Thursday, November 05, 2009

பக்தித் துவாரம் குறுகியது

அந்த சிறுவனை ட்யூஷனுக்கு அழைத்து வந்திருந்தார் அவனுடைய தாய். கபடமற்ற கண்கள். அவன் நெற்றியில் சிறு திருநீற்றுக் கீற்று. பாலமுருகனையே கண்டது போல் இருந்தது. சாதுவான பையன் என்பதை சொல்லத் தேவையே இல்லை.
“ சார், இவனுக்கு எல்லார் கிட்டேயும் நல்ல பேர். டீச்சர்ஸ் கூட அவனைப் பத்தி ரொம்ப நல்ல மாதிரிதான் சொல்றாங்க. வீட்டுலேயும் அவனால யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. தன்பாட்டுக்கு நேரத்துக்கு எழுந்து, குளிச்சு சாப்பிட்டு ஸ்கூலுக்கு கெளம்பிடுவான். எந்த பிடிவாதமும் கிடையாது. சொன்ன பேச்சை கேட்பான். ஆனா எந்த ஸப்ஜெக்டிலேயும் மார்க் மாத்திரம் வர மாட்டேங்குது. கிட்டத்தட்ட எல்லா ஸப்ஜெக்ட்லேயும் ஃபெயில். எங்களுக்கு என்ன செய்றதுன்னே புரியவில்லை. ஏண்டா! டீச்சர் சொல்றது புரியலையான்னு கேட்டா பதிலே சொல்ல மாட்டான். ஸ்லோ லெர்னர். இவன் ஒரு மனுஷனா ஆவானா சார் ? என்று மிகுந்த கவலையுடன் விசாரித்தார்.

இப்படிப்பட்ட கவலைதான் ஞானிகளுக்கும் பல பக்தர்களை காணும் போது ஏற்படுகிறது. அந்த பக்தர்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறது. சராசரி நித்ய கடமைகளை தவறாமல் செய்கின்றனர். ஆனால் அவற்றின் மூலம் கற்க வேண்டிய பாடத்தை மட்டும் கற்றுத் தெளிவதில்லை. இவர்கள் எப்போது தேறி ஞானத்தை அடையப் போகிறார்கள் என்ற ஆதங்கம் அவர்களை ஆட்கொள்கிறது. யோகி வேமனாவுக்கும் தன் தாயாரின் விஷயத்தில் அப்படி ஒரு கவலைத் தோன்றியது.

வேமனா ஆந்திராவின் மிகப் புகழ் பெற்ற யோகி. அனு வேம ரெட்டி என்ற அரசனின் தம்பி. இளம் வயதில் வழி தவறியவராய் இருப்பினும் சிவயோகி ஒருவரின் தொடர்பினால் ஞான வழிக்கு திரும்பினார். அவருடைய ஆயிரக்கணக்கானப் பாடல்கள் இன்றும் ஆந்திரத்தில் ஆன்மீக ஒளி பரப்பிக் கொண்டிருக்கிறது.

அவருடைய தாயார் தீர்த்த யாத்திரைக்குக் கிளம்பினார்.

’நீ திரும்பி வரும் பொழுது இந்த தாமிர தாயத்து தங்கமாய் மாறியிருக்குமா பார்ப்போம்’ என்று ஒரு ரட்சை அணிவித்து அனுப்பி வைத்தார். அம்மையாரும் புரீ காசீ கயா போன்ற பல புண்ணிய தலங்களில் நீராடி கோவில்களில் பூசைகள் செய்து பலமாதங்களுக்கு பின்னர் திரும்பினார். அவருக்கு வேமனா கூறியிருந்தது மறந்தே போயிருந்தது.

வேமனா அவரைக் கண்டதும் தாயத்து தங்கமாய் மாறியதா என்று தாயத்தைக் காட்டச் சொன்னார். செப்பு செப்பாகவே இருந்ததைக் கண்டு ’பக்தியும் சிரத்தையும் இல்லாமல் செய்யும் எந்த யாத்திரைக்கும் பலனிராது’ என்றார். தாயாருக்கும் பிறருக்கும் புரியவில்லை. அதெப்படி செப்பு தங்கமாக முடியும் என்று வினவினர்.

’முடியும்’ என்று சொல்லி அந்த தாயத்தை வாங்கி ஒரு கிண்ணத்தில் வைத்து அதன் மேல் சிறிது நீரை சொரிந்தார். யாவரும் வியக்கும் வண்ணம் செப்பு தாயத்து தங்கமாக மாறியது. அதை தாயாரின் கையில் வைத்து ‘உண்மையான பக்தி இருந்தால் நீ இருக்குமிடமே காசி. ஏனிந்த சிரமம்?’ என்று கூறினாராம்.

வேமனா குறிப்பிடும் தங்கம், மனிதர்கள் கோவில் குளம் என்று சுற்றுவதெல்லாம் இறைவனின் பெருமையை உன்னி உன்னி படைப்பில் சர்வமாக வியாபித்து இருக்கும் அவன் பால் அன்பு பெருகி வர வேண்டிய மன மாற்றத்தைக் குறிப்பதாகும். ஆனால் சாமானியர்களான நமக்கோ எப்போதும் நம்மைப் பற்றிய சிந்தனையிலேயே ஊறி இருப்பதால் உண்மையான பக்தி என்பது என்னவென்றே புரிவதில்லை. இது வகுப்பிலே அமர்ந்திருந்தாலும் பாடத்தில் கவனம் செலுத்தாத மாணவன் போன்றது.

புரியாததன் விளைவாக கடைசியில் பலனேதும் இல்லாமல் போகிறது. வேமனாவின் தாயாரைப் போலே, கிடைக்காத பலனைப் பற்றிய ஞானமும் குறைவே. ஞானிகள் இந்த நிலையை கண்டு பரிதாபம் கொள்கின்றனர். இதை கபீர் இலவு காத்தக் கிளிக்கு ஒப்பிடுகிறார்.

जप तप दीखै थोथरा, तीरथ व्रत विशवास ।
सूआ सेमल सेइया, यौं जग चला निरास ॥


செல்வார் யாத்திரை, நேர்வார் நோன்பு, செபதபத்திலு மாசை
இலவு கொத்தும் கிளி போலும், இறுதியில் நிற்பதோ நிராசை


புண்ணியம் வரும் பாவம் போய்விடும் என்று செய்யப்படும் பலவிதமான விரதங்கள், யாத்திரைகள், செப தபங்கள் எல்லாம் கடைசியில் அர்த்தமின்றி போய்விடுவதாக கூறுகிறாரே கபீர் என்ற சந்தேகம் எழலாம். உண்மையில் அவற்றிற்கான பலன் எப்போதும் உண்டு. ஆனால் அது பிறவிச் சுழலிலிருந்து விடுதலை தராது. ஞானிகள் எதிர்பார்ப்பது பிறவித் தளையிலிருந்து விடுதலையைத்தானே !

பையன் அடுத்த வகுப்பிற்கு போக வேண்டும். எத்தனை வருடங்கள் ஒரே வகுப்பில் பெஞ்சை தேய்க்க முடியும்? எனவே தான் கபீர் காலவிரயத்தை இலவு காத்த கிளிக்கு ஒப்பிடுகிறார்.

பரமஹம்ஸர் பக்தியின் நிலையை இரண்டாகப் பிரித்து சொல்கிறார். முதல் நிலை வைதீக பக்தி. இரண்டாம் நிலை பிரேம பக்தி. முதல் நிலையில் சாத்திரப்படி ஏதேனும் வழிபாட்டு முறையை மேற்கொண்டு சிரத்தையுடன் நடத்தி வருவது. அப்படி செய்வதே நாளடைவில் இரண்டாம் நிலைக்கு இட்டுச் சென்று தன்னுடையது என்று எதுவுமின்றி எல்லாம் இறைவனுக்காகவே, இறைவனாகவே காணும் மனப் பக்குவத்தை பக்தன் அடைவது.

நேரத்தில் எழுந்து குளித்து, சாப்பிட்டு பள்ளிக்கு போவது போன்றது வைதீக பக்தி. அங்கே சொல்லிக் கொடுக்கப்படும் பாடத்தை கேட்டுத் தெளிவது பிரேம பக்தி. சத்கர்மங்கங்களிலும் சத்சங்கங்களிலும் தீவிரமான நாட்டம் கொண்டு குரு உபதேசத்தை மனதில் நிறுத்தி கடைபிடிப்பது பிரேம பக்தி. புரிந்து கொண்ட பாடத்தின் இறுதி நிலை என்ன? திருமந்திரம் விடை சொல்கிறது.

பத்தன் கிரியை சரியை பயில்வுற்றுச்
சுத்த அருளால் துரிசு அற்ற யோகத்தில்
உய்த்த நெறி உற்று உணர்கின்ற ஞானத்தால்
சித்தம் குரு அருளால் சிவமாகுமே.

(பயில்வுற்று= பயின்று; துரிசு அற்று=குற்றம் இல்லாத)

உலகில் பெரும்பாலானவர் முதல் இரண்டு வகையில் அடக்கம். சரியை பல தலங்களுக்கும் சென்று பரம்பொருளை வழிபடுவது. கிரியை என்பது மாலை மலர் சாற்றி, அர்ச்சனை, நிவேதனம் செய்து உள்ளும் புறமும் வழிபடு்வது. யோக நெறியில் புகுவதற்கான அருளை பெறும் முன் சரியை கிரியையில் தேர்ச்சி பெற வேண்டும். அதாவது அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி அடைய இருக்கும் வகுப்பில் பாடங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

எப்படிப்பட்ட பக்தர்களுக்கு இறைவன் அருள் நிலைக்கிறது என்பதை மற்றொரு பாடலில் சொல்கிறார் திருமூலர்.

கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
வானுற மாமலரிட்டு வணங்கினும்
ஊனினை நீக்கி யுணர்பவர்க் கல்லது
தேனமர் பூங்குழல் சேர வொண்ணாதே

(ஊனினை நீக்கி= உடற்பற்றை நீக்கி )

கானகத்தில் கிடைக்கும் எல்லா மலர்களையும் மணம் கமழும் சந்தனத்தையும் பூசித்தாலும் உடற்பற்றை நீக்கி உணர்பவர்க்கல்லாமல் இறைவன் திருவடியை அடைய முடியாது.

இந்த ஊன் பற்றை விலக்குவதில் தான் பிரச்சனை. தன்னால் எல்லாம் நடக்கிறது என்ற எண்ணம் குறுக்கே வந்து முன்னேற்றத்தைத் தடுக்கிறது. இதை ஆணவமலம் என்பர் ஞானிகள். மனதில் ஆணவமலம் இருக்கும் வரை உடற் பற்றும் இருக்கும். அதை முழுவதுமாக மாய்ப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அதை இன்னொரு ஈரடி மூலம் கபீர் விளக்குகிறார்.

भक्ति दुवारा सांकरा, राई दशवें भाय ।
मन तो मैंगल होय रहा, कैसे आवै जाय ॥


பத்தித் துவாரம் குறுகியது, கடுகளவில் பத்தில் ஒன்று
மத்தம் பிடித்தக் களிறது, மனமும் உட்புகும் வழியெது ?


மனதைப் பிடித்திருக்கும் ஆணவ மலம் மதம் பிடித்த யானையைப் போன்றதாம். அதனை கடுகின் அளவில் பத்திலொரு பாகம் அளவே இருக்கும் பக்தி எனப்படும் துவாரத்தின் வழியே நுழையச் செய்வது எப்படி என்று வினவுகிறார் கபீர்தாஸ்.

நாக மஹாசயரைப் போல் அன்பே வடிவினராய் தொண்டராம் தொண்டருக்கு...தொழும்பனாய் மாறினால் முடியும்.

அன்பு முதிர்ந்தால் ஆணவம் உதிர்ந்து விடும். அப்போது இறைவன் அவன் நெஞ்சத்தை கோயிலாய் கொள்கிறான்.

அன்பின் முதிர்ச்சியை இன்னொருவர் வாழ்க்கையில் காண்போம். திருமூலர் சொல்லும் ஊன்பற்று நீங்கி எல்லா உயிர்களிலும் இறைவனையே கண்டவர். அவரும் ஒரு தல யாத்திரை மேற்கொண்டார். அவரு்டையது பெரிய யாத்திரை.

முதல் கட்டமாக கங்கையை அடைந்து அங்குள்ள புண்ணிய தலங்களை சேவித்தார். அடுத்த கட்டமாக அங்கிருந்து குடங்களில் கங்கையை நிரப்பி காவடியாக சுமந்து ராமேஸ்வரம் சென்று அங்கே ராமர் பூஜித்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து யாத்திரையை நிறைவு செய்ய வேண்டும். அவ்வாறே போய்க் கொண்டிருக்கும் பொழுது வழியிலே ஒரு கழுதை தாகத்தால் வாய் உலர்ந்து மரணத்தைத் தழுவும் நிலையை எட்டியிருந்தது. யாத்ரிகரது மனம் மிகவும் இளகியது. சுற்றும் முற்றும் நீர் கிடைப்பதற்கான வாய்ப்பு காணப்படவில்லை. தேடிக் கொண்டு வருவதற்குள் கழுதையின் உயிர் பிரிந்தாலும் பிரிந்து விடும் என்கிற நிலை.

கையில் இருப்பது சிவனுக்கென கொண்டு செல்லும் கங்கை நீர் மட்டுமே. ஒரு பிராணியின் தாகத்தைத் தீர்க்க போதுமானதா என்பதும் புரிய வில்லை. அந்த ஜீவனிலும் குடியிருப்பது சிவன் தானே. அதைக் காப்பாற்ற பயன்படாத நீர் எவ்வளவு புண்ணிய தீர்த்தமாய் இருந்தென்ன?

உத்தவனுக்கு கிருஷ்ணன் சொல்லவில்லையா ’எல்லாவற்றிலும் என்னையே காண்பாய். என்னை சோதிப்பதற்காக்வே தான் இப்படி ஒரு நிலைமையை காட்டியிருப்பான் போலும்’ என்றெல்லாம் அவர் எண்ணம் ஓடியது. ஒரு உயிரை காப்பாற்றுவதைக் காட்டிலும் பெரிய தர்மம் இருக்க முடியாது என்பதை ஆழமாக உணர்ந்தார். குடத்தில் இருந்த கங்கை நீரையெல்லாம் அந்த அப்பாவி ஜீவனை குடிக்கச் செய்தார். உடனிருந்தவர் ராமேஸ்வரத்திற்கு என்ன செய்வது என்று கேட்டனர். இதோ இதுவே தான் ராமேஸ்வரம் என்று பதில் சொன்னாராம். அவரைப் பொறுத்தவரை எந்த சிவனுக்காக நீரை கொண்டு சென்றாரோ அவனை அது அடைந்து விட்டது.

பக்தியென்பதை முழுமையாகப் புரிந்து கொண்டு வழிபாடு செய்த அந்த யாத்ரிகனே ஏகநாத் என்று மகாராஷ்டிரத்தில் போற்றப்படும் மகான். மகாராஷ்டிரத்தில் ஞானேஸ்வரரின் கீதையைப் போலவே ஒவ்வொரு வீட்டிலும் ஏகநாதருடைய பாகவதம் மிகவும் போற்றப்படும் ஒரு இலக்கிய படைப்பு ஆகும். காலத்தால் ஞானேஸ்வரருக்கு பிற்பட்டவர். முன்னூறு ஆண்டுகளுக்கு பிந்தையவர் ஆயினும் ஞானேஸ்வரரின் தரிசனம் கிடைத்து அவரது வேண்டுகோளுக்கு இணங்க அவரது ஞானேஸ்வரியை செப்பனிட்டு மீண்டும் வெளியிட்டவர் அவரே என்றும் சொல்வர்.

கபீரின் எந்த ஈரடியை யாருடைய பார்வையில் புரிந்து கொள்ள முற்பட்டாலும் சுற்றிச் சுற்றி ஒரே மையப்புள்ளிக்கு நம்மை இட்டுச் செல்கிறது. ஆம் அன்பு ஒன்றுதான் அச்சாணியாக உலகைத் தாங்கி நடத்திச் செல்கிறது.

22 comments:

  1. //கபீரின் எந்த ஈரடியை யாருடைய பார்வையில் புரிந்து கொள்ள முற்பட்டாலும் சுற்றிச் சுற்றி ஒரே மையப்புள்ளிக்கு நம்மை இட்டுச் செல்கிறது. ஆம் அன்பு ஒன்றுதான் அச்சாணியாக உலகைத் தாங்கி நடத்திச் செல்கிறது.//

    ”என்பே விறகாய் இறைச்சி அறுத்திட்டுப்
    பொன்போல் கனலில் பொரிய வருப்பினும்
    அன்போடு உருகி அகம்குழை வார்க்கன்றி
    என்போல் மணியினை எய்தஒண் ணாதே.”

    இந்த 'பித்துக்குளித் தனமான' அன்பு (unconditional love) சாத்தியப் படுவதில்லையே, ‘நான்' எனும் முகமூடி நீங்கும்வரை. அவ்வாலறிவனின் பேரருள் வேண்டி நிற்பதைத் தவிர வேறு மார்க்கம் தெரியவில்லையே.

    ReplyDelete
  2. விளக்கத்திற்கு நன்றி ஐயா. மேற்கோள்கள்களை நீங்கள் கையாண்டிருப்பது பிரம்மிக்க வைத்திருக்கிறது. "என்னைப் பொறுத்தவரை இதுதான் இராமேஸ்வரம்" மனதில் பதியும் வார்த்தை.

    மிக்க நன்றி

    ReplyDelete
  3. நல்வரவு ஜாபர் அலி,

    //அவ்வாலறிவனின் பேரருள் வேண்டி நிற்பதைத் தவிர வேறு மார்க்கம் தெரியவில்லையே//

    உண்மைதான். உரிய காலத்தில் பலன்கள் வரும் என்றும் நம்புவோம்.

    வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.

    ReplyDelete
  4. வாருங்கள் bxbybz

    விரும்பிப் படித்ததற்கும் பாராட்டுரைகளுக்கும் நன்றி

    ReplyDelete
  5. //பத்தித் துவாரம் குறுகியது, கடுகளவில் பத்தில் ஒன்று
    மத்தம் பிடித்தக் களிறது, மனமும் உட்புகும் வழியெது ?//

    --முதலில் பக்தி துவாரம் குறுகியது என்கிற செய்தி; அடுத்து அது எவ்வளவு குறுகியது என்று. அடுத்து, 'மத்தம் பிடித்த களிறது'
    என்று எத்தன்மைத்தானது என்று. கடைசியில், இப்படியாக இருக்கையில் 'உட்புகும் வழியெது?' என்கிற திகைப்பான வினா..
    ஒவ்வொரு வார்த்தையிலும் கவிதை நயம் பூத்துக் குலுங்கி, மூலத்தில் இருப்பதை அப்படியே ஒத்தி எடுக்கும் அழகு சொக்க வைக்கிறது.

    ReplyDelete
  6. //ஒரு உயிரை காப்பாற்றுவதைக் காட்டிலும் பெரிய தர்மம் இருக்க முடியாது என்பதை ஆழமாக உணர்ந்தார். குடத்தில் இருந்த கங்கை நீரையெல்லாம் அந்த அப்பாவி ஜீவனை குடிக்கச் செய்தார். உடனிருந்தவர் ராமேஸ்வரத்திற்கு என்ன செய்வது என்று கேட்டனர். இதோ இதுவே தான் ராமேஸ்வரம் என்று பதில் சொன்னாராம்.//

    ஆஹா! அருமை.. என்னவொரு வாழ்க்கை!
    படிப்போருக்கும், கேட்போருக்கும் என்னவொரு படிப்பினை..

    மிக்க நன்றி, கபீரன்ப!

    ReplyDelete
  7. வருக ஜீவி சார்,

    மிகுந்த ஈடுபாட்டுடன் படித்திருக்கிறீர்கள்.

    //மூலத்தில் இருப்பதை அப்படியே ஒத்தி எடுக்கும் அழகு,,,,,//

    ஒரு சில சமயங்களில் தானாக அமைந்து வருகிறது. அதுவும் தங்களைப் போன்றோரின் ஆசிகளால்தான் என்று கொள்வேன்.

    இரட்டைப் பின்னூட்டங்கள் பதிந்து, தரும் உற்சாகத்திற்கு மிக்க நன்றி

    ReplyDelete
  8. இவர்கள் எப்போது தேறி ஞானத்தை அடையப் போகிறார்கள் என்ற ஆதங்கம் அவர்களை ஆட்கொள்கிறது.

    true. they are searching whoever comes to meet him. if found somebody ,he start his work to uplift that man.

    the man doesnot know that upliftment by guru. after when comes to know -he never leaves guru. he want dissolve with guru.
    thats the guru grace

    that is the beauty of guru grace.

    ReplyDelete
  9. என்ன எழுதுவது?
    வேறோர் தளத்துக்கு இட்டுச் செல்கிறீர்களே ஐயா!
    பிரமிப்பாயிருக்கிறது தங்களது எழுத்தும்...
    எழுத்துக்குப் பின் இருக்கும் உழைப்பும்....

    தங்களுக்கு எல்லாம் தர வேண்டி
    எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்!

    ReplyDelete
  10. வருக பாலு சார்.
    //..if found somebody ,he start his work to uplift that man //

    ஆமாம். அவர்களுக்குத் தான் சாதகர்களை விட அதிக கவலையாம், பெரியவர்கள் கவலை சிறுவர்களுkகு புரியாததைப் போல நாம் இருக்கிறோம்.:)

    நன்றி

    ReplyDelete
  11. நல்வரவு எடிட்டர் சார்,

    தங்கள் பாராட்டுகளுக்கும் பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி.

    சமஸ்த்த லோகா சுகினோ பவந்து.

    மிக்க நன்றி

    ReplyDelete
  12. i left a comment, but guess my computer had some issues and it did not get thru.

    அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்என்பும் உரியர் பிறர்க்கு.

    I have been trying for the past couple of days to understand Baghwan Shri Ramana Maharishi's words, this is exactly what he emphasises, to come out of body consciousness. But i don't know how.

    உங்கள் பதிவில் வரும் பையன் போலதான் என் மன நிலைமையும்...சுத்தமா புரியலை...என் அறிவிற்கு எட்டாததாக இருக்கிறது

    ''அன்பு முதிர்ந்தால் ஆணவம் உதிர்ந்து விடும். அப்போது இறைவன் அவன் நெஞ்சத்தை கோயிலாய் கொள்கிறான்.'' is this what is called as unconditional love?

    நன்றி நன்றி நன்றி !!!

    ReplyDelete
  13. நல்வரவு சுமி அவர்களே

    ///...this is exactly what he emphasises, to come out of body consciousness. But i don't know how. ///

    தங்கள் பின்னூட்டத்தோடு இன்றைய அஞ்சலில் வந்த இன்னொரு அஞ்சல்(தினமும் வருகின்ற Sai Inspires) தங்கள் கேள்விக்கான விடையையும் சுமந்து வந்திருக்கிறது ! அதை அப்படியே Copy& Paste செய்திருக்கிறேன். தங்கள் மனதில் எழும் கேள்வி ஒவ்வொருவர் மனதிலும் எழுந்து கொண்டே இருப்பதுதான். நம் தேடல் தொடரட்டும். :)

    Remove from the garden of your heart, the thorny bushes of greed and anger, jealousy and selfishness, the evil breed of "I" and "Mine". Uproot them even when they emerge as seedlings. All this discipline is truly required for earning Shanthi (Peace). Be firmly convinced that you are the Universal Soul. That conviction will make every subsequent spiritual practice very easy. If you fondle the illusion that you are the body or the senses, then any spiritual practice that you will yield will tender only rot-ridden fruit. It cannot grow and become ripe and the sweet fruit of Peace cannot be won even at the end of many lives. Give up the theory that you are the body and the senses; this itself will lead to the receding of vasanas (desires, tendencies) and you will acquire mastery and gain Prasant hi (supreme peace).

    -Divine Discourse, Prasanthi Vahini

    ReplyDelete
  14. என்ன சொல்வதென்று தெரியவில்லை. திரும்பத் திரும்ப படித்து உணர வேண்டிய பதிவு. அத்தகைய அன்பு வாய்க்க அன்பான அவனேதான் அருளல் வேண்டும். மிக்க நன்றி.

    ReplyDelete
  15. நல்வரவு கவிநயா

    //அத்தகைய அன்பு வாய்க்க அன்பான அவனேதான் அருளல் வேண்டும்//

    கண்டிப்பாக அவன் அருள் என்றும் யாவர்க்கும் உண்டு.

    இடுகை தங்களுக்கு பிடித்திருப்பது கண்டு மகிழ்ச்சி.நன்றி

    ReplyDelete
  16. //இவர்கள் எப்போது தேறி ஞானத்தை அடையப் போகிறார்கள் என்ற ஆதங்கம் அவர்களை ஆட்கொள்கிறது. //

    எப்போ இப்படி எல்லாம் எழுதுவேன் என்கிற ஆதங்கம் எனக்கு! அதுக்கப்புறம் தான் ஞானத்தைப் பத்தி யோசிக்கணும்.

    ReplyDelete
  17. //"என்னைப் பொறுத்தவரை இதுதான் இராமேஸ்வரம்"//
    அற்புதமான யாத்திரா பூர்த்தி. பரிபூரண ஞாநிகளுக்கு மட்டுமே புரிந்து கொள்ள முடிந்த செய்யவும் சாத்தியமான ஒன்று

    ReplyDelete
  18. வாங்க கீதா மேடம்,

    //எப்போ இப்படி எல்லாம் எழுதுவேன் என்கிற ஆதங்கம் எனக்கு!//

    புலி எதுக்கு பூனையாகணும் ? :))))

    பாராட்டுகளுக்கு நன்றி.

    ReplyDelete
  19. On reading this post, I am reminded of a saying by Ramakrishna Paramahamsar. Something to this effect:
    "There is no point in going to Benares, if there is no real longing for God.
    If there is real longing for God, this very place is Benares."
    Let me mention again that all your posts are wonderful.

    ReplyDelete
  20. நல்வரவு ராதா அவர்களே

    //If there is real longing for God, this very place is Benares."//

    ஞானிகள் யாவரும் சொல்ல வரும் உண்மை ஒன்றே. அதைத்தான் இந்த வலைப் பூ மூலம் குறிப்பிட விரும்புகிறேன். தங்களுக்கு இடுகைகள் பிடித்திருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது.
    நன்றி.

    ReplyDelete
  21. //உண்மையான பக்தி இருந்தால் நீ இருக்குமிடமே காசி//

    அருமை. தங்களின் ஞனப் பணி தொடர வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  22. நல்வரவு செந்தில் ஸ்ரீராஜ்,

    பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் நன்றி

    ReplyDelete

பின்னூட்டத்திற்கு நன்றி