Wednesday, September 24, 2008

பழையதை தின்று சும்மா கிட

திருமணம் ஆகி குழந்தை பிறந்திருப்பினும் இல்வாழ்க்கையில் விருப்பமின்றி துறவி போல வாழ்க்கையை நடத்தியவர் ஆனந்தம்மாள். ரமணபகவானின் திருவடிகளிலே தவம் செய்து காலம் கழித்தார். ஒருநாள் கனகம்மாள்- இன்னொரு பக்தை-அவரைக் கண்டுவரச் சென்றார். கண் மூடி தியானத்திலிருந்த ஆனந்தம்மாள் சத்தம் கேட்டு திரும்பினார். கனகம்மாளைக் கண்டதும் தன்னருகில் அமருமாறு அழைத்தார். அருகிலமர்ந்த கனகம்மாள் அவரிடம் ஒரு சிறிய தின்பண்டப் பொட்டலத்தை நீட்டினார்.

“என்ன அது! என்ன கொண்டு வந்தே “

“ஒன்றுமில்லை. சாதுக்களுக்கு ஏதாவது பண்ணிக் கொடுக்க வேண்டுமென்று தோன்றியது. கொஞ்சம் பக்கோடா செய்து கொண்டு வந்திருக்கிறேன்”

அதை பிரித்துப் பார்த்துவிட்டு “சரி சரி ரொம்ப நல்லாயிருக்கு! சாதுக்களுக்கு இதெல்லாம் வேண்டுமா! அதோ அந்த மூலையைப் பார். தனம் ஊரிலில்லை. இரண்டு நாளைக்கு வேண்டிய சாதத்தை அந்த பானையில் போட்டு தண்ணீர் ஊற்றி வைக்கும்படி சொன்னேன். பசிக்கும் போது எடுத்து சாப்பிடுவேன். அதற்கு மேல் என்ன வேண்டும். அப்படியே சும்மா இருக்க வேண்டியதுதானே ! எண்ணம் வந்ததாம்! அதற்காக செய்து கொண்டு வந்தாளாம்! கண்ணை மூடிண்டு சும்மா கிடப்பியா ! அதை இதை செய்துண்டு அலைவியா. பகவான் என்ன சொல்லித்து, எதையும் நினைக்காமல் சும்மா கிடக்கும்படித்தானே சொல்லித்து.அதை விட்டு விட்டு நீ ஏன் நேரத்தை வீணாக்குகிறாய். அவன் சன்னிதியில் கண்ணை மூடிண்டு கிடக்க வேண்டியது தானே” என்று அன்புடன் கடிந்து கொண்டார்.

தாயுமானவரின் கீழ்கண்ட வரிகளை படித்தவுடன் மேலே சொன்ன நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது.

இல்லாத காரியத்தை இச்சித்து சிந்தை வழிச்
செல்லாமை நல்லோர் திறங்காண் பராபரமே

(இச்சித்து =விரும்பி)


கடவுளின் பற்று அதிகமாகுமளவும் உலகக் கடமைகளை அவன் குறைத்து விடுவானாம், இது கீதை சொல்லும் வழி.

அப்படி குறைத்து வருவதை அறியாமல் மீண்டும் மீண்டும் புதுப் புது ப்ரவ்ருத்திகளை உண்டாக்கிக் கொள்வது வலையில் சிக்கிக் கொண்ட பறவையைப் போலவே ஆகும். “பழையதை தின்று விட்டு சும்மா கிடக்கும்” மனப்பக்குவம் எப்போது வரும். புது விஷயங்களில் மனம் நாட்டம் கொள்ளுமளவும் ‘நேரம் வீணாகிறது’அதாவது பிறவி வீணாகிறது. ஒரு சின்ன நிகழ்ச்சியில் எவ்வளவு பொருள் பொதிந்த கருத்துகள்.

போகட்டும், நாம் செய்ய முனையும் காரியங்கள் எதுதான் நம் விருப்பப்படி நடக்கிறது ! தாயுமானசுவாமிகள் ஆராய்கிறார் பாருங்கள்.

ஆராயும் வேளையில் பிரமாதி யானாலும்
ஐய வொரு செயலுமில்லை
அமைதியொடு பேசாத பெருமைபெறு குணசந்த்ர
ராம் என இருந்த பேரும்
நேராக ஒரு கோபம் ஒருவேளை வர அந்த
நிறைவொன்றும் இல்லாமலே
நெட்டுயிர்த்துத் தட்டழிந்து உளறுவார். வசன
நிர்வாகர் என்ற பேரும்
பூராயமாய் ஒன்று பேசுமிடம் ஒன்றைப்
புலம்புவார். சிவராத்திரிப்
போது துயிலோம் என்ற விரதியரும் அறிதுயில்
போலே இருந்து துயில்வார்
பாராதி தனிலுள்ள செயலெலாம் முடிவிலே
பார்க்கில் நின் செயல் அல்லவோ
பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூரணானந்தமே

பிரம்மனிலிருந்து தொடங்கி, சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்க விரும்பும் சாதாரண பக்தன் வரை யாருடைய செயலின் முடிவும் அவர்கள் கையில் இல்லை என்பதை ஒரு நகைச்சுவை ரஸத்தில் விவரித்திருக்கிறார். கண்கூடாக இதை காலந்தோறும் கண்டும் நமக்கு ஏனோ புரியாமல் போகிறது. அதை ஔவையாரும் சொல்லி வியக்கிறார்.

ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்றாகும்
அன்றி அது வரினும் வந்தெய்தும்-ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாழும் ஈசன் செயல். (நல்வழி-27)

எல்லாமே ஈசன் செயல் என்றுதான் கபீரும் சொல்கிறார். தான் வெறும் ஒரு சூத்திர பொம்மை. சூத்திரத்தை கையில் வைத்து ஆட்டுவிப்பவன் எங்கோ இருக்கிறான்.

कबीरा किया कुछ न होते है, अन किया सब होय।
जो किया कुछ होते है , कर्ता और कोय ॥

தான் செய்து நடப்பதில்லை, கபீர்செய் யாமலே நடந்தன வன்றோ
தான் செய்து நடப்பனப் போல் காண்பீர், செய்விப் பவனவன் யாரோ

ஓரொரு சமயம் நாம் நினைப்பது நடந்து விடுகிறது. உதாரணம் கபீரின் வலைப்பூ. அப்போது ”செய்விப்பவன் அவன் யாரோ’என்ற வரியை நினைவு கொள்ள வேண்டியிருக்கிறது. ஔவை சொல்வது போல் ‘அது வரினும் வந்தெய்தும்’

எப்படியோ இந்தவலைப்பக்கம் ஐம்பத்தியொரு பதிவுகளுடன் இரண்டாம் வருடத்தை நிறைவு செய்கிறது. பல முறை பல தடங்கல்கள் ஏற்பட வாய்ப்பிருந்தும் அவன் இதை நடத்திக்கொண்டு வருகிறான். ”பழையதை தின்று சும்மாக் கிடக்காமல்” பதிவுகளை எழுத மனம் பரபரக்கும் போது பல மனக்குழப்பங்கள், குற்ற உணர்வு.

எல்லாவற்றையும் மீறி இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. தனி மடல்களிலும் பின்னூட்டத்திலும் வாசகர்கள் காட்டிய பரிவும் அன்புமே அதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

குருவருள் அவர்களுக்கு என்றும் பெருகட்டும்.
__________________________________________________

இதுவரை வெளியாகியிருக்கும் ஈரடிகளை தேடவும் புதிதாக காணப் பெறுவோர்க்கு அவர்கள் அறிந்திருக்கும் தோஹாக்களின் மொழிபெயர்ப்பைத் தேடவும் வசதியாக கூகிள் தேடு பொறி ஒன்று பக்கப்பட்டையில் பொருத்தப்பட்டுள்ளது. இங்கே தமிழ் அல்லது ஹிந்தி இரண்டிலும் உள்ளீடு செய்யலாம். தேடலுக்கான விடை புதிய பக்கத்தில் தரப்படும். இதைத் தவிர அந்த ஈரடிகள் அதன் ஹிந்தி மூலத்துடன் ஒரு சிறு மின்புத்தகமாகவும் வெளியிடப்பட்டுள்ளது. கீழே அதற்கான இணப்பு உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் அதை தரவிறக்கமும் செய்து கொள்ளலாம்.


மின்புத்தகத்தை இங்கேயே படிப்பதற்கு வசதியாக அதை முழுத் திரைக்கு விரித்துக் கொள்ளலாம். எழுத்துகளை பெரிதாக்கிக்கொள்ளவும் இதில் + - மெனுக்கள் உள்ளன. இதை புத்தகம் போல பக்கங்களை புரட்டவும் வசதி தரப்பட்டுள்ளது. அதாவது மேலிருந்து கீழே நகர்த்திச் செல்லத் தேவையில்லை.

மென்புத்தக்கதைப் பற்றியும் அதை மேம்படுத்தவும் தங்கள் கருத்துகளை பின்னூட்டமாகவோ தனி மடலிலோ தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். தரவிறக்கம் செய்ய விழைவோர் இந்த esnip சுட்டியை பயன்படுத்தவும்.

10 comments:

 1. //ஏதாவது பண்ணிக் கொடுக்க வேண்டுமென்று தோன்றியது.//
  என்ன செய்வது, மனிதனாய் பிறந்து விட்டோமே.
  புல்லாயோ, பூண்டாயோ, கல்லாகவோ, மரமாகவோ பிறத்திருந்தால் சும்மா இருந்திருக்கலாம்.
  அடுத்து என்ன செய்யலாம், அதற்கு அடுத்து செய்யலாம் என மனக்கோட்டை கட்டுவதிலேயே காலத்தில் பாதியை செலவிடுகிறோம். கட்டிய மனக்கோட்டையில் ஓட்டைகள் தெரிய, ஐயகோ எனக் கதறுகிறோம்!
  சும்மா இருந்து சுகம் பெறுவது எக்காலமோ!
  //கபீர்செய் யாமலே நடந்தன வன்றோ //
  ஆகா, இப்படி அல்லவோ சும்மா இருக்க வேண்டும்!
  //எப்படியோ இந்தவலைப்பக்கம் ஐம்பத்தியொரு பதிவுகளுடன் இரண்டாம் வருடத்தை நிறைவு செய்கிறது. //
  வாழ்த்துக்கள்.
  கபீருக்கும்,
  தங்களுக்கும்,
  தவறாமல் படித்து வரும் ஒவ்வொரு வாசகருக்கும்

  வாழ்த்துக்கள்.
  மென்புத்தக்கதை தரவிறக்கிக் கொண்டேன். தொகுத்துத் தந்தமைக்கு மிக்க நன்றிகள்.

  ReplyDelete
 2. அருமையான பணியை மிக எளிதாக முடித்துவிட்டீர்கள், வாழ்த்துகளுடனும், நன்றியுடனும்,

  கபீரை இவ்வளவு அழகாய்க் காட்டியமைக்கும், அற்புதமான பரந்த நோக்கோடு கூடிய தொலைநோக்குப் பார்வைக்கும் மீண்டும் வாழ்த்துகள். புத்தகம் தரவிறக்கிக் கொள்கின்றேன். காணக் கிடைக்காத பொக்கிஷம் அல்லவா இது???

  ReplyDelete
 3. ஸ்ரீ ராமகிருஷ்ணரும் அதேதான் சொல்லுவார், இரண்டு நிமிடம் கிடைத்து விட்டால் மனிதன் இறைவனை சிந்திப்போம் என்று நினைக்காமல், இதைச் செய்யலாமா அதைச் செய்யலாமா என்றுதான் நினைப்பானாம். "சும்மா இருப்பதே சுகம்" என்பதை நன்றாகச் சொன்னீர்கள்.

  51 பதிவுகளுக்கும் இரண்டு ஆண்டு நிறைவுக்கும் மனமார்ந்த வாழ்த்துகளும் மின்புத்தகத்துக்கு நன்றிகளும்.

  ReplyDelete
 4. வாழ்த்துகளுக்கு நன்றி ஜீவா.

  //கட்டிய மனக்கோட்டையில் ஓட்டைகள் தெரிய, ஐயகோ எனக் கதறுகிறோம்!//

  உண்மைதான். எதிர்பார்ப்புகள் இல்லாமல் போனால் ஏமாற்றங்களும் கிடையாது

  ஆரம்ப காலத்திலிருந்து படித்துவரும் வாசகர் நீங்கள். ஆதரவு தொடரட்டும். நன்றி

  ReplyDelete
 5. ஆசிகளுக்கு நன்றி கீதா மேடம்.

  //அருமையான பணியை மிக எளிதாக முடித்துவிட்டீர்கள்//

  முடித்து விட்டதாக எதைக் குறிப்பிடீர்கள்? மென்புத்தகத்தையா ?
  அவ்வளவு லேசாக ”சாதுக்களான” வாசகர்கள் தப்பித்துக் கொள்ள முடியாது. இன்னும்”பக்கோடா” போட்டு தரும் ஆசை என்னை விடவில்லை. :)))

  நன்றி

  ReplyDelete
 6. வாங்க கவிநயா,

  //"சும்மா இருப்பதே சுகம்" என்பதை நன்றாகச் சொன்னீர்கள்.//

  ஒன்றை நினிந்தொன்றை மறந்தோடு மனம் எல்லாம் நீ
  என்றறிந்தால் எங்கே இயங்கும் பராபரமே

  இப்படி”பழைய” அமுதே கொட்டிக்கிடக்கும் போது புதிதாக சொல்வதன் தேவையுமுண்டோ! பல சமயங்களில் இப்படி ஒரு எண்ணம் வந்து குடிகொள்கிறது. அதுவும் அவன் இச்சையே யன்றி வேறென்ன சொல்ல முடியும்.:)

  மிக்க நன்றி

  ReplyDelete
 7. பல்வேறு ஸாதனைகள் புரிவதால்தான் ப்ரம்மத்தை அடையலாம் என்று ஸாதகரின் மனத்தில் ஒரு தவறான மதிப்பீடு இருந்து வருகிறது. அநாதி காலமாக ‘லேனா தேனா’ என்று லேவாதேவி செய்துவந்த நமக்குச் செய்வதை நிறுத்திவிட்டு நிவ்ருத்தி பெறுவதில் சிக்கல் எற்படுவது இயல்பே.
  ‘ஸர்வாரம்ப பரித்யாகம்’ என்று கீதை இம்முயற்சியையே வற்புறுத்துகிறது.
  ஆனால் ஸ்ரீ ரமணர் போன்ற மஹான்களின் ஸங்கம் ஸாதனையை எளிதாக்கி விடுவதை இப்பதிவு நமக்கு உணர்த்துகிறது.

  தேவ்

  ReplyDelete
 8. தொடர்ந்து பலநாட்களாக இணைய வாசிப்பிற்கான நேரம் அமையவேயில்லை அப்படியே சிறிதே நேரம் கிடைத்தாலும் பறவைப்பார்வை பதிவுகளையே முடித்துக்கொண்டுவந்தேன்..கூகுள் ரீடரில் தங்கல் பதிவின் என்ணிக்கை கூடிக்கொண்டே போகும் போதெல்லாம் நிதானமாக படிக்கவேண்டியது என தள்ளிப்போட்டே வந்தேன்.. இன்று சிறிது சமயம் கிடைத்தது தங்கள் பதிவைத்தான் முதலில் முடிக்க எண்ணித்திறந்தால் ஒரு பொக்கிஷத்தை அல்லவா சுமந்து கொண்டிருக்கிறது.... அலவலாதிகளோடு காத்திருந்தது வீண் போகவில்லை... மிக்க நன்றி.. புத்தகத்தை தகவிறக்கம் செய்து பார்த்தேன் மிகவும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.. முழுவதும் படித்துவிட்டு மீண்டு வருகிறேன்.. மீண்டும் வருகிறேன்...

  ReplyDelete
 9. நன்றி கிருத்திகா,

  //தொடர்ந்து பலநாட்களாக இணைய வாசிப்பிற்கான நேரம் அமையவேயில்லை//

  பொதுவாக எல்லோருக்கும் உள்ள பிரச்சனைதான் இதுவும். ஆனால் எப்போது வேண்டுமானாலும் படிக்கும் வகையில் ரீடர் தொழில்நுட்பம் கிடைக்கச் செய்திருக்கிறார்களே!!. அவர்களுக்கும் நன்றி.

  ReplyDelete
 10. நன்றி தேவராஜன் சார்,

  // ஸ்ரீ ரமணர் போன்ற மஹான்களின் ஸங்கம் ஸாதனையை எளிதாக்கி விடுவதை இப்பதிவு நமக்கு உணர்த்துகிறது //

  ஆனந்தம்மாள்- கனகம்மாள் உரையாடல் மேல் நோட்டத்திற்கு சாதாரண உரையாடல் போல் தோன்றினாலும் அதன் கருத்தாழம் என்னை மிகவும் பாதித்தது உண்மை. இப்போதெல்லாம் எதை செய்யத் தோன்றினாலும் அந்த உரையாடல் முன் வந்து ”இது அவசியமா?” என்ற கேள்வியை எழுப்புகிறது. சும்மா இருப்பது சுலபமில்லை என்பதும் புரிகிறது.

  ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி