Thursday, October 31, 2024

"ஸப் கா மாலிக் ஏக் ஹை "

 சென்ற பதிவில் ஸ்ரீபாத ஸ்ரீவல்லப சரிதாம்ருதத்தில்  குறிப்பிடப்பட்டிருந்த காட்கே மஹராஜின் வரலாற்றைக் கண்டோம்.

இந்த பதிவில், அதே புத்தகத்தில் வாரிஷ் அலி ஷா என்னும் மற்றுமொரு மஹானின் அவதாரக் குறிப்பும் அவரைப் பற்றிய தகவல்கள் எப்படி உண்மையாகியுள்ளன என்பது பற்றியும் பார்ப்போம்.

சரிதாம்ருதத்தின் 45 ஆவது அத்தியாயத்தில் திசீலா என்ற ஊரில் ஒரு இசுலாமிய குரு சாயிநாத் என்ற பெயரில் அவதரிக்கப் போவதையும் .அவருக்கு வெங்குசா என்னும் பெரியவர் இந்து மதத்தின் குருவாகவும் முஸ்லீம் மத குருவாக வாரிஷ் அலி ஷா என்பவரும் வருவார்கள் என்றும் ஸ்ரீபாதர் தெரிவிக்கிறார். [அதே சமயத்தில் தான் சுவாமி சமர்த்தராக அவதரிப்பதாகவும் சாயிநாதனுக்கு தன்னுடைய சக்தியை மாற்றம் செய்து தன் அவதாரத்தை நிறைவு செய்து கொள்வதாகவும் தெரிவிக்கிறார்]



 ஷிரடி சாயி சரிதத்தை பார்க்கும் போது அவர் ஒரு இசுலாமிய தம்பதியரால் நான்கு வயது வரை வளர்க்கப்பட்டு பின்னர்  நான்காம் வயதிலிருந்து 16 ஆம் வயது வரை  வெங்குசா என்றழைக்கப்பட்ட கோபால் ராவ் தேஷ்முக் என்பவரின் அரவணைப்பில் ஆன்மீகப் பயிற்சி பெற்றார் என்றும்  தெரிய வருகிறது.   தினமலர்  வலைத்தள இணைப்புக்கு  சுட்டவும்

இதில் சரிதாம்ருதத்தில் கூறப்பட்டுள்ள கணிப்பில் குரு வெங்குசா பற்றிய பகுதி நிஜமாகியிருப்பது தெரிகிறது.

1851 -இல் முதன் முதலாக ஷிரடியில் ஒரு வேப்பமரத்தடியில் ஆழ்ந்த தவ நிலையில் உள்ள இளைஞனாக காட்சியளித்தார் என்பதும் குறிப்பிடப்படுகிறது.

அதன் பின் 1854 முதல் 1858 வரை அவருடைய இருப்பிடம் வாழ்க்கைப் பற்றிய விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லை. 1858 -ல் ஒரு திருமண கோஷ்டியுடன் ஷிரடிக்கு வந்தவர் அங்கேயே தங்கி விட்டார் என்பது அவருடைய சரிதத்தில் உள்ளது.

இதிலிருந்து அந்த நான்கு அல்லது ஐந்து வருட கால இடைவெளியில் சாயிபாபாவிற்கு வாரிஷ் அலி ஷா வின் தொடர்பு ஏற்பட்டு இசுலாமிய வழிமுறைகளை அறிந்து கொள்ள வாய்ப்பு இருந்திருக்கிறது என்று அனுமானிக்க முடிகிறது.

 ஆனால் இந்த முஸ்லீம் குரு ஹாஜி வாரிஷ் அலி ஷா (1817-1905 ) பற்றி நான் எதுவும் கேள்விப் பட்டிருக்கவில்லை. அவரைப் பற்றிய தேடல் துவங்கியபோது முதலில் கண்ணில் பட்டது விக்கிப்பீடியா ( தரவு பக்கம்) அவருடைய பாட்டனார், ஈரான் பிரதேசத்திலிருந்து லக்னௌ அருகே தேவா என்ற ஊருக்கு குடிபெயர்ந்தார். இன்று அது ஒரு முக்கிய யாத்திரைத் தலமாக இசுலாமியர்களுக்கும் இந்துக்களுக்கும் விளங்குகிறது.

    அவர் ஒரு சுஃபி மார்க்கத்தில் ஆன்மீகத்தின் -அன் அல் ஹக் எனப்படும் (அஹம் பிரம்ஹாஸ்மி)- உச்சத்தை எட்டியிருந்த ஒரு மகான் என்பது தெரிய வந்தது.

   தமது இரண்டாம் வயதில் தந்தையை இழந்த அவர் அவரது பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். பிற குழந்தைகள் போலல்லாமல் அமைதி மிக்கவராய் காணப்பட்டார். ஐந்து வயதில் குரான் படிக்க ஆரம்பித்த அவர் இரண்டே வருடங்களில் முழுவதையும் மனப்பாடம் செய்து விட்டார். உயர் கல்வியை லக்னௌ நகரில் உறவினர் வீட்டிலிருந்து கற்றார். அரபு, பாரசீக மொழிகளில் அற்புத தேர்ச்சி பெற்று சமய போதனைகளையும் விளக்கங்களையும் பண்டிதர்களே வியக்கும் வண்ணம் கொடுக்க ஆரம்பித்தார். அவரைச் சுற்றி சீடர்கள் சேர ஆரம்பித்தனர். 1838 -இல் அவர் புனித  ஹஜ் பயணம் மேற்கொண்டார். எவரையும் உடன் அழைத்துச் செல்ல மறுத்து பாத யாத்திரையாக ஆக்ரா ஜெய்பூர், வழியாக மும்பை அடைந்தார். மும்பையிலிருந்து ஜெத்தா வரையிலுமான பயணத்தை கப்பலில் கடந்தார்.

மீண்டும்  கால்நடையாகவே மெக்கா மெதினா  எகிப்து, துருக்கி, ஜெர்மனி இங்கிலாந்து வரை பயணம் செய்தார் என்பதும் தெரிய வந்தது. இந்த பயணத்தில். சுமார் பதினான்கு ஆண்டு காலம் பலமுறை ஹஜ் யாத்திரை செய்து ஆன்மீக வழிகாட்டினார்.   

துருக்கி ஆட்டோவான் அரசர், ஜெர்மனியில் பிஸ்மார்க், இங்கிலாந்து அரசி விக்டோரியா முதலியோர்களை சந்தித்ததாக சொல்லும் போது அவருக்கு அக்காலத்திலிருந்த மதிப்பை அறிய முடிகிறது.

பீர் (Pir) எனப்படும் இசுலாமிய குரு மிகுந்த எளிய வாழ்க்கை வாழ்பவனாகவும், நாளைக்கென எதையும் சேர்த்து வைக்காதவனாகவும் அனைவரையும் சமகண்ணோட்டத்துடன் நடத்த வேண்டுமென்பதிலும் அவர் மிகுந்த கவனுத்துடன் நடைமுறையில் கடைபிடித்தார்.  அவரது வாழ்க்கையை கவனித்த ஆங்கில சரித்திர ஆசியர்கள் “ஹாஜி வாரிஷ் அலி ஷா  ஜீஸஸ் போன்றே ஒரு தூய இறை தூதர்” என்று போற்றுகின்றனர்.

விக்கிபீடியா பக்கத்தில் ஹாஜி வாரிஷ் அலி ஷா வின் பெரிய சீடர்களின் பட்டியலில் ஷிரடி சாயிபாபாவின் பெயரும் இடம் பெற்றுள்ளது.

கபீர்தாஸ், வாரிஷ் அலி ஷா மற்றும் சிரடி சாயிபாபா மூவருமே இந்து-இசுலாமிய மதங்களிடையே நல்லிணக்கம் ஏற்பட உழைத்த பெரும் ஞானிகள். அவர்களின் உபதேசங்களிடையே பெரும் ஒற்றுமையை காணலாம். 

கபீர்தாஸரின் அறிவுரைகள் எப்படி ‘ ஹாஜி வாரிஷ் அலி ஷா’ வின் உபதேசங்களுடன் பொருந்தி வருகிறது என்பதற்கு சில உதாரணங்கள். (https://sufinama.org/poets/haji-waris-ali-shah/quotes )

1)  Not a breath should he pass without the remembrance of God

काह भरॊसा दॆह का, बिनस जात छिन मांहिं |
सास-सास सुमिरन करॊ,और यतन कुछ नाहिं ||  ( Kabir)
நிலையா யாக்கை நின்மாத்திரம் மறைந்துபோம் -மூச்சு  |
மூச்சிலும் செபிநாமம், முயல்வதற் கில்லை வேறெதுவும்  ||

2)  Distance does not count in love, I am with you even if you are at a distance of thousands of miles

कहैं कबीर गुरु प्रेम बस, क्या नियरै क्या दूर
जाका चित्त जासों बसै, सो तेहि सदा हज़ूर

பத்தி போதும் குருவுக்கு, கபீரா, அருகென்ன தூரமென்ன ?
சித்தம் அவனுள் தோய்ந்தால், உடனே அருகில் இருப்பான்

(அகோரமணி, இராமகிருஷ்ணர் பற்றிய கட்டுரை. தவறாமல் படிக்கவும். 

https://kabeeran.blogspot.com/2012/02/blog-post.html )

 

3)  It is no use going to Kaaba for those who cannot see God here

मोको कहाँ ढूढे रे बन्दे?    என்னைத் தேடுவதும் எங்கே
मैं तो तेरे पास में         
நானிருப்பதோ உன் அருகே

ना तीर्थ में ना मूर्त में      தீர்த்தங்களிலோ மூர்த்தங்களிலோ இல்லை
ना एकान्त निवास में       
தனிமைத் தேடும் ஏகாந்தத்தில் இல்லை

ना मंदिर में ना मस्जिद में   கோவிலிலோ, மசூதியிலோ  இல்லை
ना काबे कैलास में           
காபாவிலோ கைலாயத்திலோ இல்லை  

मैं तो तेरे पास में           நானிருப்பதோ உன் அருகே

4)  A true faqir never wants anything

साधू भूखा भाव का, धन का भूखा नाहीं

धन का भूखा जो फिरै, सो  तो साधू नाहीं

அருளுக்கே பசித்திருப்பான் சாது, பொருளுக்கென யில்லை |

பொருளின் பசிவந்தால் அவனுள், அவன் சாதுவும் இல்லை ||

 

தன்னைத் தேடி வந்த பக்தரிகளிடையே எவ்வித பாகுபாடும் வாரிஷ் அலி காட்டவில்லை. யாரையும் மதம் மாறச் சொல்லவில்லை. அவரவர் மதநம்பிக்கைகளையே கடைபிடிக்கச் சொன்னார். ஏனென்றால் இறைவன் இவைகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன். அதனையே “சப் கா மாலிக் ஏக் ஹை” என்று ஷிரடி பாபாவும் மீண்டும் மீண்டும் சொன்னார்.

இன்று தீபாவளித் திருநாள். அதர்மம் அழிக்கப்பட்டு தர்மம் நிலைக்கட்டும் என்பதை நினைவுபடுத்த ஏற்படுத்தப்பட்டிருக்கும் விழா. ஆனால் அதர்மமே தர்மத்தின் போர்வை போர்த்துக் கொண்டு எப்படி கோடிக்கணக்கான ரூபாய்களுக்கு மது விற்பனையையும் ( லக்ஷ்மி பூஜை என்ற பெயரில்)  சூதாட்டமும் நடைபெற வைக்கிறது என்பதை ஒரு போலீஸ் அதிகாரி நம் தேசத்து மக்களின் அறியாமை கண்டு மனம் வெதும்புகிறார்.

அவர் பெயர் ஷைலஜாகாந்த் மிஷ்ரா, உத்திரபிரதேசத்தில் DGP ஆக பணியாற்றியவர்

கபீரும், ஹாஜி வாரிஷ் அலியும், ஷிரடி சாயி போதிக்கும் சர்வமத சம்மத கருத்துகளை அந்த அதிகாரி குரான், வேதம் மற்றும் பைபிள் மேற்கோள்கள் மூலம் அழகாக எடுத்துரைக்கும் போது என்று தான் இந்த உலகம் திருந்தப்போகிறது என்ற ஆதங்கம் மேலோங்குகிறது.

இவ்வுலகின் போக்கை நிர்ணயிப்பவன் அவன். மணிவாசகப் பெருமான் சொல்வது போல் “ நன்றே செய்வாய் பிழைசெய்வாய், நானோ இதற்கு நாயகமே “ என்று தான் ஆறுதல் தேட வேண்டியிருக்கிறது.

இரமண பகவானின் “ உன்னைத் திருத்திக் கொள், உலகம் தானே சரியாகும்” என்பதின் கருத்தாழத்தை பிடித்துக் கொண்டால் இந்த தீபாவளியின் பயன் அடைந்ததாகக் கருதலாம்.

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்

Sunday, July 21, 2024

இன்னுயிர் யாவும் பெருமாள் அகமே

 திருமலதாஸ் என்பவன் ஒரு சலவைத் தொழிலாளி. 

இது சுமார் 700 ஆண்டுகள் பழைய சரித்திரம்.  ( click here for details )

அவனுடைய பேறு  ஸ்ரீபாத  ஸ்ரீவல்லபரின் குடும்பத்துடன் தொடர்பு இருந்தது.  தொடர்பு மட்டுமல்ல  அவருடைய அருளும் இருந்தது. 

அதன் பயனாக முதிர்ச்சி அடைந்திருந்த அவனுடைய ஞானம், சங்கர்பட்டிடம் தன்னுடைய அடுத்த பிறப்பின் ரகசியத்தை வெளியிட்டது. அதுவும் ஸ்ரீபாதரால் அவருக்கு தெரியப்படுத்தப் பட்டதே.

அதை  ஸ்ரீபாத சரிதாம்ருதத்தின் கீழுள்ள பக்கங்களில் காணலாம். ( while reading on mobile screen click on the image to expand for better readability)

  


ஸ்ரீபாதரின் சரிதாம்ருதத்தை மொழி பெயர்க்கும் போதே ' யாரிந்த காட்கே மஹராஜ்' என்ற எண்ணம் எழுந்தது.  அந்த சரிதாம்ருதத்தில் வந்த  பல கூற்றுகள்  வித்யாரண்யர், ராமலிங்க சுவாமிகள்,  சிவாஜி, சமர்த்த ராமதாஸர் ராகவேந்திரர், ஷிரடி சாயி போன்றவர்களின் வருகைகள் முன் கூட்டியே சொல்லப்பட்டு அவைகள் நிஜமானதைக் கண்டு  இந்த காட்கே மஹராஜ் பற்றியும் அறிய ஆவல் எழுந்தது.

இணையத்தேடலின் போது ஒரு பெரும் பொக்கிஷமே கிடைத்தது போன்ற சந்தோஷம் ஏற்பட்டது.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நமக்கு அவரைப் பற்றி எதுவும் தெரியாவிட்டாலும் மஹாராஷ்ட்டிரத்தில் நன்கு அறியப்பட்ட பெரும் சீர்திருத்தவாதி. 

  அமராவதி பகுதியில் ஷேண்காவ் என்ற கிராமத்தில் வண்ணாரக் குலத்தில் பிறந்தவர். இயற் பெயர் தேபூஜி  ஜிங்ராஜி  ஜானோர்கர்.  தீண்டாமை, வறுமை போன்ற காரணங்களால்  முறையான எழுத்தறிவு பெற முடியாவிட்டாலும் கிராமத்து சிறுவர்களை சேர்த்துக் கொண்டு பஜன் மண்டலி அமைத்து விழாக் காலங்களில் கீர்த்தனங்கள் செய்வதில் சுற்றுப்புற வட்டாரங்களில் மிகவும்  பிரபலமானார்.

அவர் பிறந்தது  பிப்ரவரி 23, 1876

குடிப்பழக்கத்திற்கு அடிமைப்பட்ட அவருடைய தந்தையை இளவயதிலேயே இழந்த அவருள்  சமுதாய மாற்றத்திற்கான அவசியம் ஆழப்பதிந்தது.

பதினெட்டு வயதில் திருமணமாகி மூன்று குழந்தைகளுக்கு தந்தையுமானார். 
தாய்மாமனுடன் விவசாயத்தில் கடினமாக உழைத்து குடும்பத்தைக் காப்பாற்றிய போதும் தன் கீர்த்தனங்களை நிறுத்தவில்லை.  அவரது 29 வது வயதில் ஒரு  கடன் பத்திர மோசடி மூலம் தன் நிலத்தையும் இழக்க நேர்ந்த போது எழுத்தறிவுக் கல்வியின் அவசியம் புரிந்தது. அதற்கெனவே வாழ்க்கையை அர்பணித்துக் கொண்டு குடும்ப வாழ்வை துறந்தார்.

ஊர் ஊராக சென்று தனி மனித விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யத் தொடங்கினார். கையில் எப்பொழுதும் ஒரு விளக்குமாறு,  தலைமேல் கவிழ்க்கப்பட்ட -உடைந்த -மண் ஓடு (காட்கே- Gadge).  இதுதான் அவருடைய அடையாளங்கள். (தற்கால மொழியில் சொல்வதானால் 'பிராண்ட் இமேஜ்' ).

ஒரு கிராமத்தை அடைந்ததும் தெருவுகளையும்,  சாக்கடைகளையும் சுத்தம் செய்ய ஆரம்பிப்பார். உடன் சேர்ந்து கொள்பவர் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கவலைப் படுவதில்லை. யாரேனும் உணவளித்தால் மண் ஓடு பிட்சை பாத்திரமாகும்.  மாலையில் கீர்த்தனங்கள். இடையிடையே கேள்வி பதில் பாணியில் சீர்திருத்தக் கருத்துகள். இவை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றன. அடுத்த நாள் மற்றொரு கிராமம்.

அவர் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வதில் ஈடுபாடு கொள்ளவில்லை. ஆனால் கோவில் விழாக்களில் கலந்து கொண்டு நலிந்தவருக்கும் வறியவர்களுக்கும் சேவை செய்வதில் அக்கறை காட்டினார். 

அவர் கபீரைப் போலவும் வள்ளலாரைப் போலவும் தெய்வத்தை உயிருள்ள ஜீவனில் கண்டார். கல்லில் காணவில்லை.  அவருடைய கீர்த்தனங்களில்  நாமதேவரின் அபங்கங்களும்  கபீரின் தோஹாக்களும்  மிக அதிகமாக இடம் பெற்றன.  


கபீர் சொல்வது போல பேசாத சிலைகளை விட நடமாடும் ஆத்மாக்களிடையே இறைவனைக் காண்பாய் என்பதை அவர் நடைமுறையில் செய்து காட்டினார்.

कबीर जेता आतमा , तेता सालिगराम  | 
बोलनहारा पूजिये,  नहीं पाहन सो काम ||

நேரடி மொழி பெயர்ப்பு
கபீர், ஜீவித ஆத்மா அதுவே சாளக்கிராமம் |
உயிரோட்டத்தைத் தொழு, கற்பூசனைகள் ஆகாது||

மிகச் சுருக்கமாக கூறப்பட்டுள்ள கபீரின் ஈரடிக்கு சற்றே விளங்கும் வகையில் நீளமான தமிழ் மொழி பெயர்ப்பு :

இன்னுயிர் யாவும் பெருமாள் அகமே, இத்தேகமே சாளக்கிராமம்,  கபீரா |
மன்னுயிரில் அவனை வணங்கு,  மூர்த்தி பூசனை எதுவும் பயன் தரா  ||

[ அகம் = குடியுள்ள வீடு ;  சாளக்கிராமம் = கண்டகி நதியில் கிடைக்கும் திருமாலின் அம்சம் உள்ள விசேஷமானக் கல் '; மன்னுயிர் =உலகில் உள்ள உயிர்கள் ; மூர்த்தி பூசனை = விக்கிரக ஆராதனை.]

தொன்று தொட்டு சாளக்கிராம கற்களை பூஜை அறையில் வைத்து பூஜிப்பது  நம் நாடெங்கும் உள்ள வழக்கம். பெருமாள் உள்ள கல் புனிதமானால், அவனே குடியிருக்கும் ஜீவன்கள் இன்னும் எத்தனை புனிதமானவை !! அவற்றிற்கு செய்யப்படும் சேவை நிஜத்தில் பெருமாளுக்கே செய்த பூஜையாகும் என்பதை இந்த தோஹாவில் கபீர் வலியுறுத்துகிறார்.

காட்கே மஹராஜ் மூட நம்பிக்கைகளை வெறுத்தார். ஆனால் கடவுள் நம்பிக்கையை மறுக்கவில்லை. அவருடைய கீர்த்தனங்களில் மிகவும் பிரபலமானது " கோபாலா கோபாலா தேவகி நந்தன கோபாலா "  என்பதாகும்.

விவேகானந்தரின் சொற்பொழிவுகள் காட்கே மஹராஜரினுள் ஆழ்ந்த தாக்கத்தை ஏற்படுத்தி இருந்தது. மானவ சேவையே  மாதவன் சேவை  என்பதில் அவர் குறியாக இருந்தார். தனக்குக் கொடுக்கப்பட்ட காணிக்கைகள் அனைத்தையும் பள்ளிக்கூடங்கள் கட்டுவதிலும்,  யாத்திரிகர்களுக்கு அன்ன சத்திரங்கள், மருத்துவ மனைகள், கோசாலைகள், தொழுநோயாளிகளின் சிகிச்சை கூடம், அபலையர் நலிவுற்றோர் இல்லம் கட்டுவதில் செலவிட்டார்.
ஏழைகளோடு ஏழையாகவே வாழ்ந்தார்.

அவருடைய வாழ்க்கையை இன்னொரு கபீரின் ஈரடி அழகாக படம் பிடிக்கிறது.

दीन  गरीबी  बंदगी  साधून  सौं   आधीन  | 
ताके  संग  मैं यौं  रहूं , ज्यौं पानी संग  मीन  || 

விழைவேன் ஏழையின் எளிமை, செய்வேன் சாதுவிற்கு பணிவிடை |
மகிழ்வேன் அவர்தம்  உறவில்,  திளத்திருக்கும் மீன்போல் நீரிடை  ||

மீனுக்கு நீரில் இருப்பது எவ்வளவு மகிழ்ச்சியை தருமோ அப்படி  சத்சங்கத்தில், சாதுக்களுக்கு பணிவிடை செய்யவும் எளிய மக்களுடன் கூடியிருப்பதுமே தனக்கு மகிழ்ச்சியை தருகிறது என்ற கபீர் வரிகளுக்கு மஹராஜ் இலக்கணமாகத் திகழ்ந்தார். 

பண்டரிபுரத்தில்  அவர் கட்டிய சத்திரத்தை  டாக்டர் அம்பேத்கரின்  People's Education Society க்கென நன்கொடையாக கொடுத்து விட்டார். அம்பேத்கரும் அவரும் மிகுந்த ஈடுபாட்டுடன் ஒருவர் செயலை மற்றொருவர் போற்றினர். தனது கீர்த்தன சொற்பொழிவுகளில் அடிக்கடி அம்பேத்கர் அவர்களின் கல்வியையும், உழைப்பையும் மேற்கோள் காட்டி ஒவ்வொரு சிறுவனும் அவர் போல் முன்னுக்கு வர வேண்டும்  என்பதை வலியுறுத்துவார். 

பாடத்திட்டத்தில் தொழிற் கல்விக்கு  அதிமுக்கியத்துவம் கொடுத்தார். இதனால் தன்னம்பிக்கை உள்ள  இளைய தலைமுறை பெருகியது.  அவர் மஹாராஷ்ட்ராவில்  நிறுவிய நூற்றுக்கும் மேற்பட்ட தொண்டு நிறுவனங்களில் 36 கல்விக் கூடங்கள்  அடங்கும்.

டாக்டர் அம்பேத்கர் 06/12/1956 -ல் இயற்கை எய்திய போது  பெரிதும் துக்கமடைந்தார் மஹராஜ்.  சரியாக இரண்டு வாரங்களில் ( 20/12/1956) மஹராஜும் இறைவனடி சேர்ந்தார். அப்போது அவருக்கு வயது எண்பது. அவர் டாக்டர் அம்பேத்காரை விட பதினைந்து வருடங்கள் மூத்தவர். இருப்பினும் அவர் கீர்த்தனங்களின் போது  அம்பேத்கரை கடவுளுக்கு சமமாக மதித்தார். தன்னை ஒரு போதும் முன்னிறுத்திக்  கொள்ளவில்லை.

அரசியலுக்கு அப்பாற்பட்ட சீர்திருத்தவாதியான காட்கே மஹராஜுக்கு 1954 ஆம் ஆண்டு பத்ம பூஷண் விருது  கொடுத்து அந்த விருதிற்கு பெருமை சேர்த்தது இந்திய அரசு.   

1983-ல் நாக்பூர் பல்கலைகழகத்திலிருந்து பிரித்து  "சந்த் பாபா காட்கே அமராவதி பல்கலைகழகம்" என்ற பெயரில் புதிய பல்கலைகழகத்தை துவக்கினர்.  ஆனால் காட்கே மஹராஜோ தன் மரணத்திற்குப் பின் தனக்கு சமாதி, சிலை வைப்பது எதுவும் கூடாது என்று திட்டவட்டமாக கூறியிருந்தார். 

எந்த ஒரு தன்னலமற்ற சேவையும் காலத்தால் போற்றப்பட வேண்டும். அடுத்து வரும் தலமுறைகளை நல்வழியில் நடத்த அவை வழிகாட்டும் என்பதை வைத்து பார்க்கையில் மஹராஜின் வார்த்தைகள் மீறப்பட்டதாக நினைக்க வேண்டியதில்லை. திருவள்ளுவர் கூறுவது போல் 
  
நிலவரை நீள் புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது  புத்தேள் உலகு   

ஒருவன் நிலவுலகத்தில் நிலையான புகழ் தரும்  செயல்களை செய்வானாயின் தேவருலகம் அவனையன்றி அறிவால் மட்டும் சிறந்தவரை விரும்பாது. 

இன்று ( 21-07-2024) குரு பூர்ணிமை. காட்கே மஹராஜ் போன்ற கர்மயோகிகளை போற்றி நினைப்பதும் குரு வந்தனையாகும்.  அனைவருக்கும் குரு அருள் பெருகட்டும்.

ஜெய் குருதேவ்.

Sunday, March 31, 2024

ஞானமெனும் வேழம்

திருவண்ணாமலையில் ஒரு "பிச்சைக்காரன்". 

பல வருடங்கள் அவரை அப்படியே பொது மக்கள் கருதினர். இன்னும் சிலர் பைத்தியம் என்றனர். அவனை ஹிந்தி காரன் என்று ஊரை விட்டே விரட்டும் முயற்சியிலும் சிலர் இறங்கினர். அவனது அல்ப சொல்ப உடமைகளை பறித்துக் கொண்டதோடு அடித்தும் ஏன் கொலை செய்வதற்கும் முயற்சி செய்தனர். ஆனால் யாரைப் பற்றியும் குறை சொல்லாமல் மலையின் ஏதாவது ஒரு பகுதியிலோ கோவில் மண்டபத்திலோ அமர்ந்து நாம செபத்தில் ஆழ்ந்து விடுவதே அவன் வழக்கம்.

அந்த பிச்சைக்காரனைப் பிடித்திருந்தது ஞானப் பைத்தியம். அந்த மாதிரி பைத்தியங்களுக்கு 'பெரிய ஆசுபத்திரி' திருவண்ணாமலையை விட்டால்  வேறு எது?

சுவாமி ஞானாநந்த கிரி, பெரியசாமி தூரன், கிவா ஜகன்னாதன் போன்றவர்களின் அற்புத கண்டுபிடிப்பு அந்த பைத்தியத்தை யோகி ராம்சுரத்குமார் என்று உலகுக்கு அறிமுகப்படுத்தியது. 

இந்த பைத்தியத்தைத் தேடி  சுதாமணி என்ற  இன்னொரு பைத்தியம் கேரளாவின் ஒரு மீனவ குப்பத்திலிருந்து வந்தது. அந்த மாதரசி  கிருஷ்ணனின் பரம பக்தை. நாம் மீராவின் பக்தியையும்  ஆண்டாளின் பக்தியைப் பற்றியும் படித்தும் கேட்டும் இருக்கிறோம். அவர்களுடைய பக்திக்கு எவ்விதத்திலும் சளைக்காத பக்தி அவரை ஒரு பைத்தியமாகவே ஆக்கியிருந்தது.  அதை புரிந்து கொள்ள இயலாத அவருடைய சுற்றத்தாரும் ஊராரும், பைத்தியத்தைக் கண்டு பேசிய பேச்சுகளும் அதை விடுவிக்க செய்த காரியங்களும் பெரும் மனத்துன்பத்தைத் தருபவையாயிருந்தன.   அவருடைய வரலாறை அறிய இந்த இணைப்பை சுட்டவும்.


கற்றாரைக் கற்றாரே காமுறுவர்.  தன்னுடைய மகள் வயது ஒத்த 'அன்னை' அமிருதானந்தமயியைக் கண்டதும்  பிச்சைக்காரன்  அவரை அமர வைத்து தன் கையில் எப்போதும் இருக்கும் விசிறியால்  அவருக்கு  காற்றை வீசி தன்னுடைய அளவற்ற அன்பை வெளிகாட்டினார். 

இருவரை பற்றியும்  சரியான முறையில் தெரிந்து கொள்ள உலகத்துக்கு பலகாலம் பிடித்தது.

இந்த உலகோரின் போக்கே விசித்திரம். உண்மைக்கும் பொய்க்கும் வித்தியாசம் அறியாத குழந்தைகள் போல மாயையின் வலையில் சிக்கித் தவிக்கின்றனர். அதைக் கண்டு குமரகுருபர சுவாமிகள் சொல்லிய பாடல்:

பரபரப்பினோடே பலப்பல செய்தாங்கு 
இரவு பகல்  பாழுக்கிறைப்ப - ஒரு ஆற்றான்
நல்லாற்றில் நூக்கில்  பதறி  குலை குலைப
எவ்வாற்றான் உய்வார் இவர் ?  -       நீதி நெறிவிளக்கம் (89)

பாழுக்கிறைப்ப = வீணில் கழித்து
ஒரு ஆற்றான்      = ஒரு வகையில்
நல்லாற்றில்         = நல்ல வழியில்
நூக்கில்                  =ஈடுபடுத்தினால்
பதறி குலை குலைப  = பதறி நடுங்குவர்
எவ்வாற்றான்       = எந்த வகையில்
உய்வார் இவர்     = இவர் இறைவனை அடைவர் 

உலகினர் இரவு பகலாக மனம் வாக்கு காயம் மூன்றினாலும் மேன்மை தராத பலப்பல காரியங்கள் செய்து மன அமைதியின்றி வீணில் கழிக்கின்றனர். ஒரு சான்றோன் வந்து, ஒரு வேளை, அவர்களை நல்ல வழியில் ( இறை சிந்தனையில்) ஈடுபடச் சொன்னாலும் அவர்களது மனம் அதை ஏற்காது. பதறி மெய் நடுக்கம் கொள்வர்.  இவர்கள் முன்னேறுவதற்கான வழியேது என்று விசனப்படுகிறார் குமரகுருபர சுவாமிகள்.

இந்த பிரச்சனை எல்லாக் காலத்திலும் உள்ளது. புத்தர் ஏசு நானக் கபீர் காணாத எதிர்ப்புகளா ?  அதனால் கபீர் ஆத்ம சாதகனுக்கு  தைரியம் தரும்அறிவுரை "எதைப்பற்றியும் கவலைப்படாதே. யானையைப் போல முன்னேறு"

हस्ती चढ़िए ज्ञान कौ, सहज दुलीचा डारि |
स्वान रूप संसार है, भूँकन दे झख मारि ||

ஞானெமெனும் வேழம் மேல்  மோனமெனும் இருக்கை ஏறிடு |

சுவானம் போலும் உலகம், குரைத்தே அடங்கிடும் கண்டிடு ||

(சுவானம் = நாய் ; மோனம் = நிர்விகல்ப சமாதி )

ஞானத்தின் லட்சணமே சமதிருஷ்டி. அதைக் கண்டவர்க்கு நல்லவன் கெட்டவன் என்ற பேதம் கிடையாது. அந்த நிலையை அடைந்தவரை உலகத்தின் போக்கு எவ்விதத்திலும் பாதிக்காது. அதனால் ஞானத்தை யானைக்கு ஒப்பிடுகிறார் கபீர். அந்த ஞானியின் விருப்பம் என்ன ? சதா சர்வ காலமும் ஆனந்த நிட்டையில் ஆழ்ந்திருப்பது தான்.  உரையற்ற அந்த நிலையையே மோனநிட்டை எனும் இருக்கை என்று குறிப்பிடுகிறார். 

இறைவன் மகான்களை மனிதரிடையே அவர்களை நல்வழிப்படுத்தி அழைத்துச் செல்ல அனுப்பிக் கொண்டே இருக்கிறான். அவரவர் வினை வழியில் தக்க காலத்தில் குரு அருள் கிட்டுகிறது. 

கீழே காணும் சித்திரம் இந்த பதிவிற்காக பிரத்யேகமாக வரையப்பட்டது. அந்த படம் இந்த பதிவை மறக்கவிடாது :)))


ஜெய் குரு தேவ்