Saturday, November 22, 2008

குறையொன்றும் இல்லை எனக்கு

பொன்னியின் செல்வன் :அத்தியாயம் -16 (சுந்தர சோழர்-குந்தவை உரையாடல்)

சக்கரவர்த்தி துயரம் தோய்ந்த புன்னகை புரிந்து, "என் உடம்பு இனிமேல் குணமாவது ஏது? அந்த ஆசை எனக்குக் கொஞ்சமும் கிடையாது", என்றார்.

"அப்படி ஏன் நிராசை அடையவேண்டும்? அப்பா! பழையாறை வைத்தியர் தங்கள் உடம்பைக் குணப்படுத்த முடியும் என்று சொல்கிறார்."

"அவர் சொல்வதை நம்பி நீயும் இலங்கையிலிருந்து மூலிகை கொண்டு வர ஆள் அனுப்பியிருக்கிறாயாம்! நான் கேள்விப் பட்டேன். மகளே! என் பேரில் உனக்குள்ள பாசத்தை அது காட்டுகிறது....

...... ஆனால் இலங்கையிலிருந்து மூலிகை வந்தாலும் சரி, சாவகத் தீவிலிருந்து வந்தாலும் சரி, தேவலோகத்திலிருந்து அமுதமே வந்தாலும் சரி, எனக்கு உடம்பு இந்த ஜன்மத்தில் குணமாகப் போவதில்லை..."

"ஐயையோ! அப்படிச் சொல்லாதீர்கள்!" என்றாள் இளவரசி.

"... உடம்பைப் பற்றிய வியாதியிருந்தால் மூலிகை மருந்துகளினால் தீரும். என்னுடைய நோய் உடம்பைப் பற்றியதல்ல; மனக் கவலைக்கு மருந்து ஏது?"

"தந்தையே, மூன்றுலகம் ஆளும் சக்கரவர்த்தியாகிய தங்களுக்கு அப்படி என்ன தீராத மனக்கவலை இருக்க முடியும்?"

"கவிகளுடைய அதிசயோக்தியான கற்பனையை நீயும் சொல்கிறாய், குழந்தாய்! நான் மூன்று உலகம் ஆளும் சக்கரவர்த்தியல்ல; ஒரு உலகம் முழுவதும் ஆளுகிறவனும் அல்ல. உலகத்தில் ஒரு மூலையில் சிறு பகுதி என் இராஜ்யம். இதன் பாரத்தையே என்னால் சுமக்க முடியவில்லை..."


அமரர் கல்கியின் பேனாவிலிருந்து விழுந்த எழுத்துகள் கபீர்தாஸரின் ஈரடிக்கு உயிர் கொடுப்பவை போல அமைந்துள்ளது.

चिंता ऐसी डाकिनी काट कलेजा खाए ।
वैद बिचारा क्या करे, कहां तक दवा लगाए ॥


சிந்தையுள் புகுந்த கவலைப்பேய், சிதைத்திடும் தேக நலமே
எத்தனை காலம் தருவான், பேதை வைத்தியன் அவிழ்தமே


(அவிழ்தம்= ஔஷதம், மருந்து)

சுந்தர சோழனைப்போல ராஜ்ய பாரத்தால் மன அழுத்தத்திற்கு உட்பட்ட ஒரு அரசன் ஒரு நாள் காலையில் தனிமையை விரும்பி மாறு வேடத்தில் நகருக்கு வெளியே போய்க்கொண்டிருந்தான். அப்போது இனிமையானப் பாடல் கேட்டது.

சற்று தூரத்தில் ஒரு உழவன் நிலத்தை உழுது கொண்டே பாட்டு பாடிக்கொண்டிருந்தான். ஏர் இழுத்த காளைகளும் அவனுடைய பாட்டை ரசித்தது போல் அயர்ச்சி இல்லாமல் நிலத்தை உழுது கொண்டிருந்தன. அந்த ரம்யமான இயற்கை சூழலும், அவனது பாடலும் அரசனை வெகு நேரம் தன்னை மறந்து அமர்ந்திருக்கச் செய்தது. அவனது மனமும் பிரச்சனைகளிலிருந்து விடுபட்டு இயற்கையை ரசித்ததாலோ என்னவோ அப்போது மிகவும் இலகுவானது.

உழவன் சிரம பரிகாரம் பொருட்டு வேலையை நிறுத்தி மரத்தடிக்கு வந்தான். “ஏனப்பா,இந்த வெய்யிலிலும் உன்னால் எப்படி சந்தோஷமாக பாட்டு பாடி வேலை செய்ய முடிகிறது ?” என்று ஆச்சரியத்துடன் அவனைக் கேட்டான் அரசன்.

அவனை ஒரு வழிப்போக்கன் என்று நினைத்து உழவன் பதில் சொன்னான். ”வாரி வழங்கக் காத்திருக்கும் பூமித்தாய், மும்மாரி தரும் நல்லறம் உள்ள அரசாட்சி, மனையிலே சொன்ன பேச்சைக் கேட்கும் மனையாள் என இப்படி யாவையும் இறைவன் கொடுத்திருக்கும் போது என் சந்தோஷத்திற்கு என்ன குறைவிருக்க முடியும் ?” என்றான் உழவன்.

அவனுடைய மகிழ்ச்சிக்கானக் காரணத்தை அவன் பதிலிலேயே கண்டு கொண்டான் மன்னன். உழவனின் உள்ளத்திலிருந்து பெருகிய நன்றி உணர்ச்சியே அவனது பதிலில் பிரதிபலித்தது.

நன்றி பெருகும் மனதில் எதைப்பற்றியும் யாரைப் பற்றிய குறைகளும் தங்குவதில்லை. அந்த அழுக்குகள் நன்றி என்னும் உணர்ச்சிப் பெருக்கில் அடித்துச் செல்லப்படுவதால் மனம் சுத்தமாக இருக்கிறது. அப்போது ஆனந்தம் அங்கே குடி கொள்கிறது. பாட்டு தானாக வெளிப்படுகிறது.

ஆனால் பெரும்பாலானவரின் நிலை அதுவல்லவே !

சிந்தாகுல இல்லொடு செல்வமெனும்
விந்தா அடவி என்று விடப்பெறுவேன்
...

என்கிறது கந்தரநுபூதி. குடும்பம், செல்வம் என்பன வெல்லாம் கடக்கமுடியாத காடு போல கவலை தரும் விஷயங்கள் ஆகும்.

கபீர் சொல்லும் நோயை ஒத்த கவலைகளுக்கான காரணங்களை பட்டியல் இடுகிறது சிறுபஞ்ச மூலம்.

அரம் போல் கிளை, அடங்காப் பெண், வியக்கத்தொண்டு
மரம் போல் மகன், மாறாய் நின்று-கரம் போலக்

கள்ளநோய் காணும் அயல் ஐந்தும் ஆகுமேல்

உள்ள நோய் வேண்டா உயிர்க்கு.
(சிப.மூ-62)

சிறிது சிறிதாக மரம் அறுக்கும் அரம் போல உறவினர்களின் உபத்திரவம், அடங்காத மனைப் பெண்டிர், பணிவற்ற வேலைக்காரர், அறிவற்ற மகன், பகை உணர்ச்சியோடு கூடிய அண்டை வீட்டார் ஆகிய ஐந்தில் ஏதேனும் ஒன்று இருந்தாலும் வேறு நோய் தேவையில்லை. அதுவே பெரு நோய் ஆகிவிடும்.

கவலைகள் என்னும் பாரத்தை ஓரளவு தாக்கு பிடிக்க முடியும் தன்னம்பிக்கையின் பலத்தால். ஆனால் தலையில் சுமக்கப்படும் பாரத்திற்கு ஒரு அளவு இருப்பது போல அதற்கும் ஒரு எல்லை உண்டு. அளவுக்கு மீறி கவலைகள் பெரிதாகி விட்டால் உடல் நலம் தளர்வுற ஆரம்பிக்கிறது. கபீர் சொல்வது போல இதற்கு வைத்தியன் தரும் மருந்துதான் என்ன செய்யும் ?

விமானத்திலோ,பேருந்திலோ அமர்ந்தபின் அதற்குரிய ஓட்டுனர் பத்திரமாக ஓட்டுவாரோ இல்லையோ என்று கவலைப்பட ஆரம்பித்தால் பயணம் இனிதாக இருக்குமா?

பல வருடங்கள் குடும்பம் நடத்திய பின்னும் ஒருவர் மற்றவரின் தவறுகளை பெரிதுபடுத்தும் வீட்டில் மன அமைதிதான் நிலைக்குமா ? பரஸ்பர நம்பிக்கையற்ற நிலைதான் இப்படிப்பட்ட கவலைகளின் பிறப்பிடம்.

கவலைகள் இன்றி மன அமைதி பெறும் வழி பற்றி பகவான் ரமணரை ஒருவர் கேட்ட பொழுது “ஊருக்கு போக வேண்டும் என்று ரயிலில் ஏறுகிறாய். ஏறிய பின்னும் சுமையை தலையில் சுமந்து கொண்டிருப்பாயா அல்லது ’அப்பாடா’ என்று அதை மேலே சாமானுக்கான இடத்தில் வைத்து விட்டு பிறருடன் சந்தோஷமாக பேசிக் கொண்டு போவாயா ? அது போலவே கவலைக்கான காரணங்களை பகவானிடம் விட்டு விடு. அப்புறம் கவலை என்கிற பாரம் ஏது ?” என்று பதில் வந்தது.

ஆழ்ந்த இறை நம்பிக்கை இருந்தால் மட்டுமே அப்படி கவலையற்று இருக்க முடியும்.

”யான் எனதென்று அவரவரைக் கூத்தாட்டுவான் ஆகி” என்று இறைவனை ஏத்துகிறது திருவாசகம்.நாம் எவ்வளவுக்கெவ்வளவு கவலைப் படுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு ‘யான் எனது’ என்ற எண்ணம் நம்மை பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.

நமது ஆன்மீக முன்னேற்றத்தை சுய பரிசோதனை செய்து கொள்ள இது ஒரு நல்ல உரை கல்.

அறிவற்ற மகன் என்று ஆத்திரப்பட்ட திருவெண்காடரின் அறிவுக் கண்ணைத் திறந்து பட்டினத்து அடிகளாக மாற்றிய இறைவன் நமது குறைகளையும் போக்க வல்லவன் தான்.

குபேரனுக்கு இணையாக செல்வம் படைத்திருந்த திருவெண்காடர்,குப்பையிலே கிடக்கும் கரித்துணியை கட்டிக்கொண்டு குறையில்லை என்று பாடுவதை பாருங்கள்

உரைக்கைக்கு நல்ல திருவெழுத்து
ஐந்துண்டு,உரைப்படியே
செருக்கித் தரிக்க திருநீறும்
உண்டு, தெருக்குப்பையிலே
தரிக்க கரித்துணி ஆடையும்
உண்டு,எந்த சாதியிலும்
இரக்கத் துணிந்து கொண்டேன் குறை
ஏதும் எனக்கு இலையே.

(திருவெழுத்து ஐந்து =பஞ்சாட்சர மந்திரம்)

Count the Blessings என்பது போல் நமக்குக் கிடைத்திருப்பவற்றிற்கு நன்றியுடன் இறைவனை நினைத்திருப்போர்க்கு குறையோ கவலையோ எந்நாளும் இல்லை.

18 comments:

  1. //நன்றி பெருகும் மனதில் எதைப்பற்றியும் யாரைப் பற்றிய குறைகளும் தங்குவதில்லை. அந்த அழுக்குகள் நன்றி என்னும் உணர்ச்சிப் பெருக்கில் அடித்துச் செல்லப்படுவதால் மனம் சுத்தமாக இருக்கிறது. அப்போது ஆனந்தம் அங்கே குடி கொள்கிறது. பாட்டு தானாக வெளிப்படுகிறது.//

    மனப்பூர்வமாய் உணர்ந்து எழுதிய எழுத்து, பளிச்சிடுகின்றது, பதிவில் அந்த உணர்வுகளும் சேர்ந்து. அருமையான ஒப்புவமைகளை அடுத்தடுத்துத் தேடி எடுத்துப் பொறுக்குகின்றீர்கள் பொறுமையாய். ஒவ்வொன்றும் நல்முத்துக்கள். நன்றி, வாழ்க, வளர்க!

    ReplyDelete
  2. //அவிழ்தம்= ஔஷதம், மருந்து//

    'அவிழ்தம்' என்னும் அழகான ஒரு
    புதுச் சொல் இன்று தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.

    அருமையான பதிவு. இதைப் படித்ததும், "யாண்டு பல் ஆக, நரை இல் ஆகுதல் யாங்கு ஆகியர்?" என்று தொடங்கும் பெரும்புலவர் பிசிராந்தையாரின், புறநானூற்றுப் பாடல் நினைவுக்கு வந்தது..

    ஆம், குறையொன்றுமில்லை, கபிரன்ப! மிக்க நன்றி.

    ReplyDelete
  3. வழக்கம் போல சிறந்த பதிவு.

    உழவன் நன்றிப் பெருக்குடன் மட்டுமல்லாது நிறைந்த மனதுடனும் இருக்கிறான். நல்ல உதாரணம்.

    //குடும்பம், செல்வம் என்பன வெல்லாம் கடக்கமுடியாத காடு போல கவலை தரும் விஷயங்கள் ஆகும்.//

    உண்மைதான், ஆனால் ஏற்ற கடமையை ஆற்றியாக வேண்டுமே. :)

    எப்போதோ ஸ்கூல்ல படித்த சிறுபஞ்ச மூலச் செய்யுள்...நினைவு படுத்தியமைக்கு நன்றி. :)

    மொத்தத்தில் மிக அருமையான இடுகை...அளித்தமைக்கு நன்றிகள் ஐயா.

    ReplyDelete
  4. நன்றி கீதா மேடம்,

    //ஒப்புவமைகளை அடுத்தடுத்துத் தேடி எடுத்துப் பொறுக்குகின்றீர்கள் //

    சில சமயம் குறித்து வைத்துக் கொள்வது அவ்வப்போது பயன்படுகிறது. பலசமயம் எங்கு படித்தோம் என்பதை மறந்து தேடிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. :))

    தொடர்ந்து தரும் ஊக்கத்திற்கு நன்றி

    ReplyDelete
  5. வருக ஜீவி ஐயா,

    //"யாண்டு பல் ஆக, நரை இல் ஆகுதல் யாங்கு ஆகியர்?" //

    ஏழாம் வகுப்பு துணைப்பாடத்தில் படித்ததை நினைவூட்டியதற்கு மிக்க நன்றி. வலைப்பக்கம் ஒன்றில் அது முழு கட்டுரையாகவும் வந்துள்ளது.
    அதன் சுட்டி

    தங்கள் பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  6. நல்வரவு மதுரையம்பதி,

    //வழக்கம் போல சிறந்த பதிவு //

    இப்படி சொன்னால் பயமாயிருக்கிறது.
    அடுத்த பதிவிலும் இந்த எதிர்பார்ப்பை நிறைவேற்ற வேண்டுமே என்ற கவலை வந்து விடுகிறது
    ஹும் எல்லாம் அவன் பார்த்துப்பான் என்று சும்மா இருக்க வேண்டியதுதான். :))
    வழக்கம்போல் உற்சாகமூட்டும் பின்னூட்டத்திற்கு நன்றி

    ReplyDelete
  7. சாஹ் கயி சிந்தா மிடி மனுவான் பேபர்வாஹ்
    ஜின்கோ கசூ ந சாஹியே ஸோஹி ஷாஹம்சாஹ் !!

    எனும் கபீரின் தோஹா நினைவுக்கு வருகிறது.

    அது சரி !
    ரயிலில் பயணம் செய்கையில் சுமைகளை பக்கத்தில் வைத்து, அப்பாடா
    என இளைப்பாறலாம். ஆனால், தன் உடலே ஒரு சுமையானால் ?
    அதற்கும் ஒரு பதில் பகவானே சொல்கிறார். என்ன?


    //கவலைக்கான காரணங்களை பகவானிடம் விட்டு விடு. அப்புறம் கவலை என்கிற பாரம் ஏது ?” என்று பதில் வந்தது.//

    அதையும் பகவானே பார்த்துக்கொள்வார்.

    சும்மா சொல்லக்கூடாது.
    கபீரின் ஒவ்வொரு பதிவுக்கும் ஒரு டாக்டரேட் தரவேணும்.


    சுப்பு ரத்தினம்
    (இப்போது) சென்னை.
    பி.கு. பிறகு விரிவாக எழுத ஆவல்.

    ReplyDelete
  8. ’ஸிலம் கிம் அநலம் பவேத் ?’ என்று பார்வேந்தன் அனுப்பிய
    பெரும் பொருளைப் புறக்கணித்துவிட்டு வறுமையில் செம்மை கண்டு
    வைராக்யத்துடன் வாழ்ந்தார் ஸ்வாமி தேசிகன் இல்லறத்தில் இருந்தாலும். ஆழ்ந்த இறையுணர்வும்,
    வைராக்யமும் வாய்க்கப் பெற்றால் வாழ்வு ஒரு சுமையாகாது.
    மனத்தின் கண் உயர்ந்த சிந்தனைகளை விதைக்கும் இது போன்ற இடுகைகள்
    இடைவெளியின்றி வர வேண்டும் என்பதே என் விருப்பம்.
    ஒவ்வோர் இடுகைக்கும் டாக்டரேட் கொடுக்கலாம் அன்பர் கூறியதுபோல்.
    பணிவுடன்,
    தேவ்

    ReplyDelete
  9. மிக அருமையான பதிவு. கவலையும் கரையானும் ஒன்று. அரிக்க ஆரம்பித்தபின் அழித்தல் சுலபமில்லை.

    வைத்தியர் தரும் அவிழ்தம் (ஜீவி ஐயா சொன்னது போல அழகான சொல்) வேண்டாம், இறைவன் மேல் நம்பிக்கைதான் வேண்டும் :)

    ReplyDelete
  10. நல்வரவு சுப்புரத்தினம் ஐயா,

    சுற்றுப்பயணம் இனிதாக இருந்திருக்கும் என்று நம்புகிறேன்.

    //பி.கு. பிறகு விரிவாக எழுத ஆவல் //

    தங்கள் கருத்துகளை யாவரும் எதிர் நோக்கியுள்ளனர்.

    பாராட்டுதல்களுக்கு நன்றி

    ReplyDelete
  11. நல்வரவு தேவராஜன் ஐயா,

    ஆழ்ந்த இறையுணர்வும்,
    வைராக்யமும் வாய்க்கப் பெற்றால் வாழ்வு ஒரு சுமையாகாது


    அவற்றை வளர்த்துக்கொள்ளும் முயற்சியில் பல பரீட்சைகளை கடக்க வேண்டியிருக்கிறதே. பரீட்சை என்றாலே பலருக்கும் (என்னையும் சேர்த்து) பயம்தான். :-))

    தங்கள் மேலான கருத்துகளுக்கு நன்றி

    ReplyDelete
  12. வாங்க கவிநயா,

    கவலையும் கரையானும் ஒன்று

    என்னுடைய முதல் மொழி பெயர்ப்பு

    சிந்தையைத் தின்னும் கவலைப்பேய்
    மரம் தின்னும் சிதல் அன்னே

    எந்தையே தீர்வேயிலா பிணியிது
    பேதை வைத்தியன் செய்வது மென்னே

    (சிதல்= கரையான்)
    ஆனால் கபீர் ’கரையான்’ என்ற வகையில்எதையும் குறிப்பிடாததால் அது மொழி பெயர்ப்பு ஆகாமல் என் அதிகப்பிரசங்கித்தனம் ஆகிவிடும் என்று கருதி அதைக் குறிப்பிடாமல் விட்டேன்.

    இறைவனின் விருப்பமோ என்னவோ தங்கள் பின்னூட்டம் மூலம் அதையும் வெளியிட செய்கிறான் போலும்.

    வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  13. "ஆழ்ந்த இறை நம்பிக்கை இருந்தால் மட்டுமே அப்படி கவலையற்று இருக்க முடியும்.".. உண்மைதான்.. எல்லாம் அவனருள் என்றிருந்துவிட்டால் துன்பத்தின் சாயல்கூட நம்மை அணுகாதுதான்.. அதற்கான யோக பலம் கிட்டுவது இது போன்ற பதிவுகள் தான் என்பதையும் மறுக்க முடியுமா... நன்றி

    ReplyDelete
  14. வாங்க கிருத்திகா,

    மிக்க நன்றி, தங்கள் வரவுக்கும் மனதைத் தொட்ட கருத்து பகிர்வுக்கும்.

    ReplyDelete
  15. அந்த இரயில்பெட்டி சுமை - உதாரணம் அருமை!

    ReplyDelete
  16. நன்றி ஜீவா,

    // ..இரயில்பெட்டி சுமை - உதாரணம் அருமை! //


    பெரியோர்களின் வாக்கே மா மருந்து !

    ReplyDelete
  17. //எப்போதோ ஸ்கூல்ல படித்த சிறுபஞ்ச மூலச் செய்யுள்.//
    படிக்க எவ்வளவு விஷயம் இருக்கு! மலைப்பாக இருக்கு!

    ReplyDelete
  18. நல்வரவு திவா,

    //படிக்க எவ்வளவு விஷயம் இருக்கு! மலைப்பாக இருக்கு //

    தமிழ் என்னும் கற்கண்டு மலையின் சிறு துகளே ஆயினும் இனிக்கத்தானே செய்யும் :)

    கருத்துக்கு நன்றி திவா

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி