“ஐயனே! நித்திய வாழ்விற்கு தேவையான நற்செயல்களாக நான் செய்ய வேண்டியன என்ன?”
“எது நல்லது என்று எதற்காக கேட்கிறாய்? நித்திய வாழ்வை(eternallife) விரும்புவர் எவரும் அவனுடைய கட்டளைகளை கடைபிடிக்க வேண்டும்.”
“அவை யாவை ?”
“களவு கொலை,பொய்,பிறன் மனை நேயம் இவைகளை கைவிடுதல்,தாய் தந்தையரை நல்ல முறையில் பேணுதல் மற்றும் அண்டை அயலாரை உள்ளன்புடன் நேசித்தல்...”
“இவை யாவற்றையும் கடைபிடித்து வருகிறேன். இன்னும் என்ன செய்ய வேண்டும்?”
“அப்படியானால் உன்னிடமுள்ள சொத்துக்களை எல்லாம் விற்று ஏழைகளுக்கு தானம் செய்து விட்டு என் பின்னாலே வா. உனக்காக பெரும் நிதியம் பரலோகத்தில் காத்திருக்கிறது”
இதைக் கேட்ட இளைஞன் முகம் வாட்டமடைந்தது. எதுவும் பேசாது விலகிச் சென்றான்.
அவன் சென்றதும் ஏசுநாதர் சீடர்களிடம் கூறினார் “உங்களுக்கு ஒரு உண்மையை சொல்கிறேன். செல்வந்தர்கள் பரலோகம் சேர்வது மிகக் கடினம்.மீண்டும் சொல்வேன், ஒட்டகம் ஊசியின் காதில் நுழைந்தாலும் நுழையலாம் பணக்காரன் பரலோகத்தில் நுழைவது முடியாது.” (மத்தேயு 19:19)
எதுவும் இல்லாமலே எல்லாம் பெற்றவர்கள்? மகிழ்ச்சியை அனுபவிப்பவர்கள்.
மகிழ்ச்சியுடன் வாழமுடிந்தவனுக்கு இகலோகமே பரலோகம்.
ஏனெனில் உண்மையான மகிழ்ச்சிக்கான ரகசியம் தெரிந்தபின் அவனுக்கு இரண்டு உலகிலும் ஆனந்தம் உறுதிசெய்யப்படுகிறது.
பெரும்பாலும் மகிழ்ச்சி தொலைந்ததற்கானக் காரணம் மனிதனுடன் பிறந்த தன்னல எண்ணமே. அது எதிர்காலத்தைப் பற்றி மனதில் ஒரு பீதியை உண்டாக்கி ‘வருங்காலத்திற்கென’ என்று பல முன்னேற்பாடுகளை தீட்டுகிறது. அந்த திட்டங்கள் அளவில்லாமல் போய் ஒரு பெரிய (வாழ்க்கைச்)சுழலில் சிக்கிக் கொண்டு விடுகிறது. அப்போது மகிழ்ச்சி தொலைந்து விடுகிறது.
இதை கபீர் ஒரு ஈரடியில் அழகாக சித்தரிக்கிறார்.
आसा जीवै जग मरै, लोग मरै मरि जाइ ।
सोइ सूबे धन संचते, सो ऊबरे जे खाइ ॥
நிலைத்த ஆசை நிலையா வாழ்க்கை, மருளில் மறைவரே உலகோர்
மலைத்தகு சீரை மறைத்தே சென்றார், கொடுத்தவர் காண்பார் வீடு
(மருள்= அஞ்ஞானம் ; மலைத்தகு சீர்= மலையளவு செல்வம் அல்லது மலைக்க வைக்குமளவு செல்வம்,வீடு=முக்தி)
நம்முடைய முப்பாட்டனார்கள் உணவு, உடை உறைவிடம் தேடி அலைந்தனர். இன்று நாமும் அதையே செய்கிறோம். நம் சந்ததிகளும் இதையே தான் செய்யப் போகிறார்கள். தேடிய விதம், வேகம் மற்றும் அளவுகளில் காலத்திற்கேற்ப மாறுபாடுகள் இருக்கலாம். ஆனால் அடிப்படையில் தேடுதல் ஒன்றே.
அடிப்படை தேவை பூர்த்தியானதை புரிந்து கொள்ளாது பின்னர் வேறு பல வசதிகளையும் மனம் பற்றிக் கொள்கிறது. இறைவனை விட்டு அந்த ஆசைகளை துரத்த ஆரம்பிக்கிறது. இதைத் தான் “ஆஸா ஜீவை” அல்லது நிலைத்த ஆசை என்கிறார் கபீர்.
வாழ்நாள் எல்லாம் தான் சம்பாதித்ததை சந்ததியினருக்கும் தேவைப் படும் என்று எங்கோ புதைத்து வைக்கும் பழக்கமும் உண்டு. இன்றைக்கும் வரிகட்டாத பணத்தை எங்கெங்கோ மறைத்து வைப்பதாகக் கேள்வி. அதை சொல்வதற்கும் முன்பே மறைந்து போகிறார்களே அவர்கள் எப்பேர்ப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தை இழந்து விட்டனர் என்று கபீர் வருத்தப் படுகிறார்.
தம்முடைய காலத்திலேயே ஏசுநாதர் சொன்னபடி தான தருமங்கள் மூலம் ஏழை எளியவர்களுக்கு வாரிக் கொடுத்திருந்தால் அவர்களுக்கு பரலோகம் சுலபமாக கிடைத்திருக்குமே.
கொடுத்தவர் காண்பார் வீடு என்பதை வள்ளுவரும் கொடுத்தால் வீடு பேறு காணலாம் என்று வலியுறுத்துகிறார்
வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன்
வாழ்நாள் வழியடைக்கும் கல் 4:38
ஒருநாளையேனும் வீணாகக் கழியாது அறம் செய்து வந்தால்,அது பிறப்பு இறப்பென்னும் சுழற்சியின் வழி அடைக்கும் கல்லாக வீடுபேறு நல்கும்
முதலில், கொடுப்பதால் குறைவு ஏற்படும் என்ற பயத்தை விலக்க வேண்டும். இந்த அறியாமையைப் போக்குவது எப்படி?
இங்கே கபீர் தைரியம் அளிக்கும் வகையில் ஒரு உதாரணம் சொல்கிறார்.
दान दिये धन ना घटे, नदी न घटे नीर ।
अपनी आंखों देख लो, यों क्या कहे कबीर ॥
கொடுத்துக் குறையாது சீரும், எடுத்தால் குறையாது நதி நீரும்
எடுத்துச் சொல்வான் கபீரும், ஏனென்றே பார்த்துணர்வீர் நீவிரும்
மாற்று:
குறையாதே கொடையால் சீரும், குறையாது நதியின் நீரும்
அறிவாய் பார்த்தே நீயும், ஏனிதைச் சொன்னான் கபீரும்
கங்கை கரையில் வசிப்பவர்க்கு இது மிகப் பொருத்தமான உதாரணம் தான். ஊரெல்லாம் கூடி குடம் குடமாக நீரை அள்ளிச் சென்றாலும் கங்கை நீர் குறைந்து விடாது தான்.
இறைவன் படைப்பிலே பிற உயிர்கள் வருங்காலத்தைப் பற்றிக் கவலைப் படாமல் வாழ்க்கையைத் தொடரும் போது மனித இனம் மட்டும் ஏனிப்படி தடம் மாறிச் செல்கிறது ?
ஒருமுறை காஞ்சி பெரியவரிடம் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் தமது சமூகத்தின் நிலை இறங்குமுகம் கண்டு வருவது பற்றி கேட்டபோது அவர் சொன்னது:
“அதோ அங்கே போறானே ஒருத்தன், அவன் எப்படி போறான்?”
“சைக்கிள்-ல போறான் ஸ்வாமி”
“ஏறி உக்காந்தா சைக்கிள் தானா போயிடுமா?”
“இல்லை ஸ்வாமி. உட்காந்திருப்பவர் அதைத் தொடர்ந்து மிதிக்கணும்”
“மிதிக்கிறது நின்னு போனா?”
“கொஞ்சம் தூரம் போயி விழுந்துடுவான்”
“லோகத்திலே நம்ம க்ஷேமமும் அப்படிதான். தொடர்ந்து தான தருமங்களை செஞ்சிண்டிருந்தால் மனுஷனும் க்ஷேமமாய் இருப்பான். அது கொறஞ்சு போனா அவன் ஸ்திதியும் க்ஷீணமாயிடும் இல்லையா ”
கேள்வி கேட்டவர்களுக்கு அவர்கள் மனம் நோகாதபடி விடையளித்தார் அந்த மகான்.
பெரியவர்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் இந்த கருத்தை படிக்காசு புலவரும் பாடியிருக்கிறார்.
சலியாமல் தண்டலையில் தாயகனார்
அருள்கொண்டு தருமம் செய்யப்
பொலிவாகிக் கொழுமீதில் வந்தபொருள்
ஈந்தவைதாம் போக மீந்தால்
மலிவாகிச் செல்வம்உண்டாம்! வயல்முழுதும்
விளைந்திடும் நன்மாரி ஆகும்!
கலியாணப் பஞ்சமில்லை! களப்பஞ்சம்
இல்லை ஒருகாலும் தானே.
(கொழுமீதில் பொலிவாகி வந்த பொருள்= உழவுத் தொழிலால் கிடைத்த செல்வத்தில்; மலிவாகி செல்வமுண்டாம்= மிகுதியான செல்வம் உண்டாகும், கலியாண பஞ்சமில்லை = சிறப்பு மிகும் சுப காரியங்களுக்கு குறைவில்லை, களப்பஞ்சம் இல்லை = நெல்லடிக்கும் களங்களுக்கும் குறைவில்லை)
ஈந்தவை போக மீந்தால் என்பதற்கு தமிழறிஞர்கள் இப்படி பொருள் சொல்கின்றனர். முன்னோர்களுக்கும், தெய்வத்திற்கும்,விருந்தினருக்கும் அரசனுக்கும், சுற்றத்தாருக்கும் தனக்கும் போக மிச்சமாகும் செல்வம்.
தன்னலமற்ற தரும காரியங்களில் ஈடுபடும் போது குறைவில்லாமல், கங்கை பெருகி வருதல் போல, அதற்கான தேவையை பூர்த்தி செய்வான் இறைவன்.
‘இறைக்கிற கேணி ஊறும்’ என்ற பழமொழி நம்மூரிலும் உண்டு.
நமது நாட்டில் ஆழமான சில கருத்துகளை அன்றாடப் பேச்சு வழக்கில் காணலாம்.
“எங்க பெரியவங்க செஞ்ச பூசை தர்மம்; எல்லோரும் நல்லா இருக்கிறோம்”
”எந்த ஜன்மத்தில என்ன பாவம் பண்ணினேனோ இப்ப அனுபவிக்கிறேன்”
என் மூதாதையர் செய்த அதர்மத்தால் கஷ்டப்படுகிறேன் என்று யாரும் சொல்வதில்லை. அதே சமயத்தில் யாரேனும் அதர்ம காரியத்தில் ஈடுபட்டால் பெரியவர்கள் “வேண்டாம் அந்த பாவம். ஏழு தலைமுறைக்கு தட்டும்” என்பது போல பலப் பல.
பழியை தன் மேல் ஏற்று பெருமையை பிறர்க்கு உரித்தாக்கும் பண்பு நமது நாகரீகத்தின் சிறப்பை உணர்த்துகிறது.
இப்படியாக சந்ததிக்குப் போய் சேர்வது நாம் செய்யும் பாவ புண்ணியங்களே அன்றி நாம் சேர்த்து வைக்கும் செல்வம் அல்ல. அப்படி வரும் செல்வத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் சத்கர்மங்கள் இல்லையென்றால் வந்த செல்வமும் விரைவிலேயே போய்விடும்.
கபீர் சொல்வது போல இதெல்லாம் கண்டு உணரவேண்டிய விஷயங்கள். கொடுத்துக் காண்போம் வீடு.