Tuesday, March 23, 2010

துணையாய் நெஞ்சம் துறப்பிப்பான்

பழனி தைப்பூசத் திருவிழா. தரிசனம் முடிந்து, ஊர் திரும்ப வேண்டி பேருந்திற்காகக் காத்திருப்போர் கூட்டம் மிக அதிகமாக இருந்தது. பேருந்தைக் கண்டதும் முண்டியடித்து ஏறுவோர் நெரிசலில் சிக்கித் திகைத்தார் ஒரு பெரியவர். எப்படியோ கூட்டமே அவரை உள்ளே தள்ளி விட்டது. அமர ஒரு இருக்கையும் கிடைத்தது. அநத அமளியில் அவருடைய பணப்பை எங்கேயோ தவறி விட்டது. அதை அவர் கவனித்துக் கொள்ளவே இல்லை. அவருடைய அதிருஷ்டத்திற்கு நடத்துனர் கையில் அது கிடைத்தது. அவர் சத்தம் போட்டு “யாராவது பர்ஸ்-ஸ தவற விட்டுடீங்களா பாத்துக்குங்க” என்று அறிக்கை விட்டார்.

தன் சட்டைப் பையைத் தடவிப் பார்த்து பர்ஸ் இல்லாததைக் கண்ட பெரியவர் அது தன்னுடையது என்று கோரினார். “பெரியவரே உங்களுதுதான் என்கிறதுக்கு ஏதாவது அடையாளம் சொல்லுங்க.”

“அது தோல் பர்ஸ்-ங்க்க, உள்ளே முருகன் படம் இருக்கும்”

“ஐயா, எல்லாரோட பர்ஸ்-ஸும் தோலுதான். பழனியில எத்தனையோ பேர் பர்ஸ்-லேயும் முருகன் படம் இருக்கத்தானே செய்யும். வேற ஏதாவது அடையாளம்..உங்க படமோ குடும்பத்துல யார் படமாவது வச்சிருக்கீங்களா ? “

” ஒரு காலத்துல சுருட்டை முடி அடர்ந்த மீசையோட இருந்த என்னோட படத்தை வச்சிருந்தேன். கலியாணம் ஆனப்புறம் என் பொஞ்சாதி போட்டோவை வச்சிருந்தேன். குழந்தைங்க வந்தப்புறம் அவங்களோட போட்டோ கொஞ்ச நாளைக்கு இருந்திச்சு. அவங்க யாரும் இப்போ என்னோட இல்லை. பிஸனஸ்-ல கடன் வாங்கி நஷ்டமாயிடுச்சு. நான் பிரயோசனமத்தவன்னு அவ கோவிச்சுக்கிட்டு கொழந்தைகள கூட்டிக்கிட்டு ஊருக்கு போயிட்டா. இப்போ வளர்ந்த குழந்தைகளும் என்னை கண்டுகிறதில்லை. எல்லாம் போயி என்னப்பன் முருகன் மட்டும் தான் எனக்குங்கிற நெசம் தெரிஞ்சு போனதினால வேற எவரோட படமும் வச்சுகிறது இல்லே” என்று பதில் சொன்னார் பெரியவர்.

மறு கேள்வி கேட்காமல் நடத்துனர் அவருடைய பணப் பையை திருப்பிக் கொடுத்தார்.

(சமீபத்தில் வாசித்த ஒரு ஆங்கிலக் கதையின் தழுவல்)

வாழ்க்கை ஒரு இரயில் பயணம் போலே. நமக்கு வந்துள்ள உறவுகள் எல்லாம் சகப் பிரயாணிகள் மாதிரி. சிறிது காலம் உடன் இருப்பார்கள், அவர்களுடைய இலக்கு வந்ததும் பாதை மாறி வெவ்வேறு திசைகளில் பயணம் தொடர்வார்கள் என்றெல்லாம் படிக்கின்றோம். கபீர்தாஸர் இதே கருத்தை படகில் ஒன்றாக பயணம் செய்பவர்களை மையமாக வைத்து சொல்கிறார்.

अप्ना तो कोई नहीं, हम काहे को नांहि ।
पार पहूंची नाव जब, मिलि सब बिछुडे. जांहि ॥


தன்னவரென்று எவரும் ஏது, தானும் பிறர்க்கு உறவேது
முன்னம் சேர்ந்தவர் பிரிவரே, படகு கரைதொடும் போது


மாற்று :
என்ன வரென்று எவருமில்லை, யானும் பிறர்க்கு றவில்லை
பரிசல் கரைசேர்ந்த பின்னே, பயணியர் போவார் தம் வழியே


வாழ்க்கைப் பயணம் ஏதேதோ காரணங்களால் திசை மாறிக் கொண்டே இருக்கிறது. ஏதோ ஒரு இலக்கு வந்ததும் ஒரு சிலர் விட்டு போகிறார்கள் அல்லது நாம் விட்டுச் செல்கிறோம். புது உறவுகள் அல்லது நண்பர்கள் சில காலத்திற்கு சேர்கின்றனர். இவையெல்லாம் மாறிக்கொண்டே இருக்கின்றன. மரணம் என்கிற இலக்கை அடைந்தவுடன் எல்லாமே அர்த்தமற்ற உறவுகளாகி விடுகிறது. அதை ராமகிருஷ்ணர் இப்படிச் சொல்கிறார்.

“கடலில் மிதக்கும் சில கட்டைகள் ஏதோ ஒரு அலையால் நெருங்கி வருகின்றன. அடுத்த ஒரு பெரும் அலை வந்து பிரிக்கும் வரை அருகருகே மிதக்கின்றன. உலகின் உறவுகள் தந்தை-தாய், கணவன் -மனைவி, மகன்-மகள் என்ற உறவுகளும் இப்படிப் பட்டவைதான். எதுவும் உண்மையானது கிடையாது. உண்மையான உறவு என்று ஒன்று உண்டானால் அது இறைவனுடைய திருவடிகள் மட்டுமே”

இதே கருத்தை திருநாவுக்கரசர், கபீர் சொல்வது போல் உறவுகள் அர்த்தமற்றவை என்று ஆரம்பித்து ”இவையெல்லாம் மாயமே அவற்றில் மகிழ்ச்சி கொள்ள ஏதும் இல்லை” என்பதை அழுத்தமாகச் சொல்கிறார்.

தந்தை ஆர் தாய் ஆர் உடன் பிறந்தார்
தாரம் ஆர், புத்திரர் ஆர், தாந்தாம் ஆரே
வந்தவாறு எங்கனே, போம் ஆறு ஏதோ?
மாயமாம் இதற்கு ஏதும் மகிழ வேண்டா
சிந்தையீர் உமக்கொன்று சொல்லக் கேண்மின்
திகழ்மதியும் வாளரவும் திளைக்கும் சென்னி
எந்தையார் திருநாமம் நமச்சிவாய
என்று எழுவார்க்கு இரு விசும்பிலிருக்கலாமே


[தாய் ஆர் உடன்பிறந்தார் என்பதில் தாய் ஆர் என்றும் ஆர் உடன்பிறந்தார் என்றும் வரும் : போம் ஆறு= உலகை விட்டு போகும் வழி : வாளரவு =கொடிய அரவம்: திகழ்மதி=குளிர்ச்சி பொருந்திய சந்திரன்]

உறவுகள் என்னும் மாயத்தைக் கடந்து செல்ல வேண்டுமானால் இறைவன் நாமத்தை இடைவிடாது சிந்திக்க வேண்டும் என்பதை அப்பர் பெருமான் அறிவுறுத்துகிறார்.

இறைவன் நாமத்தை ஏத்தினால் முக்தி நிலை கண்டிப்பாக உண்டு என்பதை வாழ்ந்து காட்டிய மகான்கள் எத்தனை எத்தனையோ. ஏன் ஆதி கவி வால்மீகியின் வாழ்க்கையை விடவா உதாரணம் தேவை ?

வழிப்பறிக் கொள்ளைக்காரன் ரத்னாகரன் வால்மீகியானதும் விடாத ராம செபத்தினால்தானே !

”உன் பாவங்களை பங்கு போட்டுக் கொள்ள விரும்புவார்களா உன் குடும்பத்தினர். கேட்டு வா” என்ற நாரதரின் கேள்வி அவனது வாழ்க்கையையே மாற்றி விட்டது.
வழிப்பறி மூலம் வந்த செல்வத்தை அனுபவிக்கத் துடித்த குடும்பத்தினர் எவரும் அவனுடன் அதற்கான பாவத்தை மட்டும் ஏற்றுக் கொள்ள முன் வரவில்லை.

தந்தை தாய் மனைவி மக்கள் என்ற உறவுகள் எல்லாம் சுயநலத்தின் அடிப்படையில் நிற்பவையே என்பதை அந்தக் கணத்திலே புரிந்து கொண்டான். வைராக்கியம் பிறந்தது. அந்த மகரிஷி நாரதரையே சரணடைந்தான் ரத்னாகரன். நாரதரும் அவருக்கு ராம மந்திரம் உபதேசித்துச் சென்றார்.

எழுத்தறிவில்லாக் கொள்ளைக்காரன் தன் மீது கரையான் புற்று வளர்கின்ற நிலையிலும் தேக நினைவு இன்றி ராமநாமத்தில் மூழ்கிப் போனான். அதன்பின் அவனுக்கு எல்லாமே இறைவடிவம் ஆயிற்று. வால்மீகி முனிவர் அதனால் உலகுக்கு கிடைத்தார்.

அத்தனையும் இறைவடிவம் என்று உணர்ந்த பின்னர் உறவுகள் கூட அவன் வடிவே. முன் சொன்னத் தேவாரப் பாடலில் இவர் யார், அவர் யார் என்று வினவியவ திருநாவுக்கரசர் இறைவனிலேயே எல்லா உறவுகளையும் கண்டு அவனே எல்லாமாக இருப்பவன் என்றும் வேறொரு சமயம் அவனை ஏத்துகிறார்.

அப்பன் நீ அம்மை நீ அய்யனும் நீ
அன்புடைய மாமனும் மாமியும் நீ
ஒப்புடைய மாதரும் ஒண் பொருளும் நீ
ஒருகுலமும் சுற்றமும் ஓரூரும் நீ
துய்ப்பனவும் உய்ப்பனவும் தோற்றுவாய் நீ
துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ
இப்பொன் நீ மணி நீ இம்முத்து(ம்) நீ
இறைவன் நீ ஏறூர்ந்த செல்வன் நீயே


[ஏறூர்ந்த செல்வன் = நந்தி மீதமர்ந்த சிவபெருமான்]

இறைவனுடைய அருள் துணையால் மட்டுமே நெஞ்சம் துறத்தலையும் கைகொள்ள முடியும் என்பதை ’துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ’ என்று சொல்லிக் காட்டுகிறார் அப்பர் பெருமன்.

அப்படி அவனுடைய அருள் சித்தித்து விட்டால் மனிதனுக்கு எந்த துன்பமும் இல்லை என்பதை திருமழிசை ஆழ்வாரும் போற்றிச் சொல்கிறார்.

அத்தனாகி அன்னையாகி ஆளும் எம்பிரானுமாய்,
ஒத்து ஒவ்வாத பல்பிறப்பு ஒழித்து நம்மை ஆட்கொள்வான்
முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்
எத்தினால் இடர்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே !


“முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்” என்ன அழகான சொற்கோவை ! அப்படி அவன் ஆட்கொண்டு நம்முள் மேவுவதால் தான் துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ என்றும் போற்றப்படுகிறான் இறைவன.

சருக்கரை எந்த மொழியில் எந்த பெயரிட்டு அழைத்தாலும் தித்திக்கவே செய்யும். கடவுளின் நாமப் பெருமையும் அப்படிப்பட்டதே.

இறைவனை உள்ளே புகவிடு. அவன் நினைவிலேயே ஆனந்தம் கொள். உறவுகள் எல்லாம் தானே இற்று விழுந்து விடும். இது இயல்பான முன்னேற்றம்.

ஒரு சிலருக்கு ரத்னாகரன் போல் உறவுகள் மேலெழும் வெறுப்பே கூட இறைவன் பால் சிந்தையை திருப்பக் கூடும்.

தன்னை நோக்கிய மனிதரின் பயணத்தின் இலக்குகளை எவரெவருக்கு எவ்வகையில் நிர்ணயத்துள்ளானோ, அந்த இறைவனே அறிவான்.

10 comments:

  1. ஒரு குழந்தை. பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்தது. தாய் பார்த்துக் கொண்டே இருப்பதைப் பார்த்து விட்டுப் பாராதது போல விளையாட்டில் மறுபடி ஈடுபட ஆரம்பித்தது.

    விளையாட்டுக்கள் மாறிக் கொண்டே இருந்தன. கூட விளையாடுகிறவர்களும் மாறிக் கொண்டே இருந்தார்கள்.

    ஒரு கட்டத்தில் குழந்தை விளையாடுவதை நிறுத்திவிட்டு, அடுத்தவர் விளையாடுவதை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தது.அப்போதும், தன் தாய் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறாளா என்று ஒரு பார்வை, அப்புறம் வேடிக்கை பார்ப்பதில் கவனம்.

    ஒரு கட்டத்தில் வேடிக்கை பார்ப்பதும் அலுத்துப் போய்த் தாயிடம் வந்து அவள் கால்களைக் கட்டிக் கொண்டு, "வாம்மா, வீட்டுக்குப் போகலாம்!" என்றது!

    விளையாடுகிறவரை, வேடிக்கை பார்க்கிற வரை குழந்தையை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தாய்க்காரி, குழந்தையை சிரித்துக் கொண்டே வீட்டுக்குத் திரும்ப அழைத்துச் சென்றாளாம்!

    அந்த மாதிரி, எந்த நேரம் விளையாட்டு, எந்த நேரம் வேடிக்கை, எந்த நேரம் அம்மாவின் கால்களைக் கட்டிக் கொண்டு வாம்மா, வீட்டுக்குப் போகலாம் என்பதை, கதையில் வருகிற குழந்தை தானே தீர்மானிப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறது.

    அதற்குத் தெரியுமா, அதையும் அம்மாக்காரி தான் தீர்மானிக்கிறாள், குழந்தைக்கு அது தெரியாமல் வேடிக்கை காட்டுகிறாள் என்பது!

    ReplyDelete
  2. gi,

    i want to tell you to write ram nam article due to for RAM NAVAMI.

    but inside mind - thought came . wait ,you will write.

    today - i see the same thing.

    so you going on diving into deep.

    well . may ram bless today to you for your wonderfull service.

    may god gives you more and more -what you needs.

    may god with you in all your actions.

    om sriram jairam jai jai ram

    ReplyDelete
  3. வருக கிருஷ்ணமூர்த்தி சார்,

    //...குழந்தை தானே தீர்மானிப்பதாக நினைத்துக் கொண்டிருக்கிறது.///

    மிகவும் நல்ல உதாரணம் காட்டியிருக்கிறீர்கள். வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

    ReplyDelete
  4. நல்வரவு பாலு சார்,

    //but inside mind - thought came wait ,you will write.

    today - i see the same thing. ///

    ஓ! வால்மீகி ராமசெபத்தை பற்றி குறிப்பிடுகிறீர்களா! :) அதுவும் அவன் செயலே !

    தங்கள் பிரார்தனைகளுக்கு மிக்க நன்றி. இன்று ராமநவமி. நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  5. //முத்தனார் முகுந்தனார் புகுந்து நம்முள் மேவினார்
    எத்தினால் இடர்கடல் கிடத்தி ஏழை நெஞ்சமே !
    //
    எனக்கு மிகவும் பிடித்த பாசுர வரிகள். :)

    அழகுக்கு ஒருவரும் ஒவ்வாத வல்லி அருமறைகள்
    பழகிச் சிவந்த பதாம்புயத்தாள் பனிமாமதியின்
    குழவித் திருமுடிக் கோமள யாமளைக் கொம்பிருக்க
    இழவுற்று நின்ற நெஞ்சே இரங்கேல்! உனக்கு என் குறையே ?
    (அபிராமி அந்தாதி)

    ReplyDelete
  6. கூடவே கிளைத்த இன்னொரு சிந்தனை. பயணம் செய்யும்போது பொதுவாக நாம் மற்றவரிடம் அன்புடனே பழகுக்கிறோம். ஆசா பாசங்களை கொஞ்சம் அடக்கி வாசிக்கிறோம். ஏன்னா அப்படி இருக்க வேண்டியது கொஞ்ச நேரம்தானே? அதே போல வாழ்க்கையும் கொஞ்ச காலம்தான். சக பயணிகளுடன் அன்புடனே பழகுவோம்.

    ReplyDelete
  7. வருக ராதா,

    அபிராமியிடம் சரணடையினும் நெஞ்சுக்கு குறையொன்றும் இருக்க முடியாதுதான். சரண்புகும் மனநிலைதான் முக்கியம். அழகான பாடலை தந்ததற்கு நன்றி.

    ReplyDelete
  8. வணக்கம் தி.வா சார்,

    //அதே போல வாழ்க்கையும் கொஞ்ச காலம்தான். சக பயணிகளுடன் அன்புடனே பழகுவோம்//

    யாவரும் நினைவில் வைத்து பழக வேண்டிய சாதனை. வழிகாட்டுதலுக்கு நன்றி

    ReplyDelete
  9. //இறைவனுடைய அருள் துணையால் மட்டுமே நெஞ்சம் துறத்தலையும் கைகொள்ள முடியும் என்பதை ’துணையாய் என் நெஞ்சம் துறப்பிப்பாய் நீ’ என்று சொல்லிக் காட்டுகிறார் அப்பர் பெருமன்.//

    துய்க்கும் பொழுது சந்தோஷத்தையும் துறக்கும் போது அதற்கான தேறுதலையும் தருபவன் நீயே! வேண்டுதல் எல்லாம் எனக்கு என்னேரமும் அருள் துணையாய் இரு; உன் துணையால் மட்டுமே இதெல்லாம் சாத்தியப்படும்..

    -- இறைவனுடனான உறவும், அந்த உறவின் அடிப்படையான ஆழ்ந்த ஈடுபாடும், அதனால் பெறப்படும் தெளிவும், அந்த தெளிவின் வெளிப்பாடான கோரிக்கையும்--
    மனத்தை உருக வைக்கின்றன.

    அந்த 'துணையாய்' என்கிற சொல்லுக்கும் 'துறப்பிப்பாய்' என்னும் சொல்லுக்கும் இடையே 'என் நெஞ்சம்' என்று ஒரு வார்த்தையை அப்பர் சுவாமிகள் உபயோகித்திருக்கிறார் பாருங்கள், அது படுத்தும் பாடு தான் எல்லாம்.. துய்ப்பதும் அதுவே! துறப்பதும் அதுவே!

    நினைத்து நினைத்து உருகித் திளைக்க வேண்டிய நினைவுகளைத் தந்தமைக்கு மிக்க நன்றி, கபீரன்ப!

    ReplyDelete
  10. வருக ஜீவி ஐயா,

    சிந்திக்க வைக்கும் கருத்துகளோடு தொடர்ந்து உற்சாகமூட்டி வரும் தங்களுக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். மிக்க நன்றி

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி