மாதிரி பயமுறுத்தினா ஓரளவு பயம் இருந்ததோ என்னவோ. இப்ப குளிர் விட்டுப்போச்சு. 'தடி எடுத்தவன் தண்டல்காரன்' ராஜ்ஜியம் தான் :(
//லிங்கில் போய்ப் பார்க்கவும்!//
இருங்க இருங்க ..அங்கேயே வந்து பேசிக்கிறேன் :))
நன்றி
தங்கள் பதிவைக்காணும் வாய்ப்பு இதுவரை வாய்த்ததே இல்லை (எப்படி என்று புரியவில்லை) தாங்கள் ஒரு முறை பின்னூட்டம் இட்டும் வழக்கமாக செய்வது போல் (அவர்கள் பக்கத்திற்கு சென்று யாரென ஒருமுறை பார்ப்பது வழக்கம்) செய்யாது மறுமொழி இட்டது எத்தனை தவறென்று இப்போது புரிகிறது. வலைச்சரத்தில் தங்களை அறிமுகப்படுத்திய திருமதி.கீதா சாம்பவசிவம் அவர்களுக்குத்தான் நன்றி கூறவேண்டும். இன்னும் முழுவதும் படிக்கவில்லை ஆனால் வெகுநாள் தேடிய பொக்கிஷம் கிடைத்த மகிழ்ச்சி பொங்குகிறது. கபீரின் தோஹா வரிகளைக்காணும் போது உண்டாகும் நேசத்தை அளவிட வார்த்தைகளே இல்லை அதற்கு பதவுரை வேறு உள்ளது என்று காணும்போது பகவான் கிருபை என்றே தொன்றுகிறது. நன்றி மேலும் படித்து விட்டு வருகிறேன்....
ReplyDeleteவாங்க கிருத்திகா,
ReplyDelete///கபீரின் தோஹா வரிகளைக்காணும் போது உண்டாகும் நேசத்தை அளவிட வார்த்தைகளே இல்லை அதற்கு பதவுரை வேறு உள்ளது என்று காணும்போது பகவான் கிருபை ///
பொதுவாக கபீர் தோஹா பற்றிய ஆர்வம் இருக்கும் ஒருவருக்கு ஓரளவு ஹிந்தி மொழி தெரிந்திருக்கும். இரண்டாவதாக ஆன்மீக விஷயங்களில் ஈடுபாடு இருக்கும். உங்களது வரிகள் இவை இரண்டும் உங்களுக்கு உண்டு என்பதை சுட்டிக் காட்டுகிறது. மிக்க சந்தோஷம். அடிக்கடி வாருங்கள். மேலான கருத்தைச் சொல்லுங்கள்.
நன்றி
//பானா பாஹிரே சிம்ஹ் கா, சலை பேட் கீ சால்
ReplyDeleteபோலீ போலே ஸியார் கீ, குத்தா காவை கால் ||
சிங்கம் போல் வேடமிட்டு,ஓநாய் போல் நடை போட்டு, நரி போல் பேசுவோர் சருமத்தை, நாய்கள் தின்றிடும். இது நேரடி பொருள்.அதாவது சமூகத்தில் பிறரை, நேரத்திற்கு தக்கபடி வேடமிட்டு ஏமாற்றுபவரை சமூகம் ஒதுக்கி வைக்கும். அவன் இறந்த பின் உடலை கூட அடக்கம் செய்ய யாரும் முன் வரமாட்டார்கள். நாய்களுக்கு உணவாகும் அவனது உடல்.
மிகவும் பொதுப்படையான ஒரு கருத்து. அழுத்தம் திருத்தமாக மனதில் பதிய வேண்டுமானல் இது யாரைக் குறித்து என்பது தெரிய வேண்டும் என்ற எண்ணம் மனதில் ஓடியது.//
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் உறவு கலவாமை வேண்டும் எனும்
வள்ளலார் சொல்லியதன் கருத்தும் இதுவே என நினைக்கிறேன்.
முகத்தின் முதுக்குறைந்தது உண்டோ உவப்பினும்
காயினும் தான் முன்னுறும் என்பார் வள்ளுவர்.
எனினும் தீயவர் சாமர்த்தியமாகச் செயல்படுகின்றனர்.
மனதில் தோன்றும் எண்ணங்களை முகத்தில் தெரியாதவாறு, தம் சொற்களில்
பிரதிபலிக்காதவாறு நடித்து நாடகமாடி நம்பி வந்தோரை ஏமாற்றி வாழ்வு நடத்தும்
தீயவர் வலைதனில் மக்கள் விழாது இருக்கவேண்டும் என நினைத்துப் பொதுவாக
ப்பேசிய கருத்தன்றி ஒரு குறிப்பிட்ட நபரையோ அல்லது சமூகத்தினரையோ கபீர்
சொல்லுவதாகத் தெரியவில்லை. ஏனெனில் இதுபோன்றவர் எல்லா இடத்தும்
காற்றில் கரைந்து நிற்கும் கரிமில வாயு போல உள்ளார். இவர் தமை இனம் கண்டு
கொள்ள வேண்டும் என கபீர் எச்சரித்தது போலவே தோன்றுகிறது.
சுப்புரத்தினம்.
தஞ்சை.
//திருமதி.கீதா சாம்பவசிவம் அவர்களுக்கு நன்றி கூறவேண்டும்.//
ReplyDeletesatsangathve nissangathvam
subbu rathinam.
thanjai.
நன்றி சுப்புரத்தினம் ஐயா,
ReplyDelete//தம் சொற்களில்
பிரதிபலிக்காதவாறு நடித்து நாடகமாடி நம்பி வந்தோரை ஏமாற்றி வாழ்வு நடத்தும்
தீயவர் வலைதனில் மக்கள் விழாது இருக்கவேண்டும் //
ஈசாப் கதைகள்,பஞ்சதந்திரக் கதைகள் சொல்லப்பட்டதே சமூகத்தின் போக்கை சூசகமான முறையில் மக்கள் புரிந்து கொள்வதற்காக. சூசகமானதால் நாம் புரிந்து கொள்ளும் விதங்களும் வேறுபட வாய்ப்புகள் உள்ளது.