கடவுள் ஏன் மனிதனின் கையில் அகப்பட மாட்டேன் என்கிறான் ? அகப்பட்டால் தன்னையும் மனிதன் சீர்திருத்த ஆரம்பித்து விடுவானோ என்கிற பயம் கூட காரணமாயிருக்கலாம் ! :-)
இந்தக் கருத்தை மையமாக வைத்து திரைப்படங்களில் நகைச் சுவை காட்சிகள் பலவும் வெளி வந்திருக்கின்றன.
சாணக்கியன் பிரம்மனுடைய படைப்பிலேயே சீர்திருத்தம் செய்ய வாய்ப்பு உள்ளது என்று நினைக்கிறார்.
பிரம்மனுக்கு சரியாக எடுத்துச் சொல்பவர்கள் இல்லை போலும் ! தங்கத்திற்கு நறுமணம் வைக்க மறந்து விட்டான்; கரும்பிற்கு கனி கிடையாது; சந்தன மரத்திற்கு அழகிய் பூ கிடையாது ; படித்தவர்களுக்கு செல்வம் கிடையாது; அரசனுக்கு நீண்ட ஆயுள் கிடையாது (சாணக்கிய நீதி 9 :3)
சாணக்கியன் சொல்ல வந்தது என்னவென்றால் குறையில்லாத பொருள் என்று உலகத்தில் கிடையவே கிடையாது; பிரம்மனுடைய படைப்பில் கூட குறைகள் உண்டு பாருங்கள் என்று வேடிக்கையாக சுட்டிக்காட்டுகிறார்.
ஆனால் இந்த குறை மனிதனுடையதா, பிரம்மனுடையதா ?
ஒருவேளை மனிதனின் பேச்சைக் கேட்டு தங்கத்திற்கு அருமையான வாசம் ஒன்றை பிரம்மன் கொடுத்தான் என்று வைத்துக் கொள்வோம்.
என்ன நடக்கும் ?
தென் ஆப்பிரிக்கத் தங்கம் வெனிசுலாவில் கிடைக்கும் தங்கத்தைக் காட்டிலும் நறுமணத்தில் உயர்ந்தது. அதை விடவும் உக்ரேனில் வெட்டியெடுக்கப்படும் தங்கத்தின் நறுமணம் இன்னமும் உயர்ந்தது என்றெல்லாம் தங்கத்தில் தரம் பிரிக்கத் துவங்குவான்.
சாதாரண மரப்பொம்மைக்கு சந்தன எண்ணெய் தடவி சந்தன விக்கிரகமாக ஏமாற்றுவதுபோல சந்தையில் நறுமணம் குறைந்த தங்கத்திற்கு வாசம் பூசி உயர்ந்தவகை தங்கமாக விற்பனை செய்யவும் முற்படுவான்.
இதனால் தங்கத்தில் ஒரு புது விதமான குறை புகுந்து விட்டது. தாம் ஏமாறாமல் இருக்க அதைப்பற்றியும் கவலைப்பட வேண்டியவர்கள் ஆகிவிட்டனர் மனிதர்கள்.
இப்படியாக எல்லாவற்றிலும் குறை காணும் சுபாவமும் சந்தேகமும் உடைய மனிதர்கள் மனித வடிவில் இருக்கும் ஞானியர்களிடையேயும் தம் குருவிடமும் குறை காண்பதிலோ சந்தேகப்படுவதிலோ ஆச்சரியம் இல்லைதான்.
கபீர்தாஸுக்கும் அதைப் பற்றித் தெரியும். அதற்கு தீர்வாக அவர் தரும் உதாரணம் ம்னதில் நிறுத்திக் கொள்ள வேண்டியது ஒன்றாகும்.
मिसरी बिखरी रॆत में, हस्ती चुनी न जाय
किडी. ह्वै करि सब चुनै, तब साहिब कू पाय
சருக்கரை சிதர்த்தது மண்ணிலே, பிரிக்க ஒண்ணாது குஞ்சரமே
பொறுக்கிச் செல்லும் சிற்றெரும்பே, பொறுமை வேண்டும் குருமுன்பே
குற்றம் குறைகளுடன் கூடியதே மனித உலகம். அவர்கள் நடுவே பிறந்த பின் குருவானவர்க்கும் அவைகளின் தாக்கம் இருக்கவே செய்யும். சில அவர்களின் பழக்க வழக்கங்களில் இருக்கலாம், சில அவர்களோடு பிறந்த குணநலன்களில் தெரியலாம்.
அமெரிக்க சுற்றுப்பயணத்தில் இருந்தார் விவேகானந்தார். விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்த ஒரு வீட்டில் யாரும் புகைபிடிக்ககூடாது என்ற விதி இருந்தது. இதை அறியாத விவேகானந்தர் விருந்து முடிந்த பின்னர் பையிலிருந்த புகைக்குழாயை வெளியே எடுத்து புகையிலை நிரப்பி, பற்ற வைத்து புகை பிடிக்கத் தொடங்கினார்.பலரும் அதிர்ந்து போயினர். வீட்டின் எஜமானி இவர் புகைபிடிப்பதை கண்ட போது “சுவாமிஜி புகைப்பிடிப்பதற்காக மனிதன் படைக்கப் பட்டிருந்தால் கடவுள் தலையில் ஒரு புகைபோக்கியையும் சேர்த்தே படைத்திருப்பான்” என்றார் கிண்டலாக.
”அதனால் என்ன அதை படைப்பதற்கான மூளையை கொடுத்தாயிற்றே என்று சும்மாவும் இருந்திருக்கலாம்” என்று பதட்டப்படாமல் பதிலளித்தார் சுவாமிஜி. யாவரும் சிரிப்பில் ஆழ்ந்தனர்.
அப்பொது அருகே இருக்கும் சாமானியர் எவருக்கும் 'என்ன இது!ஐம்புலன்களை வென்றவர் என்று நாம் நினைப்பவர் இப்படி புகையிலைக்கு அடிமையாயிருக்கிறாரே. இவர் உண்மையிலேயே மகான் தானா அல்லது கெட்டிக்கார பேச்சாளர் மட்டும்தானா?' என்ற சந்தேகம் எழுந்திருக்கலாம். பலரும் அவரை விட்டு விலகியும் இருக்கலாம்.
இப்படிப்பட்ட புற நிகழ்ச்சிகளால் விவேகானந்தர் உள்ளே பெற்றிருந்த ஆத்ம ஞானத்தை புரிந்து கொள்ள முடியாது. பலரும் வெறுக்கும் புகைபிடிக்கும் பழக்கம் இருந்ததன் காரணமாக அவரது ஆத்மஞானம் குறைவும் படாது.
இதைப் பற்றி சுவாமி சிவானந்தர் மிகத் தெளிவாக உரைக்கிறார்.
A true disciple is concerned only with the Divine Nature of the Guru. The Guru’s actions as man is not the disciple’s concern. He is totally oblivious of it. To him, the Guru is Guru even if he acts unconventionally. Always remember that the nature of a saint is unfathomable. Judge him not.
Measure not his divine nature with the inadequate yardstick of your ignorance. Criticise not your Guru’s action which is done on universal vision.
- Swami Sivananda
பல ஞானிகளின் விசித்திரப் போக்கைப் பற்றி படித்தும் கேட்டும் இருக்கிறோம். சில பைத்தியக்காரத்தனமாய் கூடத் தோன்றும். பின்னாளில் அவர் செய்கையின் காரணம் புரியும் போது முக்காலும் அறிந்த ஞானியாக போற்றப் படுகிறார்.
மணலில் சேர்ந்திருக்கும் சர்க்கரையைப் போன்றவர் குரு. நமது பெரும் அறிவாற்றலின் அளவு கொண்டு அவர்களைப் பற்றி எடைபோட முயன்றால் நாம் யானையை ஒத்தவர்கள் ஆவோம். நமக்கு நம் அறிவின் மேல் உள்ள அபார நம்பிக்கை யானையை போன்ற அகங்காரத்தை குறிப்பதாகும்.
பொதுவாக மனிதர்கள் ஏதேனும் மனதுக்கு பிடித்து விட்டால் எப்பாடு பட்டாவது அதை அடைய முயற்சி மேற்கொள்கின்றனர். சாணக்கியன் சொல்லும் தாழம்பூ உதாரணத்தை பார்ப்போமே.
தாறுமாறான வளர்ச்சி, தின்பதற்கு பழங்கள் கிடையாது, தாழம்பூ புதர்களுக்கிடையே வசிக்கும் பாம்புகள். பூவைப் பறித்து முடியில் சூட்டிக் கொள்ள ஆசைப்பட்டால் கைகளைத் துன்புறுத்தும் முட்கள் நிறைந்த இலைகள், சரி சுலபமாகவாவது அணுக முடியுமா என்றால் அதுவும் இல்லை. ஆனாலும் அதன் நறுமணத்தால் கவரப்பட்டு தாழம்பூவை விரும்பி அடைகின்றனர் மக்கள். ஒரே ஒரு சிறப்பு தன்மை இருந்துவிட்டால் கூட போதும், பல குறைகளையும் மறக்க மனிதர்கள் தயங்குவதில்லை.(சாணக்கிய நீதி 17:21)
லோகாதாய பார்வையில் பல குறைகளுடையவராய் காட்சியளித்த போதிலும் ஞானியர்களின் சிறப்பு, இறையுணர்வை அனுபவிக்கும் ஒரு காரணத்தினாலேயே ஒளிர்விடுகிறது.
சுவாமி சிவானந்தா சொல்வது போல நம்முடைய அளவு கோல்கள் அவர்களிடத்தில் எடுபடாது. அவர்களை எடை போட்டு ஏற்றுக் கொள்வேன் என்பது சராசரி மனிதருக்கு முடியாது. அவர்கள் அருள் வேண்டுமானால் எப்படிப்பட்ட சிரமம் ஆனாலும் அவர்களை தேடி சரணடைவதுதான் ஒரே வழி. அதற்கான மார்க்கம் கபீர் சொன்னது போல் எறும்புகளாக வேண்டும். நம் அகந்தை குறுகித் தொலைய வேண்டும். மண்ணைப் பார்க்காது சருக்கரைத் துகள்களையே காணும் திறமை பழக வேண்டும்.
நாம் வேண்டுமானால் உப்புக்கும் சர்க்கரைக்கும் வித்தியாசம் தெரியாமல் ஏமாந்து போகலாம். ஆனால் எறும்புகளை ஏமாற்ற முடியாது. மனதில் அகங்காரம் அழியும் போது நம்முள் பல சூட்சும உணர்வுகள் வலிவு பெறுகின்றன. அவை நமது புத்தியையும் விவேகத்தையும் கூர்மை படுத்துகின்றன. நல்லதையும் கெட்டதையும், அசலையும் போலியையும் பிரித்தறியும் விவேகத்தைப் பெருக்கிவிடுகின்றன. பேசுபவரின் வார்த்தை ஜாலங்களில் மயங்காது அவர்களின் உள்ளத்தை ஊடுருவி உண்மையை புரிந்து கொண்டுவிடக்கூடிய ஆற்றலைப் பெற்று விடுகின்றன.
அந்த ஆற்றல் கைவரப் பெற்ற பின் உண்மையான குருவை அடையாளம் கண்டு கொள்வதில் சிரமம் ஏதும் உண்மையான சாதகனுக்கு இருக்க முடியாது.
இல்லாவிட்டால் யானை தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வது போல நாமும் நம் அஞ்ஞானத்தை நம் மேலே வீசிக் கொண்டு அந்த ஆனந்தத்திலேயே திளைத்திருக்கலாம்.
யானைக்கு மண்ணையும் சர்க்கரையையும் பிரித்தெடுக்கும் திறமையை பிரமன் கண்டிப்பாகத் தரப் போவதில்லை. அது போல் அகந்தை உடையவர்க்கு குரு அருளும் கூடப்போவதில்லை.
மனதில் அகங்காரம் அழியும் போது நம்முள் பல சூட்சும உணர்வுகள் வலிவு பெறுகின்றன. அவை நமது புத்தியையும் விவேகத்தையும் கூர்மை படுத்துகின்றன.
ReplyDeletetrue words.
man to need firstly viveka.
this is must for both wordly and spritual also.
sankarar always and repeatedly conveyed viveka is first step for man
வாங்க பாலு சார்,
ReplyDelete//sankarar always and repeatedly conveyed viveka is first step for man//
சங்கரரின் விவேக சூடாமணியை நினைவூட்டியதற்கு மிக்க நன்றி.
So many Indian god mans, acclaimed as guru are getting into lime lights notoriously, and today your article, any coincedince?
ReplyDeleteI am not intended to be harsh, just sharing my mind.
It is a lovely article as usual. Thanks for sharing.
நல்வரவு செந்தில் ஸ்ரீராஜ்,
ReplyDelete//...any coincedince? //
:) ஓரளவு உண்மை.
பலநாட்களாக மனதில் ஓடிக்கொன்டிருந்த எண்ணங்கள் தாம். கபீரின் ஹிந்தி மூலம் அடங்கிய புத்தகம் இரவல் போயிருப்பதால் தள்ளிப் போட்டு வந்தேன்.
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி
//மனதில் அகங்காரம் அழியும் போது நம்முள் பல சூட்சும உணர்வுகள் வலிவு பெறுகின்றன. அவை நமது புத்தியையும் விவேகத்தையும் கூர்மை படுத்துகின்றன. நல்லதையும் கெட்டதையும... பிரித்தறியும் விவேகத்தைப் பெருக்கிவிடுகின்றன.//
ReplyDeleteஉபநிஷத்துக்களும் இதே கருத்தைச் சொல்கின்றன.
'சருக்கரை - எறும்பு - யானை
வெகு சாதாரணமாகத் தெரியும் ஒரு விஷயத்தைக் கொண்டு எவ்வளவு ஆழ்ந்த தத்துவங்களையும் எவ்வளவு அழகாக விளக்கி விடுகிறார்கள்?'என்று
ஆச்சரியமாகத்தான் இருக்கிறது.
வருக ஜீவி ஐயா,
ReplyDelete//...வெகு சாதாரணமாகத் தெரியும் ஒரு விஷயத்தைக் கொண்டு எவ்வளவு ஆழ்ந்த தத்துவங்களையும் எவ்வளவு அழகாக விளக்கி விடுகிறார்கள்.//
ஞானிகளாய் இருப்பதனால் கபீர் போன்றோர் நுண்ணறிவும் மிக சூட்சுமமான கருத்துகளை- எறும்பு போல் சருக்கரையை பிரித்து -நம் நன்மைக்காக எடுத்துத் தருகிறார்கள் போலும்!
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி
ரொம்ப நல்லா இருக்கு
ReplyDelete