Tuesday, January 05, 2010

பேரன்பு விற்பனைக்காம், விரைவீர்

ஒரு காலத்தில் ஐரோப்பிய மத குருமார்கள் சிலர் சுவர்கத்திற்கு பயணச் சீட்டு வழங்கினராம் ! அவரவர் வசதிக்கு ஏற்ப அங்கே ஒரு இடத்தை முன்பணம் கட்டி பதிவு செய்து கொண்டுவிட்டால் மரணத்திற்குப் பின் கவலைப் படத் தேவையில்லை.

[ஒருவேளை அப்படி ஏதாவது சொன்னால்தான் பணத்தை கொடுக்க முன்வருவார்கள், தேவாலயத்தின் பணிகளுக்கு நிதி கிடைக்கும் என்று அதை ஒரு யுக்தியாகப் பயன்படுத்தி இருக்கலாம். இல்லாவிட்டால் சுய நலத்தில் ஊறிக் கிடக்கும் சமுதாயம் தர்ம காரியங்களுக்கென்று கொடை கொடுக்க முன்வருவதில்லையே :(
]

புது இடத்திற்கு போவது என்றாலே யாவருக்கும் ஒரு கவலை. அதுவும் மரணத்திற்குப் பின் போகும் இடம் எப்படியோ!

"நீ ரங்கநாதன் ஸ்டீரிட்க்கு போடி, அம்மா அப்பா-வத் தவிர எல்லாத்தையும் வாங்கிட்டு வரலாம்”. முதன்முறையாக சென்னைக்கு புறப்பட்டிருந்த பெண்மணிக்கு சென்னையை நன்கு அறிந்த நண்பி, எங்கே எது கிடைக்கும் என்பது பற்றி கொடுத்த மிக சுருக்கமான வழிகாட்டும் தகவல்.

’அப்பா அம்மாவைத் தவிர’ என்பது அவர்கள் காட்டும் அன்பைப் பற்றியதாகும். அன்பு என்பது கடையில் கிடைக்கும் சரக்கு அல்ல. தாய் தந்தையர் அன்பு தன்னலமற்றது. அதற்கு விலை கிடையாது. ஆனால் கபீர், யாரோ அன்பை விற்பதாக கேள்விப்பட்டார். அதற்கான விலையையும் கேட்டறிந்தார். அதைப் பற்றி என்ன சொல்கிறார் பார்ப்போம்.

प्रेम बिकाता मैं सुना, माथा साटै हाट ।
पूछत बिलम न कीजिये, तत छिन दीजै काट ॥


பேரன்பு விற்பனைக்காம், விரைவீர்; சிரமே அதற்கு விலையாம்
பேரத்தில் பொழுதைப் போக்காதீர்; சிரம்த ருவதும் தகுமேயாம்

(சிரம்=தலை)

பேரின்ப நெறிக்கு "தன்னலமற்ற அன்பே" முன்பதிவுச் சீட்டு. அச்சீட்டுக்கு எவ்விலை வேண்டுமாயினும் கொடுக்கலாம். அதற்கு தலையே கொடுப்பதானாலும் தவறில்லை என்பது கபீரின் வாக்கு. அதை மெய்பித்தவன் குமணன் என்னும் குறுநில மன்னன். தலையைக் கொடுக்க முன்வந்த வள்ளல் குமணனின் பெயரை சொல்லி கொங்கு மண்டலத்தின் பெருமை பாடுகிறார் கார்மேகக் கவிஞர்.

நாட்டினைத் தம்பிக் கொ(ள்)ளக், காடு சென்று நலிவுறு நாள்
பாட்டு இசைத்து ஓர் புலவன் வேண்ட என் தலைபற்றி அறுத்
தீட்டி என் தம்பி இடத்து ஈயின், கோடி பொன் எய்தும் என்று
வாட்டம் கை தரும் அக்குமணன் கொங்கு மண்டலமே


புலவர் பெருந்தலைச் சாத்தனாரின் வறுமை நிலையும் அதைக் கேட்ட குமணனின் மன வாட்டத்தையும் தன் தலையை கொய்து சென்று தம்பிக்கு காட்டி பொன் பெற்று வறுமை தீர்த்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்ட குமணன் கதையை மிக அழகாக சொல்லியிருக்கிறார் தமிழாசிரியர் திருமதி ருக்மணி சேஷஸாயி பாட்டி சொல்லும் கதைகள் என்ற வலைப் பக்கத்தில். அவசியம் படிக்கவும்.

கபீர் வேறொரு பார்வையிலும் அன்பிற்காக உயிரையும் கொடுப்பது மனிதருக்கு இயல்பான பண்பு என்பதை கூறுகிறார்

प्रेम न बाडी उपजै , प्रेम न हाट बिकाय ।
राजा परजा जो रुचै, शीश देय ले जाय ॥


செய்யதிலே விளைவதில்லை பேரன்பு, சந்தையிலே விற்ப வருமில்லை
சுவைக்கண்ட கோமகனோ குடிமகனோ, சிரமும் தரத்தயங் குவதில்லை

(செய் அதிலே= வயலிலே )

மனிதப் பிறவிக்கு மட்டுமே அன்பை ஒரு குணமாக போற்றும் அவசியம் ஏற்பட்டிருக்கிறது. அது, மலையில் பிறந்து மலையிலேயே மறைந்து போகும் சிறு சிறு நீரோடைகள் போல, தாய் தந்தை, மகன் மகள் என்பது போன்ற நம்முடைய சிறு வட்டத்துள்ளே உற்பத்தியாகி மறைந்து போகிறது.

கோமகனுக்கான உதாரணத்தை குமணனுடைய வாழ்க்கையில் காண்கிறோம். குடிமக்களும் அதே அளவு அன்பின் நிறைவு உடையவர்களே.

பொதுவாக சிறுவர்களிடையே, அவர்களுடைய கபடமற்ற உள்ளத்தாலோ என்னவோ, அன்பின் பெருக்கு காட்டு வெள்ளம் போல் திடீரென்று வெளிப்படுவதை காணலாம்.

பிராசி சந்தோஷ் ஸென் என்கிற பத்து வயது சிறுமி நான்கு குழந்தைகளை மின்சார விபத்திலிருந்து காப்பாற்றினாள். அந்த துணிச்சலான காரியத்தில் மின்சாரத் தாக்குதலினால் அவளது இடது கை கருகி விரல்கள் துண்டிக்கப் பட வேண்டியதாயிற்று.(2008)

ரதுல் சந்திர ராபா மற்றும் ரிதுபர்ணா போரோ என்ற இருவரும் உல்ஃபா தீவிரவாதிகளை துரத்திச் சென்று ஒருவனை பிடித்தனர். ”எங்கள் கண்ணெதிரிலேயே எங்கள் ஆசிரியரை கொல்லும் போது நாங்கள் எப்படி பார்த்துக் கொண்டிருக்க முடியும்?” என்பதே அவர்களின் சாகசத்திற்கான காரணமாகச் சொல்லினர் (2005).

கந்தகுமார் என்ற பதினொரு வயது தமிழ்நாட்டு சிறுவன் ரயில் தண்டவாளத்தில் சிக்கிக் கொண்ட ஊர்தியிலிருந்து இரண்டு சகமாணவர்களைக் காப்பாற்றிய பின் மூன்றாமவனை காப்பாற்றும் முயற்சியில் தன் உயிரை இழந்தான் (2004)
(நன்றி : http://en.wikipedia.org/wiki/National_Bravery_Award)


தன் உயிருக்கு பாதகம் வரும் போது எதிர்த்து போராடி தன்னைக் காப்பாற்றிக் கொள்ள இயற்கை தரும் சக்தியை அட்ரினல் சக்தி என்பர் விஞ்ஞானிகள். பிறருக்காக தன்னுயிரை துறக்கத் துணியும் இந்த சக்தியை எந்த பெயர் கொண்டு அழைப்பது? அன்புனல் சக்தி (அன்பின் புனல்) என்று சொல்லலாமா ? .

தினந்தோறும் இந்த அன்புனல் சக்தி பல நூறு ஜீவன்களில் வெளிபட்டுக் கொண்டிருக்கிறது. உலகை வாழவைத்துக் கொண்டிருக்கிறது. அன்பின் விலையாக தம் உயிரையே கொடுத்து சரித்திரத்தில் அமரர்களாக ஜீவிக்கின்றனர் பலர். அவர்கள் தாம் உண்மையான ஜீவிகள். கபீரின் மேற்கண்ட ஈரடியை மெய்ப்பித்துக் கொண்டிருப்பவர்கள் இவர்கள்.

இயல்பாக இருக்கக்கூடிய இந்த அன்பு என்கிற உணர்ச்சியை பெருக்கிக் கொள்வது எப்படி? நம் உள்ளம் வற்றாத ஒரு அன்பின் ஊற்றாக மாறுவது எப்படி என்பன போன்ற கேள்விகள் கூடவே எழுகின்றன.

அந்த அன்பு வெளிப்படாமல் போவதற்கு காரணம் நம்மிடமுள்ள ‘பிறரை எடைப் போடுவது’ என்கிற குறையே ஆகும். இந்த காரணத்தால் எதற்கெடுத்தாலும் பிறரிடம் குறைகளைக் காணும் தீயகுணம் ஒட்டிக் கொள்கிறது.

‘Judge not, that ye be not judged என்கிற வாசகம் விவிலியத்தில் வருவது.[மத்தேயு(7:1)].

'When we judge others we don't have time to Love them' என்பது அன்னை தெரஸா அவர்களின் அணுகுமுறை. அதை அடிப்படை கோட்பாடாக கொண்டால் விரைவிலேயே நம்முடைய அந்தக் குறைபாடு நீங்கி அவரைப் போலவே அனைவரையும் நேசிக்கும் அன்பு புனல் நம்மிடமிருந்து தொடர்ந்து பெருகும்.

அந்த அணுகுமுறை நம்முள் உறுதிப்பட வேண்டுமானால், குற்றம் குறைகளற்ற, இறைவனைத் துணை கொள்ள வேண்டும்.

மனிதர்களின் குறைகளை பாராட்டமாட்டேன் என்று விரதம் எடுத்துக் கொண்டாலும் பல சமயங்களில் நமக்கு உள்ள பொறுப்பு காரணமாக சிலரிடம் அவற்றை சுட்டிக்காட்ட வேண்டியது கடமையாகி விடுகிறது. கண்டிப்பதும் அவசியமாகிறது.

கேட்பவருக்கு நாம் சொல்வது பிடிக்காமல் போகலாம், நம்மை தூற்றலாம். அப்போது நமக்கு இருப்பது இறைவனின் துணையே ஆகும். ஏசு பெருமான் போல ‘ Father, forgive them, for they know not what they do. (Luke 23:34) என்று பிரார்த்தித்துக் கொள்ளும் வகையில் அவர்கள் மீதுள்ள நம் அன்பை விட்டுவிடாமல் இருக்க முடியும். அதற்கு கடவுளை விட பெரும் துணை யாரிருக்க முடியும்?

இந்த பயிற்சி தொடருமானால் நமது அன்பு, ஆற்றுப் பெருக்கு போல பெருகி வழியெங்கும் புத்துணர்வு பாய்ச்சி இறைவனாம் பெருங்கருணைக் கடலை சேரும். அப்படிச் சேர்ந்தவர்களே ஞானிகள். அந்த அன்புப் பெருக்கு ஏற்படும் போது அதன் வெளிப்பாடு எப்படி இருக்கும் என்பதை நம்மாழ்வார், மணிவாசகர் போன்ற பேரருளாளர்களின் அனுபவத்தால் அறியலாம்.

காணுமாறு அருளாய் என்றென்றே கலங்கிக்
கண்ணநீர் அலமர, வினையேன்
பேணுமாறு எல்லாம் பேணி நின் பெயரே
பிதற்றுமாறு அருள் எனக்கு அந்தோ
காணுமாறு அருளாய் காகுத்தா! கண்ணா!
தொண்டனேன் கற்பகக் கனியே,
பேணுவார் அமுதே! பெரிய தண் புனல்சூழ்
பெருநிலம் எடுத்த பேராளா !


உன் காட்சிக்கென அருள் வேண்டி உள்ளம் கலங்கி, கண்ணீர் சொரிந்து துன்புறுகிறேன். வினைத்துன்பத்தில் சிக்கியுள்ள என்னை பேணுமாறு பலவிதமாய் உன் பெயரை பிதற்றி துன்புறுகிறேன். ராமனாகவும் கண்ணனாகவும் அவதரித்தவனே ! தொண்டர்களுக்கு கற்பகக் கனியே, ஆழியில் மூழ்கிய பூமியை மீட்டெடுத்தவனே எனக்கு காட்சி அருள்வாய் -- நம்மாழ்வார்

மெய்தான் அரும்பி விதிர் விதிர்த்து உன் விரைஆர் கழற்கு என்
கைதான் தலை வைத்துக் கண்ணீர் ததும்பி வெதும்பி உள்ளம்
பொய்தான் தவிர்ந்து உன்னைப் போற்றி சய சய போற்றி என்னும்
கைதான் நெகிழ விடேன் உடையாய் என்னைக் கண்டு கொள்ளே.


(விரையாற் கழல் = மணம் நிறைந்த திருவடி ; கைதான் நெகிழ விடேன்= ஒழுக்கத்தை விடமாட்டேன்; உடையாய்= தலைவனே, இறைவனே)

இறைவா! உனது, மணம் நிறைந்த திருவடியைப் பெறுதற்கு என் உடல் புளகித்து, நடுநடுங்கி கைகளைத் தலைமேல் வைத்து, கண்களில் நீர் வடிந்து, மனம் புழுங்கி, பொய்நீங்கி, உன்னைக் குறித்து வணங்கித் துதிக்கின்ற ஒழுக்கத்தை நான் தளர விட மாட்டேன். ஆதலால் எனது நிலைமையை, நீ நோக்கி உன் அடியாருள் ஒருவனாக ஏற்றுக் கொள்வாயாக! - மாணிக்கவாசகர்

சமுத்திரத்தை நோக்கிய பயணத்தில் வழியிலே பல கோடி ஜீவன்களுக்கு வாழ்வளிக்கும் ஆற்றுப் பெருக்கு போல ஞானிகளின் அன்பு பெருக்கு மற்றவர்களையும் உய்விக்கிறது. கபீராகவும் மணிவாசகராகவும் நம்மாழ்வாரகவும் பலப் பல ஜீவ நதிகள் இந்த பூமியை வளப்படுத்தி வருகின்றன.

16 comments:

  1. LOT OF TIMES OUR SELFFISHNESS HIDED THE PURE LOVE.

    DUE TO THIS ACTION WE MISSED OTHERS PURE LOVE.

    NOW I REMEMBERED ONE WORD :

    LOVE ALWAYS EXITING. BUT WE ARE SEARCHING.

    ReplyDelete
  2. //மலையில் பிறந்து மலையிலேயே மறைந்து போகும் சிறு சிறு நீரோடைகள் போல, தாய் தந்தை, மகன் மகள் என்பது போன்ற நம்முடைய சிறு வட்டத்துள்ளே உற்பத்தியாகி மறைந்து போகிறது.//

    எத்தனை உண்மையான வரிகள்??? கண்களிலே நீர் வர வைத்த பதிவுகளில் இதுவும் ஒன்று.

    ReplyDelete
  3. /// மனிதர்களின் குறைகளை பாராட்டமாட்டேன் என்று விரதம் எடுத்துக் கொண்டாலும் பல சமயங்களில் நமக்கு உள்ள பொறுப்பு காரணமாக சிலரிடம் அவற்றை சுட்டிக்காட்ட வேண்டியது கடமையாகி விடுகிறது. கண்டிப்பதும் அவசியமாகிறது. ///

    நிதர்சனத்தை சுட்டி காண்பித்து இருக்கிறீர்கள் நன்றி ஐயா !

    ReplyDelete
  4. நல்வரவு @ yrskbalu

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  5. @ கீதா மேடம்

    பாராட்டுரைகளுக்கு கடமைப்பட்டுள்ளேன்

    நன்றி

    ReplyDelete
  6. வருக கேசவன்

    //நிதர்சனத்தை சுட்டி காண்பித்து இருக்கிறீர்கள்...//

    எல்லோரும் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்ச்னை இது. சைக்கிள் ஓட்டுவது போலவும் நீச்சல் பழகுபவர் போலவும் பயிற்சியால் மட்டுமே கைகூடுகின்ற ஒரு வாழ்க்கைப் பாடம். பலமுறை விழுந்து எழுவதற்கும் அல்லது மூழ்கி மூச்சுத் திணறி நீர் குடிப்பதற்கும் எப்படித் தயாராக இருக்க வேண்டுமோ அது போல அன்பு செலுத்துவதிலும் பிரச்சனைகளை சந்திக்கத்தான் வேண்டியிருக்கிறது.
    நன்றி

    ReplyDelete
  7. //அந்த அன்பு வெளிப்படாமல் போவதற்கு காரணம் நம்மிடமுள்ள ‘பிறரை எடைப் போடுவது’ என்கிற குறையே ஆகும்//

    ஆஹா! அம்ருதானந்த மயி சம்பந்தமான கதை நினைவுக்கு வருகிறது.
    நன்றி!

    ReplyDelete
  8. வருக தி.வா சார்,

    //அம்ருதானந்த மயி சம்பந்தமான கதை நினைவுக்கு வருகிறது..//

    சஸ்பென்ஸ் வச்சுட்டீங்களே ! அம்ருதானந்த மயி அவர்கள் சொன்ன கதையா அல்லது அவர்கள் வாழ்க்கையில் நடந்த சம்பவமா ?

    [சீக்கிரம் சஸ்பென்ஸை உடைக்க வேண்டி] நன்றி

    ReplyDelete
  9. //மனிதர்களின் குறைகளை பாராட்டமாட்டேன் என்று விரதம் எடுத்துக் கொண்டாலும் பல சமயங்களில் நமக்கு உள்ள பொறுப்பு காரணமாக சிலரிடம் அவற்றை சுட்டிக்காட்ட வேண்டியது கடமையாகி விடுகிறது. கண்டிப்பதும் அவசியமாகிறது.//

    ஒவ்வொரு வரியும் ரத்தின வரி.
    அனுபவப்பட்டோராலேயே புரிந்து கொள்ளக் கூடியது. சம்பந்தப் பட்டோரின் மீது நாம் கொண்டுள்ள அக்கரையின் காரணமாக இந்த சுட்டிக்காட்டல் நிகழ்ந்தாலும் சிலருக்கு அது அவர்களின் மீதான ஆக்கிரமிப்பாகத் தோற்றமளிக்கும். அன்பின் அடிப்படையில் தான் இந்த அக்கரை முகிழ்த்திருக்கிறது என்பதையும் அறிந்து கொள்ளாமல் அவரது தனிப்பட்ட சுதந்தரத்தில் தலையிடுவதாகத் தவறாகப் புரிந்து கொள்வர். பிறர் நம் மீது கொள்ளும் அன்பைப் புரிந்து கொள்வதற்குச் சுலபமான வழி, நாம் பிறர் மீது அன்பைச் செலுத்துவராய் இருக்க வேண்டுவதே என்று இது தியரி மாதிரி தோன்றுகிறது.

    ReplyDelete
  10. //இந்த பயிற்சி தொடருமானால் நமது அன்பு, ஆற்றுப் பெருக்கு போல பெருகி வழியெங்கும் புத்துணர்வு பாய்ச்சி இறைவனாம் பெருங்கருணைக் கடலை சேரும்.//

    இந்த பயிற்சி தொடரவில்லை என்றாலும் ஏற்படும் பாதிப்புகள்:

    1. அன்பு என்பது உள்ளத்தில் ஊற்றுப் போல் சுரக்கக் கூடிய ஒன்று. இந்த சுரத்தல் உடல் நலனுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும். அன்பு செலுத்துவதை ஒரு பயிற்சியாகவே கொள்ளலாம். கொள்ளவில்லை எனில், நாளாவட்டத்தில் அந்த சுரத்தல் வற்றிப் போய் கெட்டித்தட்டிப் போதலான இறுகிய தன்மை அடையும். அந்த இறுகிய தன்மை பிறரின் மேல் வெறுப்பாகவும், சிடுசிடுப்பாகவும் மாறும்.

    2. அன்பு கொடுத்து வாங்கும் சமாச்சாரம் ஆகையில் இந்த பரிவர்த்தனை இல்லை எனில் பிறரின் அன்பு சம்பந்தப்பட்டோருக்கு கிடைக்காமல் போகும். இதனால் தனித்த தீவாகப் போகக் கூடிய ஆபத்து இருக்கிறது. இது நம்மைச் சுற்றி இருக்கும் சமூகத்திடமிருந்து ஒதுங்கிப் போகும் உணர்வை ஏற்படுத்திவிடும்.

    3. சொந்த நலனுக்காவது, சொந்த உடல் ஆரோக்கியத்திற்காவது பிறரின் மேல் அன்பு செலுத்தி அன்பைப் பெறும் கலையைப் பழக்கிக் கொள்ளல் வாழ்க்கையில் நினைத்துக் கூடப் பார்க்காத வெற்றிகளைக் குவிக்கும்.

    பெயரிலேயே அன்பைக் கொண்டிருக்கும் கபீரன்ப! நல்லதொரு பதிவு. வெகு சிறப்பாக எழுதியிருக்கிறீர்கள். அன்பான வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. நல்வரவு ஜீவி ஐயா

    வழக்கம் போல் ஆழ்ந்து படித்து கருத்து சொல்லியிருக்கிறீர்கள்.

    ///..சொந்த நலனுக்காவது, சொந்த உடல் ஆரோக்கியத்திற்காவது பிறரின் மேல் அன்பு செலுத்தி அன்பைப் பெறும் கலையைப் பழக்கிக் கொள்ளல்..... ///

    ஒரு புதிய கோணத்தில் அன்பின் அவசியத்தை உணர்த்தியிருக்கிறீர்கள்.
    இதை உணரவும் ஒரு மனப்பக்குவம் வரவேண்டும்.
    தங்கள் அன்புக்கு கடமைப்பட்டுள்ளேன். நன்றி

    ReplyDelete
  12. @ ஜீவி ஐயா,

    ///பிறர் நம் மீது கொள்ளும் அன்பைப் புரிந்து கொள்வதற்குச் சுலபமான வழி, நாம் பிறர் மீது அன்பைச் செலுத்துவராய் இருக்க வேண்டுவதே என்று இது தியரி மாதிரி தோன்றுகிறது///

    திரு கிருஷ்ணமூர்த்தி அவர்கள் ஒரு பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்த அரவிந்த அன்னையின் வாசகங்கள் நினைவுக்கு வருகின்றன

    At first, one loves, when one is loved.

    Next, one loves spontaneously, but one wants to be loved in return!

    Then, one loves even if one is not loved, but one still wants one's love to be accepted!

    And finally, one loves purely and simply, without any other need or enjoy than that of loving!

    அந்த கடைசி நிலையை அடைவதுதான் ஆன்மீக சாதனையின் குறிக்கோளும் என்பது புரிகிறது.

    மனப்பயிற்சிக்கான வெவ்வேறு நிலைகளை மிக அழகாக சுட்டிக்காட்டியிருக்கிறார் அன்னை! நாம் எந்த நிலையில் இருக்கிறோம் என்பதற்கான உரைக்கல்லையும் நம்முன்னே வைத்து இருக்கிறார்,

    இதை நினைவு படுத்திக் கொள்ள உதவிய தங்களுக்கும் கிருஷ்ணமூர்த்தி ஐயாவுக்கும் நன்றி

    ReplyDelete
  13. "பேரன்பு விற்பனைக்காம், விரைவீர்"

    தலைப்பைக்கண்டதும் கொஞ்சம் ஆச்சர்யம் என்ன இது கொஞ்சம் நெகட்டிவாக ஒன்று என்று ஆனால் உள்ளே படிக்க ஆரம்பித்ததும் வழக்கம்ப்போல ஆச்சர்யம்...

    ReplyDelete
  14. வாங்க கிருத்திகா

    //வழக்கம்ப்போல ஆச்சர்யம்...//

    சிக்கனமான வார்த்தைகளில் ஒட்டு மொத்தமான பாராட்டை சொல்லிவிட்டீர்கள். மிக்க நன்றி

    ReplyDelete
  15. படிக்கையிலேயே அன்னை தெரசாவின் அந்த வரி மனதில் ஓடிக்கொண்டிருந்தது, பின்னாலேயே நீங்களும் அதனையே தந்திருந்தீர்கள்.

    //மனிதப் பிறவிக்கு மட்டுமே அன்பை ஒரு குணமாக போற்றும் அவசியம் ஏற்பட்டிருக்கிறது.//

    ஆமால்ல? வருத்தம் தரும் விஷயம்.

    கிருஷ்ணமூர்த்தி சார் எடுத்துக் காட்டிய அன்னையின் வரிகளை மீண்டும் தந்தமைக்கும் மிக்க நன்றி.

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி