Showing posts with label அமிர்தானந்தமயி. Show all posts
Showing posts with label அமிர்தானந்தமயி. Show all posts

Sunday, March 31, 2024

ஞானமெனும் வேழம்

திருவண்ணாமலையில் ஒரு "பிச்சைக்காரன்". 

பல வருடங்கள் அவரை அப்படியே பொது மக்கள் கருதினர். இன்னும் சிலர் பைத்தியம் என்றனர். அவனை ஹிந்தி காரன் என்று ஊரை விட்டே விரட்டும் முயற்சியிலும் சிலர் இறங்கினர். அவனது அல்ப சொல்ப உடமைகளை பறித்துக் கொண்டதோடு அடித்தும் ஏன் கொலை செய்வதற்கும் முயற்சி செய்தனர். ஆனால் யாரைப் பற்றியும் குறை சொல்லாமல் மலையின் ஏதாவது ஒரு பகுதியிலோ கோவில் மண்டபத்திலோ அமர்ந்து நாம செபத்தில் ஆழ்ந்து விடுவதே அவன் வழக்கம்.

அந்த பிச்சைக்காரனைப் பிடித்திருந்தது ஞானப் பைத்தியம். அந்த மாதிரி பைத்தியங்களுக்கு 'பெரிய ஆசுபத்திரி' திருவண்ணாமலையை விட்டால்  வேறு எது?

சுவாமி ஞானாநந்த கிரி, பெரியசாமி தூரன், கிவா ஜகன்னாதன் போன்றவர்களின் அற்புத கண்டுபிடிப்பு அந்த பைத்தியத்தை யோகி ராம்சுரத்குமார் என்று உலகுக்கு அறிமுகப்படுத்தியது. 

இந்த பைத்தியத்தைத் தேடி  சுதாமணி என்ற  இன்னொரு பைத்தியம் கேரளாவின் ஒரு மீனவ குப்பத்திலிருந்து வந்தது. அந்த மாதரசி  கிருஷ்ணனின் பரம பக்தை. நாம் மீராவின் பக்தியையும்  ஆண்டாளின் பக்தியைப் பற்றியும் படித்தும் கேட்டும் இருக்கிறோம். அவர்களுடைய பக்திக்கு எவ்விதத்திலும் சளைக்காத பக்தி அவரை ஒரு பைத்தியமாகவே ஆக்கியிருந்தது.  அதை புரிந்து கொள்ள இயலாத அவருடைய சுற்றத்தாரும் ஊராரும், பைத்தியத்தைக் கண்டு பேசிய பேச்சுகளும் அதை விடுவிக்க செய்த காரியங்களும் பெரும் மனத்துன்பத்தைத் தருபவையாயிருந்தன.   அவருடைய வரலாறை அறிய இந்த இணைப்பை சுட்டவும்.


கற்றாரைக் கற்றாரே காமுறுவர்.  தன்னுடைய மகள் வயது ஒத்த 'அன்னை' அமிருதானந்தமயியைக் கண்டதும்  பிச்சைக்காரன்  அவரை அமர வைத்து தன் கையில் எப்போதும் இருக்கும் விசிறியால்  அவருக்கு  காற்றை வீசி தன்னுடைய அளவற்ற அன்பை வெளிகாட்டினார். 

இருவரை பற்றியும்  சரியான முறையில் தெரிந்து கொள்ள உலகத்துக்கு பலகாலம் பிடித்தது.

இந்த உலகோரின் போக்கே விசித்திரம். உண்மைக்கும் பொய்க்கும் வித்தியாசம் அறியாத குழந்தைகள் போல மாயையின் வலையில் சிக்கித் தவிக்கின்றனர். அதைக் கண்டு குமரகுருபர சுவாமிகள் சொல்லிய பாடல்:

பரபரப்பினோடே பலப்பல செய்தாங்கு 
இரவு பகல்  பாழுக்கிறைப்ப - ஒரு ஆற்றான்
நல்லாற்றில் நூக்கில்  பதறி  குலை குலைப
எவ்வாற்றான் உய்வார் இவர் ?  -       நீதி நெறிவிளக்கம் (89)

பாழுக்கிறைப்ப = வீணில் கழித்து
ஒரு ஆற்றான்      = ஒரு வகையில்
நல்லாற்றில்         = நல்ல வழியில்
நூக்கில்                  =ஈடுபடுத்தினால்
பதறி குலை குலைப  = பதறி நடுங்குவர்
எவ்வாற்றான்       = எந்த வகையில்
உய்வார் இவர்     = இவர் இறைவனை அடைவர் 

உலகினர் இரவு பகலாக மனம் வாக்கு காயம் மூன்றினாலும் மேன்மை தராத பலப்பல காரியங்கள் செய்து மன அமைதியின்றி வீணில் கழிக்கின்றனர். ஒரு சான்றோன் வந்து, ஒரு வேளை, அவர்களை நல்ல வழியில் ( இறை சிந்தனையில்) ஈடுபடச் சொன்னாலும் அவர்களது மனம் அதை ஏற்காது. பதறி மெய் நடுக்கம் கொள்வர்.  இவர்கள் முன்னேறுவதற்கான வழியேது என்று விசனப்படுகிறார் குமரகுருபர சுவாமிகள்.

இந்த பிரச்சனை எல்லாக் காலத்திலும் உள்ளது. புத்தர் ஏசு நானக் கபீர் காணாத எதிர்ப்புகளா ?  அதனால் கபீர் ஆத்ம சாதகனுக்கு  தைரியம் தரும்அறிவுரை "எதைப்பற்றியும் கவலைப்படாதே. யானையைப் போல முன்னேறு"

हस्ती चढ़िए ज्ञान कौ, सहज दुलीचा डारि |
स्वान रूप संसार है, भूँकन दे झख मारि ||

ஞானெமெனும் வேழம் மேல்  மோனமெனும் இருக்கை ஏறிடு |

சுவானம் போலும் உலகம், குரைத்தே அடங்கிடும் கண்டிடு ||

(சுவானம் = நாய் ; மோனம் = நிர்விகல்ப சமாதி )

ஞானத்தின் லட்சணமே சமதிருஷ்டி. அதைக் கண்டவர்க்கு நல்லவன் கெட்டவன் என்ற பேதம் கிடையாது. அந்த நிலையை அடைந்தவரை உலகத்தின் போக்கு எவ்விதத்திலும் பாதிக்காது. அதனால் ஞானத்தை யானைக்கு ஒப்பிடுகிறார் கபீர். அந்த ஞானியின் விருப்பம் என்ன ? சதா சர்வ காலமும் ஆனந்த நிட்டையில் ஆழ்ந்திருப்பது தான்.  உரையற்ற அந்த நிலையையே மோனநிட்டை எனும் இருக்கை என்று குறிப்பிடுகிறார். 

இறைவன் மகான்களை மனிதரிடையே அவர்களை நல்வழிப்படுத்தி அழைத்துச் செல்ல அனுப்பிக் கொண்டே இருக்கிறான். அவரவர் வினை வழியில் தக்க காலத்தில் குரு அருள் கிட்டுகிறது. 

கீழே காணும் சித்திரம் இந்த பதிவிற்காக பிரத்யேகமாக வரையப்பட்டது. அந்த படம் இந்த பதிவை மறக்கவிடாது :)))


ஜெய் குரு தேவ் 

Monday, July 02, 2018

கொடுப்பதே திரும்பி வரும்


  அமெரிக்காவில் பிரபலமான ஸ்டான்ஃபர்டு பல்கலைகழகத்தில் படிக்க இடம் கிடைப்பது மிகக் கடினம். 1892-ல் அங்கே படித்த இரு இளைஞர்களுக்கு நிதி பற்றா குறைவால் படிப்பைத் தொடருவது சிரமமாக இருந்தது. ஒரு இசை நிகழ்ச்சி மூலம் நிதி திரட்டினால் என்ன என்ற யோசனை அவர்களுக்குத் தோன்றியது.   
   அக்காலத்தில் மிகவும் புகழ் பெற்றிருந்த  பியானோ கலைஞர் இக்னேஸி ஜே. படேரெஸ்கி என்பவரை அணுகினர். அவருடைய மேனஜர், ஒரு நாள் நிகழ்ச்சிக்கு 2000 டாலர்கள் கண்டிப்பாகக் கொடுக்கப்படவேண்டும் என்று தெரிவித்தார். அதற்கு ஒப்புக் கொண்டு தேவையான விளம்பர வேலைகளில் இறங்கினர்.  அந்த நாளும் வந்தது. நிகழ்ச்சி நன்றாக நிறைவேறினாலும் எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை. மொத்தம் வசூலானத் தொகை 1600 டாலர்களே.