அரச போகத்தைத் துறந்து உண்மையைத் தேடி புறப்பட்டார் சித்தார்த்தர். பல கடுமையானத் தவமுறைகளை முயற்சி செய்து உடலும் உள்ளமும் சோர்ந்து போயிருந்த நிலையில் வழியில் பாடிக் கொண்டே சென்ற பெண்மணி ஒருவரின் பாடல்வரிகள் அவருக்கு முக்கியப் படிப்பினையை தந்ததாகக் கூறுவர்.
”இசை வேண்டின் யாழில் அதி இறுக்கமானக் கம்பிகளும் கூடாது, இறுக்கமில்லாக் கம்பிகளும் உதவாது. அளவோடு இறுக்கிய கம்பிகளே நயமான இசைத் தரும் கருவியாகும்”
அது மனித உடலுக்கும் பொருந்துவதாகக் கருதி தன் வழிமுறைகளை மாற்றி கொண்டாராம். அரச வாழ்க்கை அவருக்கு இறுக்கமில்லா கம்பியின் நிலை. அது ஞானத்திற்கு இசைவாகாது. பின்னர் உக்கிரமான உடலை வருத்திக் கொள்ளும் தவம். இதுவும் ஞானத் தேடலில் உதவாது. திருமூலர் சொல்வது போல் உபாயமாக உடலைப் பேண வேண்டும். உண்பது உறங்குவது பேசுவது போன்றவற்றில் மிதமானப் போக்கை கைகொண்டால் உடல் நல்ல வழியில் இருக்கும்.
உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த்தேனே (திருமந்திரம்)
கபீர் இதே கருத்தை ஒரு இசை சாதனத்தை உவமையாக வைத்துச் சொல்கிறார். உடல் தான் கருவி. ஆன்மா அதை இசைப்பவன். கருவியின் நரம்புகள் சரியான முறையில் பராமரிக்கப் படாவிட்டால் கருவியின் பயன் என்ன ? அதை இசைப்பவனாகிய ஆன்மா அதை விட்டு போய்விட்டால் பாவம் அந்த உடலால் பிறருக்கு பயன் தான் என்ன ?
कबीर जंत्र न बाजई, टूट गये सब तार ।
जंत्र बिचारा क्या करै, चला बजावन हार ॥
கருவியும் இசைக்காது கபீரா, அறுந்துள நரம்புகள் யாவுமே
கருவியும் பாவம் என்செயும், இசைப்பவன் போன பின்னே
அருணகிரியாரும் அந்த பயனற்ற நிலைக்கானக் காரணத்தை விரிவாகவே விளக்குகிறார்.
இரத்த முஞ்சியு மூளையெ லும்புட்
டசைப்ப சுங்குடல் நாடிபு னைந்திட்
டிருக்கு மண்சல வீடுபு குந்திட் ...... டதில்மேவி
[ரத்தமும் சீழும், மூளை, எலும்பு, உள்ளே இருக்கும் மாமிசம், பசிய
குடல், நரம்புகள், இவைகளைக் கொண்டு ஆக்கப்பட்டு
அழுத்தமாகக் கட்டப்பட்டு மண்ணாலும், நீராலும் ஆன
வீடாகிய உடலில் நுழைவு பெற்று, ]
இதத்து டன்புகல் சூதுமி குந்திட்
டகைத்தி டும்பொரு ளாசையெ னும்புட்
டெருட்ட வுந்தெளி யாதுப றந்திட் ... டிடமாயா
[அதில் இருந்துகொண்டு இன்பகரமாகப் பேசும்
சூதான மொழிகள் அதிகமாகி கிளைத்து எழுகின்ற
பொருளாசை என்கின்ற பறவை பிறர் தெளிவாக எடுத்துச்
சொன்னாலும் தெளியாமல் மேலும் மேலும் பறப்பதாயிருக்க],
பிரத்தம் வந்தடு வாதசு ரம்பித்
துளைப்பு டன்பல வாயுவு மிஞ்சிப்
பெலத்தை யுஞ்சில நாளுளொ டுங்கித் ...... தடிமேலாய்ப்
[உலக மாயை மிகுந்து, உண்டாகின்ற வாதம், சுரம், பித்தம் இவைகளின்
வேதனைகளோடு பல வகையான வாயுக்களும் அதிகரித்து,இருக்கின்ற
உடல்வலிமையும் சில தினங்களுக்குள் ஒடுங்கி, தடி மேல் ]
பிடித்தி டும்பல நாள்கொடு மந்திக்
குலத்தெ னும்படி கூனிய டங்கிப்
பிசக்கு வந்திடு போதுபி னஞ்சிச் ....சடமாமோ
[கை ஊன்றுவதாகி, பல நாட்கள் செல்ல குரங்குக்
கூட்டத்தவன் என்று சொல்லும் படியாக உடல் கூனி, சத்துக்கள்
அடங்கி, மரணம் வந்திடும் சமயத்தில் பயப்படுவதான
இந்த உடலால்ஏதேனும் பயன் உண்டோ? ]
{விளக்கவுரை நன்றி kaumaram.org }
பிறந்த கணத்திலிருந்து நம்மை மரணம் துரத்திக் கொண்டிருக்கிறது. காலன் என்னும் வேடனுக்கு நம்மை பலமிழக்கச் செய்யும் தந்திரம் மிக நன்றாகவேத் தெரியும். வேடனொருவன் தன்னுடைய நாயை ஏவிவிட்டு முயலை பலமிழக்க செய்வது போல் இரவு பகல் எனும் நாய்கள் நம்மைத் துரத்திக் கொண்டே இருக்கின்றன. வேடன் பிடியில் எப்போது வேண்டுமானாலும் சிக்கிக் கொள்ளலாம். அவன் நாய்கள் துரத்துவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நிற்கவும் நிற்கலாம். சோர்ந்து போய் கடைசியில் அவன் காலடியிலே தானே விழவேண்டும் !! அப்படி ஒரு உதாரணத்தை கபீர் நமக்கு சொல்லிக்காட்டுகிறார்.
முதுமை விரட்டுது நாயைப் போலே, இளமையாம் முயலோடுது நித்தமே
எமனெனும் வேடனும் எதிரே, இடையில் நீ நாடும் சுகமும் மித்தையே
அந்த வேடத்தினிடத்தில் ஒரு நல்ல குணம் உண்டு. இடைவிடாது இறைவனை எண்ணிக்கொண்டு ஓடினால் அவனே நாய்களின் பிடியிலிருந்து நம்மைக் காப்பாற்றிவிடுவான். இரவு பகலற்ற ஒரு வெளியில் கொண்டுபோய் சேர்த்துவிடுவான். அங்கே நாய்களின் பயம் கிடையாது. கணக்கணமும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓட வேண்டிய அவசியமும் இல்லை. அது மார்க்கண்டேயர் காலத்தில் அவனுக்கு இடப்பட்டக் கட்டளை.
பதத்தெழு மந்திர(ம்) அஞ்செழுத்(து) ஓதிப் பரிவினொடும்
இதத்தெழு மாணித னின்னுயி(ர்) உண்ண, வெகுண்(டு)அடர்த்த
கதத்தெழு காலனைக் கண்குரு திப்புன லாறொழுக
உதைத்தெழு சேவடி யான்கட வூருறை யுத்தமனே
பஞ்சாட்சர மந்திரத்தை மிகுந்த விருப்பத்தோடு செபிக்கின்ற பெருமையுடைய சிறுவனின் இன்னுயிரைக் காப்பதற்காக மிகுந்த சினத்தோடு எழுந்து, கண்களினின்று இரத்தம் சொரியும் வகையில் எமனை உதைத்துத் தள்ளியப் பெருமை உடையவன். திருக்கடவூரில் உறைபவன். அந்த உத்தமன் திருக்கழலை தொழுவோம் என நாவுக்கரசர் போற்றுகிறார்.
நிலையாமையை நினைவில் நிறுத்தி மரணபயம் வெல்வதற்கு மணிகண்டன் தாளே கதி.
குரு பூர்ணிமா நன்னாளில், குருவைப் பற்றியெழுதி, மரணமெனும் வேடனிடமிருந்து தப்பிப் பிழைக்க குருவைச் சரணமடைந்தால் போதும் எனப் பூடகமாகி உரைத்தமைக்கு மிக்க நன்றி!
ReplyDeleteதங்களின் உன்னத பணி தொடரட்டும்!
நல்வரவு எடிட்டர் சார்,
ReplyDelete///குரு பூர்ணிமா நன்னாளில், குருவைப் பற்றியெழுதி, ...//
சொல்ல விட்டுப் போனதை குறிப்பிட்டு சொல்லிவிட்டீர்கள். ரசித்து படிப்பதற்கும்,பாராட்டுகளுக்கும் நன்றி
இரவு-பகலை
ReplyDeleteஇன்பம்-துன்பம்
என்று கொள்ளலாமோ?..
வருக ஜீவி ஐயா,
ReplyDelete//இன்பம்-துன்பம்
என்று கொள்ளலாமோ?. //
கண்டிப்பாக. அவைகள்தானே நம்மை ஓட விட்டு அயரச் செய்கின்றன !
இரவு-பகல் என்று குறிப்பிட்டதற்கு காரணம் படத்தில் இரண்டு நாய்கள் காணப்பட்டதாலும், இரவென்றும் பகலென்றும் நேரம் கழிந்து கொண்டே இருப்பதாலும் தான். வேறு முக்கிய காரணம் எதுவுமில்லை.
வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.
நீங்கள் தயாரித்து இருக்கும் படங்கள் உங்கள் எழுத்தைப்போலவே அழகாக இருக்கிறது!
ReplyDeleteவருக தி.வா சார்,
ReplyDeleteபடங்களைத் தேடிப் பிடித்துதான் போட்டேன் :))
இல்லாவிட்டால் 'நிலையாமை' "போர"டிக்கும் என்று நினைத்தேன். உங்களுக்கு பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி.
நன்றி
// இடைவிடாது இறைவனை எண்ணிக்கொண்டு ஓடினால் அவனே நாய்களின் பிடியிலிருந்து நம்மைக் காப்பாற்றிவிடுவான். இரவு பகலற்ற ஒரு வெளியில் கொண்டுபோய் சேர்த்துவிடுவான். அங்கே நாய்களின் பயம் கிடையாது. கணக்கணமும் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓட வேண்டிய அவசியமும் இல்லை.//
ReplyDeleteஉண்மை ! கபீரன்பன்.அனுதினமும் இறைவன் நாமங்களை சொல்லிக் கொண்டு இருந்தால் மரணபயம் இருக்காது.
காலனை காலல் உதைத்தவன் கழ்லடி
பணிவோம்.
நன்றி.
நல்வரவு கோமதி மேடம்,
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி