Monday, August 15, 2011

இச்சிறியேனால் ஆவது என்னே ?

பாட்டுவித்தால் பாடுகின்றேன், பணிவித்தால்
பணிகின்றேன், பதியே, நின்னைக்
கூட்டுவித்தால் கூடுகின்றேன், குழைவித்தால்
குழைகின்றேன், குறித்த ஊணை
ஊட்டுவித்தால் உண்கின்றேன், உறக்குவித்தால்
உறங்குகின்றேன், உறங்காதென்றும்
ஆட்டுவித்தால் ஆடுகின்றேன், அந்தோ
இச்சிறியேனால் ஆவது என்னே ! (
இராமலிங்க அடிகள்)

ஆவுடையக்காள் பதிவை நிறைவு செய்யும் வகையில் அவரது சுபமங்களம் ஜெய மங்களம் என்று முடியும் ஒரு பாடலை வைத்து பூர்த்தி செய்திருந்தேன். அப்போதே மனதில் ஒரு குறுகுறுப்பு. இதுவே கபீரின் கனிமொழிகள் வலைப்பக்கத்திற்கும் இறுதியான பதிவு என்று வாசகர்கள் நினைத்துக் கொள்வார்களோ என்று. அதைத் தொடர்ந்த சில நிகழ்வுகள் அதை உண்மையாக்கி விடுவது போல் நடந்ததென்னவோ நிஜம். மகான்களின் வாக்கிற்கு என்றுமே அதிசய சக்தி உண்டு :))

புதிய ஊர்,மும்பை, புதிய சூழ்நிலை. கடந்த நான்கு மாதங்களாக இணைய வசதி இல்லாமை. அகலவழிப் பாதையும் ஒற்றை வழியாகிப் போனது. அதாவது ப்ராட் பேண்ட் உள்ள அலுவலகக் கணிணியில் தனி அஞ்சல்கள் வலைப்பூக்கள் மேய்வதற்கு தடை. தனிக் கணிணியில் அலை பேசி இணைய இணைப்பு மூலம் ஒரு சில அஞ்சல்களைப் படித்து பதில் போடுவதற்கே இரண்டு மணி நேரமாகும் நத்தை வேகம்.

இன்னும் ஓரிரு மாதங்களில் நிலைமை சீரடையலாம் என்று கருதுகிறேன்.

சரி இணையம் இல்லாவிட்டால் போகட்டும், கபீரின் கைங்கரியம் ஏதாவது செய்யலாமென்று நினைத்த போது முதலில் நினைவுக்கு வந்தது ஏற்கனவே வெளியிடப்பட்ட கட்டுரைகளை தொகுத்து மென்னூலாக்குவது. அப்படியே, சுதந்திரத் தினத்தினுள் செய்து முடிக்கவேண்டும் என்ற முனைப்போடு கடந்த பத்து நாட்களாக முயன்று செய்து முடித்தாயிற்று. விருந்தினர் இடுகைகளைத் தொகுத்து அன்பின் சங்கமம் என்ற பெயரில் மென்னூல் தயாரித்து e-snip வலை தளத்தில் ஒரு வழியாக ஏற்றிவிட்டேன். ஒரு MB கோப்பை வலையேற்ற எடுத்துக் கொண்ட நேரம் 54 நிமிடங்கள், அதுவும் பலமுறை முயற்சித்தப் பின்னரே கைகூடியது.

தரவிறக்கம் செய்து கொள்ள விரும்புவோரும் இணையத்திலேயே முன்னோட்டம் காண விழைவோரும் கீழுள்ள சுட்டியினை பயன் படுத்தவும்

கபீரின் நிழலில்....... அன்பின் சங்கமம்

இந்தத் தொகுப்பில் பங்கேற்ற ஆசிரியர்களை கலந்து வெளியிட விரும்பினாலும் மேலே சொன்ன காரணங்களால் இயலாமல் போனது. அழகான கட்டுரைகள், அருமையான நட்பு வட்டம் இவற்றைக் கருத்தில் கொண்டு இதற்கு யாரிடமும் மறுப்பு இருக்காது என்ற உரிமையுடன் செயல்பட்டிருக்கிறேன். அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

இந்த இடுகைக்கான கபீர் ஈரடி ஒன்றைக் காண்போம்.



सातों शब्द जू बाजते, घरि घरि होते राग ।
ते मन्दिर खाली पडे, बैठन लागे काग ॥


சப்தசுர ராகம் தாளம், அலை அலையாய் கேட்டதொரு காலம்
கேட்பாரில்லா மாடம், அங்கேக் கூடிக் கரைவன காகம்.


வெறி பிடித்தவர்கள் போல் செல்வம் ஈட்டுவதில் உள்ள போட்டியும் அதன் காரணமாய் நடைபெறும் பெரும் ஊழல்கள் வன்முறைகள் யாவும் எதற்காக ? பெரிய மாளிகைகளைக் கட்டி அங்கே ஆடலையும் பாடலையும் ரசித்து அனுபவிக்கவா? அதற்குத்தான் பலருக்கு நேரமே இருப்பதில்லையே. அப்படியே அனுபவித்தாலும் கடைசியில் அவர்கள் கதியும் என்னாயிற்று ? வெறும் காகங்கள் அமர்ந்து கரையும் இடிபாடு நிறைந்த கட்டிடங்களாவன்றோ காலப்போக்கில் மாறி விடுகின்றன.

இப்படி நிலையற்ற உலக வாழ்வில் சுகத்தை நாடுவதை விட்டு நித்திய சுகம் தரும் இறைவன் கழல்களைப் பற்றிக் கொண்டால் உய்ய வழியுண்டு என்று சொல்லும் வள்ளலாரின் பாடலை இங்கு சேர்த்து நினைவுகூர்வோம்

கண்டதெல்லாம் அநித்தியமே கேட்டதெல்லாம் பழுதே,
கற்றதெல்லாம் பொய்யே, நீர் கணித்ததெல்லாம் வீணே
உண்டதெலாம் மலமே, உட்கொண்டதெலாம் குறையே
உலகியலீர் இதுவரையும் உண்மை அறிந்திலிரே,
விண்டதனால் என் ? இனி நீர் சமரச சன்மார்க்க
மெய்நெறியைக் கடைபிடித்து மெய்ப்பொருள் நன்குணர்ந்தே
எண்டகு சிற்றம்பலத்தே எந்தை அருள் அடைமின்,
இறவாத வரம் பெறலாம், இன்புறலாமே

---------------------
இன்று இந்திய சுதந்திரதினம் மாத்திரமன்று, மகான் அரவிந்தரின் ஜன்ம தினமும் கூட. நல்ல ஆன்மாக்கள் விரும்பும் சுதந்திரத்தை குறிக்க வந்த தினமாகவும் கொள்ளலாம். பாரதியார் இந்திய சுதந்திரத்தை விரும்பி ஆடுவோமே பள்ளு பாடுவோமே என்றால் இராமலிங்க பெருமானும் ஆன்மாவிற்கான சுதந்திரத்தை துய்த்துப் பாடுகிறார்.

ஆடுகின்ற சேவடிக்கே ஆளானேன்,
மாளாத ஆக்கை பெற்றேன்
கூடுகின்ற சன்மார்க்க சங்கத்தே
நடுவிருந்து குலாவுகின்றேன்
பாடுகின்றேன் எந்தை பிரான் பதப்புகழை
அன்பினொடும் பாடிப் பாடி
நீடுகின்றேன் இன்பக் கூத்தாடுகின்றேன்,
எண்ணம் எலாம் நிரம்பினேனே.

அனைவருக்கும் சுதந்திரதின வாழ்த்துகள்.

இனி அடுத்த இடுகை எப்போது வருமோ தெரியாது !
இச்சிறியேனால் ஆவது என்னே !!!

13 comments:

  1. எல்லாவற்றையும் பார்த்தேன். மீண்டும் படித்தேன். அருமையான தொகுப்புக்கு நன்றி. அனைவரையும் கேட்கவில்லையே என வருந்த வேண்டாம். எல்லாரையும் பெருமைப் படுத்தி இருக்கிறீர்கள். வாழ்த்துகள். உங்கள் இணையப்பிரச்னை சரியாகி மீண்டும் நீங்கள் எளிதாக இணையத்தைப் பயன்படுத்த எல்லாம் வல்ல ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன்.

    ReplyDelete
  2. நல்ல பதிவு.
    உங்களது நிலைமை சீராக மனப்பூர்வ வாழ்த்துக்கள்.
    நன்றி.

    ReplyDelete
  3. தங்களுக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள்.

    மென்நூல் அருமையாக அமைந்து விட்டது. உங்கள் உழைப்பின் பலன் தெரிகிறது.

    முடிந்த பொழுதெல்லாம் வாருங்கள்.

    ReplyDelete
  4. கபீரின்நிழலில் அன்பின் சங்கமம் என்ற மென்னூல் அருமை.

    இராமலிங்க பெருமானின் ஆன்மாவிற்கான சுத்ந்திரம் மனதுக்கு இதம்.

    நானும் ஊர் ஊராய் அலைந்து கொண்டு இருக்கிறேன். இங்கு இருக்கும் போது வந்து வந்து பார்ப்பேன் உங்கள் வலை பக்கம்.

    மீண்டும் வந்து அருமையான பதிவுகளை இறைவன் அருளால் தருவீர்கள். நாங்களும் வந்து படிப்போம்.

    நன்றி.

    ReplyDelete
  5. @ கீதா மேடம்: தங்கள் பிரார்த்தனைக்கு நன்றிகள்.

    @ இரத்தினவேல் ஐயா வருகைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி. ஆண்டாள் தரிசனத்தை தங்கள் வலைப்பூவில் அருமையாக வழங்கி இருப்பதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி. தங்கள் நட்பு பெருகட்டும்.
    @ ஜீவி ஐயா தங்கள் ஆசிகளுக்கு நன்றி

    @ கோமதி மேடம் :தங்களுக்கும் ஊர் ஊராய் அலைச்சலா? அதற்கு இடையிலும் நேரம் ஒதுக்கிப் பாராட்டியதற்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  6. இன்னும் சரியாகவில்லை போல. இருந்தாலும் பழைய இடுகைகளைப்படித்து மனம் ஆறுதல் கொண்டேன். நன்றி.

    ReplyDelete
  7. கபீரின்நிழலில் அன்பின் சங்கமம் என்ற மென்னூல் பகிர்வு அருமை..

    பகிஎவுக்குப் பாராட்டுக்கள்..

    ReplyDelete
  8. வருக இராஜராஜேஸ்வரி,

    மென்னூலை தரவிறக்கம் செய்து கொள்ள முடிந்ததா? நான் அந்த இணைப்பை சமீபத்தில் பரிசோதிக்கவில்லை.
    தங்களுக்கு பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி.
    நன்றி

    ReplyDelete
  9. இப்பதிவைப் படிக்குங்கால் எமக்கு அதிவீரராம பாண்டியர் இயற்றிய வெற்றி வேற்கையினின்று

    எழு நிலை மாடம் கால் சாய்ந்து உக்கு
    கழுதை மேய் பாழ் ஆயினும் ஆகும்

    பெற்றமும் கழுதையும் மேய்ந்த அப்பாழ்
    பொற்றொடி மகளிரும் மைந்தரும் கூடி
    நெற்பொலி நெடு நகர் ஆயினும் ஆகும்

    மண அணி அணிந்த மகளிர் ஆங்கே
    பிண அணி அணிந்து தம் கொழுநரைத்தழீஇ
    உடுத்த ஆடை கோடி யாக
    முடித்த கூந்தல் விரிப்பினும் விரிப்பர்

    என்னும் வரிகள் நினைவுக்கு வருகின்றன.

    மேலும் வேதநாயகம் பிள்ளையவர்களின் சஹானா ராகத்தில் அமைந்த கீர்த்தனம் ஈண்டு நினைவுகூரத்தக்கது. அஃதாகப்பட்டது பின்வருமாறு
    "ஓ காலமே ஓயாத ஓ காலமே! உன் போல் எவர்க்குண்டு இந்திரஜாலமே!

    போகமாக அண்டப் பூவெல்லாம் மேய்வாய்
    போனை போல் இருந்து புலியைப்போல் பாய்வாய்

    கல்லைப்போல் உண்டம்பையும் வில்லைப்போல் வளைப்பாய்
    கணம் நேரம் அதிகாரம் ஆண்டு எனக் கிளைப்பாய்
    வில்லுப்போல் வதனத்தை செல்லுப்போல் துளைப்பாய்
    வீங்கு அழகியர்க்குத் தேவாங்கு உரு விளைப்பாய்

    மலைகள் மண்டபங்களை வலிமையை இடிப்பாய்
    வரி ஏழு கடலும் வற்றிடக் -குடிப்பாய்
    தலை தடுமாற நீ தான் கொள்ளை அடிப்பாய்
    தனி வேதநாயகன் தயையாலே நடிப்பாய்"

    காலம் தான் எத்துனை விந்தையானது.. எல்லாரையும் எல்லாவற்றையும் முடிக்கும் தன்மையது... அனால் இந்த முட்டாள் மனிதன் பாழும் பணத்தின் பின் ஓடுகிறானே.. ஆச்சரியம் தான்.

    ReplyDelete
  10. நல்வரவு ராகவன்,

    நிலையாமை பற்றி அழகான மேற்கோள்கள் கொடுத்து பதிவின் மையக்கருத்தை வலுப்படுத்தியிருக்கிறீர்கள்.வாசகர் சார்பிலும் சேர்த்து நன்றி.
    வேதநாயகம் பிள்ளையின் பாடலின் ஒலிவடிவம் இணையத்தில் இருக்கிறதா ?

    மிக்க நன்றி

    ReplyDelete
  11. நன்றி அய்யா.. எமக்கு ஒரு மலையாள சுலோகமும் நினைவுக்கு வருகிறது.

    அனந்தம் அஞாதம் அவர்ணனீயம் ஈலோக கோளம் திரியுன்ன மார்க்கம்.
    அதிங்கள் எங்காண்டோரிடத்து நின்று நோக்குன்ன மார்த்யன் கதையெந்து அறிஞ்சு....

    அஃதாகப்பட்டது:
    இவ்வுலகம் போகும் பாதையானது எல்லயற்றது முழுதும் அறிய இயலாதது. அதில் ஒரு சிறு மூலையில் இருந்து கொண்டு நான் பார்க்கிறேன்...என்னால் செய்ய இயன்றது சொற்பமே...

    உபநிஷதங்களும் இதையே சொல்கின்றன..
    அதைப் பற்றி வேறொரு பின்னூட்டத்தில் பறைய அவா...





    வேதநாயகம் பிள்ளைவாளின் ஒலி இணைப்பு:

    இசை அரசு தண்டபாணி தேசிகர்:
    http://www.youtube.com/watch?v=5kWyQcdovfs

    சஞ்சய் சுப்பிரமணியம்:
    http://www.youtube.com/watch?v=HsP83WLw6Ag

    ReplyDelete
  12. ஆங்கிலத்தில் ஷெல்லி யின் Ozymandias என்னும் பாவும் இதையே சொல்கிறது. அது பின்வருமாறு:


    I met a traveller from an antique land
    Who said:—Two vast and trunkless legs of stone
    Stand in the desert. Near them on the sand,
    Half sunk, a shatter'd visage lies, whose frown
    And wrinkled lip and sneer of cold command
    Tell that its sculptor well those passions read
    Which yet survive, stamp'd on these lifeless things,
    The hand that mock'd them and the heart that fed.
    And on the pedestal these words appear:
    "My name is Ozymandias, king of kings:
    Look on my works, ye mighty, and despair!"
    Nothing beside remains: round the decay
    Of that colossal wreck, boundless and bare,
    The lone and level sands stretch far away.

    தேவைப்பட்டால் இதன் பொருளைப் பதிவு செய்யத் தயாராக இருக்கிறேன். அங்ஙனமாயின் அருள் கூர்ந்து தெரிவிக்குமாறு வேண்டுகிறேன்.

    இவண்,
    இராகவன்

    ReplyDelete
  13. நிலையாமை பற்றிய மலையாளப் பாடலும் ஷெல்லியின் கவிதையும் அருமை, இராகவன் ஐயா.

    வேதநாயகம் பிள்ளை அவர்களின் சஹானா ராக இணைப்புகளை கொடுத்ததற்கும் மிக்க நன்றி. கேட்டு அனுபவித்தேன்.

    நன்றி

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி