அந்த சிறுவனை ட்யூஷனுக்கு அழைத்து வந்திருந்தார் அவனுடைய தாய். கபடமற்ற கண்கள். அவன் நெற்றியில் சிறு திருநீற்றுக் கீற்று. பாலமுருகனையே கண்டது போல் இருந்தது. சாதுவான பையன் என்பதை சொல்லத் தேவையே இல்லை.
“ சார், இவனுக்கு எல்லார் கிட்டேயும் நல்ல பேர். டீச்சர்ஸ் கூட அவனைப் பத்தி ரொம்ப நல்ல மாதிரிதான் சொல்றாங்க. வீட்டுலேயும் அவனால யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. தன்பாட்டுக்கு நேரத்துக்கு எழுந்து, குளிச்சு சாப்பிட்டு ஸ்கூலுக்கு கெளம்பிடுவான். எந்த பிடிவாதமும் கிடையாது. சொன்ன பேச்சை கேட்பான். ஆனா எந்த ஸப்ஜெக்டிலேயும் மார்க் மாத்திரம் வர மாட்டேங்குது. கிட்டத்தட்ட எல்லா ஸப்ஜெக்ட்லேயும் ஃபெயில். எங்களுக்கு என்ன செய்றதுன்னே புரியவில்லை. ஏண்டா! டீச்சர் சொல்றது புரியலையான்னு கேட்டா பதிலே சொல்ல மாட்டான். ஸ்லோ லெர்னர். இவன் ஒரு மனுஷனா ஆவானா சார் ? என்று மிகுந்த கவலையுடன் விசாரித்தார்.
இப்படிப்பட்ட கவலைதான் ஞானிகளுக்கும் பல பக்தர்களை காணும் போது ஏற்படுகிறது. அந்த பக்தர்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறது. சராசரி நித்ய கடமைகளை தவறாமல் செய்கின்றனர். ஆனால் அவற்றின் மூலம் கற்க வேண்டிய பாடத்தை மட்டும் கற்றுத் தெளிவதில்லை. இவர்கள் எப்போது தேறி ஞானத்தை அடையப் போகிறார்கள் என்ற ஆதங்கம் அவர்களை ஆட்கொள்கிறது. யோகி வேமனாவுக்கும் தன் தாயாரின் விஷயத்தில் அப்படி ஒரு கவலைத் தோன்றியது.
வேமனா ஆந்திராவின் மிகப் புகழ் பெற்ற யோகி. அனு வேம ரெட்டி என்ற அரசனின் தம்பி. இளம் வயதில் வழி தவறியவராய் இருப்பினும் சிவயோகி ஒருவரின் தொடர்பினால் ஞான வழிக்கு திரும்பினார். அவருடைய ஆயிரக்கணக்கானப் பாடல்கள் இன்றும் ஆந்திரத்தில் ஆன்மீக ஒளி பரப்பிக் கொண்டிருக்கிறது.
அவருடைய தாயார் தீர்த்த யாத்திரைக்குக் கிளம்பினார்.
’நீ திரும்பி வரும் பொழுது இந்த தாமிர தாயத்து தங்கமாய் மாறியிருக்குமா பார்ப்போம்’ என்று ஒரு ரட்சை அணிவித்து அனுப்பி வைத்தார். அம்மையாரும் புரீ காசீ கயா போன்ற பல புண்ணிய தலங்களில் நீராடி கோவில்களில் பூசைகள் செய்து பலமாதங்களுக்கு பின்னர் திரும்பினார். அவருக்கு வேமனா கூறியிருந்தது மறந்தே போயிருந்தது.
வேமனா அவரைக் கண்டதும் தாயத்து தங்கமாய் மாறியதா என்று தாயத்தைக் காட்டச் சொன்னார். செப்பு செப்பாகவே இருந்ததைக் கண்டு ’பக்தியும் சிரத்தையும் இல்லாமல் செய்யும் எந்த யாத்திரைக்கும் பலனிராது’ என்றார். தாயாருக்கும் பிறருக்கும் புரியவில்லை. அதெப்படி செப்பு தங்கமாக முடியும் என்று வினவினர்.
’முடியும்’ என்று சொல்லி அந்த தாயத்தை வாங்கி ஒரு கிண்ணத்தில் வைத்து அதன் மேல் சிறிது நீரை சொரிந்தார். யாவரும் வியக்கும் வண்ணம் செப்பு தாயத்து தங்கமாக மாறியது. அதை தாயாரின் கையில் வைத்து ‘உண்மையான பக்தி இருந்தால் நீ இருக்குமிடமே காசி. ஏனிந்த சிரமம்?’ என்று கூறினாராம்.
வேமனா குறிப்பிடும் தங்கம், மனிதர்கள் கோவில் குளம் என்று சுற்றுவதெல்லாம் இறைவனின் பெருமையை உன்னி உன்னி படைப்பில் சர்வமாக வியாபித்து இருக்கும் அவன் பால் அன்பு பெருகி வர வேண்டிய மன மாற்றத்தைக் குறிப்பதாகும். ஆனால் சாமானியர்களான நமக்கோ எப்போதும் நம்மைப் பற்றிய சிந்தனையிலேயே ஊறி இருப்பதால் உண்மையான பக்தி என்பது என்னவென்றே புரிவதில்லை. இது வகுப்பிலே அமர்ந்திருந்தாலும் பாடத்தில் கவனம் செலுத்தாத மாணவன் போன்றது.
புரியாததன் விளைவாக கடைசியில் பலனேதும் இல்லாமல் போகிறது. வேமனாவின் தாயாரைப் போலே, கிடைக்காத பலனைப் பற்றிய ஞானமும் குறைவே. ஞானிகள் இந்த நிலையை கண்டு பரிதாபம் கொள்கின்றனர். இதை கபீர் இலவு காத்தக் கிளிக்கு ஒப்பிடுகிறார்.
जप तप दीखै थोथरा, तीरथ व्रत विशवास ।
सूआ सेमल सेइया, यौं जग चला निरास ॥
செல்வார் யாத்திரை, நேர்வார் நோன்பு, செபதபத்திலு மாசை
இலவு கொத்தும் கிளி போலும், இறுதியில் நிற்பதோ நிராசை
புண்ணியம் வரும் பாவம் போய்விடும் என்று செய்யப்படும் பலவிதமான விரதங்கள், யாத்திரைகள், செப தபங்கள் எல்லாம் கடைசியில் அர்த்தமின்றி போய்விடுவதாக கூறுகிறாரே கபீர் என்ற சந்தேகம் எழலாம். உண்மையில் அவற்றிற்கான பலன் எப்போதும் உண்டு. ஆனால் அது பிறவிச் சுழலிலிருந்து விடுதலை தராது. ஞானிகள் எதிர்பார்ப்பது பிறவித் தளையிலிருந்து விடுதலையைத்தானே !
பையன் அடுத்த வகுப்பிற்கு போக வேண்டும். எத்தனை வருடங்கள் ஒரே வகுப்பில் பெஞ்சை தேய்க்க முடியும்? எனவே தான் கபீர் காலவிரயத்தை இலவு காத்த கிளிக்கு ஒப்பிடுகிறார்.
பரமஹம்ஸர் பக்தியின் நிலையை இரண்டாகப் பிரித்து சொல்கிறார். முதல் நிலை வைதீக பக்தி. இரண்டாம் நிலை பிரேம பக்தி. முதல் நிலையில் சாத்திரப்படி ஏதேனும் வழிபாட்டு முறையை மேற்கொண்டு சிரத்தையுடன் நடத்தி வருவது. அப்படி செய்வதே நாளடைவில் இரண்டாம் நிலைக்கு இட்டுச் சென்று தன்னுடையது என்று எதுவுமின்றி எல்லாம் இறைவனுக்காகவே, இறைவனாகவே காணும் மனப் பக்குவத்தை பக்தன் அடைவது.
நேரத்தில் எழுந்து குளித்து, சாப்பிட்டு பள்ளிக்கு போவது போன்றது வைதீக பக்தி. அங்கே சொல்லிக் கொடுக்கப்படும் பாடத்தை கேட்டுத் தெளிவது பிரேம பக்தி. சத்கர்மங்கங்களிலும் சத்சங்கங்களிலும் தீவிரமான நாட்டம் கொண்டு குரு உபதேசத்தை மனதில் நிறுத்தி கடைபிடிப்பது பிரேம பக்தி. புரிந்து கொண்ட பாடத்தின் இறுதி நிலை என்ன? திருமந்திரம் விடை சொல்கிறது.
பத்தன் கிரியை சரியை பயில்வுற்றுச்
சுத்த அருளால் துரிசு அற்ற யோகத்தில்
உய்த்த நெறி உற்று உணர்கின்ற ஞானத்தால்
சித்தம் குரு அருளால் சிவமாகுமே.
(பயில்வுற்று= பயின்று; துரிசு அற்று=குற்றம் இல்லாத)
உலகில் பெரும்பாலானவர் முதல் இரண்டு வகையில் அடக்கம். சரியை பல தலங்களுக்கும் சென்று பரம்பொருளை வழிபடுவது. கிரியை என்பது மாலை மலர் சாற்றி, அர்ச்சனை, நிவேதனம் செய்து உள்ளும் புறமும் வழிபடு்வது. யோக நெறியில் புகுவதற்கான அருளை பெறும் முன் சரியை கிரியையில் தேர்ச்சி பெற வேண்டும். அதாவது அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி அடைய இருக்கும் வகுப்பில் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எப்படிப்பட்ட பக்தர்களுக்கு இறைவன் அருள் நிலைக்கிறது என்பதை மற்றொரு பாடலில் சொல்கிறார் திருமூலர்.
கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுற மாமலரிட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி யுணர்பவர்க் கல்லது
தேனமர் பூங்குழல் சேர வொண்ணாதே
(ஊனினை நீக்கி= உடற்பற்றை நீக்கி )
கானகத்தில் கிடைக்கும் எல்லா மலர்களையும் மணம் கமழும் சந்தனத்தையும் பூசித்தாலும் உடற்பற்றை நீக்கி உணர்பவர்க்கல்லாமல் இறைவன் திருவடியை அடைய முடியாது.
இந்த ஊன் பற்றை விலக்குவதில் தான் பிரச்சனை. தன்னால் எல்லாம் நடக்கிறது என்ற எண்ணம் குறுக்கே வந்து முன்னேற்றத்தைத் தடுக்கிறது. இதை ஆணவமலம் என்பர் ஞானிகள். மனதில் ஆணவமலம் இருக்கும் வரை உடற் பற்றும் இருக்கும். அதை முழுவதுமாக மாய்ப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அதை இன்னொரு ஈரடி மூலம் கபீர் விளக்குகிறார்.
भक्ति दुवारा सांकरा, राई दशवें भाय ।
मन तो मैंगल होय रहा, कैसे आवै जाय ॥
பத்தித் துவாரம் குறுகியது, கடுகளவில் பத்தில் ஒன்று
மத்தம் பிடித்தக் களிறது, மனமும் உட்புகும் வழியெது ?
மனதைப் பிடித்திருக்கும் ஆணவ மலம் மதம் பிடித்த யானையைப் போன்றதாம். அதனை கடுகின் அளவில் பத்திலொரு பாகம் அளவே இருக்கும் பக்தி எனப்படும் துவாரத்தின் வழியே நுழையச் செய்வது எப்படி என்று வினவுகிறார் கபீர்தாஸ்.
நாக மஹாசயரைப் போல் அன்பே வடிவினராய் தொண்டராம் தொண்டருக்கு...தொழும்பனாய் மாறினால் முடியும்.
அன்பு முதிர்ந்தால் ஆணவம் உதிர்ந்து விடும். அப்போது இறைவன் அவன் நெஞ்சத்தை கோயிலாய் கொள்கிறான்.
அன்பின் முதிர்ச்சியை இன்னொருவர் வாழ்க்கையில் காண்போம். திருமூலர் சொல்லும் ஊன்பற்று நீங்கி எல்லா உயிர்களிலும் இறைவனையே கண்டவர். அவரும் ஒரு தல யாத்திரை மேற்கொண்டார். அவரு்டையது பெரிய யாத்திரை.
முதல் கட்டமாக கங்கையை அடைந்து அங்குள்ள புண்ணிய தலங்களை சேவித்தார். அடுத்த கட்டமாக அங்கிருந்து குடங்களில் கங்கையை நிரப்பி காவடியாக சுமந்து ராமேஸ்வரம் சென்று அங்கே ராமர் பூஜித்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து யாத்திரையை நிறைவு செய்ய வேண்டும். அவ்வாறே போய்க் கொண்டிருக்கும் பொழுது வழியிலே ஒரு கழுதை தாகத்தால் வாய் உலர்ந்து மரணத்தைத் தழுவும் நிலையை எட்டியிருந்தது. யாத்ரிகரது மனம் மிகவும் இளகியது. சுற்றும் முற்றும் நீர் கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படவில்லை. தேடிக் கொண்டு வருவதற்குள் கழுதையின் உயிர் பிரிந்தாலும் பிரிந்து விடும் என்கிற நிலை.
கையில் இருப்பது சிவனுக்கென கொண்டு செல்லும் கங்கை நீர் மட்டுமே. ஒரு பிராணியின் தாகத்தைத் தீர்க்க போதுமானதா என்பதும் புரிய வில்லை. அந்த ஜீவனிலும் குடியிருப்பது சிவன் தானே. அதைக் காப்பாற்ற பயன்படாத நீர் எவ்வளவு புண்ணிய தீர்த்தமாய் இருந்தென்ன?
உத்தவனுக்கு கிருஷ்ணன் சொல்லவில்லையா ’எல்லாவற்றிலும் என்னையே காண்பாய். என்னை சோதிப்பதற்காக்வே தான் இப்படி ஒரு நிலைமையை காட்டியிருப்பான் போலும்’ என்றெல்லாம் அவர் எண்ணம் ஓடியது. ஒரு உயிரை காப்பாற்றுவதைக் காட்டிலும் பெரிய தர்மம் இருக்க முடியாது என்பதை ஆழமாக உணர்ந்தார். குடத்தில் இருந்த கங்கை நீரையெல்லாம் அந்த அப்பாவி ஜீவனை குடிக்கச் செய்தார். உடனிருந்தவர் ராமேஸ்வரத்திற்கு என்ன செய்வது என்று கேட்டனர். இதோ இதுவே தான் ராமேஸ்வரம் என்று பதில் சொன்னாராம். அவரைப் பொறுத்தவரை எந்த சிவனுக்காக நீரை கொண்டு சென்றாரோ அவனை அது அடைந்து விட்டது.
பக்தியென்பதை முழுமையாகப் புரிந்து கொண்டு வழிபாடு செய்த அந்த யாத்ரிகனே ஏகநாத் என்று மகாராஷ்டிரத்தில் போற்றப்படும் மகான். மகாராஷ்டிரத்தில் ஞானேஸ்வரரின் கீதையைப் போலவே ஒவ்வொரு வீட்டிலும் ஏகநாதருடைய பாகவதம் மிகவும் போற்றப்படும் ஒரு இலக்கிய படைப்பு ஆகும். காலத்தால் ஞானேஸ்வரருக்கு பிற்பட்டவர். முன்னூறு ஆண்டுகளுக்கு பிந்தையவர் ஆயினும் ஞானேஸ்வரரின் தரிசனம் கிடைத்து அவரது வேண்டுகோளுக்கு இணங்க அவரது ஞானேஸ்வரியை செப்பனிட்டு மீண்டும் வெளியிட்டவர் அவரே என்றும் சொல்வர்.
கபீரின் எந்த ஈரடியை யாருடைய பார்வையில் புரிந்து கொள்ள முற்பட்டாலும் சுற்றிச் சுற்றி ஒரே மையப்புள்ளிக்கு நம்மை இட்டுச் செல்கிறது. ஆம் அன்பு ஒன்றுதான் அச்சாணியாக உலகைத் தாங்கி நடத்திச் செல்கிறது.