Monday, May 05, 2008

விளைந்ததோ ஆமிலம், விழைவதோ ஆமிரம்

கோல்கொண்டா பிரதேசத்தின் சுல்தான் தானி ஷா இரவு உணவு முடித்து தாம்பூலம் தரித்து சயனிக்கும் வேளை. இரண்டு இளைஞர்கள் அவனை எழுப்பி, கோபண்ணா என்பவன் அரசாங்கத்திற்கு பட்டிருக்கும் கடனைத் தீர்க்க வந்திருப்பதாக கூறுகின்றனர். இவர்கள் யார், எப்படி உள்ளே வந்தனர் என்ற கேள்வியெல்லாம் எழுவதற்கு பதிலாக அவர்களின் அழகிலும் கம்பீரத்திலும் மயங்கி அவர்கள் சொன்னதற்கெல்லாம் மந்திரத்தில் கட்டுண்டவன் போல் செயலாற்றுகிறான் சுல்தான். தங்க நாணயங்களை எண்ணி கணக்கு ஒப்புவித்தபின் சுல்தானிடம் ரசீது வேண்டினர்.

எழுதும் மை வைக்கப்பட்டிருக்கும் இடமா அது, அதுவும் அந்த அகால வேளையில்! 'உங்கள் தாம்பூல எச்சில் சாயத்தில் கையெழுத்திட்டு கொடுங்கள் போதும்' என்று சொல்லி ரசீது பெற்று செல்கின்றனர்.

பன்னிரெண்டு வருடங்களுக்கு பிறகு கோபண்ணாவுக்கு திடீரென்று விடுதலை. அரசாங்கத்துக்கு சேர வேண்டிய வரிப்பணத்தை பத்ராசலத்து ராமன் கோவில் கட்டுவதற்காக செலவிட்டு விட்டார் என்று தண்டனை அனுபவித்து வந்தார். பணத்தை திருப்பிக்கட்டும் வரையில் சிறைவாசம் விதிக்கப் பட்டிருந்தது.
இவர் ஆந்திர மாநிலத்து மணிவாசகப் பெருமான்.

மறுநாள் காலை பத்ராசலராமன் கோவில் ராமன் காலடியில் அந்த ரசீது காணப்பட்டது. பக்தனுக்காக ஒரு மானுடனின் எச்சிலையும் சுமந்தான் இராமன். கோபண்ணாவின் பக்தியை உணர்ந்த தானி ஷா அந்த நிதியை மீண்டும் கோவில் செலவுக்கென கொடுத்து விடுகிறான்.

பத்ராசல ராமதாஸர் என்று பிற்காலத்தில் போற்றப்பட்ட கோபண்ணாவுக்கு மனதில் ஒரு சந்தேகம்.

தான் பன்னிரெண்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டிய காரணம் என்ன? அதே ராமனின் கருணை இன்னும் முன்பே வந்திருக்கலாமே. பின்னொரு நாளில் அவருக்கு கூறப்பட்ட காரணம், பிந்தைய சென்மம் ஒன்றில் அவர் ஒரு கிளியை பன்னிரெண்டு நாட்கள் கூண்டில் அடைத்து வைத்திருந்தாராம். அந்த கிளியின் மனத்துன்பம் இந்த சென்மத்தில் தொடர்ந்து வந்து பீடித்தது என்று அறிந்து கொண்டாராம்.

தானே புரி வினையால் சாரும் இரு பயனும்
தானே அனுபவித்தல் தப்பாது - தான் நூறு
கோடி கல்பம் சென்றாலும் கோதையே! செய்த வினை
நாடி நிற்கும் என்றார் நயந்து.

என்கிறது நீதி வெண்பா. நம் செய்கைகளின் நல்லதும் கெட்டதும் அதற்குரிய பலனை கொடுக்காமல் விடாது. நிழலைப் போலே பின் தொடர்ந்து கொண்டே இருக்கும். இதைப் பற்றி கபீர் சொல்ல வருவதும் அதைத்தான்.

करता था तो क्युँ रहा, अब काहे पछताये ।
बोये पेड बबूल का , आम कहा से खाये ॥


கர்தா தா தோ க்யூ ரஹா, அப் காஹே பச்தாயே |
போயே பேட் பபூல் கா, ஆம் காஹா ஸே காயே
||

செய்வினை விளையாட்டு வேடிக்கை, பின்னாலே வேதனையே வாடிக்கை
செய் அதிலே விளைந்ததோ ஆமிலம், பின் இவரும் விழைவரே ஆமிரம்.

(செய்வினை= செய்கின்ற செயல்கள், செய்= வயல்; ஆமிலம்= புளியமரம் ஆமிரம் =மா மரம்)
கபீர் சொல்லும் பபூல் என்பது கருவேல மரத்தை குறிப்பது. சொல் நயத்திற்காக ஆமிரம் ஆமிலம் என்று கையாளப்பட்டிருக்கிறது.

What you sow, so you reap. கருவேல மரத்தை (அல்லது புளிய மரத்தை) வளர்த்து விட்டு பின்னர் அதில் மாங்காய் வேண்டும் என்று ஆசைப்பட்டால் எப்படி முடியும் ?
நாம் அனுபவிக்கக் கூடிய சுகதுக்கங்களுக்கான முழு பொறுப்பும் நம்முடையதே. இப்போது வெறுக்க தக்க சூழ்நிலைகளில் இடர்படுகிறோம் என்றால் எப்பொழுதோ அது போன்ற வெறுக்கத்தக்க சூழ்நிலையை பிறர்க்கு நாம் உண்டாக்கியிருக்க வேண்டும், பத்ராசலர் கதையில் கண்டது போல.

மனித உடலை விளைநிலத்திற்கு ஒப்படும் வழக்கம் மிகப் பரவலாகக் காணப்படுகிறது. இது வினைநிலம்.

'ஐவருக்குமாம் ஒரு செய் விளைந்தது....' என்பார் திருமூலர்.

'நெஞ்சப்புனத்து வஞ்சக் கட்டையை வேரற அகழ்ந்து' ...என்பார் பட்டினத்து அடிகள்

பல்வேறு வினைகளால் வந்திருக்கும் உடல், மீண்டும் நல்ல வினைகளை ஆற்றி பிறவித் துன்பத்திலிருந்து கரை காண்பதற்கான ஒரு வாய்ப்பு. ஆகவே திருவள்ளுவரும் கூறுவார்.

துறப்பார்மன் துப்புர(வு) இல்லார், உறற்பால
ஊட்டா கழியும் எனின்.
அனுபவிக்க வேண்டிய துன்பங்களெல்லாம் அனுபவித்து, அனுபவிப்பதற்கு எதுவும் இல்லாதவன் நிலையான இன்பமாகிய வீடு பேறு அடைய வேண்டிய துறவியாவான்

மானுட உடலே வினைகளின் விளைநிலம். இதில் மனம் உழவன்.

நல்ல உழவன் பாடுபட்டு நிலத்தை சீர் திருத்தி நீர்பாய்ச்சி நல்ல விதைகளை ஊன்றி களை பறித்து தனக்கும் சமூகத்திற்கும் உபயோகமாகும் பொருட்களை உற்பத்தி செய்கிறான்.

மனிதன் செய்யக் கூடிய தர்ம காரியங்கள்தான் நல்ல விதைகள். அவன் மனதில் உருவெடுக்கும் தீய எண்ணங்களும் ஒரு வகை விதைகளே. அவைகள் அதிகம் வளர்ந்தால் முறையான பயிரை தலையெடுக்க விடாத களைகள் எனப்படும்.
களைகளை வளர விட்டு பின்னால் துன்பமுறும் பொறுப்பற்ற உழவன் போல் தீய வினைகளின் பலன் வரும் போது அறிவற்றவன் மனம் துன்பத்தை அனுபவிக்கிறது. கபீரின் இன்னொரு ஈரடி அந்த அறியாமையை கண்டு எள்ளுகிறது.

काया खेत किसान मन, पाप पुन्न दो बीब ।
बोया लूनै आपना, काया कसकै जीब ॥

காயா கேத் கிஸான் மன், பாப் புன் தோ பீப் |
போயா லூனை ஆப்னா, காயா கஸ்கை ஜீப் |
|

காயமே நிலம், மனமே உழுநன், பாவ புண்ணியமே வித்தாம்
முன்னதை விதைத்தவன் நீ, பின்னதை என்னோ நோவதாம்

(காயம்=உடல்; முன்னதை = முதன்மையாக குறிப்பிடப்பட்டுள்ள பாவத்தை ; பின்னதை = பின் +அதை = சில தினங்களுக்குப் பிறகு+ செய்த காரியத்தை ; நோவதாம் =வருந்துதல் )

நம் மனதில் ஏற்படும் மிகச்சிறிய எண்ண ஓட்டங்களும் மிக வலுவானவை. அவை அழியாது நின்று அதற்குண்டான வடிவத்தைப் பெறும் என்பதற்கு பாகவதத்தில் பூதனையின் செயலை உதாரணமாகச் சொல்வர்.

உருவில் பச்சிளம் பாலகன், அந்த அந்தண சிறுவன் மகாபலியை யாசகத்திற்காக அணுகிய போது அருகே இருந்த அவன் மகளுக்கு மனதில் தாய்பாசம் பொங்கியது. அவனை அள்ளியெடுத்து உச்சிமுகர வேண்டும் போலிருந்தது. விரைவிலேயே அச்சிறுவனால் தன் தந்தையின் பெருமை சிறுமைபட்ட பொழுது அவனை ஒரேயடியாக அழித்து விடத் துடித்தது அவள் மனது.

மிகச் சிறிய இடைவெளியில் ஏற்பட்ட அந்த மனவோட்டத்தில் எத்தனை வேறுபாடு. இரண்டும் நேரெதிர் துருவங்கள். யுகங்கள் கழிந்தன. இப்போது மகாபலியின் மகள் பூதனை என்ற அரக்கியாக சென்மம் எடுத்திருந்தாள். கம்சனால் ஏவப்பட்ட பூதனை பாலூட்டும் வகையில் குழந்தை கிருஷ்ணனை அழித்துவிடப் பார்க்கிறாள்.

முதலில் எந்த விஷ்ணு அவதார குழந்தையைக் கண்டு எண்ணங்கள் உருக்கொண்டனவோ பின்னர் அதே விஷ்ணுவின் அவதாரத்தில் அதே
எண்ணங்கள் செயல் வடிவம் பெறுகிறது. அவனாலேயே அந்த செயல் வடிவமும் முற்றுப் பெறுகிறது.

நம் மனதில் தோன்றும் எண்ணங்கள் அழிவதில்லை. நாமே மறந்து போயிருப்பினும் தக்க காலத்தில் உருப் பெற்று நமக்கு இன்பமோ துன்பமோ கொடுக்கின்றன. இக்கருத்தை சொல்லும் ஒரு நாலடியாரின் பாடலோடு நிறைவு செய்வோம்.

சிறுகா பெருகா முறைபிறழ்ந்து வாரா
உறுகாலத் தூற்றாகா ஆமிடத்தே ஆகும்
சிறுகாலைப் பட்ட பொறியும் அதனால்
இறுகாலத்து என்னை பரிவு (110)

குறையாது கூடாது முறை மாறி போகாது. வர வேண்டிய காலத்தில் வந்தே தீரும் எவராலும் அதை தடுக்கவும் இயலாது. கருவில் உருவாகும் போதே உயிர்க்கு விதிக்கப்பட்டு விட்ட உண்மை . இது உணர்ந்து கொள்ளாமல் துன்பம் வரும்போது அதை எண்ணி வருந்தி என்ன பயன் ? (பரிவு- வருத்தம் )

9 comments:

  1. //மானுட உடலே வினைகளின் விளைநிலம். இதில் மனம் உழவன்.//
    உழவன் உவமை அருமை!

    ReplyDelete
  2. நன்றி ஜீவா,
    //உழவன் உவமை அருமை//

    काया खेत किसान मन... 'கிஸான் மன்' என்பதின் மொழி பெயர்ப்பு தானே அது. 'அருமை' என்பதன் பெருமை கபீரைச் சேரும் :)

    ReplyDelete
  3. ////நம் செய்கைகளின் நல்லதும் கெட்டதும் அதற்குரிய பலனை கொடுக்காமல் விடாது. நிழலைப் போலே பின் தொடர்ந்து கொண்டே இருக்கும்.////

    அருமை நண்பரே! நீதி வெண்பாவும் சிறப்பாக மேற்கோள் காட்டப்பெற்றுள்ளது!
    நன்றி!

    ReplyDelete
  4. /மானுட உடலே வினைகளின் விளைநிலம். இதில் மனம் உழவன்.

    நல்ல உழவன் பாடுபட்டு நிலத்தை சீர் திருத்தி நீர்பாய்ச்சி நல்ல விதைகளை ஊன்றி களை பறித்து தனக்கும் சமூகத்திற்கும் உபயோகமாகும் பொருட்களை உற்பத்தி செய்கிறான்.

    மனிதன் செய்யக் கூடிய தர்ம காரியங்கள்தான் நல்ல விதைகள். அவன் மனதில் உருவெடுக்கும் தீய எண்ணங்களும் ஒரு வகை விதைகளே. அவைகள் அதிகம் வளர்ந்தால் முறையான பயிரை தலையெடுக்க விடாத களைகள் எனப்படும்.
    களைகளை வளர விட்டு பின்னால் துன்பமுறும் பொறுப்பற்ற உழவன் போல் தீய வினைகளின் பலன் வரும் போது அறிவற்றவன் மனம் துன்பத்தை அனுபவிக்கிறது./

    அருமையான வரிகள்

    ReplyDelete
  5. நாம் அனுபவிக்கக் கூடிய சுகதுக்கங்களுக்கான முழு பொறுப்பும் நம்முடையதே. இப்போது வெறுக்க தக்க சூழ்நிலைகளில் இடர்படுகிறோம் என்றால் எப்பொழுதோ அது போன்ற வெறுக்கத்தக்க சூழ்நிலையை பிறர்க்கு நாம் உண்டாக்கியிருக்க வேண்டும்
    ஆமாம் உண்மையான வார்த்தைகள். கடவுளின் அவதாரங்கள்கூட விதி விலக்கு கிடையாது.ரமார் வாலியை மறைந்து இருந்து அம்புவிட்டதனினால் அதுத்த அவராதமான கிருஷ்ணாவாதாரத்தில் அவரை ஒருவன் மறைந்து இருந்து அம்பு எய்தினான் என்று புராணம் கூறுகிறது.

    ReplyDelete
  6. நன்றி வாத்தியார் ஐயா, வருகைக்கும் வாழ்த்துக்கும் .

    ReplyDelete
  7. வாங்க திகழ்மிளிர். பாராட்டுக்கு நன்றி. தொடர்ந்து படியுங்கள்.
    நன்றி

    ReplyDelete
  8. வாங்க தி.ரா.ச

    //,,,,அவரை ஒருவன் மறைந்து இருந்து அம்பு எய்தினான் என்று புராணம் கூறுகிறது//

    மிகப் பொருத்தமாக கூறினீர்கள்.

    கிருஷ்ணரின் முடிவே அந்த அம்பால்தான் வருகிறது. அவருடைய சிவந்த பாதங்களை மறைவிலிருந்து கண்ட வேடன் அதை பறவை என்று எண்ணி அம்பு எய்தான். உண்மை தெரிந்ததும் அந்த வேடன் மனம் பதறி மன்னிப்பு கேட்கையில் அவனை தேற்றும் வகையில் எது எப்படி நடக்கவேண்டும் என்று உள்ளதோ அப்படித்தான் நடக்கும் என்று கூறுகிறார்.
    மறைவிலிருந்து வந்த அம்பால் வாலிக்கு மரணம். அதே போல் மறைவிலிருந்து வந்த அம்பால் அதை அப்போது எய்தவனுக்கு பின்னொரு யுகத்தில் மரணம்!!
    விதி விடாது.
    நினைவு படுத்தியதிற்கு நன்றி.

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி