Thursday, July 16, 2020

மனம் வெளுக்க வழியுண்டு

  எல்லோரையும் எல்லாக் காலத்தும் திருப்தி செய்ய இயலாது. அது வீடாகட்டும் வியாபாரமாகட்டும் அல்லது முக்கிய பொறுப்புள்ள அதிகாரம் ஆகட்டும் நம்மைச் சுற்றி அதிருப்தியாளர்கள் இருக்கவே செய்கின்றனர். அப்போது பலரிடமும் ஏச்சுகளை சந்திக்க வேண்டியிருக்கிறது. அதை எதிர் கொள்வது எப்படி.? 
வீட்டளவில் குடும்பத்தலைவன் கண்டிப்புக் காட்டி பிறர் வாயை அடக்கி விடலாம். அவனே அலுவலகத்தில் தன்னுடன் பணி செய்பவர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வு எதிர்பார்ப்பைவிட குறையும் போது நிர்வாகத்தை விட்டுக் கொடுக்காமல் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது. அப்போது அவர் விளக்கப் பேச்சைக் கேட்பவரும் உண்டு ஏற்காமல் ஏசுபவரும் உண்டு. வாங்கிய பொருளில் குற்றம் காணும் போது தயாரித்த கொழிலகம் எங்கோ இருக்க வேறொரு மூலையில் சர்வீஸ் அதிகாரி நுகர்வோரிடம் திட்டு வாங்கிக் கொண்டிருப்பார். இது யாவருக்கும் உள்ள அன்றாடப் பிரச்சனை.
 
சென்ற வருடம் மாணவர்களுடனான கலந்துரையாடலில் நமது பிரதமரிடம் கடினமாக உழைக்கும் அவர் புத்துணர்ச்சியோடு காணப்படுவதின் ரகசியம் என்ன என்ற கேள்வியை ஒரு மாணவன் எழுப்பினான். ‘நான் தினமும் மருந்து சாப்பிடுவதில்லை நிறைய வசவுகளை சாப்பிடுகிறேன் ( “கோலி நஹி, பஹுத் காலி காத்தா ஹூ” ; கோலி என்றால் மாத்திரை காலி என்றால் வசவு ) என்று பலத்த ஆரவாரத்திற்கிடையே வேடிக்கையாக பதில் சொன்னார். 

இந்த எதிர்ப்புகள் தான் ஒருவரின் சுய சோதனைக்கு வாய்ப்பாகும்.

.நிர்வாக மேலாண்மைப் பற்றி பேசும் போது திரு நாராயணமூர்த்தி, ஒரு தலைவர் எப்படி தம்மை மேன்மை படுத்திக் கொள்ளமுடியும் என்றால் அவர் தன் எதிர் தரப்பு வாதங்களை கவனிக்க வேண்டும் என்கிறார்.
இந்த சுய சோதனைக்காவே கபீரும் எதிராளிக்கிடையே உன் கூடாரத்தை அமைத்துக் கொள் என பரிந்துரைக்கிறார்.

निंदक नियरे राखिये, आँगन कुटी छवाय |
बिन पानी बिन साबुन, निर्मल करे सुभाव ||

நிந்தனை செய்வார் தம்மை அண்டை வீடாய் கொள்வீர்  
நீரில்லை சவுக்கா ரமில்லை உம்மனம் வெளுக்கக் காணீர்

 தேச நிர்வாகம் தொழில் நிர்வாகம் மட்டுமல்லாது ஆன்மீக முன்னேற்றத்திற்கும் அது மிக மிக அவசியமானது.  ஆனால் முதற்படியாக அதை செவிமடுத்துக் கேட்க வேண்டும். சொல்லப்படும் குற்றங்களில் உள்ள நிறைகுறைகளை ஆராய வேண்டும். சொல்பவரின் தரம் மேலும் உள்நோக்கம் போன்றவற்றை கவனித்து தத்தமது பாதையை வகுத்துக் கொள்ள வேண்டும். 

பொறாமையாலும் சுயநலத்தாலும் எழும் எதிர்ப்புக்களை பொதுநலம் கருதி  விலக்கிவிட்டு காரியமே கண்ணாக வேண்டும். சொல்வது எளிது செய்வது சுலபமல்ல என்று தோன்றலாம். அதற்கு மனோபலம் வேண்டும். 

இந்த மனோபலத்தை இறைவனைப் பிடித்துக் கொண்டால் பெறலாம் என்பதை பல அடியவர் வாழ்க்கையில் இந்த தேசம் கண்டிருக்கிறது. அவர்களில் ஒருவர்தான் மகாராஷ்ட்ராவின் சக்குபாய். அவள் கதையையும் பார்ப்போம்.
 
சக்குபாயின் ஊருக்கு பண்டரிபுரத்திற்கு செல்லும் யாத்திரிகர்கள் வந்து இருக்கிறார்கள். ஊரே திரண்டு அவர்களின் தேவையை கவனித்துக் கொள்கிறது. அந்த சேவையில் சக்குபாய்க்கும் சிறிது பங்கு கிடைத்தது. சிறுவயது முதலே விட்டலினடத்து ஈர்ப்பு இருந்ததால் அவளுக்கும் அவர்களோடு சேர்ந்து பண்டரிபுர தரிசனம் செய்ய மிக்க ஆசை.ஆனால் வீட்டின் நிலைமை அதற்கு இடம் கொடுக்காது எனத் தெரியும். கணவன் அனுமதித்தாலும் மாமியார் அனுமதிக்க மாட்டாள். 

அவள் மாமியாரை ஊரே ராட்சசி என்றது. சற்றும் ஈவு இரக்கமற்றவள். வாயில் வரக் கூடாத வார்த்தைகள் சரளமாக மழைப் போல் பொழியும். வாயுடன்  கைகளும் இணைந்து வேலை செய்யும். 

அவளுடைய கணவனே அவள் முன்பு பெட்டிப் பாம்பு. மகனோ தாய் சொல்லை தட்டாதபிள்ளை. போறாத குறைக்கு இருவரும் கஞ்ச மகா பிரபுக்கள். 
மொத்தத்தில் சக்குபாய் அந்த வீட்டில் எந்த சுதந்திரமும் இல்லாத ஒரு அடிமை. மாமியாரின் பல கொடுமைகளுக்கும் இடையே அவளைத் தாங்கி நின்றதே அவள் செய்து வந்த  விட்டலுனுடைய செபம் தான். 

சிறுமியாக தோழிகளுடன் தெருவில் மணல் வீடுகட்டி விளையாடிக் கொண்டிருந்த போது ஒரு ‘விட்டல பக்தர்’ அதைத் தெரியாதவர் போல் மிதித்து இடித்து விட்டார். அவளுடைய துக்கத்தையும் கோபத்தையும் போக்க அவளுக்கு பாண்டுரங்கனின் சிறு விக்கிரகம் கொடுத்து அவன் நாமாவை விடாமல் செபித்தால் அவனையே பிடித்து விடலாம் என்று சமாதானப்படுத்தி சென்றார். (சிலர் தம்பூரா என்று சொல்கின்றனர்)

வளமான மண்,  பக்தி விதையை விட்டலன் ஊன்றிவிட்டான். சக்குபாயின்  உயிர் தெய்வமானான் பாண்டுரங்கன். பன்னிரண்டு வயதில் மணமாகி புக்கத்திற்கு வந்த போதும் அவள் பாண்டுரங்கனை விடவில்லை. அதுவே பல சமயங்களில் அவளை குற்றம் சொல்வதற்கும் கோபித்துக் கொள்ளவும் காரணமாயிற்று.

அந்த யாத்திரிகர் குழுவில் கபீரும் நாமதேவரும் இருந்ததாகக் கேள்வி. எப்படியாயினும் அடியார்கள் கூட்டத்தில் இணைவதே இன்பம் தானே. சக்குபாய்க்கு  வீட்டிற்கு செல்ல மனமே இல்லை.
நாம சங்கீர்த்தனத்தில் தன்னை மறந்தாள். பண்டரிபுரத்திற்கான யாத்திரை விவரங்களை விசாரித்தாள். வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் வீடு அல்லோலகல்லமாகியது.  கணவன் அவளை வந்து இழுத்துச் சென்றான். இவள் எங்கே அவர்களுடன் சென்று விடுவாளோ என்ற பயத்தில் மாமியாரும் கணவனும் அவளை ஒரு தூணில் கட்டிப்போட்டு படுக்கச் சென்றனர். 
 
உடலும் மனமும் துவண்டு போயிருந்த சக்குபாய் முன் கண்ணன் தோன்றினான். அவளைத் தேற்றி “கவலைப்படாமல் நீ போய்  யாத்திரை முடித்துக் கொண்டுவா. உன்னிடத்தை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்று அபயம் அளித்தான். அடுத்த வினாடி கட்டப்பட்டக் கயிறுள் கண்ணனும் வெளியே சக்குபாயுமென்று இடம் மாறினர். 

பண்டரிபுரத்தில் பக்தியில் சக்குபாய் தன்னை மறந்திருந்த நேரத்தில் தன் பக்தைக்காக அவள் மாமியாரிடம் வசவுகளை வாங்கிக் கொண்டு அவள் வடிவில் வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்தான் விட்டலன். இறைவன் இருக்கும் இடத்தில் வெறுப்பு வளருமோ? சிறிது சிறிதாக வீட்டாரின் போக்கில் மாற்றம் காணத் துவங்கியது. காரணம் அறியாமல் அவளை நேசிக்கத் தொடங்கினர்.    

அவ்வேளையில் யாத்திரைக்கு சென்றிருந்த அவ்வூர்காரர்கள் பாம்பு கடித்து சக்குபாய் பண்டரிபுரத்தில் உயிர் இழந்தாள் என்று துக்கமான செய்தியை கொண்டு வந்தபோது “இதென்ன அவள் எங்கே பண்டரிபுரம் போனாள் ?” என்ற வியப்போடு அவளைத் தேடினால் அதுவரை அவள் வடிவில் செயலாற்றிக் கொண்டிருந்த விட்டலன் மாயமாகிவிட்டான்.

ருக்மிணி தேவியின் அருளால் சக்குப்பாய் உயிர் பெற்று  திரும்பி வந்ததும் வீட்டார் மனம் திருந்தியதும் மீதம் உள்ள கதை. [விருப்பமுள்ளவர்கள் காணொளியில் காணலாம். ]

சக்குபாய் கதை அக்காலத்தில் மிகப்பிரபலமான நாடகக் கதையாகத் திகழ்ந்தது. பொறுமையும் பக்தியும் ஒருவரை எப்படி உயர்த்தும் என்பதை அவள் வாழ்க்கையில் தெரிந்து கொள்ளலாம். 

அவள் எவ்வளவு கொடுமைப் படுத்தப்பட்ட போதும் தனக்கு கேடு செய்பவர்க்கும் அவள் நல்லதையே வேண்டினாள். அதற்கான மனோபலம்    அவள் பற்றியிருந்த நாமஸ்மரணையால் கிடைத்தது. அதன் மூலம் அவளுடைய மனம் மிகவும் பரிசுத்தமாய் இருந்தது. அப்படிப்பட்ட தூய உள்ளத்தை கடவுள் தன் இல்லமாக குடி கொள்வதை யாவருக்கும் அறிவிக்கவே அவன் இவ்வகை பக்தர்களைக் கொண்டு  நாடகம் ஆடுகிறான். 

இராமலிங்க வள்ளலார் இந்த நிலைமையை இறைவனுடனான நட்பு என்னவகை  மாற்றங்களை விளைவித்தது என்பதை அருட்பெருஞ்சோதி அகவலில் எழுதுகிறார்.

உள்ளமும் உணர்ச்சியும் உயிரும் கலந்து கொண்டு 
எள் உறு நெய்யில் என் உள் உறு நட்பே

செற்றமும் தீமையும் தீர்த்து நான் செய்த 
குற்றமும் குணமாகக் கொண்ட என நட்பே
 
பிணக்கும் பேதமும் பேய் உலகோர் புகல்
கணக்கும் தீர்த்து எனைக் கலந்த நன் நட்பே  (1180)

(செற்றம்=பகைமை ;எள்ளுறு நெய் = எள்ளில் உள்ள எண்ணெய்; பேய் உலகோர் =மனம் பக்குவப்படாத உலகத்தவர்)

இதையே வேறொரு கண்ணோட்டத்தில் சொல்வதானால் மிகக் கடினமான சூழ்நிலையிலும் மனம் தளராமல் அந்த சூழ்நிலையில் நம்மை  இறைவன் வைத்திருப்பதே நம் அந்தரங்க சுத்திக்கென்று கொள்வதானால் அதை ஆன்மீக சாதனையின் ஒரு அங்கமாகக் கருதலாம். அப்படி ஒரு சாதனைக்காகவே கபீர்,  எதிர்பாளரைக் கண்டு விலகாது அவர்கள் நடுவே வசிக்கப் பழகிக் கொள்ளுங்கள் என்கிறார்.

3 comments:

 1. அவள் எவ்வளவு கொடுமைப் படுத்தப்பட்ட போதும் தனக்கு கேடு செய்பவர்க்கும் அவள் நல்லதையே வேண்டினாள். அதற்கான மனோபலம் அவள் பற்றியிருந்த நாமஸ்மரணையால் கிடைத்தது. //அதன் மூலம் அவளுடைய மனம் மிகவும் பரிசுத்தமாய் இருந்தது. அப்படிப்பட்ட தூய உள்ளத்தை கடவுள் தன் இல்லமாக குடி கொள்வதை யாவருக்கும் அறிவிக்கவே அவன் இவ்வகை பக்தர்களைக் கொண்டு நாடகம் ஆடுகிறான். //  ஆமாம், இறைவன் ஆடும் நாடகம் .

  ஸ்ரீ மஹா பக்த விஜயத்தில் ஸ்ரீ சக்குபாய் கதை படித்து இருக்கிறேன். சக்குபாய் பெற்றோர்கள் கனவில் இறைவன் தோன்றி "ஒரு தெய்வ மகள் உங்களுக்கு பெண்ணாக பிறப்பாள், அவளால் நாட்டு மக்கள் எல்லோரும் பயன் பெறுவர்"

  தெய்வ மகள் மற்ற குழந்தைகளுடன் மணல் வீடு கட்டி விளையாடிய போது மண்ல் வீட்டை உடைத்து விடுகிறார் இறைவன் நாமத்தை சொல்லிக் கொண்டு வந்த பெரியவர்.

  சிறு வீட்டை உடைத்த தவறுக்கு தம்பூராவை கேட்டு வாங்கி விடுகிறார் சக்குபாய் பெரியவராக வந்த இறைவன் அவருக்கு அதை மீட்டவும் சொல்லிக் கொடுத்து அஷ்டாக்ஷரமஹாமந்திரத்தையும் சொல்லி தருகிறார். என்று கதையில் இருக்கிறது.
  கதை எப்படி இருந்தாலும் அவர் இறைவனின் அருள் பெற்றவர்.

  இன்னல் புரிவோர் , எதிரிகளாக நினைப்போர் எவரேனும் இருந்தால் அவர்களும் மனம் திருந்தி நல்வாழ்வு பெறக் கருணையோடு வாழ்த்துவோம் என்பார் வேதாத்திரி மகரிஷி .

  போன கிருஷ்ண ஜெயந்திக்கு சாந்த சக்குபாய் படம் தொலைக்காட்சியில் பார்த்தேன்.
  சக்குபாய் போல இறைவனிடம் எல்லோருக்கும் நல்லதையே வேண்டுவோம் .

  அருமையான பதிவு.

  ReplyDelete
 2. விளையாட்டாக தம்பூராவை கேட்டதாகச்சொல்லி மீண்டும் கொடுத்து விடுகிறார் பெரியவராக வந்த இறைவனிடம்.

  மனம் வெளுக்க இறைவனின் நாமம் தான் சக்குபாய் போல நமக்கு வேண்டும்.

  ReplyDelete
 3. நல்வரவு மேடம். செவி வழியாக வரும்போது கதைகள் பல மாறுதல்களை அடைந்து விடுகின்றன. ஆனால் அடிப்படை உண்மையான அன்பு நிறைந்தவருக்கு அன்பு அளவில்லாமல் கிடைக்கும் என்பது எப்போதும் மாறுவதில்லை.
  ரசித்து பாராட்டியதற்கு மிக்க நன்றி.

  ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி