Friday, April 24, 2009

அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு

நம்முடைய அன்றாட வாழ்க்கையில் மனம் பல காரணங்களால், கவனக்குறைவால் வறண்டு போய் விடுகிறது.அப்பொழுது உலக வாழ்க்கையே துன்பமாக தெரிகிறது.
அதற்கான மருந்தை தேடி பல இடங்களிலும் அலைகிறோம். அந்த நோய்க்கான காரணத்தை வள்ளுவர் சொல்கிறார்

புறத்துறுப்பெல்லாம் எவன் செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பிலவர்க்கு

மனதிலே அன்பு குறையும் போது வாழ்க்கை வறண்டு போகிறது.

எங்கள் வீட்டு புழக்கடையில் ஒரு அடி-குழாய் இருந்தது.எப்பொழுதாவது பத்து பதினைந்து நாட்களுக்கு ஊருக்கு போய்வந்த பின் அடித்தால் அது நீர் இறைக்காது. உடனே சேமித்து வைத்திருக்கும் ஒரு வாளி தண்ணீரை அதில் ஊற்றி பின்னர் அடிக்கத் துவங்கினால் அது சிறிது சிறிதாக நிலத்தடி நீரை மேலே கொண்டுவரும.

அதற்கு சொல்லப்படும் காரணம் “வாஷர் காய்ஞ்சு போச்சு”

[குழாயினுள் இருக்கும் தோல் வாஷர் காய்ந்த்து போனால் அளவில் சுருங்கி மேலும் கீழும் அடிக்கும் பொழுது காற்றை உள்வாங்கி வெளிவிடும். அதனால் அடியில் இருக்கும் நீர் மேலே எழும்புவதில்லை. அதுவே நீர் ஊறிய பின் குழாயின் உள்பக்கத்தில் விரிந்து அடைத்துக்கொள்ளும்போது காற்று வெளியேறுவதால் உண்டாகும் வெற்றிடத்தை நிரப்ப நீர் மேலெழுந்து வரும்].

அகத்து உறுப்பான அன்பு, எல்லா உயிர்களுக்குள்ளும் நிலத்தடி நீர் போல் எப்பொழுதும் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் சில சமயங்களில் சுயநலம், பொய்மை,கோபம் போன்ற குணங்கள் கடும் பாறை போல் மேலே அதை மூடிக்கொள்கிறது.

எப்படி நீரை மேலே கொண்டு வருவதற்க்கு நீரையே மருந்தாக பயன் படுத்த வேண்டியிருக்கிறதோ அது போல மனிதர்களின் வறண்ட மனதினுள் ஒரு வாளி அன்பை ஊற்றினால் அதுவும் விரிந்து தன்னுள்ளே இருக்கும் அன்பெனும் அமுதை வெளியே கொண்டு வரக்கூடியதுதான்.

ஒரு வாளி அன்பா ? இல்லையில்லை ஒரு துளி போதும். கபீர் சொல்வதை காண்போம்.

सबै रसायन हम किया प्रेम रसायन् न कोय ।
रंचक तन में संचरै, सब तन कंचन होय ॥


அவிழ்தம் பலப்பலக் கண்டேன் அன்பின் நிகராய் கண்டிலேன்
தனுவில் ஒருதுளி புகுந்தது, தனுவெலாம் பொன்னொளி பாய்ந்தது.

(அவிழ்தம் =மருந்து; தனு=உடல்)

மருந்து என்று சொல்லப்பட வேண்டுமானால் உட்கொள்ளும் அளவில் மிகக் குறைவாக இருப்பினும் வீரியத்தில் பல மடங்கு ஆற்றல் வாய்ந்ததாக இருக்கும். உணவு தரும் சக்தி, உட்கொள்ளும் அளவை பொறுத்தது ஆனால் மருந்து உடலின் ஆற்றலையே மாற்றி அமைக்க வல்லது.
அன்பின் சக்தி மருந்தை போன்றது. ஒருவருடைய மன ஆற்றலையே மாற்றி அமைக்க வல்லது. ரன்சக் என்றால் அளவில் மிகக்குறைவானது. ஆனால் அதன் செயல் பரிமாணம் பலரும் போற்றும் படியாக மாறுகிறது.

முதல் படியாக இறைவனிடத்து அன்பு. அடிக்கடி ராமகிருஷ்ணர் காளியின் பெயரைக் கேட்ட மாத்திரத்திலேயே பாவசமாதிக்கு சென்று விடுவாராம்.

அந்த மேன்மையை திருமூலர் இப்படி ஒரு பாடலில் குறிப்பிடுகிறார்.

ஓதும் மயிர்க்கால் தொறும் அமுதூறிய
பேதம் அபேதம் பிறழாத ஆனந்த
மாதி சொரூபங்கள் மூன்று (அ)கன்றப்பாலை
வேதம் ஓதுஞ் சொரூபிதன் மேன்மையே - திருமந்திரம்

காற்றில் காண இயலாதவாறு கலந்திருக்கும் நீர் மேகமாக திரண்டு மழை போல் பொழிவது போல் திருமூலர் உரைக்கும் ’மயிர்க்கால் தொறும் ஊறும் அன்பு’அளவில்லாமல் பெருகும் போது பிற உயிர்களிடம் பெருகி பாய்கிறது. அப்போது நல்லவன் தீயவன் பேதம் இல்லை. மழை யாவர்க்குமாம் என்பது போல் மேன்மக்கள் அன்பும் யாவர்க்குமாய் பயனளிக்கிறது.

சிவனையே நினைந்து அவனடியாரை கண்ட மாத்திரத்திலேயே அன்புப் பெருக்கெடுத்து அவர்களைப் போற்றி பணியும் மெய்ப்பொருள் நாயனார் சிவனடியார் வேடத்தில் வந்த முத்தனாதன் வஞ்சகமாகக் குத்திய போதும்,அவனுக்கு ஊறு உண்டாகக்கூடாதென்று ஆணையிட்டான். அந்த கயவனை பத்திரமாக எல்லைக்கப்பால் கொண்டு விட்டாயிற்று என்பதை தெரிந்து கொள்ளும் வரை உயிரை பிடித்திருந்து பின்னர் பெருத்த அமைதியுடன் உயிரைத் துறந்த மெய்ப்பொருளார் மேனமை அனபு நிறைந்திருந்தால் மட்டுமே சாத்தியம். உலகம் உள்ளளவும் அவர் பெருமை போற்றப்படுகிறது.

அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.

16 comments:

 1. "எப்படி நீரை மேலே கொண்டு வருவதற்க்கு நீரையே மருந்தாக பயன் படுத்த வேண்டியிருக்கிறதோ அது போல மனிதர்களின் வறண்ட மனதினுள் ஒரு வாளி அன்பை ஊற்றினால் அதுவும் விரிந்து தன்னுள்ளே இருக்கும் அன்பெனும் அமுதை வெளியே கொண்டு வரக்கூடியதுதான்."
  உண்மைதான் அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்.....

  ReplyDelete
 2. உண்மைதான். அன்பு செலுத்துவதற்கும் கூட, அன்பை எதிர்பார்க்கும்நிலையை அடி பம்ப்-தேஞ்சு போன வாஷர் உதாரணத்தில் மிக அழகாகச் சொன்னதற்காக ஒரு சபாஷ், கூடவே இந்த மர மண்டையும் புரிந்து கொள்ளும் படியாகச் சொன்னதற்கு நன்றியும்!

  இதையே ஸ்ரீ அரவிந்த அன்னை இப்படி சொல்கிறார்:

  At first, one loves, when one is loved.
  Next, one loves spontaneously, but one wants to be loved in return!
  Then, one loves even if one is not loved, but one still wants one's love to be accepted!
  And finally, one loves purely and simply, without any other need or enjoy than that of loving!

  அன்பே வாழ்க்கையின் அடி நீரோட்டமாகவும், ஆதாரமாகவும் இருக்கிறது!

  ReplyDelete
 3. //அவிழ்தம் பலப்பலக் கண்டேன் அன்பின் நிகராய் கண்டிலேன்
  தனுவில் ஒருதுளி புகுந்தது, தனுவெலாம் பொன்னொளி பாய்ந்தது.//

  மொழிபெயர்ப்பு அருமை, பதிவும் வழக்கம்போல் அருமையான செய்திகளைத் தாங்கி நிற்கிறது. அன்பு கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, நாம் அன்பு செலுத்தினால் அதன் பிரவாஹம் போகவேண்டிய இடங்களுக்குப் போய்ச் சேரும், நமக்குப் பல மடங்காய்த் திரும்பியும் வரும். இவ்வுலகிலேயே நாம் செலவில்லாமல் கொடுக்கக் கூடிய பொருளும், கொடுத்தால் பலமடங்கு திரும்பக் கிடைக்கும் பொருளும் அன்பு ஒன்றே. நன்றி.

  ReplyDelete
 4. கிருத்திகா சேர்த்து வைத்து பல இடுகைகளை படித்து ஒவ்வொன்றுக்கும் பின்னூட்டமிட்டு பாராட்டியிருப்பதற்கு நன்றி

  ReplyDelete
 5. நன்றி கிருஷ்ணமூர்த்தி சார்,

  //And finally, one loves purely and simply, without any other need or enjoy than that of loving! //

  அன்னையின் அழகான வழிகாட்டுதலை எடுத்து காட்டியதற்கு மிக்க நன்றி

  ReplyDelete
 6. நல்வரவு கீதா மேடம்,

  //இவ்வுலகிலேயே நாம் செலவில்லாமல் கொடுக்கக் கூடிய பொருளும், கொடுத்தால் பலமடங்கு திரும்பக் கிடைக்கும் பொருளும் அன்பு ஒன்றே //

  எவ்வளவு அழகாக சொல்லிவிட்டீர்கள்!
  ”ஆண்டவன் உலகத்தின் முதலாளி”. நம் வைப்புக்கு அவன் நிர்ணயிக்கும் வட்டி- interest- interesting -ஆகத் தானே இருக்கும்.
  வரவுக்கும் பாராட்டுக்கும் நன்றி

  ReplyDelete
 7. அன்பறி இன்பாம் அவனை அடைதற்கு
  வன்பற்ற அன்பே வழி
  அன்பறிவுடையார்க்கு அனைத்தும் கடவுள்
  அன்பறிவற்றார் அறியார் கடவுள்
  அன்பறிவின்பே உண்மைக் கடவுள்
  அன்பறிவின்போடும் இறைவார் கடவுளே

  கபீரின் வரிகளுக்கு அன்பான விளக்கம் .நன்றி.

  ReplyDelete
 8. இன்றுதான் படிக்க முடிந்தது கபீரன்பரே..

  எப்போதும் போல மிக அருமை. அன்பு என்பது அளித்துப் பெருவது + பெருக்குவது என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

  ReplyDelete
 9. நன்றி தி.ரா.ச. சார்

  //அன்பறிவுடையார்க்கு அனைத்தும் கடவுள்
  அன்பறிவற்றார் அறியார் கடவுள் //

  மிகப் பொருத்தமாக சொல்லிவிட்டீர்கள்!

  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

  ReplyDelete
 10. நல்வரவு மதுரையம்பதி,

  //எப்போதும் போல மிக அருமை. அன்பு என்பது அளித்துப் பெருவது + பெருக்குவது என்பதை அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள். //

  மிக்க நன்றி

  ReplyDelete
 11. // सबै रसायन हम किया प्रेम रसायन् न कोय ।
  रंचक तन में संचरै, सब तन कंचन होय ॥
  //

  செய்யவில்லையா ! இதோ இங்கே இப்பொழுதே
  கபீரன்பன் செய்வதெல்லாம்
  அந்த ப்ரேம் ரஸாயனம் தானே.


  சுப்புரத்தினம்.
  http://vazhvuneri.blogspot.com

  ReplyDelete
 12. வருக சுப்புரத்தினம் ஐயா,

  வரவுக்கும் அன்பான பாராட்டுரைகளுக்கு நன்றி.

  ReplyDelete
 13. Off Topic:

  I found your comment on Yo-Speed bike in Badri's blog, how long have you been using it. Is it worth a purchase in a city like Pune.

  Best regards,
  Magesh

  PS: Actually, I came in to check only this query, but was a pleasent surprise to read about Kabir's work. I think the Bhakti movement is an amazing thing. Will hopefully come again and read your blog more carefully.

  If you feel its inappropriate you can delete this comment after reading/responding.

  ReplyDelete
 14. நல்வரவு மகேஷ்

  //Will hopefully come again and read your blog more carefully. //

  தாங்கள் வருவதற்காகவே கபீர் ஒரு காரணத்தை சிருஷ்டித்திருப்பார் போலும் ! :)))

  அடிக்கடி வரவும். நன்றி

  ReplyDelete
 15. ஆகா. அருமையான உவமை. மிக நன்றாக சொன்னீர்கள். வெகு நாட்களுக்கு இந்த உவமை நினைவில் நிற்கும் என்று நினைக்கிறேன். அன்பே சிவம்.

  ReplyDelete
 16. வாங்க குமரன்,

  உவமை பிடித்திருப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி. மிக்க நன்றி

  ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி