Sunday, February 22, 2009

பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே

பல வருடங்களுக்கு முன் நண்பர் ஒருவருடன் மைசூர் அருகே உள்ள கிராமத்திற்கு போக வேண்டியிருந்தது. சந்திக்க வேண்டியிருந்த நபர் வீட்டில் இல்லாததால் அவருடைய பாக்குத் தோப்புக்கே அவரைத் தேடிச் சென்றோம். தோப்புக்குள்ளே நுழையும் முன்பு செருப்பைக் கழற்றி விட்டு வெறுங்காலில் தோப்புக்குள் சுற்றினோம்.

தஞ்சை,காரைக்குடி வாசத்தின் போது கடைகளில் செருப்பை வெளியே கழற்றி விட்டு உள்ளே சென்று வியாபாரம் செய்ததுண்டு. அது வீதியின் தூசியும் அழுக்கும் உள்ளே வராமல் தடுக்க செய்யும் ஒரு கட்டுப்பாடு. ஆனால் விளை நிலத்தில் ஏனிந்தக் கட்டுப்பாடு ?

நகரப் பக்கங்களிலேயே படித்து வளர்ந்த என் போன்றவர்களுக்கு இது புதியதாக இருக்கலாம்.உழைப்பு ஒன்றையே நம்பி நிலத்தையும் மழையையும் ஆதாரமாகக் கருதும் விவசாயிகள் பூமியை தெய்வமாக வணங்குகிறார்கள். இறைவனுடைய படைப்பான நமது கால்கள் நேரடியாக பூமியில் படிவதில் பாவமில்லை. ஆனால் மனிதன் படைத்த செருப்பை அவனுடைய படைப்பின் இடையே புகுத்துவதால் அதை ஆணவத்தின் சின்னமாகக் கருதினரோ என்னவோ!

இத்தகைய சிறு சிறு நம்பிக்கைகளிலும் நடத்தைகளிலும் நமது பண்பாட்டின் ஆழம் புரிகிறது. பணிவு என்பதை மனதில் வேரூன்றச் செய்கிறது.

இறைவன் படைப்பில் மனிதன் மட்டுமே பூமியின் மாசுபாடுகளுக்கு காரணமாகிறான். எத்தனைவிதமாக பூமியை துன்புறுத்துகிறோம் ! ஆனால் அவளோ எல்லாவற்றையும் பொறுமையுடன் தாங்கிக் கொண்டு பலவிதமான நன்மைகளை மனித குலத்துக்கும் பிற உயிர்களுக்கு தந்து கொண்டேயிருக்கிறாள் ! எனவே தான் பொறுமைக்கு பூமியை உதாரணமாகக் கொள்ளும் பழக்கம் நம் நாட்டில் ஏற்பட்டது.

அதனை ஒட்டியே வள்ளுவரும் பொறுமைக்கான அவசியத்தை பூமியை வைத்தே சொல்கிறார்.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை. (151)


தன்னைத் தோண்டுபவரைத் தாங்கும் நிலத்தைப்போல மற்றவர் அவமதிப்பைப் பொறுத்துக் கொள்ளுதல் முதன்மையான தருமம் ஆகும்.

கபீர்தாஸரும் வள்ளுவர் வழியிலே சொல்லும் கருத்தைப் பார்ப்போம்.

खोद खाद धरती सहे, काट कूट वनराय ।
कुटिल वचन साधु सहे, और से सहा न जाय ॥


வெட்டி அகழ்தல் பூமி சகித்தது, வெட்டி முறித்தல் காடும் சகிக்குதே,
வெட்டி ஏச்சை சகித்தனன் சாது, வேறெவரு மிவை சகித்த லரிதே


(வெட்டி ஏச்சு= பயனற்ற ஏச்சு)

க்ஷமா என்ற வார்த்தைக்கு சரியாக பொருள் கொள்ள வேண்டுமானால் மன்னித்து அருளுதல். வெறும் மன்னிப்பது மட்டுமல்ல துன்புறுத்தியவர்கள் நல்ல வழிக்கு திசைதிரும்ப அருளும் பெருங்குணம் அது. அது எப்படி சாத்தியமாகிறது ?
ஞானிகளுக்கு துன்பம் செய்தவனையும் தன்னிலே ஒரு பகுதியாகக் காணக்கூடிய அன்பு நிறைந்திருப்பதாலேயே அது முடிகிறது. தன்னில் ஒருவனாக காணும் பண்பை எளிமையாக விளக்குகிறது நீதி நூல் (341) செய்யுள் ஒன்று.

நாவையே கடித்ததென பல் தகர்க்கும்
பேர் உளரோ;நடக்கும் வேளை,
பூவையே,பொருவு கழல் சருக்கியது என்று
அதைக் களைவோர் புவியில் உண்டோ;
காவையார் உலகம் எனும் பேருடலி
நவையம் போல் கலந்த சீவர்
தாவையே செய்யினும் மிக்க அறிவுடையோர்
கமைசெய்தல் தகுதி யாமால்


(நவை =இகழ்ச்சி; தாவு= துன்பம்; கமை=க்ஷமை, பொறுமை)

உலகம் என்ற பேருடலில் மக்கள் உறுப்புகளைப் போன்றவராம். உறுப்புகள் தவறினால் வருகின்ற துன்பங்களுக்கு உறுப்புகளை யாரும் தண்டிப்பதில்லை. நாக்கைக் கடித்தது என்று பல்லை யாரும் உடைப்பதில்லை, கால் வழுக்கியது என்று காலை வெட்டி விடுவதில்லை. அப்படி அறியாமையால் செய்கிற தவறுகளை பொறுத்துக் கொள்ளக்கூடிய அரிய குணம் மகான்களுக்கு மட்டுமே உண்டு. அப்படிப்பட்ட ஒரு மகானைப் பற்றி சிறிது தெரிந்து கொள்வோம்.

உருவ வழிபாடு என்பது மனதை ஒருமை படுத்திக்கொள்ள ஒரு கருவியாகும். அதுவே மித மிஞ்சிப்போய் மூட பழக்க வழக்கங்கள் மண்டிய நிலையில் வேத வழிமுறையை அனுசரித்து ஆரிய ஸமாஜத்தை ஆரம்பித்தவர் மகரிஷி தயானந்த சரஸ்வதி. .அவர் உருவ வழிபாட்டு முறை வேதங்களில் சொல்லப்படவில்லை என்பதை பல சமஸ்தானங்களின் பண்டிதர்களையும் கண்டு விவாதித்து வெற்றி பெற்று வந்தார். அவற்றில் ஜெய்பூர் ஆஜ்மீர்,ஆக்ரா, குவாலியர், மீரட் கான்பூர் போன்றவை அடக்கம்.

காசியிலும் ஒரு பெரும் விவாத அரங்கு ஏற்பாடு ஆகியிருந்தது. அன்று அக்டோபர் 22, 1869, சுமார் அறுபதினாயிரம் பார்வையாளர்கள் முன்னிலையில் காசி மன்னன் நடுவராக வீற்றிருக்க இருபத்தியேழு பண்டிதர்களை எதிர்த்து விவாதம் செய்ய தனி மனிதனாக அமர்ந்திருந்தார் தயானந்தர்.அவர் தன் கருத்தை நிலைநாட்ட வேதங்களிலிருந்து எடுத்துக்காட்டிய மேற்கோள்களுக்கு பண்டிதர்கள் பதில் சொல்ல முடியாமல் திணறினர்.

அப்போது ஒரு பண்டிதர் எழுந்து வந்து அவரிடம் இரண்டு பக்கங்கள் அடங்கிய ஒரு கட்டுரையை கொடுத்து ஒரு கேள்வி கேட்டார். தயானந்தர் அதை படிக்க சில நிமிடங்கள் எடுத்துக்கொண்டார். அவரிடமிருந்து பதில் ஏதும் வராததால் அரசர் அவசரப்பட்டு காசி பண்டிதர்களே வெற்றி பெற்றதாகக் கூறி விட்டார். பண்டிதர்களுக்கு மிதமிஞ்சிய மகிழ்ச்சி. எங்கும் ஆரவாரம்.சில விஷமிகள் தயானந்தரை அவமதிக்கும் வகையில் செருப்புகள்,கல்,சாணம் முதலியவற்றை அவர் மேல் எறிந்தனர். அதனால் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கசியத் தொடங்கியது.ஆனால் அவர் மட்டும் எதுவும் நடவாதது போல அமைதியாக அமர்ந்திருந்தார்.

அவருடைய அமைதியே எதிர் தரப்பு அறிஞர்களின் அமைதியை குலைத்தது. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கத்தானே செய்யும்.

தலைமை பண்டிதர் தாராசரண் தர்கரந்தா மற்றும் பாலா சாஸ்திரி இருவரும் எழுந்து தயானந்தரின் கூற்றுகளில் உள்ள உண்மையை முழுமனதாக ஏற்றுக்கொண்டனர். காலப்போக்கில் ஏற்பட்டுள்ள மாறுதல்களை கைவிடமுடியாமல் தாம் தான் வீண் தர்க்கம் செய்வதாகவும் ஒப்புக்கொண்டனர்.காசி மன்னனும் தன் தவறுக்காக வருந்தி அவரை அரண்மனை சிறப்பு விருந்தினராக கௌரவித்து தன் மரியாதையை செலுத்தினான்.

இன்னுமொரு முறை அவருடைய அருவ கொள்கையை எதிர்த்த ஒருவன் வெற்றிலையில் (பான்) விஷத்தை வைத்து கொடுத்து விட்டான். அதை உட்கொண்டதுமே அவருக்கு விஷத்தின் தன்மை புரிந்து விட்டது. தானறிந்து வைத்திருந்த யோக முறைகளின்படி உட்கொண்டதை முழுவதுமாக வாந்தியாக வெளியேற்றி தன்னைக் காப்பாற்றிக் கொண்டார். ஆனால் யாரிடமும் இதைப்பற்றி கூறவில்லை. அவரது மனதில் வருத்தம் மேலிட்டது. மக்கள் சொல்ல வந்த கருத்தின் உண்மையை உணராது இப்படிப்பட்ட தவறான வழிகளில் ஈடுபடுகின்றனரே என்பது தான் அதற்குக் காரணம். விஷயம் எப்படியோ வெளிவந்து காவல்துறையினர் அந்த விஷமியை பிடித்து வழக்கு தொடர முற்பட்டபோது தயானந்தர் அதை தடுத்து விட்டார். ”நான் தளைகளை அறுக்க முயல்பவன். நீரோ ஒருவனை தளைக்குள் (சிறைக்குள்) சிக்க வைப்பதிலேயே குறியாயிருக்கிறீர்களே” என்று கூறினார்.

சீர்திருத்தக்காரர்களுக்கு வாழ்நாளெல்லாம் போராட்டம் தான். 1883-ல் செப்டம்பரில் ஜோத்பூர் மஹாராஜாவின் விருந்தினராக தங்கியபோது சோதனை ஆரம்பித்தது. ஒருநாள் இரவு நேரத்தில் அருந்திய பாலில் விஷம் கலக்கப்பட்டிருந்தது. அதன் விளைவாக தீராத வயற்றுவலி உருவாகியது.அரண்மனை மருத்துவர் அலிமர்தன் கான் கொடுத்த மருந்துகள் எதுவும் பலன் தரவில்லை. தயானந்தரின் உடல் முழுவதும் கொப்புளங்கள் வெடித்து இரத்தம் வடியலாயிற்று. ஒருநாள் யாரும் அருகில் இல்லாதபோது சமையற்காரனான தவூல் மிஷ்ராவை அழைத்தார்.

அவருடைய உடலில் இருந்த புண்களின் தீவிரம் கண்டு அவனால் அழுகையை அடக்கமுடியவில்லை. தான் தீயவர்களின் சேர்க்கையால் பெரும் தவறு செய்து விட்டதாகவும் அவர் அருந்திய பாலில் பொடித்த கண்ணாடி துகள்களை சேர்த்து தந்தவனும் தானே என்ற உண்மையைக் கூறி பாவமன்னிப்புக் கோரி அழுதான்.

அந்த மகானோ ”என் விதிப்படி என்ன நடக்க வேண்டுமோ அது நடக்கிறது. நீ நொந்து கொள்வதில் என்ன பயன்?” என்று சொல்லி விட்டு பையிலிருந்து இருநூறு ரூபாய்களை எடுத்துக் கொடுத்தார். “இதோ பார் மஹாராஜாவுக்கு இந்த உண்மை தெரிந்தால் உனக்கு பெரும் கேடு விளையும். ஆகையால் இந்த பணத்தை வைத்து கண் காணாத நேபாளத்துக்கு போய்விடு.அங்கே ஒரு புது வாழ்க்கையை துவங்கு” என்று சொல்லி அவனை பத்திரமான இடத்திற்கு அனுப்பி வைத்தார்.

பகைவனுக்கருள்வாய் -நன்னெஞ்சே
பகைவனுகருள்வாய்.

உள்ள நிறைவிலொர் கள்ளம் புகுந்திடில்
உள்ளம் நிறைவாமோ-நன்னெஞ்சே!
தெள்ளிய தேனிலோர் சிறிது நஞ்சையும்
சேர்த்தபின் தேனாமோ? நன்னெஞ்சே

தின்ன வரும்புலி தன்னையும் அன்பொடு
சிந்தையிற் போற்றிடுவாய்-நன்னெஞ்சே !
அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்
அவளைக் கும்பிடுவாய் -நன்னெஞ்சே !


என்கிற பாரதியின் வாக்குபடி உள்ளத்தின் நிறைவில் சிறிதும் கள்ளமில்லாமல் வாழ்ந்ததால்தான் மன்னர்களும் போற்றி வழிபடும் அளவிற்கு தயானந்தரின் பெருமை உயர்ந்திருந்தது.

ஜோத்பூர் மன்னன் மவுண்ட் அபூவில் தயானந்தரின் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து, அவரது பல்லக்கை தானே சிறிது தூரம் சுமந்து சென்று வழியனுப்பி வத்தான். சிகிச்சை எதுவும் பலனளிக்கவில்லை. அக்டோபர் மாதம் தீபாவளி தினத்தன்று மாலை ஆறு மணியளவில் தன் சீடர்கள் அருகில் அமர்ந்திருக்க காயத்ரி மந்திரம் செபித்து ஓம் என்னும் பிரணவ மந்திரத்துடன் தேகத்தை விலக்கி முக்தி அடைந்தார்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆரியசமாஜம் பல முன்னேற்றக் கருத்துகளையும் மாற்றங்களையும் நாட்டில் ஏற்படுத்தியது. இன்று வட நாடு முழுவதும் பரவி இருக்கும் DAV(Dayanand Arya Vidyashala) கல்வி நிலையங்கள் சுவாமி தயானந்தரின் சீடர்களால் துவக்கப்பட்டவையே ஆகும்.

வள்ளுவர், கபீர், பாரதி்யார், நீதிநூல் போல் எல்லோரும் வலியுறுத்துவதும் ஒரே கருத்தைதான்.

பொ்றையே சத்தியம், பொறையே தர்மம்
பொறையே யோகம், பொறையே யாகம்
பொறையே அஹிம்சை, பொறையே கருணை,
பொறையே நியதி, பொறையே யாவும்.

தயானந்தரைப் பற்றிய மேலும் விவரங்களுக்கு இங்கே

10 comments:

  1. //வேறெவரு மிவை சகித்த லரிதே//

    ஆம், ரொம்ப கடினமான வேலை.

    //உறுப்புகள் தவறினால் வருகின்ற துன்பங்களுக்கு உறுப்புகளை யாரும் தண்டிப்பதில்லை.//

    நல்ல விளக்கம்.

    //அன்னை பராசக்தி யவ்வுரு வாயினள்
    அவளைக் கும்பிடுவாய் -நன்னெஞ்சே !//

    முயற்சி ஒரு நாள் திருவினையாக்கும்தானே?

    சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்கள் பற்றி அழகாகச் சொன்னதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  2. நன்றி கவிநயா

    //முயற்சி ஒரு நாள் திருவினையாக்கும்தானே? //

    சும்மாவா ! எத்தனை ஜன்மங்களா செய்கிற முயற்சி இது !! ஏதாவது ஒரு ஜன்மத்தில திருவருள் கிடைக்காமலா போயிடும் :))

    ReplyDelete
  3. வாங்க மதுரையம்பதி

    சிவராத்திரி விரதம் நல்லபடியாக நிறைவேறட்டும்.

    நன்றி

    ReplyDelete
  4. மற்றொரு முத்து. நல்லா இருக்கு. ஒரு முறை உங்க வீட்டுக்கு வந்து உங்க கிட்டே இருக்கும் புத்தகங்களை எல்லாம் சுட்டுட்டு வரணும்னு நினைக்கிறேன்! பார்க்கலாம்.

    ReplyDelete
  5. // அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
    இகழ்வார்ப் பொறுத்தல் தலை. (151) //

    சிந்திக்க‌ வைக்கும் உங்க‌ள் ப‌திவுக்கு மிக்க‌ ந‌ன்றி. இன்னும் நிறைய‌ எதிர் பார்க்கின்றோம்.
    பிர‌பா

    ReplyDelete
  6. நன்றி கீதா மேடம்.

    //ஒரு முறை உங்க வீட்டுக்கு வந்து உங்க கிட்டே இருக்கும் புத்தகங்களை எல்லாம் சுட்டுட்டு வரணும்னு நினைக்கிறேன் //

    வாங்க வாங்க. சுருட்டிக்கிட்டு போகலாம். ஆனா சுட்டுடாதீங்க :))))

    ReplyDelete
  7. நல்வரவு தேனீ

    ///இன்னும் நிறைய‌ எதிர் பார்க்கின்றோம் ///

    சட்டியில் இருந்தால் அகப்பையிலே வரும். சட்டியை நிரப்புவது அவன் பொறுப்பு. :))

    ருசித்து பாராட்டியதற்கு நன்றி

    ReplyDelete
  8. நன்றாய் இருந்தது உங்கள் கட்டுரை, கபீரன்பன். முதன் முதலாய் பார்க்கிறே.. கூகிள் ரீடரின் ரெகமெண்டேஷனால்...

    ReplyDelete
  9. நல்வரவு கானகம். கூகிள் ரீடருக்கும் நன்றி. கட்டுரையை பாராட்டியதற்கு நன்றி.

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி