Thursday, June 25, 2009

குஞ்சரம் சிதர்த்த சிறுகவளம்

வரவுக்கும் செலவுக்கும் முடிச்சு போடுவதுதான் பட்ஜெட். பலர் சிக்கனத் திலகங்கள், கணக்கு போட்டு் செலவு செய்வார்கள். வேண்டிய செல்வம் இருந்தும் செலவே செய்ய விரும்பாத மகோதையர்களும் இருப்பார்கள். இன்னும் சிலருக்கு கையிலே காசு நிற்கவே நிற்காது, பாரதியார் போல.

இதனால் ஏற்படும் ஏற்றத்தாழ்வை சமன்படுத்த வந்த அரசியல் வழியமைப்புகள் எல்லாம் தோற்று விட்டன.
சட்டத்தால் சாதிக்க முற்படுவது எதுவும் பயத்தை அடிப்படையாகக் கொண்டது. அது நிலைத்து நிற்காது. சுயநலம் என்ற எலி சட்டத்துள் இருக்கும் பொத்தல்களுக்கு இடையே புகுந்து தன்னிச்சையை பூர்த்தி செய்து கொள்ளும்.

அதுவே அன்புணர்ச்சியை தூண்டிவிட்டு அந்த எலி புத்தி தலையெடுக்காமல் செய்தால் ஏற்றத்தாழ்வுகள் குறைவதற்கான வாய்ப்புகள் பெருகும். அதை காலம் காலமாக நமது நாட்டில் பெரியவர்கள் நடைமுறை படுத்தி வந்திருக்கின்றனர். இங்கே ஒரு நல்ல உதாரணத்தை சொல்கிறார் குமரகுருபரர்.

முருகன் அருளால் வாக்சித்தி பெற்ற குமரகுருபரர் காசியிலேயே திருபனந்தாள் மடம் நிறுவி வடமொழியிலும் தமிழ் மொழியிலும் புலமை பெற்றவர்.
அவர் பல அரிய கருத்துகளை சொல்லி வைத்திருக்கிறார். அதில் ஒன்று

வாங்கும்
கவளத்து ஒரு சிறிது வாய் தப்பின்
தூங்கும் களிறோ துயறுரா - ஆங்கது கொண்டு
ஊரும் எறும்பு இங்கு ஒருகோடி உய்யுமால்
ஆரும்
கிளையோடு அயின்று

(தூங்கும் களிறு= அசைந்து கொண்டிருக்கும் யானை)

”தன் உணவில் ஒரு சிறு கவளம் சிதறினால் யானைக்குப் பெரிய நட்டம் எதுவும் இல்லை. ஆனால் அது எறும்பு போன்ற எத்தனை கோடி ஜீவன்களுக்கு வாழ்வளிக்கிறது என்பதை நினைத்து வசதி படைத்த பெரும் தனவந்தர்கள் தங்கள் செல்வத்தை மனமுவந்து சமூகத்தின் நற்காரியங்களுக்கு பயன்படுத்த வேண்டும். அப்படிச் செய்வதால் அவர்களின் பெரும் நிதிக்கு எந்த குறைவும் வந்துவிடாது” என்ற கருத்தை வலியுறுத்துகிறார் குமரகுருபர சுவாமிகள்.

இந்த உண்மை புரியாத ஸ்ரீனிவாஸ நாயக்கனோ ஒரு அந்தணன் கேட்ட ஒரு சிறிய உதவி செய்ய மனமின்றி அவரை அலைக்கழித்தான். நவ கோடி நாராயணன் என்று பண்டரிபுரத்தருகே புகழ்பெற்ற வைர வியாபாரியாக இருந்த அவன் உதவினால் தன் பேரனின் பூணூல் கல்யாணத்தை நடத்தி விடலாம் என்று அந்தணன் ஒருவன் ஒரு நாட்காலையில் அவன் கடை வாயிலில் நின்றான்.

’நாளை வாரும்’ என்று அனுப்பி வைத்தான் ஸ்ரீனிவாஸன். அடுத்த நாளோ காலையிலிருந்து அந்தி கடைமூடும் வரை அவரது கடையிலேயே ஓர் ஓரமாக கால்கடுக்க நின்றிருந்தான் அந்த அந்தணன். அன்று முழுவதும் அரண்மனையிலிருந்து வருவோரும் போவோருமாக இருந்தனர். கடை மூடும் சமயத்தில் அவரை அப்போதுதான் பார்ப்பது போல “ லெட்சுமி வருகின்ற நேரத்தில் ஏதும் தர இயலாதே. நாளை அஷ்டமி. நீங்கள் தசமி தினம் வாருங்கள் பார்ப்போம்” என்று சொல்லி அனுப்பினான் கொடாக்கண்டன் ஸ்ரீனிவாஸன்.

பல தசமிகள் வந்து போயின. விடாக் கண்டனான அந்தணன் சளைக்கவில்லை.

கடைசியாக ஸ்ரீனிவாஸனுக்கு ஒரு யுக்தி தோன்றியது. சில காசுகளை பையில் போட்டு அந்தணன் கையில் கொடுத்தான். அதைப் பிரித்து பார்த்த போது புரிந்தது எல்லாம் செல்லாத காசுகள் என்பது. “ ஐயா ! இவை செல்லாக் காசுகள்” என்று தயங்கியபடியே உரைத்தான் அந்தணன். “ செல்லும், செல்லும்.. செல்ல வேண்டிய இடத்தில் செல்லும்” என்று முகத்தை திருப்பியபடியே பேச்சில் விருப்பமில்லாதவனாய் பதிலளித்தான் வைர வியாபாரி ஸ்ரீனிவாஸ நாயக்கன்.

அந்தணனுக்கு தான் ’செல்ல வேண்டிய இடம்’ எதுவென்று புரிந்தது. வியாபரியின் வீட்டை அடைந்து மனைவியார் சரஸ்வதி பாய்-ஐக் கண்டு முறையிட்டான். அவரும் தன் கணவரின் செயலுக்காக வெட்கினார். ஆயினும் அவரை மீறி அவருக்கு விருப்பமில்லாததை தான் எதுவும் செய்ய இயலாத நிலை குறித்து வருத்தம் தெரிவித்தார்.

அந்தணன் நயமாக ஒரு கருத்தை முன் வைத்தான். தந்தை கொடுத்த சீதனம் முறைப்படி அவருக்கு உரியதுதானே. அதனை தானம் செய்வதால் தவறேதுமில்லை என்று சொன்னான். அதுவும் உண்மைதான் என்று மனதிற்குப் படவே தன் வைர மூக்குத்தியை கழற்றி அவருடைய சுப செலவுகளுக்கென கொடுத்து விட்டாள்.

அந்தணனுக்கோ பணம் வேண்டும். அதை நேரே அந்த வியாபாரியின் கடைக்கே கொண்டு சென்று இதை வைத்துக் கொண்டு பணம் தாரும் என வேண்டினான். அது தன் மனைவியுடையது என்று அடையாளம் கண்டு கொண்ட ஸ்ரீனிவாஸன் “எங்கு கிடைத்தது?” என்று வினவினான்.

” நல்ல மனம் படைத்த அன்பர் ஒருவர் கொடுத்து உதவினார்” என்றான் அந்தணன்.

“ மிகவும் சுமாரான வைரம். அம்பது தங்கக் காசுகள் பெறும்” என்று சொல்லி கொடுத்தான். அந்தணனுக்கு வந்த காரியம் முடிந்தது. அந்தணன் கிளம்பியதும் கடை ஆள் ஒருவனை அவரை பின் தொடர்ந்து எங்கு செல்கிறார் என்பதை கண்டு வர அனுப்பினான் ஸ்ரீனிவாஸன்.

பின்னர் அந்தணர் கொடுத்த மூக்குத்தியை பெட்டியில் பத்திரப்படுத்தி வீட்டுக்கு விரைந்தான். அந்த நேரத்தில் கணவரை சற்றும் எதிர்பார்க்காத சரஸ்வதி அம்மையாருக்கு தர்ம சங்கடமாகி விட்டது. மூக்குத்தி எங்கே என்ற கேள்விக்கு எடுத்து வருகிறேன் என்று உள்ளே போனவள் இறைவன் முன்னே நின்று அழுதார்.
“அந்த பிராமணனை ஏன் அனுப்பினாய்? என்னால் என் கணவரிடத்து பொய் சொல்ல முடியாது. எனக்கு முன்னே இருக்கும் ஒரே வழி உயிரைப் போக்கிக் கொள்வதுதான்” என்ற எண்ணங்களுடன்,காதில் அணிந்திருந்த தோடிலிருந்து ஒரு வைரக்கல்லை பொடித்து விஷமாக அருந்தத் தலைப்பட்டார்.

ஆச்சரியம்! அந்த குவளையின் உள்ளே ஏதோ உலோகச் சத்தம் கேட்டது. துளாவிப் பார்த்ததில் அந்தணருக்கு கொடுத்த அதே மூக்குத்தி. மகிழ்ச்சியுடன் கணவரிடம் கொண்டு சென்றார். வாயடைத்து நின்றான் ஸ்ரீனிவாஸ நாயக்கன். காதில் வைரக் கல்லை காணவில்லை. அவனுக்கு என்ன நடந்தது என்று புரிந்து விட்டது. குற்ற உணர்வால் அவள் உயிரை மாய்த்துக் கொள்வதை அவனால் தாங்க முடியவில்லை. சரஸ்வதி அம்மையாரும் நடந்த உண்மைகளை மறைக்காமல் கூறினார்.

உடனே கடைக்கு ஓடினான் ஸ்ரீனிவாஸன். அவன் பத்திரப்படுத்தி வைத்த மூக்குத்தி மாயமாகி விட்டிருந்தது. அதே நேரத்தில் அவன் அனுப்பிய ஆள் வந்து அந்த அந்தணன் பாண்டுரங்கன் சந்நிதியில் மாயமாய் மறைந்து போனதை சொன்னான்.

இப்போது ஸ்ரீனிவாஸ நாயக்கனின் அகக்கண் திறந்தது. பாண்டுரங்கனே தன்னை இடைவிடாது துரத்தித் துரத்தி ஆட்கொண்டிருக்கிறான் என்பதை நினைக்க நினைக்க அவன் மனம் மருகியது. எப்பேர்பட்ட பாவியாகி விட்டேன். யாருக்கும் கிடைக்காத விட்டலன் என் வீட்டிற்கும் கடைக்குமாக நடையாய் நடந்திருக்கிறானே. என் அறிவீனத்தைப் போக்குவதற்காக எவ்வளவு சிரமப்பட்டிருக்கிறான் ! செல்லாக் காசை வாங்கிக் கொண்டு எல்லாவற்றிலும் பெருநிதியான அருட்செல்வத்தை வாரி வழங்கிவிட்டானே என்று பலவாறாக துயருற்று அரற்றினான்.

பின்னாளில் அவன் மனம் வருந்தி பாடிய பாடல் ஒன்று

தப்புகளெல்லா நீனு ஒப்பி கொள்ளோ
நம்மப்ப, - காயபேகு திம்மப்பா நீனே


(தப்புகளையெல்லாம் நீ ஒத்துக்கொள் என்னப்பனே - காத்திடல் வேண்டும் திம்மப்பனாகிய நீனே )
.............
அதிதிகளெந்து பந்ரெ மனெகெ -நா
தியில்ல, கூடது எந்தெ

(அதிதி என்று வந்தால் வீட்டிற்கு, நான் கதியில்லை (அவர்களுக்கு உணவளிக்கக்) கூடாது என்றேன்)

யதிகள கூட நிந்திஸிதெ கொனெகெ- ஸ்ரீ
பதி த்ருஷ்டியிடு ஈ பாபி கடெகெ


(சாதுக்களையும் கூட இறுதியில் நிந்தித்தேன் ;ஸ்ரீபதியே உன் கடைக்கண்ணை இந்த பாவியின் பக்கம் இடு)
..........
எஷ்டு ஹேளலி அவகுண ளெல்லா -அவு
அஷ்டு இஷ்டு எந்து எணிகெ இல்லா
த்ருஷ்டி யிந்லி நோடோ தீனவத்ஸலா- ஸர்வ
ஸ்ருஷ்டிகெடை புரந்தர விட்டலா


(அவகுணங்களை எவ்வளவு என்று சொல்வேன் -அவைகள் இவ்வளவு அவ்வளவு என்று எண்ணிக்கையில் இல்லை
கருணையுடன் பார் தீனவத்ஸலா- சர்வ சிருஷ்டிக்கும் உடையவனாகிய புரந்தர விட்டலனே )


(கன்னட சொற்கள் : காய பேகு =காப்பாற்ற வேண்டும் ; திம்மப்பா =இறைவனை செல்லமாக குறிப்பது ; மனெகெ=வீட்டிற்கு; கொனேகெ=இறுதியாக; கடெகெ= பக்கமாக ; நோடு= பார்; ஒடைய =உடையவன் சொந்தக்காரன்; எணிகெ= எண்ணிக்கை)

ஸ்ரீனிவாஸ நாயக்கன் புரந்தரதாஸனாக மாறிய கதை இது.

பாண்டுரங்கனின் பெரும் அருள்நிதி கிட்டியதும் உலகில் அவர் ஈட்டிய பெருஞ் செல்வமல்லாம் யானையின் சிறு கவளத்தின் சிதறல் போன்றாகி விட்டது. அது எம்மாத்திரம் என்று தன் செல்வத்தையெல்லாம் ஏழை எளியவர்களுக்கு வாரி வாரி வழங்கிவிட்டார். வெறும் கட்டிய துண்டுடன் மனைவி மக்களுடன் கிளம்பி விஜயநகரத்தை அடைந்து வியாசராயரின் சீடராகி- புரந்தரதாஸனாகி - ஹரி சேவையிலேயே காலம் கழித்தார்.

குமரகுருபரர் போல பண்டிதர் அல்லர் கபீர்தாசர், ஆனால் காலத்தால் முந்தையவர். மிக சுலபமாக எளியவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் அவரும் அதே உதாரணத்தை சொல்லியிருக்கிறார்.

कुंजर मुख से कन गिरा, खुटै न वाको आहार ।
कीडी कन लेकर चली, पोषन दे परिवार


குஞ்சரம் சிதர்த்தது சிறுவத்தம், குஞ்சரத்துக் கில்லை நட்டம்
சஞ்சரித்த எறும்பின் கூட்டம், கண்டதோர் உணவின் தேட்டம்


(குஞ்சரம் =யானை; சிதர்த்தல்= சிந்துதல் ; வத்தம்= சோறு ; தேட்டம்=சம்பாதனை)

தானம் செய்வதில் மனிதர்கள் தயக்கம் கொள்ளக்கூடாது என்ற வகையில் இதற்கு பொதுவாக பொருள் கொள்ளலாம்.

மிக செல்வந்தர்களான புரந்தரதாஸருடைய வாழ்க்கையும் பட்டினத்தார் வாழ்க்கையும் காட்டுவது, ஞானம் வந்தபின் அதுவே பெருஞ்செல்வமாகி விடுகிறது. அந்நிலையில் எவ்வளவு உலகச் செல்வமானாலும் அது தூசு போல கணக்கற்று போகிறது.

இன்னுமொரு வகையில் பார்த்தாலும் அவர்கள் யானையை போன்று ஆன்மீகத்தில் உயர்ந்து நிற்பவர்கள். நாம் எறும்புகள் போல் அவர்கள் காலடியில் ஊர்ந்து கொண்டிருக்கிறோம்.

கர்னாடக சங்கீதத்திற்கே இலக்கணம் வகுத்தவர் என்று போற்றப்படுபவர் புரந்தரதாஸர். வெங்கடாசல நிலையம், பாக்யத லக்ஷ்மி பாரம்மா, ஆடிசிதளு யசோதா போன்றவை மிகவும் புகழ்பெற்ற பாடல்கள். இறைவனை போற்றுவது மட்டும் அல்லாமல் பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் பல தத்துவ பாடல்களையும் இயற்றியவர்.

புரந்தரர் 475000 பாடல்கள் பாடியதாக சொல்லப்படுகிறது. அது அவர் பெற்ற அருள் நிதியிலிருந்து நமக்காக சிந்தியது. அதி்லும் நமக்கு கிடைத்திருப்பது சுமார் 800 பாடல்களே. எறும்புகளாகிய நாம் அவற்றை ஜீரணித்து கொள்ளவே எவ்வளவு காலம் பிடிக்குமோ !

16 comments:

 1. //அவர் பெற்ற அருள் நிதியிலிருந்து நமக்காக சிந்தியது..... அதி்லும் நமக்கு கிடைத்திருப்பது சுமார் 800 பாடல்களே.//

  ஒன்று கிடைத்துப் புரிந்து தெளிந்தால், அதுவே போதுமே!

  ReplyDelete
 2. புரந்தரதாஸர் கதை கண்ணிலே நீரை வரவழைக்கும் ஒன்று, எப்போக் கேட்டாலும், சிறு குழந்தைகள் நடித்து நாட்டியத் திரைப்படமாக எண்பதுகளில் வந்தது. அதில் புரந்தரதாஸராக நடித்த பையரும், அவர் மனைவியாக நடித்த சிறுபெண்ணின் முகமும், கையில் மூக்குத்தியை வைத்துக் கொண்டு அந்தப் பெண்குழந்தை யோசிக்கும் பாங்கும் இன்னும் கண்ணெதிரேயே நிற்கின்றது. அருமையான நினைவூட்டலுக்கு நன்றி.

  ReplyDelete
 3. http://sivamgss.blogspot.com/2006/07/87.html

  திருப்பனந்தாள் காசிமடம் பற்றிய மேலதிகத் தகவல்களுக்கு.

  ReplyDelete
 4. நல்வரவு கிருஷ்ணமூர்த்தி சார்,

  //ஒன்று கிடைத்துப் புரிந்து தெளிந்தால், அதுவே போதுமே!//

  ஆமாம். எறும்புக்கு ஒரு பருக்கை சோறே பெரிதுதான். அதை ஜீரணித்துக்கொண்டாலே போதும். :)

  வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

  ReplyDelete
 5. நன்றி கீதாம்மா !

  //குழந்தைகள் நடித்து நாட்டியத் திரைப்படமாக எண்பதுகளில் வந்தது//

  நாட்டிய நாடகமா திரைப்படமா ?

  நம்மூர் தயாரிப்பாளர்கள் இந்த நல்ல விஷயங்களுக்கெல்லாம் செலவழிக்க மாட்டார்களே !

  மிக்க நன்றி

  ReplyDelete
 6. முதலில் நாட்டிய நாடகமாயும், பின்னர் அதுவே திரைப்படமாகவும் அதே குழந்தைகளை வைத்து எடுக்கப் பட்டது. ப்ளாகர் வேதாளம் கொஞ்ச நாளா வேலையைக் காட்டறதிலே சில வார்த்தைகள் விடுபட்டிருக்கு. இது திரு சுப்ரமணியத்தின் பிள்ளை அபஸ்வரம் ராம்ஜி தயாரித்தார் என நினைவு. பல வருஷங்கள் ஆகிவிட்டதால், (அந்தப் பெண்ணுடைய குழந்தைக்கே இப்போ 20 வயசு இருக்கலாம்! :D) நினைவில் சரியாக இல்லை. ஆனால் தி.நகர். கிருஷ்ணவேணி திரை அரங்கில் இந்தப் படம் பார்த்தேன். கூட்டம், இடிபாடுகள் எல்லாம் இருந்தன. சிறப்புச் சீட்டில் பார்த்தேன், அதுவும் நினைவில் இருக்கு. மை டியர் குட்டிச் சாத்தானும் இதே சமயம் தான் வந்ததுனு நினைக்கிறேன்!

  ReplyDelete
 7. //..கிருஷ்ணவேணி திரை அரங்கில் இந்தப் படம் பார்த்தேன் //

  தகவலுக்கு நன்றி, நான் சின்னத்திரையில் பார்த்ததைத் தான் தவறாக திரைப்படம் என்று குறிப்பிட்டீர்களோ என்று நினைத்தேன்.
  குட்டிச் சாத்தான் படம் வெளியானது 1984 என்பதாக நினைவு.

  ReplyDelete
 8. //நான் சின்னத்திரையில் பார்த்ததைத் தான் தவறாக திரைப்படம் என்று குறிப்பிட்டீர்களோ என்று நினைத்தேன்.//

  நறநறநறநறநறநறநறநறநறநறநறநற

  ReplyDelete
 9. குமரகுருபர ஸ்வாமிகள், புரந்தர தாஸர்,
  கபீர் தாஸர் மூவரும் இணைந்த த்ரிவேணி ஸங்கமத்தில் நீராடும்
  பேற்றைத் தந்தீர்கள்.
  மிக்க மகிழ்ச்சி,

  தேவ்

  ReplyDelete
 10. gi.

  you are doing great god work.

  mahan stories always giving inner silence. we should catch and practice.

  even i enjoyed same experience in sadashiva bramahendrar,bhadrasala ramadasar lifes.

  you are transfering our sanadana darma to next genration.

  ReplyDelete
 11. வருகைக்கும் தாங்கள் கொடுக்கும் ஊக்கத்திற்கும்
  நன்றி தேவராஜன் ஐயா,

  ReplyDelete
 12. நல்வரவு பாலு சார்,

  தங்கள் வாழ்த்து யோகியாரிடமிருந்து வந்ததாகவே எண்ணி மகிழ்கிறேன்.

  அன்புக்கு நன்றி

  ReplyDelete
 13. நல்ல பதிவுக்கு நன்னி!

  ReplyDelete
 14. எப்போதும் போல அருமையான பதிவு கபீரன்பன் சார். அளித்தமைக்கு நன்றி.

  ReplyDelete
 15. வருக தி.வா.

  நன்னிக்கு ஒரு நன்னி :))

  ReplyDelete
 16. வாங்க மதுரையம்பதி,

  பெங்களூர்காரருக்கு புரந்ததாஸர் எப்படி பிடிக்காமல் போகும் !

  வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி

  ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி