Friday, November 23, 2007

சிரிப்பு பாதி அழுகை பாதி

பலருக்கும் தெரிந்த, பிடித்த ஒரு திரைப்படப் பாடல். எங்க வீட்டுப்பெண் படம். முதல் வரி் "சிரிப்பு பாதி அழுகை பாதி, சேர்ந்ததல்லவோ மனித ஜாதி".

உலக நியதியின் படி இன்பம் துன்பம் என்பது மாறி மாறி வருவதே. அறிஞர்கள் சொல்வது என்னவென்றால் இன்பமோ துன்பமோ எல்லாம் அவரவர்கள் நிகழ்வை அணுகும் முறையிலே உள்ளது. தனிப்பட்ட வகையிலே எந்த ஒரு நிகழ்வும் நல்லதோ தீயதோ இல்லை. நாம் விரும்பும் வகையில் நிகழ்சிகள் நடக்கும் போது எல்லாம் மகிழ்சியே. அப்படி இல்லாத போது துன்பமே.

உலகின் பெரும்பாலான மக்கள் சிறு குழந்தைகள் போல. தூங்கி எழுந்து பசியாறி வேறு தேவைகள் இல்லாத நிலையில் விளையாட்டில் மனம் ஈடுபட்டு தன்னை மறந்து இருக்கும் ஒரு குழந்தை. அப்பொழுது வீட்டின் ஞாபகமோ தாயின் ஞாபகமோ அதற்கு இருப்பதில்லை. அதுவே விளையாடும் போது அடிபட்டால் உடனே "அம்மா அம்மா" என்று அழுது தீர்த்துவிடும். அதனுடைய தாய் வந்து ஒரு பெரும் முயற்சி எடுத்து சமாதானம் செய்வதற்குள் பிறருக்கு போதும் போதும் என்றாகிவிடும்.

வாழ்க்கையில் நமக்கு சிறு துன்பம் வந்துவிட்டால் உடனே இறைவனின் ஞாபகம் வந்துவிடும். யாருக்கும் இல்லாத துன்பம் நமக்கு மட்டுமே ஏற்பட்டு விட்டது போல் துடித்து விடுவோம். உலகில் நம் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்ட வரையில் கடவுளின் அவசியம் தெரிவதில்லை. இந்த இயல்பை கபீர் இப்படி உரைக்கிறார்.

सुख के माथे सिल परै, राम हृदय से जाय ।
बलिहारी व दुखकी, पल पल राम रटाय ॥


ஸுக் கே மாதே ஸில் பரை, ராம் ஹ்ருதய் ஸே ஜாய்
பலிஹாரி வ துக்கீ, பல் பல் ராம் ரடாய்


மதியும் சுகத்தில் இறுகிடும், மனமும் ராமனை மறந்திடும்
விதியால் துயரம் வந்திடின்,கதி அவனே என்றே கிடந்திடும்


ஹிந்தியில் पल पल (பல், பல்) என்றால் ஒவ்வொரு கணமும் என்று பொருள். கஷ்டகாலத்தில் ஒவ்வொருகணமும் இடைவிடாது இராமனை செபிக்கக் கூடியவர்கள், சுகமான காலத்தில் கல்நெஞ்சக்காரர்கள் ஆகிவிடுவார்களாம்.

ஒரு வணிகனுக்கு கடன் தொல்லை மிகுதியாகி ஒரு சமயம் பெருமாளிடம் வேண்டிக்கொண்டானாம். "பெருமாளே நீ என் வியாபாரத்தை நல்ல முறையில் பெருக்கிக் கடன் தொல்லையைத் தீர்த்துவிடு. பதிலுக்கு என்னுடைய நிலத்தில் ஒரு காணியை விற்று உனக்கு காணிக்கையாக உண்டியலில் சேர்த்து விடுகிறேன்." அதாவது நிலத்தை விற்றுத் தீர்க்கக்கூடிய கடன் அல்ல. அதை விடவும் பல மடங்கு பெரிது. ஆகவே பெருமாளுக்கு ஒரு சிறிய கமிஷன்.

பெருமாளின் அருளால் விரைவிலேயே அவன் நிலைமை முன்னேறி வியாபாரம் செழித்தது. கடனெல்லாம் தீர்ந்தது. வணிகனின் மனைவி அவனுக்கு வேண்டுதலைப் பற்றி நினைவூட்டிக்கொண்டே இருந்தாள். நிலத்தின் விலையும் பல மடங்கு உயர்ந்து விட்டது. வணிகனுக்கோ காணி நிலம் விற்றுவரக்கூடிய பணம் இப்பொழுது மிகப் பெரிதாகத் தெரிந்தது. கடவுளையும் [மனைவியை என்று கொள்க :))] திருப்தி படுத்தவேண்டும். பணத்தையும் இழக்கக்கூடாது என்கிற நிலை. பல நாள் யோசனைக்குப் பின் அவனுக்கு ஒரு வழி புலப்பட்டது. தரகர்களிடம் "என் நிலத்தை வாங்குபவர்கள் அதில் காவலுக்கு இருக்கும் நாயையும் சேர்த்துத்தான் வாங்க வேண்டும். நிலத்தின் விலை ஒரு தங்கக் காசு. நாயின் விலை ஆயிரம் தங்கக் காசுகள்" என்று சொல்லி வைத்தான். எப்படி அவன் தந்திரம் !! இதைத்தான் கபீர் ’சுகத்தில் மதியும் இறுகிடும்’ என்கிறாரோ? (माथे -புத்தி, அறிவு, सिल परै- கல் போலாதல்).

வேறு சில துன்பங்கள் கர்ம வினைகளை ஒட்டி வருவன. பிறவி ஊனம், பெரும் பிணிகள் போன்றவற்றிற்கு இறைவனையே சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. இவைகளை பரமஹம்ஸர் குடிக்கூலி என்பார். குடியிருக்கும் வீட்டிற்கு ஒருவன் வாடகை கொடுத்தாக வேண்டும். இதிலிருந்து விடுதலை எப்போது? தாயுமானவர் இவற்றை ஒரு பொருட்டாக கருதவில்லை. இறைவனின் அருள் வெள்ளம் பெருகும் போது அதன் முன்னே இந்த கர்மாக்கள் என்ன செய்ய முடியும் எனக் கேட்கிறார்.

காகமானவை கோடி கூடி நின்றாலும் ஒரு
கல்லின் முன் எதிர் நிற்குமோ
கர்மமானவை கோடி முன்னே செய்தாலும் நின்

கருணைப் பிரவாக அருளைத்

தாகமாய் நாடினரை வாதிக்க வல்லதோ ... (எங்கும் நிறைகின்ற பொருள்-6)


கர்ம வினைகளெல்லாம் வெறும் காக்கை கூட்டம் போலனவாம். இறைவனின் திருநாமம் என்ற ஒரு கல்லை வீசுங்கள் போதும் அவையெல்லாம் பறந்து போகும் என்கிறார். அந்த உண்மையை உணர்ந்த கபீருக்கும் அதனாலேயே துன்பப் படுபவர்களைக் கண்டால் ஆச்சரியம் தோன்றுகிறது.

दुख में सुमिरन सब करे, सुख में करे न कोए ।
जो सुख में सुमिरन करे, दुख काहे को होए ॥


துக் மே சுமிரன் ஸப் கரே, ஸுக் மே கரே ந கோய் |
ஜோ ஸுக் மே சுமிரன் கரே, துக் காஹே கோ ஹோய் ||


துயரில் துய்வர் அவன் நாமம்,
உயர்வில் உன்ன மறப்பரே

உயர்விலும் உன்னுவராயின்
துயரின் சாயலும் தொலையுமே

(உன்னுதல்= இடைவிடாது நினைத்தல்)

துக் காஹே கோ ஹோய் "என்றால் "துன்பம் எதற்காக வரும்" என்று பொருள்.

பிறர்க்கு இன்னா முற்பகல் செய்யின் தமக்கின்னா
பிற்பகல் தாமே வரும்"


கடவுளின் சிந்தையில் மூழ்கியவனுக்கு பிறருக்கு தீங்கு செய்தல் என்பது இல்லை. அப்புறம் அவனுக்கு துன்பம் எதற்காக வரும். தெய்வ ப்ரீதி, பாப பீதி என்று இதையே ரத்தின சுருக்கமாக சொல்லி வைத்துள்ளனர் நம் பெரியவர்கள்.

8 comments:

  1. மதியும் சுகத்தில் இறுகிடும், மனமும் ராமனை மறந்திடும்
    விதியால் துயரம் வந்திடின்,கதி அவனே என்றே கிடந்திடும்

    உண்மை, உண்மை உண்மையைத்தவிர வேறு இல்லை

    ReplyDelete
  2. நன்றி தி.ரா.ச அண்ணா.

    ReplyDelete
  3. //துயரில் துய்வர் அவன் நாமம்,
    உயர்வில் உன்ன மறப்பரே
    உயர்விலும் உன்னுவராயின்
    துயரின் சாயலும் தொலையுமே//

    ---வெறும் வார்த்தைக் கோர்வைகள் இல்லை இவைகள். அற்புதமான வழிகாட்டுதல்.
    துயரின் 'சாயலும்' தொலையுமே--எவ்வளவு அர்த்தம் பொதிந்த சொற்றொடர்!..

    ReplyDelete
  4. நன்றி ஜீவி. முதன் முறையாக இருபின்னூட்டங்களும் மொழிபெயர்ப்பின் பக்கம் கவனம் காட்டியிருப்பது மகிழ்சி தருகிறது. மேலும் கவனித்து அதன் முன்னேற்றத்திற்கு உதவவும். நன்றி.

    ReplyDelete
  5. //அறிஞர்கள் சொல்வது என்னவென்றால் இன்பமோ துன்பமோ எல்லாம் அவரவர்கள் நிகழ்வை அணுகும் முறையிலே உள்ளது. தனிப்பட்ட வகையிலே எந்த ஒரு நிகழ்வும் நல்லதோ தீயதோ இல்லை. //
    ஞானிகள் சொல்வதல்லவா இது. ஆன்மீகத்தில் திளைத்தவர்கள் கண்டறிந்த உண்மையல்லவா.

    ReplyDelete
  6. நல்வரவு காட்டாறு.
    ஞானிகள் சொல்வதல்லவா
    இன்று ஆன்மீக பிரசங்கங்களில் சர்வ சாதாரணமாக குறிப்பிடப்படும் உண்மை அது. மேலும் வெளிநாட்டவர்கள் எழுதி இருக்கும் புத்தகங்களிலும் இது குறிப்பிடப் படுகிறது. உதாரணம் : "Tough times don't last, tough people do"
    எனவே தான் அறிஞர்கள் என்று பொதுவாகச் சொன்னேன்.

    ReplyDelete
  7. எவ்வளவு பொருத்தமாகச் சொன்னீர்கள் உலகத்தின் மக்கள் எல்லோரும் சிறு குழந்தைகள் போல என்று. அப்படித் தானே இருக்கிறது நம் வாழ்க்கையும்.

    நல்லதும் தீயதும் செய்திடும் சக்தி நலத்தை நமக்கிழைப்பாள் என்று வேண்டி நிற்போம் நாம்.

    பெருமாளைத் திருப்திபடுத்த வணிகன் செய்த தந்திரம் அருமை. இப்படித் தான் மனம் சிந்திக்கிறது - யாரை எப்போது எப்படி ஏமாற்றலாம் என்று.

    இறைநாமத்தின் முன்னே வினைகள் கல்லின் முன்னே காகங்கள் போல என்பது அருமையான உவமை.

    அருளாளர்களின் அருளுரைகளை மனத்தில் படும் படி எடுத்துச் சொல்வதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  8. நன்றி குமரன். இனிய பொங்கல் வாழ்த்துகள்.

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி