Saturday, October 24, 2009

தண்மை பொழிவார் தொண்டர்

திரைப்படத்தின் முதல் காட்சி. மகிழ்ச்சியுடன் ஆடிப்பாடி கொண்டிருக்கும் ஒரு குடும்பம். அண்ணன், தம்பி (அல்லது தங்கை) பெற்றொர்களுடனும் உறவினர்களுடனும் பிறந்த நாளோ தீபாவளியோ கொண்டாடிக் கொண்டிருப்பார்கள்.

இரண்டாம் காட்சி: ஒரு கொலை வெறிக் கும்பல் திடீரென்று உள்ளே புகுந்து சிறுவர்கள் கண் முன்னாலேயே தாய் தந்தை சித்தப்பா, வேலைக்காரன் போன்ற அனைவரையும் சுட்டுவிட்டு தப்பி ஓடுகிறது.

கடைசி் காட்சி: சட்டம், காவல் துறை உதவி யின்றியே வளர்ந்து விட்ட சிறுவர்கள் கொள்ளையர் கும்பலை பழி தீர்த்துக் கொள்கிறார்கள். சுபம்.

இது ஃபார்முலா படம். மொழிகள் வேறாக இருக்கலாம், நடிகர்கள் வேறாக இருக்கலாம், களம் வேறாக இருக்கலாம்.
நீதி நிலை நாட்டப்படுகிறது என்ற பெயரில் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு வன்முறைகளுக்கிடையே பழி உணர்ச்சியுடன் கூடிய நாயகன் உணர்வுகளை நியாயப் படுத்தி காட்டப்படும் சித்திரம்.

அடுத்தது சின்னத் திரை.

சேனல் ஒன்று : மருமகளைக் கொல்வதற்கு ’சுபாரி கில்லர்’களை ஏற்பாடு செய்யும் மாமியார்;

சேனல் இரண்டு :தொழிலதிபரான மாமனாரை தீர்த்துக் கட்ட ஸ்லோ பாய்ஸன் கொடுக்கும் மருமகன்;

சேனல் மூன்று : “அவர்கள் குடும்பத்தை உடைத்து நான் யார் என்பதைக் காட்டுகிறேனா இல்லையா பார்” என்று சவால் விடும் பெண்மணிகள்.

இத்யாதி..இத்யாதி
இங்கு பெரிய திரையை போல் கதை சுருக்கம், சுபம் எல்லாம் சொல்ல முடியாது. ஏனெனில் அந்த மெகா தொடர்களின் போக்கு மேற்கொண்டு எப்படிச் செல்லும் என்பது அந்தந்த கதை டிபார்ட்மெண்டுக்கே இன்னும் தெரிந்திருக்காது


எந்த சேனலைத் திருப்பினாலும் கோடிகளில்தான் உயிர்கள் விலை பேசப்படுகிறது. லட்சங்களுக்கு மதிப்பே இல்லாமல் போய்விட்டது ! பெரிய திரையில் உடல்ரீதியான வன்முறை என்றால் சின்னத்திரையில் மனோரீதியான வன்முறை வலம் வருகிறது.

தொழிலாளர் முதலாளி மோதல்களெல்லாம் அரத பழசு. இப்போதெல்லாம் சிறிய உரசல்களையெல்லாம் மகாபாரதம் போல் குடும்ப சண்டைகளாக்கி வெறுப்பை விதைத்து, வளர்த்து வியாபாரம் செய்வது தான் நவீன யுக்தி. அந்த மசாலாதான் ருசிக்கிறது. இந்தத் தொடர்களை உணவு தட்டைக் கையில் வைத்துக் கொண்டு கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே தின்னா விட்டால் பலருக்கு சாப்பாடு உள்ளே இறங்காது.

இவ்வாறு பார்க்கும் இடம் எல்லாம் காழ்ப்புணர்ச்சியும் பழி தீர்த்தலும் தான் நியாயம் என்ற வகையில் கருத்துகளை தொடர்ந்து உள்வாங்கி வருவதால் குடும்ப விரிசல்கள் மேலும் விரிந்து உடைகிறது. முதியோர் இல்லங்கள் அதிகரிக்கின்றன. ஏன் புது புது யுக்திகளை தெரிந்து கொண்டு சமுதாயத்தில் குற்றங்களும் அதிகமாகின்றன.

எப்படி கபீர்தாஸ் இவைகளை எல்லாம் காணும் முன்பே இதற்கேற்றாற் போல் பொருத்தமான ஈரடிகளை சொல்லி வைத்திருக்கிறார் என்று ஆச்சரியம் ஏற்படுகிறது.

क्रोध अगनि घर घर बढी, जलै सकल संसार ।
दीन लीन निज भक्त जो, तिनके निकट उबार ॥


வெறுப்பின் சுவாலை சூழுதே, மனைமனையும் பற்றி எரியுதே
அறிவாய் உய்யும் வழியதே, அடியவர் அன்பில் திளைப்பதே


दसौं दिसा से क्रोध की, उठी अपरबल आग ।
सीतल संगत साध की, तहां उबरिये भाग ॥


பகைமை பரவுது பெருங்கனலாய், பத்துத் திசையும் வெகுபலமாய்
தண்மை பொழிவர் தொண்டர்தாம், தஞ்சம் புகுந்திடு அதிவிரைவாய்


இரண்டு ஈரடிகளிலும் கபீர் பரிந்துரைப்பது சான்றோர்களின் உதவியால் மனதில் வளரும் வெறுப்பு என்னும் நச்சுப்பொருளை தவிர்க்க முடியும். அதற்கு எப்பொழுதும் மேலோர் துணை அவசியம் என்பதாகும்.

பகைமையும் அன்பும் இருளும் ஒளியும் போல. Mutually exclusive. ஒன்றிருந்தால் இன்னொன்று இருக்க முடியாது.

ஆகையால் பிடிவாதமாக மனதில் எழும் அல்லது தூண்டப் பெறும் வெறுப்பு உணர்ச்சிகளைக்கூட வெறுத்து ஒதுக்க வேண்டும். நம் நல்லெண்ணங்களைப் புரிந்து கொள்ளாமல் நம் மீது வெறுப்பை கொட்டுபவர்களிடமிருந்து விலகி நிற்பதே நலம். குறைந்த பட்சம் நாம் வெறுப்பை விதைக்காமல் இருக்கலாம் அல்லவா!

கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி
இடித்து நீர் கொள்ளினும் இன்சுவைத்தே யாகும்
வடுப்பட வைதிறந்தக் கண்ணுங் குடிப்பிறந்தார்
கூறார் தம் வாயிற் சிதைந்து


என்று பெரியோர் பெருமையை புகழ்கிறது நாலடியார். கரும்பினைக் கடித்து, கணு நொறுங்குமாறு இடித்து அதன் சாற்றை பிழிந்தாலும் பிழிந்தவர்க்கு அது இனிக்கவே செய்யும். அது போல மனம் புண்படும்படி சிறியவர் திட்டித் தீர்த்தாலும் பெரிய மனதுடைய சான்றோர்கள் அவர்களை திரும்பத் திட்ட மாட்டார்கள். அவர்களுடைய மேன்மையான நடத்தை இன்பம் தருவதாகவே இருக்கும்.

அதற்கு தேவையான மனப்பான்மையை அவர்கள் எப்படிப் பெறுகிறார்கள்? நிறைந்த அன்பினால் வரும் தன்னம்பிக்கை அது. தன்னம்பிக்கை உடையவனை குலைக்கமுடியாது. அவன் கொண்ட கொள்கையில் மாற்றம் இராது.

சிலம்பம், கராத்தே, குங்ஃபூ போன்ற தற்காப்பு முறைகளை கற்றவர்கள் வெகு எளிதில் கோபம் அடைவதில்லையாம். அதன் பின்ணணி அவர்களுக்கு இருக்கும் தன்னம்பிக்கையே. அவர்களுக்குத் தெரியும் எதிரியின் பலவீனமே அவர்களின் முன்கோபமும் வெறுப்புணர்ச்சியுந்தான் என்பது. அவர்கள் எதிரியை தலைமேல் அமரும் ஈயைப் போல தாங்குவர் என்கிறது இன்னொரு செய்யுள்

மதிதிறப் பாரும் இறக்க மதியா
மிதித்திறப்பாரும் இறக்க -மிதித்தேறி
ஈயும் தலைமேல் இருத்தலால் அஃதறிவார்
காயும் கதமின்மை நன்று

(கதம்= கோபம்; காய்தல்=வருத்துதல்)

மனதில் அன்பு பெருகும் போது பெரும் தியாகத்திற்கு கூட தயாராகி விடுகிறது நம் உள்ளம். அன்பில் சிறந்தவர் தமக்கு வெற்றி தரத் தக்க ஆற்றலையும் வலிமையையும் கூட விட்டுக் கொடுக்க தயங்க மாட்டார்கள் என்பதை ஏனாதிநாதர் நாயனாரின் தியாக வரலாற்றின் மூலம் அறிகிறோம்.

கும்பகோணத்திற்கு* தென்கிழக்கில் ஏனநல்லூர் என்ற ஊரில் வசித்தவர் ஏனாதிநாதர். அரச குடும்பத்தினருக்கு வாள் வித்தை பயிற்றுவிப்பது அவருடைய தொழில். வாள் வித்தையில் மிகச் சிறந்த அவ்வீரர் தொழிலின் மூலம் தமக்குக் கிடைத்த வருவாயை சிவனடியார்களின் சேவைக்கென பயன்படுத்தி சிவத் தொண்டிலும் சிறப்புற்றிருந்தார். அவர் புகழ் எல்லாத் திசைகளிலும் பெருகி வளர்ந்தது.
(* காஞ்சிபுரத்தருகே உள்ள ஏனநல்லூர் என்றும் சொல்வதுண்டு)

அதே காலத்தில் அதிசூரன் என்னும் இன்னொரு வாள் ஆசிரியனும் இருந்தான். தன்னை விட அதிகம் வாட்கலை கற்றவர் இல்லை என்ற செருக்குடன் திரிந்தான். அவனுடைய தற்பெருமையே அவனுடைய தொழில் மங்குவதற்கு காரணமாயிற்று. அதைப் புரிந்து கொள்ளாத மூடன் ஏனாதிநாதர் மேல் பொறாமை கொண்டான். அவரை வெற்றி கொண்டால் தன் புகழ் ஓங்கும் என்றெண்ணி அவரையும் அவரைச் சேர்ந்தவர்களையும் போருக்கு அழைத்தான்.

இருதரப்பிலும் உள்ளோர் மிகக் கடுமையான போரில் ஈடுபட்டனர். அதிசூரன் தோற்கும் நிலைக் கண்டதும் களத்தை விட்டோடினான். தனது தோல்வியை அவனால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை. எனவே சூழ்ச்சியால் வெல்லும் எண்ணத்துடன் ஏனாதிநாதருக்கு தனிப் போர் செய்ய தூது விட்டான். நரிக்கு சிங்கம் பயப்படுமா? அதனையும் ஏற்று வாளும் கேடயமும் ஏந்தி போர்களம் புகுந்தார். கேடையத்தால் முகத்தை மறைத்தபடியே வாள் வீசி வந்த அதிசூரனுக்கு ஏனாதிநாதரின் தாக்குதலை தாங்க இயலாமல் போனபோது தம் முகத்தை மெள்ள அவர் காணுமாறு கேடயத்தை விலக்கினான். அப்போது அதிர்ச்சி ஏற்பட்டது ஏனாதிநாதருக்கு. அதை பெரிய புராணம் இப்படி உரைக்கிறது.

கண்ட பொழுதே ’கெட்டேன்! முன்பு இவர் மேற்காணாத
வெண் திருநீற்றின் பொலிவு மேற்கண்டேன் - வேறு இனி என்?
அண்டர்பிரான் சீர் அடியார் ஆயினர்
’ என்று மனம்
கொண்டு ’இங்கு இவர் தம் கொள்கைக் குறிவழி நிற்பேன்’ என்று (645)


கைவாளுடன் பலகை நீக்கக் கருதியது
செய்யார் ”நிராயுதரைக் கொன்றார் எனும் தீமை
எய்தாமை வேண்டும் இவர்க்கு”
என்று இரும் பலகை
நெய்வாளுடன் அடர்த்து நேர்வார் போல் நேர் நின்றார்
(646)

(அடர்த்து நேர்வார் போல்= சண்டையிடுபவர் போல)

அதுவரை போரில் வெற்றி பெற வேண்டும் என்றிருந்த குறிக்கோள் போய், மடை திறந்த வெள்ளம் போல் திருநீற்றைக் கண்ட உடனேயே சிவபெருமான் பால் அன்பு பெருக்கெடுத்தது. சிவனடி்யார் சித்தமே சிவன் சித்தம் என தன் உயிரையும் தர தயாராகி விட்டார் ஏனாதிநாதர். போதாதற்கு நிராயுத பாணியை கொன்றதாக அவப் பெயர் அவருக்கு வந்து விடக்கூடாது என்று சண்டையிடுபவர் போல் பாசாங்கு செய்து அதிசூரன் வாளினால் மரணத்தைத் தழுவினார்.

அதிசூரன் சிவனடியார்களுக்கு ஏனாதிநாதர் துன்பமிழைக்க மாட்டார் என்ற கொள்கையைப் பயன்படுத்தி சிவனடியார் வேடம் பூண்டு வஞ்சகமாக அவரைக் கொன்றான் என்பதை ”முன்பு இவர் மேற்காணாத வெண் திருநீற்றின் பொலிவு..” என்ற வாசகங்களால் அறிகிறோம்.

வஞ்சகத்தைப் புரிந்து கொள்ளாத மூட பக்தியிது என்று மனித குலம் நினைக்கலாம். ஆனால் அதற்கு சேக்கிழார் சொல்லும் பதில்;

மற்றினி நாம் போற்றுவது என் ? வானோர் பிரான் அருளைப்
பற்றலர் தம் கைவாளால் பாசம் அறுத்து அருளி
உற்றவரை என்றும் உடன் பிரியா அன்பு அருளிப்
பொற்கொடியாற் பாகனார் பொன்னம்பலம் அணைந்தார்
.
(பற்றலர் =பகைவன்)

பகைவனுடைய வாளாலேயே உலகப் பாசத்தை அறுத்து உடன்பிரியாமல் தன்னுடன் இணைத்துக் கொண்ட சிவபெருமானது பெருமையை போற்றுவது எங்ஙனம் ? என்று சொல்லி இறைவன் புகழுக்காக உயிரைக் கொடுப்பதே மேலான செயல் என்று வலியுறுத்துகிறார்.

அன்பெனும் ஊற்று வெளிப்படுவதற்கு ஊற்றுக் கண் ஒன்று வேண்டும். ஏனாதிநாதர் அதைச் சிவச்சின்னமாக பகைவனின் நெற்றியில் அணிந்த திருநீற்றில் கண்டார். இனி வேறு என்? அண்டர் பிரான் சீரடியார் ஆயினர் ,,இவர்தம் கொள்கை குறிவழி நிற்பேன் “ என்று தம்மவராக பாவித்து அவருடைய தேவையே பெரிது என்று முடிவு செய்கிறார்.

மொழி தெரியாத மாநிலத்தில் தமிழ் பேசுபவரைக் கண்டால் உடனே அன்பு பொங்குகிறது. கண்காணாத தேசத்தில் இந்தியர் என்றாலே ஒருமை பாராட்டி மகிழ்கிறது மனம்.

நல்ல சத்சங்கங்களிலே புத்தகங்களிலே மகான்களின் வாழ்க்கையிலே தினம் ஈடுபாடு கொள்ளும் போது பல வகைகளிலே அது திறந்து வெளிப்பட வாய்ப்புண்டு.
எல்லாமே அவனாகி நிற்கும் அடிப்படை, சத்சங்கங்களின் மூலம் புரிய வரும் போது யார் யாரிடம் எதற்காக வேற்றுமை பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் வளர்ந்து, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை வருகிறது.

மழையில் நனைந்த விறகு தீயினை ஏற்காது. அன்பில் நனைந்து விட்ட உள்ளமும் வெறுப்பினை ஏற்காது. அந்நிலையில் வெறுப்பை உமிழும் அன்பரிடமும் கூட வெறுப்பு கொள்ளாது அன்பையே பாராட்டும் குணம் மேலோங்குகிறது.

அதனால்தான் கபீர் ”அறிவாய் உய்யும் வழியதே; அடியவர் அன்பில் திளைப்பதே” என்றும் ”தண்மை பொழிவர் தொண்டர்தாம், தஞ்சம் புகுந்திடு அதிவிரைவாய் ” என்றும் அறிவுறுத்துகிறார்.

பகைமை உணர்ச்சிகளை வேரறுக்க அன்பே சிறந்த சாதனம். மனைமனையும் பற்றி எரியுது என்பது பொய்யாகி குடும்பங்களில் மகிழ்ச்சி திரும்ப அன்பே வழி. அன்பே சிவம்.

18 comments:

  1. இந்தப் பதிவைப் படிப்பதற்கே மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது ஐயா.

    ReplyDelete
  2. i am the first. :)
    //பகைமையும் அன்பும் இருளும் ஒளியும் போல. Mutually exclusive. ஒன்றிருந்தால் இன்னொன்று இருக்க முடியாது. //
    //பகைமை உணர்ச்சிகளை வேரறுக்க அன்பே சிறந்த சாதனம்.//
    வெகு அழகாக சொல்கிறீர்கள் கபீரன்பன் ஐயா.

    ReplyDelete
  3. // மழையில் நனைந்த விறகு தீயினை ஏற்காது. //

    எத்துணை உண்மையிது ! சொல்லிப்புரியாது. அனுபவித்தால்தான் தெரியும்.
    இருப்பினும் ஒரு வார்த்தை.

    அன்பெனும் மழையில் நனிந்த விறகினை தீ அண்டிடுமோ ?
    ஆயினும் , இவ்விறகெனும் என் மனத்தினுள்ளே காமம், க்ரோதம், மதம், லோபம், மாத்சரியம் முதலான் பறவைகள் சிறகடித்துப் பறக்கின்றனவே !!!
    அவை அடங்கவேண்டும். அச்சிறகுகள் செயல‌ற்றுப்போகவேண்டும்.அப்பொழுதுதான்
    என் மனம் அன்பெனும் மழையில் நனைவது சாத்தியம்.

    மழை வருகிறது. பார்க்கிறோம். ஒதுங்கி நிற்கிறோம். நனைய மனம் வரவில்லை.

    அவனது அருள் வேண்டும். கர்ம வினை தொலையவேண்டும். அப்பொழுதல்லவோ மழையில் நனைவோம்.அதுவரை என்ன செய்வது ?

    க்பீரன்பனின் இதுபோன்ற நல்வார்த்தைகளையாவது இனி கேட்போம் என்ற
    உறுதி கொள்வோம்.

    சுப்பு ரத்தினம்.

    ReplyDelete
  4. அன்பில் நனைந்து விட்ட உள்ளமும் வெறுப்பினை ஏற்காது.

    golden words.சொல்லிப்புரியாது. அனுபவித்தால்தான் தெரியும்.

    ReplyDelete
  5. //மழையில் நனைந்த விறகு தீயினை ஏற்காது. அன்பில் நனைந்து விட்ட உள்ளமும் வெறுப்பினை ஏற்காது. அந்நிலையில் வெறுப்பை உமிழும் அன்பரிடமும் கூட வெறுப்பு கொள்ளாது அன்பையே பாராட்டும் குணம் மேலோங்குகிறது.//

    நம் நேரத்தை விழுங்கும் corporate world-ல்
    இது சரிப்பட்டு வருமா? என யோசித்து நம்பிக்கையிழந்த வேளையில்
    இந்தப் பதிவை படிக்க நேர்ந்தது....

    துணிவைக் கொடுத்தமைக்கு நன்றி கபீரன்பன்!

    ReplyDelete
  6. @ bxbybz :

    @ Radha :

    வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  7. நன்றி சுப்பு ரத்தினம் சார்

    //இவ்விறகெனும் என் மனத்தினுள்ளே காமம், க்ரோதம், மதம், லோபம், மாத்சரியம் முதலான் பறவைகள் சிறகடித்துப் பறக்கின்றனவே !!!அவை அடங்கவேண்டும். அச்சிறகுகள் செயல‌ற்றுப்போகவேண்டும்.அப்பொழுதுதான்
    என் மனம் அன்பெனும் மழையில் நனைவது சாத்தியம்.

    மழை வருகிறது. பார்க்கிறோம். ஒதுங்கி நிற்கிறோம். நனைய மனம் வரவில்லை //

    ஒரு முக்கியமான உண்மையை அழகாக சொல்லிவிட்டீர்கள். எதுவுமே தொடர்ந்த பயிற்சியில்லாமல் கைகூடாது என்பதால்தான் கபீர் மீண்டும் மீண்டும் சத்சங்கத்தை வலியுறுத்துகிறார்.

    தங்கள் விளக்கம் யாவருக்கும் பயனளிக்கும். மிக்க நன்றி

    ReplyDelete
  8. @ பாலு சார்,
    பாராட்டியதற்கு நன்றி.

    @ எடிட்டர் சார்,
    //துணிவைக் கொடுத்தமைக்கு நன்றி //
    அவனல்லவோ ஆட்டி வைக்கிறான் :)

    இடுகை தங்கள் இருவருக்கும் பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி. நன்றி

    ReplyDelete
  9. ///பகைவனுடைய வாளாலேயே உலகப் பாசத்தை அறுத்து உடன்பிரியாமல் தன்னுடன் இணைத்துக் கொண்ட சீவபெருமானது பெருமையை போற்றுவது எங்ஙனம் ?///

    சிவபெருமானது-சீவபெருமானது

    சரியை, கிரியை, யோகம், ஞானம் -என்ற விதத்தில் ஒரு திருத்தம் அவ்வளவுதான் !

    மற்றபடி அருமை.

    ReplyDelete
  10. மிகவும் அருமையான பதிவு,

    ஆத்திரமும் கோபமும் மனிதனின் மனதை மாசுபடுத்திவிடும்..

    ReplyDelete
  11. ''அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்''. அருமையான பதிவு. படிப்பதோடு நிறுத்திவிடாமல் வாழ்விலும் பின்பற்ற முயற்சி செய்கிறேன்.

    ReplyDelete
  12. நல்வரவு

    @ கேசவன் ஐயா

    //சிவபெருமானது-சீவபெருமானது
    சரியை, கிரியை, யோகம், ஞானம் -என்ற விதத்தில் ஒரு திருத்தம் அவ்வளவுதான் ! //

    ”சீவன் எனச் சிவனார் என்ன வேறு இல்லை” என்கிற திருமந்திரத்தை நினைவூட்டினீர்கள். மிக்க நன்றி

    @ அன்புடன் மலிக்கா
    ”இறைவனை நேசி, இன்பம் பெறுவாய்” என்று சுருக்கமாக தங்கள் வலைப்பூவில் சொல்லியிருப்பது தானே இங்கும் சொல்லப்பட்டுள்ளது. :)

    @ ..Late Bloomer
    மிக்க நன்றி

    உற்சாகமளிக்கும் பின்னூட்டங்கள அளித்த அனைவருக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  13. //அதுவரை போரில் வெற்றி பெற வேண்டும் என்றிருந்த குறிக்கோள் போய், மடை திறந்த வெள்ளம் போல் திருநீற்றைக் கண்ட உடனேயே சிவபெருமான் பால் அன்பு பெருக்கெடுத்தது. சிவனடி்யார் சித்தமே சிவன் சித்தம் என தன் உயிரையும் தர தயாராகி விட்டார் ஏனாதிநாதர்//

    --இந்த வரிகளைப் படித்ததும் மனது நெகிழ்ந்தது. சிவச்சின்னமாய் வெண்ணீற்றைப் பார்த்த மாத்திரத்திலேயே, சிவபெருமானையே தரிசித்த உணர்வு உள்ளத்தில் மீக்கூர்வ்து,
    அவன் பால் அன்பு பெருக்கெடுத்து, பெருமானுக்கும்--அவன் சின்னமணிந்த அடியாராகத் தோற்றமளிப்பவருக்கும் வேறுபாடு காண உள்ளம் துணியாது, மயங்கி....

    ReplyDelete
  14. //வஞ்சகத்தைப் புரிந்து கொள்ளாத மூட பக்தியிது என்று மனித குலம் நினைக்கலாம். ஆனால் அதற்கு சேக்கிழார் சொல்லும் பதில்;

    ...
    பகைவனுடைய வாளாலேயே உலகப் பாசத்தை அறுத்து உடன்பிரியாமல் தன்னுடன் இணைத்துக் கொண்ட சிவபெருமானது பெருமையை போற்றுவது எங்ஙனம் ? என்று சொல்லி இறைவன் புகழுக்காக உயிரைக் கொடுப்பதே மேலான செயல் என்று வலியுறுத்துகிறார்.//

    அற்புதம்!

    ReplyDelete
  15. //பகைமை உணர்ச்சிகளை வேரறுக்க அன்பே சிறந்த சாதனம். மனைமனையும் பற்றி எரியுது என்பது பொய்யாகி குடும்பங்களில் மகிழ்ச்சி திரும்ப அன்பே வழி. அன்பே சிவம்.
    பகைமை உணர்ச்சிகளை வேரறுக்க அன்பே சிறந்த சாதனம். மனைமனையும் பற்றி எரியுது என்பது பொய்யாகி குடும்பங்களில் மகிழ்ச்சி திரும்ப அன்பே வழி. அன்பே சிவம்.
    பகைமை உணர்ச்சிகளை வேரறுக்க அன்பே..//

    கட்டுரையில் கடைந்தது, திரண்டெழுந்த உணர்வு ஏற்படுகிறது.
    மனம் ஒன்றிய ஒரு அனுபவத்தைத் தந்தமைக்கு மிக்க நன்றி, கபீரன்ப!

    ReplyDelete
  16. உங்கள் எழுத்தும் பதிவும் ஆழ்ந்த காயத்துக்குப் புனுகு தடவுவது போல இதமளிக்கிறது.
    எனக்கென்னமோ, நாம் தும்பை விட்டு விட்டோம் என்றே தோன்றுகிறது. வாலைமட்டும் பிடித்துக்கொண்டிருக்கிறோம். இந்த வாலும் நம்மைவிட்டுக் கழன்றுகொள்ள அதிகநாட்கள் ஆகா என்றே தோன்றுகிறது.
    காரணம் நம்மைப் பாழ்படுத்திக்கொண்டிருக்கும் ஆரோக்யமற்ற அரசியலும், கேளிக்கை சாதனங்களும்தான்.
    ஆசாரமான குடும்பங்களின் கூடங்களில் இப்பொழுது தொலைக்காட்சிகள் ஆட்சி நடத்திக் கொண்டிருக்கின்றன.
    எனினும் தங்களைப் போன்ற நல்லதே நடக்கும் என்ற நன்னம்பிக்கை கொண்டவர்களால் ஒரளவு ஒழுங்கீனங்கள் தடைபட்டுக்கொண்டிருக்கின்றன.

    ReplyDelete
  17. நல்வரவு ஜீவி, சுந்தரா

    @ஜீவி : அனுபவித்து படித்து ஆதரிக்கிறீர்கள். தங்கள் அன்புக்கு கடமைப்பட்டிருக்கிறேன். நன்றி

    @ சுந்தரா :
    //இந்த வாலும் நம்மைவிட்டுக் கழன்றுகொள்ள அதிகநாட்கள் ஆகா என்றே தோன்றுகிறது.//

    நல்லதை எடுத்துக் கொண்டு அல்லாதவற்றை விட்டு விடும் பக்குவம் வரும் பொழுது எல்லாம் நல்லதாகவே இருக்கும். நம் நாட்டில் அந்த விவேகம் நீறு பூத்த நெருப்பு போல எப்போதும் கனன்று கொண்டிருக்கிறது என்றே நம்புகிறேன். பல வழிகாட்டிகள் வந்து கொண்டே இருப்பர். மந்தையை மேய்ப்பவன் காப்பாற்றாமல் விட்டு விடுவானா !:)

    ReplyDelete
  18. //இவ்வாறு பார்க்கும் இடம் எல்லாம் காழ்ப்புணர்ச்சியும் பழி தீர்த்தலும் தான் நியாயம் என்ற வகையில் கருத்துகளை தொடர்ந்து உள்வாங்கி வருவதால் குடும்ப விரிசல்கள் மேலும் விரிந்து உடைகிறது. முதியோர் இல்லங்கள் அதிகரிக்கின்றன. ஏன் புது புது யுக்திகளை தெரிந்து கொண்டு சமுதாயத்தில் குற்றங்களும் அதிகமாகின்றன.//

    சத்தியமான வார்த்தைகள். கட்டிய கணவனையே பழிவாங்கும் மனைவியும், மனைவியைப் பழி வாங்கும் கணவனும் கூட இடம் பெறுகின்றனர் இந்தப் பட்டியலில். இந்த சீரியல் மோகம் என்று ஒழிகிறதோ புரியலை! வீட்டில் இருக்கும் வழக்கமான உறுப்பினர்களையே தொல்லை என எண்ண வைக்கும் தொடர்களுக்கு முன்னால் அன்பு வளர்வது எப்படி? புரியாமல் திகைப்பாய்த் தான் இருக்கிறது.

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி