Tuesday, January 26, 2010

அவன் கொல்லன், நான் இரும்பு

அப்துல்லா ஷா முகமது நபியின் வழித்தோன்றல். அவரது தந்தை ஷா முகமது தெர்விஷ் அரேபிய மற்றும் பெர்ஷியன் மொழிகளிலும் புனித குரான் ஓதுவதிலும் அரிய தேர்ச்சி பெற்றிருந்தார்.

இளவயதிலேயே ஆன்மீகத் தாகம் கொண்டவராகத் திகழ்ந்தார் அப்துல்லா. அவரது மூத்த சகோதரி அவருக்கு தியானம் செய்வதில் பயிற்சி அளித்தார். தந்தையிடம் அரபி மற்றும் பர்ஷிய மொழிகளின் இலக்கியங்களைக் கற்று தேர்ச்சி அடைந்தார். சில சுஃபி ஞானிகளின் தொடர்பினால் சித்திகள் சிலவும் கைவரப் பெற்றது. ஆனால் தன்னை உணர வேண்டும் என்ற அவா பூர்த்தியாகவில்லை. அது அவரை தேடலில் ஈடுபடுத்தியது. அதற்கான வழிகாட்டி கிடைக்காமல் தவித்துக் கொண்டிருந்தார்.

அவரது நிலையை கபீரின் வரிகளில் சொல்ல வேண்டுமானால்

जैसा ढूंढत मै फिरुं, तैसा मिला न कोय ।

ततवेता तिरिगुन रहित, निरगुन सो रत होय ॥

எவரைத் தேடி அலைவனோ, அவரை இன்னம் கண்டிலேன்

எவரும் திரிகுணம் கடந்து, நிர்குணம் தோய்ந்து நின்றிலர்

(திரிகுணம் = தமஸ்,ரஜஸ், சத்துவம்)

சுஃபி க்வாத்ரி எனப்படும் தேடல் வழிமுறைக்கும் அத்வைத வழிமுறைக்கும் மிகுந்த ஒற்றுமை உண்டு. அநல் ஹக் ( நானே அவன்) என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்பட்ட சுஃபி முறை. அஹம் பிரம்மாஸ்மி ‘சிவோஹம்என்பதற்கு நிகரானது.

தட்டுங்கள் திறக்கப்படும் தேடுங்கள் கிடைக்கப்பெறும் “ என்ற உண்மைக்கு ஏற்ப தேடுவது மிக அரிய உண்மையானால் அதற்கான அவகாசம் எடுத்துக் கொள்ளும். ஆனால் கிடைக்காமல் விடாது.

“புல்லா நீ லாகூர் அருகே தோட்டம் போட்டு கறிகாய்கள் பயிர் செய்யும் இனாயத் ஷாவை போய் பாரேன். அவர் பரம்பொருளின் உண்மை தெரிந்தவர் என்று சொல்கிறார்கள் என்று யார் மூலமோ தெய்வம் வழிகாட்ட லாகூருக்கு பயணமானார் புல்லா ஷா என்று பின்னாளில் அழைக்கப்பட்ட அப்துல்லா ஷா.

தோட்டத்தினுள் இனாயத் வெங்காயப் பயிரிடையே எதையோ கவனித்துக் கொண்டிருந்த போது அருகிலிருந்த மாமரத்திலிருந்து ஒரு காய் அவரது காலருகே விழுந்தது. மந்திரத்திலே விழுந்த மாங்காய் அது.

அகாலத்தில் பழுக்காமல் காய் தானே விழுவது சாத்தியமல்லவே என்று தலை நிமிர்ந்துப் பார்த்தார் இனாயத் ஷா. வெளியே புல்லா ஷா நின்றிருந்தார்.

“ஏனப்பா என் தோட்டத்தில் விளையாடுகிறாய் ?என்று வினவினார் தோட்டக்காரன்.

“ ஐயா நான் மரம் ஏறவும் இல்லை கல்லெறியவும் இல்லைஎன்று பணிவாக பதிலுரைத்தார் புல்லா.

“ஓ! நீ புத்திசாலித் திருடன். வா உள்ளே“ என்று தன் சீடனை உள்ளே அழைத்தார் இனாயத். கடவுளின் பெயரைச் சொல்லித் திருடலாமா என்று செல்லமாக கடிந்து கொண்டே “தலையை ஏன் கவிழ்த்துக் கொள்கிறாய்? நிமிர்ந்து பார் “ என்று குரு அருளினார்.

புல்லாவின் கண்கள் குருவின் கண்களை நேருக்கு நேர் கண்டதுமே உள்ளொளி பாய்ந்தது. அவர் தன்னை மறந்தார், சூழ்நிலையை மறந்தார். அதுவரை அறியாத ஆனந்த பரவசம் அவரைப் பற்றிக் கொண்டது.

நரேந்திரருக்கும் பரமஹம்ஸருக்கும் ஏற்பட்ட உறவு போல் அது ஒரு தெய்வீக உறவு. நரந்திரனைப் போலவே குருவை பரீட்சித்து பார்த்தார் சீடன் புல்லா ஷா. அதை மகிழ்ச்சியாக ஏற்று பரமஹம்ஸரைப் போலவே சீடனின் தகுதியறிந்த குரு இனாயத். ஆனால் இந்த மகிழ்ச்சி வெகு காலம் நீடிக்கவில்லை சீடனுக்கு.

அந்த ஊரின் மௌல்விகளுக்கு, உயர்குலமான சையது வழியில் பிறந்த புல்லா ஒரு தாழ்ந்த இனத்தைச் சேர்ந்த அர்யன் னோடு சுற்றுவது பிடிக்கவில்லை. புல்லாவின் வீட்டிலும் இதற்கு ஏக எதிர்ப்பு.

அவருக்கு தன் குரு மீது இருந்த பக்தியும் தம்மைச் சார்ந்தவர் படுத்திய பாடும் பல பாடல்களில் ஒலித்த்து.

ஓ புல்லா,

என் தலைவன் இனாயத் அன்றோ

என் இதயத்தின் தெய்வம் அவன்

நான் இரும்பு, அவன் கொல்லன்

நீச்சல் தெரிந்த வீரன் அவன்

வகையறியா அபலை நான்

அவனே துணைக்கு வருவான்

கரை சேர்ப்பான் திண்ணம்.

எனக்கு ஏனிந்தப் பற்று (அவனிடம்) ?

வசைகளும் வம்புகளும் கேட்கவோ

வசைபாடுவர் மன்னியும் சோதரியும்

அலியின் புகழுக்கு களங்கமா என்று ?

ஓ புல்லா,

உன்னை

இறைவன் இணைத்தான் இனாயத்துடன்

மரகதம் ரத்தினம் பூட்டினான் அவன்

வசந்தத்தின் அழகை விரும்பினால்

இனாயத்தின் அடிமை ஆவாய்

தனக்கு குரு இனாயத் ஷா மூலம் கிடைத்த மகிழ்ச்சியை ஆபரணங்கள் பூட்டி மகிழ்ச்சி கொள்ளும் பெண்ணிற்கு ஒப்பிடுகிறார் புல்லா ஷா.

இறைவனைத் தேடுவதே பிறவிக்கு வசந்தம். அதன் அழகை, பெருமையை புரிந்து கொள்ள வேண்டுமானால் முறையான குருவை சார்ந்திருக்க வேண்டும்.

அதற்கு பலவித சோதனைகள் வரும். அதில் ஒன்று குடிப்பிறப்பை சுட்டிக்காட்டி சமூகம் செய்யும் கேலிக் கூத்து.

நம்மூரிலே நம்மாழ்வரும் அதை ஒரு பாசுரத்திலே இடித்துரைக்கிறார்.

குலந்தாங்கு சாதிகள் நாலிலும் கீழிழிந்து, எத்தனை

நலந்தான் இலாத சண்டாள சண்டாளார்கள் ஆகிலும்

வலந்தாங்கு சக்கரத்து அண்ணல் மணிவண்ணற்கா என்று உள்

கலந்தார், அடியார் தம்அடியார் எம் அடிகளே

இறைவனுடைய அடியவன் என்றால் அவன் எத்துணை கீழ் பிறப்பின்னாக இருப்பினும் அவனது அடியார் யாமே என்று உருகி உரைக்கிறார் ஆழ்வார் பெருமான்.

கபீரும் இதை
குலம் பொருட்டு ஆவதன், அடியவர் நிறைதெரிந்து ஏற்று

பலம் பொருட்டு குனைவாள் சிறப்பு, கிடக்கட்டும் அதன் தடறு

என்று ஏற்கனவே சொல்லியதைக் கண்டுள்ளோம்.

இது புல்லா ஷாவுக்கு சோதனைகளின் ஆரம்பம். இதன் தொடர்ச்சியை அடுத்த இடுகையில் காண்போம்.

அது வரை புல்லா ஷாவின் அருமையான பாடல் ஒன்றை பொருள் விளக்கத்துடன் கீழுள்ள இணைப்பில் கண்டும் கேட்டும் மகிழவும். ச்மீபகாலத்தில் புகழ் பெற்ற பாடல் இது.


8 comments:

 1. 'Bulleh, I don't know who I am?'

  -- கேட்டு, தேடலின் தாத்பரியம் புரிந்தது.

  'Do I stand alone?'-- என்கிற வரிகள் திருப்பித் திருப்பி மனத்தில் ரீங்காரமிட்டது.

  --மேலும், தொடர்ந்து சிந்திக்க ஆசை.
  தொடருங்கள், கபீரன்ப!

  ReplyDelete
 2. நன்றி ஜீவி ஐயா,

  கொஞ்சம் நாளா ரொம்ப பிசி. குறைஞ்சது கபீர் பதிவையாவது நேரத்துல பதியணுமேன்னு செய்த அவசர பதிவு.
  தங்கள் பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி. அடுத்த பகுதியையாவது கொஞ்சம் சிரத்தையா எழுத நேரம் கிடைக்குதான்னு பார்க்கிறேன்.:))
  நன்றி

  ReplyDelete
 3. முற்றிலும் புதிய தகவல்கள் கபீரன்பரே, இந்தக் கதை(?) நான் கேட்டதில்லை. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. அடுத்த பதிவுக்காகக் காத்திருக்கேன்.

  ReplyDelete
 4. வருக கீதா மேடம்,
  ஆமாம். அதிகம் அறியப்படாதவர்தான் புல்லா ஷா. கூடிய விரைவில் அடுத்த பதிவிற்கும் முயற்சி செய்கிறேன்.

  நன்றி

  ReplyDelete
 5. அடுத்த பதிவுக்கு நானும் காத்திருக்கேன்... :)

  ReplyDelete
 6. நன்றி கவிநயா

  யாருடைய வலைப்பூவையும் பார்க்க முடியாத நிலை கொஞ்ச நாளைக்கு. பொறுத்துக் கொள்ளவும்.
  சீக்கிரம் எழுதப் பார்க்கிறேன். : )

  ReplyDelete
 7. உங்களுடைய சேவையில் இருந்து அதிகமான அறிதான விடயங்களை அறிந்துகொள்ள முடிகிறது.
  மிகவும் நன்றி......
  உஙள் சேவை தொடர வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 8. நல்வரவு Shafni,

  பாராட்டுகளுக்கு மிக்க நன்றி

  ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி