மதுர்பாபு என்று அன்புடன் அழைக்கப்பட்ட மதுராநாதர் இராமகிருஷ்ணரின் பக்தர்களில் ஒருவர். கிருஹஸ்தர்.அவரிடம் இராமகிருஷ்ணருக்கு அளவற்ற அன்பு இருந்தது. இருந்த போதிலும் நரேந்தரையும் மற்ற பிரம்மச்சாரி சிஷ்யர்களையும் மதுர்பாபு போன்ற கிருஹஸ்தர்களுடன் அளவுக்கு அதிகமாக உறவு பாராட்ட வேண்டாம் என்று அவர் எச்சரித்து வைத்திருந்தார்.
இதைக் கேள்விப்பட்ட மதுராநாதருக்கு பெரும் வருத்தம் உண்டாயிற்று. தன் மதிப்பிற்குரிய குருவிடமே அதற்கான காரணத்தை கேட்டார். “இதோ பார்! உனது
இல்லத்தில் பெருங்காய டப்பா வைத்திருக்கிறாயல்லவா. அதில் உள்ள பெருங்காயத்தை காலி செய்துவிட்டாலும் வெகு நாட்களுக்கு அதன் வாசனை போகாது. அதில் பின்னர் வேறு எந்த பொருளை வைத்தாலும் அதற்கும் அதன் வாசனை ஒட்டிக்கொண்டு விடும். உன் மனம் ஆன்மீகத்தின் பக்கம் திரும்பியிருப்பது பெரும் பாராட்டுக்குரியது எனினும் உனக்குள் இருக்கும் உலகத் தொடர்பான வாசனைகள் உன்னையறியாமல் பேச்சிலும் செயலிலும் வெளிப்படும் வாய்ப்புண்டு. அதன் தாக்கம் பிறரிடமும் ஏற்படக்கூடும். ஆகையால் ஆன்மீகத்தில் நீ பின்பற்ற வேண்டிய வழிமுறைகளே வேறானவை. நரேன் போன்றவர்களின் முறையே வேறானவை என்பதற்காகத்தான் அப்படிச் சொன்னேன்” என்று விளக்கினார். உண்மையை புரிந்து கொண்ட மதுராநாதரும் சமாதானம் அடைந்தார்.
மருத்துவத்துறையில் ரணச்சிகிச்சை செய்யும் அறையிலோ, உணவு பதனப்படுத்தும் தொழிலிலோ வெளிக் காற்றிலிருந்து மாசு உட்புகாவண்ணம் அறைக்குள்ளே சற்றே உயர் அழுத்த சுத்திகரிகப்பட்ட காற்றை (sterile air) செலுத்தி அதிக அழுத்தத்தில் (positive pressure) வைத்திருப்பர். இதனால் சுத்திகரிக்கப்பட்ட காற்று வெளியே தப்பிச் செல்லுமே அன்றி மாசடைந்த காற்று உட்புக முடியாது. மேற்கொண்டிருக்கும் செயலுக்கு ஏற்ப 'பல மட்ட தரக்கட்டுப்பாடுகள்' சுத்திகரிக்கப் பட்ட காற்றுக்கும் உண்டு. அந்த தரத்தை நிறுவுவதற்கு பல லட்சங்களை நிறுவனங்களும் மருத்துவ மனைகளும் செலவழிக்கின்றன.
தன்னுடைய சிஷ்யர்கள் விஷயத்தில் ராமகிருஷ்ணர் மேற்கொண்டதும் அத்தகைய ஒரு தரக் கட்டுபாட்டு செயல் தான் என்பதை புரிந்து கொண்டால் அதில் தவறேதும் காணமுடியாது.
நம் 'பெரும் காயத்துள்' நாமே ஏற்படுத்திக்கொண்டுள்ள வாசனைகளின்(வினைப்பதிவுகள்) பலத்தைப் பற்றி எவ்வளவு எளிமையான விளக்கம்! அது ஜென்ம ஜென்மங்களாகத் தொடர்வது. ஒவ்வொருவரும் தம்மிடம் உள்ள விரும்பத்தகாத குணங்களையும் பழக்கங்களையும் களையச் செய்ய வேண்டிய செயல்கள் தான் ஆன்மீக சாதனையின் பெரும் அங்கம்.
அதனாலேயே பூஜை புனஸ்காரங்களை எந்த மகான்களும் நிராகரிக்கவில்லை.மனம் முழுமையாக அதில் ஈடுபட்டு இருக்கும் அளவும் பலவித விரும்பத்தகாத விஷயங்களிலிருந்து விலகியிருக்க வாய்ப்பு கூடுகிறது. இதை ஒருவகையில் மேலே கண்ட positive pressure எனலாம்.
ஆனால் விரதங்கள் பூஜைகளினாலேயே ஒருவன் மனம் சுத்தி அடைவதில்லை. அகங்காரம் என்னும் மாயை உடலளவிலாலான குற்றங்களைத் தாண்டி மன அளவில் ஆன்மீக உயர்வை தடுக்கும் பல தவறுகளை செய்து கொண்டே இருக்கிறது. மனம் விவேகத்தின் பலமிழந்து புத்தியை மறைத்து அஞ்ஞான இருளில் உழல்கிறது.
மனோ-வாக்-காயம் இவைகளிடையே ஒற்றுமை இல்லாது செய்யப்படும் நம் பூஜைகள் அர்த்தமற்றவை ஆகின்றன.
கையொன்று செய்ய விழிஒன்று
நாடக் கருத்து ஒன்று எண்ணப்
பொய்யொன்று வஞ்சக நாஒன்று
பேசப் புலால் கமழும்
மெய்யொன்று சாரச் செவி ஒன்று
கேட்க விரும்பும்யான்
செய்கின்ற பூசை எவ்வாறு கொள்
வாய் வினை தீர்த்தவனே (திரு ஏகம்ப மாலை)
என்பதாக பட்டினத்தார் வெகுவான ஜனங்கள் செய்யும் பூஜையின் உண்மை நிலையை எடுத்துரைக்கிறார்.
இதை ஒரு சிறிய உதாரணத்தின் மூலம் கபீர் விளக்குகிறார்.
न्हाये धोये क्या हुआ, जो मन का मैल न जाय ।
मीन सदा जल में रहै,धोये बास न जाय ॥
ந்ஹாயே தோயே க்யா ஹுவா, ஜோ மன் கா மைல் ந ஜாய் |
மீன் ஸதா ஜல் மே ரஹை, தோயே பாஸ் ந ஜாய் ||
நீராடி மடியுடுத்தி ஆவதென்ன நீங்கலையே இவர்தம் உள் அழுக்கும்
தீராது நீரதனில் திளைத்தென்ன நீங்கலையே மீனதனின் துர்கந்தம்
(மடி உடுப்பு= ஆசார உடுப்பு)
மாற்று:
நீராடி மடியுடுத்தி ஆவதென்ன நீங்காவே இவர்தம் உள்ளழுக்கும்
நீரதனில் முக்காலும் திளைத்தென்ன, நீங்காதே மீனதனின் துர்கந்தம்
மீனுக்கு தன் துர்கந்தத்தைப் பற்றி எதுவும் தெரியாது. அது எப்போதும் போல் நீரில் தீராது நீந்திக் கொண்டே இருக்கிறது. மீனிடமிருந்து வரும் வாடையை துர்கந்தம் என்று வகைப்படுத்தியிருப்பவர்கள் மனிதர்கள்தான். அது போல் சாதாரணமான வாழ்க்கை நடத்தி வரும் நம்மைப் போன்றவர்கள் ஜன்மாந்திர வாசனைகளால் வெளிப்படுத்தும் உலகியல் ஆசாபாசங்கள் ஞானிகளை பொறுத்தவரை துர்கந்தமாகவே இருக்கிறது. ஆகவே தான் நமக்கு அவை பெரிதாக தோன்றாவிடினும் இராமகிருஷ்ணர் போன்ற ஞானிகள் தம்மை அண்டி வருபவரை மிக சுலபமாக தரம் பிரித்து விடுகிறார்கள்.
நம்முடைய வெளி வேஷங்களால் அவர்களை மெச்ச வைக்க முடியாது.
ஆடம்பரம் கொண்டு அடிசில் உண்பான் பயன்
வேடங்கள் கொண்டு வெருட்டிடும் பேதைகாள்
ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
தேடியும் காணீர் சிவனவன் தாள்களே (தி.ம.1655)
என்கிறது திருமந்திரம். மனதளவில் ஆழ்ந்த பக்தியில்லாமல் உலகோர் மெச்சுவதற்காக ஆடம்பரமான பூஜைகளை செய்வதும்,விருந்துகள் படைப்பதும் உண்மையான பக்தியின் லட்சணமல்ல. அளவுக்கு மிஞ்சும் போது பக்தியை தூண்டுவதற்கு பதிலாக வெறுப்பையே தூண்டும். உட்பொருள் அறியாது செய்யப்படும் எல்லா செயல்களுக்கும் இது பொருந்தும்.
'ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்' எனப்படும் நிலை எண்ணத்தூய்மை இல்லாமல் முடியாது. மனதை சுத்திகரிப்பது என்பது மிகக் கடினமான பயிற்சி.
துணி வெளுக்க மண்ணுண்டு
தோல் வெளுக்க சாம்பலுண்டு
மனம் வெளுக்க என்ன உண்டு
எங்கள் முத்து மாரி எங்கள் முத்துமாரி
என்று பாரதி பாடுவதும் அதே காரணத்தினால் தான்.
மனம் வெளுப்பதற்கு கபீரும் பிறஞானிகளும் சொல்லும் ஒரே வழி நாமஸ்மரணை ஒன்றுதான்.
“மூச்சு மூச்சிலும் செபி நாமம், முயல்வதற்கில்லை வேறெதுவும்” என்று அவர் சொல்லியதை ஏற்கனவே பார்த்திருக்கிறோம்.
மீண்டும் அந்த கருத்தை, நீரை விட்டு வெளியே வந்துவிட்ட மீனின் துடிப்பிற்கு ஒப்பிட்டு அது போல் நாமசெபம் முடியாமல் போனால் மனம் நிலைகொள்ளாது தவிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார்.
सुमरण से मन लाइए, जैसे पानी बिन मीन ।
प्राण तजे बिन बिछडे ,सन्त कबीर कह दीन ॥
சுமரன் ஸே மன் லாயியே, ஜைஸே பானீ பின் மீன் |
ப்ராண் தஜே பின் பிச்டே, ஸ்ன்த் கபீர் கஹ் தீன் ||
செபிமின் மந்திரம் மனமுய்ய, நீர் விட்டு அகலிய மீன் போலே
தவித்து உயிர் விடும் நீரின்றி, தெளிமின் தீனன் கபீர் போலே
(உய்ய = உயிர்வாழ்தல்,தப்பிப் பிழைத்தல்; தீனன்= ஏழை)
மாற்று:
மந்திரம் வேண்டும் மனமுய்ய, மீனுய்ய வேண்டும் நீரும்
நீரின்றி நிலைக்குமோ உயிரும், உரைப்பனே ஏழை கபீரும்.
மனம் செய்யும் அவலங்களிலிருந்து தப்பிப் பிழைக்க வேண்டுமானால் நாமஸ்மரணைதான் கைகொள்ள வேண்டிய சுலபமான வழி. அதுவே மன மாசுகளை தூரவிரட்டும் positive pressure.
வாசகர்களுக்கும் சகபதிவாளர்கள் அனைவருக்கும் சர்வதாரி வருட புத்தாண்டு வாழ்த்துகள்
//மனோ-வாக்-காயம் இவைகளிடையே ஒற்றுமை இல்லாது செய்யப்படும் நம் பூஜைகள் அர்த்தமற்றவை ஆகின்றன.//
ReplyDeleteமாலா தோ கர் மே பிரை ஜீப் பிரை முக் மாம்ஹி
மனுவான் தோ தஸு திசை பிரை யஹ் தோ சுமிரன் நான்ஹி
என்று சும்மாவா சொன்னார் கபீர். உத்திராட்ச மாலைகள் கைகளில் உருள, நாவோ ( நாதன் நாமத்தைச்
சொல்லிச் சொல்லி ) வாயெல்லாம் சுற்ற, மனமென்னவோ பத்து திசைகளையும் சுற்றி வருகிறதே ! இதுவா
ஜபம் ? இல்லை இல்லவே இல்லை.
கர்ம காண்டத்தில் சொல்லப்பட்ட யாகங்கள் யாவையுமே, பூசனைகள் யாவையுமே மனம் ஈடுபட்டு,
நிஷ்காம்யமாகச் செய்தாலன்றிப் பயன் இல்லை. இதில் ஏதும் ஐயமில்லை. அன்றாட உலக விஷயங்களில
ஈடுபடுவோனுக்கு நிஷ்காம்யமாகச் செயவது துர்லபம்.ஆதலின், முதற்கண், "மனத்துக்கண் மாசிலன் ஆதல், அனைத்து அறன்" என்று சொல்லி, வள்ளுவர் தொடர்கிறார், " ஆகுல நீர பிற " என்று.
ஸத்ஸங்கத்வே நிஸ்ஸங்கத்வம் என்பார் ஆதி சங்கரர். ஸத் எனப்படுமாம் உண்மை யாதென உணரும்
நிலையிலே தான் ஒருவன் பொருள்களின் மீதுள்ள தன் பிடிப்பைவிட்டு நீங்குகிறான் . அதே சமயம் உலகத்தின்
மீதுள்ள ஆசை நீங்கினால் தான் மெய்ப்பொருள் காணப்பெறும். இது ஒரு சக்கரம் போல . இது இருந்தால் தான் அது வரும். அது வந்தால் தான் இது வரும்.
என்ன செய்ய ? உள் மனம் என்று ஒன்று இருக்கிறதே ! அது அடங்க வேண்டும். எண்ணங்களின் ஓட்டத்தினை
நிறுத்தவேண்டும். மனம் உள்ளை நோக்கவேண்டும். கணபதி சித்தர் சொல்லுவார்: "மின்மினிப் பூச்சி தன்னுள்
மெய்யொளி கண்டாற்போல், உள்மனம் ஒடுங்கி யேஉள் உள்ளொளி கண்டால் பின்னை சென்மமுமில்லை, அந்தச் சிவத்துள்ளே சேர்வாய்; ..."
மனதை அடக்குவதற்கு வழி ஒன்று கபீர் சொல்வார்:
ராம் நாம் ஜின் பாயா ஸாரா, அவிரதா ஜூட் ஸகல ஸம்ஸாரா.. என்று.
( ராம நாமத்தினை எவன் ஒருவன் முழுமையாக அடைந்தானோ, அவனை விட்டு எல்லா உலக பந்தங்களும்
விட்டொழியும் )
ராம் நாம் மணி த்வீப் தரு ( Ram naam mani deep dharu )
ராமன் எனும் மணி தீபத்தினை நாவில் ஏற்றிடுவாய். அந்த தீபம் நாவில் ஏற்றிப்பார். உன் உள்ளேயும் ஒளி.
வெளியேயும் ஒளி . எங்கேயும் ஒளி.
கலியுகத்தில் ராம நாமம் ஒன்றே ராகத்வேஷங்களிலிருந்து விடுதலை அளிக்கும்.
ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ர நாம தஸ்துல்யம் ஸ்ரீ ராம நாம ... என்கிறது விஷ்ணு சஹஸ்ர நாமம்.
ராம நாமத்தைச் சொல்லுங்கள். அது positive pressure மட்டுமல்ல.
அது ஓர் POSITIVE TREASURE ம் ஆகும்.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
a very happy Tamil new year Day to you and to your family
ReplyDeleteAll the Best.
பெருங்காயத்துக்கு இப்படி ஒரு வாசனையா?
ReplyDeleteஅருமையாக இருக்கு விளக்கம்.
நன்றி சூரி சார்.
ReplyDelete//மாலா தோ கர் மே பிரை ஜீப் பிரை முக் மாம்ஹி //
இந்த ஈரடி திரியும் மனது என்ற தலைப்பில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. அதில் நாமதேவர் பற்றிய கதையும் உண்டு.
///ராம நாமத்தைச் சொல்லுங்கள். அது positive pressure மட்டுமல்ல.
அது ஓர் POSITIVE TREASURE ம் ஆகும்.///
சத்தியமான வார்த்தைகள். அவனருள் எல்லோருக்குமாக பெருகுவதாக. நன்றி
வாங்க குமார்.
ReplyDeleteஇன்று ராம நவமி. அவனருளால் நம் (ஜன்ம) வாசனைகள் தொலையட்டும் என்று பிரார்த்திப்போம்.நன்றி.
ஆனால் விரதங்கள் பூஜைகளினாலேயே ஒருவன் மனம் சுத்தி அடைவதில்லை.
ReplyDeleteஇதையேதான் மாகான் தியகராஜரும் மனசு நில்ப சக்திலேக போதே மதுர கன்ட பூஜா... என்கிறார்.
மனதைக்கட்டுபடுத்தும் சக்தி உனக்கு இல்லையென்றால் மணியடித்து இனிமையாக பூஜை செய்து என்ன பயன் மனமே. நீங்கள் சொன்ன மாதிரி நாம சங்கீர்த்தனம் ஒன்றுதான் கலியுகத்தில் சிறந்தது. ராம நாமமு ஜனம ரக்க்ஷ்க மந்திரம் தாமசுமு செயகவே ஜபிம்பவே மனசா.....
பொருமையுடன் செதுக்கப்பட்ட சிலை போல மிளிர்கின்றன கபீர் கனிமொழிகள், இவற்றை படிப்பதே நிறைவு, வேறென்னவும் வேண்டா.
ReplyDeleteவருக தி.ரா.ச
ReplyDelete//நீங்கள் சொன்ன மாதிரி நாம சங்கீர்த்தனம் ஒன்றுதான் கலியுகத்தில் சிறந்தது //
டிராவல் ஏஜெண்ட்க்கு காசிக்கு போற வழி சொல்ல தெரியும். அவன் காசியை கண்டதில்லை. என் நிலையும் அந்த வகையில் சேர்த்தி :))
நன்றி
நீங்கள் சொல்வதில் ஓரளவு நிஜம் உண்டு ஜீவா.
ReplyDeleteஇதை எழுதுவதுதான் எனக்குள் நான் உண்டாக்கிக் கொள்ளும் positive pressure.
பலரும் இத்தொடரை தொடர்ந்து படித்து வருவது அந்த பொறுமைக்கு (பொறுமை என்பது பொருந்துமானால்)அல்லது முயற்சிக்கு நிறைவு தருகிறது.
பாராட்டுரைகளுக்கு நன்றி.
என் எழுத்துப்பிழையை பொறுத்தருளியதற்கு நன்றிகள்.
ReplyDelete'மனம் வெளுக்க மார்க்கம்' காணும்
ReplyDeleteபயிற்சி முறைகளைப் பற்றித் தான்
யோசித்துக் கொண்டிருந்தேன்.
உங்கள் பதிவும் அது குறித்து
பேசியது தற்செயலாக எனக்குத்
தெரியவில்லை.
மிக்க நன்றி, கபீரன்ப!
அன்பின் ஜீவி,
ReplyDeleteஉங்கள் கருத்துடன் ஒத்துக் கொள்கிறேன்(குறிப்பாக இன்று).
காலையில் பூஜை அறையில் பல படங்கள் விக்கிரகங்கள் இடையே உடைந்த ஒரு விக்கிரகத்தை வைத்து அதற்கும் பூச்சூட்டி பூஜை செய்திருந்தார் என் மனைவி. வெகுநேரம் கழித்து அதை பார்த்த போது மனதை நெருடியது. உடைந்த விக்கிரங்களை ஆற்றில் விட்டு விட வேண்டுமென்று கேள்விபட்டு இருக்கிறேன். அதை எடுத்துவிடும்படி முன்பே சொல்லியும் அது அங்கேயே இருந்தது. இன்று மாலையில் ராமகிருஷ்ணரின் சரிதத்தை படிக்கும் பொழுது அதே போல் ஒரு நிலைமையைப் பற்றி சர்ச்சை. அதற்கு ராமகிருஷ்ணர் “மதுராநாதருக்கு ஒரு கால் போய்விட்டால் அவரை ராசமணி ஆற்றில் தள்ளிவிட முன்வருவாரா ?” என்று கேட்டாராம்.
அதை படித்ததும் என் தலையில் கடவுளே குட்டியது போல் உணர்ந்தேன்.
ஆத்மார்த்தமான கேள்விகளுக்கு அவன் எங்கிருந்தோ விடையளிக்கிறான்
//... பொறுத்தருளியதற்கு நன்றிகள்//
ReplyDeleteஎன்ன ஜீவா! Ru என்பதற்கு பதிலாக ru என்று தட்டச்சு பதிந்து விட்டது அவ்வளவு தானே. இங்கே என்ன தமிழ் பாடமா நடக்கிறது. இது யாவருக்கும் ஏற்படக்கூடியதுதான் :) விட்டுத்தள்ளுங்கள்
//விட்டுத்தள்ளுங்கள்//
ReplyDeleteசிலவற்றை "விட்டால்" மட்டும் போதாது.
திரும்பவும் நம்மிடம் வந்து ஒட்டா வண்ணம் "தள்ளவும்" வேண்டும்.
சுப்பு ரத்தினம்.
தஞ்சை.
புத்தாண்டு வாழ்த்துகள் கபீரன்பன். சிறு செடியைச் சுற்றி வேலி எவ்வளவு முக்கியம் என்பதை மிக நன்றாக விளக்கியிருக்கிறீர்கள்.
ReplyDeleteநன்றி குமரன்.
ReplyDelete//..வேலி எவ்வளவு முக்கியம் என்பதை...//
வேலி போடும் தோட்டக்காரன் எப்போ வருவாரோ ? :))
'சேதோ தர்பண மார்ஜநம் .......' என்று திருநாம மஹிமை கூறும் அஷ்டகத்தைத் தொடங்குகிறார் ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாப்ரபு. திரு நாம ஜபம் மனக்கண்ணாடியில் படிந்த மாசுகளைத் துடைக்க வல்லது.
ReplyDeleteதேவ்