சுயநலம் என்கிற எஜமானனின் நாய் போன்றது சந்தேகம் என்னும் குணம். அதனால்தானோ என்னவோ அதிகம் சந்தேகப் படுபவர்களுக்கு சந்தேகப்பிராணி என்று சொல்கிறார்கள் !
சிலருக்கு எதற்கெடுத்தாலும் சந்தேகம். யார் எது பேசினாலும் செய்தாலும் அதில் உள்நோக்கம் ஒன்றைத் தேடுவார்கள். அப்படி செய்யும் போது பத்தில் ஒன்றோ இரண்டோ சரியாகப் போய்விடும். உடனே - ஜோதிடர்கள் போல-அதையே தம் திறமைக்கு சான்றாக சொல்லிக் கொண்டு மேன்மேலும் தம்மைச் சுற்றி நடக்கும் எல்லா விஷயங்களிலும் சந்தேகப் பார்வை கொண்டு விமரிசனங்கள் தருவார்கள்.
வேலை செய்யும் அலுவலகங்களில் அதிகாரிகளின் போக்கிற்கும் சொற்களுக்கும் தமது கற்பனையைச் சேர்த்து தாங்களும் பயந்து அடுத்தவர்க்கும் பீதி கிளப்பி விடுவார்கள். இதனால் தம் நிம்மதியையும் இழந்து அடுத்தவர் நிம்மதியையும் கெடுத்துக் கொண்டிருப்பார்கள். சில அவசரக்குடுக்கைகள் அவ்விதமான ஹேஷ்யங்களை நம்பி வார்த்தைகளை உளறிக் கொட்டி சங்கடத்தில் ஆழ்வதும் உண்டு.
இந்த சந்தேகம் என்னும் குணம் மிகப்பெரும் ராமாயணக் காவியத்திற்கே அடிப்படையாகிறது. மகாபாரதத்தில் பாண்டவர்கள் நம்பி மோசம் போயினர். கௌரவர்களின் வஞ்சக எண்ணங்களே அதில் விரவி வருகிறது. ஆனால் ராமாயணத்தில் முக்கியத் திருப்பங்கள் எல்லாமே சந்தேக மனப்பான்மைக்கு உள்ளானவர்கள் உருவாக்கியவைதாம். அடிப்படையில் நல்லவர்கள் ஆனால் சந்தேகத்திற்கு பலியாகி தமக்கும் பிறருக்கும் தீமை வரவழைத்துக் கொண்டனர்.
ஒரு வகையில் ராமாயணத்தை “சந்தேகக் காவியம்” என்று கூட சொல்லலாம்.
முதலில் கைகேயின் சந்தேகம்.
பின்னர் லக்ஷ்மணனுக்கு பரதன் மேல் ஏற்பட்ட சந்தேகம்.
[நல்ல வேளை ராமன் உடனிருந்ததனால் ஒரு அபத்தமான போர் தவிர்க்கப் பட்டது].
வாலிக்கு தன் தம்பி சுக்ரீவன் ஏமாற்றி விட்டதாக வந்த சந்தேகம்.
சீதைக்கு லக்ஷ்மணன் மேல் வந்த சந்தேகம்.
கடைசியாக விபீஷண்ன் மேல் ராவணனுக்கு ஏற்பட்ட சந்தேகம்.
இராவணன் நல்லவனா ? ஆணவம் நிறைந்தவன் ஆயினும் பல சிறப்பான குணங்கள் கொண்டவன் என்று போற்றப்படுபவன்.
”என் கண்முன்னே நிற்காதே போய்விடு” என்று பொங்கும் சினத்துடன் கூறினாலும் விபீஷணனையும் அவனைச் சார்ந்தவரையும் அவன் சிறையில் அடைக்காது விட்டானே, அது அவனுக்கு விபீஷணன் மேல் இருந்த நன்மதிப்பையும் அன்பையும் அல்லவா குறிக்கிறது !
ஆயவன் வளர்த்த தன் தாதை யாக்கையை
மாயவன் பிளந்திட மகிழ்ந்த மைந்தனும்
ஏயும்நம் பகைஞனுக்கு இனிய நண்பு செய்
நீயுமே நிகர்; பிறர் நிகர்க்க நேர்வரோ
[நம் பகைவருடன் நட்பு கொள்ள விழையும் நீ ,தன்னை வளர்த்த தந்தை இரணியன் உடலை திருமால் பிளக்கும் போது மகிழ்வுற்ற பிரகலாதனுக்கு, நிகர். தன் அழிவுக்கு விபீஷணனே காரணமாவன் என்பதை குறிப்பால் உணர்த்துதல்]
அஞ்சினை ஆதலின் அமர்க்கும் ஆள் அலை
தஞ்சு என மனிதர்பால் வைத்த சார்பினை
வஞ்சனை மனத்தனை ; பிறப்பு மாற்றினை
நஞ்சினை உடன்கொடு வாழ்தல் நன்மையோ
என்றெல்லாம் கம்பர் சொல்லும் போது ராவணனுக்கு தன் தம்பி, எதிரிகளுடன் சேர்ந்து இன்னல் விளைவிக்கக் கூடும் என்று தெரிந்திருந்தது. ஆயினும் தன்னம்பிக்கை மிகுந்து, வானரக் கூட்டத்தோடு வந்திருக்கும் மனிதன், தன் வலிமைக்கு முன் ஏதும் செய்ய இயலாது என்கிற துணிவில் அவனை உயிரோடு தப்பிக்க விட்டான் என்பதும் புரிகிறது.
அண்ணன் தம்பி உறவு முற்றிலுமாக முறிந்து விட்டது.
வாலிக்கும் சுக்ரீவனுக்கும் இடையேயான மனப்பிளவும் வாலியின் அளவற்ற பலமும், ஆணவமும், சுக்ரீவன் தன் அரசையும் மனைவியையும் கபடமாகப் பறித்துக் கொள்ள செய்த சதி என்ற சந்தேகமுமே காரணமாயின.
மனம் நெருங்கியவரோடு ஏற்படும் பிளவு மனவேதனையைத் தருவதாகும். கபீர்தாஸரின் வரிகளில் சொல்வதானால்;
मेरे मन में परि गई, ऎसी एक दरार ।
फाटाफटिक पषान ज्यूं , मिलै न दूजी बार ॥
குடிகொண்டது ஐயம் என்னுள், உடைந்தது மனமும் இரண்டாய்
வெடித்தப் பாறையைப் போன்றே, ஒட்டாது மீண்டும் ஒன்றாய்
மாற்று
வெடித்தது ஐயம் என்னுள், பிளந்தது மனமும் அங்கே
வெடித்தப் பாறை போலே, இரண்டு ஒன்றாவது எங்கே
ஒருவருள் சந்தேகம் ஏன் தலையெடுக்கிறது என்றால் தம்முடைய தன்னலத்திற்கு ஏதேனும் பங்கம் வந்துவிடுமோ என்ற கவலையே முக்கிய காரணமாக இருக்கும்.
பல சமயங்களில் மனதில் ஏற்படும் பீதியின் காரணமாகவும் மனதில் சந்தேகக் குணம் புகுந்து கொள்கிறது.
சீதையின் மனதில் சந்தேகம் தலை தூக்காமலிருந்திருந்தால் லக்ஷ்மணனுடையக் காவலில் பத்திரமாக இருந்திருப்பாள். மாரீசனின் பொய் குரலை நம்பி பீதி அடைந்த போது லக்ஷ்மணன் கூறிய தைரியமான வார்த்தைகள் அவளுக்கு சமாதானம் தரவில்லை.
பயத்தின் உச்சியில் சிந்திக்கும் திறனிழந்து, அந்த உத்தம குணத்தானை ஏசி, பிறன்மனை நயத்தலாகிய வஞ்சக எண்ணம் கொண்டவன் என்று மாசுடைய உள் நோக்கங்களைக் கற்பித்து அவனுக்கு பெரும் மன வேதனையை உண்டாக்கி விடுகிறாள். வால்மீகி ராமாயணத்தைப் படிப்பவர்களுக்கே மனவேதனை தரும் குற்றச்சாட்டுகள் அவை.
அந்நிலையில் லக்ஷ்மணனின் மனது எப்படியிருந்திருக்கும் ? காதிலே ஈட்டியைக் கொண்டு துளைத்தது போலிருந்தது என்று வால்மீகி சொல்கிறார்.
[அதனால் தானோ என்னவோ கம்பராமாயணத்தில் கம்பர் அந்த குற்றச் சாட்டுகளை தவிர்த்து சீதையின் பெருமையை குறையாத வண்ணம் பாதுகாக்க முனைந்தார் போலும்].
धरती फाटै मेघ मिलै, कपडा फाटै डौर ।
तन फाटै को औषधि, मन फाटै नहीं ठौर ॥
வெடித்த மண்ணுக்கு மழையுண்டு, விரிந்த கிழிசலுக்கு தையலுண்டு
வெடித்த புண்ணுக்கு மருந்துண்டு, உடைந்த மனதுக்கு என்னவுண்டு ?
கபீர்தாஸரின் இந்த ஈரடிக்கு பொருத்தமான இன்னொரு காட்சியும் ராமாயணத்தில் வெகு முன்பே வந்து விடுகிறது.
கைகேயின் வரங்களை அளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்த தசரத சக்ரவர்த்தியின் உடைந்த மன நிலையை கம்பர் சொல்லும் போது
வீழ்ந்தான், வீழா வெந்துயரத்தின் கடல் வெள்ளத்து
ஆழ்ந்தான்; ஆழா அக்கடலுக்கு ஓர் கரை காணான்
சூழ்ந்தான் துன்பம் சொற் கொடியாள் சொல்கொடு நெஞ்சம்
போழ்ந்தாள், உள்ளப் புன்மையை நோக்கிப் புலர்கின்றான்.
[கொடியாள் சொல்கொடு நெஞ்சம் போழ்ந்தாள்= கொடியவள் கடும் சொற்கள் கொண்டு நெஞ்சைப் பிளந்தாள்; புலர்கின்றான் =வாடுகின்றான் ]
கடுஞ் சொற்களை கொண்டு மன்னனின் மனதைப் பிளந்த அதே கைகேயிதான் சற்று முன்வரைக் கூட ராமன் மேலிருக்கும் பேரன்பினால் மந்தரையை ”அறிவற்றவளே நீதி அல்லாதவற்றை சொல்கின்ற உனது புன்மையான நாவை துண்டிக்காமல் விட்டு விடுகிறேன், இங்கிருந்து போய்விடு ” என்று கடிந்துரைத்தாள்
போதி என் எதிர் நின்று; நின் புன்பொறி நாவை
சேதியாது இது பொறுத்தனன் ; புரம் சிலர் அறியின்
நீதி அல்லவும் நெறி முறை அல்லவும் நினைந்தாய்
ஆதி, ஆதைன் அறிவு இலி அடங்குதி என்றாள்.
ஆனால் அத்தகையவள் மனதிலே மந்தரை விதித்த சந்தேகமெனும் விதை எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தி விட்டது.
கோசலை தன்னையும் தன் மகனையும் தள்ளி வைத்து விட்டால் தசரதனின் காலத்திற்குப் பின்னால் தங்களுடைய நிலை என்னாகுமோ என்கிற சந்தேகம் கைகேயியை முறையற்ற வரங்களை கேட்க வைத்தது.
அன்றும் இன்றும் என்றும் சந்தேகமென்னும் நோய் மனிதர்களை தொடர்ந்து பீடித்து வருகிறது.
அரசியல், பதவிப் போராட்டங்களில் பயன்படுத்தப்படும் பிரித்தாளும் சூழ்ச்சி இந்த சந்தேகக் குணத்தை வைத்தே நடத்தப்படுவது. அது பஞ்ச தந்திரங்களிலே ஒன்று.
ஔரங்கசேப் மன்னனின் மிகப் பெரும் பலவீனமாகக் கருதப்பட்டது இந்த சந்தேகக் குணந்தான். அதனால் அவன் இழைத்த அநீதிகள் தான் எத்தனை. பெற்ற தந்தை ஷாஜஹானை எட்டு வருட காலம்- சாகும்வரையில் -சிறை வைத்திருந்தான். உடன் பிறந்தவனும் அரசுக்கு உரியவனும், சிறந்த பண்புகளுடையவனுமான தாரா ஷுகோ-வை அவமானப்படுத்திக் கொலை செய்தான். அவனைத் தவிர இன்னும் இரு சகோதரர்களையும் கொன்று தன் அதிகாரத்தை நிலை நாட்டினான். தன் மகன் பகதூர் ஷா வையும் சில காலம் சிறை வைத்திருந்தான்.
இவையெல்லாம் குடும்பத்துள்ளே நடைபெற்ற அநீதிகள். முகலாய ஆட்சியின் வீழ்ச்சிக்கு காரணமானதே ஔரங்கசேப்-பின் முறையற்ற ஆட்சிதான் என்று சரித்திர ஆசிரியர்கள் சொல்கிறார்கள்.
சந்தேகக் குணம் உடையவர்களின் கையில் அதிகாரம் இருந்தால் பொறுப்பற்றவர்களாகி விடுகிறார்கள். அது அழிவுக்கு வழிகோலும். அதிகாரம் அற்றவர்களானால் கவலையுற்று நோய் வயப்பட்டு தம்மையே அழித்துக் கொள்வர். எப்படிப் பார்த்தாலும் அவர்களுக்கு சந்தோஷம் என்பது கிடையாது.
அதனால்தான் பகவத்கீதை (4-40)
ந அயம் லோக: அஸ்தி , ந பர: , ந ஸுகம், ஸம்ஷய ஆத்மன:
’சந்தேகிகளுக்கு இவ்வுலகத்திலும் பர உலகத்திலும் சுகம் என்பது கிடையாது' என்று அறுதியிட்டு சொல்கிறது.
சந்தேகிகளாக இருந்து மனக்கஷ்டத்திற்கு உள்ளாவதை விட, நம்பி மோசம் போனவர்களாகி கஷ்டப்படுவது எவ்வளவோ மேல். பாண்டவர்களுக்கு கண்ணனுடைய துணை இருந்தது போல நம்பியவர்கள் பக்கம் இறைவன் துணை எப்போதும் இருக்கும். அவர்கள் கடவுள் நம்பிக்கையால் துன்பங்களைத் தாங்கிக் கொள்ளும் மனோதைரியம் பெற்று அறம் வ்ழுவி நடப்பதில்லை.
அவ்வகை மனோ தைரியம் இல்லாதவ்ர்கள் தான் சந்தேக புத்தி உடையவராகி, தம் புத்திசாலித்தனத்தினாலேயே எல்லாவற்றையும் எதிர்கொள்ள எத்தனிக்கிறார்கள். அப்போது இறைவன் தூர நின்று வேடிக்கைப் பார்க்கிறான். ஆகவே சந்தேகிகள் இறைவன் மேல் நம்பிக்கை இருப்பதாகச் சொல்லிக் கொண்டாலும் அது உண்மையான பக்தியாக இருப்பதில்லை.
இந்தப்பக்கம் வந்து ரொம்ப நாளாகிடுச்சு கபிரன்பரே...மெயிலிலேயே படிச்சுடறதால பின்னூட்டம் பக்கம் வரல்லை....எப்போதும் போல அருமை.
ReplyDeleteதன்னைத் தானே நம்பாதது சந்தேகம்!
ReplyDeleteஇப்படி ஒரு பழைய திரைப்படப் பாடல் உண்டு. தன்மீதே நம்பிக்கை இல்லாதவர்களுக்கு சந்தேகம் வரும்!
சந்தேகம் வந்தால் அடுத்தடுத்து என்ன வரும் என்பதைக் கம்பரிடமிருந்து ஆரம்பித்துக் கடைசியில் ராமாயணத்தையே சந்தேகக் காவியமாக வர்ணித்து சொல்லியிருக்கும் பாங்கு மிக அழகாக இருக்கிறது!
நல்வரவு மௌலி சார்,
ReplyDelete//..மெயிலிலேயே படிச்சுடறதால பின்னூட்டம் பக்கம் வரல்லை...//
பின்னூட்டம் வந்தாலும் வராவிட்டாலும் கபீரை விரும்பிப் படிக்கும் வாசகர் குழாமில் தாங்களும் உண்டு என்பதை அறிவேன். அவர்களோடு என் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் நேரம் மிக்க மகிழ்ச்சியான பொழுது ஆகும்.
பாராட்டுக்கு நன்றி
வருக கிருஷ்ணமூர்த்தி சார்,
ReplyDelete//தன்னைத் தானே நம்பாதது சந்தேகம்!//
அதுதான் உச்சநிலை என்று நினைக்கிறேன். :)
வருகைக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி.
sorry.
ReplyDeletedisappointing article .
like these to write lot of people there.
pl strict in your writing.
"சந்தேகிக்கு உண்டோ சுகம் ?"
ReplyDeleteஅருமை.அனைவருமே சற்று மனந்திறந்து நினைத்துப் பார்க்க வேண்டிய விடயம்.
இதே கருத்து வெண்பாவில் என் முயற்சி.
விந்தை மனத்தினில் வேண்டாத சந்தேகம்
சிந்தை செயலிழக்கச் செய்திடுமே - வந்துறுமே
நிந்தனையும், தன்மேலே நம்பிக்கை தானிழந்த
சந்தேகிக்{கு} உண்டோ சுகம்
வருக பாலு சார்,
ReplyDelete//sorry.
disappointing article //
எண்ணங்களைப் பகிர்ந்து கொள்வதிலே மேலென்பதும் கீழென்பதும் ஏது ? குறிப்பிட்ட கருத்துகளில் முரண்பாடு தெரிகிறதா?
ஆயினும் ஒவ்வொரு முறையும் மிகச் சிறப்பாக வரவேண்டும் என்ற தங்கள் எதிர்பார்ப்பில் எந்த அளவுக்கு இந்த வலைப்பூ தங்கள் நம்பிகை பெற்றிருக்கிறது என்பதை புரிந்து கொண்டு பெருமை கொள்கிறேன்.
தொடர்ந்து கருத்துகளை பகிர்ந்து கொள்ளவும். நன்றி
வாருங்கள் உமா மேடம்,
ReplyDeleteஅற்புதமான வெண்பா.
தங்களுடைய வலைப்பூவில் இணைப்பு தந்தமைக்கும் மிக்க நன்றி.
தொடர்ந்து வாருங்கள். நன்றி
"ajnas casraddadhanas ca
ReplyDeletesamsayatma vinasyati
nayam loko 'sti na paro
na sukham samsayatmanah"
The ignorant, the man without Shraddhâ, the doubting self, goes to destruction. The doubting self has neither this world, nor the next, nor happiness - BAGAVATH GITA CHAPTER 4 VERSE 40
வாருங்கள் ஜயஸ்ரீ,
ReplyDeleteபகவத்கீதையின் முழு ஸ்லோகத்தையும் அதன் பொருளையும் தந்தமைக்கு நன்றி.
தொடர்ந்து வரவும், நன்றி
'இராமாயணத்தில் சந்தேகம்' என்கிற தலைப்பில் ஒரு பட்டிமன்ற உரை கேட்டமாதிரி இருந்தது. நீங்கள் எடுத்துக் கொண்ட பொருளில் அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.
ReplyDeleteஇதிகாசங்கள் கலைடாஸ்கோப் மாதிரி.
திருப்பித் திருப்பிப் படிக்க, எத்தனையோ வர்ணக் கோலங்கள். ஒன்பான் சுவைகளுக்கும் வேறு வேறு எடுத்துக் காட்டுகள் கிடைக்கும். அது தான் அவற்றின் அழகு. எல்லாம் நமக்குப் பாடம் சொல்கிற அழகு.
எதற்கெடுத்தாலும் சந்தேகம் கொள்வது ஒரு நோயாக பரிமாணம் கொள்ளும்.
உடலையே அரித்துக் கெடுத்துவிடும்; கேன்ஸர் மாதிரி.
சந்தேகத்திற்குத் தான் சுகம் கிடையாதே தவிர, அந்த சந்தேகம் தீர்ந்தால் அதுவே பெருத்த சுகத்தை, சந்தோஷத்தைத் தரும். இப்படிப்பட்ட விசித்திர நோய் அது.
எதற்கெடுத்தாலும் சந்தேகம் தான் கூடாதே தவிர, நியாயமான சந்தேகங்கள் என்றும் இதில் ஒரு பிரிவு இருக்கிறது. இந்த வகையான நியாயமான சந்தேகங்கள், நாம் ஏமாளியாகாமல் நமமைக் காப்பாற்றுவதும் உண்டு.
'சின்ன சின்ன ஆசைகள்' மாதிரி, 'சின்ன சின்ன சந்தேகங்கள்'; நியாயமான சந்தேகத்திற்கும், எதற்கெடுத்தாலும் சந்தேகத்திற்கும் வேறுபாடு தெரிந்திருக்க வேண்டும்.
இந்த நியாயமான சந்தேகம் கொள்வதை ஆரம்பப் படியாகக் கொண்டு, எதற்கெடுத்தாலும் சந்தேகத்திற்கு உயராமல் இருப்பதில் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும்.
சந்தேகத்திற்கும், யூகத்திற்கும் நூல் இழைதான் வித்தியாசம்.
விஞ்ஞானிகளுக்கு ஏற்பட்ட சில வகையான சந்தேகங்கள், பரிசோதனை சாலைகளில் பெரும் கண்டுபிடிப்புகளுக்குத் துணையாகவும் இருந்திருக்கின்றன.
எல்லாவற்றிலும் 'கண்டு தெளிதல்' தான் முக்கியமாகப்படுகிறது.
நல்வரவு ஜீவி ஐயா,
ReplyDeleteமிகவும் கவனத்தில் கொள்ள வேண்டிய கருத்தை சொல்லியிருக்கிறீர்கள்.
//'சின்ன சின்ன சந்தேகங்கள்'; நியாயமான சந்தேகத்திற்கும், எதற்கெடுத்தாலும் சந்தேகத்திற்கும் வேறுபாடு தெரிந்திருக்க வேண்டும்.///
இதை விளக்குவதற்காக Doubting Thomas பற்றி பைபிளில் வரும் நிகழ்ச்சியைக் குறித்து வைத்திருந்தேன். பதிவின் நீளம் கருதி சொல்லாமல் விட்டேன்.
சிலுவையில் மரித்த ஏசு உயிர்த்து வந்தார் என்பதை நம்ப மறுத்த சீடருக்காக மீண்டும் அவர் முன் ஏசு தோன்றி உரைத்த சொற்கள் அமரத்துவம் வாய்ந்தவை என்று போற்றப்படுகிறது
"Blessed are they that have not seen, and yet have believed,"
ஆன்மீகத்தில் நம்பிக்கைதான் அவசியம் என்பதையும், சீடருக்கு வந்த நியாயமான சந்தேகத்தை அவரது குருவே தீர்த்து வைப்பார் என்பதற்கும் எடுத்துக் காட்டு இது.
திறமையான நிர்வாகத்திற்கு கண்காணித்தல் அல்லது விழிப்புணர்வு என்ற வகையில் சின்ன சந்தேகங்கள் அவசியம். தாமஸுக்கு வந்தபடி ஆன்மீகத்திலும் கூட தேவைப் படும்.
தாங்கள் குறிப்பிட்டது போல அது வியாதியாக வளர்ந்து விடக்கூடாது.
வரவுக்கும் கருத்து பகிர்தலுக்கும் மிக்க நன்றி ஐயா.
நல்ல பதிவும் பின்னூடங்களும்!
ReplyDeleteவருக தி.வா சார்,
ReplyDeleteவருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
romba nalla irruku indha post. correct aa soneenga. very nice.
ReplyDeleteவாங்க சுமி மேடம்
ReplyDeleteஇந்த இடுகை உங்களுக்கு பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி. பாராட்டுதலுக்கு மிக்க நன்றி