Showing posts with label மென்னூல். Show all posts
Showing posts with label மென்னூல். Show all posts

Wednesday, September 24, 2008

பழையதை தின்று சும்மா கிட

திருமணம் ஆகி குழந்தை பிறந்திருப்பினும் இல்வாழ்க்கையில் விருப்பமின்றி துறவி போல வாழ்க்கையை நடத்தியவர் ஆனந்தம்மாள். ரமணபகவானின் திருவடிகளிலே தவம் செய்து காலம் கழித்தார். ஒருநாள் கனகம்மாள்- இன்னொரு பக்தை-அவரைக் கண்டுவரச் சென்றார். கண் மூடி தியானத்திலிருந்த ஆனந்தம்மாள் சத்தம் கேட்டு திரும்பினார். கனகம்மாளைக் கண்டதும் தன்னருகில் அமருமாறு அழைத்தார். அருகிலமர்ந்த கனகம்மாள் அவரிடம் ஒரு சிறிய தின்பண்டப் பொட்டலத்தை நீட்டினார்.

“என்ன அது! என்ன கொண்டு வந்தே “

“ஒன்றுமில்லை. சாதுக்களுக்கு ஏதாவது பண்ணிக் கொடுக்க வேண்டுமென்று தோன்றியது. கொஞ்சம் பக்கோடா செய்து கொண்டு வந்திருக்கிறேன்”

அதை பிரித்துப் பார்த்துவிட்டு “சரி சரி ரொம்ப நல்லாயிருக்கு! சாதுக்களுக்கு இதெல்லாம் வேண்டுமா! அதோ அந்த மூலையைப் பார். தனம் ஊரிலில்லை. இரண்டு நாளைக்கு வேண்டிய சாதத்தை அந்த பானையில் போட்டு தண்ணீர் ஊற்றி வைக்கும்படி சொன்னேன். பசிக்கும் போது எடுத்து சாப்பிடுவேன். அதற்கு மேல் என்ன வேண்டும். அப்படியே சும்மா இருக்க வேண்டியதுதானே ! எண்ணம் வந்ததாம்! அதற்காக செய்து கொண்டு வந்தாளாம்! கண்ணை மூடிண்டு சும்மா கிடப்பியா ! அதை இதை செய்துண்டு அலைவியா. பகவான் என்ன சொல்லித்து, எதையும் நினைக்காமல் சும்மா கிடக்கும்படித்தானே சொல்லித்து.அதை விட்டு விட்டு நீ ஏன் நேரத்தை வீணாக்குகிறாய். அவன் சன்னிதியில் கண்ணை மூடிண்டு கிடக்க வேண்டியது தானே” என்று அன்புடன் கடிந்து கொண்டார்.

தாயுமானவரின் கீழ்கண்ட வரிகளை படித்தவுடன் மேலே சொன்ன நிகழ்ச்சி நினைவுக்கு வந்தது.

இல்லாத காரியத்தை இச்சித்து சிந்தை வழிச்
செல்லாமை நல்லோர் திறங்காண் பராபரமே

(இச்சித்து =விரும்பி)


கடவுளின் பற்று அதிகமாகுமளவும் உலகக் கடமைகளை அவன் குறைத்து விடுவானாம், இது கீதை சொல்லும் வழி.

அப்படி குறைத்து வருவதை அறியாமல் மீண்டும் மீண்டும் புதுப் புது ப்ரவ்ருத்திகளை உண்டாக்கிக் கொள்வது வலையில் சிக்கிக் கொண்ட பறவையைப் போலவே ஆகும். “பழையதை தின்று விட்டு சும்மா கிடக்கும்” மனப்பக்குவம் எப்போது வரும். புது விஷயங்களில் மனம் நாட்டம் கொள்ளுமளவும் ‘நேரம் வீணாகிறது’அதாவது பிறவி வீணாகிறது. ஒரு சின்ன நிகழ்ச்சியில் எவ்வளவு பொருள் பொதிந்த கருத்துகள்.

போகட்டும், நாம் செய்ய முனையும் காரியங்கள் எதுதான் நம் விருப்பப்படி நடக்கிறது ! தாயுமானசுவாமிகள் ஆராய்கிறார் பாருங்கள்.

ஆராயும் வேளையில் பிரமாதி யானாலும்
ஐய வொரு செயலுமில்லை
அமைதியொடு பேசாத பெருமைபெறு குணசந்த்ர
ராம் என இருந்த பேரும்
நேராக ஒரு கோபம் ஒருவேளை வர அந்த
நிறைவொன்றும் இல்லாமலே
நெட்டுயிர்த்துத் தட்டழிந்து உளறுவார். வசன
நிர்வாகர் என்ற பேரும்
பூராயமாய் ஒன்று பேசுமிடம் ஒன்றைப்
புலம்புவார். சிவராத்திரிப்
போது துயிலோம் என்ற விரதியரும் அறிதுயில்
போலே இருந்து துயில்வார்
பாராதி தனிலுள்ள செயலெலாம் முடிவிலே
பார்க்கில் நின் செயல் அல்லவோ
பார்க்குமிட மெங்குமொரு நீக்கமற நிறைகின்ற
பரிபூரணானந்தமே

பிரம்மனிலிருந்து தொடங்கி, சிவராத்திரி விரதம் அனுஷ்டிக்க விரும்பும் சாதாரண பக்தன் வரை யாருடைய செயலின் முடிவும் அவர்கள் கையில் இல்லை என்பதை ஒரு நகைச்சுவை ரஸத்தில் விவரித்திருக்கிறார். கண்கூடாக இதை காலந்தோறும் கண்டும் நமக்கு ஏனோ புரியாமல் போகிறது. அதை ஔவையாரும் சொல்லி வியக்கிறார்.

ஒன்றை நினைக்கின் அது ஒழிந்திட்டு ஒன்றாகும்
அன்றி அது வரினும் வந்தெய்தும்-ஒன்றை
நினையாத முன்வந்து நிற்பினும் நிற்கும்
எனையாழும் ஈசன் செயல். (நல்வழி-27)

எல்லாமே ஈசன் செயல் என்றுதான் கபீரும் சொல்கிறார். தான் வெறும் ஒரு சூத்திர பொம்மை. சூத்திரத்தை கையில் வைத்து ஆட்டுவிப்பவன் எங்கோ இருக்கிறான்.

कबीरा किया कुछ न होते है, अन किया सब होय।
जो किया कुछ होते है , कर्ता और कोय ॥

தான் செய்து நடப்பதில்லை, கபீர்செய் யாமலே நடந்தன வன்றோ
தான் செய்து நடப்பனப் போல் காண்பீர், செய்விப் பவனவன் யாரோ

ஓரொரு சமயம் நாம் நினைப்பது நடந்து விடுகிறது. உதாரணம் கபீரின் வலைப்பூ. அப்போது ”செய்விப்பவன் அவன் யாரோ’என்ற வரியை நினைவு கொள்ள வேண்டியிருக்கிறது. ஔவை சொல்வது போல் ‘அது வரினும் வந்தெய்தும்’

எப்படியோ இந்தவலைப்பக்கம் ஐம்பத்தியொரு பதிவுகளுடன் இரண்டாம் வருடத்தை நிறைவு செய்கிறது. பல முறை பல தடங்கல்கள் ஏற்பட வாய்ப்பிருந்தும் அவன் இதை நடத்திக்கொண்டு வருகிறான். ”பழையதை தின்று சும்மாக் கிடக்காமல்” பதிவுகளை எழுத மனம் பரபரக்கும் போது பல மனக்குழப்பங்கள், குற்ற உணர்வு.

எல்லாவற்றையும் மீறி இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. தனி மடல்களிலும் பின்னூட்டத்திலும் வாசகர்கள் காட்டிய பரிவும் அன்புமே அதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அவர்களுக்கு என்றும் கடமைப்பட்டுள்ளேன்.

குருவருள் அவர்களுக்கு என்றும் பெருகட்டும்.
__________________________________________________

இதுவரை வெளியாகியிருக்கும் ஈரடிகளை தேடவும் புதிதாக காணப் பெறுவோர்க்கு அவர்கள் அறிந்திருக்கும் தோஹாக்களின் மொழிபெயர்ப்பைத் தேடவும் வசதியாக கூகிள் தேடு பொறி ஒன்று பக்கப்பட்டையில் பொருத்தப்பட்டுள்ளது. இங்கே தமிழ் அல்லது ஹிந்தி இரண்டிலும் உள்ளீடு செய்யலாம். தேடலுக்கான விடை புதிய பக்கத்தில் தரப்படும். இதைத் தவிர அந்த ஈரடிகள் அதன் ஹிந்தி மூலத்துடன் ஒரு சிறு மின்புத்தகமாகவும் வெளியிடப்பட்டுள்ளது. கீழே அதற்கான இணப்பு உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் அதை தரவிறக்கமும் செய்து கொள்ளலாம்.


மின்புத்தகத்தை இங்கேயே படிப்பதற்கு வசதியாக அதை முழுத் திரைக்கு விரித்துக் கொள்ளலாம். எழுத்துகளை பெரிதாக்கிக்கொள்ளவும் இதில் + - மெனுக்கள் உள்ளன. இதை புத்தகம் போல பக்கங்களை புரட்டவும் வசதி தரப்பட்டுள்ளது. அதாவது மேலிருந்து கீழே நகர்த்திச் செல்லத் தேவையில்லை.

மென்புத்தக்கதைப் பற்றியும் அதை மேம்படுத்தவும் தங்கள் கருத்துகளை பின்னூட்டமாகவோ தனி மடலிலோ தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். தரவிறக்கம் செய்ய விழைவோர் இந்த esnip சுட்டியை பயன்படுத்தவும்.