முதல் கோணல் முற்றும் கோணல் என்பர்.
அவரை தனிப்பட்ட முறையில் அறிமுகப்படுத்துவதற்காக அழைத்துச் சென்ற அன்பரிடம் அம்பிகா தத்தரின் காதில் விழும்படியாகவே “யாரிந்த பெரியவர் ?” என்று கேட்டார் கணபதி முனி.
தத்தரும் சிரித்துக் கொண்டே ஒரு கவிதை வடிவில் ‘கவுட பாகத்திலிருந்து வந்திருக்கும் ஆசுகவி அம்பிகா தத்தன் யான்’ என்று சொல்லி நிறுத்தினார். இப்போது கணபதி முனியின் முறை. கவிதைக்கு கவிதையிலே பதில் சொல்ல வேண்டும்.[கவுடதேசம் வங்காளத்தில் ஒரு பகுதி]
“நீரோ அம்பிகையின் தத்தர், நானோ அவள் புத்திரன் கணபதி, தட்சிணத்தவன், கவி பாடுவதில் திறமையுள்ளவன்”
என்று சிறிதும் யோசிக்காமல் பதில் கவி சொன்னார். தத்தர் என்றால் வளர்ப்பு மகன் என்றும் பொருள் கொள்ளலாம். என்ன இருந்தாலும் தத்து மகன் சொந்த மகனைவிட ஒரு மாற்று குறைவு தானே !
கவிதையிலேயே பொருள் விடுவிக்கும் சமஸ்யங்கள் (புதிர்கள்) ஆரம்பித்தது
“ மருமகள் மாமனாரை இச்சித்து முந்தானை விலக்கினாள், ஆனால் கற்பில் தவறாதவள் அவள்....” ?????
“ சந்திரனை முத்தமிடும் எறும்புகள் .....“????
“ வருடத்தில் ஒரு நாள் சிவன் முகம் பார்க்காத பார்வதி...???’’
எல்லாப் புதிர்களுக்கும் சமத்காரமாக கவிதையிலேயே பதில்களை சொல்லிக் கொண்டு வந்த போது நடுவிலே ஸார்வசாம் என்பதற்கு பதிலாக ஸர்வேசாம் என்று சற்று வார்த்தைகள் மாறி விழுந்தன கணபதி முனிக்கு. உடனே திருத்திக் கொண்டு தொடர முற்படுகையில் அம்பிகா தத்தர் குறுக்கிட்டார்.
”கவிதை அருமை, உரையும் அருமை பேச்சிலே மட்டும் குழறல் ஏன்? தாரா வை வழிபட மறந்தனையோ” என்று குத்தலாக கேட்டார். அது கணபதி முனிக்கு மனவருத்தத்தை அளித்தது. ஆனால் அம்பிகா தத்தர் சொன்ன அந்த கவிதையிலே ஒரு இலக்கணப் பிழை இருந்தது.
அந்தப் பிழையை சுட்டிக்காட்டி கணபதி முனி பதிலடி கொடுத்தார். இப்போது அம்பிகா தத்தர் தன் நடுநிலை தவறினார்.
“பெருமை வேண்டாம் யானையே,[ஆனை முகத்தான்] யானையின் மூளையைத் தின்ன சிங்கம் [அம்பிகையின் வாகனம்] காத்திருக்கிறது “ என்று பொருள் வருமாறு தன்னை சிங்கமாகவும் கணபதிமுனியை யானையாகவும் இடித்துரைத்தார். அதிலும் ஒரு இலக்கணப் பிழை.
தட்சிணத்து கவி விடுவதாயில்லை
”காகமே! மாமரத்தில் அமர்வதானால் வாயை மூடிக்கொண்டு இரு. அப்போதாவது மக்கள் உன்னை குயில் என்று நினைக்கக் கூடும் “ என்று இன்னொரு பாடலில் சூடாக பதில் சொன்னார். யானையும் சிங்கமும் போய் குயிலும் காகமும் வந்தன.
தத்தருக்கு கோபம் எல்லை மீறியது.
”அடே ! மின்மினிப் பூச்சியே இரவில் மட்டும் தானே உன் மினு மினுப்பெல்லாம் “.
பறவைகளை விட்டு பூச்சி அளவுக்கு இறங்கி விட்டார். விடுவாரா கணபதி!
“ வீட்டுக்குள்ளே மட்டும் தானே விளக்கு ; வெளியில் வந்தால் காற்றால் அலைகழிக்கப்பட்டு அணைவது தானே அதன் இயல்பு “
”பட்டர்களெல்லாம் [தென்னிந்திய அந்தணர்கள்] குடித்துவிட்டு உல்லாசமாய் கணிகையரோடு விழுந்து கிடப்பவர்கள்”
“ கவுடர்களெல்லாம் மீன் ருசிக்காக செல்வத்தையும் வாழ்வையும் தொலைப்பவர்கள்”
உவமான உவமேயங்கள் தேய்ந்து நேரடியான பரஸ்பர தாக்குதலுக்கு இறங்கி விட்டனர் பண்டிதர் இருவரும்.
இந்த நிலையை படித்தபோது கபீரின் ஈரடி ஒன்று நினைவுக்கு வந்தது.
आवत गारी एक है, उलटत होय अनेक ।
कहैं कबीर नहीं उलटिये, वही एक की एक ॥
ஏச்சு ஒன்று பாய்ந்தது, எதிர்பேச்சால் அது பலவானது
பேச்சு வேண்டாம் கபீரா, போகட்டும் தனிமை யிலது
மாற்று
ஏச்சு வருவதோ ஒற்றையாய், எதிர்பேச்சால் வளருது பலவாய்
பேச்சால் பயனில்லை கபீரா, போகட்டும் விடு அதைத் தனியாய்
மனிதர்களுக்கு கொடுக்கப்பட்ட இந்த பேச்சு என்கிற வரம் முறை தவறி பயன்படுத்தப்படுவது போல வேறெந்த கரணமும் இல்லை என்றே கூறலாம். இதனால் வருகின்ற இடர்கள்தான் எத்தனை எத்தனை !!.
வாதங்களில் தனது வாதமே கடைசியாக இருக்கவேண்டும், அடுத்தவனின் வாயை அடைக்க வேண்டும் என்று மிகுந்த பிரயாசத்துடன் பலரும் விடாது வார்த்தைகளை வளர்த்துக் கொண்டே போவர். நேரம் செல்லச் செல்ல பொருள் குறையும், கோபம் அதிகமாகும். அத்தகையவர்களின் போக்கை நாலடியார் சித்தரிக்கிறது.
சொற்றாற்றுக் கொண்டு சுனைத்தெழுதல் காமுறுவர்
கற்றாற்றல் வன்மையுந் தாந்தேறார்; -கற்ற
செலவுரைக்கும் ஆறறியார் தோற்பது அறியார்
பல உரைக்கும் மாந்தர் பலர்.
[சொற்றாற்றுக் கொண்டு = சொற்களை ஆயுதமாகக் கொண்டு; சுனைத்தெழுதல் காமுறுவர் =வம்பு சண்டைக்கு போவதை விரும்புதல் ; செலவுரைக்கும் ஆறு= மனதில் பதிய வைக்கும் வகை ]
பதிலடி கொடுத்தே தீர வேண்டும் என்ற ஆதங்கத்தில், அவசரத்தில், கோபத்தில் பேசப்படும் அதிகமான எதிர்பேச்சுகள் அர்த்தமற்றவைகளாக முடிகின்றன. அத்தகைய நேரங்களில் மௌனத்துடனோ அல்லது ஒரு மென்மையான மறுப்புடனோ நிறுத்திக் கொள்ளவோ தெரிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். நாலடியாரின் பார்வையில் சொல்வதானால் தோற்பது அறிய வேண்டும்.
அதற்குத் தேவையானது அவசியமற்ற பேச்சில் ஆர்வமின்மை. இரண்டாவதாக எப்போது பேச்சு அனாவசியாமான திசையில் திரும்புகிறது என்பதை கண்டு கொள்ளும் விவேகம். இது இரண்டும் இருந்து விட்டால் மௌனத்தின் அருமை தானே புரிய ஆரம்பிக்கும். மௌனம் கூடாவிட்டால் இறை செபம் வாய்க்காது. இறைசெபம் இல்லாமல் இறையருள் வாய்க்காது.
பரமஹம்ஸ தேவர், கபீரின் இந்த கருத்தை ஒரு எளிய உதாரணத்தின் மூலம் விளக்குவார்.
கங்கையில் படகு ஒன்றில் சில போக்கிரிகள் குடித்துவிட்டு கும்மாளமிட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நீரோட்டத்தில் மிதந்து வந்த ஒரு காலியான படகு அவர்களுடைய படகுடன் மோதியது. அதில் மட்டும் யாரேனும் இருந்திருந்தால் சண்டை மூண்டிருக்கும். யாரும் இல்லாது போனதால், அங்கே இவர்களின் கும்மாளம் மட்டுமே தொடர்ந்தது. அது போல் நம்முள் அகங்காரம், கோபம் என்ற பயணிகள் இல்லாமல் போனால் எந்த மோதலிலும் ஏச்சுகளினால் நம் அமைதி கெடுவதில்லை.
கணபதி முனியை அங்கேயே விட்டுவிட்டீர்களே ! அவருடைய சொற்போர் என்ன ஆச்சு என்று வாசகர் நினைப்பது புரிகிறது.
மீன் சுவையை குறிப்பிட்டதுமே வங்கத்து அம்பிகா தத்தருக்கு முகம் மலர்ந்து விட்டது. அதிலும் கணபதி முனி அந்த கவிதையில் சொற்களை கையாண்ட விதம் அவருடைய வடமொழிப் புலமையை யாரும் மறுக்க முடியாத அளவுக்கு உயர்த்தி விட்டது. அம்பிகா தத்தர் எழுந்து சென்று அவரைத் தழுவிக் கொண்டார். இருவரும் பரஸ்பரம் வாக்கு வாதத்திற்காக வருத்தமும் மன்னிப்பும் கேட்டுக் கொண்டனர்.
கணபதி முனி அவர்களுக்கு பதினான்கு பண்டிதர்கள் ’காவ்யகண்ட கணபதி சாஸ்திரி’ என பட்டம் கொடுத்து கையெழுத்திட்ட சர்வகலாசாலையின் அங்கீகாரமும் கிடைத்தது.
சரி, அந்த மூன்று புதிர்களுக்கும் என்ன விடை என்று கேட்க நினைப்பதும் புரிகிறது. கணபதிமுனி அளித்த விடைகளை கீழே தருகிறேன்
” மருமகள் மாமனாரை விரும்பி முந்தானை விலக்கினாள், ஆனால் கற்பில் தவறாதவள் அவள்....” ?????
பீமனின் மனைவியான ஹிடும்பை புழுக்கம் அதிகரித்ததன் விளைவாக காற்று வாங்குவதற்காக தன் மேலாடையை விலக்கினாள். [வாயுதேவன் பீமனின் மானசிக தந்தை ஆதலால் ஹிடும்பைக்கு மாமனார் முறை ஆகவேண்டும்].
“ சந்திரனை முத்தமிடும் எறும்புகள் .....“????
தட்சணின் யாகத்தில் பார்வதி தீக்குளித்தாள் என்று அறிந்த சிவன் மயங்கி விழுகிறான். அப்போது அவன் முடியிலிருக்கும் பிறைசந்திரன் பூமியை தொடுகிறது. அந்நிலையில் அங்கே ஊர்ந்து கொண்டிருக்கும் எறும்புகள் சந்திரனை முத்தமிட்டன.
“ வருடத்தில் ஒரு நாள் சிவன் முகம் பார்க்க மறுக்கும் பார்வதி...???’’
விநாயக சதுர்த்தியன்று சந்திரனைக் கண்டால் அபவாதம் வரும் என்பதால் பிறை சூடிய சிவன் முகத்தை காண மறுக்கிறாள் பார்வதி.
அனைத்து புதிர்களுக்கும் ஆசுகவியாய் கவிதையிலேயே பதில் சொல்லி சபையோரை வியப்பில் ஆழ்த்தினார் கணபதி முனி.

[படம் : நன்றி ஷ்யாம், பிகாஸா வெப் ஆல்பம்]
பிற்காலத்தில் நாயனா என்று யாவராலும் அழைக்கப்பட்ட கணபதி முனி பகவான் ரமணருடைய அன்புக்கு பாத்திரமான சிஷ்யர். வேத சாஸ்திரங்களை பிழையற கற்றறிந்த அவருக்கு ரமணர்தான் ஞானகுரு. ஆனால் இவர் ரமணாஸ்ரமத்திலேயே தங்கிவிடாமல் பல இடங்களுக்கும் சுற்றுப் பயணம் செய்து கடுந்தவம் புரிந்தார். குடும்ப பொறுப்பை நிர்வகிக்க சில காலம் வேலூர் ஊரிஸ் கல்லூரியில் பணியாற்றினார். அப்போது மாணவர்களை சுதந்திர போராட்டத்திற்கு தூண்டினார் என்று பலரும் குற்றம் சாட்டினர். போலீஸ் கண்காணிப்பும் இருந்தது.
ஆனால் அவரது போராட்ட முறை ஆன்மீக வழியானது. அஹிம்சையை அடிப்படையாகக் கொண்டது. சமஷ்டி மந்திர செபத்தாலேயே ஆங்கிலேயரது ஆட்சியை நீர்த்துப் போக செய்ய முடியும் என்று நம்பினார். பல மாணவர்களுக்கு இது பற்றி சந்தேகம் எழுந்தது.
அவர்கள் ஒருமுறை அவரை அணுகி தம் சந்தேகத்தை தெரிவித்தனர். அப்போதுதான் தம் செபத்தை நிறைவு செய்திருந்த கணபதி முனி தம் கண்களை மூடிக்கொண்டார். சற்றும் எதிர்பாராத விதமாக மாணவர்களில் ஒருவன் உரத்தக் குரலில் அவரது செப மந்திரத்தை சொல்லத் தொடங்கினான். யாவரும் ஆச்சரியத்துடன் அவனை கவனிக்கத் தொடங்கினர். கண்களை மூடிக் கொண்டு அவன் உலக நினைவு இல்லாதவனாய் செபத்தை சொல்லிக் கொண்டிருந்தான்.
கணபதி முனி தம் கண்களைத் திறந்ததும் அவன் சொல்வதும் நின்று விட்டது. அது மட்டுமன்றி தான் என்ன சொன்னேன் என்பதும் அவனுக்கு நினைவிருக்கவில்லை.
சங்கல்பத்துடன் செபிக்கப்படும் மந்திரம் எதிராளியின் உள்ளத்தில் புகுந்து மாற்றத்தை செய்ய வல்லது என்பது மாணவர்களுக்குப் புரிந்தது. அப்படி நாட்டிலுள்ள மக்கள் யாவரும் ஒரு முனைப்புடன் செபிக்கத் தொடங்கினால் விடுதலையும் சாத்தியமே என்பது கணபதிமுனி அவர்களின் எண்ணம். அதற்காக அவர் கொடுத்த மந்திரம் ”உமாம் வந்தேமாதரம்”
மந்திரத்திற்கு இந்த சக்தி இருப்பதனால்தான் ஞானிகள் பேசுவதில் ஈடுபாடு கொள்வதில்லை. தமது மௌனமான செபத்தினாலேயே தேவையற்ற விவாதங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கின்றனர்.
கபீர் சொன்னது போல் பாய்ந்து வரும் ஏச்சு வலுவிழந்து வீழ்ந்து போகிறது.
{இந்தக் கட்டுரை Dr. G.Krishna அவர்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கும் Ganapathi Muni என்ற அவருடைய வாழ்க்கை வரலாற்றைத் தழுவி எழுதப்பட்டது. இது ஒரு தனியார் பிரசுரம். இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்யப்பட்ட மின் புத்தகம். இணைய இணைப்பு நினைவில்லை. மன்னிக்கவும். }